03 ஜூன் 2020

பரமேஸ்வரா முப்பாட்டனார் நீல உத்தமன்

நீல உத்தமனின் இயல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா திரிபுவனா (Sri Maharaja Parameswara Tribuwana). புவனம் என்றால் உலகம். ஸ்ரீ திரி புவனா என்றால் மூன்று உலகங்களின் அதிபதி.

இந்த நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் தான் பரமேஸ்வரா. மலாக்கா வரலாற்றின் கதாநாயகர். இவர் நீல உத்தமனின் நேரடித் தலைமுறை வாரிசு. 



Golden image of a mounted rider, the Hindu god Surya, within a stylised solar halo.
A conch flanked by two nagas. 14th-century Majapahit art. National Museum Jakarta.

திரிபுவன விஜயதுங்கதேவி எனும் மஜபாகித் மகாராணியார் என்பவர் பரமேஸ்வராவின் கிளைவிட்ட தலைமுறை வாரிசு.

மிகச் சரியாகச் சொன்னால் பரமேஸ்வராவின் தாத்தாவின் தாத்தா தான் நீல உத்தமன். உறவு முறைச் சுருக்கத்திற்காகக் கொள்ளுத் தாத்தா என்கிறோம்.

பரமேஸ்வராவின் தாத்தாவின் பெயர் ஸ்ரீ ராணா வீரா கர்மா. இந்த ஸ்ரீ ராணா வீரா கர்மாவின் தாத்தா தான் நீல உத்தமன்.

நீல உத்தமன் உருவாக்கிய சிங்கப்பூரை நீல உத்தமனின் நான்கு வாரிசுகள் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.




(Ministry of Culture, Singapore. Ministry of Communications and Information. Information Division (1973). Singapore facts and pictures. Singapore: Ministry of Culture. p. 9. ISSN 0217-7773.)

சிங்கப்பூரின் ராஜாக்கள்

முதலாம் ராஜா:
ஸ்ரீ நீல உத்தமன் - Sri Tribuwana - (1299 – 1347)

இரண்டாம் ராஜா:
ஸ்ரீ விக்கிரம வீர ராஜா - Sri Wikrama Wira - (1347 - 1362)

மூன்றாம் ராஜா:
ஸ்ரீ ராணா வீரா கர்மா - Sri Rana Wira Karma - (1362 - 1375)

நான்காம் ராஜா:
ஸ்ரீ மகாராஜா - Sri Maharaja - (1375 - 1389)

ஐந்தாம் ராஜா:
பரமேஸ்வரா  - Parameswara - (1389 - 1398)

(சான்று: Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.)




நீல உத்தமன் குறிப்புகள்

நீல உத்தமன்: சிங்கப்பூரின் முதலாம் மாமன்னர்

ஆட்சி காலம்: 1299-1347

பிறப்பு: 13-ஆம் நூற்றாண்டு

பிறப்பிடம்: சுமத்திரா, இந்தோனேசியா

மறைவிடம்: கென்னிங் குன்றுக் கோட்டை (1347)

மதம்: இந்து

(Source: Abshire, Jean (2011). The History of Singapore. The Greenwood Histories of the Modern Nations. ABC-CLIO. p. 19. ISBN 978-0-313-37743-3.)




நீல உத்தமனுக்கு முன்னர் அவருடைய தந்தையார் பலேம்பாங் அரசை ஆட்சி செய்து வந்தார்.

அவருடைய பெயர் ஸ்ரீ பிரபு தர்மா சேனா திரிபுவனா (Sri Maharaja Sang Sapurba Paduka Sri Trimurti Tri Buana).

இவரின் மற்றொரு பெயர் ஸ்ரீ திருமூர்த்தி திரிபுவனா (Sri Trimurti Tribuwana).

நீல உத்தமனுக்கு மூன்று தம்பிமார்கள். அவர்களின் பெயர்கள்:

1. பிச்சித்திரம் (Bichitram),

2. பலதூதானி (Paladutani),

3. நீலதனம் (Nilatanam).

நீல உத்தமனின் தாயாரின் பெயர் ஸ்ரீ திருமூர்த்தி சுந்தரி (Sri Trimurti Sandari). 




பெயர்களைப் பாருங்கள். அனைத்துமே சமஸ்கிருதம் கலந்த தமிழ்ச் சொற்கள்.

நீல உத்தமனுக்கு மேலும் ஒரு பெயர் இருந்தது. ஸ்ரீ நீல பல்லவன் (Sri Nila Pahlawan). நீல உத்தமனின் பரம்பரையினர் பல்லவ இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அவர்களின் அழைப்புப் பெயரே சான்றாக அமையலாம்.

பல்லவன் எனும் சொல்லில் இருந்து தான் பாலவான் (Pahlawan) எனும் மலாய்ச் சொல் உருவானது. பாலவான் என்றால் மாவீரன் என்று பொருள். இதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நீல உத்தமனின் மூதாதையர்கள் பலேம்பாங் அரசை ஆட்சி செய்து வந்தார்கள். இந்தb பலேம்பாங் அரசை சைலேந்திரா அரசு கைப்பற்றியது. பின்னர் ஸ்ரீ விஜய அரசு கைப்பற்றியது. பின்னர் மஜபாகித் அரசு கைப்பற்றியது. 




பலேம்பாங் அரசு மஜபாகித் அரசினால் கைப்பற்ற பின்னர் நீல உத்தமனின் குடும்பத்தினர் பிந்தான் தீவில் அடைக்கலம் அடைந்தனர். இந்தப் பிந்தான் தீவு சுமத்திராவிற்கு வடக்கே சிங்கப்பூருக்கு அருகாமையில் இருக்கிறது.

நீல உத்தமனின் அரச குடும்பத்தினரும்; பலேம்பாங்கில் இருந்த மேலும் ஓர் ஆயிரம் விசுவாசிகளும்; பிந்தான் தீவில் தஞ்சம் அடைந்தனர். இந்தப் பிந்தான் தீவில் தற்காலிகமாக ஓர் அரசாட்சி உருவாக்கப் பட்டது. அதற்கு நீல உத்தமன் தலைவர் ஆனார்.

இதற்கு முன்னர் சிங்கப்பூரில் என்ன நடந்தது என்று பார்ப்போம். 1280-ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரைத் தெமாகி (Temagi) எனும் ஒரு சிற்றரசர் ஆட்சி செய்து வந்தார். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக் (Temasek). தெமாகிக்குச் சயாம் அரசின் பாதுகாப்பு இருந்தது. 




1299-ஆம் ஆண்டு நீல உத்தமன் துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலுக்குச் சிங்கப்பூரில் இருந்த கடல் கொள்ளையர்கள் நீல உத்தமனுக்கு உதவி செய்தார்கள். அந்தத் தாக்குதலில் தெமாகி கொல்லப் பட்டார்.

சிங்கப்பூரைக் கைப்பற்றியதும் அதற்கு அரசர் ஆனார். தெமாசிக் எனும் பழைய பெயரைச் சிங்கப்பூர் எனும் புதிய பெயருக்கு மாற்றினார்.

இப்போது இருக்கும் சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் தான் முந்தைய சிங்கப்பூர் நகரம் உருவாக்கப் பட்டது. ஆற்று நெடுகிலும் சின்னச் சின்னக் குன்றுகள் இருந்தன. அவற்றில் ஒன்று மேரு (கெனிங்) குன்று.




அதை மேரு மலை என்று அழைத்தார்கள். அங்கு இருந்து குடிப்பதற்கும் குளிப்பதற்கும் நன்னீர் கிடைத்தன. இப்போது அந்த இடம் கெனிங் கோட்டைக் குன்று (Fort Canning Hill) என அழைக்கப் படுகிறது.

அப்போது சிங்கப்பூர் ஒரு நகரம் அல்ல. ஒரு சின்ன ஊர். சொல்லப் போனால் அது ஒரு சின்ன மீன்பிடி கிராமம். கடற் கொள்ளையர்களின் மறைவிடமாக விளங்கியது. சீனா நாட்டுக் கப்பல்கள் வந்து போய்க் கொண்டு இருந்தன.

நீல உத்தமனின் வளர்ப்புத் தாயார் ஸ்ரீ பரமேஸ்வரி ராணியார் (Queen Paramisuri). பிந்தான் தீவில் இருந்தார். இவருடைய மகள் இளவரசி பினி (Sri Bini) என்பவரை நீல உத்தமன் திருமணம் செய்து கொண்டார்.

நீல உத்தமனுக்குத் தேவையான வேலையாட்கள்; அடிமைகளை அங்கு இருந்து அனுப்பி வைத்தார். அத்துடன் படகுகள்; குதிரைகள்; யானைகள் போன்றவற்றையும் அனுப்பி வைத்தார். 




நீல உத்தமனின் வளர்ப்புத் தாயார் ஸ்ரீ பரமேஸ்வரி ராணியாருக்கு ஒரு மகள் இருந்தார். இளவரசி பினி (Sri Bini). இவரை நீல உத்தமன் திருமணம் செய்து கொண்டார்.

அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்குச் சிங்கப்பூர் நீல உத்தமனின் கட்டுப்பாட்டிலும் அவருடைய வாரிசுகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. வளர்ச்சியும் பெற்றது.

சிங்கப்பூர் தோன்றிய பின்னர் தான் மலாக்கா பிறந்தது. அதை நாம் மறந்துவிடக் கூடாது. முதலில் சிங்கப்பூர். அடுத்து தான் மலாக்கா. என்னதான் வரலாற்றைச் சலித்துச் சல்லடை போட்டாலும் சிங்கப்பூர் வரலாற்றுக்குப் பின்னர் தான் மலாக்காவின் வரலாறு வருகிறது.

சிங்கப்பூருக்கு முதன்முதலாக ஓர் அடையாளத்தை வழங்கியவர் நீல உத்தமன். அதற்கு நன்றி சொல்லும் வகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சிங்கப்பூர் அரசாங்கம் நீல உத்தமனுக்கு ஒரு பளிங்குச் சிலையை உருவாக்கிப் பெருமை செய்து இருக்கிறது.

அந்தப் பளிங்குச் சிலை சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. உலகமே வியந்து பார்க்கிறது.

சிங்கப்பூர் இன்று இந்த நிலைக்கு வருவதற்கு மூன்று பெரியவர்கள் அடையாளப் படுத்தப் படுகிறார்கள். மூத்தவர் நீல உத்தமன். அடுத்தவர் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ். மூன்றாவதாக லீ குவான் இயூ. மறக்க முடியாத மனிதர்கள்.

ஒரு சிலருக்கு நீல உத்தமன் என்பவர் யார் என்பதுகூட தெரியாமல் இருக்கலாம். அந்த அளவிற்கு வரலாற்றுப் போர்வைகள்.

வட துருவ எஸ்கிமோக்களின் பிங்கி மங்கி போர்வைகள்; சைபீரியாவின் சியான் மியான் போர்வைகள்; மங்கோலியாவின் யாக் பாக் போர்வைகள்; ஜப்பான் நாட்டின் இச்சி புச்சி போர்வைகள்.

இப்படி வாய்க்கு வராத போர்வைகளை எல்லாம் இறக்குமதி செய்து மலேசிய இந்தியர்களின் வரலாற்றை அமுக்கி அமுக்கி வைத்தால் யாருக்கு என்னங்க தெரியப் போகிறது. இங்கே நடக்கிற வரலாற்று இருட்டடிப்புக் கூற்றைத்தான் சொல்ல வருகிறேன்.

ஆனால் சிங்கப்பூர் மக்கள் மறக்கவில்லை. சிங்கப்பூர் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தவர் நீல உத்தமன். அந்த உண்மையைச் சிங்கப்பூரியர்கள் மறக்கவில்லை. நினைத்துப் பார்க்கிறார்கள்.

வரலாற்றைச் சிதைக்காமல் - மறைக்காமல், வரலாற்றை வரலாறாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவர்களிடம் உள்ளது. தெளிவான பெருந்தன்மை.  வரலாற்றை எப்படித்தான் திரித்து திருத்தி எழுதினாலும் வரலாற்றின் அசல்தன்மை சிதைவு படாது. அப்படியே தான் இருக்கும்.

இந்தப் பக்கம் பாருங்கள். வரலாற்றுக் கோமாளிகளின் வரலாற்றுச் சித்து விளையாட்டுகள் ஏராளம். ஏராளம்.

இரவில் படுக்கப் போகும் முன்னர், நாளைக்கு எப்படி எந்த இடத்தில் வரலாற்றைக் குத்திக் குதறவது; கசாப்புக் கடைக்கு எப்படி பார்சல் பண்ணுவது என்று நினைத்துக் கொண்டு தான் படுப்பார்கள் போலத் தெரிகிறது.

இருந்தாலும் பரவாயில்லை. உலக வரலாற்று ஆசிரியர்கள் இவர்களைப் பார்த்து வெட்கப் படுகிறார்கள். அதுவே ஒரு வகையில் மனநிறைவு.

References:

1. Linehan, W. (1947, December). The kings of 14th century Singapore. Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society, 20(2)(142), pp.117-120. Retrieved from JSTOR via NLB’s eResources website: http://eresources.nlb.gov.sg/; The kings of Singapore. (1948, February 26).

2. Munoz, P. M. (2006). Early kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet, pp. 113–189.

3. Miksic, J. N. (2013). Singapore and the Silk Road of the Sea, 1300–1800. Singapore: NUS Press, p. 167.

4. Paul Wheatley (1961). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula before A.D. 1500. Kuala Lumpur: University of Malaya Press. pp. 82–83.)

5. John N. Miksic (15 November 2013). Singapore and the Silk Road of the Sea, 1300_1800. NUS Press. p. 154)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக