05 ஏப்ரல் 2021

தீர்ப்பும் தீர்வும் மக்கள் கையில்

இன்று உலகத்தில் நடக்கும் அத்தனை அநீதிகளுக்கும் அநியாயங்களுக்கும் மதவெறியே மூல காரணம். இதைப் பலரும் அறிவார்கள். ஆக எந்த ஒரு நாட்டில் மதம் பெரிதாகப் பேசப் படுகிறதோ; அன்றே அந்த நாட்டின் தலைவிதியும் வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது. இது அரசாண்மைக் கலைத் தத்துவங்களில் ஒன்றாகும்.

மலேசியா நல்ல நாடு. சுபிட்சம் நிறைந்த பூமி. புண்ணிய பூமி. எல்லா வளங்களையும் பெற்ற வற்றாத பூமி. ஆனால் அரசியல் அல்பத்தால்; இன வெறியால்; மத மயக்கத்தால்; அந்தப் புண்ணிய பூமியின் அற்புதங்களைச் சீரழித்துச் சின்னா பின்னமாக்கி வருகிறார்கள்.

முந்தைய அரசாங்கத்தின் மிகப் பெரிய ஊழல் நடவடிக்கைகளால் வெறுப்பு அடைந்த மக்கள் வேறோர் அரசாங்கத்தை மாற்றி அமைத்தார்கள்.

அப்படி வந்தர்களும் மக்கள் ஏற்படுத்திய புரட்சியைக் கொஞ்சம்கூட மதிக்காமல் கட்சிக்கு உள்ளேயே காலை வாரி விட்டுக் கொண்டார்கள். சேரக் கூடாத இடத்தில் சேர்ந்தார்கள். பதவிக்காகப் பல துரோகங்களைச் செய்தார்கள். அது அவர்களின் கையாலாகாத் தனங்கள்.

ஓட்டுப் போட்ட மக்கள் பிரதிநிதிகளாகப் பிரகடனம் செய்யப் பட்டவர்களின் அஜாக்கிரதையால், அலட்சியத்தால், அசட்டையால் பின் வாசல் வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களும் பல குளறுபடிகளுக்கு இடையில் ஒரு வருடத்தைக் கடந்து வந்து விட்டார்கள்.

எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற நினைப்பில்; பதவிக்கு வருகிறவர்களிடம் நாம் எந்த எதிர்பார்ப்பையும் எதிர்பார்க்கக் கூடாது. அதே சமயத்தில் இருபது வருடங்களுக்கு முன்னர் மலேசிய இந்திய மக்களின் கொஞ்ச நஞ்ச சொத்து உடைமைகள் பறிபோனதை மறக்க இயலுமா. காலத்தின் கோலம்.

இந்த அரசியல் சித்து விளையாட்டில் ம.இ.கா. மட்டும் நம் இந்திய மக்களின் நலங்களைக் காக்கும் என்கிற கனவு எல்லாம் காணக் கூடாது. இயலாத காரியம்.

ஒரு தரமான கொள்கை இல்லாத அரசியல்; ஒரு தார்மீகக் கோட்பாடு இல்லாத அரசாங்கம்; எந்த ஒரு நன்மையையும் எந்த ஒரு நலத்தையும் பொதுமக்களுக்குப் பெற்றுத் தரப் போவது இல்லை.

நாட்டின் பெரும்பாலான கருவூலத்தைக் கொள்ளை அடித்தவர்களுக்குச் சட்டம் தண்டனையைக் கொடுத்தது. இருந்தாலும் இன்னமும் அவர்களும் சுதந்திரமாக, சுகமாக வெளியே சுற்றி வருகிறார்கள்.

அதே சமயம் மூக்குக்கு கீழே முகக் கவசத்தை இறக்கி விட்டால் அதற்கு அபதாரமாக ஆயிரம், பத்தாயிரம் என்று எளிய மக்களிடம் பிடுங்கிக் கொள்கிறார்கள்.

பொது மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தான், இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் அவ்வப்போது மாற்றி அமைக்கப் படுகின்றன. தவிர அதிகாரத்தில் உள்ளவர்களுக்காக அல்ல.

எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று நம்மவர்களைப் பற்றிக் கணித்து வைத்து இருக்கிறார்கள். ஏமாந்த சோணகிரிகள் நம்மில் இருக்கும் வரை இனிப்பு என்ன... தேனாறும், பாலாறும் பாசாவில் ஓடுகிறது என்று பாட்சா கட்டுவார்கள். அதையும் நம்பி நம்ம பயப் பிள்ளைகள் பாத்திரம் ஏந்திப் படை எடுப்பார்கள்.

தன்மானம் தன்னில் உணர்த்தாத வரை தமிழன் இந்த நாட்டில் தலை எடுப்பது எங்கணம்?

பயப்படாதீர்கள்... பிரதமர் தந்த இனிப்பான செய்தியால் மயக்கம் எல்லாம் வர வாய்ப்பு இல்லை. தேர்தல் முடிந்ததும் அவர் செய்யும் அதிரடியில் தான் நம் சமூகத்திற்குப் பெரும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

யானையைக் கண்டால் ஆயிரம் அடி நகர்ந்து விட வேண்டும். குதிரையைக் கண்டால் நூறு அடி விலகிவிட வேண்டும். நம்பிக்கைத் துரோகிகளைக் கண்டால் எப்போதுமே எட்டி ஒதுங்கிப் போய் உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.

அதிலும் இந்த அரசியல்வாதிகளின் வாய்ப் பந்தல்களையும், வஞ்சனை எண்ணத்தையும் வேரோடு அறுத்துச் சாய்க்கிற அறிவு வேண்டும்.

வாழைப்பழத் தோல்களாக; சோளக் கதிரின் சருகுகளாக; தேவையற்றக் கழிவாக; இந்த நாட்டுத் தமிழர்களை எண்ணி எள்ளி நகையாடும் இந்த நாட்டு அதிகார வர்க்கத்தை நினைத்தால் குமட்டல் வருகிறது.

பிரிட்டிஷ் காலனித்துவத்தில் தென்னிந்தியத் தமிழர்களை இங்கு அழைத்து வந்து அவர்களிடம் பெற வேண்டியதை எல்லாம் பெற்று விட்டார்கள். உறிஞ்ச வேண்டியதை எல்லாம் உறிஞ்சி விட்டார்கள்.

மலாயாவைத் தங்களின் உழைப்பால், உதிரத்தால் உருமாற்றம் செய்து மலேசியாவாக இன்று மலர்ச்சிப் பாதையில் வலம் வருவதற்கு இன்று இந்த நாட்டில் இன்று குவிந்துக் கிடக்கும்... மியான்மர்காரர்களோ, இந்தோனேசியர்களோ, பாகிஸ்தானியர்களோ, பங்காளதேசிகளோ அல்ல.

சத்தியமாக எம் தமிழர்கள் தாம். இந்த நாட்டின் வாரிசுகள் என்று வாய்ச் சவடால் பேசும் பூமி புத்ராக்களும் இல்லை. இது எல்லோருக்கும் தெரியும்.

ஓர் இனம் உழைக்கத் தயாராக இல்லாத போது மற்றோர் இனம் இந்த நாட்டில் எருமை மாடுகளாய், நேரம் காலம் இன்றி, சூடு சொரணை இல்லாமல் அனைத்தையும் பொறுத்து, அடக்கி, அடங்கி, உழைத்து... இன்று நன்றி கெட்ட அரசியல் வாதிகளின் பார்வையில் உதவாக் கரைகளாக உதாசீனப் படுத்தப் படுகிறோம்.

உலகில் மூத்த இனம் இன்று சொந்த நாடு இல்லாமல் உழைப்பைக் கொட்டிய நாட்டிலும் இன்றும் கொத்தடிமைகளாக நடத்தப்படும் கொடூரம்.

இந்த நாட்டில் ஏற்படுகின்றன அரசியல் மாற்றங்களிலும் நம் இந்தியர்களின் மனங்களையே சதா புண்படுத்தி புளங்காகிதம் அடையும் அவலம்.

இதற்கும் நாம் தான் காரணம். நம்மிடையே இல்லாத ஒற்றுமை. சொந்த இனத்தின் மீதே இல்லாத அக்கறை. கூடவே நமக்காக துணிந்து எதையும் கேட்டுப் பெற துணிவு இல்லாத நமது பிரதிநிதிகள்.

அப்படியே கேட்டது கிடைத்தாலும் அவற்றைச் சொந்தத்திற்கும், சுயத்திற்கும் அனுபவிக்கும் சுயநலச் சொருபர்கள்.

தேர்தல் வரும் பின்னே, இனிய செய்திகள் வரும் முன்னே. இந்நாட்டு இந்தியர்களை இளித்த வாயர்களாக நினைத்து, நினைத்து ஒவ்வொரு தேர்தல் வரும் போது எல்லாம் இந்த சோழியன் குடுமிகளின் சொகுசு வார்த்தைகளை, பசப்பு, பித்தலாட்டம் நிறைந்த உரைகளை உதிர்க்கும்... உச்சரிக்கும்.

இந்த நயவஞ்சக நாலாந்திர ஆலாபனைகளில் ஆட்கொள்ளாமல், அறிவு மயங்காமல் இந்த அறிவிப்புகளுக்குப் பின்னால் மறைந்து இருக்கும் மர்ம முடிச்சுகளை ஆழ்ந்த அறிவோடு அவிழ்த்து... இதுநாள் வரை இந்நாட்டில் நம்மவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அத்தனை துரோகத்தையும், திறந்த மனதோடு சீர்தூக்கிப் பார்த்து பாடம் கற்றுக் கொள்வோமாக.

இனிமேலாவது நாமும் சுயநலமாக வாழப் பழகுவோம். ஏகாந்த வார்த்தைகளில் ஏமாந்தது போதும். தேனான அறிவிப்புகளில் நம் தன்மானம் தேய்ந்தது போதும். இனியாவது சுயத்தோடு அறத்தோடும் நமக்கான வாழ்வாதாரத்தில் வாழ்வோம்.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இத்தகைய காரணங்களையும் சொல்லிக் கவலைப் பட்டுக் கொண்டு இருக்கப் போகிறோம். ஒரு ஹிண்ராப்பை உருவாக்கிய நம்மால் இந்த குள்ள நரிகளையும் அடையாளம் கண்டு அலர வைக்க முடியும். மனதில் தீரம் இருந்தால்...

இது ஓர் அட்வைசோ அறிவுறுத்தலோ இல்லை. நம் சமூகம் இந்த நாட்டில் நடத்தப் படும் ஆதங்கத்தின் வெளிப்பாடுதான். அதுவே என்னுடைய இந்தப் பதிவு.

கூடிய விரைவில் 15-ஆவது பொதுத் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். இதில் யார், யார் சந்தி சிரிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து இருந்து பார்க்கப் போகிறோம். எல்லாத் தீர்ப்பும் தீர்வும் மக்கள் கையில்.

(சத்யா ராமன்)
05.04.2021


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக