03 ஜூலை 2020

இந்தோனேசிய தூதரகத்தில் சரஸ்வதி சிலை

தமிழ் மலர் - 03.07.2020

அமெரிக்காவில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தின் சரஸ்வதி தேவி சிலை சரித்திரம் படைக்கின்றது. மத நல்லிணக்கத்தில் மகிமை பேசும் நினைவுச் சின்னமாய்ப் பார்க்கப் படுகின்றது. சிறுபான்மை இனத்தோருக்குச் சிறப்பு செய்யும் சீர்மிகுச் சின்னமாய்ப் போற்றப் படுகின்றது. வருவோர் போவோர் அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்து மலைக்கச் செய்கின்றது. இதில் இன்னோர் ஆச்சரியம்!



சரஸ்வதி தேவியாரின் காலடியில் அமர்ந்து இருக்கும் மூன்று மாணவர்களில் ஒருவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா. அவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த போது அவருக்கு மரியாதை செய்யும் வகையில் அந்தச் சிலை செய்யப்பட்டது. இடது கோடியில் அமர்ந்து இருக்கிறார்.

அவருடன் அமர்ந்து இருக்கும் மற்ற இருவரும் அவரின் வகுப்புத் தோழர்கள். இந்தோனேசியாவில் பாராக் ஒபாமா முதலாம் வகுப்பு படித்ததை நினைவு கூரும் வகையில் அந்தச் சித்தரிப்பு சிற்பம் அமைக்கப் பட்டது.

அமெரிக்காவுடன் தன்னுடைய உறவை மிகவும் தனித்துவமான முறையில் இந்தோனேசியா வெளிப்படுத்தி உள்ளது. இந்து பாரம்பரியத்தில் கல்வியின் சின்னமாக விளங்குபவர் சரஸ்வதி தேவி. இதன் மூலமாக அந்த நாட்டின் தனித்துவம் தனித்து நிற்கின்றது.



சரஸ்வதி தேவி என்பவர் ஞானம், இசை, வெண்மை ஆகியவற்றின் சின்னமாகும். மேலும் ஞானம், இசை, வெண்மை எனும் சின்னங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களாகும்.

இந்தச் சிலை அதன் வெண்மை நிறத்தின் காரணமாக மிக அர்த்தம் பொதிந்தாக மிளிர்கிறது. வெள்ளை நிறத்தில் வெள்ளை தாமரை; வெள்ளை நிறத்தில் அன்னம்; வெள்ளை நிறத்தில் சரஸ்வதி தேவி. அனைத்தும் வெண்மைத் தூய்மையின் பிரதிபலிப்புகளாய் பரிணமிக்கின்றன.

வாஷிங்டன் மாநகரில் மாசசூசெட்ஸ் அவென்யூ (Massachusetts Avenue) என்பதைத் தூதரக சாலை (Embassy Row) என்று அழைப்பார்கள். அந்தச் சாலை முழுவதும் பலரையும் ஈர்க்கக் கூடிய தூதரகக் கட்டிடங்கள். அவற்றின் முன்னால் ஒவ்வொரு நாட்டின் கொடிகளும் அழகு அழகாய்ப் பறந்து கொண்டு இருக்கும். 



தூதரகங்களுக்கு முன்னால் பெரும்பாலும் அவர்கள் நாட்டு வீரர்கள் அல்லது வீராங்கனைகளின் சிலைகளை நிறுத்தி வைத்து இருப்பார்கள். பிரிட்டிஷ் தூதரகத்தின் வளாகத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் சிலை. இந்தியத் தூதரகத்தின் வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலை.

அவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் அண்மைய காலத்தில் ஓர் இந்து தெய்வம் சரஸ்வதி தேவி அந்தச் சாலையில் அலங்கரிக்கத் தொடங்கி விட்டார். இந்தோனேசியத் தூதரகத்தின் முன்னால் ஒரு பூந்தோட்டத்தில் சரஸ்வதி தேவி நிற்கிறார். வெள்ளை பளிங்குக் கற்களில் தங்கம் ஒளிர்கின்ற சிலை வடிவத்தில் ஒயில் படிமம்.

மற்ற தூதரகங்களில் இருந்து தனித்து நிற்பதே எங்களின் குறிக்கோள் என்று அமெரிக்காவிற்கான இந்தோனேசியத் தூதர் டினோ பட்டி ஜலால் (Indonesian Ambassador Dino Patti Djalal) கூறுகிறார்.



நாங்கள் எதைச் செய்ய விரும்பினோமோ அதைச் செய்து முடித்தோம். சரஸ்வதி கற்றல் ஞானத்தின் தெய்வம் என்று ஜலால் கூறுகிறார். அவள் காலடியில் மூன்று குழந்தைகள் படிக்கிறார்கள். இது ஐந்து மாதங்களில் ஐந்து பாலி தீவு சிற்பிகளால் செய்யப் பட்டது.

