26 டிசம்பர் 2020

மலாயா தமிழர்கள்: தைப்பிங் சிம்பாங் அம்பாட் தோட்டம் 1860

தைப்பிங், மாத்தாங், சிம்பாங் அம்பாட் தோட்டம் 1860-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட தோட்டம். இந்தத் தோட்டம் உருவாக்கப்படும் போது அது ஒரு லைபீரியா காபித் தோட்டம்.

இலங்கையைச் சேர்ந்த ஆசிய ரப்பர் அண்ட் புரடக்ஸ் கம்பெனி, லிமிடெட், (Asiatic Rubber and Produce Company, Ltd.,) நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது. இந்த நிறுவனம் இலங்கை, கொழும்பு நகரில் தலைமை அலுவலகங்களைக் கொண்டது.

மலாயா நாட்டில்  மெசர்ஸ் லீ, ஹெட்சஸ் & கோ (Messrs. Lee, Hedges & Co) எனும் நிறுவனத்தால் பிரதிநிதிக்கப் பட்டது. சிம்பாங் அம்பாட் தோட்டம் தைப்பிங் நகரில் இருந்து ஐந்து மைல் தொலைவில் சுமார் 640 ஏக்கர் பரப்பளவில் அமைந்து இருந்தது.

1860-ஆம் ஆண்டுகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் லைபீரியா காபி பயிர் செய்யப் பட்டது. 1870-ஆம் ஆண்டுகளில் மரவள்ளிக் கிழங்கு நடப்பட்டது. 1880-ஆம் ஆண்டுகளில் மிளகு அறுவடை செய்யப்பட்டது.

பின்னர் 1890-ஆம் ஆண்டுகளில் முழு தோட்டமும் பாரா ரப்பருக்கு மாற்றம் கண்டது. 1906-1907-ஆம் ஆண்டுகளில் இருநூறு ஏக்கர் கூடுதலாகத் திறக்கப் பட்டன. 1907-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத் தொடக்கத்தில் சுமார் 2,000 பவுண்டு உலர்ந்த ரப்பர் கிடைத்தது.

இந்தத் தோட்டத்தில் ஒப்பந்தம் செய்யப்படாத 80 தமிழர்கள். இவர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாக வேலை செய்வதற்கு அனுமதிக்கப் பட்டார்கள். தவிர 35 வங்காளிகள்; 30 சீனர்கள்; மலாய்க்காரர்களும் வேலை செய்தனர்.

நிர்வாகி திரு. டபிள்யூ. ஏ. கெல்லோ (W. A. T. Kellow). இவர் இலங்கையில் காபி, தேயிலை, ரப்பர், கோக்கோ தோட்டங்களில் பணிபுரிந்தவர். அங்கு இருந்த அபதேல், பதுல்லா மாவட்டங்களில் அனுபவம் பெற்றவர். தென் ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயக் காலாட்படையில் சேவை செய்தற்காக மகாராணியார் பதக்கம் பெற்றவர்.

1860-ஆம் ஆண்டுகளில் மலாயா, பேராக், மாத்தாங், தைப்பிங் பகுதிகளில் இருந்த காபி, தேயிலை, மரவள்ளி, மிளகு, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த மலாயா தமிழர்களும்; சீனர்களும் வந்தேறிகளா? அவர்களை வந்தேறிகள் என்று அழைத்தால் அதே தோட்டத்தில் வேலை செய்த மற்ற இனத்தவர்களை எதில் கொண்டு போய்ச் சேர்ப்பதாம்?

Indian Tamils arrived in Malaya in 1840s - 1920s

1840-ஆம் ஆண்டுகள் தொடங்கி மலாயாவுக்கு வந்து இந்த நாட்டை வளப்படுத்திய இந்தியர்கள் (தமிழர்கள்) வந்தேறிகளா? அப்படிச் சொல்லும் பொது கொஞ்சமாவது வெட்கம் வர வேண்டாமா?

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.12.2020

சான்றுகள்:

1. Wright, Arnold; Twentieth century impressions of British Malaya; Page 319. Britain Publishing Company, 1908

2. http://www.biship.com/fleetlists/fleet1879-1889.htm

3. http://seasiavisions.library.cornell.edu/catalog/

4. Indian Labour Immigration to Malaysia 1844 - 1941

6. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957)






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக