தமிழ் மலர் - 31.12.2020
மலேசிய மக்கள் நித்தம் நித்தம் வியர்வையில் நசிந்து நலிந்து; விலைவாசி ஏற்றத்தில் துண்டு துண்டாய்ச் சிதறிச் சிதைந்து; அன்றாட வேதனைகளில் அல்லல்பட்டு அலைமோதி சம்பாதித்த பணம். அது மலேசிய மக்களின் வியர்வைத் துளிகள்; இரத்தத் துளிகள். கொஞ்சம்கூட மனித மனம் இல்லாமல் செலவு செய்து இருக்கிறார்கள்.
கையில் இருக்கிற பணம் நாம் உழைத்துச் சம்பாதித்த பணம் அல்ல என்கிற நினைப்பு தான் ஒருவரின் மனத்தை மாசுபடுத்தி விடுகிறது. அந்த வகையில் ஒரு சொட்டு குற்ற உணர்வும் இல்லாமல் மலேசிய மக்களின் பணம் வாரி வாரி இறைக்கப்பட்டு இருக்கிறது.
மனசாட்சி இல்லாமல் எப்படித் தான் பயணித்தார்கள். ஒருநாள் பிடிபடுவோம் என்கிற அச்சம் கொஞ்சம்கூட இல்லாமல் எப்படித் தான் நகர்ந்தார்கள்; எப்படித் தான் வாழ்ந்தார்கள். அது தான் பெரிய அதிசயமாக இருக்கிறது.
1எம்.டி.பி. பற்றி ஒரு சின்ன விளக்கம். இது அரசு சார்ந்த நிறுவனம். 2009-ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது. மலேசியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது; மலேசிய மக்களின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்திக் காட்டுவது; இவைதான் 1எம்.டி.பி. நிறுவனத்தின் தலையாய நோக்கங்கள். தலையாய இலக்குகள்.
1எம்.டி.பி. நிறுவனம் ஈடுபட்ட எல்லா நடவடிக்கைகளுக்கும் மலேசிய மக்களே பொறுப்பு. அந்த நிறுவனத்தின் இலாப நட்டங்களுக்கும் மலேசிய மக்களே பொறுப்பு.
இப்போது அந்த நிறுவனத்திற்கு 4200 கோடி ரிங்கிட் நட்டம். அந்த வகையில் மலேசிய மக்களின் பேரைச் சொல்லி 1MDB வாங்கிய கடன்களுக்கு மலேசிய மக்களே பொறுப்பு. சரி. 1எம்.டி.பி. RM40 பில்லியன் எப்படி செலவு செய்து இருக்கலாம்.
1. மலேசியாவில் வாழும் 32.7 மில்லியன் மக்களுக்கும் ஆளாளுக்கு 1300 ரி.ம. கொடுத்து இருக்கலாம். இதில் ஒவ்வொரு தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களையும் சேர்த்து ஒவ்வொரு குழந்தைக்கும் 1300 ரி.ம. கொடுத்து இருக்கலாம்.
2. மலேசிய மாணவர்கள் 1.33 மில்லியன் பேருக்கு உள்நாட்டின் அரசு பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெறுவதற்கான கல்விச் செலவுகள்; உணவுச் செலவுகள்; மருத்துவச் செலவுகள்; விடுதிச் செலவுகள் என்று ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு RM10,000 என மூன்று ஆண்டுகளுக்கு வழங்கி இருக்கலாம்.
அந்த வகையில் 1,330,000 மாணவர்களைப் பட்டதாரிகளாக மாற்றி இருக்கலாம். அதாவது 13 இல்ட்சம் மணவர்களைப் பட்டதாரிகளாக மாற்றி இருக்கலாம்.
3. ஓர் ஆண்டுக்குச் சராசரியாக ரி.ம. 50,000 சம்பளத்தின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு 80,000 ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கி இருக்கலாம். மலேசியாவில் 33 இலட்சம் ஆசிரியர் உள்ளார்கள்.
(In the 2017–18 school year, there were 3.3 million full-time and part-time traditional public school teachers, 205,600 public charter school teachers, and 509,200 private school teachers.)
4. ஒரு படுக்கைக்கு RM800,000 எனும் அடிப்படையில் 333 படுக்கைகள் கொண்ட 150 மருத்துவமனைகளை உருவாக்கி இருக்கலாம். அதாவது 500,000 படுக்கைகளை உருவாக்கி இருக்கலாம்.
மலேசியாவில் இப்போது அரசாங்கம் நடத்தும் பொது மருத்துவமனைகளில் 42,300 படுக்கைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 16 ஆயிரம் படுக்கைகள் உள்ளன.
5. ஏறக்குறைய 1,000 மாணவர்கள் அல்லது 800,000 மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு RM50 மில்லியன் செலவில் 800 பள்ளிகளை உருவாக்கி இருக்கலாம். மலேசியாவில் இப்போது 103 தங்கி பயிலும் பள்ளிகள் அல்லது கல்லூரிகள் உள்ளன.
6. தலா RM1 பில்லியன் செலவில் 40 நவீனமான பல்கலைக்கழகங்களை உருவாக்கி இருக்கலாம். மலேசியாவில் 2019-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 111 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
(There are 20 public universities and 47 private universities in Malaysia. There are 34 university colleges and 10 foreign university branch campuses too (September 2019)
7. மலேசியாவில் 22 வருடங்களுக்கு 100,000 குடும்பங்களுக்கு; ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நாளைக்கு RM50 அல்லது ஒரு மில்லியன் குடும்பங்களுக்கு இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி இருக்கலாம்.
8. பத்து மில்லியன் மோடனாஸ் கிரிஸ் எம்.ஆர். 2 ரக மோட்டார் சைக்கிள்களை வாங்கி நாட்டில் உள்ள ஆறு மில்லியன் வீடுகளுக்குக் கொடுத்து இருக்கலாம். மேலும் நான்கு மில்லியன் மோட்டார் சைக்கிள்கள் மீதம் இருக்கும்.
9. ஒரு மில்லியன் புரோட்டான் சாகா கார்கள் வாங்கி இருக்கலாம்.
10. மலேசியாவில் உள்ள ஒவ்வொரு ஆறு வீடுகளுக்கும் ஒரு புரோட்டான் சாகாவைக் கொடுத்து இருக்கலாம்.
11. ஆடம்பரக் கப்பல் ‘தி ஈக்குவானிமிட்டி’ போல 40 கப்பல்கள் வாங்கி இருக்கலாம்.
12. ரோசாப்பூ ரோசம்மா வாங்கிய இளஞ்சிவப்பு வைர நெக்லஸ் விலை 100 மில்லியன். அதைப் போல 400 நெக்லஸ்கள் வாங்கி இருக்கலாம்.
10. சுமார் 10 கோலாலம்பூர் நகர மையங்கள் (Kuala Lumpur City Centres) உருவாக்கி இருக்கலாம்.
11. நான்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையங்கள் (Kuala Lumpur International Airports) கட்டி இருக்கலாம்;
12. இரண்டு புத்ராஜெயாக்கள் (Putrajayas) உருவாக்கி இருக்கலாம்;
13. ஏழு வடக்கு - தெற்கு நெடுஞ்சாலைகள் (North-South Expressways) உருவாக்கி இருக்கலாம்.
14. பினாங்கு பாலம் (1985-இல் கட்டப்பட்ட முதல் பாலம் - 800 மில்லியன் ரிங்கிட்) போல 50 பாலங்களைக் கட்டி இருக்கலாம்.
Equanimity - 250 million USD
ஆக அவ்வளவு பணத்தையும் என்ன செய்வது என்று தெரியாமல்; அந்தப் பணத்தைச் செலவு செய்ய வேண்டுமே என்று எதை எதையோ வாங்கி எப்படி எப்படியோ செலவு செய்து இருக்கிறார்கள்.
1எம்.டி.பி. நிறுவனம் மலேசிய நிதியமைச்சிற்குச் சொந்தமானது. மலேசிய நிதியமைச்சரின் நேரடிப் பார்வையின் கீழ் இருந்தது. (Minister of Finance (Incorporated). இந்த நிறுவனத்தின் பண முதலீடுகள்; வருமானம்; இலாப நட்டம் அனைத்திற்கும் மலேசிய நிதியமைச்சு தான் பொறுப்பு.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் 1எம்.டி.பி. நிறுவனம் ஈடுபட்ட எல்லா நடவடிக்கைகளுக்கும் மலேசிய நிதி அமைச்சுதான் பொறுப்பு. அந்த மலேசிய நிதி அமைச்சிற்கு மலேசிய அரசாங்கம் தான் பொறுப்பு. அந்த மலேசிய அரசாங்கத்திற்கு மலேசிய மக்களாகிய நீங்களும் நானும் தான் பொறுப்பு.
அதாவது அந்த 1எம்.டி.பி. நிறுவனத்தின் இலாப நட்டங்களுக்கு மலேசிய மக்களே பொறுப்பு. இப்போது அந்த நிறுவனம் 4200 கோடி ரிங்கிட் நட்டத்தில் தத்தளித்துக் கொண்டு நிற்கிறது. அந்த வகையில் மலேசிய மக்களின் பேரைச் சொல்லி வாங்கப் பட்ட கடன்களுக்கு நீங்களும் நானும் தான் பொறுப்பு.
இன்னும் தெளிவாகச் சொல்லலாம். மலேசியாவில் இன்று பிறந்த குழந்தையில் இருந்து; நேற்று இறந்து போனவர் வரை ஒவ்வொருவரும் இந்த 1எம்.டி.பி. நிறுவனத்தின் கடனுக்கு மட்டும் ஆளுக்கு 1400 ரிங்கிட் கடன் கொடுக்க வேண்டும்.
அந்த ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே நீங்களும் நானும் ஆளுக்கு 1400 ரிங்கிட் கடன் பட்டு இருக்கிறோம். என்ன இருந்தாலும் அது பழைய அரசாங்கம் வாங்கிய கடன். அந்தக் கடனை இப்போதைய முகைதீன் பெரிக்கத்தான் அரசாங்கம் கட்ட வேண்டும்.
இதற்கு முன்னர் முந்தைய மகாதீர் - அன்வார் பக்காத்தான் அரசாங்கம் கட்டி வந்தது. கட்டித் தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை. கடன் கொடுத்தவர்கள் சும்மா விட மாட்டார்கள். அனைத்துலக நீதிமன்றம் வரை இழுத்துச் சென்று விடுவார்கள்.
மலேசியர்களை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் அல்லவா. ஆக அந்தக் கடனை இப்போதைய புதிய அரசாங்கங்கள் கட்ட வேண்டிய நிலையில் உள்ளன.
இவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்கிறோமே; வெளியே தெரிய வருமே என்கிற குற்ற உணர்வு ஒரு துளியும் இல்லாமல் எப்படித் தான் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வேடிக்கை அல்ல. வேதனையாக இருக்கிறது.
அவர்களுக்குப் அச்சம் இல்லாமல் போனதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. கையில் இருக்கிற பணம் நாம் உழைத்துச் சம்பாதித்த பணம் அல்ல என்கிற அந்த நினைப்புத் தான். அதனால் தான் 1 எம்.டி,பி. பணம் கோடிக் கோடியாய் வாரி இறைக்கப்பட்டு இருக்கிறது.
அவர்களுக்குப் பயம் இல்லாமல் போனதற்கு இன்னும் ஒரு காரணம் இருக்கிறது. 2018 பொதுத் தேர்தலில் எப்படியும் நஜீப் வெற்றி பெற்று விடுவார்; தங்களை எப்படியாவது காப்பாற்றி விடுவார் எனும் நம்பிக்கை.
அதனால் தான் அந்த அளவிற்கு அவர்கள் துணிந்து மக்களின் பணத்தை விளையாடி இருக்கிறார்கள். இப்போதைய நிலையைப் பாருங்கள். முன்னாள் பிரதமர் தன்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்.
Source: https://www.thestar.com.my/business/business-news/2018/09/15/money-is-cheap-when-its-not-yours/
முன்னாள் பிரதமர் நஜீப், மலேசியாவின் பிரதமராக இருந்த காலத்தில் நாட்டின் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். அதனால் நிதியமைச்சு அவரின் நேரடிப் பார்வையின் கீழ் இருந்தது.
அந்த வகையில் 1எம்.டி.பி. நிறுவனத்தின் தலைமை ஆலோசனை மன்றத்தின் தலைவராகவும் முன்னாள் பிரதமர் நஜீப் பொறுப்பு ஏற்று இருந்தார். அவருடைய அனுமதியின் பேரில் தான் 1எம்.டி.பி. நிறுவனம் இயங்கி வந்தது. அதாவது அவரின் கண் அசைவில் தான் அந்த நிறுவனமே இயங்கியது.
2015-ஆம் ஆண்டு 1எம்.டி.பி. நிறுவனத்திற்குச் சொந்தமான 267 கோடி ரிங்கிட் பணம் முன்னாள் பிரதமர் நஜீப்பின் வங்கிக் கணக்கில் சேர்க்கப் பட்டது. நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
ஒரு நாட்டுத் தலைவரின் வங்கிக் கணக்கில் கோடிக் கோடியாகப் பணம். அதுதான் விஸ்வரூபமாகத் தலை எடுத்து மைக்கல் ஜாக்சன் கணக்கில் பிரேக் டான்ஸ் ஆடியது.
பணத்தைப் பார்த்தீர்களா. ஒரு கோடி இரண்டு கோடி இல்லீங்க. அம்மாடியோவ் என்று சொல்லும் அளவிற்கு 267 கோடிகள். முன்னாள் நஜீப்பின் தனி வங்கிக் கணக்கில் மட்டும் 2,672,000,000 மலேசிய ரிங்கிட் இருந்தது.
அதாவது USD 700 million (அமெரிக்க டாலர்கள்). இரண்டே இரண்டு வங்கிக் கணக்குகளில் மட்டும் அவ்வளவு பணம்.
ஆனாலும் அந்தப் பணத்தை சவூதி அரேபியா அரசக் குடும்பம் அன்பளிப்பு செய்தது என்று சொல்லி நஜீப் மறுத்து வந்தார்.
ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 6355 ரிங்கிட் என்று செலவு செய்தால் 267 கோடி ரிங்கிட் பணத்தையும் செலவு செய்து முடிக்க 2739 ஆண்டுகள் பிடிக்கும். அது மட்டும் அல்ல.
267 கோடி ரிங்கிட் பணத்தை 100 ரிங்கிட் நோட்டுகளாக மாற்றினால் அவ்வளவு பணத்தையும் ஏற்றிச் செல்ல 12 இராட்சச லாரிகள் தேவைப்படும். (24 டயர் லாரிகள்). அப்படி என்றால் எவ்வளவு பணம் என்று நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்று மாறாமல் போய் இருந்தால் இன்னும் எவ்வளவோ மோசடிகள் நடந்து இருக்கலாம்; இன்னும் எவ்வளவோ திருடர்களின் கைகளுக்குப் போய் இருக்கலாம். சொல்ல முடியாது.
இது வெறும் 40 பில்லியன் 1MDB கணக்கு. ஆனால் நம் நாடு மலேசியா 1000 பில்லியன் ரிங்கிட்டை வெளிநாடுகளில் கடன் பட்டு இருக்கிறதே...
(Malaysia's total debt rose to RM1 trillion or 69.7% of gross domestic product (GDP) as at end-June 2020)
இதற்கு என்ன கணக்கு? இந்தப் பணத்தை மலேசிய மக்கள்தான் கட்டி அழவேண்டும் என்பது அவர்களின் தலையெழுத்து.
ஒரு நாட்டில் குறிப்பிட்ட ஓர் இனத்தவர் எது செய்தாலும் அது பிரச்சினை இல்லை. மற்ற இனத்தவர் ஒரு சின்னக் குற்றம் செய்தாலும் அதைப் பெரிதாக்கி அந்த இனத்தையே கேவலப் படுத்தி விடுகிறார்கள்.
உலகின் 179 நாடுகளில் எதில் அதிகமான லஞ்ச ஊழல் என்று கணக்கெடுப்பு செய்தார்கள். அந்தப் பட்டியலில் மலேசியா 51-ஆவது இடத்தில் உள்ளது. 80-ஆவது இடத்தில் இந்தியா சீனா; 100-ஆவது இடத்தில் வியட்நாம். 80-ஆவது இடத்தில் நைஜீரியா. ஆகக் கடைசியக 179-ஆவது இடத்தில் சோமாலியா.
தொட்டதற்கு எல்லாம் கடன்களை வாங்கி இந்த நாட்டை ஒரு வழிபண்ணி விட்டார்கள். இந்தப் போக்கில் போய்க் கொண்டு இருந்தால் அடுத்து நம் சந்ததிகள் எப்படி வாழப் போகிறார்கள்? நினைத்துப் பாருங்கள்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.12.2020
சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்
பதிலளிநீக்குIFHRMS
பதிலளிநீக்குகடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்குகிறது மலேசிய மக்களின் மனங்கள்.
பதிலளிநீக்கு