சரஸ்வதி தேவியின் வெளிப்பாடு அழகானது. "பாலி முழுவதும் நீங்கள் காணும் இந்து தெய்வங்களில் அந்த வெளிப்பாடு இருக்கும்" என்று ஜலால் கூறுகிறார். "அமைதியான முகம்... அவரைப் பார்ப்பவர்களுக்கு ஆசீர்வாதம்" என்கிறார்.

உலகிலேயே மிகப் பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடு இந்தோனேசியா. இருந்தாலும் வாஷிங்டனில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்திற்கு இந்து மதத்தின் அடையாளத்தைத் தேர்வு செய்து இருக்கிறார்கள்.



தூதர் டினோ பட்டி ஜலால் சொல்கிறார்: "முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட இந்தோனேசியாவில் பாலி தீவு என்பது சின்ன ஓர் இந்து வளாகம். ஆனாலும் மத சுதந்திரத்திற்கான எங்கள் மரியாதை எப்போதும் உண்டு. அதைப் பற்றி இந்தச் சிலை நிறையவே சொல்கிறது. மிகப் பெரிய முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் தூதரகத்தின் முன் ஒரு சிலை. ஓர் இந்து சிலை" என்று சொல்கிறார்.

(Bali is a Hindu enclave in Muslim-majority Indonesia. And I think it says a lot about our respect for religious freedom that the statue in front of the country with the largest Muslim population is a Hindu statue. - Indonesian Ambassador Dino Patti Djalal)

சான்று: https://www.npr.org/2013/06/30/197146433/hindu-goddess-blesses-embassy-row

தூதர் டினோ பட்டி ஜலால் அமெரிக்காவில் உள்ள குஞ்ச் சமூக செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டி கொடுத்து இருந்தார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் சொல்கிறார்:



சரஸ்வதி என்பவர் கற்றல் மற்றும் ஞானத்தின் தெய்வம். அவருக்கு நான்கு கரங்கள். ஒரு கரத்தில் கலை மற்றும் கலாச்சாரத்தை குறிக்கும் ஓர் இசைக் கருவி.

மறுபுறம் அட்சயமாலை எனும் பிரார்த்தனை மணிகள். இவை என்றைக்கும் அழிவு இல்லாத கல்வியைக் குறிக்கின்றன. இன்னொரு கையில் கையெழுத்துப் பிரதியை வைத்து இருக்கிறார். இது அறிவின் அடிப்படை மூலத்தைக் குறிக்கின்றது.

சரஸ்வதி தேவி ஓர் அன்னப் பறவையில் அமர்ந்து அமெரிக்காவுக்கு வருகை புரிந்து இருக்கிறார். அன்னப் பறவை என்பது ஞானத்தையும் அழகையும் குறிக்கும். அது உங்களுக்கும் தெரியும்.



நிருபர்: முஸ்லிம் மக்களின் மிகப் பெரிய தாயகமாக இந்தோனேசியா உள்ளது. இந்து தெய்வத்தைக் காட்சிப் படுத்த ஏன் முடிவு செய்தீர்கள்?

தூதர்: அது மில்லியன் டாலர் கேள்வி. இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான ஒன்று பாலி. ஆனாலும் மிக மிகப் பிரபலமானது அல்ல. மத சுதந்திரத்திற்கான எங்கள் மரியாதை பற்றி அந்தச் சிலை நிறைய சொல்கிறது என்று நான் நினைக்கிறேன்.

நிருபர்: மாசசூசெட்ஸ் அவென்யூ சாலையில் உள்ள அனைத்துத் தூதரக வளாகங்களிலும் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அந்தச் சிலைகளில் பெரும்பாலும் தாடி வைத்து இருக்கும் வயதான மனிதர்களாகவே உள்ளனர். சரஸ்வதி தெய்வத்தைப் போன்று ஓர் அழகான சிலை இந்தச் சாலையில் எதுவும் இல்லையே?



தூதர்: ஆம். நீங்கள் சொல்வது மிகவும் சரி. அதைத்தான் நாங்கள் செய்ய விரும்பினோம். அதுதான் சரி என்று நானும் நினைக்கிறேன். அது ஒரு தனித்துவமான நோக்கம். தனித்துவமான பார்வை.

இதனால் மதப் பன்மைத்துவத்தை பார்க்க முடிகின்றது. மாறுபட்ட பன்முகத் தன்மையை மறப்பதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது. சிறுபான்மையினரை மதித்துப் பழகும் உணர்வு ஏற்படுகின்றது.

தூதர் டினோ பட்டி ஜலால் அருமையான ராஜதந்தரி. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 2013 செப்டம்பர் மாதம், தன் தூதர் பதவியை ராஜினாமா செய்தார். இவருக்குப் பின்னர் புடி போவலெக்ஸோனோ (Budi Bowoleksono) என்பவர் அமெரிக்காவின் இந்தோனேசியத் தூதர் பதவியை ஏற்றார்.

இந்திய தூதரகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இந்தோனேசிய தூதரகம் உள்ளது. வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு மைல் தொலைவு. 



ஒவ்வொரு நாளும் வாஷிங்டன் நகரத்திற்கு வருகை தரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பாகவும் இந்தச் சரஸ்வதி சிலை மாறிவிட்டது.

இந்தச் சிலை நியோமன் சுதர்வா (Nyoman Sudarwa) எனும் சிற்பியின் தலைமையில் மேலும் நான்கு சிற்பிகளால் உருவாக்கப் பட்டது. 2013 ஜூன் 18-ஆம் தேதி தூதரகத்தின் முன் வளாகத்தில் நிறுவப்பட்டது. இதன் உயரம் 16 அடி (4.9 மீ). தங்க முலாம் வேயப்பட்ட வெள்ளை பளிங்குச் சிலை.

ஒரு வருடம் கழித்து, 2014 செப்டம்பர் 25-ஆம் தேதி, இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுடோயோனோ (Susilo Bambang Yudhoyono) அமெரிக்காவுக்கு வந்து திறப்பு விழா செய்தார். இந்தியத் தூதரகத்தில் நிறுவப்பட்டு இருக்கும் மகாத்மா காந்தி சிலையை விட சரஸ்வதி சிலை சற்று உயரமாக உள்ளது.

’இந்தச் சிலையின் அமைப்பு நம் இதயங்களைத் திறந்து வைக்கும். நமக்குள் இருக்கும் வெறுப்புகளையும் தவறான புரிதல்களையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் என் எதிர்பார்க்கிறேன்’ என்று அதிபர் சுசிலோ பாம்பாங் கூறினார்.



அமெரிக்காவிற்கான இந்தோனேசிய தூதர் டாக்டர் டினோ பட்டி ஜலால்; தேசிய பொருளாதாரக் குழுவின் தலைவர்; மற்றும் பாலியில் உள்ள பாண்டுங் மாவட்ட மக்களின் ஆதரவில் அந்தச் சிலை உருவாக்கப்பட்டது. திறப்பு விழாவின் போது சிற்பிகள் அனைவரும் பாலியில் இருந்து வாஷிங்டனுக்கு அழைத்து வரப் பட்டனர்.

சிலையை வடிவம் அமைப்பதற்கு ஐந்து மாதங்கள் பிடித்தன. இந்தச் சிலை போவோர் வருவோரை எல்லாம் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

30 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த சிலையின் முன் ஒரு கல்வெட்டு உள்ளது. அதில் "அன்பும் அறிவும் அழியாத சக்திகள். அந்தச் சக்திகள் கடவுளின் அனைத்துக் குழந்தைகளின் இதயங்களையும் ஈர்க்கட்டும். பூமியில் என்றும் அமைதி நிலவட்டும்" - பாண்டுங் (பாலி) மேயர் அனாக் அகோங் கதே அகோங் (Anak Agung Gde Agung). என்னே ஒரு வாசகம்.

மதத்தின் பெயரால் சில பல நாடுகளில் சொல்ல முடியா அவலங்கள். சிறுபான்மை இனத்தவரின் வரலாறுகளைச் சிதைப்பது எப்படி; அவர்களின் மொழியை ஒழிப்பது எப்படி; அவர்களின் இனத்தை அழிப்பது எப்படி; அவர்களைச் சிறுச் சிறுகச் சாகடிப்பது எப்படி என்று இரவு பகலாய் ரூம் போட்டு டிஸ்கஷன் பண்ணுகிறவர்கள் எங்கே? சமய நல்லிணக்கத்தின் ஜீவநாடிகளாய் வாழும் மனிதத்தின் உயிர்நாடிகள் எங்கே?

இந்தோனேசியர்கள் சமய நல்லிணக்கத்தின் தலைவாசலாய் அமைகின்றார்கள். வாழ்த்தப்பட வேண்டிய நன்மக்களாய் வாழ்கின்றார்கள். அவர்கள் வழங்கி இருக்கும் பெருமையில் கண்கள் குளமாகின்றன. சிரம் தாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.07.2020

சான்றுகள்:

1. https://www.huffpost.com/entry/goddess-saraswati-statue-_b_3460615

2.https://www.indiawest.com/news/global_indian/statue-of-goddess-saraswati-installed-in-dc/article_0229a289-a5c0-536a-8a68-16e774e5dca8.html

3. Routledge Handbook of Contemporary India



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக