22 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 6

தமிழ் மலர் - 22.11.2018 - வியாழக்கிழமை

சுற்றும் காற்றாடி சுற்றிக் கொண்டுதான் இருக்கும். அடி ஆத்தாடி அடி அம்மாடி அடி என்னாடி என்றாலும் காற்றாடி நிற்காது. அது பாட்டிற்குச் சுற்றிக் கொண்டு தான் இருக்கும்.
 

அந்தக் காற்றாடி மாதிரியே 2015-ஆம் ஆண்டில் 1எம்.டி.பி.க்கு முதன்முதலாக ஒரு சுற்றல். உங்க வீட்டு எங்க வீட்டுச் சுற்றல் அல்ல. மேலே போகும் மேகத்து வரைக்கும் அண்ணாந்து பார்க்கிற மாதிரி சுற்றலோ சுற்றல்.

’இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே சரிதானா’ என்று ஜோக்கர் ஜோலோ குத்தாட்டம் முதல் கூத்தாட்டம் வரை தப்பாட்டம் போட்டார். அதனால் 1எம்.டி.பி.க்கு ஏடா கூடமாக வந்தது போராட்டம்.

அந்தச் சமயத்தில் நஜீப்பிடம் இருந்த சொத்து சுகங்களின் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்குமாறு ரோஸ்மா ஆலோசனை கூறி இருக்கிறார். விக்கிரமாதித்தனுக்கு ஒரு பட்டி இருந்தார். அந்த மாதிரி நஜீப் சாருக்கு ரோஸ்மா ஒரு சட்டாம்பிள்ளை.
 

பரம்பரை பரம்பரையாக வந்த சொத்துகள்; பாட்டன் முப்பாட்டன் வழியாக வந்த சொத்துகள்; அறிவிப்பதில் தவறு எதுவும் இல்லை; ஏன் பயப்பட வேண்டும் என்று ரோஸ்மா சொல்லி இருக்கிறார். அதற்கு நஜீப்பின் நான்கு சகோதர்களும் அந்த மாதிரி செய்வது சரியல்ல என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

தங்களின் தந்தையார் துன் ரசாக் பிரதமராக இருந்த வரையில் அவர் அதிகமாகச் சொத்துகள் எதையும் சேர்த்து வைக்கவில்லை. அவர் ரொம்பவும் கட்டு செட்டாகச் சிக்கனமாக வாழ்ந்தவர்.

அவருடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவது போல எதுவும் அமைந்துவிடக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். நஜீப் சகோதரர்களின் கருத்துகளைக் கேட்டு ரோஸ்மா பொங்கி எழுந்து எரிமலை மாதிரி வெடித்துச் சிதறி இருக்கிறார்.
 

நஜீப்பின் பிரதமர் பதவியைக் கவிழ்க்கத் திட்டம் போட வேண்டாம் என்று பதிலடி கொடுத்து இருக்கிறார். இந்த விவரத்தை நஜீப்பின் குடும்ப உறுப்பினர் ஒருவர் நியூயார்க் வால் ஸ்டிரீட் ஜர்னல் நாளிதழிடம் கூறி இருக்கிறார்.

இங்கே சொல்லப்படும் கருத்துகள் அனைத்தும் ஏற்கனவே உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களில் பதிவான செய்திகள். எங்களின் சொந்த கருத்துகளோ செய்திகளோ அல்ல. அந்தச் செய்திகளுக்கு தக்க சான்றுகளையும் பகிர்ந்து கொள்கிறோம்.

Wall Street Journal: Malaysia’s Extravagant Ex-First Lady Lands in Graft Investigators’ Sights.

https://www.wsj.com/articles/malaysias-extravagant-ex-first-lady-lands-in-graft-investigators-sights-1529958911

’வால் ஸ்டிரீட் ஜர்னல்’ நாளிதழ் மேலும் கூறுகிறது: நஜீப் பிரதமராகப் பதவி வகித்த போது அவருடைய பிரதமர் அலுவலகத்திலேயே ரோஸ்மாவுக்கு ஓர் அலுவலக அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. பிரதமர் அறைக்குப் பக்கத்திலேயே ரோஸ்மாவின் அறை. அவருக்கு உதவியாகச் சில அதிகாரிகளும் இருந்தார்கள்.
 

சில சிக்கலான அரசியல் முடிவுகளுக்குத் தீர்வு காண்பதற்கு ரோஸ்மா தான் உதவி செய்தாராம். அட என்ன கொடுமை சார் இது. முப்பது நாற்பது அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையை மிஞ்சிய அறிவாற்றலா?

அட சாமியோவ்! தலை சுற்றுகிறது சார். தெனாலி ராமனின் அதிசய சாமர்த்தியங்களில் அகடவிகட கோமாளித் தனம் நினைவிற்கு வருகிறது. மன்னிக்கவும்.

அதற்கு ஓர் எடுத்துக்காட்டு: 2009-ஆம் ஆண்டில் அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ மலேசியாவுக்கு வருகை தந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி.

நஜீப்புடன் பிரதமர் லீ குவான் இயூ பேச்சுவார்த்தை நடத்த தயார்நிலை. அந்தச் சமயத்தில் ரோஸ்மாவும் அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் லீ கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
 

ஏன் என்றால் நஜீப்பும் ரோஸ்மாவும் ஒரு குழுவாக இணைந்து நல்லபடியாக, சிறப்பாகச் சேவை செய்கிறார்களாம். சொன்னது முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ

ஆக அந்த அளவிற்கு ரோஸ்மா செல்வாக்குப் பெற்றவர் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ரோஸ்மா ஓர் அறிவார்ந்த அழகிய பெண்மணி. புத்திசாலி. திறமைசாலி. சாமர்த்தியசாலி. இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் 1எம்.டி.பி. விசயத்தில் தவறான அணுகுமுறையில் பயணித்து இருக்கிறாரே அது தான் வேதனையாக இருக்கிறது.

இனி ஒன்றும் செய்ய முடியாது. காலம் கடந்து விட்டது. சுனாமி வருவதற்கு முன்னதாகவே கடற்கரையை விட்டு சற்று உயரமான இடத்திற்கு ஓடிப் போய் இருக்க வேண்டும். சுனாமி சுருட்டுமா பினாமி புரட்டுமா என்று எதேச்சையாக இருந்து விடக் கூடாது.

ஒவ்வோர் ஆணின் வெற்றி தோல்விக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வார்கள். நிறைவேறா தாகங்களின் நிழலாகவும் இருக்கிறாள். நிறைவேறிய பாவங்களின் சுமையாகவும் இருக்கிறாள்.
 

இது முற்றிலும் உண்மை. 2015-ஆம் ஆண்டில் 1எம்.டி.பி. பிரச்சினை பற்றிக் கொண்ட போது நஜீப் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். அதைத் தடுத்து நிறுத்தியவர் ரோஸ்மா தான்.

இது இறைவனின் சோதனை. ராஜினாமா செய்ய வேண்டாம் என்று நஜீப்பை தடுத்து நிறுத்தி இருக்கிறார். இல்லை என்றால் நஜீப் தன் பதவியை ராஜினாமா செய்து இருப்பார். நிலைமை வேறு மாதிரி பயணித்து இருக்கலாம் என்பதே பலரின் கருத்து.


ஜோக்கர் ஜோலோ அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருந்த போது வளைகுடா நாட்டு அரசக் குடும்பங்களுடன் அவருக்கு நல்ல நட்பு முறை உறவுகள் இருந்தன. அந்த அரச நட்பு நன்மதிப்புகளை அடையாளம் காட்டி ரோஸ்மாவிடம் ஜோலோ நல்ல பெயர் எடுத்து விட்டார்.
 

சின்ன வயதில் பெரிய சாதனையாளர் என்று ஜோலோவை ரோஸ்மா புகழ்ந்து பேசி இருக்கிறார். இலண்டனில் நஜீப்பிற்கு ஒரு வீடு இருக்கிறது. அந்த வீட்டிற்குப் பக்கத்திலேயே ஜோலோவின் குடும்ப வீடும் இருந்து இருக்கிறது. அதனால் ரோஸ்மாவைச் சந்தித்துப் பேசவும் ஜோலோவிற்குச் சுலபமாகிப் போனது.

அபுடாபி நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு முதலீட்டு நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனத்திடம் பேசி மலேசியாவில் முதலீடு செய்ய ஏற்பாடுகள் செய்தவர் ஜோலோ. அந்த வகையில் அந்த நிறுவனத்திடம் இருந்து நஜீப்பிற்கு கடனாகப் பணம் பெற உதவியும் செய்தவர் ஜோலோ.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ரோஸ்மாவிற்கு ஜோலோவின் மீது நம்பிக்கை மேலும் கூடியது. ஜோலோவை ஒரு வெற்றித் திருமகனாகப் பார்த்தார். அதற்கு அடுத்த கட்டமாகத் தான் 1எம்.டி.பி. முதலீட்டு நிறுவனம் வருகிறது. ஜோலோ தான், முன் நின்று 1எம்.டி.பி. நிறுவனத்தை அமைத்துக் கொடுத்தவர். இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாது.

1எம்.டி.பி. நிறுவனத்தில் ஜோலோ தன்னிச்சையாகச் செயல் படுவதற்குச் சகல அதிகாரங்களையும் நஜீப் வழங்கி இருக்கிறார். நஜீப்பைக் கேட்காமலேயே 1எம்.டி.பி. நிறுவனத்தின் பல நிதிப் பிரச்சினைகளுக்கு ஜோலோ தன்னிச்சையாகவே முடிவு எடுத்து இருக்கிறார். எல்லாமே கோடிக் கோடியாகப் புரண்ட பணப் பரிவர்த்தனைகள்.
 

ஜோலோ ஒரு பிளேபாய். பலருக்கும் தெரிந்த விசயம். அந்த மன்மதப் பார்வையில் 1எம்.டி.பி. பணத்தைத் தண்ணீர் மாதிரி செலவு செய்த போது மேடம் போஸ் ரோஸ்மாவையும் மறக்கவில்லை.

நியூயார்க், துபாய், இலண்டன், பாரிஸ் போன்ற நகரங்களுக்குப் பறந்து சென்று விலை உயர்ந்த வைர நகைகள்; பிர்கின் பிஜான் கைப்பைகள்; ரேய் பென் போலரைட் கறுப்புக் கண்ணாடிகள்; ரோலெக்ஸ் ராடோ கைக்கடிகாரங்கள் போன்றவற்றைத் தேடிப் பிடித்து வாங்கி ரோஸ்மாவிற்கு அன்பளிப்பு செய்து இருக்கிறார்.

அந்த அட்டகாசமான ஆடம்பரமான அன்பளிப்புகளைக் கண்டு ரோஸ்மா வானத்தில் மிதந்து இருக்கலாம். உச்சி குளிர்ந்து நட்சத்திரக் கூட்டங்களின் மழையில் நனைந்து இருக்கலாம். தெரியவில்லை.

இருந்தாலும் நகைகளைக் கொண்டு பெண்கள் பலரைக் கவர்ந்துவிட முடியும் என்பதை ஜோலோ சின்ன வயதிலேயே நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கிறார்.

ரோஸ்மா எப்போதும் ஒரு கோடீஸ்வர வாழ்க்கை வாழ வேண்டும். அதில் இருந்து அவர் கீழே இறங்கி வந்துவிடக் கூடாது. அந்த வட்டத்திற்கு உள்ளேயே அவர் வாழ வேண்டும் என்று கண்ணும் கருத்துமாய்த் திட்டம் போட்டுத் தான் ஜோலோ காய்களை நகர்த்தி இருக்கிறார். கடைசியில் மலேசிய மக்களுக்கும் நன்றாகவே ஆப்பு வைத்து விட்டார்.
 

பிரதமர் ஆனதும் அமெரிக்காவிற்கு முதன்முறையாக நஜீப் பயணம் மேற்கொண்டார். அப்போது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் நஜீப் - ரோஸ்மா வருகையை இரு பக்கங்களுக்கு ஜோலோ விளம்பரம் செய்து அசத்தி இருக்கிறார்.

அது கவிதைகள் கலந்த ஒரு புகழ்மாலை விளம்பரம். விளம்பரத்திற்கு எவ்வளவு செலவு தெரியுங்களா. 450000 ரிங்கிட். அதாவது 4 இலட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்.

என்னங்க இது. அநியாயமாக இல்லை. இத்தனைக்கும் நஜீப் அப்படி ஒரு விளம்பரத்தைக் கேட்கவும் இல்லை. எதிர்பார்க்கவும் இல்லை. இத்தனைக்கும் அது அவருடைய ஓர் அதிகாரப்பூர்வ அமெரிக்கப் பயணம்.

இது இப்படி இருக்கும் போது அமெரிக்கப் பிரபலங்களைச் சந்திக்க ரோஸ்மா ஆசைப்பட்டு இருக்கிறார். மகுடி வாசிக்கத் தெரிந்த மன்மதக் குஞ்சு ஜோலோ. சும்மா இருப்பாரா. அமெரிக்கப் பிரபலங்கள்; ஹாலிவூட் நடிகர் நடிகைகள் கொண்ட ஒரு பெரிய விருந்து நிகழ்ச்சிக்குத் தடபுடலாக ஜோலோ ஏற்பாடு செய்து இருக்கிறார்.

பணம் தான் இங்கே கொட்டோ கொட்டுனு கொட்டுதே. அவர் வீட்டுப் பணம் இல்லையே. அப்புறம் என்னங்க. பெரிய ஆர்ப்பாட்டமான ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சி. நியூயார்க் செயிண்ட் ரெஜிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டலில் அந்த நிகழ்ச்சி. அதில் ரோபர்ட் டி நீரோ, ஜேமி பாக்ஸ் போன்ற புகழ்பெற்ற நடிகர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள்.

இந்தச் சமயத்தில் ரோஸ்மாவின் மூத்த கணவரின் மகன் ரிஷா அசீஸுக்கு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஜோலோ அமைத்துக் கொடுத்தார்.

அதன் பெயர் ரெட் கிரனைட் பிக்சர்ஸ். இந்த நிறுவனத்திற்கு 1எம்.டி.பி.யில் இருந்து 234 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. அமெரிக்க நீதித்துறை வழங்கிய புள்ளி விவரம் அது.

இந்த நிறுவனம் தான் ’தி ஊல்ப் ஆப் வால் ஸ்டிரீட்’ எனும் திரைப் படத்தைத் தயாரித்தது. அமெரிக்காவின் அகடமி விருதிற்கு முன்மொழியப்பட்ட படம்.

இந்தப் படத்தில் அமெரிக்கப் புகழ் லியார்னடோ டிகாப்ரியோ நடித்து இருந்தார். இவருக்கும் ஜோலோ விலை உயர்ந்த அன்பளிப்புகள் செய்து இருந்தார். அவை எல்லாம் அமெரிக்க நீதித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.

1எம்.டி.பி. நிறுவனத்தில் இருந்து இதுவரை 1890 கோடி ரிங்கிட் களவாடப்பட்டு உள்ளது. அமெரிக்க நீதித்துறை சொல்கிறது. எத்தனை கோடி என்பதைக் கவனியுங்கள்.

ஒரு கோடி அல்ல. இரண்டு கோடி அல்ல. 1890 கோடிகள். அத்தனைக் கோடிகளும் மலேசிய மக்களின் பணம். கடன் வாங்கியாச்சு. அப்புறம் என்ன. இனிமேல் தான் வியர்வை சிந்தி உழைத்துக் கட்ட வேண்டும். நீங்களும் நானும் தான். தாயின் வயிற்றில் கண் திறக்காத பிள்ளையும் கடன்பட்டு இருக்கிறது. அதை மறந்துவிட வேண்டாம்.

அந்தப் பணத்தின் ஒரு பகுதியில் இருந்து பிக்காசோ ஓவியம்; விலையுயர்ந்த மாளிகைகள்; ஹாலிவூட் திரைப்பட நிறுவனம்; 100 கோடி ரிங்கிட் சொகுசுக் கப்பல்; 80 கோடி ரிங்கிட் வைர நகைகள்; 35 மில்லியன் ஜெட் விமானம் போன்றவை வாங்கப்பட்டு உள்ளன.

இன்னும் நிறைய உள்ளன. சிலரின் சொந்தக் கணக்கில் பல கோடிகள் போய் பதுங்கிக் கொண்டன. பட்டியல் போட்டால் மயக்கம் வரும். மலேசிய மக்களின் சோகக் கதை நாளையும் வரும்.

(தொடரும்)

மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7


சான்றுகள்

1. When late Prime Minister of Singapore Lee Kuan Yew met with Najib in 2009, Lee invited Rosmah to join the discussion because he learned that Najib and Rosmah worked as a team. - https://www.feedme.com.my/11-things-exposed-about-rosmah-from-royal-childhood-marriage-stealing-billions-with-jho-low/

2. RM2.6 billion is a donation to me - https://www.feedme.com.my/najib-birkins-cash-and-jewellery-are-all-gifts-didnt-know-about-1mdb-scandal/2/

3. The Balloon Goes Up On 1MDB - Leo's Paintings, Rosie's Diamonds, Jho Low's Yacht and Miranda Kerr's Jewels Snatched By The Feds - http://www.sarawakreport.org/2017/06/the-balloon-goes-up-on-1mdb-leos-paintings-rosies-diamonds-jho-lows-yacht-and-miranda-kerrs-jewels-snatched-by-the-feds/

4. Rosmah’s pursuit of the trappings of wealth played a crucial part in pushing Najib’s administration deeper into graft, ultimately leading to the government’s downfall - http://www.thetruenet.com/debunked/wsj-rosmah-the-central-force-behind-najibs-actions-on-1mdb/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக