04 ஜூலை 2021

மலேசியப் பெண்ணியவாதி மேரி சாந்தி தைரியம்

தமிழ் மலர் - 04.07.2021

மலேசிய மனித உரிமை போராட்டவாதி. அனைத்துலகப் பெண்ணுரிமைப் போராளி. ஐக்கிய நாட்டுச் சபையின் மனித உரிமை தலைமை அதிகாரி. மலேசியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் இயற்றப் படுவதற்கு மூல காரணமாக இருந்தவர். அழகிய அறிவார்ந்த பெண்மணி. மலேசியத் தமிழ்ப் பெண்ணியவாதி. மேரி சாந்தி தைரியம். கைகூப்புகிறோம்.


மலேசியாவின் மகளிர் உதவி அமைப்பு (Women’s Aid Organisation (WAO) தோன்றுவதற்கும் முன்னோடியாக இருந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழுவில் இருந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழுவிலும் (Committee on the Elimination of All Forms of Discrimination against Women) பணியாற்றியவர்.

மேரி சாந்தி தைரியம் (Mary Shanthi Dairiam). ஓர் அற்புதமான மலேசியச் சமூகச் சேவகி. மலேசியாவில் பலருக்கும் இவரைத் தெரியாது. வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டியது நம் கடமையாகும்.

இப்படி உலகப் பெண்களுக்காகப் போராடிய பெண்கள்; போராடும் பெண்களை எல்லாம் மேலாதிக்கப் பெரும் தலைவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இனவாதத்தில் மனவாதம் கலந்தால் மனிதவாதம் மறைந்து போகலாம். அந்த வகையில் இந்தப் பெண்மணியும் மறக்கப்பட்டு இருக்கலாம். ஒரு செருகல்.


தயிர் ரசம், மிளகு ரசம், பருப்பு சாம்பார் காணொலிகள் செய்து ஒரே நாளில் உலகப் புகழ் பெறும் சோடா புட்டிகளுக்குத் தான் இன்றைய காலத்தில் மவுசு அதிகம். விளம்பரங்களும் அதிகம். அப்படிப் பட்டவர்களுக்குத் தான் அதிகம் வெளிச்சமும் கிடைக்கிறது. அசலுக்கு மவுசு குறைவு.

மேரி சாந்தி தைரியம். குடும்ப வன்முறைகளுக்கு எதிராக 1980-ஆம் ஆண்டுகளில் மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து பல மாதங்களுக்குப் பரப்புரைகள்; கண்டனக் குரல்கள் எழுப்பியவர். குடும்ப வன்முறை மசோதாவைச் சட்டமாக்குவதற்கு (Domestic Violence Act) போராட்டம் செய்து வெற்றியும் கண்டவர்.

அவரின் தொடர் பரப்புரைகளினால் தான் 1994-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டம் (Domestic Violence Act 1994) மலேசிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. 2012-ஆம் ஆண்டில் அந்தச் சட்டம் மறுதிருத்தம் செய்யப் பட்டது. பின்னர் 2017-ஆம் ஆண்டு (Domestic Violence (Amendment) Act 2017) என்று மறுபடியும் திருத்தம் செய்யப்பட்டது.


ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரைச் சும்மா கையை நீட்டி ஓர் அடி அடித்தாலே போதும். கையில் விலங்குடன் அந்தச் சட்டம் ஓடி வந்து எட்டிப் பார்க்கும். மேரி சாந்தி கொண்டு வந்த சட்டம்.

இது பெண்களுக்கு மட்டும் உதவும் சட்டம் அல்ல. ஆண்களுக்கும் உதவுகிறது. கோபத்தில் மனைவி ஒரு கரண்டியை எடுத்து புருசன்காரன் மீது ஒரு வீசு வீசி... அது படாத இடத்தில் பட்டு...  ஒரு சின்ன சிராய்ப்புக் காயம் பட்டு... ரெண்டு சொட்டு இரத்தம் வந்து... அது போதுங்க. பொம்பளைய பிடிச்சு உள்ளுக்கு வச்சிடலாம்.

‘வாராயோ தோழி வாராயோ’ என்று குடும்ப வன்முறைச் சட்டம் கதவைத் தட்டும். அப்புறம் அந்த ராணி லலிதாங்கி கம்பி எண்ண வேண்டி வரலாம்.

ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் மீது அல்லது ஓர் ஆணின் மீது வார்த்தைகளால் வன்முறை நிகழ்ந்தாலும் இந்தச் சட்டம் பாயும். சரிங்களா.

குடும்ப வன்முறை என்றால் என்ன. ஒரு குடும்ப உறுப்பினர் இன்னும் ஒரு குடும்ப உறுப்பினர் மீது பயன்படுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறைக்குத்தான் குடும்ப வன்முறை என்று பெயர். இது கணவன், மனைவி மீது அல்லது மனைவி, கணவன் மீது செலுத்தும் வன்முறையைப் பொதுவாகச் சுட்டுகின்றது.

அது யாராக இருந்தாலும் சரி; துணையைத் துன்புறுத்தல் பல வடிவங்களில் வெளிப்படலாம். அடித்தல், பயமுறுத்தல், பாலியல் வற்புறுத்தல், உளவியல் முறையில் வற்புறுத்தல், திருமண முறிவு என்று பயமுறுத்தல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று பயமுறுத்துதல் என்று பல வழிகளில் இது வெளிப்படலாம்.

கணவன் மனைவி என்று இல்லை. குடும்ப அமைப்பில் உள்ள ஆண் பெண் எவராக இருந்தாலும் இந்தக் குடும்ப வன்முறைச் சட்டம் மூலமாக நீதி கேட்கலாம்.

’நான் தாலி கட்டியவன். நான் சொன்னால் நீ கேட்கணும்டி’ என்று வறுபுறுத்தி படுக்கை அறைக்கு இழுத்துக் கொண்டு போவது எல்லாம் தப்பு. மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவன் தன் மனையைத் தொட்டாலே அது ஒரு வகையான வன்முறைதான். அது சட்டப்படி குற்றம். அதற்காக இதை வைத்துக் கொண்டு கணவனை மிரட்ட வேண்டாம் பெண்களே.


புருசன்காரன் தானே என்று குடும்பப் பெண்கள் பெரும்பாலும் பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்துப் போய் விடுவார்கள். பெண்களுக்கே உள்ள இயல்பான குணம். கணவனுக்கு விட்டுக்கொடுத்துப் போகும் குணம். இருந்தாலும் வற்புறுத்தலின் பேரில் விட்டுக் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். இந்த இடத்தில் வற்புறுத்தல் வந்து நிற்கிறது. வற்புறுத்தல் என்பது ஒரு வகையில் பயமுறுத்துவது போலாகும்.

’நான் சொல்லி நீ கேட்கவில்லை. உனக்கு இனிமேல் ஒரு காசு தர மாட்டேன் போடி’ என்று சொல்வது குற்றம் அல்ல. ஆனால் அதைச் சொல்லி வறுபுறுத்தி அவளை இணங்க வைப்பது குற்றமாகும். புரியும் என்று நினைக்கிறேன்.

‘வந்து தொலை... வாங்கி வந்த வரம்’ என்று ஒரு மனைவி சொல்வதிலும் வன்முறை தொக்கி நிற்கிறது. நன்றாகக் கவனியுங்கள். வற்புறுத்தலைத் தாங்க முடியாமல் அந்தப் பதில் வருகிறது. ஆக இது ஆண் மீதான வன்முறைக் குற்றம்.


ஆக இந்தச் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்கச் சமாதானமாகப் பேசி விட்டுப் போகலாமே. ’இகோ’ தனமையைத் தவிர்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது.

’உலகத்திலேயே நீ தாண்டி அழகி. உன்னைத் தவிர வேறு எவளும் அப்ரஸ் இல்லடி’ என்று இரண்டு வார்த்தை ஆசையாகப் பேசினால் போதுங்க. கதை முடிஞ்சது. மறுபேச்சு இல்லை. காலடியில் வந்து விழுந்து விடுவாள். அப்புறம் எதற்கு பலாத்காரம். சண்டை; பிணக்கு; முறைப்பு எல்லாம்.

அல்வா இனிப்பான பொருள். அதை ஒரேயடியாக ’லபக்’ என்று முழுங்குவதைக் காட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சாப்பிட்டுப் பாருங்கள். சுவையே வேறு மாதிரியாக இருக்கும். சமயங்களில் தமிழ்க் கட்டுரைகளில் துணுக்கு ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறோமே. அந்த மாதிரி என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

மனைவியைப் புகழ்ந்து பேசி காரியத்தைச் சாதிப்பதை விட்டு விட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே சமயத்தில் புருசன்காரன் அமைதியாக அன்பாக இருக்கிறானே என்று பெண்கள் சிலர் புருசன்காரனை ஏறி மிதிப்பதும் உண்டு. நடக்கிற காரியம் தான். சான்றுகள் உள்ளன.

எல்லாக் குடும்பங்களிலும் அல்ல. சில குடும்பங்களில் நடப்பது உண்டு. அப்படிப்பட்ட மனைவியை இரண்டு நாள்களுக்குக் கண்டு கொள்ள வேண்டாம். அவள் சமைத்ததைச் சாப்பிட வேண்டாம். மூன்றாவது நாள் அவளே இறங்கி வந்து விடுவாள்.

ஆக இப்படிப்பட்ட ஒரு குடும்ப வன்முறைச் சட்டம் கொண்டு வரப் படுவதற்கு அல்லும் பகலும் உழைத்த மேரி சாந்தி தைரியம் அம்மாவுக்குத் தாராளமாக ஒரு கைதட்டல் கொடுக்கலாமே. அதில் ஓரவஞ்சனை வேண்டாமே.

மேரி சாந்தி தைரியம், 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர் (முன்பு University of Madras). 1991-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுசேக்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Sussex) மாஸ்டர்ஸ் பட்டம் செய்தவர். ஆங்கில மொழி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இன்றும் அதே இளமைத் துடிப்புடன் மனித உரிமைப் போராட்டவாதியாகப் பயணித்துக் கொண்டு வருகிறார்.

ஐக்கிய நாட்டுச் சபையின் அறிவுரைஞராகவும் சேவை செய்து இருக்கிறார். அவருடைய மனித உரிமைச் சேவைகள் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துவோம்.

ஐ. நா. சபையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழு (UN's Gender Equality Task Force); பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழு போன்றவற்றில் பணியாற்றியவர்.

2010-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டு காசா போரைப் பற்றிய ஆய்வறிக்கையைத் தயாரிக்க ஐக்கிய நாட்டுச் சபை மூன்று பேரை அங்கு அனுப்பி வைத்தது. அந்த மூவரில் மேரி சாந்தி தைரியம் அவர்களும் ஒருவர். இப்படி ஒரு பெரிய அமைதித் தூதுவராகப் பணியாற்றியவர்.

பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் நீக்க ஒரு காப்பகம் தோற்றுவிக்கப்பட்டது. அது அனைத்துலகப் பெண்ணுரிமை காப்பகம். அந்தக் காப்பகத்தின் ஆசியப் பிரிவின் நிறுவனர்; தற்போதைய இயக்குனரும் இவரே. (International Women's Rights Action Watch - Asia Pacific)

இவர் பல பசிபிக் நாடுகளுக்கு பெண்ணுரிமை அறிவுரைஞராகவும் திகழ்கிறார். இவர் எழுதிய ’ஒரு பெண்ணின் சமத்துவ உரிமை: சிடாவின் வாக்குறுதி’ (A Woman’s Right To Equality: The Promise Of Cedaw) எனும் நூல் தாய்லாந்து பாங்காக் நகரில் பெண்ணுரிமை மாநாட்டில் (Beijing +20 conference) வெளியிடப் பட்டது.

இப்படிப்பட பெண்களை உலகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டும். பெண்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பெண்ணியத்திற்கு மரியாதை செய்ய வேண்டும். ரசம் அதிரசம் காணொலிகள் தயாரிக்கும் போலி விளம்பரப் பிரியர்களுக்கு அல்ல; சிறுபான்மை இனத்தைச் சிறுமைப் படுத்தும் சின்னக் கொசுறுகளுக்கு அல்ல.

உண்மையாக இந்த நாட்டை உருமாற்றியவர்களின் உயரத்தை ஏற்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு பெண்டத்தாங், பெனும்பாங் என்று பிதற்றி, உளறிக் கொட்டும் அரை வேக்காடுகளுக்கு அல்ல.

அதிரசம் பாரம்பரியச் சொத்து; ரசம் எங்க பாட்டி செஞ்ச பருப்பு சாம்பார் என்று சொல்லும் சோடா புட்டிகளைக் கண்டும் காணாமல் போய்விட வேண்டும்.

பேஸ்புக் ஊடகத்தில் பகாங் சத்யா ராமன் ஒரு வாசகம் எழுதி இருந்தார். நினைவிற்கு வருகிறது. "குருணை அரிசியும் கழுத்தறுத்தான் கருவாடும்" ஒரு நாவலுக்கு ஏற்ற தலைப்பு.

தோட்டங்களில் நாம் சொந்தமாகக் காய்கறிகளைப் பயிரிட்டு சமைத்து உண்டு வந்த வேளையில்; இன்று சொகுசு பேசும் சோம்பேறிகள் பலரின் அன்றைய உணவே அதுதானே?

இந்த வேதாந்தத்தை மறந்து விட்டவர்கள் இன்று ஒரு நாடே தங்களுடையது என்று சித்தார்த்தம் பேசுகிறார்கள். கங்கையில் குப்பை எரிந்தால் கங்கையின் மவுசு எப்போதுமே குறைந்து விடாது. அப்படித்தான் நாமும் இங்கே... என்று எழுதி இருக்கிறார். சரி.

மேரி சாந்தி தைரியம் போன்ற இந்தியப் பெண்கள் நிறைய பேர் இங்கேயும் எங்கேயும் ஜொலிக்கின்றார்கள். இருந்தாலும் மேலாண்மையின் அதிகார ஆதிக்க அழுத்தங்களின் காரணமாகப் பலர் இன்னமும் இலை மறை காய்களாகவே மறைந்து போய் நிற்கின்றார்கள். இதையே காலத்தின் கொடுமை என்று பலரும் சொல்கின்றார்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.07.2021

சான்றுகள்:

1. Mary Shanthi Dairiam (Malaysia) (pdf). Office of the United Nations High Commissioner for Human Rights.

2. Mary Shanthi Dairiam - https://en.wikipedia.org/wiki/Mary_Shanthi_Dairiam

3. Malaysian human rights and women's rights advocate - http://www.dtp.unsw.edu.au/mdm-mary-shanthi-dairiam

4. A Woman’s Right To Equality: The Promise Of Cedaw - https://www.star2.com/people/2015/01/01/fighting-for-equality/

5. International Expert Leads High Level Anti-Discrimination Forum for Royal Government of Cambodia". UNIFEM.






 

28 ஜூன் 2021

பினாங்கு உருவாக்கத்தில் அந்தமான் தமிழர்கள் - 1786

தமிழ் மலர் 28.06.2021

மலேசியாவில் காபி என்று சொன்னால் போதும். ஈப்போ வெள்ளைக் காபி (Ipoh White Coffee) நினைவுக்கு வரலாம்; காபித்தாம் (Kopitiam) நினைவுக்கு வரலாம்; அப்படியே காபி சாம் (Coffee Cham); காபி சி (Kopi-c); காபி ஓ (Kopi-o); காபி மின் திம் (Kopi min-tim); இப்படி இன்னும் பல வகையான் காபிகள் நினைவுக்கு வரலாம்.

சாப்பிட்டால் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். அது தொலைக்காட்சியில் ஒரு விளம்பரப் பாணி. அதாவது டிரெண்ட். அந்தப் பாவனையில் குடித்தால் குடித்துக் கொண்டே இருக்கலாம் எனும் என்னுடைய டயலாக்கையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சரி.
 

மலாயாவுக்கு காபி எப்படி வந்தது. இந்தக் கதை பலருக்கும் தெரியாது. காபி குடிக்கத் தெரியும். கமெண்ட் அடிக்கத் தெரியும். ஆனால் காபி மலாயாவுக்கு வந்த கதை பலருக்கும் தெரியாது. அதோடு மலாயாவில் காபி பயிர் செய்யப்பட்ட கதையும் தெரியாது. ஒன் மினிட் பிளீஸ்.

இந்தக் காபியும் காபிச் செடியும் வருவதற்கு முன்னதாகவே தமிழர்கள் மலாயாவுக்கு வந்து விட்டார்கள். இந்தப் பாயிண்டைப் பிடித்துக் கொள்ளுங்கள். சரி. மெட்ராஸ் மாநிலம் தான் தமிழர்களை இலட்சக் கணக்கில் அனுப்பி வைத்த முதல் மாநிலம். இதுவும் ரொம்ப பேருக்குத் தெரியாது.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். 1786-ஆம் ஆண்டில் பினாங்குத் தீவிற்குத் தமிழர்கள் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சுவடுகள் அப்போதைய பதிவுகளில் இருக்கும். இப்போது இருக்குமா தெரியவில்லை. அதிரசம் இடியப்பம் காணாமல் போனது மாதிரி அதுவும் அடிபட்டுப் போய் இருக்கலாம். சொல்ல முடியாது. 


ஒரு திருத்தம். காபி பயிர் செய்வதற்காகத் தமிழர்கள் கொண்டு வரப்படவில்லை. மலாயா காடுகளை வெட்டிச் சமப்படுத்த வேண்டும். மனிதர்கள் ஓடிப் பிடித்து விளையாட வேண்டும். அப்படியே குடியிருப்பு பகுதிகளை உருவாக்க வேண்டும். அதற்காகத் தான் தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.

1858-ஆம் ஆண்டில் தான் தமிழ்நாட்டில் இருந்து அந்தமான் தீவுகளுக்கு கைதிகள் அனுப்பப் பட்டார்கள். அதற்கு முன்னர் 1780-ஆம் ஆண்டுகளில் மலாயாவுக்கும் பெங்கூலனுக்கும் ஏறக்குறைய 15 ஆயிரம் கைதிகள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். அந்தக் கைதிகள் சிலர் தான் பினாங்கிற்குப் பின்னாட்களில் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள்.

(சான்று: Yang, Anand A. “Indian Convict Workers in Southeast Asia in the Late Eighteenth and Early Nineteenth Centuries.” Journal of World History, vol. 14, no. 2, 2003, pp. 179–208. JSTOR, www.jstor.org/stable/20079205. Accessed 27 June 2021.)

(Indian labourers, most likely former convicts, repairing a road in front of the since demolished Chartered Bank Building along Battery Road, circa 1890. Image reproduced from Liu, G. (1999). Singapore: A Pictorial History 1819–2000. Singapore: Archipelago Press in association with the National Heritage Board.)



India dispatched 4000 - 6000 convicts to Bencoolen between 1787 and 1825 and 15,000 to the Straits Settlements between 1780 and 1860. Another 1,000 - 1,500 were transported from Ceylon to Malacca in the Straits Settlements between 1849 and 1873, and several thousands were sent to Burma and to the areas outside of Southeast Asia, principally Mauritius between 1815 and 1837 and the Andaman Islands after 1857.

(சான்று: Nicholas and Shergold ''Transportation as Global Migration" in Convict Workers p.30, Bernard Bailyn, The Peopling of British North America: An Introduction (Madison, 1986), p.121

அந்தக் கட்டத்தில் பினாங்குத் தீவைத் திறப்பதற்கு கிழக்கிந்தியக் கம்பெனியாருடன் பிரான்சிஸ் லைட் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். பினாங்குத் தீவைத் திறப்பதற்கு ஒப்புதல் கிடைத்தால் கைதிகளில் ஒரு பகுதியினரைப் பினாங்குத் தீவிற்கு அழைத்துச் செல்லலாம் என்றும் எண்ணம் கொண்டு இருந்தார். அதே போல ஒப்புதல் கிடைத்தது. 1786 ஜுலை 17-ஆம் தேதி பினாங்குத் தீவைத் திறப்பதற்கு மூன்று கப்பல்களில் வந்தார்.  



100 தமிழ்நாட்டுச் சிப்பாய்கள்; 30 லாஸ்கார் வீரர்கள் (lascars); 15 பீரங்கிப்படை வீரர்கள்; 5 பிரிட்டிஷ் அதிகார்கள்; கூடவே 40 தமிழர்களையும் அழைத்து வந்தார். இந்தத் தமிழர்கள் தான் பினாங்குத் தீவில் முதன்முதலில் காடுகளை அழிப்பதற்கும் சாலைகள் அமைப்பதற்கும் முன்னோடிகளாக இருந்தவர்கள்.

அந்த வகையில் மலாயாவுக்கு வந்த மூத்த தமிழர்கள் சாதாரண தமிழர்கள் அல்ல. மலையூர் மண்ணின் வளப்பத்திற்கும் செழிப்பிற்கும் மந்திரச் சொற்களை வாசித்துக் முதல் மனிதர்கள்.

மலாயா காடுகளைக் கேளுங்கள். மரம் செடி கொடிகளைக் கேளுங்கள். ரொம்ப வேண்டாம். மக்கிப் போன மரங்களையும் கேட்டுப் பாருங்கள். அவைகூட அழுது கொண்டே பதில் சொல்லும்.

மலாயா தமிழர்கள் வாசித்து வந்த மந்திரச் சொற்களின் சாரலில் அவர்களும் நனைந்து கரைந்து கடைசியில் காணாமல் போய் விட்டார்கள். அந்த வாயில்லா ஜீவன்களுக்கு முதல் வணக்கம். முதல் மரியாதை. 


மலாயா தமிழர்கள் வாசித்த அந்த மந்திரச் சொற்கள் காலத்தால் மறக்க முடியாத உண்மைகள். அந்த உண்மைகளுக்குள் இன்னும் ஓர் உண்மை மறைந்து உள்ளது. அந்தக் கித்தா தோப்பு ஜீவன்களே இந்த நாட்டின் மறக்க முடியாத ஜீவகாருண்யங்கள். அதுதான் மறைந்து கிடக்கும் உண்மை.

வரலாறு தெரியாதவர்கள்; அல்லது வரலாறு படிக்காதவர்கள்; அல்லது அந்த வரலாற்றையே மறைப்பவர்களின் பார்வையில், வேண்டும் என்றால் அந்த வாயில்லா ஜீவன்களுக்குப் பெயர் வந்தேறிகளாக இருக்கலாம். பெனும்பாங் என்றும் இருக்கலாம். ஆனால் வரலாறு தெரிந்தவர்களின் பார்வையில் அவர்கள் வந்தேறிகள் அல்ல. சத்தியமான தியாகச் சீலங்கள்.

உண்மையை உரசிப் பார்த்தால் அந்தக் கித்தா தோப்பு ஜீவன்கள் தான் அச்சு அசலான மைந்தர்கள். அம்சமான மண்வாசனைகள். வாய் இருந்தும் வாய்விட்டுப் பேச முடியாத அந்த வாயில்லா பூச்சிகளினால் தான் மலைநாட்டு மண்வாசனையை இன்னமும் பலர் சுவாசித்துக் கொண்டு இருக்கிறார்கள். 


உண்மையைச் சொன்னால் சிலருக்குக் கோபம் வரலாம். சண்டைக்கும் வரலாம். பிரச்சினை இல்லை. சபைக்கு உதவாத சோம்பேறிகளைப் பற்றி பேசுவதினால் யாருக்கும் எவருக்கும் எந்த நன்மையும் இல்லை.

1786-ஆம் ஆண்டில் கெடா சுல்தானிடம் இருந்து பிரான்சிஸ் லைட் (Francis Light) ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். பினாங்குத் தீவைப் பெற்றுக் கொண்டார். இதுவும் ஒரு பெரிய வரலாறு. 
 
பினாங்குத் தீவு ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போது அது ஒரு பெரிய காடாக இருந்தது. மனிதர்கள் எளிதாக நுழைந்து போக முடியாத காடுகள். ஓர் ஆள் உயரத்திற்கு நிரம்பி வழிந்த காட்டுப் புதர்கள். லாலான் காடுகள். அந்தக் காடுகளிலும் அந்தப் புதர்களிலும் பல வகையான விலங்குகள் காட்டு தர்பார் செய்து கொண்டு இருந்தன.

அந்தப் பக்கம் காட்டு யானைகள். இன்னொரு பக்கம் காட்டுப் புலிகள். மற்றொரு பக்கம் மலைப் பாம்புகள். இந்தப் பக்கம் காண்டா கரடிகள். சும்மா சொல்லக் கூடாது. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேரன் பேத்திகள் எடுத்து பெரிய காட்டுக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து இருக்கின்றன. அந்தக் காடுகளை அழிப்பதற்கு அப்போது ஆட்கள் தேவைப் பட்டார்கள்.

அப்போது பினாங்குத் தீவில் பெரும்பாலும் மீனவர்கள் வாழ்ந்தார்கள். எளிய வாழ்க்கை முறை. எளிமையான வாழ்வியல் அமைப்பு. ஒருபுறம் கடலிலும் ஆற்றிலும் கிடைத்த மீன்கள். இன்னொரு புறம் மணல் மேடுகளில் கிடைத்த மரவெள்ளிக் கிழங்குகள். சுட்டுப் பொசுக்கிச் சாப்பிடுவதில் மனநிறைவு. எளிதான வாழ்க்கை. ஆக அப்படி வாழ்ந்தவர்களுக்கு காடுகளை அழிக்கும் வேலைகள் சரிபட்டு வரவில்லை.


பக்கத்தில் இருந்த இந்தோனேசியா ஜாவா தீவில் இருந்து மக்களைக் கொண்டு வந்தார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள். ஆனால் ஒரு பலகீனம். சம்பளம் போட்டதும் சில நாட்களுக்கு வேலைக்காட்டுப் பக்கமாய்த் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள். வேலைகள் அப்படி அப்படியே நின்று போகும்.

அதனால் தமிழகத்தில் இருந்து தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். ஒப்பந்தக் கூலிகளாக அல்ல. இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்களின் அரசியல் கைதிகளாக வந்தார்கள். அதாவது நாடு கடத்தப் பட்டார்கள். அப்படி வந்தவர்கள் எல்லாம் அங்கே இந்தியாவின் விடுதலைக்காகப் போராடியவர்கள். முதலில் சின்னச் சின்னக் குற்றங்களைச் செய்தவர்கள் பினாங்கிற்குக் கொண்டு வரப் பட்டார்கள்.

ஆக அப்படிக் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் தான் பினாங்கு மலைக் காடுகளை வெட்டிச் சீர் செய்தார்கள். காண்டா காடுகளை வெட்டித் துப்புரவு செய்தார்கள். குடியிருப்புப் பகுதிகள் உருவாக்கித் தந்தார்கள். வெள்ளைக்காரர்கள் ’கோல்ப்’ விளையாட திடல்களையும் செய்து கொடுத்தார்கள். காடு மேடுகளாய்ப் பரந்து கிடந்த பினாங்கை, மக்கள் வாழும் திண்ணை மேடுகளாக மாற்றிக் காட்டினார்கள். அதன் பின்னர் தான் 1800-ஆம் ஆண்டுகளில் பினாங்கில் காபி பயிர் செய்யப் பட்டது. 


ஏற்கனவே 1750-ஆம் ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குத் தமிழர்கள் நாடு கடத்தப்பட்டு வந்தார்கள். இந்தியாவில் வெள்ளையர்களை எதிர்த்தவர்கள் எல்லாம் அந்தமானுக்கு நாடு கடத்தப் பட்டார்கள். 1786-ஆம் ஆண்டு பினாங்குத் தீவு திறக்கப் பட்டதும் அங்கேயும் தமிழர்கள் நாடு கடத்தப் பட்டார்கள்.

ஆக அப்படி வந்த தமிழர்கள் தான் பினாங்கு தீவின் காடுகளை அழித்தார்கள். ரோடுகளைப் போட்டார்கள். மறுபடியும் சொல்ல வேண்டி வருகிறது. இல்லை என்றால் மறந்து போகும். அப்புறம் என்னாங்க. பக்கத்தில் இருக்கும் மனைவியையே மறந்து போகும் காலத்தில் ரொம்ப பேர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆக எல்லாவற்றையுமே இரண்டு மூன்று முறை சொல்ல வேண்டி வருகிறது.
 
மலாயாவுக்கு வந்த தமிழர்கள், மற்றவர்கள் சுகமாய் மகிழ்ச்சியாய் வாழும் அளவிற்கு நல்லது செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அவர்கள் போட்டுக் கொடுத்த சாலைகளில் தான் பலரும் இப்போது சொகுசாய்க் கார் ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். என்னையும் பாருங்க என் அழகையும் பாருங்க என்று செல்பி படங்களையும் எடுத்துக் கொள்கிறார்கள்.

அந்தச் சொகுசு ராசா ராசாத்திகளில் சிலர்; காடுகள் அழித்தவர்களைப் பார்த்து பெனும்பாங் என்கிறார்கள். சரியான லூசுகள். அந்த மேனா மினுக்கி லூசுகளை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. நோ சூடு. நோ சொரணை.


இன்னும் ஒரு விசயம். இங்கிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ஆங்கிலேயர்கள் தான் இப்போது ஆஸ்திரேலியாவின் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தான் இன்றைக்கும் ஆஸ்திரேலியாவை ஆட்சி செய்கிறார்கள். ஆனால் பினாங்கிற்குக் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் என்ன ஆனார்கள். பினாங்கு தண்ணீர்மலை முருகப் பெருமானுக்குத் தான் தெரியும்.

என்னைக் கேட்டால் அட்ரஸ் இல்லாமல் கழற்றிவிடப் பட்டார்கள். அதுவே ஒரு வரலாற்றுக் கொடுமை. ஆக இப்படியும் சொல்லலாம். 1780-ஆம் ஆண்டுகளில் பினாங்கு தீவு என்பது மலாயா கட்டுமானத்தின் முன்வைப்பு. பினாங்கு முன்னோடி பிரான்சிஸ் லைட் அவர்களின் முன்னெடுப்பு. அதுவே தமிழர்களின் முதன்மைப் பங்களிப்பு.

இன்னும் ஒரு விசயம். பினாங்கு தமிழர்கள் தான் பினாங்கு கொடிமலையில் பாதை அமைத்துக் கொடுத்தார்கள். பினாங்கு கொடி மலையில் இருந்து குடி நீரை மாட்டு வண்டிகளில் தோம்பு கட்டிக் கொண்டு வந்தார்கள். ஜார்ஜ் டவுன் நகரத்தில் வாழ்ந்த எல்லா இன மக்களுக்கும் விநியோகம் செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்து கொடுத்த பச்சைத் தண்ணீரைக் குடித்து அவர்களுக்கே பச்சையாகத் துரோகம் நினைகலாமா?


பினாங்கு வனப்பூங்காவை 150 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்புச் செய்தார்கள். அது மட்டும் அல்ல. குட்டித் துறைமுகமாக இருந்த பினாங்கு துறைமுகத்தைப் பெரிய பரிமாணத்தில் வார்த்துப் பெருமை செய்து இருக்கிறார்கள். பினாங்கு சாலைகளின் கட்டுமானத்தை அமைத்துக் கொடுத்தவர்களும் மலாயா தமிழர்கள் தான். ரொம்ப வேண்டாம்.

பாயான் லெப்பாஸ் விமானத் திடலை அமைத்துக் கொடுத்தவர்களும் மலாயா தமிழர்கள் தான். பினாங்கு ஜெட்டி துறைமுகத்தை அமைத்துக் கொடுத்தவர்களும் தமிழர்கள் தான். கொடிமலைக்கு இரயில் பாதையைப் போட்டுக் கொடுத்தவர்களும் தமிழர்கள் தான்.

1867-ஆம் ஆண்டு பினாங்கில் வாழ்ந்த தமிழர்கள் பற்றிய ஓர் அபூர்வமான புகைப்படம் உள்ளது. 1800-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே தமிழர்கள் மலாயாவுக்குக் கொண்டு வரப் பட்டதைச் சித்தரிக்கும் படம்.

நமக்கு கிடைத்த சான்றுகளின் படி, 1837-ஆம் ஆண்டு 2000 தமிழர்கள் பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். இது அதிகாரப்பூர்வமற்ற குடியேற்றம். மெட்ராஸ் அரசாங்கத்திற்குத் தெரியாமல் நடைபெற்றது. முன்னர் காலத்தில் சென்னை மாநிலத்தை மெட்ராஸ் அரசாங்கம் என்று அழைத்தார்கள்.

சில வரலாற்றுப் படங்கள் கிடைத்து உள்ளன. அந்தப் புகைப்படங்களை எடுத்தவர் கிரிஸ்டன் பீல்பர்க் (Kristen Feilberg). 1867-ஆம் ஆண்டு பாரிஸ் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப் பட்டது. இந்த மாதிரியான வரலாற்றுப் படங்கள் இல்லை என்றால் வந்தேறிகள் என்று சொல்கிறார்களே; அவர்களின் சீண்டல்கள் மேலும் அதிகரிக்கும். அவர்களின் வசைமொழிகளைத் தவிர்ப்பவதற்கு, எதிர்காலத்தில் இந்தப் படங்கள் துருப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஒரு கட்டத்தில் மெட்ராஸ் மாநிலத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தெரியாமல் தமிழர்கள் பினாங்கில் உள்ள கரும்புத் தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். இதுவும் ஓர் அரிய தகவல். 1844-ஆம் ஆண்டில் தான் ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தமிழர்கள் மலாயாவுக்கு கொண்டு வரப் பட்டார்கள். 


மலைக்காட்டு மலையகத்தைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய மலாயா தமிழர்களுக்கு நாம் எப்போதும் மரியாதை செய்வோம். கொட்டும் மழையிலும் கொக்கரிக்கும் வெயிலிலும் வெறும் வேட்டி முண்டாசு கட்டிக் கொண்டு பினாங்கு தீவின் கட்டுமானத்தில் முதுகெலும்பாய் வாழ்ந்து காட்டியவர்கள். அரசியல் கைதிகளாகவும் அற்றைக் கூலிகளாகவும் பரிணமிததவர்கள். பினாங்குத் தீவின் வளப்பத்திற்கும் ஒட்டு மொத்த மாலாயாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர்கள்.

இவர்களைப் போய் வந்தேறிகள் என்று சொல்கிறார்களே. என்னங்க சொல்வது. இதில் இப்போது ரவிக்கையும் சேலையும் பாரம்பரிய உடை என்று வேறு சொல்கிறார்கள். எங்கேயாவது மனுசன் இல்லாத காட்டுக்கு ஓடிப் போகலாம் போல இருக்கிறது. அங்கே ஓடினாலும் ரசமும் சாம்பாரும் எங்கள் பரம்பரை சொத்து என்று சொல்லி அங்கேயும் வரலாம். என்னதான் நடக்கிறது. ஒன்னுமே புரியலீங்க.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.06.2021

சான்றுகள்:

1.  Sandhu, Kernial Singh (1969), Indians in Malaya-immigration and settlement, Cambridge University Press

2.  Kuppusamy, Baradan (20 March 2008). "Dr P. Ramasamy – from critic to Penang No. 2". The Star.

3. Sinnappah, Anasanatnam (1979), Indians in Malaysia and Singapore, Kuala Lumpur: Oxford University Press

4. Snider, Nancy (1968), "What Happened in Penang", Asian Survey, 12: 960–975


 

27 ஜூன் 2021

அக்கரைச் சீமையின் வீரமகள் அஞ்சலை குப்பன்

கரை ஒதுங்கும் சிப்பிகள். நுரை உமிழும் அலைகள். வானம் தொடும் நீலங்கள். அலை பாயும் நீர்க்குமிழிகள். கரை சேரும் கடல் பச்சைகள். வெள்ளி மீன்களின் நயனங்கள். அனைத்தும் ஒளிர்ந்து வளைந்து நீரிதழ் ஒளிப் பிளந்து மறையும் நளினங்கள். அனைத்தும் அழகின் ஆராதனைகள். அனைத்தும் அசத்தல் ஆழ்க்கடல் பிம்பங்கள். அவற்றின் மறுபக்கமே மொரிசியஸ் என்கிற பூலோகச் சொர்க்கம்.


அத்தனையும் இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்தவை. அத்தனையும் எழில்மிகுச் சொப்பனங்கள். மொரிசியஸ் தீவைப் படைத்து விட்ட இறைவன் அதே வடிவத்தில் சொர்க்கத்தையும் படைத்தான் என்று பெருமையாகச் சொல்வார்கள். உண்மைதான். அந்தப் பூலோகச் சொர்க்கத்தில் தான் அஞ்சலை குப்பன் எனும் ஒரு தமிழச்சியின் வீர வரலாறும் வருகிறது.

அஞ்சலை குப்பன்; மொரிசியஸ் நாட்டின் ஐரோப்பியக் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போராடியவர். மொரிசியஸ் நாட்டின் கரும்புத் தோட்ட முதலாளிகளுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியவர். மொரிசியஸ் நாட்டின் மனித உரிமைகளுக்காக தன் உயிரையே தியாகம் செய்தவர். 1940-ஆம் ஆண்டுகளில் மொரிசியஸ் நாட்டில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சி.

கப்பலேறி வந்தாலும் சூடு சொரணை உண்டு. கைப்பிடிச் சோற்றிலும் கைத்துளி உப்பு உண்டு. மனித உரிமைகள் மரித்துப் போகா என்று காலனித்துவத்தை எதிர்த்த ஒரு தமிழ்ப் பெண்மணியின் வீர வரலாறு வருகிறது. அவரைச் சற்று நேரம் நினைத்துப் பார்ப்போம். அஞ்சலைக்கு அஞ்சலி செலுத்துவோம்.


மொரிசியஸ் நாட்டில் இப்போது அந்தப் பெண்மணிக்காகச் சிலை வடித்து சீர் செய்கிறார்கள். அஞ்சல்தலை வெளியிட்டு பார்புகழப் பெருமை செய்கிறார்கள். ஒரு விளையாட்டு அரங்கத்தைக் கட்டி மரியாதை செய்கிறார்கள். யார் அந்த அஞ்சலை குப்பன். தொடர்ந்து படியுங்கள்.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அஞ்சலை குப்பன் எனும் பெயர் கொஞ்சமாய் மறைந்து மங்கலாகத் தெரியும். ஏன் தெரியுங்களா. இந்தத் தமிழச்சியின் தியாக உணர்வுகள் குறித்து உலகத் தமிழர்களுக்கு அதிகமாய்த் தெரியாது. ரொம்ப வேண்டாம். தெரியவே தெரியாது என்று சொன்னால் தான் சரியாக அமையும்.

இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு தமிழ்ப் பெண் வாழ்ந்து இருக்கிறார் என்று தெரியாமலேயே போய்விடும். அதனால் முன்கூட்டியே இப்படி ஒரு பதிவைப் பதிவு செய்துவி டுவது சாலச் சிறப்பு என்பது காலத்தின் கணிப்பு அல்ல. ஞாலத்தின் எதிர்பார்ப்பு.


மொரிசியஸ் நாட்டில் இரண்டு பெண்களுக்குச் சிலை வைத்து இருக்கிறார்கள். ஒன்று மொரிசியஸ் தலைநகரில் வைக்கப்பட்டு உள்ள இங்கிலாந்து நாட்டின் விக்டோரியா மகாராணியாரின் சிலை. உலகத்தின் கால பகுதிக்கு மகாராணியாராகக் கோலோச்சியவர்.

மற்றொன்று அஞ்சலை குப்பன் அவர்களின் சிலை. மொரிசியஸ் தலைநகரம் போர்ட் லூயிஸ் (Port Louis) அபரவாசி (Aapravasi Ghat) வளாகத்தில் அந்தச் சிலையை வைத்து இருக்கிறார்கள். வேறு சிலைகள் எதுவும் இல்லை. ஒரு தமிழ்ப் பெண்ணுக்குச் சிலை வைத்து இருக்கிறார்கள். பெருமையாக உள்ளது.

அஞ்சலை குப்பன், மொரிசியஸின் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். 1943 செப்டம்பர் 27-ஆம் தேதி ஆங்கிலேயர்களின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தவர். அப்போது அவர் நிறைமாதக் கர்ப்பிணி. அவருக்குத்தான் அங்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது. சரி.


மொரிசியஸ் (Mauritius) ஒரு சின்ன நாடு. ஆப்பிரிக்கக் கண்டத்திற்குத் தென் கிழக்கு கடலோரப் பகுதியில் ஒரு தீவு. மடகாஸ்கர் தீவுக்கு 900 கி.மீ. கிழக்கே அமைந்து உள்ளது.

இந்தத் தீவின் மொத்த நீளம் 65 கி.மீ. அகலம் 45 கி.மீ. அவ்வளவு தான். தீவின் மொத்த நிலப்பரப்பு 2045 சதுர கி.மீ. 2016 ஜூலை மாதக் கணக்குபடி மொரீஷியஸ் தீவின் மக்கள் தொகை 1,262,132.

மொரிசியஸ் நாட்டில் 68 விழுக்காடு இந்திய வம்சாவழியினர். 27 விழுக்காடு ஆப்பிரிக்க வம்சாவழியினர். 3 விழுக்காடு சீன வம்சாவழியினர். 2 விழுக்காடு பிரிட்டீஷ் வம்சாவழியினர். ஏறக்குறைய 75,000 தமிழர்கள் வாழ்கின்றனர்.  

தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள். அவர்களில் பலர் அமைச்சர்களாகவும் நீதிபதிகளாகவும் உயர்க் கல்விமான்களாகவும் கிராமத் தலைவர்களாகவும் சேவை செய்து இருக்கிறார்கள். 


இருப்பினும் இவர்களில் 54,000 பேர் தங்களின் தாய்மொழி தமிழ் என்கின்றனர். இவர்களில் 3,650 பேர் மட்டுமே தங்கள் வீட்டில் தமிழை அதிகமாகப் பேசுகின்றனர்.

1729-ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து தமிழர்கள் மொரிசியஸ் தீவிற்கு முதன்முதலாகக் கொண்டு செல்லப் பட்டார்கள். 1735-ஆம் ஆண்டு மறுபடியும் பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு செல்லப் பட்டார்கள். சின்னச் சின்னக் கப்பல்கள் கட்டுவது; கட்டடங்கள் கட்டுவது; அதற்காகத் தமிழர்கள் சென்றார்கள்.

அவர்கள் போர்ட் லூயி நகரப் பகுதியில் தங்க வைக்கப் பட்டார்கள். இவர்கள் இதற்கு முன் அங்கே வாழ்ந்த ஆப்பிரிக்க அடிமைகளைப் போல நடத்தப்படவில்லை. கொஞ்சம் நஞ்சமாய் மனித உரிமைகள்; அவற்றில் மிச்சம் மீதியாய் மனிதநேயப் பார்வைகள்.

அதற்கு முன்னர் அங்கே இருந்த ஆப்பிரிக்க அடிமைகள் ஆடுமாடுகளைப் போல நசுக்கி நார் நாராய்க் கிழிக்கப் பட்டார்கள். அதையும் நினைவில் கொள்வோம். தமிழர்களை மட்டும் பேசிவிட்டு ஆப்பிரிக்கர்களை ஒதுக்கிவிட முடியாது. 


அவர்களும் வாயில்லா இரண்டு கால் ஜீவன்களாய் வாழ்ந்தவர்கள் தானே. தோட்டத் தொழிலாளர்களில் தமிழர்களுடன், ஆப்பிரிக்கர் மற்றும் பீகாரிகளும் பெரும் அளவில் இருந்தனர்.

1829 முதல் 1830 வரை நூற்றுக் கணக்கான தமிழர்கள் சென்னை துறைமுகத்தில் இருந்து மொரிசியஸ் தீவிற்குக் குடியேற்றப் பட்டார்கள்.

தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானவர்கள். இந்தத் தீவில் தான் அஞ்சலை குப்பன் உரிமைப் போராட்டங்கள் செய்து சாதனை படைத்து இருக்கிறார்.

நவீன மொரிசியஸின் வரலாற்றில் ஒரு முக்கிய மாந்தராகக் கருதப் படுகிறார். மொரிசியஸ் மக்களின் அடையாளச் சின்னமாகவும் மாறியுள்ளார்.

தன் பாட்டியின் மூலம் தொழிலாளர்களின் தொடர் இன்னல்களை அறிந்தவர். அவற்றுக்குத் தீர்வு காண போராட்டக் களத்தில் குதித்தவர். பெண்களின் விடுதலைக்காகவும் போராடியவர். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களை ஒன்று திரட்டி உரிமைப் போராட்டங்களை முன்வைத்தவர்.

அஞ்சலை குப்பன்; அஞ்சலை திவாகரன்; அஞ்சலாய் குப்பன் (Anjalay Tassalam Twakaran); 1911 பிப்ரவரி 17-ஆம் தேதி ரிவியர் டு ரெம்பார்ட் (Riviere du Rempart) எனும் மாவட்டத்தில் பிறந்தார்.

1943 செப்டம்பர் 13-ஆம் தேதி பெல்லி வியூ ஹாரேல் (Belle Vue Harel) எனும் சீனி தோட்டத்தில் ஒரு பெரிய வேலைநிறுத்தம் தொடங்கியது. அதில் அஞ்சலையும் கலந்து கொண்டார். 1943 செப்டம்பர் 27-ஆம் தேதி உயிர் துறந்தார்.

அந்த நாள் மொரீஷியஸ் மக்களால் பெரிதும் போற்றப்படும் நாள். தியாக நாளாகவும் கருதுகிறார்கள். அன்றைய நாளில் தான் பிரிட்டிஷ் காலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிராகவும்; தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராட்டம் உச்சம் அடைந்த நாளாகும்.

1943 செப்டம்பர் 13-ஆம் தேதி, பெல்லி வ்யூ ஹரேல் (Belle Vue Harel) சர்க்கரை தோட்டத்தில் ஒரு பெரிய வேலை நிறுத்தம் தொடங்கியது. அந்த வேலை நிறுத்தம் பல நாட்கள் நீடித்தது.

கரும்புத் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு மனநிறைவான ஊதியம் கிடைக்கவில்லை. நல்ல சூழலில் தங்கும் வீட்டு வசதிகளும் இல்லை. இவற்றுக்காகத் தொழிலாளர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். நெருக்குதல்களையும் கொடுத்து வந்தார்கள்.

ஆங்கிலேய முதலாளிகள் கேட்பதாக இல்லை. தெரிந்த விசயமாச்சே. வரித்து விடு. பிரித்து விடு. தொலைத்து விடு எனும் சாணக்கியத்தில் ஆங்கிலேயர்கள் பேர் வாங்கியவர்கள். பரம்பரை புத்தி பாதியில் போய் விடுமா.

இந்தப் பக்கம் மலாயாவில் மட்டும் என்னவாம். 1900-ஆம் ஆண்டுகளில் அதே நிலைமை தானே. நாலு தகரத்தில் ஒரு டப்பாவைக் கட்டி வைத்து; அதற்கு கூலி லைன் என்று பெயர் வைத்து; 150 ஆண்டுகளாக மலாயாத் தமிழர்களின் உயிரை வாங்கவில்லையா. எல்லாம் ஒன்னுதான்.

பெல்லி வ்யூ ஹரேல் கரும்புத் தோட்டத்தில், அன்றைய தினம் தொழிலாளர்களை உளவு பார்க்க வந்த காவலர் ஒருவர் தாக்கப் பட்டார். அந்தக் காரணத்தின் அடிப்படையில் காவல்துறை கடும் நடவடிக்கையில் ஈடுபட்டது. துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

அந்தக் கலவரத்தில் நால்வர் உயிர் இழந்தார்கள். அஞ்சலை குப்பனைத் தவிர்த்து மேலும் மூவர். கிருஷ்ணசாமி முனுசாமி (Kistnasamy Mooneesamy); முனுசாமி முனியன் (Moonsamy Moonien; மருதை பானப்பன் (Marday Panapen). ஐந்து பேருக்கு படுகாயங்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பெல்லி வியூ ஹாரேல் படுகொலை (Belle Vue Harel massacre) என்று வர்ணிக்கிறார்கள்.

அஞ்சலை இறக்கும் போது அவருக்கு வயது 32. நிறைமாத கர்ப்பிணி. முதல் பிரசவத்திற்கு முன்னரே பலியானார்.

1968-ஆம் ஆண்டு மொரிசியஸ் சுதந்திரம் அடைந்தது. அதன் பின்னர், 1995-ஆம் ஆண்டில் அஞ்சலை குப்பனுக்குச் சிலை வைக்கப் பட்டது. அப்போதைய மொரிசியஸ் பிரதமர் சர் அனரூட் ஜுக்நாத் (Sir Anerood Jugnauth) திறப்பு விழா செய்தார். சிலயின் உயரம் ஒன்றரை மீட்டர். இரண்டரை டன் எடை. ஹரோல்ட் கெந்தில் (Harold Gentil) எனும் சிற்பி செதுக்கிய சிலை.

தவிர அஞ்சலை குப்பனுக்கு அவருடைய பெயரில் ஒரு விளையாட்டு அரங்கத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் அஞ்சலை விளையாட்டரங்கம் (Anjalay Stadium, Belle Vue, Mauritius).

அது மட்டும் அல்ல. 2000 டிசம்பர் 13-ஆம் தேதி அவருக்காக அஞ்சலை தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தார்கள்.

பள்ளிப் பாட நூலகளில் அவரின் வரலாறு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொரீஷியஸ் நாட்டில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கட்டாயம் அஞ்சலையின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் படிக்க வேண்டும்.

2015 மார்ச் 8-ஆம் தேதி அனைத்துலக மகளிர் தினம். அதை முன்னிட்டு மொரிசியப் பாலின சமத்துவம், குழந்தைகள் மேம்பாடு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரால் அதிகாரபூர்வமாக அஞ்சலி குப்பன் கெளரவிக்கப் பட்டார். அதன் பின்னர் பாட நூல்களிலும் அவருடைய வரலாறு இடம் பெற்றது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.06.2021

சான்றுகள்:

1. The historical significance of Anjalay Coopen - https://www.lexpress.mu/article/historical-significance-anjalay-coopen

2. Nouvelle d'Ananda Devi, La Mort d'Anjalay dans Au tour des femmes. Ed. B. Pyamootoo & R. Poonoosamy. Port-Louis:  Immedia, 1995: 67-74

3. Anjalay Coopen: Tamil Lady ‘Kabali’ of Mauritius - https://tamizharmedia.com/2019/06/30/anjalay-coopen-tamil-lady-kabali-of-mauritius/

பின்னூட்டங்கள்:

கரு.ராஜா, சுங்கை பூலோ: இந்த கட்டுரையைப் படித்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி. இந்த நாட்டிலிருந்து மொரிசியசுக்கு பல குப்பனும் சுப்பனும் சுற்றுலா போய் வந்து சுற்றுலா கட்டுரை எழுதியதை அடியேன் படித்து இருக்கிறேன்.

பத்திரிகை நிருபர்கள் கூட மொரிசியசுக்கு சுற்றுலா போய் வந்து பயணக் கட்டுரைகள் எழுதியதை நான் படித்து இருக்கிறேன். எந்தச் சுப்பனும் தமிழச்சி அஞ்சலை குப்பன் பற்றிய தகவலை எழுதவில்லை. ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.

ஒரு தமிழச்சியை இந்தக் கேடு கெட்ட வெள்ளைக்காரப் பசங்க அநியாயமா சுட்டு கொலை செய்து இருக்கிறார்கள்.

இப்படி எல்லாம் சுற்றுலா போகிற நம்ம தம்பிங்க மேலோட்டமாகச் சுற்றி திரிந்துவிட்டு வந்து இங்கே வந்ததும் ஆகா... ஓகோ... என்று எதையாவது எழுதி பத்திரிகையில் போட்டு விடவேண்டியது. இப்படிப்பட்ட விசயங்கள் இவர்கள் கண்களுக்கு தென்படதோ. கட்டுரை அருமை நண்பா. வாழ்த்துகள்.

பெருமாள், கோலாலம்பூர்: எனக்கு மொரிசியசில் ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஏற்கனவே இந்தக் கட்டுரை விபரங்களைச் சொல்லி அஞ்சலை குப்பன் பற்றியும் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

மலேசியா வரும் போது நான் தான் அவரை விமான நிலையம் வரை அனுப்பி வருவேன். அங்குள்ள எரிமலை வெடித்த லார்வா, இன்று வரை வைத்துள்ளதாகவும் கூறினார்.

அந்த தீவு, சுற்றுலா, மீன்பிடி தொழிலுக்கு பேர் பொனதாகவும் கூறியுள்ளார். சாலைகளில் போலீசாரைக் காண்பது அரிதாம். எல்லா வழி தடங்களிலும் CCTV மறைகாணி மயமாம். சம்மன் வீடு தேடி வருமாம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் >>>> கரு.ராஜா, சுங்கை பூலோ: நன்றிங்க ராஜா. சுற்றுலா போகும் பத்திரிகையாளர்கள் தமிழர்கள் சார்ந்த வரலாற்றை ஆழமாகப் பார்க்க வேண்டும். இலவசமாக டிக்கெட் கிடைத்தால் வரலாறும் மறக்கப் படலாம் என்பது பரவலான கருத்து.

பனையபுரம் அதியமான்: வியப்பாகவும், பிரமிப்பாகவும், பெருமையாகவும் உள்ளது.


தேவி சர: சிறப்பு 👍🏻👌👏👏👏

பெருமாள், கோலாலம்பூர்: அஞ்சலை குப்பன் வரலாறு மிகவும் சோகமானதாகவே வர்ணிக்கப் படுகிறது. ஏதோ ஒரு சினிமாவை பார்த்தது போல் உள்ளது.

இம்மாதிரியான வரலாற்றுகளை எதிர்கால வாரிசுகளுக்குச் சொல்லிச் செல்வோம் 😢 நன்றி தலைவரே.

டாக்டர் சுபாஷினி: அருமையான பதிவு. தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு இதழில் இந்தக் கட்டுரையை இணைத்துக் கொள்கிறோம். நன்றி.

தனசேகரன் தேவநாதன்: நமது தலைவரின்  கைவண்ணம் பார் எங்கும் பரவட்டும் 🌹🙏👌