27 ஜூன் 2021

அக்கரைச் சீமையின் வீரமகள் அஞ்சலை குப்பன்

கரை ஒதுங்கும் சிப்பிகள். நுரை உமிழும் அலைகள். வானம் தொடும் நீலங்கள். அலை பாயும் நீர்க்குமிழிகள். கரை சேரும் கடல் பச்சைகள். வெள்ளி மீன்களின் நயனங்கள். அனைத்தும் ஒளிர்ந்து வளைந்து நீரிதழ் ஒளிப் பிளந்து மறையும் நளினங்கள். அனைத்தும் அழகின் ஆராதனைகள். அனைத்தும் அசத்தல் ஆழ்க்கடல் பிம்பங்கள். அவற்றின் மறுபக்கமே மொரிசியஸ் என்கிற பூலோகச் சொர்க்கம்.


அத்தனையும் இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்தவை. அத்தனையும் எழில்மிகுச் சொப்பனங்கள். மொரிசியஸ் தீவைப் படைத்து விட்ட இறைவன் அதே வடிவத்தில் சொர்க்கத்தையும் படைத்தான் என்று பெருமையாகச் சொல்வார்கள். உண்மைதான். அந்தப் பூலோகச் சொர்க்கத்தில் தான் அஞ்சலை குப்பன் எனும் ஒரு தமிழச்சியின் வீர வரலாறும் வருகிறது.

அஞ்சலை குப்பன்; மொரிசியஸ் நாட்டின் ஐரோப்பியக் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போராடியவர். மொரிசியஸ் நாட்டின் கரும்புத் தோட்ட முதலாளிகளுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியவர். மொரிசியஸ் நாட்டின் மனித உரிமைகளுக்காக தன் உயிரையே தியாகம் செய்தவர். 1940-ஆம் ஆண்டுகளில் மொரிசியஸ் நாட்டில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சி.

கப்பலேறி வந்தாலும் சூடு சொரணை உண்டு. கைப்பிடிச் சோற்றிலும் கைத்துளி உப்பு உண்டு. மனித உரிமைகள் மரித்துப் போகா என்று காலனித்துவத்தை எதிர்த்த ஒரு தமிழ்ப் பெண்மணியின் வீர வரலாறு வருகிறது. அவரைச் சற்று நேரம் நினைத்துப் பார்ப்போம். அஞ்சலைக்கு அஞ்சலி செலுத்துவோம்.


மொரிசியஸ் நாட்டில் இப்போது அந்தப் பெண்மணிக்காகச் சிலை வடித்து சீர் செய்கிறார்கள். அஞ்சல்தலை வெளியிட்டு பார்புகழப் பெருமை செய்கிறார்கள். ஒரு விளையாட்டு அரங்கத்தைக் கட்டி மரியாதை செய்கிறார்கள். யார் அந்த அஞ்சலை குப்பன். தொடர்ந்து படியுங்கள்.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அஞ்சலை குப்பன் எனும் பெயர் கொஞ்சமாய் மறைந்து மங்கலாகத் தெரியும். ஏன் தெரியுங்களா. இந்தத் தமிழச்சியின் தியாக உணர்வுகள் குறித்து உலகத் தமிழர்களுக்கு அதிகமாய்த் தெரியாது. ரொம்ப வேண்டாம். தெரியவே தெரியாது என்று சொன்னால் தான் சரியாக அமையும்.

இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு தமிழ்ப் பெண் வாழ்ந்து இருக்கிறார் என்று தெரியாமலேயே போய்விடும். அதனால் முன்கூட்டியே இப்படி ஒரு பதிவைப் பதிவு செய்துவி டுவது சாலச் சிறப்பு என்பது காலத்தின் கணிப்பு அல்ல. ஞாலத்தின் எதிர்பார்ப்பு.


மொரிசியஸ் நாட்டில் இரண்டு பெண்களுக்குச் சிலை வைத்து இருக்கிறார்கள். ஒன்று மொரிசியஸ் தலைநகரில் வைக்கப்பட்டு உள்ள இங்கிலாந்து நாட்டின் விக்டோரியா மகாராணியாரின் சிலை. உலகத்தின் கால பகுதிக்கு மகாராணியாராகக் கோலோச்சியவர்.

மற்றொன்று அஞ்சலை குப்பன் அவர்களின் சிலை. மொரிசியஸ் தலைநகரம் போர்ட் லூயிஸ் (Port Louis) அபரவாசி (Aapravasi Ghat) வளாகத்தில் அந்தச் சிலையை வைத்து இருக்கிறார்கள். வேறு சிலைகள் எதுவும் இல்லை. ஒரு தமிழ்ப் பெண்ணுக்குச் சிலை வைத்து இருக்கிறார்கள். பெருமையாக உள்ளது.

அஞ்சலை குப்பன், மொரிசியஸின் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். 1943 செப்டம்பர் 27-ஆம் தேதி ஆங்கிலேயர்களின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தவர். அப்போது அவர் நிறைமாதக் கர்ப்பிணி. அவருக்குத்தான் அங்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது. சரி.


மொரிசியஸ் (Mauritius) ஒரு சின்ன நாடு. ஆப்பிரிக்கக் கண்டத்திற்குத் தென் கிழக்கு கடலோரப் பகுதியில் ஒரு தீவு. மடகாஸ்கர் தீவுக்கு 900 கி.மீ. கிழக்கே அமைந்து உள்ளது.

இந்தத் தீவின் மொத்த நீளம் 65 கி.மீ. அகலம் 45 கி.மீ. அவ்வளவு தான். தீவின் மொத்த நிலப்பரப்பு 2045 சதுர கி.மீ. 2016 ஜூலை மாதக் கணக்குபடி மொரீஷியஸ் தீவின் மக்கள் தொகை 1,262,132.

மொரிசியஸ் நாட்டில் 68 விழுக்காடு இந்திய வம்சாவழியினர். 27 விழுக்காடு ஆப்பிரிக்க வம்சாவழியினர். 3 விழுக்காடு சீன வம்சாவழியினர். 2 விழுக்காடு பிரிட்டீஷ் வம்சாவழியினர். ஏறக்குறைய 75,000 தமிழர்கள் வாழ்கின்றனர்.  

தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள். அவர்களில் பலர் அமைச்சர்களாகவும் நீதிபதிகளாகவும் உயர்க் கல்விமான்களாகவும் கிராமத் தலைவர்களாகவும் சேவை செய்து இருக்கிறார்கள். 


இருப்பினும் இவர்களில் 54,000 பேர் தங்களின் தாய்மொழி தமிழ் என்கின்றனர். இவர்களில் 3,650 பேர் மட்டுமே தங்கள் வீட்டில் தமிழை அதிகமாகப் பேசுகின்றனர்.

1729-ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து தமிழர்கள் மொரிசியஸ் தீவிற்கு முதன்முதலாகக் கொண்டு செல்லப் பட்டார்கள். 1735-ஆம் ஆண்டு மறுபடியும் பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு செல்லப் பட்டார்கள். சின்னச் சின்னக் கப்பல்கள் கட்டுவது; கட்டடங்கள் கட்டுவது; அதற்காகத் தமிழர்கள் சென்றார்கள்.

அவர்கள் போர்ட் லூயி நகரப் பகுதியில் தங்க வைக்கப் பட்டார்கள். இவர்கள் இதற்கு முன் அங்கே வாழ்ந்த ஆப்பிரிக்க அடிமைகளைப் போல நடத்தப்படவில்லை. கொஞ்சம் நஞ்சமாய் மனித உரிமைகள்; அவற்றில் மிச்சம் மீதியாய் மனிதநேயப் பார்வைகள்.

அதற்கு முன்னர் அங்கே இருந்த ஆப்பிரிக்க அடிமைகள் ஆடுமாடுகளைப் போல நசுக்கி நார் நாராய்க் கிழிக்கப் பட்டார்கள். அதையும் நினைவில் கொள்வோம். தமிழர்களை மட்டும் பேசிவிட்டு ஆப்பிரிக்கர்களை ஒதுக்கிவிட முடியாது. 


அவர்களும் வாயில்லா இரண்டு கால் ஜீவன்களாய் வாழ்ந்தவர்கள் தானே. தோட்டத் தொழிலாளர்களில் தமிழர்களுடன், ஆப்பிரிக்கர் மற்றும் பீகாரிகளும் பெரும் அளவில் இருந்தனர்.

1829 முதல் 1830 வரை நூற்றுக் கணக்கான தமிழர்கள் சென்னை துறைமுகத்தில் இருந்து மொரிசியஸ் தீவிற்குக் குடியேற்றப் பட்டார்கள்.

தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள். இந்தத் தீவில் தான் அஞ்சலை குப்பன் உரிமைப் போராட்டங்கள் செய்து சாதனை படைத்து இருக்கிறார்.

நவீன மொரிசியஸின் வரலாற்றில் ஒரு முக்கிய மாந்தராகக் கருதப் படுகிறார். மொரிசியஸ் மக்களின் அடையாளச் சின்னமாகவும் மாறியுள்ளார்.

தன் பாட்டியின் மூலம் தொழிலாளர்களின் தொடர் இன்னல்களை அறிந்தவர். அவற்றுக்குத் தீர்வு காண போராட்டக் களத்தில் குதித்தவர். பெண்களின் விடுதலைக்காகவும் போராடியவர். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களை ஒன்று திரட்டி உரிமைப் போராட்டங்களை முன்வைத்தவர்.

அஞ்சலை குப்பன்; அஞ்சலை திவாகரன்; அஞ்சலாய் குப்பன் (Anjalay Tassalam Twakaran); 1911 பிப்ரவரி 17-ஆம் தேதி ரிவியர் டு ரெம்பார்ட் (Riviere du Rempart) எனும் மாவட்டத்தில் பிறந்தார்.

1943 செப்டம்பர் 13-ஆம் தேதி பெல்லி வியூ ஹாரேல் (Belle Vue Harel) எனும் சீனி தோட்டத்தில் ஒரு பெரிய வேலைநிறுத்தம் தொடங்கியது. அதில் அஞ்சலையும் கலந்து கொண்டார். 1943 செப்டம்பர் 27-ஆம் தேதி உயிர் துறந்தார்.

அந்த நாள் மொரீஷியஸ் மக்களால் பெரிதும் போற்றப்படும் நாள். தியாக நாளாகவும் கருதுகிறார்கள். அன்றைய நாளில் தான் பிரிட்டிஷ் காலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிராகவும்; தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராட்டம் உச்சம் அடைந்த நாளாகும்.

1943 செப்டம்பர் 13-ஆம் தேதி, பெல்லி வ்யூ ஹரேல் (Belle Vue Harel) சர்க்கரை தோட்டத்தில் ஒரு பெரிய வேலை நிறுத்தம் தொடங்கியது. அந்த வேலை நிறுத்தம் பல நாட்கள் நீடித்தது.

கரும்புத் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மனநிறைவான ஊதியம் கிடைக்கவில்லை. நல்ல சூழலில் தங்கும் வீட்டு வசதிகளும் இல்லை. இவற்றுக்காகத் தொழிலாளர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். நெருக்குதல்களையும் கொடுத்து வந்தார்கள்.

ஆங்கிலேய முதலாளிகள் கேட்பதாக இல்லை. தெரிந்த விசயமாச்சே. வரித்து விடு. பிரித்து விடு. தொலைத்து விடு எனும் சாணக்கியத்தில் ஆங்கிலேயர்கள் பேர் வாங்கியவர்கள். பரம்பரை புத்தி பாதியில் போய் விடுமா.

இந்தப் பக்கம் மலாயாவில் மட்டும் என்னவாம். 1900-ஆம் ஆண்டுகளில் அதே நிலைமை தானே. நாலு தகரத்தில் ஒரு டப்பாவைக் கட்டி வைத்து; அதற்கு கூலி லைன் என்று பெயர் வைத்து; 150 ஆண்டுகளாக மலாயாத் தமிழர்களின் உயிரை வாங்கவில்லையா. எல்லாம் ஒன்னுதான்.

பெல்லி வ்யூ ஹரேல் கரும்புத் தோட்டத்தில், அன்றைய தினம் தொழிலாளர்களை உளவு பார்க்க வந்த காவலர் ஒருவர் தாக்கப் பட்டார். அந்தக் காரணத்தின் அடிப்படையில் காவல்துறை கடும் நடவடிக்கையில் ஈடுபட்டது. துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

அந்தக் கலவரத்தில் நால்வர் உயிர் இழந்தார்கள். அஞ்சலை குப்பனைத் தவிர்த்து மேலும் மூவர். கிருஷ்ணசாமி முனுசாமி (Kistnasamy Mooneesamy); முனுசாமி முனியன் (Moonsamy Moonien; மருதை பானப்பன் (Marday Panapen). ஐந்து பேருக்கு படுகாயங்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பெல்லி வியூ ஹாரேல் படுகொலை (Belle Vue Harel massacre) என்று வர்ணிக்கிறார்கள்.

அஞ்சலை இறக்கும் போது அவருக்கு வயது 32. நிறைமாத கர்ப்பிணி. முதல் பிரசவத்திற்கு முன்னரே பலியானார்.

1968-ஆம் ஆண்டு மொரிசியஸ் சுதந்திரம் அடைந்தது. அதன் பின்னர், 1995-ஆம் ஆண்டில் அஞ்சலை குப்பனுக்குச் சிலை வைக்கப் பட்டது. அப்போதைய மொரிசியஸ் பிரதமர் சர் அனரூட் ஜுக்நாத் (Sir Anerood Jugnauth) திறப்பு விழா செய்தார். சிலயின் உயரம் ஒன்றரை மீட்டர். இரண்டரை டன் எடை. ஹரோல்ட் கெந்தில் (Harold Gentil) எனும் சிற்பி செதுக்கிய சிலை.

தவிர அஞ்சலை குப்பனுக்கு அவருடைய பெயரில் ஒரு விளையாட்டு அரங்கத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் அஞ்சலை விளையாட்டரங்கம் (Anjalay Stadium, Belle Vue, Mauritius).

அது மட்டும் அல்ல. 2000 டிசம்பர் 13-ஆம் தேதி அவருக்காக அஞ்சலை தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தார்கள்.

பள்ளிப் பாட நூலகளில் அவரின் வரலாறு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொரீஷியஸ் நாட்டில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கட்டாயம் அஞ்சலையின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் படிக்க வேண்டும்.

2015 மார்ச் 8-ஆம் தேதி அனைத்துலக மகளிர் தினம். அதை முன்னிட்டு மொரிசியப் பாலின சமத்துவம், குழந்தைகள் மேம்பாடு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரால் அதிகாரபூர்வமாக அஞ்சலி குப்பன் கெளரவிக்கப் பட்டார். அதன் பின்னர் பாட நூல்களிலும் அவருடைய வரலாறு இடம் பெற்றது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.06.2021

சான்றுகள்:

1. The historical significance of Anjalay Coopen - https://www.lexpress.mu/article/historical-significance-anjalay-coopen

2. Nouvelle d'Ananda Devi, La Mort d'Anjalay dans Au tour des femmes. Ed. B. Pyamootoo & R. Poonoosamy. Port-Louis:  Immedia, 1995: 67-74

3. Anjalay Coopen: Tamil Lady ‘Kabali’ of Mauritius - https://tamizharmedia.com/2019/06/30/anjalay-coopen-tamil-lady-kabali-of-mauritius/

பின்னூட்டங்கள்:

கரு.ராஜா, சுங்கை பூலோ: இந்த கட்டுரையைப் படித்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி. இந்த நாட்டிலிருந்து மொரிசியசுக்கு பல குப்பனும் சுப்பனும் சுற்றுலா போய் வந்து சுற்றுலா கட்டுரை எழுதியதை அடியேன் படித்து இருக்கிறேன்.

பத்திரிகை நிருபர்கள் கூட மொரிசியசுக்கு சுற்றுலா போய் வந்து பயணக் கட்டுரைகள் எழுதியதை நான் படித்து இருக்கிறேன். எந்தச் சுப்பனும் தமிழச்சி அஞ்சலை குப்பன் பற்றிய தகவலை எழுதவில்லை. ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.

ஒரு தமிழச்சியை இந்தக் கேடு கெட்ட வெள்ளைக்காரப் பசங்க அநியாயமா சுட்டு கொலை செய்து இருக்கிறார்கள்.

இப்படி எல்லாம் சுற்றுலா போகிற நம்ம தம்பிங்க மேலோட்டமாகச் சுற்றி திரிந்துவிட்டு வந்து இங்கே வந்ததும் ஆகா... ஓகோ... என்று எதையாவது எழுதி பத்திரிகையில் போட்டு விடவேண்டியது. இப்படிப்பட்ட விசயங்கள் இவர்கள் கண்களுக்கு தென்படதோ. கட்டுரை அருமை நண்பா. வாழ்த்துகள்.

பெருமாள், கோலாலம்பூர்: எனக்கு மொரிசியசில் ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஏற்கனவே இந்தக் கட்டுரை விபரங்களைச் சொல்லி அஞ்சலை குப்பன் பற்றியும் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

மலேசியா வரும் போது நான் தான் அவரை விமான நிலையம் வரை அனுப்பி வருவேன். அங்குள்ள எரிமலை வெடித்த லார்வா, இன்று வரை வைத்துள்ளதாகவும் கூறினார்.

அந்த தீவு, சுற்றுலா, மீன்பிடி தொழிலுக்கு பேர் பொனதாகவும் கூறியுள்ளார். சாலைகளில் போலீசாரைக் காண்பது அரிதாம். எல்லா வழி தடங்களிலும் CCTV மறைகாணி மயமாம். சம்மன் வீடு தேடி வருமாம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் >>>> கரு.ராஜா, சுங்கை பூலோ: நன்றிங்க ராஜா. சுற்றுலா போகும் பத்திரிகையாளர்கள் தமிழர்கள் சார்ந்த வரலாற்றை ஆழமாகப் பார்க்க வேண்டும். இலவசமாக டிக்கெட் கிடைத்தால் வரலாறும் மறக்கப் படலாம் என்பது பரவலான கருத்து.

பனையபுரம் அதியமான்: வியப்பாகவும், பிரமிப்பாகவும், பெருமையாகவும் உள்ளது.


தேவி சர: சிறப்பு 👍🏻👌👏👏👏

பெருமாள், கோலாலம்பூர்: அஞ்சலை குப்பன் வரலாறு மிகவும் சோகமானதாகவே வர்ணிக்கப் படுகிறது. ஏதோ ஒரு சினிமாவை பார்த்தது போல் உள்ளது.

இம்மாதிரியான வரலாற்றுகளை எதிர்கால வாரிசுகளுக்குச் சொல்லிச் செல்வோம் 😢 நன்றி தலைவரே.

டாக்டர் சுபாஷினி: அருமையான பதிவு. தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு இதழில் இந்தக் கட்டுரையை இணைத்துக் கொள்கிறோம். நன்றி.

தனசேகரன் தேவநாதன்: நமது தலைவரின்  கைவண்ணம் பார் எங்கும் பரவட்டும் 🌹🙏👌




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக