26 செப்டம்பர் 2020

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் தன்மானம்

தமிழ் மலர் - 23.09.2020

தமிழ்ப் பள்ளிகளை இழுத்து மூடுங்கள். தமிழ்ப் பள்ளிகளை ஒழித்துக் கட்டுங்கள்; தமிழ்ப் பள்ளிகளை அழித்துப் போடுங்கள்; தமிழ்ப் பள்ளிகளை நிறுத்தி விடுங்கள். என்னங்க இது. பசார் மாலாமில் பக்குதே சூப் விற்கிற மாதிரி மாதிரி கூவிக் கூவி வியாபாரம் செய்கிறார்கள். இந்த மாதிரியான கூக்குரல்களைக் கேட்டுக் கேட்டு நமக்கும் புளித்துப் போய் விட்டது.

அந்தக் காலத்துக் கித்தா தோட்டங்களில் ‘புலி வருது புலி வருது’ என்று சொல்லிப் பயமுறுத்துவார்கள். இராத்திரி நேரத்தில் வீட்டுக்கு வெளியே போனால் காத்துக் கருப்பு சேட்டைகள் தொல்லைகள் இருக்கும். போகக் கூடாது என்று பயமுறுத்துவார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அந்தப் புலிக் கதை புளித்துப் போகும். அப்புறம் ’பேய் வருது பேய் வருது’ என்று பயமுறுத்துவார்கள். அதுவும் புளித்துப் போகும்.

அது அப்போதைய பெரிசுகளின் எச்சரிக்கை மணி. ஆனாலும் அதே மாதிரி இப்போது மலேசியத் தமிழர்களுக்கும் ஓர் எச்சரிக்கை மணி வந்து போகிறது.   

புலி வருகிறதோ இல்லை பேய் வருகிறதோ அது முக்கியம் இல்லை. ஏமாந்து விடக் கூடாது. அதுதான் முக்கியம். சொல்ல முடியாது. ஒரு நாளைக்கு நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து புலி வந்தாலும் வரலாம். ஆக அந்தப் புலி வருவதற்கு முன்னால் நாமும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புலி வந்த பிறகு கத்தி கப்படாவைத் தேடுவதில் அர்த்தம் இல்லை. புரியும் என்று நினைக்கிறேன்.

மழை விட்டாலும் தூவானம் விடாது என்பார்கள். மலேசிய அரசியலில் தூவானம் விட்டாலும் தீவானம் விடாது போலும். ஆச்சு பூச்சு என்றால் அத்தைக்கு மீசை வைத்து சித்தப்பாவாக மாற்றி விடுவது வழக்கமாகி வருகிறது. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில் மனுசனைக் கடிப்பதும் பழக்கமாகி வருகிறது. இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. காலம் காலமாகக் கடந்து வரும் காம்போதி ராகத்தின் இனவாதக் கச்சேரிகள்.

’பல்வேறு இனங்களைச் சேர்ந்த இளம் குழந்தைகளிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்க தொடக்கப் பள்ளி முறையைச் செயல்படுத்த வேண்டும்’ என்று பெர்லிஸ் மாநிலத்தின் முப்தி மொஹட் அஸ்ரி ஜைனுல் ஆபிடின் (Mohd Asri Zainul Abidin) சொல்லி இருக்கிறார்.

இதற்கு முன்னர் பெர்சத்து இளைஞர் பிரிவு தலைவர் வான் அமாட் பைஸால் மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகள் படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இது ஒன்றும் பெரிய பரபரப்பு செய்தி அல்ல. இருந்தாலும் கரும் புகைச்சலை ஏற்படுத்திவிட்ட காட்டுச் செய்தி.

முன்னாள் துணைக் கல்வியமைச்சர் தியோ நீ சிங் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த இன்னாள் ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா சாதிக், தாய்மொழிப் பள்ளிகளின் கல்வி முறையை அரசாங்கம் மாற்றாது. தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து நிலைத்து இருக்கும் என்றார்.

இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் கொசுக்கடி மாதிரி வான் அமாட் பைஸால் அவர்களின் அறிவிப்பு வருகிறது. யார் இந்த வான் அமாட் பைஸால் (Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal)?

இவர் 2018 முதல் 2020 வரை முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சையட் சாதிக்கிற்கு (Syed Saddiq) சிறப்பு அதிகாரியாக இருந்தவர். 2020 மார்ச் 10-ஆம் தேதி, பிரதமர் முஹைதீன் யாசினின் புதிய அமைச்சரவையின் கீழ் இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சராக நியமிக்கப் பட்டார். அதே தினத்தில் செனட்டராகவும் நியமிக்கப் பட்டார்.

வான் அமாட் பைஸால் பதவிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. மலேசிய அரசியல் ஜாம்பவான்கள் மத்தியில் புதிதாய்த் தோன்றிய சின்ன ஒரு மின்மினிப் பூச்சி. பெரிதாகச் சொல்ல வேறு எதுவும் இல்லை.

நாட்டில் விசுவாசமான மாணவர்களை உருவாக்குவதில் இருந்து தாய்மொழிப் பள்ளிகள் தவறிவிட்டன; படிப்படியாக மூட வேண்டும் என்று அவர் சொல்லி இருப்பது தான் பெரிய ஒரு  புகைச்சலைக் கிளப்பி உள்ளது.

அரசியல் லாபத்திற்காக உளறிக் கொட்டி இருக்கலாம். சொல்ல முடியாது. ஆக தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் என்று சொன்னவர்களில் இவர் முதல் ஆள் அல்ல. அதே சமயத்தில் இவர் நிச்சயமாக்க கடைசி ஆளாகவும் இருக்க மாட்டார். இன்னும் வருவார்கள். கூத்துக் கும்மாளங்கள் தொடரும். நம்புங்கள்.

எப்போது எல்லாம் தேர்தல் காய்ச்சல் வாசல் கதவைத் தட்டுகிகிறதோ, அப்போது எல்லாம் தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் எனும் வாசகத்தை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்வது வழக்கமாகி விட்டது.

அந்த வழக்கம் தாய்மொழிப் பள்ளிகள் வாங்கி வந்த வரமா; இல்லை எழுதிச் சென்ற விதியின் சாசனமா தெரியவில்லை. ஒரு வழி பண்ணாமல் விட மாட்டார்கள் போல தெரிகிறது.

சென்ற 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இதே போல ஒரு சர்ச்சை. தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுவது அரசியல் அமைப்புப்படி சரியா என்று கேள்வி எழுப்புவதற்கு அனுமதி கேட்டு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மனுவை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கல்வி தொடர்பான சட்டத்தை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்கிறது என்று மலாயா தலைமை நீதிபதி தீர்ப்பு அளித்து இருந்தார். உடனே பூமிபுத்ரா பெர்காசா மலேசியா கட்சியின் அப்போதைய தலைவர்களில் ஒருவர்; இப்ராகிம் அலி ஓர் அறிக்கை வெளியிட்டார்.

தாய்மொழிப் பள்ளிகள் இருக்கத் தான் வேண்டுமா? நீதிமன்றங்கள் முடிவு செய்ய வேண்டும் என்கிற அறிக்கை. மலேசிய ஒற்றுமைக்குத் தடையாக உள்ள தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பான சர்ச்சைக்கு நீதிமன்றங்கள் தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன் என்கிறார்.

மேலும் இப்ராகிம் அலி சொன்னார். தாமொழிப் பள்ளிகள் தொடர்ந்து இருப்பது; அவற்றில் தாய்மொழிகள் பயிற்று மொழிகளாக இருப்பது; தேசிய நலனுக்கு ஏற்றது அல்ல. அவை எல்லா இனங்களையும் சேர்ந்த பிள்ளைகள் ஒன்று படுவதற்குத் தடங்கலாக உள்ளன என்றும் கூறி இருந்தார்.

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை; அந்தத் தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை; அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அது அவரின் கருத்து.

இவ்வளவு நாளும் இந்த நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் நல்லபடியாகத் தானே போய்க் கொண்டு இருந்தன. ஏன் திடீரென்று இந்த மாதிரி எதிர்மறையான கேள்விகளைக் கேட்கிறார்கள்.

தாய்மொழிப் பள்ளிகளால் நாட்டின் ஒற்றுமையில் பிளவு ஏற்பட்டு உள்ளது. அதனால் கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்ட வேண்டும் எனும் ஆலோசனைகள் தேவை தானா?

’மலேசிய இன்று’ ஊடகத்தில் அன்பர் இராகவன் கருப்பையா ஒரு கருத்து சொல்லி இருந்தார். பதிவு செய்கிறேன்.

’மற்ற இனத்தவரின் மொழிகளைச் சீண்டினால் தான் ஆதரவாளர்கள் தங்களைத் தலை மீது வைத்துத் துதி பாடுவார்கள் என்ற கீழ்த் தரமான எண்ணத்தில் அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் போலும்.’

’தமிழ், சீனப் பள்ளிகளுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என அறிக்கை விடுவது தங்களுடைய அரசியல் வளர்ச்சிக்கு உரமாக அமையும் என்று எண்ணி பிற இனத்தவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் உளறும் இத்தகைய சாக்கடை ஜந்துகளுக்கு நாம் பாடம் புகட்டத் தான் வேண்டும்’. அன்பர் இராகவன் கருப்பையா அவர்களின் உள்ளக் குமுறல்கள்.

இந்தத் தாய்மொழிப் பள்ளிகள் பிரச்சினை இன்று நேற்று தொடங்கிய பிரச்சினை இல்லை. நீண்ட காலமாகவே தொடர்கின்றது. அண்மைய காலங்களில் போர்னியோ காட்டுத் தீ போல அடிக்கடி கொளுந்து விட்டும் எரிகின்றது. அதுவும் தேர்தல் நேரம் வந்து விட்டால் சும்மா சொல்லக் கூடாது. அமேசான் காட்டுத் தீ பிச்சை எடுக்க வேண்டும். சூடம் சாம்பிராணி தேவை இல்லை. நல்லவே பற்ற வைத்து விடுகிறார்கள்.

யாராவது பின்னால் இருந்து கொண்டு, சாவி கொடுக்கலாம். சொல்ல முடியாது. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

1971-ஆம் ஆண்டு. 49 ஆண்டுகளுக்கு முன்பே இதே மாதிரி ஒரு பெரிய சர்ச்சை. சீனத் தமிழ்ப் பள்ளிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று உத்துசான் மலேசியா மலாய் நாளிதழின் ஆசிரியர் மெலான் அப்துல்லா சொன்னார். அவர் மீது வழக்கு தொடரப் பட்டது. குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது. அபராதமும் விதிக்கப் பட்டது. இது சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது.

(Melan bin Abdullah & Anor v. P.P. [1971] 2 MLJ 280)

பின்னர் மற்றும் ஒரு பிரச்சினை. 1978 அக்டோபர் 11-ஆம் தேதி. மார்க் கோடிங் (Mark Koding) என்கிற சபா நாடாளுமன்ற உறுப்பினர். தமிழ் சீனத் தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் என்று சொன்னார். அப்போது உசேன் ஓன் பிரதமராக இருந்தார்.

நாடாளுமன்றத்தில் பேசும் போது அதன் உறுப்பினர்களுக்குச் சட்ட விலக்களிப்பு (immunity) இருக்கும். இருந்தும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு அவர் இழுக்கப் பட்டார்.

(Public Prosecutor v Mark Koding ([1983] 1 MLJ 111)); (s 4(1)(b) of the Sedition Act 1948 (Revised 1969); (Section 3(1)(f) in the Sedition Act 1948);

மேலே சொன்ன அந்தச் சட்டத்தின் கீழ் குற்றப் பதிவு. 1982-இல் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது. பின்னர் ஈராண்டு நன்னடத்தை ஜாமீன். தற்காலிக விடுதலை. சரி.

அண்மைய காலங்களில் அதிகமான புகைச்சல். ஓர் எடுத்துக்காட்டு. 2019 ஜுன் 22-ஆம் தேதி குவாந்தான் இந்திரா மக்கோத்தா அரங்கத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 65-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம். பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவர். சலாமியா மாட் நூர் (Ustazah Salamiah Mohd Nor).

அதில் அவர் சொன்னது: நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை. அந்தப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை. அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்குப் பதிலாக அரபு மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று பேசி இருக்கிறார். இந்த மாதிரி அடிக்கடி டிங்கி காய்ச்சலின் பிசுபிசுப்புகள் வரவே செய்கின்றன.

ஒரு முக்கியமான விசயம். இந்த நாட்டில் வாழும் தமிழர்களே தமிழ்ப் பள்ளிகள் வேண்டாம் என்று சொன்னாலும் அது நடக்காத காரியம். முடியும் ஆனால் முடியாது. நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வர வேண்டும். சட்டமாக்க வேண்டும். அந்தச் சட்டத்தை மேலவை ஏற்க வேண்டும். இன்னும் பெரிய பெரிய வேலைகள் எல்லாம் இருக்கின்றன.

தாய்மொழிப் பள்ளிகளை அகற்றுவது என்பது எல்லாம் அப்படி ஒன்றும் அல்வா பால்கோவா கிண்டும் சமாசாரம் அல்ல. சட்டம், சடங்கு, சம்பிரதாயம், சனாதனம், சான்று என்று எவ்வளவோ இருக்கின்றன.

பொதுவாகவே ஒன்று சொல்லலாம். மலேசிய அரசியல் கட்சிகளின் சிந்தனையில் இனம்; மதம் போன்ற வாதங்கள் ஆதிக்கம் செலுத்தும் வரையில், தாய்மொழிப் பள்ளிகள் சொக்கட்டான் காய்களாகவே குறி வைக்கப்படும்.

தாய்மொழிப் பள்ளிகளின் நிலைப்பாட்டில் கேள்வி எழுப்புவது தேசத் துரோகமான செயல்பாடு. அரசியலமைப்பிற்கு விரோதமான செயல்பாடு. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அரசியல் ஜிங்கு ஜிக்கான்கள் விசயத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ஒன் மில்லியன் டாலர் கேள்வி.

மலேசியாவின் சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே தமிழ்மொழிப் பள்ளிகள் இந்த நாட்டின் நீரோட்டத்தில் நிலைத்து தடம் பதித்து விட்டன. இன்று வரை நல்லபடியாகத்தான் போய்க் கொண்டு இருக்கின்றன. அரசாங்கம் கொடுத்ததில் பாதி; அரசியல்வாதிகள் சிலரின் பாக்கெட்டுக்குள் போனது மீதி; இதில் கிடைத்ததைக் கொண்டு தமிழ்மொழிப் பள்ளிகள் போராடிக் கொண்டு தான் இருந்தன. இருந்தும் வருகின்றன.

அரசியல் பந்தயத்தில் ஒரு சில அரசியல்வாதிகள், சாம்பியன்களாகத் திகழ ஆசைப் படலாம். தவறு இல்லை. ஆனால் நிதர்சனமான உண்மைகளைத் தவறாக மட்டும் எடைபோட்டு விடக்கூடாது. தாய்மொழிப் பள்ளிகளை அழிப்பதன் மூலம் தேசிய ஒற்றுமையின் உச்சத்தை அடைந்துவிட முடியும் என்று தவறாகப் புரிந்து கொள்ளவும் கூடாது என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி சாடி இருக்கிறார்.

மலேசியர்கள் இடையே ஒற்றுமை இல்லாமையை ஏற்படுத்துவது தாய்மொழிப் பள்ளிகள் அல்ல. மக்கள் பணத்தில் பில்லியன் கணக்கில் சுருட்டிக் கொண்டு ஏப்பம் விடும் அரசியல்வாதிகள் தான் காரணம். இனவாதத்தையும் மதவாதத்தையும் இடுப்பில் செருகிக் கொண்டு அலையும் இளம் அரசியல்வாதிகள் தான் காரணம்.

இந்த நாட்டில் ஒற்றுமை நிலைத்தன்மை நசிந்து வருகிறது என்றால் அதற்கு தாய்மொழிப் பள்ளிகள் காரணம் அல்ல. ஆகவே தாய்மொழிப் பள்ளிகள் மீது பழி சுமத்துவது கண்டிக்கத் தக்கது. நாட்டில் இன மதச் “சாம்பியன்கள்” என்று சொல்லிக் கொள்பவர்கள் தான் அதற்குக் காரணமாக அமையலாம் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் கூறுகிறார்.

தாய்மொழிப் பள்ளிகளை அகற்றினாலும், தேசிய ஒற்றுமைக்கு வழிவகுக்கும் தேசியவாதம் முழுமையான உருவகம் பெறாது என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் சொல்கிறார்.

மலேசிய அரசியலமைப்பை அனைவரும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் அரசியல் சாணக்கியம் சமரசம் பேசும். குறுகிய எண்ணம் கொண்டவர்கள்; தூர நோக்கு இல்லாதவர்கள்; இவர்களிடம் தேசிய ஒற்றுமை ஞானத்தை எதிர்பார்க்க முடியாது.

தாய்மொழி என்பது மனிதர்களின் பிறப்பு உரிமை. தமிழ்மொழி என்பது தமிழர்களின் தாய் உரிமை. மலேசியத் தமிழர்களுக்கு அதுவே சிறப்பு உரிமை.


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.09.2020

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக