தமிழ் மலர் - 26.01.2021
உலகத் தமிழர்களின் நாகரிக வரலாறு மிக மிகப் பழைமையானது. மிக மிகத் தொன்மையானது. எகிப்தியம்; கிரேக்கம்; சிந்துவெளி; மாயா; பாபிலோனியம்; பாரசீகம்; இன்கா; அசுரெக்; மெசொப்பொத்தேமியா; சுமேரியா; வைக்கிங்; உம்மா; ஈலாம்; அஸ்டெக்; இவற்றுடன் தோள் கொடுத்துப் போகும் நாகரிக வரலாறுகளில் கெடா வரலாறும் ஒன்றாகும்.
அந்த வரலாற்று நாகரிகங்களில் ஒன்றாகக் கெடா வரலாறும் தனித்துவம் பெறுகின்றது. மறுபடியும் சொல்கிறேன். கெடா வரலாறு தனித்துவம் பெற்றது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது கதை அல்ல. உண்மை. இது புகழாரம் அல்ல. உண்மை.
உண்மையில் பார்க்கப் போனால் மாறன் மகாவம்சன் மலையூர் மலாயாவில் கால் பதித்த காலத்தில் இருந்து கெடா வரலாறு தொடங்குகிறது. கெடா தமிழர்களின் வரலாறும் தடம் பதிக்கின்றது. அதற்கு முன்னர் தமிழர்கள் யார்? அவர்கள் எங்கே இருந்து வந்தார்கள்? எப்படி வந்தார்கள்? அதைக் கொஞ்சம் பார்ப்போம்.
தமிழர்களின் தோற்றம் பற்றி நான்கு கருதுகோள்கள் உள்ளன. கருதுகோள் என்றால் ஆங்கிலத்தில் ஹைப்போதீசிஸ் (hypothesis).
முதலாவது: தமிழர்கள் குமரிக் கண்டத்தில் இருந்து வந்தார்கள் எனும் கருதுகோள்.
இரண்டாவது: பழந்தமிழர்கள் தென் இந்தியாவின் பழங்குடிகள் எனும் கருதுகோள்.
மூன்றாவது: ஆப்பிரிக்கா எதியோப்பியாவில் இருந்து அரேபியா கடல் வழியாகத் தென்னிந்தியாவிற்கு வந்தவர்களின் வழித்தோன்றல்கள் எனும் கருதுகோள்.
நான்காவது: மத்திய ஆசியா, வட இந்தியா போன்ற நிலப்பரப்புகளில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள். காலப் போக்கில் அங்கே இருந்து தென் இந்தியாவிற்குள் வந்தார்கள் எனும் கருதுகோள்.
இந்த நான்கு கருதுகோள்களில் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரே ஒரு வரலாற்று உண்மை தெரிய வரும். அதாவது தமிழினம் தொன்மை வாய்ந்த இனங்களில் ஓர் இனம் எனும் உண்மை.
தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆய்வுகள் செய்து இருக்கிறார்கள். அவற்றில் குறிப்பிட்டுச் சொன்னால் ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சி. அங்கு அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்பாண்டங்கள் கி.மு. 1000-ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தவையாகும்.
அந்தக் கலைப் பொருட்கள், தமிழர்கள் அங்கு வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதற்குச் சான்றுகளாக அமைகின்றன. அந்தப் புதைப் பொருட்களில் உள்ள குறிப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
அதற்குக் காரணம் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளுடன் அந்த ஆதிச்ச நல்லூர் குறிப்புகளும் ஒத்துப் போகின்றன.
அப்போதைய காலக் கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை அது உறுதி செய்கிறது. அங்கு கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் கி.மு. 500-ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாகும்.
இதையும் சங்கத்தமிழ் இலக்கியச் சான்றுகளுடன் ஒப்பீடு செய்து, தமிழர்கள் குமரிக் கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்பதையும் வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப் படுத்துகின்றார்கள். சரி. கெடா வரலாற்றுக்கு வருவோம்.
கெடாவின் வரலாறு மாறன் மகாவம்சன் காலத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த மாறன் மகாவம்சனைத் தான் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals) சான்று கூறுகின்றன.
மாறன் மகாவம்சன் என்பவர் பாரசீகத்தில் இருந்து தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு வந்தவர். அங்கே இருந்து கெடாவிற்கு வந்து இருக்கிறார். அப்படியே கெடா மன்னராட்சியையும் (Kedah kingdom - Kadaram) உருவாக்கி இருக்கிறார்.
பூஜாங் சமவெளி எனும் பேரரசிற்கு அடிக்கல் நாட்டு விழா செய்த நாயகனும் இதே இந்த மாறன் மகாவம்சன் என்பவர் தான். ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.
கெடா மன்னராட்சியை உருவாக்கிய மாறன் மகாவம்சன் பாண்டியர்கள் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். கெடா பேரரசு தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னர் கெடா நிலப் பகுதி இலங்காசுகம் (Langkasuka) என்று அழைக்கப் பட்டது.
மாறன் மகாவம்சனுக்குப் பின்னர் கெடா மாநிலத்தை ஆட்சி செய்த இந்திய அரசர்களின் பட்டியல் வருகிறது. போதுமான சான்றுகளுடன் முன் வைக்கிறேன். இங்கே மிக முக்கியமான ஒரு விசயத்தைச் சொல்ல வேண்டும்.
மாறன் மகாவம்சனின் சந்ததியினரைப் பற்றி இரு வேறுபாடான வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. ஒரு பதிவு கெடா வரலாற்றுப் பதிவேடுகளில் இருந்து சொல்லப்படும் பதிவுகள் (Kedah Annals). மற்றொன்று சீனாவின் மிங் அரசக் கையேடுகளில் இருந்து சொல்லப்படும் பதிவுகள் (Chronicles of the Ming Dynasty).
இந்த இரு வரலாற்றுப் பதிவேடுகளும் ஒன்றுக்கு ஒன்று முரணான அரசப் பட்டியலைக் கொடுக்கின்றன. முதலில் கெடா வரலாற்றுப் பதிவேடுகள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இது கெடா வரலாற்றுப் பதிவேட்டுப் பதிவுகள்.
மாறன் மகாவம்சனுக்கு நான்கு பிள்ளைகள்.
மூத்தவர் மாறன் மகா பூதிசன் (Merong Mahapudisat).
இரண்டாவது மகன் காஞ்சி சர்ஜுனன் (Ganjil Sarjuna).
மூன்றாவது மகன் ஸ்ரீ மகாவங்சன் (Seri Mahawangsa).
கடைசியாக ஒரே மகள். அவருடைய பெயர் ராஜா புத்திரி இந்திரவம்சன் (Raja Puteri Sri Indrawangsa)
மாறன் மகாவம்சனுக்குப் பிறகு அவருடைய மகன் மாறன் மகா பூதிசன் கெடாவின் அரசரானார். இவருக்குப் பிறகு இவரின் தம்பி காஞ்சி சர்ஜுனன் கெடாவின் அரச பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
காஞ்சி சர்ஜுனன் தான் இலங்காசுகத்தைத் தோற்றுவித்தவர். கஞ்சில் சார்ஜுனா இறந்த பின்னர் அவரின் தம்பி ஸ்ரீ மகாவங்சன், இலங்காசுகத்தின் அரசரானார்.
ஸ்ரீ மகாவங்சனுக்குப் பின்னர் இவரின் தங்கை ராஜா புத்திரி இந்திரவம்சன் என்பவர் இலங்காசுகத்தின் அரசியானார்.
கெடாவிற்கும் தென் தாய்லாந்திற்கும் இடைப்பட்ட நிலப் பகுதியைப் பட்டாணி என்று அழைத்தார்கள். பட்டாணி எனும் பெயரில் இருந்து தான் சுங்கை பட்டாணி எனும் இப்போதைய நகரத்தின் பெயரும் உருவாகி இருக்கலாம்.
இந்தப் பட்டாணி நிலப் பகுதிக்கும் ராஜா புத்திரி இந்திரவம்சன் தான் அரசியாக இருந்தார். கெடா வரலாற்றில் இவர் தான் முதல் பெண் ஆட்சியாளர். முதல் அரசி.
அடுத்து வந்தவர் ஸ்ரீ மகா இந்திரவம்சன் (Seri Maha Inderawangsa). இவர் ஸ்ரீ மகாவங்சனின் மகனாகும். இவரைத் தான் கூர்ப் பல் அரசன் (Raja Bersiong) என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. இவர் மனிதர்களின் இரத்தத்தைக் குடிப்பவர் என்றும் சொல்லப் படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை.
இவருடைய வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகளினால் அரியணையில் இருந்து துரத்தப் பட்டார். இவர் ஜெராய் மலையில் (Gunung Jerai) அடைக்கலம் அடைந்தார். அங்கே வெகு காலம் தனிமையில் வாழ்ந்தார். இவர் ஒரு தாய்லாந்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன். பெயர் பரா ஓங் மகா பூதிசன் (Phra Ong Mahapudisat).
பரா ஓங் மகா பூதிசன் ஓர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும் அந்த விசயம் அவருக்குத் தெரியாமலேயே இருந்தது. இவர் ஜெராய் மலை அடிவாரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் தன் தாயாருடன் வளர்ந்து வந்தார்.
இந்தக் கட்டத்தில் ஜெராய் மலையில் அடைக்கலம் போன ஸ்ரீ மகா இந்திரவம்சன் அங்கேயே காலமானார். மலையில் இருந்து கீழே இறங்கி வரவே இல்லை.
ஸ்ரீ மகாவங்சனுக்குப் பின்னர் ஓர் ஆண் வாரிசு கெடா அரியணைக்குத் தேவைப் பட்டார். ஜெராய் மலை அடிவாரத்தின் கிராமத்தில் இருந்த பரா ஓங் மகா பூதிசனைத் தேடிக் கண்டுபிடித்தார்கள். அவரைக் கொண்டு வந்து அவருக்கு கெடா பேரரசின் அரசப் பொறுப்பை வழங்கினார்கள்.
இந்த பரா ஓங் மகா பூதிசனுக்கும் ஒரே மகன். அவருடைய பெயர் பரா ஓங் மகாவம்சன் (Phra Ong Mahawangsa). இவர் தான் மதம் மாறியவர். தன் பெயரை முஷபர் ஷா என்று மாற்றிக் கொண்டார் என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் சொல்கின்றன.
கெடா மாநில ஆட்சியாளர்கள்
(கெடா வரலாற்றுப் பதிவேடுகள்)
1. மாறன் மகா பூதிசன்
2. கஞ்சில் சார்ஜுனா
3. ஸ்ரீ மகாவங்சன்
4. ராஜா புத்திரி
5. ஸ்ரீ மகா இந்திரவம்சன்
6. பரா ஓங் மகா பூதிசன்
7. பரா ஓங் மகாவம்சன்
சீனாவின் மிங் அரசக் கையேடுகளின் பதிவுகளின்படி கெடா பேரரசின் கடைசி இந்து அரசரின் பெயர் தர்பார் ராஜா II (Durbar Raja II). இவர் தான் மதமாற்றம் செய்து கொண்டார்.
மதமாற்றம் நடந்த பின்னர் 800 ஆண்டுகால கெடா மாநிலத்தின் இந்து மதம் சார்ந்த ஓர் ஆளுமை ஒரு முடிவிற்கு வந்தது என்று மிங் அரசக் கையேடுகள் சொல்கின்றன.
மதமாற்றத்திற்குப் பின்னர் கெடா பேரரசு இந்து மதம் சார்ந்த பேரரசு; கெடா சுல்தானகமாக மாறியது. தர்பார் ராஜா II அரசரை, சயாமியர்கள் பரா ஓங் மகாவங்சா (Phra Ong Mahawangsa) என்று அழைத்து இருக்கிறார்கள். எப்படி மதமாற்றம் நடந்தது என்பதையும் கவனியுங்கள்.
கி.பி.1136-ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த சமய போதகர் செயிக் அப்துல்லா குமானி (Sheikh Abdullah bin Ja'afar Quamiri) என்பவர் கெடாவிற்கு வந்தார். கெடா அரசின் கடைசி ராஜாவான தர்பார் ராஜா II என்பவரை மதம் மாற்றம் செய்தார். அந்த அரசருக்கு முஷபர் ஷா (Mudzaffar Shah I) என்று பெயர் மாற்றம் கண்டது.
அடுத்து சீனாவின் மிங் அரசக் கையேடுகள் கொடுக்கும் கெடா அரசர்களின் பட்டியல் உள்ளது. இதை அடுத்த கட்டுரையில் ஒப்பீடு செய்து பார்ப்போம்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.01.2021
சான்றுகள்:
1. Around 170 CE a group of native refugees of Hindu faith arrived at Kedah - https://www.revolvy.com/main/index.php?s=Kedah%20Sultanate&item_type=topic&sr=100
2. The Hindu dynasty ended when the ninth king Durbaraja II, styled "Phra Ong Mahawangsa" by the Siamese, converted to Islam in 1136 - https://www.revolvy.com/main/index.php?s=Kedah%20Sultanate&item_type=topic&sr=100
3. https://web.archive.org/web/20060511194957/http://uqconnect.net/~zzhsoszy/states/malaysia/kedah.html
4. R. O. Winstedt (December 1938). "The Kedah Annals". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. 16 (2 (131)): 31–35. JSTOR 41559921.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக