07 ஜூலை 2020

ரியூனியன் தமிழர்கள் - 1

தமிழ் மலர் - 07.07.2020

உலகின் எந்த ஓர் இடத்திற்குச் சென்றாலும் அங்கே ஒரு தமிழரைப் பார்க்கலாம். பாரதியாரைப் பற்றி பேசுவார். பாரதிதாசனைப் பற்றி பேசுவார். மணிக் கணக்கில் லுமேரியா கண்டத்தைப் பற்றியும் பேசுவார். ஆனால் தமிழர் நாடு என்று பேசுவதற்கு அங்கே இடம் இருக்காது. 



இருப்பதைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு இல்லாததைப் பற்றி பேசு என்றால் எப்படிங்க. தமிழன் வாழாத நாடு இல்லை! ஆனால் அவனுக்கு என்று ஒரு நாடும் இல்லை! சந்தோஷம்.

ஆர்க்டிக் வட துருவத்தில் இக்ளு பனிக்கட்டிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அட்லாண்டிக் தென்துருவத்தில் ரோஸ் பனிக்கட்டிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

அமேசான் காட்டுத் தலைவெட்டிக் கும்பல்களுடன் வாழ்கிறார்கள். அனாகொண்டா பாம்புகளுடன் கட்டிப் பிடித்து கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் தமிழர்களும் இருக்கவே செய்கிறார்கள்.



ஆனால் தமிழர்கள் வாழும் இடங்களில் தமிழ் மொழி பேசுகின்றார்களா? தமிழ் கலாசாரத்தோடு வாழ்கின்றார்களா? தமிழ்க் கலாசாரத்தைப் பின்பற்ற அவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இருக்கின்றனவா? அதுவே இப்போதைக்கு ஒரு பெரிய கேள்வி.

ஆனாலும் நம்மில் பலரும் அறியாத ஓர் அழகிய தீவில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். ஏறக்குறைய 300 ஆண்டுகளாக வாழ்கிறார்கள்.

ரொம்ப நாட்களாக வாழ்ந்து அங்கு உள்ள உள்நாட்டு மக்களுடன் ஐக்கியமாகிப் போய் விட்டதால் தமிழையும் மறந்து கொண்டு வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை தொடர். மூன்று பாகங்களைக் கொண்டது. 



கிழக்கு ஆப்பிரிக்கா பகுதியில் மொரிசியஸ் தீவிற்கு அருகே ரியூனியன் என்கிற ஒரு தீவு இருக்கிறது. மிக மிக அழகிய தீவு. உலகத்திலேயே அழகான தீவுகளின் பட்டியலில் இந்தத் தீவிற்கு ஓர் இடம் உள்ளது.

இங்கே தான் இலட்சக் கணக்கான தமிழர்கள் இன்றைய வரைக்கும் வாழ்ந்து வருகின்றார்கள். தமிழர்களாக வாழ்ந்தும், தமிழ் மொழி சரி வரத் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

ரியூனியன் தீவு (Reunion) ஆப்பிரிக்கா கண்டத்திற்குக் கிழக்கே இந்தியப் பெருங்கடலில் உள்ளது. அருகில் மொரிசியஸ் தீவு (Mauritius). 



ரியூனியன் தீவின் மொத்தப் பரப்பளவு 2500 சதுர கி.மீ. மலேசியாவில் பினாங்கு; மலாக்கா மாநிலங்களைச் சேர்த்தால் எவ்வளவு வருமோ அவ்வளவு பரப்பளவு. ரியூனியன் தீவு சின்ன ஒரு நாடு தான்.

ஏறக்குறைய எட்டரை இலட்சம் பேர் வாழ்கிறார்கள். அவர்களில் தமிழர்கள் 2 இலட்சம் பேர். 18-ஆம் நூற்றாண்டில் இருந்து தமிழர்கள் இந்தத் தீவில் குடியேறி வருகிறார்கள்.

1797-ஆம் ஆண்டில் இந்தத் தீவின் மொத்த மக்கள் தொகை 56,800. 1850-ஆம் ஆண்டில் மக்கள் தொகை 110,891 பேர். வருடத்தைக் கவனியுங்கள். அவர்களில் வெள்ளைக்காரர்கள் 10,400 பேர்; அடிமைகள் 44,800 பேர். அப்போது அங்கே இருந்த தமிழர்கள் அனைவருமே அடிமைகளைப் போல நடத்தப் பட்டார்கள். அதையும் நினைவில் கொள்ள வேண்டும்.



இந்தத் தமிழர்கள் பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு போகப் பட்டவர்கள். 1848-ஆம் ஆண்டு வரை பல ஆயிரம் தமிழர்கள் கொண்டு போகப் பட்டார்கள்.

வேலை செய்யுங்கள். சம்பளம் தருகிறோம் என்று சொல்லித் தான் அழைத்துக் கொண்டு போனார்கள். ஆனால் அங்கே போனதும் அவர்களை அடிமைகளைப் போல நடத்தி இருக்கிறார்கள். வேதனையிலும் வேதனை.

இங்கே மட்டும் என்னவாம். அஞ்சு வெளியும் பத்து வெள்ளியும் கித்தா மரத்தில் குலை குலையா காய்ச்சு தொங்கும். அதை பொறுக்கி எடுக்கிற வேலை. இரண்டு வருசம் வேலை செஞ்சா போதும். அப்புறம் பதினாறு பட்டிக்கும் தலைப்பா கட்டலாம் என்று சொல்லித் தானே அழைத்து வந்தார்கள். 



அப்படியா நடந்தது. எங்கு இருந்தோ வந்த வந்தேறிகள் எல்லாம் அவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்லும் நிலைக்குப் போய் விட்டது. விடுங்கள். வயிற்றெரிச்சல்.

2010-ஆம் ஆண்டு கணக்குப்படி ரீயூனியனின் மொத்த மக்கள் தொகை ஐந்தரை இலட்சம். இதில் இரண்டு இலட்சம் பேர் தமிழர்கள். இந்தத் தீவு இன்றைய வரைக்கும் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

180 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டுக்கு அருகில் இருக்கும் பாண்டிச்சேரி பிரெஞ்சு நாட்டுக் காலனித்துவத்தின் கீழ் இருந்தது. அப்போது தான் ரியூனியன் தீவில் இருந்த கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்கு பாண்டிச்சேரி தமிழர்கள் அழைத்து செல்லப் பட்டார்கள்.



ஆனாலும் அவர்கள் அங்கே மிக மோசமாக அடிமைகளைப் போல நடத்தப் பட்டார்கள். பின்னர் காலத்தில் அவர்களுக்குப் பிரான்ஸ் நாட்டுக் குடியுரிமை கிடைத்தது.

மனிதத் தன்மையுடன் பார்க்கப் பட்டார்கள். மெல்ல மெல்ல அவர்களின் வாழ்வியல் நிலையும் உயர்ந்தது. இப்போது ஓரளவிற்கு நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மலேசியத் தமிழர்களைவிட பரவாயில்லை ரகம். பெருமைப் படுவோம். சரி.

ரியூனியன் தீவில் வாழும் தமிழ் மக்கள்; பிரெஞ்சு - தமிழ்க் கலாசாரக் கலவையுடன் வாழ்ந்து வருகிறார்கள். அண்மைய காலங்களில் தமிழர்களின் மக்கள் தொகை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. 



இருந்தாலும் தங்களால் இயன்ற வரை தமிழ்க் கலாசாரத்தைக் கட்டிக் காப்பதற்கு முயற்சிகள் செய்து வருகிறார்கள்.

ரியூனியன் தீவு மடகாஸ்கர் தீவிற்கு வடக்கே 480 கி.மீ. தொலைவிலும் மொரிஷீயஸ் தீவிற்குத் தென் மேற்கே 200 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. மொரிஷீயஸ் தீவை விடக் கொஞ்சம் பெரியது. ரியூனியன் தீவின் தலைநகரம் செயிண்ட் டெனிஸ் (Saint-Denis).

மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடலில் ஒரு பெரிய எரிமலை (Piton des Neiges) வெடித்தது. அந்த எரிமலை கக்கிய குழம்பால் உருவானதுதான் இந்த ரியூனியன் தீவு.

பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை மலைகள்; பச்சை ஆறுகள்; அருவிகள்; குளங்கள்; குட்டைகள்; இனம் மொழி பெயர் தெரியாத தாவர இனங்கள். 



சுருக்கமாகச் சொன்னால் இந்தத் தீவு சொர்க்கத்தில் இருந்து கிள்ளிக் கொண்டு வரப்பட்ட ஓர் அழகுச் சொப்பனம்.

ரியூனியன் தீவு இப்போது பிரான்ஸ் நாட்டின் கடல் கடந்த ஓர் உறுப்பு நாடாக இயங்கி வருகிறது. அதாவது பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலோருக்குப் பிரெஞ்சுக் குடியுரிமை உள்ளது. பிரான்ஸ் நாட்டுத் தேர்தல்களில் வாக்கு அளிக்கிறார்கள்.

ரியூனியன் தீவு மாசில்லா மண்வளமும் தூசில்லா மழைவளமும் கொண்ட அழகிய தீவு. அதிகக் குளிரும் இல்லை. அதிக வெப்பமும் இல்லை. மிதமான தட்ப வெப்ப நிலை.

சுற்றிலும் நீல நிறக் கடல். தீவிச் சுற்றிலும் மலைகள். பச்சைக் காடுகள். எப்போதுமே மூலிகைத் தாவரங்களின் மணம். ஆங்காங்கே தாதுப் பொருட்கள் கலந்த நீர் ஊற்றுகள். 



அந்தத் தீவை இயற்கை அன்னை அமைத்துக் கொடுத்த மூலிகைப் பூங்கா என்றும் தாராளமாகச் சொல்லலாம். அவ்வளவு மூலிகைப் பொருட்கள் மலிந்து கிடக்கின்றன. அதனால் உலகின் பல பகுதிகளில் இருந்தும் மூலிகை வைத்தியத்திற்கு இந்தத் தீவைத் தேடிச் செல்கிறார்கள்.

ரியூனியன் தீவு 1520-ஆம் ஆண்டு டியோகோ பெரேரா (Diogo Fernandes Pereira) எனும் போர்த்துக்கீசியரால் கண்டுபிடிக்கப் பட்டது. அடுத்து 1509-ஆம் ஆண்டில் லோபஸ் டி செக்குயிரா (Lopes de Sequeira) அங்கு சென்றார்.

லோபஸ் டி செக்குயிரா என்பவரைத் தெரியும் தானே. மலாக்காவில் காலடி எடுத்து வைத்த முதல் போர்த்துகீசியர். இவர் வந்த நேரமோ என்னவோ தெரியவில்லை. இரண்டே ஆண்டுகளில் மலாக்கா வரலாறே மாறிப் போனது. இவர் இங்கு வந்த பின்னர் தான் மலாக்காவிற்கு வந்தார். 



அதன் பிறகு ரியூனியன் தீவு ஆங்கிலேயர்களிடமும் பிரெஞ்சுக்காரர்களிடமும் மாறி மாறி வந்தது. ஆகக் கடைசியாக 1816-ஆம் ஆண்டில் இருந்து பிரெஞ்சுக்காரர்களிடம் நிரந்தரமாகவே வந்துவிட்டது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதித் தமிழர்கள் இந்திய மாக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று இருக்கிறார்கள். அப்போது ரியூனியன் தீவைப் பார்த்து இருக்கலாம். தங்கி இருக்கலாம். இளைப்பாறி இருக்கலாம்.

ஆனாலும் தமிழர்களோ மற்ற மற்ற இந்தியர்களோ 17-ஆம் நூற்றாண்டு வரை இந்தத் தீவில் நிரந்தரமாகக் குடியேறவில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. 



பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுக்கார முதலாளிகள் (French East India Company) ரியூனியன் தீவிற்கு வந்தார்கள்.

இந்தத் தீவைப் புனரமைக்க வேலையாட்கள் தேவைப் பட்டார்கள். ஆப்பிரிக்காவின் காப்பிரி இன மக்களையும் மடகாஸ்கர் தீவின் பழங்குடி மக்களையும் அடிமைகளாக கொண்டு வந்தார்கள். கரும்பு, சோளத் தோட்டங்களை உருவாக்கி அங்கு அவர்களை வேலை வாங்கினார்கள்.

மலாயாவில் ஆங்கிலேயர்கள் எப்படி தமிழர்களின் உயிர்களை வாங்கி வதைத்தார்களோ அதே போலத்தான் பிரெஞ்சுக்காரர்கள் ரியூனியன் தொழிலாளர்களையும் கசக்கிப் பிழிந்து எடுத்து இருக்கிறார்கள்.



சர்க்கரை ஆலைகளைக் கட்டி அங்கேயும் வேலை வாங்கினார்கள். 1848-ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் அடிமை முறை ஒழிக்கப் பட்டது. அதனால் வேறு வழி இல்லாமல் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டி வந்தது. எதிர்பாராத இந்தத் தாக்கத்தினால் ரியூனியன் தீவின் பொருளாதாரம் ஒடிந்து போனது. 

கரும்பு உற்பத்தியைப் பெருக்கிச் சர்க்கரை விற்பனையில் லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைத்த பிரெஞ்சு முதலாளிகளை அடிமை ஒழிப்புச் சட்டம் திக்குமுக்காடச் செய்தது.

அதனால் இந்தியாவின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற நகரங்களில் இருந்து தமிழர்களை ரியூனியன் தீவிற்கு ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் சென்றார்கள். 



தவிர 1828-ஆம் ஆண்டில் சிலர் இந்தியாவில் இருக்கும் கோவா பகுதியில் இருந்தும் அடிமைகளாக போய் இருக்கிறார்கள். அதே ஆண்டில் ஆந்திராவில் இருந்தும் 15 பேர் போய் இருக்கிறார்கள். இவர்கள் தான் ரியூனியனுக்குப் போன முதல் ஆந்திரா மக்கள்.

ஆக அந்த வகையில் பார்த்தால் 1848-ஆம் ஆண்டிற்கு முன்னர் அங்கு இருந்த இந்தியர்களின் எண்ணிக்கையே மொத்தம் 4200 பேர் தான். இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி; அவர்கள் அனைவரையும் தமிழர்கள் என்றே அப்போது அழைத்தார்கள்.

அதற்குக் காரணம் இருந்தது. அந்தக் காலக் கட்டத்தில் காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தமிழ் ஒப்பந்தக் கூலியாட்களே எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்தார்கள். 



அவர்களே கரும்புத் தோட்டங்களிலும் சர்க்கரை ஆலைகளிலும் அதிகமாக வேலை செய்தார்கள். முதலாளிகளின் வீடுகளில் சமையல்; எடுபிடி வேலைகளையும் செய்து வந்தார்கள்.

இவை 1848-ஆம் ஆண்டிற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகள். எல்லா இடங்களிலும் தமிழர்களே இருந்ததால் புதிதாகப் போன இந்தியர்களையும் தமிழர்கள் என்றே அழைத்து இருக்கிறார்கள். இப்படித்தான் ரியூனியன் தீவில் தமிழர்களின் வரலாறு தொடங்குகிறது.

உலகத்தில் தன்மானத்திற்கு என்று இயக்கம் கண்டவர்கள் தமிழர்கள் என்று சொல்வார்கள். இன்று பாருங்கள். உலகின் பல நாடுகளில் ஒதுக்கப்பட்ட சின்னமாக வாழ்கின்றார்கள்.

ஈ எறும்புகளுக்கு இரையாக இருக்கட்டுமே என்று அரிசி மாவில் கோலம் போட்டவர்கள் தமிழர்கள். இப்போது பாருங்கள், அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி நிற்கும் நிலைமை.

கோட்டை கட்டி ஆண்ட ஓர் இனம் சில நாடுகளில் கோணித் துணி கட்டித் தூங்குகின்ற அலங்கோலம். சரியாகவே அமைகின்றது. ரியூனியன் தமிழர்கள் என்ன என்ன கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

சான்றுகள்:

1. Tabuteau, Jacques (1987). Histoire de la justice dans les Mascareignes (in French). Paris: Ocean editions. p. 13. ISBN 2-907064-00-2.

2. Beesoon, Sanjay; Funkhouser, Ellen; Kotea, Navaratnam; Spielman, Andrew; Robich, Rebecca M. "Chikungunya Fever, Mauritius, 2006". 14 (2): 337–338.

3. Bollee, Annegret (2015). "French on the Island of Bourbon (Reunion)". Journal of Language Contact. 8 (1): 91. doi:10.1163/19552629-00801005.

4. Reunion - The severe island - Official French website (in English)




தோடர்கள்

(Todas) அல்லது தொதுவர் என்பவர்கள் தமிழ்நாடு, நீலகிரி மாவட்டத்தில் சிறு பழங்குடி இனத்தவர். சுமார் 1,600 பேர் மட்டுமே பேசும் ‘தொதவம்’ என்ற மொழியைப் பேசுபவர்கள். 


இவர்கள் வாழும் இடத்தை மந்து என்று கூறுகின்றனர். அதிகமாக எருமை மாடுகளை வளர்க்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றிச் சுற்றியே அமைகின்றது.

இதனால் இவர்களைப் பொதுவாக ’எருமையின் குழந்தைகள்’ என அழைக்கிறார்கள். இவர்களுடைய வீடு, கோயில் போன்றவை அரைவட்ட வடிவமானவை. வீடுகளின் நுழைவாயில் மிகமிகச் சிறியது. 



குனிந்துதான் உள்ளே செல்ல முடியும். குளிரைத் தவிர்ப்பதற்கும் விலங்குகள் உள்நுழையாமல் தடுப்பதற்கும் இந்த ஏற்பாடு.

இவர்களுடைய மொழி மிக விரைவாக அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் இடம்பெற்று உள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்து உள்ளது.

தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர்கள். பருவப் பெண்கள் தோளிலும் மார்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். நாவல் மரத்தைப் புனிதமான மரமாக மதிக்கின்றனர்.



இவர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள். எருமைப் பாலை விரும்பிக் குடிப்பார்கள்.

இவர்களில் வயதில் முதிர்ந்தவர்களைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும். முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக் - பதுக் என்று சொல்லி வாழ்த்துவார்கள்.

தமிழகப் பழங்குடிகள் தமிழ் நாட்டு மக்கள் தொகையில் 3.5% உள்ளனர். தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடிகள் உள்ளனர். 



இருளர், காடர், குறும்பர், தோடர் போன்றோர்கள் பழங்குடிகளில் சிலர். தமிழ் நாட்டில் 30 மாவட்டங்களில் பழங்குடிகள் வாழ்கிறார்கள். பழங்குடிகள் பெரும்பாலும் காடும் காடுசார்ந்த நிலங்களிலும் வாழ்கின்றனர்.

இவர்கள் பணம் சார்ந்த பொருளாதாரத்தை அதிகமாகப் பயன்படுத்துவது இல்லை. இவர்கள் தங்களுக்கென தனி மொழியும், குடும்ப மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள்.

இத்தகைய பழங்குடி மக்கள் தற்போதைய சூழலில் தங்களில் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றார்கள்.

(மலேசியம்)
07.07.2020




06 ஜூலை 2020

பரமேஸ்வரா தங்க ஆபரணங்கள்

தமிழ் மலர் - 06.07.2020

சிங்கப்பூரின் அழகிய சின்னம் கென்னிங் மலை. இயற்கை அன்னை கொஞ்சி விளையாடும் வசந்த கோலம். அதன் உச்சியில் ஒரு கோட்டை. அந்தக் கோட்டையின் வளாகத்தில் ஒரு வரலாற்றுக் கண்டுபிடிப்பு. 1926-ஆம் ஆண்டில் மலையின் உச்சியில் ஒரு நீர் தேக்கம் கட்டுவதற்காக நிலத்தைத் தோண்டிய போது அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.


சுமார் 3 மீட்டர் ஆழத்தில் அதிசயமான சில தங்க ஆபரணங்களைக் கட்டுமானத் தொழிலாளர்கள் கண்டு எடுத்தார்கள். கிடைத்த தங்க நகைகள்; நவரத்தின ஆபரணங்கள் எல்லாம் சாதாரணமானவை அல்ல.

அனைத்துமே 14-ஆம் நூற்றாண்டின் கலைநய எழில் வடிவங்கள். இந்திய ஜாவானிய பாணியிலான தங்க ஆபரணங்கள். அந்த நகைகள் 700 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு புதையுண்டு போய் இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப் பட்டது. 


தங்க நகைகளில் ஒளி வீசும் மோதிரங்கள்; பளிச்சிடும் காதணிகள். உடைகள் மீது பயன்படுத்தப்படும் தங்கச் சங்கிலிகள். சிறிய இரத்தினங்களைக் கொண்ட வளையல்கள். கால் கொலுசுகள். சீனா நாட்டுப் பீங்கான் களையங்கள், மண் பாண்டங்கள் மற்றும் அழகிய கண்ணாடித் துண்டுகள்.

மிக மிக அழகான நகைகள். அவற்றில் ஒரு நகை, காளி துர்கா தேவியின் தலை வடிவத்தைக் கொண்ட ஆயுதச் சங்கிலி. பொதுவாக அத்தகைய சிற்பக் கலை ஆபரணங்களைச் சுமத்திரா; ஜாவா தீவுகளில் தோண்டி எடுத்து இருக்கிறார்கள்.


1984-ஆம் ஆண்டில், ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் கென்னிங் மலையின் (Fort Canning Hill) ரகசியங்களைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கென்னிங் மலையின் உச்சியிலும் அதன் சரிவுப் பகுதிகளிலும் சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம் ஆய்வுகள் செய்தது.

ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் பெரிய பெரிய ஆச்சரியத்தை அளித்தன. அந்த ஆய்வுகள் சிங்கப்பூர் கென்னிங் மலை உச்சியில் ஓர் அரண்மனை இருந்ததைச் சுட்டிக் காட்டுகின்றன.

ஓர் அரசப் பரம்பரையினர் வாழ்ந்ததற்கான தடயங்களையும் உறுதி செய்தன. ஐந்து சந்ததிகளைச் சார்ந்த அரசர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகளையும் முன் வைத்தன. வேறு என்னங்க சொல்ல முடியும்.

(Records indicate that this may have been the home of a Palembang prince named Parameswara, who fled Temasek (Singapore) after a Javanese attack.)


இந்தக் கென்னிங் மலையை மகா மேரு மலை என்று முன்பு அழைத்தார்கள். அங்கேதான் இப்போதைய சிங்கப்பூரின் கென்னிங் மலை கோட்டை உள்ளது. மலாய் மொழியில் புக்கிட் லாராங்கான் (Bukit Larangan).

பழங்காலத்தில் இருந்தே இந்த மலையைப் புக்கிட் லாராங்கான் அல்லது தடைசெய்யப்பட்ட மலை என்று மலாய்க்காரர்கள் அழைத்தார்கள். பண்டைய காலத்து சிங்கப்பூரின் மன்னர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்கிற நம்பிக்கை. அத்துடன் அங்கு ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாக நம்பப் பட்டது

சர் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் (Sir Stamford Raffles) இங்குதான் தன் மாளிகையைக் கட்டினார். பின்னர் மற்ற ஆளுநர்களும் அந்த மாளிகையைப் பயன்படுத்தினார்கள். 


1861 ஆம் ஆண்டில் அந்த இடத்தில் ஒரு கோட்டை கட்டப்பட்டது. இதற்கு கென்னிங் கோட்டை என மறு பெயர் வழங்கப்படும் வரை இது அரசு மலை என்று அழைக்கப் பட்டது. இப்போது கென்னிங் கோட்டை நீர்த் தேக்கம் மற்றும் கென்னிங் கோட்டை பூங்காவின் இருப்பிடமாகும்.

சிங்கப்பூரைத் தோற்றுவித்த நீல உத்தமன் இதற்கு வைத்த பெயர் மேரு மலை. இந்தப் பெயர் பண்டைய தென்கிழக்கு ஆசிய கலாச்சாரத்தில் தெய்வீகத் தன்மையுடன் தொடர்பு கொண்டது.

மேரு மலை எனும் பெயரில் ஜாவா, சுமத்திரா, கலிமந்தான், போர்னியோ தீவுகளில் சில பல மேரு மலைகள் உள்ளன. கெடாவில் உள்ள குனோங் ஜெராய் மலையின் பெயரும் மேரு மலை தான்.


இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, மியன்மார், வியட்நாம் ஆகிய நாடுகளிலும் மேரு மலை எனும் பெயரில் மலைகள் உள்ளன.

கம்போடியாவில் இருக்கும் அங்கோர்வாட் ஆலயத்திற்கு மேருமலைக் கோட்டை என்று சூரியவர்மன் பெயர் வைத்து இருக்கிறார்.

அந்த வகையில் சிங்கப்பூர் மலைக்கு மேரு மலை என பெயர் வைக்கப் பட்டது. அங்கே தான் நீல உத்தமன் தன் அரண்மனையை முதன்முதலில் கட்டி இருக்கிறார். அங்கே இருந்து தான் சிங்கப்பூரை ஆட்சி செய்து இருக்கிறார். இருந்தாலும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இடத்தை மாற்றி விட்டார்.

(Fort Canning hill itself represented Mount Meru, the seat of the gods in Hindu-Buddhist mythology, which was associated with kingship and divinity in ancient Southeast Asian culture. Building a palace on a hill would have helped Nila Utama to assert his role as a semi-divine ruler.)


அதன் பிறகு அந்த இடம் அரசப் பரம்பரையினரின் கல்லறைகள் இடமாக மாறி இருக்கிறது.

சிங்கப்பூர் மேரு மலை 14-ஆம் நூற்றாண்டில் செழித்து வளர்ந்த பண்டைய சிங்கப்பூராவின் மையமாக இருந்து உள்ளது. அரசியல், மதம், வணிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைக் கொண்டதாகவும் இருந்து உள்ளது.

1330-ஆம் ஆண்டில், சீனப் பயணி வாங் தயான் (Wang Dayuan) சிங்கப்பூர் தீவுக்கு பயணம் செய்தார். சிங்கப்பூருக்கு தான்மாக்ஸி (Danmaxi) என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

அந்தச் சீனப் பயணி டாயோய் ஷிலீ (Daoyi Zhilüe) எனும் வரலாற்று நூல் எழுதி இருக்கிறார். அதில் சிங்கப்பூரின் இரண்டு தனித்துவமான குடியேற்றங்களை விவரித்து இருக்கிறார்.


முதலாவது லாங் யா மென் (Long Ya Men) குடியேற்றம். இரண்டாவது பான் ஜூ (Ban Zu) குடியேற்றம். இந்தக் குடியேற்றங்கள் சிங்கப்பூர் மேரு மலையில் இருந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பான் ஜூ மக்கள் நேர்மையானவர்கள் என்று வர்ணிக்கப்பட்டனர்.

அங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் தலைமுடியை கட்டையாக வைத்து இருந்தார்கள். தங்கம் கலந்த சந்தன தலைப்பாகையை அணிந்து இருந்தார்கள்.  அவர்கள் சிவப்பு நிற துணிமணிகளை அணிந்து இருந்ததாகவும் கூறப் படுகிறது.

14-ஆம் நூற்றாண்டின் இறுதியில், சிங்கப்பூரைப் பரமேஸ்வரா ஆட்சி செய்த போது மஜபாகித் அரசு தாக்கியது. அதனால் பரமேஸ்வரா மலாக்காவிற்கு இடம் பெயர்ந்தார். 


அந்த நேரத்தில் தான், சிங்கப்பூர் மேரு மலையில் மனிதர்களின் குடியேற்றம் கைவிடப்பட்டு இருக்கலாம் என தொல்பொருள் சான்றுகள் உறுதி படுத்துகின்றன.

அந்தப் புலம்பெயர்வு காலத்தில் தான் அந்த நகைகளையும் அங்கேயே விட்டுச் சென்று இருக்கிறார்கள். இந்த நகைகள் தான் பரமேஸ்வரா சிங்கப்பூரை ஆட்சி செய்த வரலாற்றை உறுதி படுத்துகின்றன.

கென்னிங் மலை குடியேற்றத்தின் இடிபாடுகள் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டன.

1823-ஆம் ஆண்டில் ஜான் கிராபர்ட் (John Crawfurd) என்பவர் சிங்கப்பூரின் ஆளுநராக இருந்தார். அவர் இந்திய தீவுக் கூட்டத்தின் வரலாறு (History of the Indian Archipelago) எனும் வரலாற்று நூலை எழுதி இருக்கிறார். அதில் கென்னிங் மலையைப் பற்றி சொல்லி இருக்கிறார்.

இடிபாடுகளுக்கு இடையில் ஒரு பழங்கால பழத்தோட்டம். அங்கே மண்பாண்டங்கள் மற்றும் சீன நாணயங்களின் துண்டுகள் கிடைத்தன. அவற்றில் 10-ஆம் நூற்றாண்டில் சீனாவை ஆட்சி செய்த சோங் வம்சாவளியினரின் (Song Dynasty) நாணயங்களும் கிடைத்தன என எழுதி இருக்கிறார்.


கென்னிங் மலையின் உச்சியில் ஒரு கோயில் இருந்து இருக்கலாம். வாய்ப்புகள் உள்ளன. 40 சதுர அடி பரப்பளவில் கோயில் போன்ற ஓர் அமைப்பின் இடிபாடுகள் இருந்தன. அங்கு ஒரு கல்லறை இருந்து இருக்கலாம். இருந்தாலும் பரமேஸ்வரா அங்கு அடக்கம் செய்யப் பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்கிறார்.

கென்னிங் மலையின் மேற்குப் பகுதியில் பஞ்சூர் லாரங்கன் அல்லது "தடை செய்யப்பட்ட நீரூற்று" (pancur larangan) என்று அழைக்கப்படும் ஒரு நீரூற்று இருந்தது. அங்கு பண்டைய காலத்து மன்னர்களின் வீட்டுப் பெண்கள் நீராடி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலக் கட்டத்தில் சிங்கப்பூர் துறைமுகத்தில் நிறுத்தப்படும் அனைத்து கப்பல்களுக்கும் சுத்தமான குடிநீரை வழங்க இந்த நீரூற்று பயன்படுத்தப் பட்டு உள்ளது. குடிநீர் தேவை அதிகமானதால் நீரூற்றும் வறண்டு போனது. அப்புறம் என்ன வருகிற கப்பல்களுக்கு எல்லாம் சுத்தமான குடிநீர் வழங்குவது என்றால் சாதாரண விசயமா?


அதனால் மலையைச் சுற்றி கிணறுகளைத் தோண்டி இருக்கிறார்கள். அந்தக் கிணறுகளின் சிதைவுகள் இன்றும் உள்ளன.

1819 பிப்ரவரி 6-ஆம் தேதி ஜொகூர் - சிங்கப்பூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. மேஜர் வில்லியம் பர்குவர் (Major William Farquhar), கென்னிங் மலையின் உச்சியில் யூனியன் ஜாக் எனும் பிரிட்டிஷ் கொடியை ஏற்றினார்.

அதே நாளில் சிங்கப்பூரின் முதல் தளபதியாக வில்லியம் பர்குவர் நியமிக்கப் பட்டார். அன்றைய தினம் தான் கென்னிங் மலை எனும் பெயர் சிங்கப்பூர் மலை என மாற்றம் கண்டது.

1822-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் முதல் தாவரவியல் பூங்காவையும் ராபிள்ஸ் இங்கு தான் நிறுவினார். 48 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சிங்கப்பூரில் சோதனை பயிர் சாகுபடிக்கு (experimental crop cultivation) ஒதுக்கப்பட்டது. ஆனால் சோதனை தோல்வி அடைந்தது. பின்னர் அந்தத் தோட்டம் 1829-ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது.


கென்னிங் மலையில் ஒரு கிறிஸ்தவ கல்லறை இருந்தது, இது சிங்கப்பூரின் ஆரம்பகால ஐரோப்பியர்களின் இடுகாடாக இருந்தது. 1822-ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது. இப்போது இல்லை.

1927-ஆம் ஆண்டில் அங்கே நீர்த்தேக்கக் கட்டுமானம் (Fort Canning Service Reservoir) தொடங்கியது. 1929-ஆம் ஆண்டில் நிறைவு அடைந்தது. அப்போது தான் பரமேஸ்வரா அல்லது அவர் சார்ந்த மூதாதையர்களின் ஆபரணங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.

இந்தக் கென்னிங் மலையில் ஒரு சமாதி கண்டுபிடிக்கப் பட்டது. 14-ஆம் நூற்றாண்டின் சிங்கப்பூரின் கடைசி ஆட்சியாளராக இருந்தவர் பரமேஸ்வரா.  அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான இடமாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

இருந்தாலும் அந்தக் கல்லறை பரமேஸ்வராவின் கல்லறையாக இருக்க முடியாது என்பதே வரலாற்று ஆசிரியர்கள் பலரின் கருத்து. என்னுடைய கருத்தும் அதுவே.

ஏன் என்றால் பரமேஸ்வரா மலாக்காவில் இறந்து போனார். போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருக்கலாம். வாய்ப்புகள் அதிகம். கென்னிங் மலையில் அடக்கம் செய்யப் பட்டதற்கான எந்த ஆதாரமும் இது வரையிலும் கிடைக்கவில்லை.

மலாக்காவில் இறந்து போனவரின் உடலைச் சிங்கப்பூர் கென்னிங் மலைக்கு கொண்டு வந்து இருப்பார்களா? அந்தக் காலத்தில் மலாக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு ஓர் உடலைச் சுமந்து வர 20 நாட்கள் பிடித்து இருக்கலாம். சாலை வசதிகளும் இல்லை. எல்லாமே காட்டுப் பாதைகள். ஒற்றையடிப் பாதைகள்.

ஆகவே கென்னிங் மலையில் உள்ள கல்லறைக்கும் பரமேஸ்வராவுக்கும் எவ்வாறு தொடர்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பரமேஸ்வரா என்கிற மன்னர் தான் சிங்கப்பூரை ஆட்சி செய்து இருக்கிறார். அவர் தான் சிங்கப்பூரின் கடைசி மன்னர். அவர் தான் மலாக்காவைத் தோற்றுவித்த முதல் மன்னர். வரலாறு என்றைக்கும் பொய் பேசாது என்று பரமேஸ்வரா ராகம் பூபாளம் பாடுகின்றது.

சான்றுகள்:

1. https://www.roots.sg/Content/Places/surveyed-sites/Archaeological-Excavation-Site-at-Fort-Canning-Park

2. https://eresources.nlb.gov.sg/history/events/2ebfebad-a4d5-4bbb-bf43-c7db6e30eb7d

3. R.O. Winstedt (November 1928). "Gold Ornaments Dug Up at Fort Canning, Singapore'". J.M.B.R.A.S. [Journal of the Malayan Branch of the Royal Asiatic Society]. 6 (4): 1–4.

4. C.M. Turnbull (30 October 2009). A History of Modern Singapore, 1819–2005. NUS Press. pp. 21–22. ISBN 978-9971694302.





ஜப்பானில் பெண்சாய்தேன் சரஸ்வதி வழிபாடு

தமிழ் மலர் - 05.07.2020 

உலகின் பல நாடுகளில் பல வகையான சரஸ்வதி வழிபாடுகள். அவற்றில் மிகப் பழமையான ஒரு வழிபாட்டு

முறை ஜப்பான் நாட்டில் உள்ளது. இன்றும் சரஸ்வதி தேவிக்காகக் கோயில்கள் கட்டி வழிபட்டு வருகிறார்கள். அந்தக் கோயில்களில் ஒன்றை ஜப்பான் நாட்டின் தேசிய வரலாற்றுத் தளமாகப் பிரகடனம் செய்து இருக்கிறார்கள். 


ஜப்பானில் சரஸ்வதி தெய்வத்திற்கு மட்டும் நூற்றுக் கணக்கான ஆலயங்கள் உள்ளன. தோக்கியோ மாநகரத்தில் ஓர் ஆலயத்தில் ஒரு பெரிய சரஸ்வதி சிலை உள்ளது. அதே போல ஒசாகா மாநகரத்தில் உலகிலேயே மிகப் பெரிய சரஸ்வதி சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் செய்தி பலருக்கும் தெரியாதது.

இந்தியாவின் மாபெரும் நதிகள் கங்கை, யமுனை, சரஸ்வதி. இவை புனிதமான நதிகள். அந்த வகையில் ஜப்பானில் உள்ள சில பல நீர்நிலைகள், குளங்கள் போன்றவற்றை சரஸ்வதி கடவுளாக நினைத்து ஜப்பானியர்கள் வணங்கி வருகிறார்கள். 


ஜப்பானில் சரஸ்வதி தேவியை பெந்தேன் (Benten) என்றும் பெண்சாய்தேன் (Benzaiten) என்றும் அழைக்கிறார்கள். இந்து தெய்வமான சரஸ்வதியில் இருந்து தோன்றிய ஜப்பானிய புத்த தெய்வம். இந்துக்கள் வழிபடும் கலைமகள். சரஸ்வதியின் மறு வடிவம்.

பெண்சாய்தேன் சரஸ்வதி வழிபாடு 6-ஆம் நூற்றாண்டு; 8-ஆம் நூற்றாண்டுகளில் ஜப்பானுக்கு வந்தது. ஏறக்குறைய 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சரஸ்வதி வழிபாடுகள் அங்கே தொடங்கி விட்டன.

சீனாவின் தங்க ஒளி காப்பியத்தின் (Sutra of Golden Light) சீன மொழிபெயர்ப்புகள் வழியாக ஜப்பானுக்கு வந்தது. தங்க ஒளி காப்பியத்தை சுவர்ணபிரபாச சூத்திரம் என்றும் அழைப்பார்கள். அதில் சரஸ்வதி தேவிக்காக ஓர் அத்தியாயத்தையே ஒதுக்கி இருக்கிறார்கள்.


சற்று தெளிவாகச் சொல்கிறேன். சுவர்ணபிரபாச சூத்திரம் என்பது ஒரு புத்த மகாயான நூல். இந்தியாவில் எழுதப் பட்டது. சீனாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.

இந்த நூல் இப்போது சீனாவில் வழக்கில் இல்லை. இருந்தாலும் பாருங்கள்.

சீனாவில் இருந்து ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நூல் ஜப்பானில் மிகவும் பிரபலமாகி விட்டது. சதுர் மகாராஜாக்கள் நாட்டை நன்முறையில் ஆளும் அரசனைக் காப்பதாக இந்த நூலில் கூறப்பட்டு உள்ளது.

அதைக் கருத்தில் கொண்டு இந்த நூல் நாட்டைக் காப்பதற்காகப் பொது இடங்களில் போதிக்கப்பட்டது. அதாவது பாராயணம் செய்யப்பட்டது. 


முதன் முதலில் இந்தச் சூத்திரம் கி.பி. 660-ஆம் ஆண்டில் ஜப்பானிய அரசவையில் பாராயணம் செய்யப்பட்டது. இந்தக் காலக் கட்டத்தில் சீனாவும் கொரியாவும் ஜப்பானுக்கு அச்சுறுத்தலாக இருந்தன. நல்ல வேளையாக போர் எதுவும் வரவில்லை.

அதனால் கி.பி 741-ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டு சக்கரவர்த்தி ஷோமு (Emperor Shōmu) நாடு முழுவதும் பல பௌத்த மடங்களை நிறுவினார். இந்த வகையில் தான் சரஸ்வதியின் வழிபாடு ஜப்பானில் பரவியதாகக் கருதப் படுகிறது.

தவிர இந்தியாவில் இருந்து தனிப்பட்ட வகையில் ஜப்பான் நாட்டிற்குச் சென்ற பௌத்த துறவிகள் அங்கு சரஸ்வதி தேவியின் வழிபாட்டை அறிமுகம் செய்து இருக்கின்றனர்.

இரு வகைகளில் சரஸ்வதி தேவி ஜப்பானுக்குச் சென்று இருக்கிறார். முதலாவதாக சீனாவின் தங்க ஒளி காப்பியத்தின் வழியாக சென்று இருக்கிறார். அடுத்து இந்தியாவில் இருந்து ஜப்பான் நாட்டிற்குச் சென்ற பௌத்த துறவிகள் வழியாகவும் அவருடைய பயணம் அமைந்து இருக்கிறது.


ஜப்பானில் தாமரை சூத்திரம் எனும் சமய நூல் (Lotus Sutra). அந்த நூலில் ஜப்பானிய வீணையைக் கொண்டு சித்தரிக்கப் படுகிறார். ஜப்பானிய வீணையை பிவா (Biwa) என்று அழைக்கிறார்கள். இந்த நூலை 'சித்தம்' எனும் பெயரில் ஜப்பானியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இந்து மதத்தில் கல்வி, ஞானத்திற்கு தெய்வமாகக் கருதப் படுகிறவர் சரஸ்வதி தேவி. அதே அந்த சரஸ்வதியைப் புத்த மதத்திலும் வழிபடுகிறார்கள். ஞானம் வழங்கும் பெண் தெய்வமாக வழிபடுகிறார்கள். இந்து தெய்வ வழிபாட்டில் சரஸ்வதி தேவி வீணையைப் பயன்படுத்துகிறார்.

இந்தியாவில் இருந்து ஜப்பான் நாட்டிற்கு புத்த மதம் பரவிய காலக் கட்டத்தில், இந்த சரஸ்வதி தேவி வழிபாடும் அங்கு காலூன்றியது. சரஸ்வதி தேவியை ஒரு தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். இன்றும் ஜப்பான் நாட்டு மக்கள் வழிபடுகின்றனர்.

ஜப்பானியர்கள் கருட பகவானை 'கருரா' என அழைக்கிறார்கள். வாயு பகவான், வருண பகவான் போன்ற தெய்வங்களுக்கு ஜப்பானில் சிலைகள் உள்ளன.


ஜப்பான் நாட்டின் தலையாய மதங்களாக இருப்பவை ஷிந்தோ மதம்; புத்த மதம். இந்த இரு மதங்களும் இந்தியாவில் இருந்து வந்த துறவிகளால் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டவை.

ஜப்பானிய பௌத்த மதத்தில் இசையின் மூலமாக சொற்பொழிவுகள்; இசைக் கவிதைகள் படைக்க பிவா எனும் கருவியைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கருவி முதலில் சீனாவில் தான் பிரபலமாக இருந்தது. பின்னர் கிழக்கு ஆசியா முழுவதும் பரவியது.

உலகின் பல நாடுகளில் சரஸ்வதி வழிபாடுகள் உள்ளன. கிரீஸ், இத்தாலி, ஆப்பிரிக்க நாடுகள்; மத்திய கிழக்கு நாடுகள்; கொரியா; ஜப்பான்; இந்தோனேசியா; மலேசியா நாடுகள்.

இருந்தாலும் பெண்சாய்தேன் வழிபாடு ஜப்பானின் ஷிந்தோ (Shinto) பயன்பாட்டுடன் ஒத்துப் போகிறது. அதனால் ஜப்பானின் பாரம்பரிய மதத்தினர் ஷிந்தோக்களும் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர்.


ஜப்பான் நாட்டுப் பெண்சாய்தேன் சரஸ்வதி தேவி கையில் வீணை வைத்து இருப்பதைப் போல தந்தி மீட்டும் இசைக் கருவியை வைத்து இருக்கிறார். அந்த வடிவத்தில் பல சிற்பங்களும் பல ஓவியங்களும் அங்கே இருக்கின்றன.

ஜப்பான் நாட்டு மக்கள் தங்களின் பிள்ளைகள் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கவும்; கல்வித் தேர்வுகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறவும் பெண்சாய்தேன் சரஸ்வதி தேவி கோயில்களுக்குச் சென்று வழிபடுகிறார்கள்.

அவர்களின் பாரம்பரிய விழாக் காலங்களின் போது, பெண்சாய்தேன் சரஸ்வதி தேவிக்கு சிறப்பான சடங்குகளைச் செய்து வழிபடுகிறார்கள்.

ஜப்பானிய சமூக நம்பிக்கைகளில் அதிர்ஷ்டத்திற்கு ஏழு தெய்வங்கள் உள்ளனர். அவர்களில் ஒருவராக சரஸ்வதி தேவி இடம் பிடித்து இருக்கிறார். அந்த அதிர்ஷ்ட தேவதைக்கு புகுஜின் (fukujin) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.


இந்தப் புகுஜின் தேவதையை திரிமூர்த்தி தேவதை என்றும் சொல்கிறார்கள். திரிமூர்த்தி தேவதை என்றால் சரஸ்வதி; லெட்சுமி; பார்வதி.

இந்து சமயத்தின் சரஸ்வதி; லெட்சுமி; பார்வதி தெய்வங்களுக்கு அங்கே ஜப்பானில் புகுஜின் தெய்வங்கள் என்று பெயர் சூட்டி சிறப்பு செய்கிறார்கள். மனசுக்குள் ஒரு தடுமாற்றம்.

பெண்சாய்தேன் தெய்வத்தை நீர், நேரம், வார்த்தைகள், பேச்சு, சொற்பொழிவு, இசை, அறிவு போன்றவற்றைப் பிரதிபலிக்கும் தெய்வமாக ஜப்பானியர்கள் பார்க்கிறார்கள்.

சரஸ்வதியின் சீன மொழிப் பெயர் பியான்கைட்டியன் (Biancaitian). பெண்சாய்தேன் சரஸ்வதி தேவி மிகவும் சக்தி பெற்ற தெய்வமாகவும், அதே சமயத்தில் ஜப்பான் நாட்டையே காக்கும் தெய்வமாகவும் போற்றப் படுகிறார்.

(Benzaiten is the goddess of everything that flows: water, time, words, speech, eloquence, music and by extension, knowledge)


ஜப்பானில் ஏராளமான இடங்களில் அவருக்குச் சின்னச் சின்ன கோயில்கள் உள்ளன. இருப்பினும் பெரிய ஆலயங்களும் உள்ளன.

சாகாமி விரிகுடாவில் (Sagami Bay) உள்ள எனோஷிமா தீவு (Enoshima Island); பிவா (Lake Biwa) ஏரியிலுள்ள சிகுபு தீவு (Chikubu Island); செட்டோ கடலில் (Seto Inland Sea) உள்ள இட்சுகுஷிமா தீவு (Itsukushima Island); ஆகிய தீவுகளில் சரஸ்வதிக்குப் பெரிய பெரிய ஆலயங்களைக் கட்டி இருக்கிறார்கள்.

சிகுபு தீவில் உள்ள சரஸ்வதி ஆலயத்தை ஜப்பான் நாட்டின் இயற்கை அழகு; தேசிய வரலாற்றுத் தளமாகப் பிரகடனம் செய்து இருக்கிறார்கள். (It is a nationally designated Place of Scenic Beauty and Historic Site).

மெலும் ஒரு செய்தி. தோக்கியோவில் உள்ள கோகோகுஜி கல்லறைகளில், சமஸ்கிருத எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. மறைந்து போனவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அந்த எழுத்துகளை அழிக்காமல் வைத்து இருக்கின்றனர். 


இந்தியாவில் பயன்பாட்டில் இல்லாத சித்தம் எனும் நுால் ஜப்பானில் உள்ளது. கோயாசன் நகரில் இந்து சமயத்தைக் கற்றுத் தரும் ஓர் இந்து சமயப் பள்ளிக்கூடமே உள்ளது. அந்த வகையில் ஜப்பான் இந்தியா இரு நாடுகளுக்கும் இந்து மதம், இந்து கடவுள் வழிபாடுகளில் தொடர்புகள் உள்ளன.

ஜப்பானிய இலக்கியங்களின் படி, இந்தியாவில் இருந்து வந்த பௌத்த துறவிகள் தங்களின் கலாசார ஆன்மீகக் கருத்துகளை உள்நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்து - பௌத்த சமயங்களின் நம்பிக்கைகள்; தத்துவங்கள் நிறையவே இன்றும் ஜப்பானில் பரவலாகப் பின்பற்றப்படுகின்றன.

கல்வி ஞானம் பற்றி உலகத்திற்கு முதன்முதலில் எடுத்துச் சொன்ன நாடு இந்தியா. அங்கு பல புண்ணிய சீலர்கள் தோன்றினார்கள். பல தத்துவ உபதேசங்களை வழங்கினார்கள். அவர்களின் அந்த ஞான உபதேசங்கள் கடல் கடந்து போயின. இப்போது வீணையின் தந்திகள் வழியாக ஆனந்த பைரவிகளை இசைக்கின்றன. 


ஜப்பான் நாட்டில் இந்து சமயம் சார்ந்த சரஸ்வதி தெய்வத்தைப் போற்றிப் புகழ்கிறார்கள். உலகத்தில் வாழும் இந்துக்கள் எல்லாம் திரும்பிப் பார்க்கிறார்கள். திரும்பிப் பார்க்காமலேயே என் மனதிற்குள் இனம் தெரியா மகிழ்ச்சி.

சான்றுகள்:

1. Ludvik, Catherine. “Uga-Benzaiten: The Goddess and the Snake.” Impressions, no. 33, 2012, pp. 94–109. JSTOR, JSTOR, www.jstor.org/stable/42597966.

2. Saraswati meets Buddha, SHAILAJA TRIPATHI, The Hindu, March 21, 2016

3. Pye, Michael (2013). Strategies in the study of religions. Volume two, Exploring religions in motion. Boston: De Gruyter. p. 279.

4. https://en.wikipedia.org/wiki/Hinduism_in_Japan





05 ஜூலை 2020

சீனா மிங் வரலாற்றில் பரமேஸ்வரா

தமிழ் மலர் - 04.07.2020

1368-ஆம் ஆண்டு தொடங்கி 1644-ஆம் ஆண்டு வரை மிங் வம்சம் (Ming dynasty) சீனாவின் ஆளும் வம்சமாக இருந்தது. மகா மிங் வம்சம் (Great Ming) என்று அழைப்பது உண்டு. சீனாவின் கடைசி ஏகாதிபத்திய வம்சமாகும். இவர்கள் ஹான் இனத்தைச் சேர்ந்த சீனர்கள். 


Yongle Emperor Ming dynasty

மிங் வம்சாவளியினரில் மிக முக்கியமானவர் யோங் லே (Yongle Emperor). இவருடைய அசல் பெயர் ஜு டி (Zhu Di). இவர் 1402 முதல் 1424 வரை சீனாவை ஆட்சி செய்தார். மிங் வம்சத்தை நிறுவிய ஹொங்வூ (Hongwu) பேரரசரின் நான்காவது மகன்.

யோங் லே ஆட்சிக் காலத்தில் தான் பரமேஸ்வரா சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டார். சீனாவின் மிங் அரச வம்சாவளியினர் மலாக்காவிற்குப் பாதுகாப்பு வழங்கினார்கள். அதனால் மலாக்காவிற்கும் சீனாவிற்கும் அரச தந்திர உறவுகள் மேம்பாடு கண்டன. இந்த அரச தந்திர உறவுகள் வெளிநாட்டவரின் தாக்குதல்களையும் தவிர்த்தன.

1400-ஆம் ஆண்டுகளில் பரமேஸ்வரா இரு தடவை சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். அவரின் சீனப் பயணத்தின் போது செங் ஹோ (Zheng He); இன் சிங் (Yin Qing) ஆகிய இருவரும் அவருக்குத் துணையாக இருந்து இருக்கிறார்கள்.



தவிர பரமேஸ்வரா மூன்று முறை சீனாவிற்குத் திறை அன்பளிப்புகள் செய்து உள்ளார். திறை அன்பளிப்பு என்றால் காப்பீட்டுத் திறை. சுருங்கச் சொன்னால் பாதுகாப்புத் திறை.

ஒரு சிறிய நாடு தன் பாதுகாப்பிற்காக ஒரு பெரிய நாட்டிடம் செலுத்தும் வரிக்குப் பெயர் தான் திறை அன்பளிப்பு அல்லது கப்பம். 1405, 1407, 1409-ஆம் ஆண்டுகளில் சீனாவுக்கு அந்த அன்பளிப்புகள் செய்யப் பட்டன.

குறிப்பாக சயாம் நாடும் மஜபாகித் பேரரசும் மலாக்காவின் மீது தாக்குதல் நடத்தி மலாக்காவைக் கைப்பற்றிக் கொள்ள காத்து இருந்தன. அதைத் தவிர்ப்பதற்காக பரமேஸ்வரா சீனாவின் உதவியை நாடினார்.

சீனா - மலாக்கா நல்லுறவுகளினால் அந்தத் தாக்குதல்கள் நடைபெறாமல் போயின. மலாக்காவில் அமைதி நிலவியது. அதனால் மலாக்கா ஒரு முக்கிய வணிகக் கேந்திரமாக விளங்கியது. 



சீனாவில் இருந்து இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பா நாடுகளுக்குச் சென்ற வணிகர்கள் மலாக்காவில் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் அவர்களின் பயணங்களைத் தொடர்ந்னர்.

சீனாவின் மிங் வம்சாவளியினரின் வரலாற்றுச் சுவடுகளில் பரமேஸ்வராவின் சீனப் பயணத்தைப் பற்றிய குறிப்புகளின் ஒரு பகுதி உள்ளது. அத்தியாயம்: 325-இல் அந்தப் பதிவு உள்ளது.

(Part of original copy of Ming Dynasty history 1368-1644 - chapter 325. Parameswara visits emperor Yongle)

ஆங்கிலத்தில் உள்ளதை தமிழ் மொழியாக்கம் செய்து இருக்கிறேன்.



1405-ஆம் ஆண்டு இன் சிங் தூதர் மலாக்காவிற்கு அனுப்பப் பட்டார். மலாக்கா ஆளுநருக்குத் தங்கப் பட்டுப் பின்னல் ஆபரணங்கள்; தங்கத்தினால் பின்னப்பட்ட ஒரு முகத்திரை வழங்கப்பட்டது.

தூதர் இன் சிங் முதன்முதலில் மலாக்காவிற்குச் சென்ற போது அங்கே ஒரு சாம்ராஜ்யம் அமைக்கப்படவில்லை. மலாக்காவில் ஒரு நிரந்தரமான மன்னரும் இல்லை. ஆண்டுதோறும் சயாமிற்கு 40 தங்கக் கட்டிகள் வரிப் பணமாக வழங்கப் படுகிறது என்று எழுதி இருக்கிறார்.

இன் சிங் தூதரைக் கண்டு மலாக்காவின் அப்போதைய தலைவர் பாய்-லி-மி-சுலா (Pai-li-mi-su-la) அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். பரமேஸ்வராவைச் சீனாவிற்கு அழைத்து வந்தார். அவரைச் சீன மாமன்னர் வெகுவாகப் பாராட்டி சிறப்பு செய்தார். பரமேஸ்வராவின் பெயரை பாய்-லி-மி-சுலா என்று சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள்.


பரமேஸ்வராவுக்கு வழங்கப்பட்ட மிங் அரச முத்திரை

மான்-லா-காவின் (Man-la-ka) மன்னராக்கிப் பெருமை செய்தார். அவருக்குச் சீன அரசு முத்திரை; வண்ணம் தோய்ந்த பணத் தாட்கள்; ஓர் ஆடை ஆபரண பெட்டகம்; மஞ்சள் நிற மாட்சிமைக் குடை வழங்கப்பட்டது. மலாக்காவை மான்-லா-கா என்று சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள்.

அதற்கு நன்றி கூறிய மலாக்காவின் தூதர் மன்னர் பரமேஸ்வரா மகிழ்ச்சி அடைந்தார். ஆண்டுதோறும் அன்பளிப்பு வழங்க சம்மதித்தார். மலாக்கா அரசிற்கு சாம்ராஜ்யம் எனும் தகுதி வழங்கப்பட வேண்டும் என்பதே பரமேஸ்வராவின் தாழ்மையான வேண்டுகோள் என்று தூதர் இன் சிங் எழுதி இருக்கிறார்.

மலாக்கா ஒரு சாம்ராஜ்யமாகக் கருதப் படுகிறது எனும் அரசக் கவிதை பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு பரமேஸ்வராவிடம் வழங்கப் பட்டது. 

1411-ஆம் ஆண்டு பரமேஸ்வராவும் அவருடைய மனைவியும் 540 அரசாங்க அதிகாரிகளுடன் சீனாவிற்குச் சென்று இருக்கிறார். யோங் லே மாமன்னரை மரியாதை நிமித்தம் கண்டு நட்புறவு பாராட்டி இருக்கிறார். நான்கிங் நகரில் (Nanjing) இரு மாதங்கள் தங்கி இருக்கிறார்.

(சான்று: http://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_1540_2009-07-06.html)


பரமேஸ்வரா பயன்படுத்திய கப்பலின் மாதிரி

யோங் லே மாமன்னர் பரமேஸ்வராவைப் பாராட்டிப் பேசினார். பரமேஸ்வரா தான் மலாக்காவின் உரிமைமிகு ஆட்சியாளர் என ஏற்றுக் கொண்டார். சீனாவின் அங்கீகாரமாகச் சின்னமாக சீன நாட்டு முத்திரை; சீன நாட்டுப் பட்டுத் துணி; சீன நாட்டு மஞ்சள் குடை அன்பளிப்பாக வழங்கப் பட்டன.

பரமேஸ்வரா தான் மலாக்காவின் உரிமை மிக்க ஆட்சியாளர் எனும் அதிகாரப்பூர்வமான கடிதமும் பரமேஸ்வராவிடம் வழங்கப் பட்டது. அதன் பின்னர் மலாக்கா ஒரு சாம்ராஜ்யம் எனும் தகுதியைப் பெற்றது. அந்தத் தகுதியை வழங்கியவர் சீன நாட்டு மாமன்னர் யோங் லே. அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆண்டு 1411.

மலாக்காவிற்குத் திரும்பி வரும் போது பரமேஸ்வராவிற்குத் துணையாகச் சீனக் கப்பல் படைத் தலைவர்களும் கூடவே வந்து இருக்கின்றார்கள். ஒருவர் செங் ஹோ (Admiral Cheng Ho). இன்னொருவர் இங் சிங் (Admiral Ying Ching). தவிர இருவரும் தனித்தனிக் காலக் கட்டங்களில் மலாக்காவிற்கு வந்து போய் இருக்கிறார்கள்.


ஆக சீனா - மலாக்கா தூதரக உறவுகளினால் மலாக்கா பேரரசிற்குச் சீனா ஒரு பாதுகாவலராகவே இருந்து இருக்கிறது. அதனால் தான் சயாம் நாடும்; சுமத்திராவின் மஜாபாகித் அரசும் மலாக்காவின் விவகாரங்களில் தலையிடவில்லை. இந்தக் காரணங்களினால் தான் மலாக்காவின் கடல் வழி வாணிகமும் பெருகத் தொடங்கியது. சீனா, இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு மலாக்கா ஒரு முக்கிய வாணிகத் தளமாகவும் புகழ் பெற்று விளங்கி இருக்கிறது.

பரமேஸ்வரா சீனாவிற்குப் போய் சேர்ந்ததும் அவருக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப் பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பைப் பற்றிய குறிப்புகள் மிங் பேரரசின் வரலாற்றுப் பதிவுகளில் காணப் பெறலாம்.

(சான்று: http://www.epress.nus.edu.sg/msl/ - Wade, Geoff (2005), Southeast Asia in the Ming Shi-lu: an open access resource, Asia Research Institute and the Singapore E-Press, National University of Singapore - பக்கம்: 786)

சீன மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யப் பட்டதை மேலே காணலாம். அதன் தமிழ் மொழியாக்கம் கீழே:

** அரசராகிய நீங்கள் (பரமேஸ்வராவைக் குறிப்பிடுகிறது) பல பத்தாயிரம் மைல்கள் விரிந்து கிடக்கும் மாக்கடலைத் தாண்டி நம்பிக்கையுடன் கவலை இல்லாமல் வந்து இருக்கிறீர்கள். அந்த விசுவாசத்திற்கும் நேர்மை குணத்திற்கும் நல்லாவிகளின் பாதுகாப்புகளைப் பெறுவீர்களாக. நான் (யோங்லே மன்னரைக் குறிப்பிடுகிறது) உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 



** தாங்கள் இங்கே தங்க வேண்டும் என்றும் ஆசைப் படுகிறேன். இருப்பினும் உங்களுடைய மக்கள் உங்களுக்காகப் பேராவலுடன் காத்து இருக்கின்றனர். ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதே பொருத்தமாக அமையும். வானிலை குளிராகி வருகிறது. தெற்கை நோக்கிக் கடல் பயணம் செய்வதற்கு காற்று மிகச் சரியாகவும் இருக்கின்றது.

** இது தான் மிகச் சரியான நேரம். பயணத்தின் போது நீங்கள் நன்றாகச் சாப்பிட்டு உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுவே நான் உங்கள் மீது காட்டும் அக்கறைக்குப் பிரதிபலனாக அமையும்.

** மன்னனாகிய உங்களுக்குத் தங்கத்திலும் கரும்பச்சை மணிக் கல்லால் ஆன அரைக்கச்சை; சடங்குகளுக்கான அதிகாரச் சின்னம்; சேணம் பூட்டிய இரண்டு குதிரைகள்; 100 லியாங் தங்கம்; 500 லியாங் வெள்ளி; 400,000 குவான் காகிதப் பணம்; 2,600 செப்புக் காசுகள்; 300 பட்டுச் சேலைகள்; 1000 மென் பட்டுத் துணிகள்;


மிங் அரசர் பரமேஸ்வராவுக்கு வழங்கிய இதர அன்பளிப்புகள்: மாணிக்கக் கற்கள், முத்து, கழுகின் அலகுகள், நாரையின் அலகுகள், தங்க நாரையின் அலகுகள், வெள்ளைத் துணிகள், மேற்கத்திய நூலிழைகள், காண்டாமிருகத்தின் கொம்புகள், யானைத் தந்தங்கள், கறுப்புக் கரடி, கருங்குரங்கு, வான்கோழி, கிளிகள், வாசனைப் பொருட்கள், தங்க வெள்ளிக் குச்சிகள் என அந்த வரலாற்றுப் பதிவுகளில் உள்ளன.

பரமேஸ்வராவின் ஆட்சி காலத்தில் மலாக்கா மிகவும் புகழ் பெற்ற வாணிகத் துறைமுகமாக விளங்கியது. அங்கே 80 மொழிகள் பேசப் பட்டன. உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர்.

தமிழ் நாடு, கெய்ரோ, ஏடன், ஓர்முஸ், ரோமாபுரி, துருக்கி, குஜாராத், கோவா. மலாபார், ஒரிசா, ஸ்ரீ லங்கா. வங்காளம், சயாம், கெடா, பகாங், பட்டானி, கம்போடியா, சம்பா, கொச்சின், புருணை, லிங்கா, மினாங்கபாவ், பாசாய், மாலைத் தீவுகள் போன்ற நாடுகள்.

16-ஆம் நூற்றாண்டில் கீழைத் தேச நாடுகளில் மலாக்கா மிகவும் முக்கியமான துறைமுகமாக விளங்கியது. அதன் செல்வ வளப்பத்தைக் கண்டு தோம் பைரஸ் (Tom Pires) என்பவர் “யார் ஒருவர் மலாக்காவின் பிரபுவாக இருக்கின்றாரோ அவர் வெனிஸ் நகரின் கழுத்தின் மீது கை வைத்தது போல் ஆகும்” என்று எழுதி இருக்கிறார்.

(Whoever is lord of Malacca shall have his hands on the throat of Venice.) 


மன்னர் யோங் லேவின் மனைவி

தோம் பைரஸ் ஒரு போர்த்துகீசிய வணிகர். ஓர் எழுத்தாளரும் ஆகும். சீனாவில் பல ஆண்டுகள் வாழ்ந்தவர். சீனாவை அரசர் செங்டு (Zhengde Emperor) ஆட்சி செய்த போது அவரின் வரலாற்று ஆசானாகத் திகழ்ந்தவர்.

(சான்று: Cortesao, Armando (1990), The Suma Oriental of Tome Pires, 1512–1515, Laurier Books Ltd, ISBN 978-81-206-0535-0 - p. lxxv)

1414-ஆம் ஆண்டு பரமேஸ்வரா தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார். அவருடய உடல் நெகிரி செம்பிலான், போர்டிக்சனுக்கு அருகில் இருக்கும் தஞ்சோங் துவான் (Tanjung Tuan) எனும் இடத்தில் புதைக்கப் பட்டு இருக்கலாம். இந்த தஞ்சோங் துவான் எனும் இடம் முன்பு Cape Rachado என்று அழைக்கப்பட்டது.

அல்லது சிங்கப்பூரில் உள்ள கென்னிங் மலையின் (Bukit Larangan, Fort Canning, Singapore) அடிவாரத்தில் பரமேஸ்வரா புதைக்கப் பட்டு இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. இதுவும் இன்னும் உறுதி படுத்தப்பட முடியவில்லை. அதைப் பற்றிய ஆய்வுகளையும் செய்து வருகிறார்கள்.

பரமேஸ்வராவுக்குப் பின் அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமா எனும் மெக்காட் இஸ்கந்தர் ஷா மலாக்காவை 1424-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். இவர் மலாக்காவின் இரண்டாவது ஆட்சியாளர். இவரை ராஜா தெங்ஙா அல்லது ராடின் தெங்ஙா என்றும் அழைத்தனர். இவருக்கு ஸ்ரீ மகாராஜா எனும் விருது வழங்கப் பட்டது.

இவர் இஸ்லாமிய சமயத்தைத் தழுவினார். முகமது ஷா எனும் விருதைப் பெற்றார். இவர் இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டதால் பெயர் மாற்றம் கண்டு இருக்கலாம் என்று கல்வியாளர்கள் நம்புகின்றனர். அவர் இறந்த பிறகு அவருடைய மகனான ரோக்கான் இளவரசர் ராஜா இப்ராகிம் அரியணை ஏறினார். ராஜா இப்ராகிம் ஆட்சி காலத்தில் மலாக்காவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

மலாக்காவில் வாழ்ந்த இந்திய முஸ்லீம் சமூகத்தினருக்கும் பாரம்பரிய இந்து மலாய்க்காரர்களுக்கும் இடையே சச்சரவு உண்டாகியது. இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்ட பின்னர் ராஜா இப்ராகிம் புதிய சமயத்தைத் தழுவவில்லை என்பது ஒரு பெரும் குறைகூறலாக இருந்தது.  அவர் ஸ்ரீ பரமேஸ்வரா தேவா ஷா எனும் பெயரில் ஆட்சி செய்தார் என்பதும் மற்றொரு குறைகூறல்.

புதிய சமயத்தைத் தழுவவில்லை எனும் காரணத்தினால் மலாக்காவில் சமயச் சச்சரவுகள். அதனால் அவரால் நல்ல முறையில் ஆட்சி செய்ய முடியவில்லை. அவரால் பதினேழு மாதங்கள் தான் ஆட்சி செய்ய முடிந்தது. பாவம் அவர். 1446-இல் கத்தியால் குத்திக் கொலை செய்யப் பட்டார். அதன் பின்னர் ராஜா இப்ராகிமின் ஒன்று விட்ட சகோதரர் ராஜா காசிம் என்பவர் பதவிக்கு வந்தார்.

ராஜா காசிமின் தாயார் ஒரு தமிழ் முஸ்லிம் ஆவார். பதவிக்கு வந்ததும் ராஜா காசிமின் பெயர் சுல்தான் முஷபர் ஷா என்று மாற்றம் கண்டது. அதன் பின்னர் மலாக்கா சுல்தானிய ஆட்சியில் புதிய சகாப்தம் மலர்ந்தது. இந்தக் கட்டத்தில் தான் மலாக்காவில் இருந்த இந்தியர்களின் அரசு அதிகாரங்கள் குறைந்து போயின.

மலாக்காவைப் பரமேஸ்வரா என்பவர் தான் தோற்றுவித்தார். இருப்பினும் அண்மைய காலங்களில் அவருடைய பெயர் வரலாற்றில் இருந்து இரட்டடிப்புச் செய்யப் படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாட நூல்களில் இருந்தும் பரமேஸ்வரா காணாமல் போய் வருகிறார். உண்மை மறைக்கப்படக் கூடாது என்பதே நம்முடைய ஆதங்கம்.

மலாக்கா என்றால் பரமேஸ்வரா. பரமேஸ்வரா என்றால் மலாக்கா. ஆக ஒரு வரலாற்றுச் சிதைவை நியாயப்படுத்த முன்வருபவர்கள் எந்தக் கல்வி மேடையிலும் நம்மை வரலாற்று வாதத்திற்கு அழைக்கலாம். சான்றுகளை முன் வைக்கத் தயாராக இருக்கின்றோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.07.2020