04 ஜனவரி 2022

பார்ன்ஸ் பென் பூ அறிக்கைகளில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்று சொல்வர்கள். அது என்னவோ தமிழ், சீனப் பள்ளிகளுக்கு மிகச் சரியாகவே பொருந்தி வருகிறது. தாய்மொழிப் பள்ளிகள் வாங்கி வந்த வரமா இல்லை எழுதிச் சென்ற விதியின் சாசனமா தெரியவில்லை.


இனவாதிகளும் மதவாதிகளும் கூட்டுக் கட்டி குலுக்குச் சீட்டுப் போடுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். ஒரு வழி பண்ணாமல் விட மாட்டார்கள் போல தெரிகிறது.

தாய்மொழிப் பள்ளிகள் இந்த நாட்டின் அரசமைப்பு சட்டங்களுக்கு முரண்பாடாக இயங்குகின்றன என்று மூன்று மலாய் இயக்கங்கள் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து இருந்தன. தமிழ் சீனப்பள்ளிகளுக்கு எதிராக வழக்கைத் தொடுத்த இயக்கங்கள் (வாதிகள்)

1. மலேசிய மலாய் மாணவர்கள் சங்கங்களின் சம்மேளனம் (Gabungan Pelajar Melayu Semenanjung (GPMS)

2. இஸ்லாமியக் கல்வி மேம்பாட்டு மன்றம் (Pembangunan Pendidikan Islam Malaysia (Mappim)

3. Gabungan Persatuan Penulis Nasional Malaysia எனும் Confederation of Malaysian Writers Association (Gapena)

இந்த வழக்கின் பிரதிவாதிகள். அதாவது இந்த வழக்கிற்கு எதிராக வாதாடியவர்கள்:

1. மலேசிய அரசாங்கம்
2. மலேசிய கல்வி அமைச்சு
3. மலேசிய கல்வி அமைச்சர்
4. ம.இ.கா.
5. ம.சீ.ச.
6. கெராக்கான்
7. மலேசிய பூமிபுத்ரா பெர்காசா கட்சி
8. மலேசிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பு
9. மலேசிய தமிழ் நெறி கழகம்,
10. மலேசியத் தமிழர்க் கழகம்
11. தமிழர் திருநாள் கழகம் (பேராக்)
12. தமிழ்ப்பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கம்
13. சீனக் கல்வியாளர் குழு Dong Zong
14. சீனக் கல்வியாளர் குழு Jiao Zong
15. மலேசியச் சீன மொழிக் கழகம் (Malaysian Chinese Language Council)
16. சோங் ஹுவா சீன உயர்நிலைப்பள்ளி (SMJK Chong Hwa)

சில அமைப்புகளின் பெயர்கள் விடுபட்டு இருக்கலாம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.


நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப தமிழ் - சீன மொழிப் பள்ளிகள் செயல் படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் (Mohd Nazlan Mohd Ghazali) தம் தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறார். தாய் மொழிப் பள்ளிகள் தொடர்ந்து நிலைத்து இருக்கும் என்பது வரலாற்றுப் பூர்வமான தீர்ப்பு.

இனங்களைக் கடந்து; மதங்களைக் கடந்து; நிறங்களைக் கடந்து; 200 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் மலேசியாவில் செயல்பட்டு வருகின்றன.

ஆனாலும் தாய்மொழிப் பள்ளிகள் அகற்றப்பட வேண்டும் என மலேசிய முஸ்லிம் ஆசிரியர்கள் சங்கம் கடந்த 2020 ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி கோத்தா பாரு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது.

நாட்டின் தேசிய மொழி இருக்கும் பொழுது தாய்மொழிப் பள்ளிகளில் மட்டும் தமிழ் மற்றும் சீன மொழிகளைப் போதனா மொழியாக பயன்படுத்தப்படுவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்பது வழக்கு தொடர்ந்த அமைப்புகளின் வாதம்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், நாட்டில் 1,800 தாய்மொழிப் பள்ளிகளில் 500,000 மாணவர்கள் கல்வி பயில்வது சட்டப்பூர்வமாகவும் அரசியலமைப்புச் சட்டத்தில் கீழ் மேற்கொள்ளப் படுவதாகவும் நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி கூறினார்.

மேலும், கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் எழுதப் பட்டதைப் போல் இந்தப் பள்ளிகளில் மலாய் மொழி இடைநிலை மொழியாக பயன்படுத்தப்படும் என்றார். எனவே, தாய்மொழி பள்ளிகளான தமிழ் மற்றும் சீன பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்பதை அவர் தனது தீர்ப்பின் மூலம் உறுதிப் படுத்தினார்.

2020-ஆம் ஆண்டு மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 527 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. 80,569 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். 8,638 தமிழ் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

தாய்மொழிப் பள்ளிகள், குறிப்பாக தமிழ்ப் பள்ளிகள் ஒரு போதும் பிரிவினைகளை வளர்த்தது கிடையா. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே வேளையில், மற்ற மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்பதைப் பதிவு செய்வதில் உறுதியாக இருக்கிறேன்.

இந்த வழக்கு தொடர்பாகத் துடிப்புடன் செயலில் இறங்கிய அமைப்புகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் நம்முடைய வாழ்த்துகள். ஏறக்குறைய 30 வழக்கறிஞர்களைத் திரட்டிப் போராடிய திரு. அருண் துரைசாமி அவர்களுக்குத் தனிப்பட்ட வகையில் வாழ்த்துகள். இருந்தாலும் தூவானம் இப்போதைக்கு விடாது போல தெரிகிறது.

பூமிபுத்ரா பெர்காசா மலேசியா (புத்ரா) கட்சியின் தலைவர் இப்ராகிம் அலி உடனடியாக ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். தாய்மொழிப் பள்ளிகள் இருக்கத் தான் வேண்டுமா? மேல் முறையீடு செய்யப்படும்; கவலைப் படாதீர்கள் என்கிற அறிக்கை.

மலேசிய ஒற்றுமைக்குத் தடையாக உள்ள தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பான சர்ச்சைக்கு மேல் முறையீடு நீதிமன்றம் தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன் என்கிறார் இப்ராகிம் அலி.

மேலும் அவர் கூறுகிறார். தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து இருப்பது; அவற்றில் தாய்மொழிகள் பயிற்று மொழிகளாக இருப்பது; தேசிய நலனுக்கு ஏற்றது அல்ல. அவை எல்லா இனங்களையும் சேர்ந்த பிள்ளைகள் ஒன்று படுவதற்குத் தடங்கலாக உள்ளன என்றும் கூறி இருக்கிறார். சரி. அது அவரின் கருத்து.

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை; அந்தத் தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை; அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே ஒரு சிலரின் பார்வை. ஒரு சிலரின் வாதம்.

இவ்வளவு நாளும் இந்த நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் நல்லபடியாகத் தானே போய்க் கொண்டு இருந்தன. ஏன் திடீரென்று இந்த மாதிரி (அ)இடக்கு முடக்கான கேள்விகளைக் கேட்கிறார்கள். நீதிமன்றத்தில் மனு; வழக்காடல்கள்; மேல் முறையீடுகள். தேவையே இல்லை.

வேலை வெட்டி இல்லாத வெட்டிச் சரக்குகள். எதையாவது குழப்பி எப்படியாவது மீன் பிடிக்க வேண்டும். வேற வேலை இல்லை. எதையாவது சீண்டணும். பேர் வாங்கணும். அப்படியே நாலு காசு பார்க்கணும். ரூம் போட்டு டிசுகசன் பண்ணி வெட்டி முறிக்கணும்.

இந்தப் பிரச்சினை இன்று நேற்று தொடங்கிய பிரச்சினை இல்லை. நீண்ட காலமாகவே கொடிகட்டிப் பறக்கின்றது. அண்மைய காலங்களில் ரொம்பவுமே உயரத்தில் பறக்கின்றது.

இதற்கு எல்லாம் யாரோ பின்னால் இருந்து கொண்டு, சாவி கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்று பலரும் பலவாறாகப் பேசிக் கொள்கிறார்கள். யார் எவர் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

முன்பு 48 ஆண்டுகளுக்கு முன்பே இதைப் பற்றி ஒரு பெரிய சர்ச்சை ஏற்பட்டது. சீனத் தமிழ்ப் பள்ளிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று உத்துசான் மலேசியா மலாய் நாளிதழின் ஆசிரியர் மெலான் அப்துல்லா சொன்னார். 
 
1971-ஆம் ஆண்டு. அவர் மீது வழக்கு தொடரப் பட்டது. குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது. அபராதமும் விதிக்கப் பட்டது. இது சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது.

(Melan bin Abdullah & Anor v. P.P. ([1971] 2 MLJ 280)

பின்னர் மற்றும் ஒரு பிரச்சினை. 1978-ஆம் ஆண்டு மார்க் கோடிங் (Mark Koding) என்கிற சபா நாடாளுமன்ற உறுப்பினர். தமிழ் சீனத் தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் என்று சொன்னார். சிக்கிக் கொண்டார். 1978 அக்டோபர் 11-ஆம் தேதி.
அப்போது உசேன் ஓன் பிரதமராக இருந்தார். நாடாளுமன்றத்தில் பேசும் போது அதன் உறுப்பினர்களுக்குச் சட்ட விலக்களிப்பு (immunity) இருக்கும். இருந்தும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு அவர் இழுக்கப் பட்டார்.

(Public Prosecutor v Mark Koding ([1983] 1 MLJ 111)); (s 4(1)(b) of the Sedition Act 1948 (Revised 1969); (Section 3(1)(f) in the Sedition Act 1948);

மேலே சொன்ன அந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப் பட்டார். 1982-இல் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது. பின்னர் ஈராண்டு நன்னடத்தை ஜாமீனில் தற்காலிக விடுதலை பெற்றார். இவர் 52-ஆவது வயதில் மாரடைப்பினால் காலமானார். சரி.

அண்மைய காலங்களில் அதிகமான புகைச்சல். ஓர் எடுத்துக்காட்டு. பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவர். சலாமியா மாட் நூர் (Ustazah Salamiah Mohd Nor). 2019 ஜுன் 22-ஆம் தேதி குவாந்தான் இந்திரா மக்கோத்தா அரங்கத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 65-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம்.

அதில் அவர் சொன்னது: நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை. அந்தப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை. அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.

அதற்குப் பதிலாக அரபு மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று பேசி இருக்கிறார். உசுப்பி விட்டது நாயக்.

இந்த மாதிரி அடிக்கடி பிசுபிசுப்புகள். சரி. இதை இப்படியே கொஞ்ச நேரம் நிறுத்தி வைப்போம். மலேசிய அரசியல் அமைப்பில் கல்விச் சட்டம் என்ன சொல்கிறது. தமிழ்ப்பள்ளிகளைப் பற்றி என்ன சொல்கிறது. அதைப் பார்ப்போம்.

முதலில் ரசாக் திட்டம் வருகிறது. இந்தத் திட்டம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் இதைப் பற்றி கட்டுரை எழுதி இருக்கிறேன். இருந்தாலும் மறுபடியும் நினைவுபடுத்தினால் சிறப்பு.

1956-ஆம் ஆண்டு மலாயா கல்விக் கொள்கைக்காகத் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கை தான் ரசாக் திட்டம். இதை ரசாக் அறிக்கை (Razak Report) என்றும் சொல்வார்கள். மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணைப் பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. மலாயா கல்விக் கட்டமைப்பின் அடிப்படையாக அந்த ரசாக் அறிக்கை விளங்குகிறது. அதன் மூலம் சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டது. இந்த இடத்தில் ஒன்றைக் கவனியுங்கள்.

சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் விதி என்பது 1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணைப் பிரிவு 3-க்குள் அடங்குகிறது. அதற்கு ரசாக் அறிக்கை வழிவகுத்துக் கொடுக்கிறது. சரிங்களா. ரசாக் அறிக்கை வருவதற்கு முன்னர் இரு வேறு அறிக்கைகள் இருந்தன. காலத்துவ பிரிட்டிஷார் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட அறிக்கைகள்.

முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report).

இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).

இந்த இரு அறிக்கைகளில் முதலாவதாக வந்த பார்ன்ஸ் அறிக்கையைப் பெருவாரியான மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். சீனர்களும் இந்தியர்களும் ஆதரிக்கவில்லை.

இரண்டாவதாக வந்த பென் பூ அறிக்கையை மலாய்க்காரர்கள் ஆதரிக்கவில்லை. மாறாக சீனர்களும் இந்தியர்களும் ஆதரித்தார்கள். இரு தரப்பிலும் இணக்கச் சுணக்கங்கள். அதைச் சரி செய்யவே ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

சுருக்கமாகச் சொல்லப் போனால் ரசாக் அறிக்கை என்பது ஒரு சமரசக் கல்வி அறிக்கை ஆகும். இரு தரப்புகளையும் சமரசப் படுத்தும் ஒரு திட்டம் ஆகும். இந்தக் கட்டுரை நாளையும் தொடரும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.01.2022


1. Berci, Liqing Tao, Margaret; He, Wayne (23 March 2006). "Historical Background: Expansion of Public Education". The New York Times. ISSN 0362-4331.

2. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3295-senarai-sekolah-rendah-dan-menengah-jan-2020/file




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக