07 அக்டோபர் 2021

பத்து ஆராங் தமிழர்கள் வரலாறு

தமிழ் மலர் - 01.10.2021

மலாயா தமிழர்கள் ஓர் இக்கட்டான காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு பக்கம் கொரோனாவின் தாக்கம். இன்னொரு பக்கம் இனவாத்தின் தாக்கம். மற்றொரு பக்கம் மதவாதத்தின் தாக்கம். இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் பேராண்மையின் பெரும் தாக்கம்.


போகிற போக்கைப் பார்த்தால் இங்கு வாழும் தமிழர்கள் வேண்டாம். ஆனால் அவர்கள் வியர்வை சிந்த வேண்டும். உழைக்கும் உழைப்பு மட்டும் வேண்டும். அவர்களின் உழைப்பில் இருந்து வருமான வரி வேண்டும். அவர்கள் வாங்கும் பொருட்களுக்குச் சேவை வரி வேண்டும்.

ஓர் இனம் மட்டும் கால் மீது கால் போட்டுக் கொண்டு சொகுசாய் வாழ வேண்டும். மற்ற இனங்கள் எல்லாம் மாடாய் உழைக்க வேண்டும். என்னங்க இது? ஒட்டி வாழலாம். தப்பு இல்லை. ஒண்டி வாழலாம். தப்பு இல்லை. ஆனால் ஒட்டுண்ணிகளாய் மட்டும் வாழவே கூடாது. மனிதத் தன்மைக்கு அர்த்தமே இல்லை.

சிறுபான்மை இனத்தவர் கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கொடுக்கும் பணம் மட்டும் வேண்டும். ஆனால் சம்பாதித்துக் கொடுக்கும் அவர்கள் மட்டும் வேண்டாம். ஒரு ஒட்டுக்கடை போட முடியவில்லை. ஒரு தள்ளுவண்டி வியாபாரம் செய்ய முடியவில்லை. ஒரு டாக்சி ஓட்ட முடியவில்லை. ஒரு கடன் வாங்கி ஒரு வியாபாரம் செய்ய முடியவில்லை. எல்லாமே மைந்தர்களுக்கு மட்டுமே. கப் சிப்.

இதில் கடாரத்துப் பக்கம் ஒரு சார்லி சாப்ளின். இருக்கிறதை எல்லாம் இடித்துத் தள்ளும் அதிசயப் பிறவி. ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை. 2021-இல் கெடா பட்ஜெட் 90 கோடி. இதில் இந்தியர்களுக்கு இரண்டு இலட்சம். எதற்கு? நாக்கு வழிக்கவா? அந்த இரண்டு இலட்சத்தில் தமிழர்களுக்கு ஒரு அஞ்சு காசாவது வந்து சேருமா. இல்லை வரும் வழியிலேயே எல்லாம் கமிசன் போட்டு அபேஸ் பண்ணி விடுவார்களா?

ஒரு வார்த்தையில் முடிக்கிறேன். படுக்கையைத் தட்டிப் போட மட்டும் பொம்பள வேண்டும். மற்ற எதற்கும் அவள் வேண்டாம். மனசாட்சி மரணித்து விட்டது. நாடு இந்த நிலையில் போய்க் கொண்டு இருக்கிறது.

தமிழர்கள் என்பவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்தார்கள் எனும் அடையாளம் இல்லாமல்கூட போகலாம். சொல்ல முடியாது. அதற்காக நல்லபடியாகவே காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

அதற்கு முன்னர் மலாயா தமிழர்களின் வரலாற்றை ஆவணப் படுத்த வேண்டும். பாட நூல்களில் ஒன்று நடக்காது. பரமேஸ்வரா காலத்தில் இருந்துதான் மலாயா வரலாறே தொடங்குகிறது.


கடாரத்து வரலாறு; செலின்சிங் வரலாறு; கங்கா நகரத்து வரலாறு; தாம்பிரலிங்கா வரலாறு; தக்கோள வரலாறு; புருவாஸ் வரலாறு; கோத்தா கெலாங்கி வரலாறு; பான் பான் வரலாறு; இலங்காசுகம் வரலாறு; இன்னும் பல வரலாறுகள் எல்லாம் பரமேஸ்வரா காலத்திற்கு முந்திய வரலாறுகள்.

அந்தப் பழைய வரலாறுகள் எல்லாம் பாடநூல்களில் இல்லை. கரைந்து காணாமல் போய்விட்டன. இருந்தாலும் இணையம் வழியாக வெளி உலகத்திற்குத் தெரிய வருகின்றன. உலக மக்கள் வரலாற்று உண்மைகளை உணர்ந்து வருகின்றனர்.

எது எப்படியோ ஒரு சாரார் காலம் காலமாகக் கொட்டாங் கச்சிக்குள் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். ஒரு சாரார் கொட்டாங் கச்சிக்கு வெளியே அறிவார்ந்த நிலையில் வாழ்கிறார்கள். பூனைக் கணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு போகாது என்பது உலக நியதி.

அந்த வகையில் வரலாற்றில் சில காலச்சுவடுகளை மீண்டும் மீண்டும் அசை போட வேண்டிய நிலைமை. அதாவது காலத்தின் கோலம் அல்ல. காலத்தின் கட்டாயம்.

இன்றைக்கு பத்து ஆராங் தமிழர்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கட்டுரை. இந்தக் கட்டுரை தமிழ் மலர் நாளிதழில் 21.03.2017-இல் முதன்முதலாக பிரசுரிக்கப்பட்டது. பின்னர் 05.01.2021 வெளியானது. மீண்டும் பதிவு செய்கிறேன்.


மலேசியா சிலாங்கூர் மாநிலத்தின் பத்து ஆராங் நகரில் தொட்ட இடம் எல்லாம் வரலாற்று மர்மங்கள். தடுக்கி விழுந்தாலும் தாரை தாரையான மர்மங்கள். மலேசியாவில் பிறந்து வளர்ந்த பலருக்கும் தெரியாத பயங்கரமான மாயஜால மர்மங்கள். மயிர் சிலிர்க்க வைக்கும் மர்மங்கள். சங்கர்லால் கதை மாதிரி போகும். அச்சம் வேண்டாம்.

பூமிக்கு அடியில் இராட்சச பாம்புகளின் மர்மங்கள்; கொள்ளிவாய்ப் பிசாசுகளின் மர்மங்கள்; ஜப்பான்காரர்கள் தலைகளை வெட்டிய மர்மங்கள்; சிதைந்து போன நிலக்கரிச் சுரங்கங்களின் மர்மங்கள்; கம்யூனிஸ்டுக்காரர்களின் கத்திக்குத்து மர்மங்கள். கர்மவீரர் காமராசரையே சினமூட்டிய மர்மங்கள்; மலைக்க வைக்கும் மார்க்சிய மர்மங்கள். இப்படி எக்கச் சக்கமான மர்மங்கள்.

பத்து ஆராங் நகரத்தின் பெயரும் பத்து. பத்துமலையின் பெயரும் பத்து. இரண்டு பத்துக்களும் பக்கத்துப் பக்கத்தில் இருக்கும் சொத்து பத்து(க்)கள் தான். இரண்டுமே அடேக் ஆபாங் சொந்த பந்தங்கள் தான்.

பத்து ஆராங்கை இப்படியும் உவமானம் சொல்லலாம். பத்து ஆராங் ஓர் அமைதியின் ஊற்று. இளநீர் கலந்த இளந்தேங்காயின் வழுக்கல். ஆனால் புரட்சிகரமான உணர்வுகளின் கொப்பரை. அன்றைய மலாயாவில் மார்க்ஸ் – லெனின் சித்தாந்தங்களுக்கு விளக்கு ஏற்றி வைத்த முதல் மலாயா கிராமப்புற நகரம்.

அந்தச் சித்தாந்தங்களுக்கு முன்னோடிகளாக விளங்கியவர்கள் மலாயா தமிழர்கள். அதில் பத்து ஆராங்  தமிழர்கள் மறக்க முடியாத சித்தாந்தவாதிகள்.

இந்தப் பத்து ஆராங் நகரம் தான் மலேசியாவிலேயே முதன்முதலாக ஒரு சோவியத் கம்யூனிச நகரமாக அறிவிக்கப் பட்டது. ஓர் அதிசயமான செய்தி. இல்லீங்களா. இந்த விசயம் பலருக்குத் தெரியாது. இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

(http://kiankheong.blogspot.my/2012/08/the-intriguing-history-of-batu-arang.html - Malaya's first Soviet government on March 27, 1937. This was a declaration of independence even before the formation of the Federation of Malaya in 1957.)

சுதந்திரம் அடைவதற்கு முன்னால் மலேசியா என்பது மலாயாவாக இருந்தது. அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சி. தொடர்ந்து படியுங்கள்.

1930-களில் பத்து ஆராங் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏறக்குறைய 6000 - 7000 பேர் வேலை செய்து வந்தார்கள். மண்ணுக்கு அடியில் 330 மீட்டர்கள் ஆழத்தில் நிலக்கரிச் சுரங்கங்கள் இருந்தன. அந்த இருண்ட சுரங்கங்களில் உயிரைப் பிடித்துக் கொண்டு வேலை செய்தார்கள்.

பத்து ஆராங் நகரத்திற்கு அடியில் நூற்றுக் கணக்கான பாழடைந்த சுரங்கங்கள் இன்னும் இருக்கின்றன. அதாவது ஆயிரம் அடி ஆழத்தில். அதனால் தான் இந்த நகரில் மூன்று மாடிகளுக்கு மேல் எந்தக் கட்டடமும் இருக்காது. கட்டவும் முடியாது. கட்டுவதற்கு அனுமதி வழங்கப் படுவதும் இல்லை.

பத்து ஆராங்கில் பாதுகாப்பான சில இடங்களில் மட்டும் நான்கு மாடிக் கட்டடங்களைப் பார்க்கலாம். ஐந்து மாடிகளைப் பார்க்கவே முடியாது. அதாவது சுரங்கம் விளையாடிய இடங்களில் தான் இந்தக் கட்டுப்பாடு. மற்ற இடங்களில் பிரச்சினை இல்லை.

முதன்முறையாக 1973-ஆம் ஆண்டு பத்து ஆராங் போய் இருக்கிறேன். அங்கே ஆசிரியர் தோழர் இருந்தார். அவரை கராத்தே முனியாண்டி என்று அழைப்பார்கள். பத்து ஆராங்கைச் சுற்றிக் காட்டினார். ஏன் உயரமான கட்டடங்கள் இல்லை என்று கேட்டேன்.

அதற்கு அவர் ‘தமிழர்கள் சிந்திய இரத்த ஆறு இந்த நகரத்திற்கு அடியில் ஓடுகிறது. அதற்கு பயந்து கொண்டு பெரிய கட்டடங்களைக் கட்டுவது இல்லை’ என்று சொன்னார். அவர் வேறு அர்த்தத்தில் சொன்னது அப்போது எனக்குப் புரியவில்லை. இப்போது புரிகிறது. சரி.

உயரமான கட்டடங்களுக்கு அடித்தளம் போட்டால் அஸ்திவாரத் தூண்கள் சுரங்கத்திற்குள் அப்படியே இறங்கிவிடும். கட்டடங்கள் இடிந்து விழுந்து விடும். அதனால் ஐந்து மாடிக் கட்டடங்களைக் கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்குவது இல்லை.

இப்போது பத்து ஆராங்கில் உள்ள அந்தப் பழைய நிலக்கரிச் சுரங்கங்கள் எல்லாம் பாழடைந்து போய்க் கிடக்கின்றன. யாரும் துணிந்து இறங்கிப் போய்ப் பார்ப்பதும் இல்லை. ஜப்பானியர்கள் ஆட்சி செய்த காலத்தில் பல நூறு பேர் இந்தச் சுரங்கங்களில் சிரச் சேதம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கம்யூனிஸ்டு அவசரகாலத்தில் பல நூறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். யூடியூப்பில் இதைப் பற்றி ஒரு காணொளி உள்ளது. போய்ப் பாருங்கள். அதன் முகவரி:

https://www.youtube.com/watch?v=vrbyiZ1iwsQ

இந்தக் கரும் சுரங்கங்களில் பெரிய பெரிய மலைப்பாம்புகள் இருப்பதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆவிகள் உலாவுவதாகவும் வேறு சொல்கிறார்கள். அங்கு உள்ளவர்கள் தான் சொல்கிறார்கள். எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. யாருங்க இறங்குவது. ஆவி பிசாசு என்று ஆரம்பத்திலேயே மிரட்டி வைத்து விட்டார்கள்.

சில வருடங்களுக்கு முன்னால் இரண்டு வெள்ளைக்காரர்கள் சுரங்கத்திற்குள் இறங்கிப் பார்க்கப் போய் இருக்கிறார்கள். போனவர்கள் போனவர்கள்தான். திரும்பி வரவே இல்லையாம். என்னாச்சு ஏதாச்சு ஒன்னுமே புரியவில்லை. பத்து ஆராங் மக்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். நானும் கேட்டு இருக்கிறேன்.

அப்போது அந்தக் காலத்தில் சுரங்கங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப் படவில்லை. கரணம் தப்பினால் மரணம். இறங்கினால் இறப்பு. ஏறினால் உயிர் என்று சொல்வார்களே அந்த மாதிரிதான்.

ஆழமான அந்தச் சுரங்கத்தில் இருந்து வெளியே உயிரோடு வந்தால் தான் ஒருவனுடைய அவனுக்கு உயிர். வெளியே வரவில்லையா தெரிந்து கொள்ளுங்கள். வருவது கறுத்து வறுத்துப் போன பிணமாகத்தான் இருக்கும். பத்து ஆராங் மக்கள் அந்த மாதிரி நிறையவே பார்த்து இருக்கிறார்கள்.

நமக்குக் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி பத்து ஆராங் நிலக்கரி சுரங்கங்களில் தொழிலாளர்கள் பலர் இறந்து போய் இருக்கிறார்கள். பத்து ஆராங் நிலக்கரி சுரங்கங்களின் வரலாறு 47 ஆண்டுகள். 112 பேர் இறந்து போய் இருக்கிறார்கள்.

இதுவும் உறுதியான தகவல் இல்லை. பிரிட்டிஷ் அதிகாரிகள் மறைத்து விட்டார்கள். கூடுதலாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமரர் ஜீவி. காத்தையா அவர்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறேன். ஏறக்குறைய 1000 பேருக்கு மேல் இறந்து இருக்கலாம் என்று சொன்னார்.

(http://blog.malaysia-asia.my/2012/11/batu-arang-in-selangor.html)

ஓர் இடைச் செருகல். மலாக்காவை உருவாக்கியவர் பரமேஸ்வரன். அவர் சுமத்திராவில் பிறந்தவர். இந்த விசயம் உங்களுக்குத் தெரியும். எனக்கும் தெரியும். ஏன் இந்த உலகத்திற்கே தெரியும். ஆனால் அதற்கு ஒரு மாற்றுக் கருத்து இப்படி நிலவுகிறது.

ஐரோப்பாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் மகா அலெக்ஸாண்டர் என்பவர் இருந்தார். அவருடைய கொள்ளுப் பேரன்தான் இந்தப் பரமேஸ்வரன் என்று சில வரலாற்று வித்துவான்கள் சொல்கிறார்கள். எங்கே இருந்து ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை.

(https://www.geni.com/people/Maharaja-Parameswara-Raja-Iskandar-Shah-t21/6000000010134622102 - The historical Malay literary work, Sejarah Melayu states that Parameswara was a descendant of Alexander the Great.)

பரமேஸ்வரன் என்பவர் பாரசீகத்தில் கப்பலேறி வந்து லங்காவித் தீவில் குடியேறினாராம். கேட்க நல்லா தான் இருக்கிறது. பாடப் புத்தகங்களில் எழுதியும் இருக்கிறார்கள். எங்கே நடக்கிறது என்று மட்டும் தயவு செய்து கேட்க வேண்டாம். உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லைங்க.

பரமேஸ்வரா பாரசீகத்தில் இருந்து கப்பலேறி வந்தார் என்று சொல்லிச் சொல்லியே சிலர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். பெரிய அக்கப்போர். எப்படிங்க. என்னங்க செய்வது. அதைக் கேட்டு எனக்கும் ரொம்ப நாளாக நெஞ்சுவலி.

எது எப்படியோ இறந்து போன பரமேஸ்வரனைத் தட்டி எழுப்பி கட்டப் பஞ்சாயத்து வைக்காமல் இருந்தால் சரி. அப்படியே நாலு நம்பர் கேட்காமல் இருந்தால் சரி. விட்டால் நம்ப மக்களில் சிலர் அவரையும் விட்டு வைக்க மாட்டார்கள். விடுங்கள். நம்ப கதைக்கு வருவோம்.

பரமேஸ்வரன் கதை மாதிரிதான் பத்து ஆராங்கிலும் நடந்தது. வெளியூர்களில் இருந்து வந்த தமிழர்கள் பலர் நிலச் சுரங்கங்களில் இறந்து போய் இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் கணக்கு காட்டவில்லை.

அதனால் கணக்கும் தெரியவில்லை. சுரங்கத்திற்குள் இறந்து போன பத்து ஆராங் தமிழர்களைப் பற்றிய தகவல்கள் காலத்தால் மறைக்கப்பட்டு விட்டன. பரவாயில்லை. வெள்ளைக்காரர்கள் விசயம் தெரியாதா என்ன? சூரியனே அவர்களைக் கேட்டுத்தான் உதிக்குமாம். அப்புறம் என்னங்க?

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.10.2021



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக