27 அக்டோபர் 2020

சயாம் மரணப் பாதையில் தமிழர்களின் முகாம்கள்

தமிழ் மலர் - 27.10.2020

சயாம் மரணப் பாதையில் தமிழர்கள் அனுபவித்த வேதனைகள் கொடுமையிலும் மகா கொடுமைகள். பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்; கணவன்மார்களை இழந்த பெண்கள்; ஒட்டு மொத்த குடும்பத்தையே இழந்த ஆண்கள். கை கால் ஊனமாகிக் காட்டுக்குள் காணாமல் போன தமிழர்கள்; காட்டுப் புலிகளால் அடித்துக் கொல்லப்பட்ட தமிழர்கள்.

இப்படி ஒரு நீண்ட நெடிய கொடுமையின் வரலாறு. இந்தத் தமிழர்களின் வேதனைக் குமுறல்களின் சன்னக் குரல்கள் அடங்குவதற்கு நீண்ட காலம் பிடித்தது.

Ellan Kannian from Kuala Selangor was one of thousands from then Malaya
who were forcibly recruited by the Japanese army to work on the
Death Railway during World War II. Image Courtesy: Star Malaysia

சயாம் மரண இரயில்பாதை என்பது உருக்குலைந்த மனித உரிமைகளில் இரத்தம் வடியும் ஆழமான காயங்கள். அதுவே மலேசியத் தமிழர்களின் நெஞ்சங்களைக் கீறிப் பார்க்கும் ரணச் சுவடுகள்; அவர்களின் நெஞ்சங்களைப் பிளந்து பார்க்கும் மரணச் சுவடிகள். இரண்டுமே மௌன மொழிகளின் வக்கர ராகங்கள்.

சயாம் மரண இரயில் பாதையில் மிகவும் புகழ்பெற்றது 277-ஆவது பாலம். கவாய் ஆற்றுப்பாலம் என்று பெயர். ஆங்கிலத்தில் தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் குவாய் (The Bridge on the River Kwai). இந்தக் குவாய் ஆற்றுச் சகதியில் மனித இரத்தமும், உயிரற்ற மனித உடல்களும் ஒன்றாகக் கலந்து ஓடி இருக்கின்றன. அதைப் பார்த்து பர்மா சயாம் காடுகளே கண்ணீர் வடித்து இருக்கின்றன.

இந்தியா - பர்மா எல்லையில் இம்பால் எனும் புகழ்பெற்ற இடம். இங்கேதான் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தினர் உயிரைப் பணயம் வைத்துப் போர் புரிந்து இருக்கிறார்கள்.

நேதாஜி தன் படை வீரர்களைப் பார்க்க அங்கே நான்கு முறை போய் இருக்கிறார். ஆனாலும் இரயில் கட்டுமானத்தில் பணிபுரிந்த மலாயா தமிழர்கள் மட்டும் நேதாஜியைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப் படவில்லை.

ஒரு முகாமிற்கு நேதாஜி வருகிறார் என்றால் அங்கு வேலை செய்த தமிழர்கள் எல்லோரையும் ஜப்பானியர்கள் காட்டுக்குள் அனுப்பி விடுவார்கள். நேதாஜிக்கு உண்மை தெரிந்துவிடும் எனும் அச்சமாக இருக்கலாம்.

The Death Railway. Image Courtesy: Varnam MY

சயாம் மரண இரயில்பாதை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஆசியத் தொழிலாளர்கள்; போர்க் கைதிகள் பலர் தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள கிரா குறுநிலத்தில் கால்வாய் (Kra Isthmus)  அமைக்க அனுப்பப் பட்டனர்.

Arumugam sent at the age of 15 years old as interpreter

இன்னும் பலர் சுமத்திராவின் பலேம்பாங் இரயில் பாதையை அமைக்கவும் அனுப்பப் பட்டனர். ஆனால் கிரா குறுநிலக் கால்வாய்த் திட்டம் தோல்வியில் முடிந்தது. இன்னும் ஒரு தகவல்.

சயாம் மரண இரயில்பாதை கட்டி முடிக்கப்படும் கட்டத்தில் 50,000 அமெரிக்கப் போர்க் கைதிகள் ஜப்பானுக்கு அனுப்பப் பட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் பிலிப்பைன்ஸ், பசிபிக் தீவுகளில் பிடிபட்ட அமெரிக்கர்கள்.

S. Shanmugam. One of the survivirs

ஜப்பானில் இருந்த தொழிற்சாலைகள், கப்பல் துறைமுகங்கள்; நிலக்கரி நிலவடிச் சுரங்கங்கள் மிட்சுபிசி, மிட்சுய், காவாசாக்கி, நிப்போன் ஸ்டீல் நிறுவனங்களின் தொழிற்சாலைக; இவற்றில் அடிமைத் தொழிலாளர்களாக வேலை செய்தார்கள்.

தவிர சீனா மஞ்சூரியாவில் இருந்த தொழிற்சாலைகளுக்கு 15,000 அமெரிக்கர்கள் அனுப்பப் பட்டார்கள். தவிர யூனிட் 731 எனும் ஜப்பானிய மனிதப் பரிசோதனை மையத்தில் பல நூறு அமெரிக்கர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டு கொல்லப் பட்டார்கள்.

இரயில் பாதை கட்டுமானத் தொழிலாளர்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டனர். இந்தப் பிரிவுகளை ஆங்கிலத்தில் ’போர்ஸ்’ (Force) என்று அழைத்தார்கள். இது ஒரு நீண்ட பட்டியல். அதனால் தமிழர்கள் தொடர்பான விவரங்களை மட்டும் தருகிறேன். தமிழர்கள் தங்கி இருந்த முகாம்கள்:

Dharmalingam. One of the survivors

1. தாடேயின் 90 கி.மீ.

2. 98-ஆம் கிலோமீட்டர் முகாம் 317.

3. பாயா தான்சூ தாவுங் 307. தாய்லாந்து பர்மா எல்லை.

4. காஞ்சனாபுரி 115.

5. மேல் கொன்குய்தா 145.

6. சுவிந்தன் முகாம் 166. நோய் முற்றிய தமிழர்கள் தனித்து விடப்பட்ட முகாம்

7. டோப்ஸ் முகாம் 169.

8. ஜான்சன் முகாம் 171.

9. தா மாயோ ஊட் 176.

10. தா மாயோ 178.

11. நாம் சோன் யாய் 186.

12. வட கானும் தா 190.

13. தா கானும் முகாம் 192.

14. தா கானுன் 193.

15. பாங்கான் 201.

16. வாங் ஹின் 223.

17. கின்சாயோக் காட்டு முகாம் 1 – 256.

18. ஹிந்தோக் சிமெண்ட் 258. சிமெண்ட் மூட்டைகள் முகாம்

19. ஹிந்தோக் ஆறு 260.

20. ஹிந்தோக் சாலை 261. காலரா நோயினால் நூற்றுக் கணக்கான தமிழர்கள் இறந்த இடம்

Death Railway Interest Group chairman P. Chandrasegar

21. மேல் கான்யூ 264.

22. கீழ் கான்யூ 264.

23. யஜென் கான்யூ 265.

24. தாம்பி 267.

25. தார்சோ மருத்துவமனை 290.

26. வாங் தாக்ஹாயின் 334.

27. வாங் யென் 340.

28. வாங் லான் 346.

29. சூங்காய் 355. தாய்லாந்துப் போர்க்கைதிகள் - போர்க் கல்லறை

30. குவாய் ஆற்றுப் பாலம் 359.

31. தா ரூவா    389. சிங்கப்பூரில் இருந்து வந்த சிறைக் கைதிகளுக்கான மாற்று முகாம்

32. பான் போங் 412. சிங்கப்பூர் சிறைக் கைதிகள். முதல் முகாம்

33. நோங் பிலாடுக் 415. ஜூன் 1942 - சிங்கப்பூர் போர்க் கைதிகள் முகாம்.

மேலே சொல்லப்பட்ட முகாம்களில் தான் தமிழர்கள் தங்கி இருந்தார்கள்.

சயாம் மரண இரயில்பாதை கட்டுமானத்தில் இறந்தவர்கள் (தொழிலாளர்கள்); நாடுகள் வாரியாக -

மலாயா தமிழர்கள் இறந்தவர்கள் 175,000

பர்மா தொழிலாளர்கள் இறந்தவர்கள் 90,000.

ஜாவா தொழிலாளர்கள் இறந்தவர்கள் 7,500.

சிங்கப்பூர் தொழிலாளர்கள் இறந்தவர்கள் 5,200.

(The Southwestern Historical Quarterly. 95 (3): 297–319)

(The Japanese Thrust – Australia in the War of 1939–1945. Canberra: Australian War Memorial. p. 568)

இந்த மரண இரயில் பாதையினால் ஆயிரக் கணக்கான தமிழர்களின் குடும்பங்கள் சின்னா பின்னமாயின. ஆயிரக் கணக்கான தமிழர்களின் குடும்பங்கள் காணாமல் போயின.

சயாம் பர்மா இரயில் பாதை முகாம்களில் தமிழர்களின் பிள்ளைகள் ஏறக்குறைய 1000 பேர் அனாதைகளாகக் கைவிடப் பட்டார்கள். உள்ளூர் மக்கள் அந்தப் பிள்ளைகள் பலரைத் தத்து எடுத்துக் கொண்டார்கள்.

தமிழர்கள் வாரிசுகளின் இரத்தம் அங்கே இன்னும் ஓடிக் கொண்டு இருக்கிறது. 75 ஆண்டுகளாகி விட்டன. வாரிசுகள் யார் எவர் என்று அடையாளம் தெரியாத ஓர் அவல நிலையில் மலாயா தமிழர்களின் ஒரு பாரம்பரியம் அங்கே இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

இதைப் படித்துவிட்டு அந்தப் பிள்ளைகளை அடையாளம் காட்டுங்கள் என்று சிலர் குண்டக்க மண்டக்க மாதிரி எதிர்க் கேள்விகள் கேட்கலாம். வேண்டாமே.  நெருப்பு இல்லாமல் புகை வராது.

ஜப்பானியர்கள் எப்படி எப்படி எல்லாம் தமிழ் மக்களை வேதனைப் படுத்தி இருக்கிறார்கள்; சயாம் மரண இரயில் பாதைக்குக் கொண்டு செல்லப்பட்ட போர்க் கைதிகளும் சரி; தமிழர்களும் சரி; எப்படி எப்படி எல்லாம் மரணத் துயரங்களை அனுபவித்து இருக்கிறார்கள்.

படிக்கும் போதும் வேதனை. படித்த பின்னரும் வேதனை. அவர்கள் அனுபவித்த வேதனைகளை அசை போடும் போதும் வேதனை. நெஞ்சம் வெடித்துவிடும் போல இருக்கிறது.

சயாம் மரண இரயில் பாதையின் கொடூரங்கள் மறக்கப்பட்ட ஒரு வரலாறாக மாறி வருகிறது. இனிவரும் காலங்களில் அந்த வரலாறு மறக்கப்படக் கூடாது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.10.2020

ஆய்வு நூல்கள்

1. Boulle, Pierre (1954). Bridge on the River Kwai. London: Secker & Warburg.
Commonwealth War Graves Commission (2000). The Burma-Siam Railway and its Cemeteries. England: Information sheet.

2. Daws, Gavan (1994). Prisoners of the Japanese: POWs of World War II in the Pacific. New York: William Morrow & Co..

3. Gordon, Ernest (1962). Through the Valley of the Kwai: From Death-Camp Despair to Spiritual Triumph. New York: Harper & Bros..

4. Hardie, Robert (1983). The Burma-Siam Railway: The Secret Diary of Dr. Robert Hardie, 1942–1945. London: Imperial War Museum.

5. Kinvig, Clifford (1992). River Kwai Railway: The Story of the Burma-Siam Railway. London: Brassey’s. ISBN 0-08-037344-5.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக