18 அக்டோபர் 2020

தெலுக்கான்சன் பாகன் டத்தோ தோட்டம் - 1844

தமிழ் மலர் - 18.10.2020

மலாயா வரலாற்றில் தெலுக்கான்சன் பாகன் டத்தோ தோட்டம் தனித்துவம் வாய்ந்த தலைவாசல். மண்வாசனையில் மணித்துவம் பாய்ந்த மலைவாசல். கண்களைப் பனிக்கச் செய்யும் கலைவாசல். 176 ஆண்டுகளுக்கு முன்னால் அதுவே தமிழர்களின் விதிவாசல்.

மலாயா வரலாற்றில் பாகன் டத்தோ தோட்டம் மிகப் பழமையான தோட்டங்களில் முன்னோடித் தோட்டம். 1840-ஆம் ஆண்டுகளில், பேராக் மாநிலத்தின் முதல் குடியேற்றம் எனும் காலச் சுவட்டையும் பதிக்கின்றது.

இங்கே இருந்து தான் தெலுக்கான்சன் ஆந்திர வம்சாவளியினரின் வரலாறும் தொடங்குகிறது. இந்தத் தோட்டம் உருவாகி 176 ஆண்டுகள் ஆகின்றன.

176 ஆண்டுகள் என்பது சாதாரண விசயம் அல்ல. ஒரு நீண்ட காலப் பயணம். நான்கு அல்லது ஐந்து தலைமுறைகளைக் கொண்ட நெடும் தூரப் பயணம். அந்தப் பயணத்தில் கரை காணா அர்ப்பணிப்புகள். திரை இல்லா தியாக உணர்வுகள். விலை பாரா கட்டமைப்புச் சேவைகள். அங்கே நிலை கொள்ளா நினைவுகள்.

தெலுக்கான்சன் பாகன் டத்தோ தோட்டத்தின் முன்னோடிகளுக்கு முதல் வணக்கம். முதல் மரியாதை.

1840-ஆம் ஆண்டுகளில் தெலுக்கான்சன் பகுதியில் நிறைய தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. பெரும்பாலும் தென்னை, கரும்பு, காபி தோட்டங்கள். ரப்பர் தோட்டங்கள் 1900-ஆம் ஆண்டுகளில் தான் தோன்றின.

அந்தக் காலக் கட்டத்தில் பினாங்கில் இருந்து தெலுக்கான்சன் துறைமுகத்திற்குத் தொழிலாளர்கள் பெரி படகுகள் மூலமாகக் கொண்டு வரப் பட்டார்கள். பெரிய கப்பல்கள் அணைய முடியாததால் பெரி படகுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

Malaya Tamil Woman 1910. Kleingrothe, C.J. Leiden University Library.
Institute of Southeast Asian and Caribbean Studies (KITLV - 80012).

ஒரு முக்கியமான விசயம். 1846-ஆம் ஆண்டில் மலாயாவுக்கு 1800 தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களில் தெலுக்கான்சன் பகுதிகளுக்கு 200 தொழிலாளர்கள். பாகன் டத்தோ தோட்டத்திற்கு 80 தொழிலாளர்கள். தவிர அருகாமையில் இருந்த ஜெண்ட்ராட்டா; பெர்னாம்; ஊத்தான் மெலிந்தாங்; ருங்குப்; சங்காட் ஜோங் போன்ற இடங்களுக்கும் தொழிலாளர்கள் கொண்டு செல்லப் பட்டனர்.

1840-ஆம் ஆண்டுகளில் லைபீரியா காபி மலாயாவில் பயிர் செய்யப்பட்டு நல்ல விளைச்சலைக் கொடுத்தது. மலாயாவில் முதன்முதலில் லைபீரியா காபி தான் பயிர் செய்யப்பட்டது. அந்த வகையில் லைபீரியா காபிக்கு தெலுகான்சன் முன்னோடியாக விளங்கியது.

ARNOLD WRIGHT, London, 1908. Twentieth Century Impressions of British Malaya - Its History, People, Commerce, Industries, and Resources. Cornell University Library.  BAGAN DATO MALAYA: Page: 373.


அதே பாவனையில் காபி, கரும்பு ரப்பர் தோட்டங்களில் பாகன் டத்தோ தோட்டம் முன்னிலை வகித்தது. முதன்முதலில் அங்கே  எலுமிச்சைப் புல் (lemon-grass) பயிர் செய்யப்பட்டது. பின்னர் காபி பயிர் செய்யப்பட்டது. அதன் பின்னர் கரும்பு; அதற்கும் பின்னர்தான் ரப்பர்.

1840-ஆம் ஆண்டுகளில் ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பாகன் டத்தோ தோட்டத்திற்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு குடியேற்றம் நடந்து உள்ளது.

ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான காபி, தென்னைத் தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை. அதை நிவர்த்தி செய்ய ஆந்திராவில் இருந்து தமிழர்களும் ஆந்திரர்களும் கொண்டு வரப் பட்டார்கள். அவர்களில் ஆந்திர வம்சாவளியினரே அதிகம். எப்படியும் 1000 பேருக்கு மேல் இருப்பார்கள். வருடத்தைக் கவனியுங்கள். 1840-ஆம் ஆண்டுகள். அடுத்து ஒரு துயர நிகழ்ச்சி.

1900-ஆம் ஆண்டுகளில் ஆந்திரா, விசாகப்பட்டினம் மாவட்டத்தில் வறுமை. அங்கே அடிக்கடி வெள்ளம். பயிர்கள் பேரழிவு. வருமானம் குறைவு. ஏராளமான மக்களுக்கு வேலை இல்லை. மக்களுக்கு அதிகமான பாதிப்பு. இதனால் மலாயாவுக்கு இடம்பெயர்வுகள்.

இந்தக் கட்டத்தில் மலாயா தோட்டங்களிலும் தொழிலாளர் பற்றாக்குறை. உள்ளூர் மக்கள் தோட்டங்களில் வேலை செய்ய அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. மரவெள்ளிச் செடிகள் வளர்ப்பது. ஆற்றில் மீன் பிடிப்பது. அவையே அவர்களுக்குப் பிரதானம். அத்துடன் ஆங்கிலேயர்களும் அவர்களை வற்புறுத்தி அழைக்கவில்லை.

1921-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து சுமார் 40,000 ஆந்திரர்கள் மலாயாவுக்கு குடிபெயர்ந்து உள்ளார்கள். புள்ளி விவரங்கள் உள்ளன. கீழ் பேரா; பாகன் டத்தோ; தெலுக் இந்தான்; சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கெடா ஆகிய இடங்களில் அதிகமான குடியேற்றங்கள். சொல்லப் போனால் மேற்கு மலாயா முழுவதும் அந்தக் குடியேற்றம் பரவி நின்றது.

(In 1921, about 40,000 Andhras from India migrated to Malaya. Many settled throughout West Malaya, though the main concentration was in Lower Perak, Bagan Datoh, Teluk Intan areas, Selangor, Negeri Sembilah, and Kedah.)

பாகன் டத்தோ தோட்டம் பேராக் ஆற்றின் கரைப் பகுதியில் அமைந்து இருந்தது. இப்போதும் உள்ளது. ஆனாலும் முன்பு போல அவ்வாவு செழிப்பாக இல்லை. பழசு என்றும் மவுசு என்று சொல்வார்கள். அது போல அந்தக் காலத்தில் பாகன் டத்தோ என்று சொன்னால் மலேசிய மக்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். அந்த அளவிற்குச் செல்வச் செழிப்புடன் கோலோச்சிய தோட்டம்.

சும்மா ஒன்றும் சொல்லவில்லை. உண்மை. பாகன் டத்தோ என்றாலே பலரும் பெருமை படுவார்கள். அந்தப் பகுதியில் இருந்து தான் பல்லாயிரம் பேர் தைப்பிங், பாகன் செராய், பாரிட் புந்தார் பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள்.  200,000 பேர் இருக்கலாம்.

1950-ஆம் ஆண்டுகளில் பாகன் டத்தோ தோட்டச் சுற்று வட்டாரங்களில் மட்டும் 35,000 பேர் வாழ்ந்து இருக்கிறார்கள். ஆந்திர மக்களின் தலைநகரமாக விளங்கி இருக்கிறது. இன்றும் செல்வச் செழிப்பாக இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. இருந்தாலும் அந்தப் பழைய மண்வாசனை ரொம்பவும் அற்றுப் போய் விட்டது.

பாகன் டத்தோ கரும்புக் காடுகளும்; உலு பெர்னாம் கித்தா காடுகளும்; ஜெண்ட்ராட்டா செம்பனைக் காடுகளும் பெரிய பெரிய சாதனைகளைச் செய்து இருக்கின்றன. அங்கே சில நூறு டாக்டர்கள்; சில நூறு வழக்குரைஞர்கள்; சில நூறு சமூகவியலாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். அதையும் தாண்டிய நிலையில் பல நூறு ஆசிரியர்களையும் பாகன் டத்தோ உருவாக்கி உள்ளது. வரலாற்றுக்கு வாய் இருந்தால் வாய் வலிக்காமல் புகழ் பாடிக் கொண்டே இருக்கும்.

1976-ஆம் ஆண்டு கோலாலம்பூர் ஆசிரியர்ப் பயிற்சி கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது தெலுக்கான்சன் தோட்டப் பகுதிகளில் இருந்து நிறைய ஆசிரியர்கள் அங்கு வந்து என்னுடன் பயிற்சி பெற்றார்கள். தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். அவர்களை நினைத்துப் பார்க்கிறேன்.

பாகன் டத்தோ தோட்டம், தெலுக்கான்சன் நகரில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ளது. 1880-ஆம் ஆண்டில் அதன் பரப்பளவு 1,600 ஏக்கர். தென்னை; கரும்பு சாகுபடி. 1900-ஆம் ஆண்டில் அதன் மொத்த பரப்பளவு 4,600 ஏக்கர்.

இந்தத் தோட்டத்தின் உற்பத்தித் திறனுக்காக அப்போதே புகழ் பெற்று விளங்கியது. சும்மா சொல்லக் கூடாது. ஆங்கிலேயர்களின் பதிவேட்டில் பாகன் டத்தோ தோட்டத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த அளவிற்கு மக்கள் உழைத்து ஆங்கிலேயர்களை மினுக்க வைத்து சொக்க வைத்து இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் அந்தத் தோட்டம் அசல் நன்னீர் கிடைக்கும் இடமாகப் புகழ்பெற்று விளங்கியது. அதற்காகாகவே 1910-ஆம் ஆண்டில் 20 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய செயற்கை ஏரியை உருவாக்கி இருக்கிறார்கள். அங்கே இருந்து சுத்தமான நீர் தெலுக்கான்சன் வெள்ளைக்கார்களுக்கு மாட்டு வண்டியில் தோம்பு கட்டி கொண்டு போய் இருக்கிறார்கள்.

தெலுக்கான்சன் சாய்ந்த கோபுரம். தெரியும் தானே. அந்தக் கோபுரம் கட்டப்படும் போது பாகன் டத்தோ ஏரியில் இருந்து தான் நன்னீர் சப்ளை செய்து இருக்கிறார்கள். இது எத்தனைப் பேருக்குத் தெரியும்.

1908-ஆம் ஆண்டில் அந்தத் தோட்டத்தில் 8 கோயில்கள் இருந்தன. 750 தமிழர்கள்; ஆந்திரர்கள் இருந்தார்கள். அவர்களில் 550 ஆண்கள்; 150 பெண்கள்; 50 குழந்தைகள். 150 மலாய்க்காரர்கள்; ஜாவானியர்கள்; 200 சீனர்கள் இருந்தனர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் பிளான்டேஷன் (Straits Plantation Co) நிறுவனத்திற்கு சொந்தமானது.  அதன் முகவர்கள் ஈப்போவைச் சேர்ந்த அய்லெஸ்பரி கார்லண்ட் நிறுவனம் (Agents Aylesbury Garland Co). அப்போது அதன் நிர்வாகி ஜான் குரோ (John Crow).
 
பாகன் டத்தோ தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு, ரப்பர், தேங்காய், நெல், அன்னாசி பயிர் செய்யப்பட்டன. அர்கா கொட்டைகள் பயிராகின. அந்த ஆண்டு காய்கறிகள் பயிர் செய்யப் படுவதற்காக ஏறக்குறைய 300 சீன விவசாயிகள் புக்கிட் மெர்தாஜாம் அல்மா தோட்டத்தில் இருந்து அழைத்து வரப் பட்டார்கள்.

பாகன் டத்தோ தோட்டத்திற்கும் தெலுக்கான்சனுக்கும் இடையில் தினசரி படகுச் சேவைகள் இருந்தன. தென்னை வளர்ச்சிக்கு பாகன் டத்தோ தோட்ட மண் மிகவும் பொருத்தமானதாக இருந்தது. கடல்கரை மணல் மண். அருமையான மண். தென்னை செழிப்பாக வளரும் மண். ஆக சொல்லவா வேண்டும்.

1908-ஆம் ஆண்டில் எடுத்த படங்களைப் பதிவு செய்கிறேன். அதற்கு முந்திய படங்கள் கிடைக்கவில்லை. படங்கள் தெளிவாக இல்லை. இருப்பினும் நமக்குச் சான்றுகள் தேவை. 112 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படங்கள். சரி.

1880-ஆம் ஆண்டுகளில் பினாங்கு மாநிலத்தின் துணை ஆளுநகராக இருந்த மேஜர் ஜெனரல் சர் ஆர்க்கிபால்ட் எட்வர்ட் ஹார்போர்ட் அன்சன் (Major-General Sir Archibald Edward Harbord Anson) என்பவர் இருந்தார். அவர்தான் 1882-ஆம் ஆண்டில் தெலுக் அன்சன் நகரத்திற்கு வடிவமைப்பு செய்து கொடுத்தவர். அவரின் நினைவாக தெலுக் அன்சன் என பெயர் வைக்கப் பட்டது.

1982 ஆம் ஆண்டில் தெலுக் அன்சன் நகரத்தின் நூற்றாண்டு விழாவின் போது, பேராக் சுல்தானால் தெலுக் இந்தான் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது.

During the British protectorate era, the named was changed to Teluk Anson (Anson Bay), in honour of a British officer and last lieutenant-governor of Penang, Major-General Sir Archibald Edward Harbord Anson, who drew the plan of the modern township in 1882.

In 1982 during the centenary of the town's establishment, the name was changed again to Teluk Intan (Diamond Bay) by the Sultan of Perak.

The town of Teluk Intan developed around a few small villages in the location, such as Durian Sebatang, Pasir Bedamar, and Batak Rabit. A plan to build a township linking the few villages was drawn up by Sir Archibald Anson during the late 19th century, and the township was named after him in 1882.

பாகன் டத்தோ தோட்டத்தின் வரலாறு என்பது வரலாறு இருக்கும் வரையில் வரலாறு பேசும். இது சத்தியமான உண்மை. அப்பேர்ப்பட்ட வரலாற்று இரகசியங்களைத் தனக்குள் அடக்கி வைத்து அழகு பார்க்கின்றது பாகன் டத்தோ தோட்டம்.

பாகன் டத்தோ தோட்டத்தின் மண் வாசனை காலா காலத்திற்கும் சண்பக மலர்களின் வாசனையை வழங்கிக் கொண்டே இருக்கும். ஏன் என்றால் 100 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே சண்பக மலர்த் தோட்டங்கள் இருந்து உள்ளன. சண்பக வாசனைத் திரவியங்கள் தயாரித்து கம்போடியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்னும் நிறைய வரலாற்று வாசனைகள் உள்ளன. பாகன் டத்தோ தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பற்றிய கட்டுரை விரைவில் வரும். எதிர்பார்க்கலாம்.

பாகன் டத்தோ தோட்டம் - மலாயா வரலாற்றில் மறக்க முடியாத ஒரு காலக் களஞ்சியம். அந்த வகையில் 176 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தத் தோட்டத்தில் தாழ் குழல் பதித்த தமிழ் மக்களுக்கு கைகூப்பி தலை வணங்குகிறோம்.  

சான்றுகள்:

1. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957); Indian Labour Immigration to Malaysia 1844 - 1941.

2. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources. 1908. Cornell University Library. Arnold Wright (London). H. A. Cartwright (Singapore). Bagan Datoh Estate, Page: 373

3. Stenson, Maichel R, Class, Race and Colonialism in West Malaysia, St. Lucia

4. The lost race in British Malaya: revisiting the problems of south Indian labourers Sivachandralingam Sundara Raja & Shivalinggam Raymond Pages 115-134

5. New Towns on the Malayan Frontier from Part I - The Nineteenth Century, Lynn Hollen Lees, University of Pennsylvania, Publisher: Cambridge University Press


பேஸ்புக் பதிவுகள்


Renganathan Thirumalai


Even today Telugu is spoken freely among the people living in Telok Intan, Hutang Melintang, Simpang Ampat and Bagan Datuk. Before the bridge across the Perak River was build there was a ferry service from Nova Scotia estate to Rubana estate to be use
d by the estate management. Now we have a Government build bridge and a private bridge which links Banting in Selangor to Taiping in Perak known as West Coast Expressway (WCE). Beside these two bridges there is one more bridge being build from Bagan Datuk to Ayer Tawar near Sitiawan .



1 கருத்து: