17 ஜனவரி 2021

மலாக்கா தோட்டத்து மகராசா கதை

1950-ஆம் ஆண்டுகளில் மலாக்காவில் நிறையவே ரப்பர் தோட்டங்கள். அந்தி மந்தாரப் பூக்களாய் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாய் அவதானித்த அவசர அட்சய பாத்திரங்கள். ஆயிரக் கணக்கான தமிழர்களுக்குப் படி அளந்த பத்திரை மாத்துக் கித்தா தோப்புகள்.

அவற்றில் காடிங் தோட்டம் என்கிற ஒரு கித்தா காடு. டுரியான் துங்கல் காட்டுக்குள் மறைந்து இருந்தது. ஒரு இருபது முப்பது குடும்பங்கள். குண்டும் குழியுமாய் செம்மண் சடக்குச் சாலை. அதில் பன்னிரண்டாம் கட்டை பத்துமலை மேடு. உச்சி வெயிலில் மண்டை பிளக்கும் மகா மேடு.

அப்புறம் அந்தப் பன்னிரண்டாம் கட்டைப் பாதையில் ஒரு பாலைவன இறக்கம். அடுத்துவரும் அமேசான் அத்தாப்புகளின் பச்சைப் பாசா காடுகள். அதற்கு அடுத்து சின்னதாய் ஒரு ரத்து கோயில்.

தோட்டத்துக்குள் நுழைந்ததும் முதலில் தெரிவது ராமன் தோட்டம். கல்யாணம் ஆகாமலேயே கல்யாண ராமனாய் வாழ்ந்த மறைந்தவரின் தோட்டம். எங்கே இருந்து வந்தார். எப்படி வந்தார் என்று யாருக்கும் தெரியாது. தோட்டத்தில் போஸ்ட்மேன் வேலை.

காய்ந்து போன கருவாட்டைத் தொங்க விட்டு; அதைப் பார்த்துப் பார்த்தே பல பத்து ஏக்கர் நிலங்களை வாங்கி; அழகு பார்த்த மலாக்கா மாமனிதர்களின் பட்டியலில் இவரையும் சேர்ப்பார்கள். இவர் மறைந்த பிறகு இவருடைய தோட்டத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டதாகக் கேள்வி.

கொஞ்சம் தள்ளிப் போனால் ஆக்கேட் வங்சா கடை. அப்புறம் வரிசை வரிசையாய்த் தகரக் கொட்டாய்கள். மன்னிக்கவும். அந்தக் காலத்து பத்மினி சாவித்திரிகளும்; சிவாஜி ஜெமினி கணேசன்களும்; மன்மத ராசாக்களும் வாழ்ந்த அரண்மனை தகர டப்பா வீடுகள். அந்த மாதிரி வீடுகளில் தான் நாங்களும் வாழ்ந்து சரித்திரம் படைத்து விட்டோம்.

அப்பழுக்கற்ற வெள்ளந்திகள் கவடு சூது இல்லாமல் வாழ்ந்த காலக் கட்டம். அப்படி ஒரு தோட்டம். வாயில்லா விழுமியங்களின் மறுபக்கம் என்று வாய்விட்டுச் சொல்லலாம்.

காடிங் தோட்டத்தில் வாழ்ந்த பாட்டிமார்கள் ஒரு ராஜா கதை சொல்வார்கள். இன்றும் நினைவில் ஊஞ்சலாடும் கித்தா காட்டுக் கதை. தோட்டப்புறக் கூண்டுக்குள் அடைபட்டு வாழ்ந்த காலத்தில் ராஜா கதைகள் ரொம்பவும் பிரபலம்.

அவற்றில் இந்த ராஜா கதை இருக்கிறதே; இது மிக மிகப் பிரபலம். மகராசா பரமேசா எனும் கதைதான் அந்தப் பிரபலமான ராசா கதை.

ராஜா கதை என்றதும் பலருக்கு ராஜா தேசிங்கு கதை நினைவிற்கு வரலாம். ராஜா விக்கிரமாதித்தன் கதை நினைவிற்கு வரலாம். நளன் தமயந்தி கதை நினைவுக்கு வரலாம். கட்ட பொம்மன் கதையும் நினைவுக்கு வரலாம்.

ஆனால் மலாக்காவில் தனித்து ஒரு கதை தலைநிமிர்ந்து நின்றது. அதுதான் பரமேஸ்வரா கதை. இப்போது அந்தக் கதையை அசை போட்டுப் பார்க்கலாம். மற்றபடி அசலாகப் பார்க்க முடியவில்லை.

பொழுது சாய்ந்தால் போதும். பாட்டிமார்களைச் சுற்றி ஒரு பெரிய வாண்டுப் பட்டாளம் கூடி நிற்கும். ஒரு பக்கம் நண்டு சுண்டுகளுடன் ஒரு பாட்டி ஒரு கதை சொல்வார். இன்னொரு பக்கம் சேட்டை பண்ணும் சுட்டிகளுடன் இன்னொரு பாட்டி இன்னொரு கதை சொல்வார்.

குறைந்தது இரண்டு மூன்று பாட்டிமார்களின் கதா காலட்சேபம் ஒரே சமயத்தில் நடந்து கொண்டு இருக்கும். எந்தக் கதைப் பிடிக்குமோ அதில் போய் ஒட்டிக் கொள்ளலாம். ரொம்பவும் தாமதமாகப் போனால் கதை பிடிபடாது.

முன்பு காலத்தில் பத்தாங் மலாக்கா நகரில் புறப்பட்ட இரயில் தம்பின் நிலையத்தில் தான் போய் நிற்கும். இடையில் நிற்காது. அந்த மாதிரி தான் ஒரு பாட்டி ஒரு கதை சொன்னால் எங்கேயும் நிறுத்த மாட்டார்.

இன்னும் ஒரு விசயம். பரமேசுவரா கதையைக் கேட்க இரண்டு மூன்று பேர் தான் இருப்போம். அதனால் கதை சொல்லும் பாட்டி எங்களுக்குப் புரிகிற மாதிரி ரொம்பவும் நிதானித்துச் சொல்லுவார்.

ஒன் மினிட் பிளீஸ். பாட்டி மொழியில் கதையை எழுத முடியாது. நம்ப பாவனையிலேயே சொல்லி விடுகிறேன். அப்போதுதான் உங்களுக்கும் புரியும்.

ரொம்ப நாளைக்கு முன்னால் மலாக்கா பெர்த்தாம் நதிக் கரையோரத்தில் நடந்த ஒரு கதை. ஓர் ஒண்டிக் கட்டை காட்டுச் சருகு மான். அதை எதிர்த்து நாலைந்து வேட்டை நாய்கள். அங்கே ஒரு குட்டிச் சண்டை.

அதில் ஒரு நாய் மல்லாக்காக ஆற்றில் போய் விழுந்தது. சகுனம் நல்லா இருக்கிறது என்று சொல்லி அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வைத்தார் ஒரு ராஜா. அந்த ராஜா தான் பரமேசா என்கிற ராஜா. பரமேஸ்வரா தான் பரமேசா.

இந்தக் கதை முன்பு காலத்தில் ஆயாக் கொட்டகை பிள்ளைகளுக்குத் தெரிந்த விசயம். இப்போது பல்கலைக்கழகத்தில் படிக்கிற பிள்ளைகளுக்குத் தெரியுமா என்பது பில்லியன் டாலர் கேள்வி. எல்லாம் வரலாற்றுக் கோளாறுகள் தான்.

ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத் தூக்கி மந்தையில் போடுவது பழைய கதை. இப்போது அப்படி எல்லாம் இல்லைங்க. ஆட்டைத் தூக்கி ஆற்றில் போட்டு; மாட்டைத் தூக்கிக் குளத்தில் போட்டு; மனுசனைத் தூக்கி எருமை மாட்டில் கட்டி மேய்க்கிற கதை தான்.

என்ன செய்வது. ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி, அதிரசத்தையும் அப்பம் பாலையும் அபேஸ் பண்ணிட்டாங்க. கோளாறு பட்டியல் கொஞ்ச நஞ்சம் அல்ல. கோலாலம்பூர் வரை நீண்டுக் கொண்டு போகும்.  

மல்லாக்கா என்ற சொல்லில் இருந்து மலாக்கா வந்ததா. அல்லது மலாக்காவில் இருந்து மல்லாக்கா வந்ததா தெரியவில்லை. அதை மல்லாக்கா படுத்துக் கொண்டு தான் ஆராய்ச்சி பண்ண வேண்டும். குப்புறப் படுத்துக் கொண்டு ஆராய்ச்சி பண்ணினால் அப்புறம் கிணற்றுத் தவளை மாதிரி தான் யோசிக்க வேண்டி வரும்.

அப்படித் தானே சிலர் யோசித்து வரலாற்றுப் பாடப் புத்தக்ங்களை எல்லாம் எழுதிச் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்கள். எங்கே என்று கேட்க வேண்டாம். அப்புறம் வில்லங்கம் விபரிதமாய் கதகளி ஆடிவிடும். வேண்டாமே.

சரி. மீண்டும் காடிங் தோட்டத்திற்கே போவோம். ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை. பரமேஸ்வராவைப் பற்றி கதை கதையாகச் சொல்வார்கள். பொழுது சாய்ந்தால் போதும். பாட்டிமார்களைச் சுற்றி பொடிப் பயல்களின் பட்டாளம் வரிசை கட்டி நிற்கும்.

மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைக்க ஓர் ஆள். பாட்டிகளுக்கு வெற்றிலைப் பாக்கை இடித்துக் கொடுக்க ஓர் ஆள். காலைப் பிடித்துவிட ஓர் ஆள். விரல்களில் முட்டி முறிக்க ஓர் ஆள். முதுகைச் சொறிந்துவிட ஓர் ஆள். நடுத்தர வயது பெண்களும் சேர்ந்து கொள்வார்கள்.

சமயங்களில் பாட்டிமார்களின் கதைகளில் சித்த மருத்துவப் பாடல்கள் சுதி சேர்ந்து, களை கட்டி நிற்கும். அப்போதைக்கு அது பாட்டிமார்களின் அல்லி தர்பார் என்றுகூட சொல்லலாம்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் எவரும் தாத்தாமார்களைச் சீண்ட மாட்டார்கள். பாவம் தாத்தாமார்கள் என்று சொல்லலாம்.

அவர்களின் தாதா வேலைகள் அப்போதைக்கு கொஞ்சம்கூட எடுபடாது. எங்கேயாவது சுருண்டு போய்க் கிடப்பார்கள்.

ஒரு பாட்டி பரமேசா கதையை இப்படி ஆரம்பிப்பார்.

தண்ணி குடிக்க நாலு நாய் பாய்ந்து போச்சாம்

மானு குட்டி சேத்து ஆத்துல பயந்து போச்சாம்

விரட்டுனா மானு குட்டி கரை பக்கம் ஓடுச்சாம்

நவர முடியாம மொறைச்சு பார்த்துச்சாம்

சண்டை வந்து நாயி மல்லாக்கா விழுந்துச்சாம்

சகுனம் பார்த்தா நல்லா இருந்துச்சாம்

மலாக்கானு பரமேசா பேரு வச்சாராம்

இப்படித்தான் ஒரு சின்னப் பாடலாக பரமேசா கதை ஆரம்பமாகும். அப்புறம் அந்தக் கதை ஒரு மாதத்திற்கு இழுத்துக் கொண்டு போகும். தோட்டத்து மக்களும் அசர மாட்டார்கள். சாப்பிட்டச் சோறு செரிக்கும் வரையில் உட்கார்ந்து கதை கேட்பார்கள்.

இந்த மாதிரி கதையைக் கேட்டு நானும் எத்தனையோ நாட்கள் வாயைப் பிளந்து கொண்டு தூங்கிப் போய் இருக்கிறேன். இராத்திரி பத்து மணிக்கு கதையில் ஒரு பாகம் முடியும்.

அப்புறம் ’வாடா மாச்சாப்பு’ என்று என்னை இழுத்துக் கொண்டு போவார்கள். நினைத்துப் பார்க்கிறேன். தோட்டத்தில் என்னை மாச்சாப்பு என்று தான் அழைப்பார்கள்.

மாச்சாப்பு ஆண்டவருக்கு வேண்டிக் கொண்டு நான் பிறந்ததால் எனக்கு மாச்சாப்பு ஆண்டவரின் பெயரையே வைத்து இருக்கிறார்கள். பிறந்த சூராவில் முத்துக்கிருஷ்ணன். தாத்தாவின் பெரை வைத்து இருக்கிறார்கள்.

அந்தக் கதைக் காலம் எல்லாம் தோட்டத்து மக்கள் வெள்ளந்திகளாக; பிள்ளைப் பூச்சிகளாக வாழ்ந்த காலம். அதுவே கரைந்து போன ஒரு கனாக்காலம். அந்த மாதிரி தோட்டத்தில் தான் நானும் பிறந்து வளர்ந்தேன்.

ஆடு மேய்த்து கோழி மேய்த்து; ஆற்று மீனைச் சுட்டுத் தின்னு; மரவள்ளிக் கிழங்கில் வயிற்றை வளர்த்து; மண் சடக்கில் சுருண்டு விழுந்து; மழையில் நனைந்து வெயிலில் கரைந்து; தமிழ்ப்பள்ளி ஆங்கிலப் பள்ளி காலேஜ் கல்லூரி பல்கலைக்கழகம் என்று போய் எல்லாத்தையும் பார்த்தாச்சு. பேரன் பேத்திகளும் எடுத்தாச்சு.

அந்த மாதிரியான காலங்கள் மறுபடியும் வருமா? நோ சான்ஸ். வரவே வராதுங்க. நெஞ்சு லேசாக அடைக்கிற மாதிரி இருக்கிறது. கற்பனை செய்தே காலத்தை ஓட்ட வேண்டியது தான். வேறு என்ன செய்வது. சும்மா ’பீளிங்’கிலேயே வாழ வேண்டியது தான்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.01.2021

 

 

2 கருத்துகள்:

  1. சிறப்பு பதிவு, உங்கள் எழுத்து பணியில் படிக்க நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு பதிவு, உங்கள் எழுத்து பணியில் படிக்க நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு