21 ஜூலை 2021

சிறகு ஒடிந்த சின்னத் தாமரை சுபாசிணி ஜெயரத்தினம்

பட்ட காலிலே படும். சுட்ட கையிலே சுடும். அந்த மாதிரி தான் பல நிகழ்ச்சிகள்  நடந்து உள்ளன. 2014 மார்ச் மாதம் 8-ஆம் தேதி, மலேசியாவின் எம்.எச். 370 விமானம் மாயமாய் மறைந்து போனது. அந்தச் சோகம் மறைவதற்குள் மற்றும் ஒரு சோகம்.

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்த மலேசியாவின் எம்.எச்.17 விமானம், 2014 ஜுலை 17-ஆம் தேதி, ரஷ்ய - உக்ரைன் எல்லைக்கு அருகில் சுட்டு வீழ்த்தப் பட்டது. நேற்றைய தினத்துடன் ஏழு ஆண்டுகள்.


விமானத்தில் பயணித்த 298 பேரும் பலியாகி விட்டனர். 283 பேர் பயணிகள். 15 பேர் விமானச் சிப்பந்திகள். 132 நாட்களில் மறுபடியும் ஒரு சோக நிகழ்ச்சி. அதுவே மலேசிய வரலாற்றில் மற்றும் ஒரு சோக வடு.

சுட்டு வீழ்த்தப்பட்ட எம்.எச்.17 மலேசிய விமானத்தில், மலேசியத் தமிழ் நடிகை சுபாசிணி ஜெயரத்தினம் (Shubashini Jeyaratnam) வயது 38, என்பவரும் தன் குடும்பத்துடன் பலியானார். அவரின் கணவரும், இரண்டு வயது மகள் கயிலாவும் அந்த விபத்தில் பலியானார்கள்.

சுபா ஜெயா என்று செல்லமாகப் பலராலும் அழைக்கப் பட்டார். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். ஒரு தமிழ்ப்பெண். இலங்கைத் தமிழர் வம்சாவழியைச் சேர்ந்தவர். ஜெயா என்றும் சுபா என்றும் நட்பு வட்டாரத்தில் அன்புடன் அழைக்கப் பட்டவர். கலைத் துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்.


அவர் இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், 2014 ஜூலை 15 ஆம் தேதி, தன் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்.

சுபாசிணி ஜெயரத்தினம், நாடகத் துறை; நடனத் துறை; சினிமாத் துறை; வானொலி தொலைக்காட்சி ஊடகங்கள் என்று பல துறைகளில் திறமையுடன் திகழ்ந்தவர். ஆங்கிலம், மலேசிய மொழி தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவர். மூன்று மொழிகளிலும் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டியவர்.

சுபா ஜெயா ஆரம்பத்தில் நியூ ஸ்டிரெயிட் டைம்ஸ் நாளிதழில் எழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் அந்தச் செய்தித் தாளின் விளம்பரப் பிரிவுக்கு மாறினார். அதன் பின்னர் தொலைக்காட்சித் துறைக்குப் புலம் பெய்ர்ந்தார்.


2010-ஆம் ஆண்டு சுபா ஜெயாவும், அவரது தந்தை ஜெயரத்னமும் இணைந்து ’மரி மெனாரி’ என்ற நேரடி ஒளி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதன் பிறகு தான் சுபா ஜெயா நிறைய தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

2009-ஆம் ஆண்டில் 15 மலேசியத் திட்டத்தின் கீழ் பல குறும் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

அவர் தன் 31 வது வயதில் முழுநேர நடிப்புத் தொழிலுக்குள் வந்தார். அப்படியே ‘ரிலேசன்சிப் ஸ்டேட்டஸ்’ (Relationship Status (2012); தோக்காக் (Tokak (2013) எனும் மலேசிய சினிமாப் படங்களில் நடித்தார்.

மேலும் அவர் மலேசியத் தொலைக்காட்சியில் வெளி வந்த, ‘சுகமான சுமைகள்’, காடிஸ் 3 (Gadis 3) ஆகிய தொடர்களில் முக்கிய வேடங்களில் தோன்றி இருக்கிறார். 


போர்பிளே (Fourplay); சார்லிஸ் ஆன்டி (Charley's Auntie); ஹங்க்ரி பார் ஹோப் (Hungry for Hope); ஸ்பானர் ஜெயா (Spanar Jaya) ஆகிய நாடகங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்.

’சோஷியல் நெட்வொர்க்கிங்’ என்ற மேடை நாடகம். அதில் இணையம் மீது பைத்தியம் பிடித்துத் திரியும் பெண் வேடத்திலும் சிறப்பாக நடித்து பெயர் வாங்கியவர் சுபா ஜெயா. இப்படித்தான் அவரின் திரைப்பட வாழ்க்கை உச்சம் பார்த்து வந்தது. விறு விறு வென்று வளர்ந்து கொண்டு வந்தார்.

மலேசிய ரசிகர்கள் அன்றாடம் உச்சரிக்கும் ஒரு சொல்லாகவும் மாறி வந்தார். அதாவது புகழின் உச்சிக்கு ஏணி வைத்து விட்டார் என்றும் சொல்லலாம். 


ஒரு கட்டத்தில் மலேசிய நிறுவனம் வியட்நாம் நாட்டில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தயாரித்துக் கொண்டு இருந்தது. சுசுபா ஜெயாவும் அங்கே போய் இருந்தார்.

பாவ்ல் கோஸ் (Paul Goes) எனும் நெதர்லாந்து நாட்டு வாலிபரை அங்கு சந்தித்தார். அந்தச் சந்திப்பு காதலாக மலர்ந்தது. பின்னர் 2010-ஆம் ஆண்டு மணம் புரிந்து கொண்டனர். 2012-ஆம் ஆண்டு கையிலா மாயா ஜெய் கோஸ் என்கிற ஒரு மகள் பிறந்தாள்.

மகள் பிறந்து 21 மாதங்கள். அவரை நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாமில் உள்ள தன் பெற்றோரிடம் எடுத்துச் சென்றுக் காட்டுவதற்கு ஜெயாவின் கணவர் விரும்பினார். தன் மனைவி சுபா ஜெயாவிடம் சொன்னார். அவரும் சம்மதித்தார்.


அதைத் தொடர்ந்து தங்கள் மகளுடன் நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் நகருக்குப் பயணித்தனர். மாமியார் வீட்டில் மகளோடு மகிழ்ச்சி வெள்ளம்.

பின்னர் கணவர், குழந்தையுடன் கோலாலம்பூர் திரும்பிய போதுதான் விமான விபத்து. மூவரும் ஒரே நேரத்தில் பலியாகி விட்டனர்.

எம்.எச். 17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதின் பின்னணியையும் பார்க்க வேண்டும். கிழக்கு உக்ரைன் பகுதியில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினருக்கும், உக்ரைன் அரசுப் படையினருக்கும் பல ஆண்டுகளாகச் சண்டை நடைபெற்று வந்தது.

உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினர் சுட்டு வீழ்த்தி வந்தனர். தவறான நேரத்தில் தவறான இடத்தில் எம்.எச். 17 விமானம் சிக்கிக் கொண்டது.


எம்.எச். 17 விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, சுட்டு வீழ்த்தப் பட்டது. தரையில் இருந்து வான் நோக்கிச் செலுத்தப்படும் ஏவுகணையின் மூலமாக அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, எம்.எச். 370 விமானம் பசிபிக் பெருங்கடலில் காணாமல் போனது. அந்த விமானத்திற்கு என்னதான் ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இந்த் நிலையில், எம்.எச். 17 விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்த சம்பவம் மலேசிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிழக்கு உக்ரைனில் தோனேஸ்க் மாவட்டம் ரஷ்ய எல்லைக்கு அருகில் இருக்கிறது. அந்த மாவட்டத்தின் தலைநகர் ஷாக்டார்ஸ்க். அந்த நகரின் மீது விமானம் பறந்து கொண்டு இருந்த போது சுட்டு வீழ்த்தப் பட்டது. 


விமானம் நடுவானில் வெடித்துச் சிதறி தீப்பிழம்பாக எரிந்து கீழே விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.

ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாம்பூர் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்றால், எல்லா விமானங்களும் உக்ரைன் நாட்டைக் கடந்துதான் வர வேண்டும்.  அதுவும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினர் தீவிரமாக இயங்கி வரும் தோனேஸ்க் மாவட்டத்தைக் கண்டிப்பாகக் கடக்க வேண்டும்.

அந்த இடத்தில் தான் இப்போது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினருக்கும், உக்ரைன் அரசுப் படையினருக்கும் தீவிரமாகச் சண்டைகள் நடந்து வந்தன. அந்தப் பகுதியைக் கடக்கும் போதுதான் விமான விபத்து நடந்தது. 


எம்.எச். 17 விமானம் சுட்டு வீழ்த்தப் படும் போது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எஸ்.கியூ. 351 விமானமும், ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏ.ஐ. 113 விமானமும் 25 கி.மீ. தூரத்திற்கு அப்பால் பயணம் செய்து இருக்கின்றன. நல்லவேளையாக அந்த விமானங்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. சரி.

சுபாசிணி மரணம் அடைவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் தான், தன் 38-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கிறார். பிறந்த நாளைக் கொண்டாடிய இரண்டு நாட்களில் மரண தேவன் தூது சொல்ல வருவான் என்று அவர் கொஞ்சமும்  நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார்.

சுபாசிணி ஜெயரத்தினம் நடித்த பல குறும் படங்களை இயக்கியவர் கைரில் பஹர். இவர் மலேசியக் கதாசிரியர்; இயக்குநர். 


அவர் சொல்கிறார்: ’சுபா ஜெயா புகழுக்காக நடிக்க விரும்பாதவர். நடிப்பின் மீது அதிக மோகம் கொண்டவர். தனது நடிப்புத் திறமையைச் சரியாக பயன்படுத்திக் கொண்டவர். நாடகங்களில் தான் முதலில் நடித்து திரையுலகுக்கு வந்தார்.

அவர் ஒரு போற்றத்தக்க பெண்மணி. தன் எதிர்காலத்தைப் பற்றி நிறைய திட்டங்கள் வைத்து இருந்தார். அவர் இறந்து விட்டார் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை’ என்றார்.

சுபா ஜெயாவை விரும்பாதவர்களே கிடையாது. அனைவரின் பாசத்தையும் பெற்றவர். தன் வாழ்க்கையில் நிறைய திட்டங்களை வைத்து இருந்தார். நிறைய கனவுகள். இப்போது அவர் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை என்றார்.


திருமணத்திற்குப் பின்னர் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம்; குழந்தை வளர்ப்பு; ஆகியவை தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவற்றைப் பற்றி பத்திரிகைகள் பெரிய அளவில் செய்திகளைப் பிரசுரித்தன. அதன் பின்னர் மலேசிய அளவிலும் உலக அளவிலும் சுபா ஜெயா பிரபலம் அடைந்தார்.

உலகப் புகழ்பெற்ற நாளிதழ் தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (The Wall Street Journal). அந்த நாளிதழும் சுபா ஜெயாவைப் புகழாரம் செய்து "ஷூபா ஜே" என்று அழைத்து இருக்கிறது.

மற்றும் ஒரு பிரபலமான தாளிகை பிரஸ்டீஜ் (Prestige Magazine). அந்தத் தாளிகை, 40 வயதிற்கும் உட்பட்ட மலேசியாவின் முதல் 40 நபர்களில் ஒருவராக சுபா ஜெயாவைத் தேர்ந்து எடுத்து சிறப்பு செய்து உள்ளது (Malaysia's top 40 individuals under the age of 40).

பத்திரிகையாளர் கரிகாலன் கீழ்கண்டவாறு வாட்ஸ் அப் தளத்தில் பதிவு செய்து உள்ளார். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


சுபாவின் மறைவு குறித்து அவரின் நண்பர் சிவா சொல்கிறார்: அகாலமாக மறைந்து விட்டீர்கள் சுபா. உங்கள் திருமணத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தீர்கள். நிறைவேற்றுவதற்கு நிறைய கனவுகளை வைத்து இருந்தீர்கள்.

அற்புதமான புன்னகை சிந்தும் அழகு மகளை பெற்று இருந்தீர்கள். இப்போதோ நீங்கள் மூவரும் ஒரே நேரத்தில் போய் விட்டீர்கள். உங்களை இழந்து தவிக்கிறோம்’’ என்று உருக்கமாக கூறி இருக்கிறார்..

மற்றும் ஒரு நடிகரும், இயக்குநருமான பாகி ஜெய்னல் என்பவர், ‘‘சுபா ஜெயா, பாவ்ல், பேபி காயிலா... நீங்கள் மூவருமே மேகங்களுடன் மறைந்து விட்டீர்கள்’’ என்று சொல்கிறார்.  


மறைந்தும் மறையாத ஓர் அழகிய மகள் சுபாசிணி ஜெயரத்தினம். மலேசிய மண்ணில் சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டிய ஒரு கலாரத்தினம். சின்ன வயதிலேயே போய்ச் சேர்ந்து விட்டார்.

அவர் மறைந்து ஏழு ஆண்டுகள். ஆனாலும் அவரின் நினைவுகள் என்றைக்கும் இந்த மண்ணிலே வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். ஓர் அழகிய மகளை மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.07.2021


சான்றுகள்:

1. Lewis, Hilary. "Malaysia Airlines Crash: Actress, Ex-BBC Journalist Among Victims". The Hollywood Reporter.

2.https://www.thestar.com.my/Lifestyle/Family/Features/2014/03/21/Home-birth-The-experiences-of-three-women/

3. https://en.wikipedia.org/wiki/Shuba_Jay

4. Bello, Marisol; Ramakrishnan, Mahi (19 July 2014). "Flight MH17 victims symbolize tragedy". USA Today.

5. A leader, inspiration, friend – tributes pour in". Malaysiakini. 20 July 2014.


 

2 கருத்துகள்:

  1. கட்டுரை சிறப்பு ஐயா ! சுபா ஜெயா ஓம் ஆத்மா சாந்தி ஓம்,அவர் விட்டு சென்ற புகழ் என்றும் நம்முடன்.

    பதிலளிநீக்கு
  2. ஏழாண்டுகளாகி விட்டன. நினைத்துப் பார்ப்போம். நன்றிங்க.

    பதிலளிநீக்கு