04 ஜூலை 2021

மலேசியப் பெண்ணியவாதி மேரி சாந்தி தைரியம்

தமிழ் மலர் - 04.07.2021

மலேசிய மனித உரிமை போராட்டவாதி. அனைத்துலகப் பெண்ணுரிமைப் போராளி. ஐக்கிய நாட்டுச் சபையின் மனித உரிமை தலைமை அதிகாரி. மலேசியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் இயற்றப் படுவதற்கு மூல காரணமாக இருந்தவர். அழகிய அறிவார்ந்த பெண்மணி. மலேசியத் தமிழ்ப் பெண்ணியவாதி. மேரி சாந்தி தைரியம். கைகூப்புகிறோம்.


மலேசியாவின் மகளிர் உதவி அமைப்பு (Women’s Aid Organisation (WAO) தோன்றுவதற்கும் முன்னோடியாக இருந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழுவில் இருந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழுவிலும் (Committee on the Elimination of All Forms of Discrimination against Women) பணியாற்றியவர்.

மேரி சாந்தி தைரியம் (Mary Shanthi Dairiam). ஓர் அற்புதமான மலேசியச் சமூகச் சேவகி. மலேசியாவில் பலருக்கும் இவரைத் தெரியாது. வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டியது நம் கடமையாகும்.

இப்படி உலகப் பெண்களுக்காகப் போராடிய பெண்கள்; போராடும் பெண்களை எல்லாம் மேலாதிக்கப் பெரும் தலைவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இனவாதத்தில் மனவாதம் கலந்தால் மனிதவாதம் மறைந்து போகலாம். அந்த வகையில் இந்தப் பெண்மணியும் மறக்கப்பட்டு இருக்கலாம். ஒரு செருகல்.


தயிர் ரசம், மிளகு ரசம், பருப்பு சாம்பார் காணொலிகள் செய்து ஒரே நாளில் உலகப் புகழ் பெறும் சோடா புட்டிகளுக்குத் தான் இன்றைய காலத்தில் மவுசு அதிகம். விளம்பரங்களும் அதிகம். அப்படிப் பட்டவர்களுக்குத் தான் அதிகம் வெளிச்சமும் கிடைக்கிறது. அசலுக்கு மவுசு குறைவு.

மேரி சாந்தி தைரியம். குடும்ப வன்முறைகளுக்கு எதிராக 1980-ஆம் ஆண்டுகளில் மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து பல மாதங்களுக்குப் பரப்புரைகள்; கண்டனக் குரல்கள் எழுப்பியவர். குடும்ப வன்முறை மசோதாவைச் சட்டமாக்குவதற்கு (Domestic Violence Act) போராட்டம் செய்து வெற்றியும் கண்டவர்.

அவரின் தொடர் பரப்புரைகளினால் தான் 1994-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டம் (Domestic Violence Act 1994) மலேசிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. 2012-ஆம் ஆண்டில் அந்தச் சட்டம் மறுதிருத்தம் செய்யப் பட்டது. பின்னர் 2017-ஆம் ஆண்டு (Domestic Violence (Amendment) Act 2017) என்று மறுபடியும் திருத்தம் செய்யப்பட்டது.


ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரைச் சும்மா கையை நீட்டி ஓர் அடி அடித்தாலே போதும். கையில் விலங்குடன் அந்தச் சட்டம் ஓடி வந்து எட்டிப் பார்க்கும். மேரி சாந்தி கொண்டு வந்த சட்டம்.

இது பெண்களுக்கு மட்டும் உதவும் சட்டம் அல்ல. ஆண்களுக்கும் உதவுகிறது. கோபத்தில் மனைவி ஒரு கரண்டியை எடுத்து புருசன்காரன் மீது ஒரு வீசு வீசி... அது படாத இடத்தில் பட்டு...  ஒரு சின்ன சிராய்ப்புக் காயம் பட்டு... ரெண்டு சொட்டு இரத்தம் வந்து... அது போதுங்க. பொம்பளைய பிடிச்சு உள்ளுக்கு வச்சிடலாம்.

‘வாராயோ தோழி வாராயோ’ என்று குடும்ப வன்முறைச் சட்டம் கதவைத் தட்டும். அப்புறம் அந்த ராணி லலிதாங்கி கம்பி எண்ண வேண்டி வரலாம்.

ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் மீது அல்லது ஓர் ஆணின் மீது வார்த்தைகளால் வன்முறை நிகழ்ந்தாலும் இந்தச் சட்டம் பாயும். சரிங்களா.

குடும்ப வன்முறை என்றால் என்ன. ஒரு குடும்ப உறுப்பினர் இன்னும் ஒரு குடும்ப உறுப்பினர் மீது பயன்படுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறைக்குத்தான் குடும்ப வன்முறை என்று பெயர். இது கணவன், மனைவி மீது அல்லது மனைவி, கணவன் மீது செலுத்தும் வன்முறையைப் பொதுவாகச் சுட்டுகின்றது.

அது யாராக இருந்தாலும் சரி; துணையைத் துன்புறுத்தல் பல வடிவங்களில் வெளிப்படலாம். அடித்தல், பயமுறுத்தல், பாலியல் வற்புறுத்தல், உளவியல் முறையில் வற்புறுத்தல், திருமண முறிவு என்று பயமுறுத்தல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று பயமுறுத்துதல் என்று பல வழிகளில் இது வெளிப்படலாம்.

கணவன் மனைவி என்று இல்லை. குடும்ப அமைப்பில் உள்ள ஆண் பெண் எவராக இருந்தாலும் இந்தக் குடும்ப வன்முறைச் சட்டம் மூலமாக நீதி கேட்கலாம்.

’நான் தாலி கட்டியவன். நான் சொன்னால் நீ கேட்கணும்டி’ என்று வறுபுறுத்தி படுக்கை அறைக்கு இழுத்துக் கொண்டு போவது எல்லாம் தப்பு. மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவன் தன் மனையைத் தொட்டாலே அது ஒரு வகையான வன்முறைதான். அது சட்டப்படி குற்றம். அதற்காக இதை வைத்துக் கொண்டு கணவனை மிரட்ட வேண்டாம் பெண்களே.


புருசன்காரன் தானே என்று குடும்பப் பெண்கள் பெரும்பாலும் பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்துப் போய் விடுவார்கள். பெண்களுக்கே உள்ள இயல்பான குணம். கணவனுக்கு விட்டுக்கொடுத்துப் போகும் குணம். இருந்தாலும் வற்புறுத்தலின் பேரில் விட்டுக் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். இந்த இடத்தில் வற்புறுத்தல் வந்து நிற்கிறது. வற்புறுத்தல் என்பது ஒரு வகையில் பயமுறுத்துவது போலாகும்.

’நான் சொல்லி நீ கேட்கவில்லை. உனக்கு இனிமேல் ஒரு காசு தர மாட்டேன் போடி’ என்று சொல்வது குற்றம் அல்ல. ஆனால் அதைச் சொல்லி வறுபுறுத்தி அவளை இணங்க வைப்பது குற்றமாகும். புரியும் என்று நினைக்கிறேன்.

‘வந்து தொலை... வாங்கி வந்த வரம்’ என்று ஒரு மனைவி சொல்வதிலும் வன்முறை தொக்கி நிற்கிறது. நன்றாகக் கவனியுங்கள். வற்புறுத்தலைத் தாங்க முடியாமல் அந்தப் பதில் வருகிறது. ஆக இது ஆண் மீதான வன்முறைக் குற்றம்.


ஆக இந்தச் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்கச் சமாதானமாகப் பேசி விட்டுப் போகலாமே. ’இகோ’ தனமையைத் தவிர்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது.

’உலகத்திலேயே நீ தாண்டி அழகி. உன்னைத் தவிர வேறு எவளும் அப்ரஸ் இல்லடி’ என்று இரண்டு வார்த்தை ஆசையாகப் பேசினால் போதுங்க. கதை முடிஞ்சது. மறுபேச்சு இல்லை. காலடியில் வந்து விழுந்து விடுவாள். அப்புறம் எதற்கு பலாத்காரம். சண்டை; பிணக்கு; முறைப்பு எல்லாம்.

அல்வா இனிப்பான பொருள். அதை ஒரேயடியாக ’லபக்’ என்று முழுங்குவதைக் காட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சாப்பிட்டுப் பாருங்கள். சுவையே வேறு மாதிரியாக இருக்கும். சமயங்களில் தமிழ்க் கட்டுரைகளில் துணுக்கு ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறோமே. அந்த மாதிரி என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

மனைவியைப் புகழ்ந்து பேசி காரியத்தைச் சாதிப்பதை விட்டு விட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே சமயத்தில் புருசன்காரன் அமைதியாக அன்பாக இருக்கிறானே என்று பெண்கள் சிலர் புருசன்காரனை ஏறி மிதிப்பதும் உண்டு. நடக்கிற காரியம் தான். சான்றுகள் உள்ளன.

எல்லாக் குடும்பங்களிலும் அல்ல. சில குடும்பங்களில் நடப்பது உண்டு. அப்படிப்பட்ட மனைவியை இரண்டு நாள்களுக்குக் கண்டு கொள்ள வேண்டாம். அவள் சமைத்ததைச் சாப்பிட வேண்டாம். மூன்றாவது நாள் அவளே இறங்கி வந்து விடுவாள்.

ஆக இப்படிப்பட்ட ஒரு குடும்ப வன்முறைச் சட்டம் கொண்டு வரப் படுவதற்கு அல்லும் பகலும் உழைத்த மேரி சாந்தி தைரியம் அம்மாவுக்குத் தாராளமாக ஒரு கைதட்டல் கொடுக்கலாமே. அதில் ஓரவஞ்சனை வேண்டாமே.

மேரி சாந்தி தைரியம், 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர் (முன்பு University of Madras). 1991-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுசேக்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Sussex) மாஸ்டர்ஸ் பட்டம் செய்தவர். ஆங்கில மொழி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இன்றும் அதே இளமைத் துடிப்புடன் மனித உரிமைப் போராட்டவாதியாகப் பயணித்துக் கொண்டு வருகிறார்.

ஐக்கிய நாட்டுச் சபையின் அறிவுரைஞராகவும் சேவை செய்து இருக்கிறார். அவருடைய மனித உரிமைச் சேவைகள் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துவோம்.

ஐ. நா. சபையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழு (UN's Gender Equality Task Force); பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழு போன்றவற்றில் பணியாற்றியவர்.

2010-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டு காசா போரைப் பற்றிய ஆய்வறிக்கையைத் தயாரிக்க ஐக்கிய நாட்டுச் சபை மூன்று பேரை அங்கு அனுப்பி வைத்தது. அந்த மூவரில் மேரி சாந்தி தைரியம் அவர்களும் ஒருவர். இப்படி ஒரு பெரிய அமைதித் தூதுவராகப் பணியாற்றியவர்.

பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் நீக்க ஒரு காப்பகம் தோற்றுவிக்கப்பட்டது. அது அனைத்துலகப் பெண்ணுரிமை காப்பகம். அந்தக் காப்பகத்தின் ஆசியப் பிரிவின் நிறுவனர்; தற்போதைய இயக்குனரும் இவரே. (International Women's Rights Action Watch - Asia Pacific)

இவர் பல பசிபிக் நாடுகளுக்கு பெண்ணுரிமை அறிவுரைஞராகவும் திகழ்கிறார். இவர் எழுதிய ’ஒரு பெண்ணின் சமத்துவ உரிமை: சிடாவின் வாக்குறுதி’ (A Woman’s Right To Equality: The Promise Of Cedaw) எனும் நூல் தாய்லாந்து பாங்காக் நகரில் பெண்ணுரிமை மாநாட்டில் (Beijing +20 conference) வெளியிடப் பட்டது.

இப்படிப்பட பெண்களை உலகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டும். பெண்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பெண்ணியத்திற்கு மரியாதை செய்ய வேண்டும். ரசம் அதிரசம் காணொலிகள் தயாரிக்கும் போலி விளம்பரப் பிரியர்களுக்கு அல்ல; சிறுபான்மை இனத்தைச் சிறுமைப் படுத்தும் சின்னக் கொசுறுகளுக்கு அல்ல.

உண்மையாக இந்த நாட்டை உருமாற்றியவர்களின் உயரத்தை ஏற்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு பெண்டத்தாங், பெனும்பாங் என்று பிதற்றி, உளறிக் கொட்டும் அரை வேக்காடுகளுக்கு அல்ல.

அதிரசம் பாரம்பரியச் சொத்து; ரசம் எங்க பாட்டி செஞ்ச பருப்பு சாம்பார் என்று சொல்லும் சோடா புட்டிகளைக் கண்டும் காணாமல் போய்விட வேண்டும்.

பேஸ்புக் ஊடகத்தில் பகாங் சத்யா ராமன் ஒரு வாசகம் எழுதி இருந்தார். நினைவிற்கு வருகிறது. "குருணை அரிசியும் கழுத்தறுத்தான் கருவாடும்" ஒரு நாவலுக்கு ஏற்ற தலைப்பு.

தோட்டங்களில் நாம் சொந்தமாகக் காய்கறிகளைப் பயிரிட்டு சமைத்து உண்டு வந்த வேளையில்; இன்று சொகுசு பேசும் சோம்பேறிகள் பலரின் அன்றைய உணவே அதுதானே?

இந்த வேதாந்தத்தை மறந்து விட்டவர்கள் இன்று ஒரு நாடே தங்களுடையது என்று சித்தார்த்தம் பேசுகிறார்கள். கங்கையில் குப்பை எரிந்தால் கங்கையின் மவுசு எப்போதுமே குறைந்து விடாது. அப்படித்தான் நாமும் இங்கே... என்று எழுதி இருக்கிறார். சரி.

மேரி சாந்தி தைரியம் போன்ற இந்தியப் பெண்கள் நிறைய பேர் இங்கேயும் எங்கேயும் ஜொலிக்கின்றார்கள். இருந்தாலும் மேலாண்மையின் அதிகார ஆதிக்க அழுத்தங்களின் காரணமாகப் பலர் இன்னமும் இலை மறை காய்களாகவே மறைந்து போய் நிற்கின்றார்கள். இதையே காலத்தின் கொடுமை என்று பலரும் சொல்கின்றார்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.07.2021

சான்றுகள்:

1. Mary Shanthi Dairiam (Malaysia) (pdf). Office of the United Nations High Commissioner for Human Rights.

2. Mary Shanthi Dairiam - https://en.wikipedia.org/wiki/Mary_Shanthi_Dairiam

3. Malaysian human rights and women's rights advocate - http://www.dtp.unsw.edu.au/mdm-mary-shanthi-dairiam

4. A Woman’s Right To Equality: The Promise Of Cedaw - https://www.star2.com/people/2015/01/01/fighting-for-equality/

5. International Expert Leads High Level Anti-Discrimination Forum for Royal Government of Cambodia". UNIFEM.






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக