24 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள் வந்தேறிகளா?

தமிழ் மலர் - 24.09.2020

ஏதோ ஒரு காலம். ஏதோ ஒரு காரணம். எங்கோ ஓர் இடம். அங்கே ஓர் இனத்தவர் குடியேறுகிறார்கள். குடியேறிய இடத்தில் தங்களைத் தக்கவாறு நிலைப் படுத்திக் கொள்கிறார்கள். பின்னர் அதே இடத்தில் மற்ற மற்றக் குழுவினர்களும் வந்து குடியேறுகிறார்கள்.

அவர்களைப் பார்த்து ஏற்கனவே வந்தவர்கள் சிலேடையாகப் பரிகசிப்பது; சில்மிசமாய் ஏளனம் செய்வது. அதற்குப் பெயர் என்ன தெரியுங்களா. எகதாளச் செருக்கு. இது ஓர் உலகளவிய கருத்து உடன்பாடு. எந்த ஓர் இனத்தையும் எந்த ஒரு நாட்டு மக்களையும் குறிப்பிட்டுச் சொல்வதாக அமையாது.

(Melvin Ember, Carol R. Ember and Ian Skoggard, (2004). Encyclopedia of Diasporas: Immigrant and Refugee Cultures Around the World. Volume I: Overviews and Topics; Volume II: Diaspora Communities.)

இதில் முதலில் வந்த வந்தேறி; லேட்டாய் வந்த வந்தேறி என்பது எல்லாம் கிடையாது, வந்தேறி என்றால் எல்லாரும் வந்தேறிகள் தான். என்ன. முதலில் வந்த வந்தேறிக்கு நினைப்பு கொஞ்சம் அதிகமாய் இருக்கும். அவ்வளவுதான்.

கொஞ்ச காலம் முன்னாடி வந்த வந்தேறிகளுக்கும்; கொஞ்ச காலம் பின்னாடி வந்த வந்தேறிகளுக்கும்; பெரிய வித்தியாசம் எதுவும் இல்லீங்க. இரண்டுமே வந்தேறிகள் சபையில் பங்காளிகள் தான். இரண்டுமே வந்தேறி குட்டையில் ஊறிய சின்ன பெரிய வந்தேறி மட்டைகள் தான்.

ஆக ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். தங்களின் சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்த அனைத்து மக்களுமே வந்தேறிகள் தான். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அப்படி வந்தவர்கள் மீன்பிடி படகுகளில் வந்து இருக்கலாம். கட்டுமரங்களில் வந்து இருக்கலாம். இடுப்பில் கோவணம் கட்டி வாழ்ந்து இருக்கலாம்.

வந்த இடத்தில் மரவெள்ளிக் கிழங்குகளைச் சுட்டுச் சாப்பிட்டு இருக்கலாம். ஆற்றில் கிடைத்த மீன்களைப் பொசுக்கிச் சாப்பிட்டு இருக்கலாம். மரத்துப் பட்டைகளைச் சட்டைகளாகத் தைத்து இடுப்பில் கட்டி இருக்கலாம். அது இயற்கை. இந்த மாதிரி கதைகள் வரலாற்றில் நிறையவே இருக்கின்றன.  யாரையும் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

இப்படி ஏலேலே ஐலசா பாடி வந்தவர்கள் அடுத்து வந்து குடியேறியவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொன்னால்; அப்படிச் சொல்பவர்களை எதில் கொண்டு போய் சேர்ப்பதாம்.

அவர்கள் என்ன மண்ணைப் பிளந்து கொண்டு வந்தார்களா. அல்லது ஆகாசத்தில் இருந்து அல்லாக்காய்க் குதித்து வந்தார்களா. இல்லையே. அப்புறம் எப்படி மற்றவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்லலாம். சரி.

மலேசியத் தமிழர்களின் மூதாதையர் வந்தேறிகளா? தியாகிகளா? அல்லது கூலிக்கு மாரடித்தவர்களா? அண்மைய காலங்களில் சமூக ஊடகங்களில் பரவலாகி வரும் ஒரு கேள்வி.

இப்போதைய மலேசியத் தமிழர்களின் மூதாதையர் தியாகிகள் என்பதை ஒரு தரப்பினர் ஆதரிக்கிறார்கள். மறு தரப்பினர் மறுக்கிறார்கள். தியாகிகள் என்று சொல்பவர்கள் சிலரின் கருத்துகள் ரொம்பவுமே அழுத்தமானவை. உணர்வுகளைக் கொப்பளிக்க வைக்கும் பதிவுகள்.

ஆனாலும் மலேசியத் தமிழர்களின் மூதாதையர் தியாகிகள் அல்ல. அவர்கள் கூலிக்கு மாரடித்தவர்கள் என்று சொல்பவர்கள் என்ன மாதிரியான காரணங்களைச் சொல்கிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.

மலேசியத் தமிழர்களின் மூதாதையர் கூலி வேலை செய்வதற்காக மலாயாவுக்கு அழைத்து வரப் பட்டவர்கள். செய்த வேலைக்கு கூலி வாங்கினார்கள். வாங்கிய கூலிக்கு வஞ்சகம் இல்லாமல் வேலை பார்த்தார்கள். ஆகவே செய்த வேலைக்கு கூலி வாங்கியவர்களைத் தியாகிகள் என்று எப்படிச் சொல்ல முடியும் என்று வாதிடுகிறார்கள்.

மலேசியத் தமிழர்களின் மூதாதையர் வந்தார்கள்; வாழ்ந்தார்கள்; வீழ்ந்தார்கள். அப்படி இருக்கும் போது அவர்களை எப்படி தியாகிகள் என்று சொல்ல முடியும் என்று திருப்பிக் கேட்கிறார்கள்.

காட்டை வெட்டினோம்; ரோட்டைப் போட்டோம்; கம்பிச் சடக்கு போட்டோம்; கித்தா மரம் நட்டோம் என்று இன்னும் எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறோம். எத்தனை தடவை தான் அதையே திரும்பத் திரும்ப பாராயணம் பாடிக் கொண்டு இருக்கப் போகிறோம்.

அமெரிக்கா நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டின் காலனி நாடாக இருந்தது. இப்போது பாருங்கள். அமெரிக்கா ஒரு மாபெரும் வல்லரசு. ஒரு காலத்தில் அமெரிக்காவை ஆட்சி செய்த இங்கிலாந்து நாடு இப்போது வாய்பொத்தி அடங்கிப் போய்க் கிடக்கிறது.

உலகப் போலீஸ்காரர் என்று பேர் எடுத்தாலும்; பதினாறு பட்டி கட்டப் பஞ்சாயத்து செய்து உலக நாடுகளையே கட்டிப் போட்டு வைத்து இருக்கிறார்கள்.

மலேசியத் தமிழர்கள் கூலிக்கு மாரடித்தவர்களா? யார் சொன்னது. எந்த விளக்கெண்ணெய் சொன்னது. என்னிடம் வரச் சொல்லுங்கள். நன்றாகக் கேள்வி கேட்டு அனுப்புகிறேன் என்று ஆத்திரம் ஆவியாகி கண்களில் அனல் பறக்க கொப்பளிக்கிறார் ஓர் அன்பர். சோறு போட்ட கைக்கு சூடு போடுகிறவர்கள் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள கொஞ்சமும் லாயக்கு இல்லாதவர்கள் என்று குமுறுகிறார்.

மலேசியத் தமிழர்கள் ஆயிரம் ஆயிரம் வேதனைச் சோதனைகளைக் கடந்து வந்தவர்கள். மலாயாத் தோட்டத் தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது. எப்படி மறக்க முடியும். எப்படிங்க மறைக்க முடியும்.

மலாயா தமிழர்கள் இந்த மண்ணில் எத்தனையோ நூறாண்டுகளுக்கு முன்னரே கால் பதித்து விட்டார்கள். இது ஒரு வரலாற்று உண்மை. அது மட்டும் அல்ல. உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத உண்மையுங்கூட.

மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய நிலைமை. என்ன தான் வரலாற்றுப் படிவங்களைச் சிதைத்துப் போட்டாலும்; மறைத்துப் போட்டாலும்; மலாயாத் தமிழர்களின் வரலாற்று உண்மைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். என்றைக்கும் அவை வரலாறு பேசும் வாய்மையான உண்மைகள்.

வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் பக்குவம் வேண்டும். வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் நல்ல எண்ணமும் வேண்டும். வரலாற்றை முறையாகப் படிக்காமல் அறியாமையில் சொல்வது மிகவும் தப்பு.

கடந்த 200 - 250 ஆண்டு காலமாக இந்த நாட்டிற்காக உழைத்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்களைத் வந்தேறிகள் என்று சொல்வது ரொம்பவும் தப்பு. கூலிக்கு மாரடித்தார்கள் என்று சொல்வது பெரிய தப்பு. அவர்கள் வந்தேறிகள் அல்ல.

விதை சத்தம் இல்லாமல் முளைக்கிறது... மரம் சத்தத்தோடு முறிகிறது... அவ்வளவு தான்.

இந்த நாட்டில் தமிழ்ர் இனம் சில நூற்றாண்டுகளுக்கும் மேலாக சத்தம் இல்லாத விதைகளாய்த் தான் இருந்தார்கள். ஆனால் இப்போது ஏற்பட்டு உள்ள அரசியல் குளறுபடிகளைச் சலவை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கோரிக்கைகளாக முன் வைக்கிறார்கள். அதில் என்ன தப்பு. இடையில் புகுந்து மலேசியத் தமிழர்கள் கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள்; வந்தேறிகள் என்கிற ஜிங்கு ஜிக்கான் எகதாளங்கள் தேவையே இல்லை.

முன்னுக்கு பின் முரணான சுய விளக்கம் ஒரு தெளிவு இல்லாத சிந்தனையைக் குறிக்கும். இந்த நாட்டுத் தமிழர்கள் அவர்கள் செய்த வேலைக்கு மட்டும் கூலி பெற்று விட்டார்கள் என்று சொல்வது தப்பு. அவர்களை வந்தேறிகள் என்று முத்திரை குத்தினால் அது தப்பிலும் பெரிய தப்பு.

ஒருவர் ஆன்மீகவாதியாக இருக்கலாம். நாத்திகராக இருக்கலாம். பிரச்சினை இல்லை. ஆனால் இந்த நாட்டில் தமிழர்கள் பட்ட அவலங்களின் மேல் அக்கறைக் காட்டாமல் இருப்பது பெரிய ஓர் அலட்சியம் ஆகும்.

காலை எட்டு மணிக்கு வேலைக்குப் போய் மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புவர்களுக்கு வேண்டும் என்றால் மலேசியத் தமிழர்கள் கூலிக்கு மாரடித்தவர்கள் எனும் கூற்று பொருந்தி வரும்.

ஆனால் தமிழ் நாட்டில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்களைக் கொத்தடிமைகளாகக் கொடுமைப் படுத்தினார்கள். அதிகாலை தொடங்கிச் சூரியன் மறையும் வரை துன்புறுத்தி வேலை வாங்கினார்கள்.  20, 30 காசு சம்பளத்திற்காக நாள் முழுதும் சிறைப் பட்டு சிதைக்கப் பட்டார்கள். அது தியாகம் இல்லையா? இவர்களையா வந்தேறிகள் என்று சொல்வது.

எத்தனை இன்னல் வந்தாலும் பொறுமையோடும் சகிப்புத் தன்னையோடும் நாளும் செத்து செத்து வாழ்ந்தார்களே அது தியாகம் இல்லையா? இவர்களையா வந்தேறிகள் என்று சொல்வது.

முதலில் அவர்களது அயராத உழைப்புக்கு தருந்த ஊதியம் கொடுக்கப் பட்டதா? அதற்கு எவராலும் பதில் சொல்ல முடியுமா? இன்று இந்த நாட்டில் மலிந்து கிடக்கும் மற்ற நாட்டுக்காரர்களுக்கு யாருங்க காரணம்.

திறமை இல்லா விட்டாலும் பெரிய சம்பளம் வேண்டும். உடல் உழைப்பு வேலைகள் வேண்டாம் என்கிற பிடிவாதம் இங்கே பலருக்கும் உண்டு. தகுந்த வேலை கிடைக்கும் வரை வேறு வேலைகளில் நாட்டம் இல்லாமல் போவது இப்போதைக்குப் பல பட்டதாரிகளின் நடப்பு விவகாரம். அது போன்ற காரணங்களைக் கூறி விரல் நீட்டலாம்.

ஆக உடலை வருத்தி உழைக்காமல்; சொகுசாய் வாழ்பவர்களைத் தியாகிகளாய் கருதும் காலத்தில் தான்; நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அன்று மலாயாவாக இருந்த நாட்டை மலேசியாவாக மாற்றி அமைக்க அரும்பாடு பட்டவர்கள் மலேசியத் தமிழர்கள்.

தனக்காக யோசிக்கத் தெரியாமல் நாட்டுக்காக நிறையவே ஆசா பாசங்களை இழந்த தமிழர்களைத் தியாகிகள் என்று சொல்வதில் என்ன தவறு? வந்தேறிகள் என்று அழைப்பது தான் தப்பு. படிப்பது இராமாயணம்... இடிப்பது பெருமாள் கோயிலாக இருக்கக் கூடாது.

ஆக சில காலக் கட்டங்களில் சில அறைகுறை கூஜா தூக்கிகளும் வருவார்கள். போவார்கள். அவர்களின் சுய லாபத்திற்காக எதையாவது உளறி விட்டுச் செல்வார்கள். இவர்களுக்கு ஜால்ரா போடுவதற்காகவே சில வெங்காயச் சட்ணிகளும் இருக்கவே செய்வார்கள்.

மலேசியத் தமிழர்கள் நேற்று முந்தா நாள் மலாயாவுக்கு வந்த விருந்தாளிகள் அல்ல. அவர்கள் உண்மையிலேயே தியாகிகள். கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள் அல்ல.

அவர்கள் உழைச்சுப் போட்டுப் போன சுகத்தில் தான் இப்போது நாம் சொகுசாய்க் கால் மேல் கால் போட்டு சீரியல் பார்க்கிறோம். சொகுசாய்ச் சவடால் பேசிக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் இல்லை என்றால் நீங்களும் இல்லை. நானும் இல்லை. இதை மறக்க வேண்டாமே.

மலேசியத் தமிழர்கள் இந்த மலையகத்தைத் தங்கள் உழைப்பால் உயர்த்தி உலகமே உற்றுப் பார்க்கும் அளவுக்கு கெளரவப் படுத்தி இருக்கிறார்கள். மலையூர் மண்ணில் மண்ணாய்க் கலந்து; கித்தா மரங்களோடு கித்தா மரங்களாய்க் கலந்து, தகரக் கொட்டாய்களில் கரைந்து போன மலேசியத் தமிழர்களை நினைத்துப் பார்ப்போம். காலா காலத்திற்கும் நன்றி சொல்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.09.2020



1 கருத்து: