08 ஆகஸ்ட் 2020

உலகத்தை மிரட்டும் புதிய தொற்று நோய்

உலகத்தைக் கலங்கடிக்க மீண்டும் ஒரு தொற்று நோய். திரோம்போ சைட்டோ பீனியா (Severe Fever with Thrombo cytopenia Syndrome - SFTS). இது ஒரு வகையான உண்ணி வழி நோய் (Tick-Borne Virus).

கோவிட் 19 ஆள்கொல்லி நோயினால் உலகமே அவதிப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில்; இப்போது மீண்டும் அதே சீனாவில் ஒரு புதிய நோய். ஒரு புதிய எச்சரிக்கை மணி.

சீனாவில் இதுவரை ஏழு பேர் பலியாகி உள்ளனர். தவிர 60 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிழக்கு சீனாவின் ஜியாங்சு (Jiangsu) மாநிலத்தில் 37-க்கும் மேற்பட்டோர் திரோம்போ சைட்டோ பீனியா வைரஸால் பாதிக்கப் பட்டனர். பின்னர் அன்ஹுய் (Anhui) மாநிலத்தில் 23 பேர் பாதிக்கப் பட்டனர்.

Haemaphysalis longicornis எனும் உண்ணி கடிப்பதன் மூலம் அந்த வைரஸ் பரவுகிறது. மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு இந்த வைரஸ் பரவலாம். அதை நிராகரிக்க முடியாது. சீனாவின் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர்.

இந்த SFTS வைரஸ்கள் மனிதர்களைப் பாதிப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே மனிதர்களைப் பாதித்து உள்ளது.

முதன்முதலில் சீனாவில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வைரஸ் அடையாளம் காணப் பட்டது.

2009-ஆம் ஆண்டில் சீனாவின் ஹூபே (Hubei); ஹெனான் (Henan) மாநிலங்களின் கிராமப் புறங்களில் காணப் பட்டது.

SFTS என்றால் திரோம்போ சைட்டோ பீனியா வைரஸ் காய்ச்சல் அறிகுறி. இந்த வைரஸ் புன்யா வைரஸ் (Bunyavirus) குடும்பத்தைச் சேர்ந்தது. கடுமையான காய்ச்சலை உண்டாக்கும்.

இந்த நோய் தொற்றியவர்களில் 30 விழுக்காட்டினர் இறக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் இப்போது அந்த அளவு சற்று குறைவு. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. 15 விழுக்காட்டு அளவில் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த நோய்க்கு உலகச் சுகாதார நிறுவனம் முக்கியத்துவம் வழங்கி உள்ளது. பத்து மோசமான தொற்று நோய்களில் இதுவும் ஒன்றாகும்.

(SFTS has been listed among the top 10 priority diseases blue print by the World Health Organisation)

குறிப்பாக விவசாயிகள், வேட்டைக்காரர்கள் மற்றும் செல்லப்பிராணி உரிமையாளர்கள் இந்த நோயால் பாதிக்கப் படுகின்றனர். ஏன் என்றால் வழக்கமாக அந்த வைரஸ்களைக் கொண்டு செல்லக் கூடிய விலங்குகளுடன் தொடர்பு கொள்கிறார்கள்.

பெரும்பாலும் ஆடு, கால்நடை, மான், செம்மறியாடு போன்ற விலங்குகளிடம் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது என்று அறிவியலாளர்கள் கண்டு அறிந்துள்ளனர்.

வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், விலங்குகள் பொதுவாக எந்த அறிகுறிகளையும் காண்பிப்பது இல்லை. பாதிப்பு மனிதர்களுக்குத் தான்.

அனாவசியமாகப் பீதி அடைய வேண்டாம். நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் செல்லப் பிராணிகளிடம் அதிகமாக நெருங்கிப் பழகுவதைத் தவிர்ப்பது நலம் பயக்கும்.

ஏன் என்றால் இப்போது மனிதர்களைப் பாதிக்கும் நோய்களும்; தொற்றுகளும் விலங்குகளிடம் இருந்தே வருகின்றன. சுகாதார விதிமுறைகளைக் கடைபிடிப்போம். சுத்தமாக இருப்போம். உடல்நலத்தைப் பேணுவோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.08.2020

சான்றுகள்:

1. https://indianexpress.com/article/explained/tick-borne-virus-spreading-in-china-6543182/

2. https://en.wikipedia.org/wiki/Tick-borne_disease

3. https://www.cdc.gov/ticks/diseases/index.html



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக