05 ஆகஸ்ட் 2020

இந்தியாவின் கோகினூர் வைரம் - 1

தமிழ் மலர் - 04.08.2020

மனிதர்களின் வரலாற்றில் எத்தனை எத்தனையோ மனிதப் பரிமாணங்கள். சிலர் வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள். சிலர் வந்தார்கள் வாழ்ந்தார்கள் வீழ்ந்தார்கள். சிலர் வந்ததும் தெரியாமல் வாழ்ந்ததும் தெரியாமல் காணாமல் போனார்கள். ஆனாலும் அவர்களில் மறைந்தும் மறையாமல் நம்முடன் இன்றும் சிலர் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.



அதே அந்தப் பாவனையில் இந்திய வரலாற்றில் மர்மச் சாணக்கியம் தெரிந்த பெண் ஒருத்தி இருந்தாள். பேசா மடந்தையாய் வாழ்ந்தாள். இன்னும் பேசாமலேயே வாழ்ந்து கொண்டும் இருக்கிறாள்.

அவள்தான் கோகினூர் சீமாட்டி என்கிற கோகினூர் வைரம். நவரத்தினங்களின் செல்வச் செறுக்கி. பாரத மாதா பார்த்துப் பார்த்துப் பட்டை தீட்டிய பத்தரை மாத்துப் பொக்கிஷம்.

உலகம் பார்த்த எல்லா வைரங்களுமே கோடிக் கணக்கில் விலை பேசப் பட்டவை. விற்கப் பட்டவை. வாங்கப் பட்டவை. ஆனால் விலையே பேச முடியாத ஒரே ஒரு வைரம் இன்னும் இருக்கிறது. அதுதான் இந்தக் கோகினூர் வைரம்.


கோகினூர் என்று ஒரே ஒரு முறை உரக்கச் சொல்லிப் பாருங்கள். அதில் ஒருவிதமான ஜீவ ஒலி துடிப்பதை உணர முடியும். கோகினூர்… கோகினூர் என்று சொல்லிக் கொண்டே இருங்களேன். அப்புறம் உங்களுடைய இதயத்தின் துடிப்புகள் மேலும் கீழுமாய் கூடி ஏறி இறங்கும். பொய் சொல்லவில்லை.

கோகினூர் வைரத்திற்கு ஒரு சாபம் இருக்கிறது. யாராவது ஒருவர் அதன் பெயரை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தால் என்றைக்காவது ஒரு நாளைக்கு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு வருமாம். வந்து கதவைத் தட்டுமாம். காசு பணம் வேண்டுமா என்று கேட்குமாம். முயற்சி செய்து பாருங்கள்.

பில் கேட்ஸ் அப்படித்தான் பணக்காரர் ஆனாராம். கேள்விப் பட்டேன். எதற்கும் நீங்களும் செய்து பாருங்களேன். பணம் கிடைத்தால் என்னை மறந்துவிட வேண்டாம். கிடைக்கா விட்டால் ஐ ஆம் வெரி சாரி!


இந்தியாவின் அரிய பெரிய பொன் குவியல்கள் (பொக்கிஷங்கள்); புதையல்கள்; செல்வங்கள் கணக்கு வழக்கு இல்லாமல் கொள்ளை போய் இருக்கின்றன. இந்தியாவிற்கு வந்த கடலோடிகளும் சரி; நாடோடிகளும் சரி; நன்றாகவே கொள்ளை அடித்துக் கொண்டு போய் இருக்கிறார்கள்.

அப்படி கொள்ளை அடிக்கப்பட்ட பொன் மணிகளில் கோகினூர் வைரம் முதன்மையானது. இந்த வைரம் ஒரு விசித்திரமான பின்னணியைக் கொண்டது.

இந்தியாவுக்குள் படை எடுத்து வந்த அந்நியர்களால் கொள்ளை அடிக்கப்பட்ட அரிய பெரிய பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. 

தரியா நூர் வைரம் (Daria-i-Noor),

ஷா ஜகானின் மயிலாசன வைரம் (Akbar Shah),

ஹோப் வைரம் (Hope Diamond),

நிஜாம் வைரம் (Nizam Diamond) ,

மகா மொகலாய வைரம் (Great Mogul Diamond),

ஓர்லோவ் வைரம் (Orlov Diamond),

ஜேக்கப் வைரம் (Jacob Diamond),

ரீஜண்ட் வைரம் (Regent Diamond)

அவை அனைத்தும் அரிதிலும் அரிதான புனிதமான வைரங்கள். இந்தியாவில் இருந்து கொள்ளை அடிக்கப் பட்ட அரிய வகை நவரத்தின மணிகள்.

அங்கே இந்தியாவில் ஆயிரம் கோடி அரசியல் பெருமைகள் பேசி என்னங்க இருக்கிறது. இந்திய மண்ணிலே இருந்து பட்டப் பகலிலேயே கொள்ளை அடித்துக் கொண்டு போய் விட்டார்களே. அதைப் பற்றி என்னங்க பெருமை பேச வேண்டி இருக்கிறது.


அந்த வைரங்கள் எல்லாம் இப்போது வெளிநாட்டு அரும் பொருள் காட்சியகங்களில் இந்திய மண்ணின் சாட்சிப் பொருள்களாகக் காட்சி தருகின்றன. அவ்வளவு தான். ஒரு செருகல்.

இந்தியாவில் இருந்து கொள்ளை போன இந்திய வைரங்களை வைத்து ஹாலிவுட் சினிமாக்காரர்கள் இந்தியானா ஜோன்ஸ் - டெம்பிள் ஆப் டூம் (Indiana Jones and Temple of Doom) எனும் படத்தை எடுத்து கோடிக் கணக்கில் காசு  பார்த்து விட்டார்கள்.

கிறிஸ்துவர்களின் புனிதப் பாத்திரமான ஹோலி கிரைல் (Holy Grail) அட்சய பாத்திரம். கேள்விப்பட்டு இருப்பீர்கள். இன்றைய நாள் வரையிலும் அதைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்கள். தேடிக் கொண்டும் வருகிறார்கள்.


அதைப் பற்றி படம் எடுத்து ஆவணங்களைத் தயாரிக்கிறார்கள். எப்பேர்ப்ட்ட புனிதமான செயல். தலைவணங்கும் உரிமைப் போராட்டங்கள்.

ஆனால் இந்தியா நாடு இழந்து போன வைரங்களைப் பற்றி பலரும் அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை. தொப்பை நிறைந்தால் சரி என்கிற அரசியல்வாதிகள் இருக்கும் வரையில் ஒன்னும் சொல்கிற மாதிரி இல்லைங்க.

இந்தியாவின் பெருமைக்குரிய மயிலாசனம் எங்கே இருக்கிறது?

கோகினூர் வைரம் எப்படிக் கொள்ளை போனது?

ஷா வைரம் எப்படி ரஷ்யாவுக்குப் போனது?

தரியாநூர் வைரம் எப்படி ஈரானுக்கு கடத்தல் செய்யப் பட்டது?

இதைப் பற்றி கொஞ்சம்கூட தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். வேதனையாக இருக்கிறது. இப்படி எழுதுவதற்காக என்னை மன்னியுங்கள்.


அண்மையில் பத்மநாபசாமி கோயிலின் காப்பறைகளில் கோடிக் கோடியாய் தங்கம் கிடைத்தது. தெரியும் தானே. ஆனால் அதைப் போல பல நூறு மடங்கு; பல ஆயிரம் மடங்கு தங்கம் இந்திய மண்ணில் இருந்து கொள்ளை போய் விட்டது. இந்த விசயம் எத்தனைப் பேருக்கும் தெரியும். சொல்லுங்கள்.

முக்கால்வாசியை உலகப் புகழ் சுரண்டல் மன்னன் இங்கிலாந்து சுருட்டிக் கொண்டு போனது. இந்தியாவைக் கூறு போட்ட சாணக்கியத்திற்காக வருடம் தவறாமல் இங்கிலாந்து நாட்டுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். கொடுக்க வேண்டும். இது என்னுடைய சிபாரிசு.

இப்படிச் சொல்வதினால் இங்கிலாந்து இங்கே வந்து என் மீது வழக்கு ஒன்றும்  போட முடியாது. வழக்குப் போட்டாலும் ஜெயிக்கவும் முடியாது. விடுங்கள்.


மலாயாவில் வெள்ளைக்காரர்கள் விட்டுட்டு போன கித்தா பால் தோம்புகள் நிறையவே இருக்கின்றன. பிரட்டுக் களத்தில் வரிசை வரிசையாக நின்று ஆஜர் ஆஜர் என்று சொல்லவும் தயாராய் இருக்கின்றன. அப்புறம் என்னங்க. அதனால் கவலையே இல்லை.

ஷாஜகானின் சிம்மாசனமாக இருந்த மயிலாசனம் (Peacock Throne) 1,150 கிலோ தங்கத்தில் உருவாக்கப் பட்டது. அதில் 230 கிலோ அரிய வகைக் கற்கள் பதிக்கப் பட்டன. 28 வைடூரியங்கள். 108 சிவப்புக் கற்கள். 116 மரகதங்கள். 288 மாணிக்கங்கள். 388 கோமேதகங்கள். 12,000 பவளங்கள் முத்துகள்.

ஷாஜகான் உப்பரிகையின் மீது அந்த மயிலாசனம் நிறுவப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு 5286 கோடி ரிங்கிட்டிற்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். இது 2000-ஆம் ஆண்டு கணக்கு. இப்போதைக்கு இன்னும் கூடுதலாய் இருக்கும்.


இதைச் சொல்லி ஒரு பயனும் இல்லை. ஏன் தெரியுங்களா. அந்தச் சிமாசனத்தை அக்கு வேர் ஆணி வேராகக் கழற்றி ‘போத்தல்’ கடையில் விற்று விட்டார்களாம். அதைப் பற்றி பிறகு விளக்கமாகச் சொல்கிறேன்.

1635-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி. அந்தச் சிம்மாசனத்தில் ஷாஜகான் கடைசி கடைசியாக ஒருமுறை அமர்ந்தார். அதன் பின் அப்புறம் அதைப் பார்க்கவும் இல்லை. பயன்படுத்தவும் இல்லை.

பேரரசர் பதவியில் இருந்து ஷாஜகான் அகற்றப்பட்டு ஆக்ரா கோட்டையில் சிறை வைக்கப் பட்டார். தாஜ்மகாலைப் பார்த்து பார்த்து அழுது கொண்டே இறந்தும் போனார். பாவம் மனிதர்.


1738-இல் நாடிர் ஷா (Nadir Shah) என்பவர் இந்தியா மீது படை எடுத்தார். மறு ஆண்டு, அந்தச் சிம்மாசனத்தை ஈரானுக்குக் கடத்திச் சென்றார். போனது போனதுதான் திரும்பி வரவே இல்லை.

இன்னும் ஒரு தகவல். தரியா நூர் வைரம் என்பது 182 கேரட் வைரம். பழைய கோல்கொண்டாவில் இருந்து கிடைத்தது தான்.

தரியா நூர் என்றால் ஒளிக்கடல் என்று பொருள். இந்த வைரம் இப்போது ஈரானிய அரசப் பரம்பரையின் புரதான நகைகள் காப்பகத்தில் இருக்கிறது. இன்னும் இருக்கிறது. இதையும் நாடிர் ஷா தான் கொள்ளை அடித்துக் கொண்டு போனார்.


வைரங்கள் மட்டும் இல்லை. அரிய கலைப் பொருளாகக் கருதப்படும் திப்புவின் இயந்திரப் புலி, லண்டனில் உள்ள விக்டோரியா அல்பர்ட் அரும்பொருள் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

நல்ல வேளை. ஏலத்துக்குப் போனதை ‘கிங்பிசர்’ புகழ் மல்லையா எடுத்துக் காப்பாற்றினார். இல்லை என்றால் அதுவும் போய் இருக்கும். இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஆக களவு போன கலைச் செல்வங்கள் களவு போனதாகவே இருக்கின்றன. மீட்க வேண்டும் என்கிற உருப்படியான முயற்சிகளை இந்தியத் தலைவர்கள் எவருமே எடுத்தாகத் தெரியவில்லை.


ரொம்ப வேண்டாம். சுவிஸ் வங்கிகளில் இந்திய அரசியல்வாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கறுப்பு பணத்தில் பாதியைக் கொண்டு வந்தாலே போதும். இரண்டு மூன்று வருடங்களுக்கு இந்திய மக்கள் வேலைக்குப் போகாமல் காலாட்டிக் கொண்டு ராசா மாதிரி சாப்பிடலாம். நடக்குமா.

அடுத்து இத்தாலி நாட்டு இட்லி சாம்பார். அவரின் கணவர் தற்கொலைப் படையினரால் கொல்லப் பட்டது உங்களுக்கும் தெரியும். கணவரைக் கொன்றவர்களின் இனத்தையே அழித்துக் காட்டுகிறேன் என்று சொல்லி அந்தப் பதிவிரதை பயங்கரமாக ருத்ர தாண்டவம் ஆடியது. ஒரு வழியும் பண்ணிவிட்டது.

அவருக்கு மட்டும் 6462 கோடி ரூபாய் கறுப்புப் பணம் இருப்பதாக சுவிஸ் வங்கிகள் கணக்கு காட்டுகின்றன. என்ன செய்வது. அந்த மாதிரி மக்களிடம் இருந்து கொள்ளை அடித்த பணத்தைப் பாதுகாப்பதற்கே நேரம் போதவில்லையாம்.


அப்புறம் எப்படிங்க களவு போன கலைச் செல்வங்களை எல்லாம் கண்டுபிடிப்பதாம். இந்தியாவுக்கு கொண்டு வருவதாம். சொல்லுங்கள். இனிமேல் நம்பிக்கை நாயகன் நரேந்திர மோடிதான் அதையும் பார்த்துச் செய்ய வேண்டும்.

இவரும் சரிபட்டு வருவதாகத் தெரியவில்லை. உலகம் சுற்றுவதிலேயே நேரமும் வீரமும் தேய்கின்றன. மன்னிக்கவும்.

மர்ம நவரசங்களில் மாயஜாலம் காட்டும் கோகினூர் வைரத்திற்குப் (Koh-i-Noor) பல உயிர்களைப் பேரம் பேசியதாக நல்ல ஒரு சாபக்கேடும் இருக்கிறது. 105 புள்ளி 80 காரட் கொண்டது இந்தக் கோகினூர் வைரம். இப்போது இங்கிலாந்து எலிசபெத் மகாராணியின் தலையின் மேல் இருக்கும் கிரீடத்தில் ஒய்யாரமாய் உட்கார்ந்து கொண்டு புன்னகை செய்கின்றது.


கிரீடத்தைப் பயன்படுத்தாத நேரத்தில் இங்கிலாந்தின் ’டவர் ஆப் லண்டன்’ (Jewel House at the Tower of London) எனும் இடத்தில் இருக்கும். அங்கே அரசப் பரம்பரை நகைகளுக்கான காப்பகத்தில் பலத்த காவலுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கோகினூர் வைரத்தின் மதிப்பு ஏறக்குறைய 12,000 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். நம்ப மலேசியா கணக்கிற்கு ஏறக்குறைய பத்து பில்லியன் ரிங்கிட்.

அதாவது பினாங்கு பாலம் போல இரண்டு மூன்று பாலங்களைக் கட்டி விடலாம். அந்த அளவிற்கு மதிப்பு கொண்டது நம்ப கோகினூர் வைரம். இன்னும் சிலர் அதற்கு விலையே பேச முடியாது என்கிறார்கள்.

இந்த உலகத்தில் 765 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவ்வளவு பேரும் தங்களின் உணவுக்காக ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறார்களோ; அந்த அளவிற்குக் கோகினூர் வைரம் விலை மதிப்பு கொண்டது.


அந்த மாதிரி ஒரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது. பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கோகினூர் வைரம் இப்போது இங்கிலாந்துக் காப்பகத்தில் ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி மௌன சேட்டை செய்து கொண்டு இருக்கிறது. சமயங்களில் கிருஷ்ண லீலா சேட்டைகளையும் செய்கின்றது.

இதனை இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் உரிமை கேட்கின்றன. பஞ்சாப், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேச மாநிலங்களும் தங்களுக்குச் சொந்தம் என்று மல்லுக்கு நிற்கின்றன.

ஆகக் கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் மூத்த அறிஞர் ஒருவர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவிப்பு செய்தார். 2014 சுனாமி வந்தது. அந்த அறிவிப்பும் அடிபட்டுப் போனது. இப்போது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. காரணம் அவர்தான் போய்ச் சேர்ந்து விட்டாரே!.

இன்னும் சிலர் கோகினூர் வைரம் எங்கள் பாட்டன் சொத்து எங்கள் வீட்டுப் பாட்டிச் சொத்து என்று வீரவசனம் பேசுகிறார்கள். கட்சி கட்டிக் கொண்டு கம்பு கத்தி கப்படாக்களுடன் சுற்றித் திரிகிறார்கள்.

சொல்லப் போனால் நல்ல ஓர் அருமையான மெகா சீரியல் நாடகம். இந்த நாடகத்தைப் பதினெட்டுப் பட்டி உலக நாடுகளும் டிக்கெட் வாங்காமல் முன் வரிசையில் அமர்ந்து அமைதியாகப் பார்த்து கொண்டு இருக்கின்றன. வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கிறேன்.

(தொடரும்)

சான்றுகள்:

1. Hubert Bari; Violaine Sautter (2001). Diamonds: In the Heart of the Earth, in the Heart of Stars, at the Heart of Power. Vilo International. p. 178.

2.Muhammad Baqir. The Peacock Throne: Romance and Reality. Journal of the Research Society of Pakistan, 3 (1966), pp. 27-32.

3. https://web.archive.org/web/20140128033326/http://www.farlang.com/diamonds/streeter_great_diamonds/page_200)

4. https://books.google.com.my/books?id=MwpjtwAACAAJ&redir_esc=y - Anna Keay (2011). The Crown Jewels: The Official Illustrated History. Thames & Hudson. pp. 156–158.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக