06 ஜனவரி 2021

மஜபாகித் மாட்சி மயில் மகாராணி சுகிதா

Majapahit Maharani Suhita

இந்தோனேசியாவை ஆட்சி செய்த பேரரசுகளில் இரு பேரரசுகள் மிக மிகப் புகழ்ப் பெற்றவை. முதலாவது ஸ்ரீ விஜய பேரரசு; இரண்டாவது மஜபாகித் பேரரசு. இவற்றுள் மஜபாகித் பேரரசு 1293–ஆம் ஆண்டில் இருந்து 1517-ஆம் ஆண்டு வரை இந்தோனேசியா சுமத்திராவை ஆட்சி செய்த பேரரசு ஆகும்.



பதின்மூன்று அரசர்கள் மஜபாகித் பேரரசை ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களில் இருவர் பெண்கள்.

1. மகாராணியார் திரிபுவனா விஜயதுங்காதேவி (Tribhuwana Wijayatunggadewi) - ஆட்சிக்காலம் (1328 – 1350)

2. மகாராணியார் சுகிதா (Suhita எனும் Soheeta) - ஆட்சிக்காலம் (1429 – 1447)

மகாராணியார் சுகிதா என்பவர் மஜபாகித் அரசர்களில் ஆறாவதாக வருகிறார். இவர் மஜபாகித் அரசர் விக்ரமவரதனா (Wikramawardhana) என்பவரின் மகளாவார். விக்ரமவரதனா என்பவர் மஜபாகித் அரசர்களில் ஐந்தாவது அரசர்.


மகாராணியார் சுகிதாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் இந்தோனேசியாவை ஆட்சி செய்த மற்ற பெண்கள் யார் யார் என்பதைத் தெரிந்து கொள்வோம். அவர்கள் அனைவருமே மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய மாபெரும் பெண்ணரசிகள். மகா பேரரசியார்கள்.

பேரரசியார் என்பது வேறு. மகா பேரரசியார் என்பது வேறு. ஒரு பெண்ணின் கணவர் பேரரசராக இருந்தால் அவரின் துணைவியாரைப் பேரரசியார் என்று அழைக்கலாம்.

அதே பெண்மணி கணவர் துணை இல்லாமல் தன்னிச்சையாக ஒரு நாட்டை ஆட்சி செய்தார் என்றால் அவரை மகா பேரரசியார் என்று அழைக்க வேண்டும்.



இந்தோனேசியாவில் இந்து மதத்தைப் பின்னணியாகக் கொண்ட மகா பேரரசியார்களின் பட்டியல் வருகிறது. கவனியுங்கள்.

1. மகாராணியார் சீமா சத்தியா (Queen Shima Satya); கலிங்கப் பேரரசு (கி.பி. 674)

2. இசையானா துங்கா விஜயா (Isyana Tunggawijaya); மேடாங் பேரரசு (கி.பி. 947)

3. ஆர்ஜெயா ஜெயகீர்த்தனா (Arjaya jayaketana); பாலி பேரரசு (கி.பி. 1200)

4. திரிபுவன விஜயதுங்கா தேவி (Tribhuwana Wijayatunggadewi); மஜபாகித் பேரரசு (கி.பி. 1328 - 1350)

5. சுகித்தா (Suhita); மஜபாகித் பேரரசு (கி.பி. 1429 - 1447)

6. மகாராணி ரத்னா காஞ்சனா (Queen Kalinyamat); கல்யாணமதா சிற்றரசு (கி.பி. 1549) 



இந்தக் கட்டத்தில் இந்தோனேசியாவில் ஆச்சே பேரரசை மறந்துவிடக் கூடாது. சுமத்திரா தீவில் ஆச்சே பேரரசு என்பது நீண்ட ஒரு வரலாற்றைக் கொண்ட பேரரசு.

முன்பு காலத்தில் ஆச்சே பேரரசு (Acheh) சின்ன அரசு தான். சிற்றரசாக இருந்து பேரரசாக மாறிய ஓர் அரசு.

இந்த ஆச்சேயில் தான் பெரிய பெரிய வரலாறுகள் எல்லாம் புதைந்து கிடக்கின்றன. இந்தோனேசியா வரலாற்றில் ஆச்சே வரலாறு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு முதன்மை வகிக்கிறது.

பாசாய் (Pasai) நாட்டை ரதி நரசியா (Ratu Nahrasyiyah) எனும் மகாராணியார் 28 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறார். 1400-ஆம் ஆண்டில் இருந்து 1428-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து இருக்கிறார். இவரைப் பற்றி பின்னர் தெரிந்து கொள்வோம்.



இந்தோனேசியாவை ஆட்சி செய்த இஸ்லாமிய மகாராணியார்கள் பட்டியல் வருகிறது. அதையும் கவனியுங்கள்.

1. நூர் இலா (Sultanah Ratu Nur Ilah); (கி.பி. 1346 - 1383)

2. ரதி நரசியா (Nahrasiyah Rawangsa Khadiyu); (கி.பி. 1405 - 1428)

3. இனயாட் ஜக்கியாதுடின் ஷா (Inayat Zakiatuddin Syah); (கி.பி. 1678 - 1688)

4. நூருல் ஆலாம் நகியாதுடின் ஷா (Nurul Alam Naqiatuddin Syah); (கி.பி. 1675 - 1678)

5. தாஜ் உல் ஆலாம் (Taj ul-Alam); (கி.பி. 1641 - 1675) 

6. ஜைனுதீன் கமலதா ஷா; Zainatuddin Kamalat Syah (கி.பி. 1688 - 1699) 



திரிபுவனா விஜயதுங்காதேவி (Tribhuwana Wijayatunggadewi)  மகாராணியாருக்குப் பின்னர் 100 ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர் மகாராணியார் சுகிதா.

1. மகாராணியார் திரிபுவனா விஜயதுங்காதேவியின் ஆட்சிக்காலம் (1328 – 1350)

2. மகாராணியார் சுகிதா (Suhita எனும் Soheeta) - ஆட்சிக்காலம் (1429 – 1447)



மஜபாகித் பேரரசிற்கு 300 கி.மீ. தொலைவில் சிங்கசாரி பேரரசு (Singhasari Kingdom) இருந்தது. அந்தப் பேரரசின் கடைசி மன்னர் ஸ்ரீ கீர்த்தநகரா (1268-1292). இவருடைய மகளின் பெயர் ஸ்ரீ காயத்ரி ராஜபத்தினி (Sri Gayatri Rajapatni). இவரைத் தான் ராடன் விஜயா மணந்தார்.

இவர்களுக்குத் திரிபுவனா துங்காதேவி (Tribuana Tunggadewi) எனும் மகள் பிறந்தார். இந்தத் திரிபுவனா துங்காதேவி தான் மஜபாகித் பேரரசின் மூன்றாவது ஆட்சியாளர் (1326-1350). இவரின் மற்றொரு பெயர் திரிபுவனா துங்காதேவி ஜெயவிஷ்ணு வரதனி (Tribhuwannottunggadewi Jayawishnuwardhani). இன்னொரு பெயரும் உள்ளது. தியா கீதர்ஜா (Dyah Gitarja).

மஜபாகித் பேரரசை மாபெரும் பேரரரசாக மாற்றி அமைத்தவர் மகாராணியார் திரிபுவனா துங்காதேவி. மஜபாகித் பேரரசை இவர் தனி ஒருவராக ஆட்சி செய்ததால் தான் இவரை மகாராணியார் என்று அழைக்கிறோம்.

Raden Wijaya, the first king (1293-1309) of Majapahit, was married to Sri Gayatri Rajapatni, a daughter of Sri Kertanegara, the last king (1268-1292) of Singhasari Kingdom, and had a daughter, Tribuana Tunggadewi, the third ruler (1326-1350) of Majapahit.



இவர் மஜபாகித்தை பேரரசைச் சேர்ந்த இளவரசர் கீர்த்தவரதனா (Kertawardana) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

திரிபுவனா துங்காதேவி - கீர்த்தவரதனா தம்பதிகளுக்கு ஒரு மகள் பிறந்தார். அவருடைய பெயர் ஈஸ்வரி (Iswari). இந்த ஈஸ்வரி மற்றோர் மஜபாகித் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார். அந்த இளவரசரின் பெயர் சிங்கவரதனா (Singawardana).

ஈஸ்வரி - சிங்கவரதனா தம்பதியினருக்கு ஒரு மகள் பிறந்தார். அவருடைய பெயர் சரவர்தானி (Sarawardani). இவர் ராணாமங்களா (Ranamenggala) எனும் மஜபாகித் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவருடைய பெயர் பரமேஸ்வரா. இந்தப் பரமேஸ்வராதான் மலாக்காவைத் தோற்றுவித்த கதாநாயகர்.

அதாவது மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த மகாராணியார் திரிபுவனா துங்காதேவியின் கொள்ளுப் பேரன் தான் பரமேஸ்வரா (great-grandson of Empress Tribhuwana Wijaya Tunggadewi)



பரமேஸ்வராவின் கொள்ளுத் தாத்தா தான் நீல உத்தமன். சிங்கப்பூரை உருவாக்கியவர். சிங்கப்பூருக்குச் சிங்கம் ஊர் என்று பெயர் வைத்தவர். சரி.

மகாராணியார் சுகிதாவைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

1404-ஆம் ஆண்டில் இருந்து 1406-ஆம் ஆண்டு வரை மஜபாகித்தில் ஓர் உள்நாட்டுப் போர் நடந்தது. அதன் பெயர் பாரிகிரேக் போர் (Paregreg war). 

மஜபாகித்தை ஆட்சி செய்து கொண்டு இருந்த மாமன்னர் விக்ரமவரதனா அவர்களுக்கும் பெரு வீரபூமி (Bhre Wirabhumi) என்பவருக்கும் இடையே நடந்த போர். அதில் பெரு வீரபூமி காலமானார்.

காலமான பெருவீரபூமிக்கு ஒரு மகள் இருந்தார். அவருடைய பெயர் பெரு தாகா (Bhre Daha). இவரை மாமன்னர் விக்ரமவரதனா திருமணம் செய்து கொண்டார்.



இவருக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருந்தார். அவருடைய பெயர் குஷ்மாவர்த்தினி (Kusumawardhani). அதனால் மாமன்னர் விக்ரமவரதனாவுக்கு பெரு தாகா ஒரு வைப்பாட்டி எனும் தகுதியைப் பெற்றார்.

இந்தக் கட்டத்தில் சுகிதா வருகிறார். நன்றாகக் கவனியுங்கள்.

விக்ரமவரதனா - பெரு தாகா தம்பதியினருக்குப் பிறந்தவர் தான் மகாராணியார் சுகிதா. இவரின் அசல் பெயர் பிரபு ஸ்ரீ சுகிதா (Prabu Stri Suhita). இவருடைய தாயாரின் பெயர் சுரவர்த்தனி (Surawardhani). இவர் தன் கணவர் பெரு ஹியாங் பரமேஸ்வரா (Bhra Hyang Parameswara) என்பவருடன் இணைந்து ஆட்சி செய்தார்.

(Surawardhani alias Bhre Kahuripan, adik Wikramawardana. Ayahnya bernama Raden Sumirat yang menjadi Bhre Pandansalas, bergelar Ranamanggala.)

மலாக்கா பரமேஸ்வரா (Malacca Parameswara) என்பவர் வேறு. இந்த பெரு ஹியாங் பரமேஸ்வரா என்பவர் வேறு. அந்தக் காலத்து அரசுகளில் பரமேஸ்வரா எனும் பெயர் பலருக்கும் வைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் குழப்பம் வேண்டாமே.



சுகிதாவின் கணவர் பெரு ஹியாங் பரமேஸ்வராவின் மற்றொரு பெயர் ரத்னபங்கஜா.

மகாராணியார் ஸ்ரீ சுகிதாவின் ஆட்சியை மறுமலர்ச்சியான ஆட்சி என்று வர்ணிக்கிறார்கள். நுசாந்தாரா வட்டார நிலப் பகுதிகளில் பல அபிவிருத்தி திட்டங்களைக் கொண்டு வந்தார்.

பல்வேறு வழிபாட்டுத் தலங்களை உருவாக்கினார். புகழ்பெற்ற லாவு (Lawu) எரிமலையின் சரிவுகளில் கோயில்களையும் கட்டி இருக்கிறார். இவர் ஆட்சி ஏற்ற போது மஜபாகித் பேரரசில் பெரும் குழப்பங்கள்.

மஜபாகித் அரசிற்கு அருகாமையில் இருந்த பிலம்பாங்கான் அரசு (Blambangan) பெரும் தொல்லைகளைக் கொடுத்து வந்தது. அந்த அரசுடன் போர் செய்து வெற்றியும் பெற்றார். அத்துடன் உள்நாட்டில் அடிக்கடி ஏற்பட்டு வந்த குழப்பங்களையும் சமாளித்து ஆட்சி செய்தார்.



ஜாவாவில் ஒரு புராணக் கதை உள்ளது. அதன் பெயர் தாமார்வூலான் (Damarwulan). இப்போதுகூட வாயாங் கூலிட் எனும் பொம்மலாட்டக் கதையாக படைக்கப் படுகிறது. அந்தப் பொம்மலாட்டக் கதையில் பிரபு கென்யா (Prabu Kenya) எனும் கதாபாத்திரம் வருகிறது. அந்தக் கதாபாத்திரம் தான் மகாராணியார் சுகிதா.

மகாராணியார் சுகிதா மஜபாகித் பேரரசின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் முதல் வேலையாக என்ன செய்தார் தெரியுங்களா?

தன் தகப்பனாரைக் கொன்ற ராடன் காஜா (Raden Gajah) என்பவரைத் தேடிப் பிடித்து தூக்கிலிட்டது தான் அவர் செய்த முதல் வேலை. ராடன் காஜாவின் மற்றொரு பெயர் பர நரபதி (Bhra Narapati).

கிழக்கு ஜாவாவில் தூலுங்காங் மாவட்டம் (Jebuk, Kalangbret) ஜெபுக் எனும் இடத்தில் ஒரு கற்சிலையை 2010-ஆம் ஆண்டில் கண்டு எடுத்தார்கள். அந்தக் கற்சிலை மகாரணியார் சுகிதாவைச் சித்தரிக்கும் கற்சிலையாகும்.

காதுகளில் பதக்கங்கள்; கழுத்து அட்டிகை; கை வளையல்கள்; கால் கொலுசுகள்; பல்வேறு இடுப்பு அட்டிகை ஆபரணங்களை அணிந்து இருக்கும் கற்சிலை. பாரம்பரிய அரச உடை அணியப்பட்டு இருந்தன. அவருடைய வலது கரத்தில் தாமரை மொட்டு.



இந்தச் சிலை இப்போது இந்தோனேசியா தேசிய அரும் காட்சியகத்தில் (National Museum of Indon) பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சீனாவில் உள்ள பெய்ஜிங் அருங்காட்சியகத்தில் மஜபாகித் பற்றிய வரலாற்றுச் சுவடுகள் உள்ளன. அதில் சுகிதாவின் பெயர் சுகிந்தா (Su-king-ta) என்று சொல்லப்பட்டு உள்ளது.

1437-ஆம் ஆண்டு சுகிதாவின் கணவர் ரத்னபங்கஜா காலமானார். கணவர் இறந்து பத்து வருடங்கள் கழித்து 1447-ஆம் ஆண்டு சுகிதாவும் காலமானார். இவர்களுக்கு ஜாவா சிங்கஜெயா (Singhajaya) எனும் இடத்தில் சமாதிகள் எழுப்பப்பட்டு உள்ளன.

சுகிதாவுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் அவரின் ஒன்றுவிட்ட சகோதரனின் மகன் தியா கர்த்தவிஜயன் (Dyah Krtawijaya) என்பவரை மஜபாகித் அரசராக நியமித்துவிட்டு இறந்து போனார்.

மகாரணியார் சுகிதா அவர்கள் மஜபாகித்தை ஆட்சி செய்யும் போது மலாக்காவில் பர்மேஸ்வராவின் மகன் மெகாட் இஸ்கந்தார் ஷா (Megat Iskandar Shah) ஆட்சி செய்து கொண்டு இருந்தார்.

இப்போதைய காலத்தில் தான் பெண்கள் பிரதமர்களாகவும் மகாராணிகளாகவும் ஆட்சி புரிகிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. 600 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பெண்கள் ஆட்சி பீடங்களில் அழகு செய்து இருக்கிறார்கள். போற்றுதலுக்கு உரிய செய்தி. பெருமைக்கு உரிய செய்தி.

சான்றுகள்:

1. Cœdès, George (1968). Vella, Walter F. (ed.). The Indianized States of Southeast Asia. Translated by Brown Cowing, Sue. Honolulu: University of Hawaii Press. p. 241.

2. Ricklefs, Merle Calvin (1993). A history of modern Indonesia since c. 1300 (2nd ed.). Stanford University Press / Macmillans.

3. Jan Fontein, R. Soekmono, and Satyawati Suleiman. Ancient Indonesian Art of the Central and Eastern Javanese Periods, New York: Asia Society Inc., 1971, p. 146-147.

4. https://www.newworldencyclopedia.org/entry/Malacca_Sultanate

 


1 கருத்து: