26 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 8

தமிழ்மலர் - 24.11.2018 - சனிக்கிழமை

பிச்சை எடுப்பதில் மூன்று வகை. அகிம்சா வழியில் வீடு வீடாய் யாசகம் கேட்பது ஒரு வகை. ஏழ்மைத் தாண்டவத்தில் கையேந்திக் கேட்பது ஒரு வகை. இருந்தும் இல்லாதது போல் கேட்பது இன்னொரு வகை. அந்த வகையில் நிகழ்காலப் பிச்சைக்காரன்; எதிர்காலப் பிச்சைக்காரன் என இருவகைப் பிச்சைக்காரர்கள் வருகிறார்கள். நிகழ்காலப் பிச்சைக்காரன் என்பவன் கஞ்சன். எதிர்காலப் பிச்சைக்காரன் என்பவன் ஊதாரி. 




அதே மாதிரி ஒரு பெண்ணின் ஊதாரித் தனத்தால் புகழ்பெற்ற ஓர் அரசியல் குடும்பமே நடுத்தெருவிற்கு வந்துவிட்டது. உலகமே பார்த்து எள்ளி நகையாடும் அளவிற்கு கெட்ட பெயரையும் வாங்கி விட்டது.

ஆசைகள் இருக்கலாம். அந்த ஆசைகள் பேராசைகளாக மாறலாம். ஆனால் பெரும் நட்டங்களைத் தரும் பேராசைகளாக மாறக் கூடாது. 1எம்.டி.பி. மோசடியைத் தான் சொல்ல வருகிறேன். 1எம்.டி.பி. என்பது பேராசைகளுக்குப் பலியான ஓர் அழகிய நிறுவனம்.

அந்த நிறுவனத்தில் இருந்து பணம் கிடைக்கிறதே என்று சொல்லி தாறுமாறாய்ச் செலவு செய்ததால் ரோஸ்மாவின் குடும்பம் இப்போது வேதனைக் குழம்பில் தத்தளிக்கிறது. நாளைக்கு என்ன நடக்குமோ என்று நாட்களை எண்ணிக் கொண்டு வாழ்கின்றது.




நஜீப் – ரோஸ்மா இருவரின் மீதும் இதுவரை 50 குற்றச்சாட்டுகள். இன்னும் வரலாம். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப் பட்டால் இருவரின் வாழ்க்கையும் நான்கு சுவர்களுக்குள் நலிந்து போகலாம். சொல்லும் போது வேதனையாக இருக்கிறது.

இருவரும் பல ஆண்டுகள் சிறைத் தணடனையை அனுபவிக்க வேண்டிய நிலைமை வரலாம். வயோதிகம் வீட்டு வாசல் கதவைத் தட்டுவதற்குப் பதிலாகச் சிறைக் கதவைத் திறந்து விடுகிறது. அந்த வகையில் மலேசிய வரலாற்றில் புதிய ஓர் அத்தியாயம் சேர்க்கப் படலாம். தேவை தானா? 

இப்போதைக்கு 1எம்.டி.பி-யின் மொத்தக் கடன் தொகை 42 பில்லியன் ரிங்கிட். அதாவது RM42,000,000,000. இதற்கான வட்டி மட்டும் 3.9 பில்லியன் ரிங்கிட். அதாவது RM3,900,000,000 ரிங்கிட். இவ்வளவு வட்டித் தொகையையும் இப்போதைய அரசாங்கம் கட்டியாக வேண்டும். 




யார் யாரோ தேவை இல்லாமல் அநியாயமாக, ஊதாரித் தனமாகச் செலவு செய்ததற்கு மலேசிய மக்கள் உழைத்துக் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. வேதனையாக இருக்கிறது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அந்த வட்டித் தொகைகளைக் கட்டி வருகிறது. கண்டிப்பாகக் கட்டியாக வேண்டும். முடியாது என்று சொல்லவே முடியாது.

எத்தனை அரசாங்கங்கள் வந்தாலும் சரி; பழைய அரசாங்கம் செய்ததற்கு புதிய அரசாங்கம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். பழைய அரசாங்கம் வாங்கிய கடன்களைப் புதிய அரசாங்கம் கட்டியே ஆக வேண்டும்.




இந்த 2018-ஆம் ஆண்டு மட்டும் புதிய அரசாங்கம் 1.688 பில்லியன் ரிங்கிட் வட்டித் தொகை கட்டி இருக்கிறது. அதாவது 1,688,000,000 ரிங்கிட். இது வெறும் வட்டி தான். தெரியுங்களா. கடன் அப்படியே நிற்கிறது. வட்டி கட்டவே அங்கே இங்கே பிச்சை எடுக்க வேண்டி இருக்கிறது. எப்படி சமாளிக்கப் போகிறார்களோ?

1எம்.டி.பி.-யின் எனர்ஜி லங்காட் நிறுவனத்திற்காக வாங்கப்பட்ட கடனுக்கு அண்மையில் 208,800,000 ரிங்கிட் வட்டித் தொகை கட்டப்பட்டது.

அடுத்து சுக்குக் இஸ்லாமிக் உத்தரவாதக் கடன் பத்திரங்கள். அதற்கும் வருடா வருடம் வட்டி கட்ட வேண்டும். இந்த நவம்பர் மாதம் 11-ஆம் தேதி 217,510,000 ரிங்கிட் வட்டித் தொகை கட்டினார்கள். அடுத்து அதே சுக்குக் இஸ்லாமிக் கடன் பத்திரங்களுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 143,750,000 ரிங்கிட் வட்டி கட்ட வேண்டி இருக்கிறது.




இந்த வட்டிக் கடன்களுக்கு அரசாங்கமும் மலேசிய மக்களும் தான் பொறுப்பு. அரசாங்கம் முதலில் கட்டுகிறது. அரசாங்கம் கட்டியதை மலேசிய மக்கள் வரிப் பணமாகப் பின்னர் கட்டுகிறார்கள். அவ்வளவு தான். கடைசியில் எல்லா கடன்களும்; அந்தக் கடன்களின் வட்டிகளும் மலேசிய மக்களின் தலையில் தான் போய் விழுகிறது. புரிந்து கொள்ளுங்கள்.

ஜோலோவின் பிளேபாய் ஆட்டத்திற்கும்; ரோசாப்பூ ரோசம்மாவின் ஜிங்கு ஜிக்கான் ஆட்டத்திற்கும்; புன்னகை ராசா நஜீப்பின் தேர்தல் பிரசாரத்திற்கும் செலவான கோடிக் கணக்கான பணத்தை நாம் தான் கட்டியாக வேண்டும். வேறு வழி இல்லை. பெருமூச்சு விட்டுக் கொண்டே படியுங்கள்.




1எம்.டி.பி. நிறுவனம் பயங்கரமாகக் கடனை வைத்துவிட்டுச் சென்று உள்ளது. இப்போதைய புதிய அரசாங்கம் தவணை தவறாமல் வட்டித் தொகையைக் கட்டிக் கொண்டு வருகிறது.

1எம்.டி.பி. என்பது அரசாங்கத்திற்குச் சொந்தமான முதலீட்டு நிறுவனம். அந்த நிறுவனம் வாங்கிய கடனுக்கு வட்டித் தொகை கட்டத் தவறினால் அனைத்துலக அளவில் மலேசியாவின் பெயர் தான் கெட்டுப் போகும்.

ஏற்கனவே திருட்டுப் பேரார்வத்தில் உலகச் சாம்பியன் என்கிற பட்டத்தை நம் நாடு வாங்கி விட்டது. அந்தப் பட்டம் நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதித்து விட்டது. கிளெப்டோகிரசி என்றால் திருடுவதில் பேரார்வம். 




அப்படி இருக்கும் போது வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாமல் விட்டால்... சொல்லவே வேண்டாம். உலகமே ஏளனமாகப் பார்க்கத் தொடங்கி விடும். அப்புறம் உலக முதலீட்டாளர்கள் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டார்கள். இரண்டு மூன்று தடவை யோசிப்பார்கள். சரி.

என்றைக்கு 1எம்.டி.பி. விவகாரம் தலைதூக்கத் தொடங்கியதோ அப்போது இருந்தே பற்பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்து உள்ளன.

2015 ஜூலை 29-ஆம் தேதி 1எம்.டி.பி. புலன் விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போது கோலாலம்பூர் புக்கிட் அமான் தலைமையகக் கட்டடத்தில் 10-ஆவது மாடியில் தீப்பற்றிக் கொண்டது. 




அங்கே தான் முக்கியமான  பழைய ஆவணங்களை எல்லாம் சேமித்து வைத்து இருந்தார்கள். இருந்தாலும் முக்கியமான ஆவணங்கள் எரிந்து போகவில்லை என்று அப்போதைய போலீஸ் தலைவர் கூறினார்.

ஒன்றை நீங்கள் இங்கே கவனிக்க வேண்டும். புக்கிட் அமான் 10-ஆவது மாடியில் தான் குற்றப் புலனாய்வுத் துறை இருக்கிறது. இந்தக் குற்றப் புலனாய்வுத் துறை தான் நஜிப்பின் வங்கிக் கணக்கு வழக்கை விசாரித்து வந்தது. நஜீப்பின் வங்கிக் கணக்கில் 260 கோடி ரிங்கிட் எப்படி வந்தது என்பதைப் பற்றி விசாரித்து வந்ததார்கள். சரிங்களா.

2013 ஜூலை 29-ஆம் தேதி அரபிய மலேசிய வங்கியின் தோற்றுநர் ஹுசேன் அமாட் நஜாடி (75) கோலாலம்பூர் லோரோங் சிலோனில் சுட்டுக் கொல்லப் பட்டார். அவருடைய மனைவி (49) படுகாயம் அடைந்தார். 

 


மலேசியாவில் ஒரு முக்கிய புள்ளியின் வங்கிக் கணக்கு இந்த அரபிய மலேசிய வங்கியில் தான் இயங்கி வந்தது. அரபிய மலேசிய வங்கியைத் தான் சுருக்கி ஆம் வங்கி என்கிறார்கள்.

Arab Malaysian Bank (AM Bank)

250,000 ரிங்கிட் தொகைக்கு மேல் ஒருவருடைய வங்கிக் கணக்கில் பணம் வைப்புத் தொகை செய்யப் பட்டால் மத்திய வங்கி பேங்க் நெகாராவுக்கு அறிவிக்க வேண்டும்.

Deposits are automatically protected for up to RM 250000 per person per bank. The RM 250000 limit includes both the principal amount and the interest.




2013 மார்ச் மாதம் 22-ஆம் தேதி மலேசிய மூத்த அரசியல்வாதியின் வங்கி கணக்கில் 2602 மில்லியன் ரிங்கிட் போடப் பட்டது. பணம் வைப்புத் தொகை செய்யப்பட்ட மறுநாள் ஹுசேன் அமாட் நஜாடி அதைப்பற்றி பேங்க் நெகாராவில் புகார் செய்து உள்ளார்.

2013 ஜூலை 25-ஆம் தேதி அதே அந்த மூத்த அரசியல்வாதியின் வங்கி கணக்கில் மேலும் 251 மில்லியன் ரிங்கிட் வைப்புத் தொகை செய்யப் பட்டது. அதையும் ஹுசேன் அமாட் நஜாடி பேங்க் நெகாராவுக்கு அறிவித்து இருக்கிறார்.




2013 மே மாதம் 5-ஆம் தேதி மலேசியாவின் 13-வது பொது தேர்தல். இந்தக் கட்டத்தில் அந்த மூத்த அரசியல்வாதியின் வங்கி கணக்கில் இருந்த பணம் பல கோடிகள் வெளியே எடுக்கப் பட்டன. இதையும் ஹுசேன் அமாட் நஜாடி பேங்க் நெகாராவுக்கு தெரியப் படுத்தினார். பேங்க் நெகாரா அமைதியாக இருந்தது.

இதனால் தம்முடைய வங்கிக்கு எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படும் என கருதிய ஹுசேன் அமாட் நஜாடி, 2013 ஜூலை மாதம் 28-ஆம் தேதி போலீஸிலும் புகார் செய்தார்.

புகார் செய்த மறுநாள் நஜாடி சுட்டுக் கொல்லப் பட்டார். இதைப் பற்றியும் புதிதாக ஒரு விசாரணை தொடங்கி விட்டது. அடுத்து ஊழியர் சேமநிதிக் கட்டடத்தில் தீ விபத்து.





2018 பிப்ரவரி 13-ஆம் தேதி மாலை 5:55-க்கு பெட்டாலிங் ஜெயா ஜாலான் காசிங்லில் உள்ள இ.பி.எப். ஊழியர் சேமநிதிக் கட்டடம் எரிந்து போனது. இதுவும் ஓர் அசம்பாவிதம்.

இங்கே இருந்து தான் 1064 கோடி ரிங்கிட் பணம் 1எம்.டி.பி. நிறுவனத்திற்குக் கொடுக்கப் பட்டதாகச் சரவாக் ரிப்போர்ட் சொல்கிறது. (3)

Following an investigation spanning several months, Sarawak Report has sighted numerous documents which reveal that since 2012 a group of operatives, assisted by two convicted foreign fraudsters, have collaborated to extract billions of dollars from EPF, KWAP, FELDA, FELCRA and other public savings funds and government linked companies.

2015 அக்டோபர் 9-ஆம் தேதி திரங்கானு, மாராங், அலோர் லிம்பாட் சட்டமன்ற உறுப்பினர் அலியாஸ் அப்துல்லா (51) அவருடைய வீட்டில் அடையாளம் தெரியாத இரு நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். இந்தக் கொலையின் வழக்கு தொடங்கப்பட்டு விட்டது.




அலியாஸ் அப்துல்லா முன்னாள் திரங்கானு முதலீட்டு வாரியத்தின் (Terengganu Investment Authority) கணக்கு வழக்குகளில் சம்பந்தப் பட்டவர். இந்தத் திரங்கானு முதலீட்டு வாரியம் தான் பின்னர் 1எம்.டி.பி. என மாற்றம் கண்டது.

2015 ஜூலை 14-ஆம் தேதி கோலாலம்பூர் ஜாலான் இம்பி லோயாட் பிளாசாவில் தேவையற்ற ஒரு கலவரம். ஒரு சாதாரண திருட்டுச் சம்பவம் ஒரு கலவரத்திற்கு இட்டுச் சென்றது. நல்லவேளை. முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டார்கள்.

1எம்.டி.பி. புலன் விசாரணையைத் திசை திருப்புவதற்காக இப்படி ஒரு சண்டையை யாராவது தூண்டிவிட்டு இருக்கலாம் எனும் கோணத்திலும் ஆராய்ந்து வருகிறார்கள். அதற்கான காரணங்களையும் ஆராய்ந்து பார்க்கிறார்கள். 




2013-ஆம் ஆண்டில் இருந்து இப்படி நிறைய நிகழ்ச்சிகள் நடந்து இருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஏன் நடந்தன என்பதை எவராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த நிகழ்ச்சிகளின் பின்னணிகளை மக்களிடம் இருந்து மறைக்கவும் முடியாது. ஒருநாளைக்கு உண்மை வெளியே தெரிய வரும்.

இந்தக் கட்டத்தில் அருள் கந்தாவைப் பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது. 2015-ஆம் ஆண்டு 1எம்.டி.பி.யின் தலைமை அதிகாரியாக அருள் கந்தா நியமிக்கப்பட்டார்.

அவர் 1எம்.டி.பி.க்குள் வருவதற்கு முன்பே 1எம்.டி.பி.யில் பற்பல முறைகேடுகள். எப்படி சமாளிப்பது என்று தடுமாறிக் கொண்டு இருக்கும் போது தான் அருள் கந்தாவை உள்ளே கொண்டு வந்தார்கள். 1எம்.டி.பி.யின் தப்புகளையும் தவறுகளையும் சரி செய்வதற்காகத் தான் அருள் கந்தா கொண்டு வரப்பட்டார். அங்கே தான் அருள் கந்தா நிற்கிறார்.

அருள் கந்தா 1எம்.டி.பி.யில் சம்பளம் வாங்கும் ஓர் அதிகாரி. ஒரு வருடத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் சம்பளம் என்று முதலில் பேசப்பட்டது.

1எம்.டி.பி.யின் தலைமை அதிகாரியாக பதவி ஏற்ற அருள் கந்தாவினால் எதையும் சரியாகச் செய்ய முடியவில்லை. அங்கேதான் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். மோசமாக இருந்த நிலைமையை இவர் மேலும் மோசமாக்கியது தான் மிச்சம்.

1எம்.டி.பி. வாங்கிய கடன்கள் கோடிக் கோடிகள். அவற்றின் வட்டியைக் கட்டுவதற்கு மேலும் மேலும் கடன்களை வாங்கினார். சொல்லப் போனால் வட்டிகளே குட்டிகள் போட்டு விட்டன. சமாளிக்க முடியாத நிலைமை.

ஒரு கடனை அடைப்பதற்கு இன்னொரு கடனை வாங்கினார். அந்தக கடனை அடைப்பதற்கு இன்னொரு கடனை வாங்கினார். இப்படி கடன் மேல் கடன்களை வாங்கி 1எம்.டி.பி.யைக் கடன்காரக் கடலில் மூழ்கடுத்தி விட்டார்.  அவரால் இயன்றதைத் தான் செய்தார். கடன்களில் இருந்து கடன்களைக் கழிக்க கடன்கள் வாங்கினார். அதுதான் உண்மை.

ஆனால் இப்போது அவருக்கு கிடைக்க வேண்டிய சம்பளமும் கிடைக்காமல்; போனஸ் எனும் ஊக்கத் தொகையும் கிடைக்காமல்; வெளிநாட்டிற்கு போகவும் முடியாமல் வீட்டிற்கு உள்ளேயே அடங்கிக் கிடக்கிறார். இவருக்கும் இப்போதைக்கு கஷ்ட காலம்.

(தொடரும்)

மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4
மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7

மலேசியா 1MBD மோசடி - 8
மலேசியா 1MBD மோசடி - 9
 

சான்றுகள்

1. Govt to fulfil 1MDB commitments, just paid RM208mil in interest - https://www.thestar.com.my/news/nation/2018/10/18/govt-to-fulfill-1mdb-commitments-just-paid-rm208mil-in-interest/

2. Arab Malaysian Banking Group founder Hussain Ahmad Najadi shot dead in parking lot, wife survives - https://www.thestar.com.my/news/nation/2013/07/29/shooting-ambank-founder-hussain/

3. Extensive evidence has emerged of an extraordinary operation to loot Malaysia’s public savings funds and pass billions of dollars into accounts controlled by individuals - http://www.sarawakreport.org/2018/02/ten-billion-in-bonds-looted-from-epf-to-raise-four-billion-dollars-for-najib-explosive-exclusive-2/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக