18 ஏப்ரல் 2021

ஜாவா காட்டுக்குள் இஜோ திருமூர்த்தி ஆலயம்

இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தெளித்த பச்சைப் பசும் காடுகள். அந்தப் பச்சைக் காட்டுக்குள் அழகாய் உருவான ஓர் அதிசயமான கோயில். சிந்தாமல் சிதறாமல் வரலாற்றுச் சுவடுகளை அள்ளித் தெளிக்கும் அழகான கோயில். ஆயிரம் ஆண்டுகளாக நயனங்கள் பேசும் நளினமான கோயில்.

அதுதான் ஜாவா இஜோ கோயில். இந்தோனேசியாவின் கோயில்களில் மிக மிக அழகான கோயில். ஒரு முறை பார்த்தால் மறுபடியும் பார்க்கச் சொல்லும் பழைமையான கோயில்.


சும்மா சொல்லக் கூடாது. முன்பு காலத்தில் இந்தோனேசியா ஜாவா, சுமத்திரா தீவுகளை ஆட்சி செய்த பல்லவ அரசர்கள் பல ஆயிரம் கோயில்களைக் கட்டி அழகு பார்த்து இருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாகக் கோயில் கட்டிடக் கலைகளில் மௌன ராகங்களைப் பாடி இருக்கிறார்கள்.

மஜபாகித் அரசு; மத்தாரம் அரசு; சிங்காசாரி அரசு; சைலேந்திரா அரசு; சுந்தா அரசு; ஸ்ரீ விஜய அரசு என்று இப்படி பற்பல அரசுகள் இந்து கோயில்களையும் பௌத்த விகாரங்களையும் கட்டிப் போட்டு, பல்லவர்களின் கலை கலாசாரத்திற்குப் பெருமை சேர்த்து இருக்கிறார்கள்

இந்தோனேசியாவின் மிகப் பெரிய எரிமலை மெராப்பி (Mount Merapi). கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த எரிமலைக்கு அருகில் 50 கி.மீ. வட்டாரத்திற்குள் நிறைய கோயில்களைக் கட்டி இருக்கிறார்கள். ஏன் தெரியுங்களா.


அப்பேர்ப்பட்ட மண் வளம். போட்டது எல்லாம் முளைக்கும்; நட்டது எல்லாம் விளையும் என்கிற இயற்கையின் அருள் கொடை. எரிமலைச் சாம்பல்கள் தான் அதற்கு முக்கியக் காரணம். சரி.

இந்தோனேசியாவில் மிகப் பெரிய இந்து ஆலயம் பிரம்பனான் திருமூர்த்தி ஆலயம். இந்த ஆலயம்கூட மெராப்பி எரிமலையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் தான் உள்ளது. 16-ஆம் நூற்றாண்டில் ஒரு பெரிய பூகம்பம். அப்போது பிரம்பனான் கோயிலின் பல பகுதிகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகள் இன்றும்கூட பரவிக் கிடக்கின்றன. போய்ப் பாருங்கள். தெரிய வரும்.

ஜாவா தீவில் அடிக்கடி எரிமலை வெடிப்புகள். அடிக்கடி பூகம்பங்கள். அங்குள்ள மக்களும் அதற்கு ஏற்றவாறு தங்களின் வாழ்வியலைத் தக்க வைத்துக் கொண்டு விட்டார்கள்.


எரிமலை கொந்தளிப்பாக இருந்தால் என்ன; பூகம்பத்தின் குமுறலாக இருந்தால் என்ன; அவர்களின் அழகிய மண் வாசனையை மட்டும் இன்றும்கூட விட்டுக் கொடுக்க மறுக்கிறார்கள். நாங்கள் மதம் மாறினாலும் எங்களின் மூதாதையரை மாற்றிக் கொள்ள மாட்டோம் என்று சொல்கிறார்கள்.

மெராப்பி எரிமலை கடந்த 400,000 ஆண்டுகளாகக் குமுறிக் கொண்டு இருக்கிறது. ஒரு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாபெரும் வெடிப்பு. பயங்கரமான சேதங்கள்.

சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மெராப்பி எரிமலை சின்னதாய் ஒரு தாலவட்டம் போடுகிறது. அப்படியே சின்னதாய் ஒரு புகைச்சல். நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரிதாய் ஓர் ஆலவட்டம். பெரிதாய்ப் பல வெடிப்புகள்.

சில வெடிப்புகள் பல நூறு ஆயிரம் உயிர்களைப் பலி கொண்டு உள்ளன. 1006, 1786, 1822, 1872, 1930-ஆம் ஆண்டுகளில் பெரிய பெரிய வெடிப்புகள். 1930-ஆம் ஆண்டு வெடிப்பில் 13 கிராமங்கள் அழிந்தன. 1,400 பேர் கொல்லப் பட்டனர்.

1006-ஆம் ஆண்டில் மிகப் பெரிய ஒரு வெடிப்பு. மத்திய ஜாவா முழுவதும் எரிமலைச் சாம்பலால் மூடப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த வெடிப்பு தான் மத்தாரம் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் சொல்லப் படுகிறது.

ஜாவா தீவில் வாழும் ஜாவானிய மக்களில் பெரும்பாலோர் இந்தியப் பாரம்பரியப் பண்பாட்டுப் பின்னணியில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்தவர்கள். அங்கு உள்ள ஆயிரக் கணக்கான கோயில்களே அதற்குச் சான்றுகளாக அமைகின்றன.


இஜோ கோயில் (Ijo Temple) இந்தோனேசியா, ஜாவா, யோக் ஜகர்த்தாவில் (Yogyakarta) இருந்து 18 கி.மீ. தொலைவில் ரத்து போகோ (Ratu Boko Palace) அரண்மனை வளாகத்தில் அமைந்து உள்ளது. 10-ஆம்; 11-ஆம் நூற்றாண்டுகளில் கட்டம் கட்டமாய்க் கட்டப்பட்ட கோயில்.

மத்தாரம் பேரரசை (Mataram Kingdom) பூமி மத்தாரம் (Bhumi Mataram) என்றும் அழைப்பார்கள். இந்தப் பேரரசை ஆட்சி செய்த அரசர்கள் தான், இஜோ கோயிலையும் கட்டினார்கள். இந்தக் கோயிலைக் கட்டுவதற்கு முன்னர் 8-ஆம்; 9-ஆம் நூற்றாண்டுகளில் இவர்கள் ஜாவாவில் நிறைய கோயில்களைக் கட்டி இருக்கிறார்கள்.

இவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் ஜாவானிய கலைக் கலாசாரம்; கட்டிடக் கலைகள் நன்கு மலர்ந்தன. உச்சம் கண்டன. மத்தாரம் பேரரசின் மையப் பகுதியான கேது (Kedu); கெவு சமவெளிகளில் (Kewu Plain) நிறைய கோயில்கள் உள்ளன. கலாசன் (Kalasan); சேவு (Sewu); போரோபுதூர் (Borobudur); பிரம்பனான் (Prambanan) கோயில்கள் போன்றவை குறிப்பிடத் தக்கவை  


இந்தக் கோயில்கள் அனைத்தும் இன்றைய யோக் ஜகார்த்தா நகரத்திற்கு மிக அருகில் உள்ளன. ஜாவாவில் மட்டும் அல்ல. சுமத்திரா, பாலி, தெற்கு தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் மத்தாரம் பேரரசு மேலாதிக்கம் செய்து உள்ளது. அதில் கம்போடியாவில் இருந்த கெமர் பேரரசும் அதன் மேலாதிக்க அரசாக இருந்து உள்ளது.

பிற்காலத்தில் மத்தாரம் பேரரசு மதத்தின் அடிப்படையில் இரண்டு வம்சாவளி அரசுகளாகப் பிரிக்கப் பட்டன. ஒன்று பௌத்த மத அரசு. மற்றொன்று சிவ சமய (Shivaist) அரசு. ஒரு கட்டத்தில் அங்கே உள்நாட்டுப் போர்.

அதனால் மத்தாரம் பேரரசு இரண்டு சக்தி வாய்ந்த அரசுகளாகப் பிரிக்கப் பட்டது. ஜாவாவில் ராக்காய் பிகாடன் (Rakai Pikatan) தலைமையில் மேடாங் அரசு (Medang kingdom). இது சிவ சமயத்தைப் பின்பற்றியது.

சுமத்திராவில் பாலபுத்ரதேவா (Balaputradewa) தலைமையில் ஸ்ரீ விஜய பேரரசு (Srivijaya). இது புத்த மதத்தைப் பின்பற்றியது. இவர்களுக்கு இடையிலான பகைமை கி.பி.1006-ஆம் ஆண்டு வரையிலும் ஒரு முடிவிற்கு வரவில்லை.

1006-ஆம் ஆண்டில் மெராப்பி மலை பயங்கரமாக வெடித்தது. அதன் தாக்கத்தில் மத்தாரம் அரசர்களும் கொஞ்ச நாட்களுக்கு அடங்கிப் போனார்கள். இரண்டு ஆண்டுகள் தான் அமைதி. அப்புறம் மறுபடியும் பிணக்குகள்.

அந்தக் காலக் கட்டத்தில் ஊராவரி (Wurawari) எனும் ஒரு சின்ன அரசு ஜாவாவில் இருந்தது. மேடாங் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அடிமை அரசு. இந்த ஊராவரி அரசை, மேடாங் அரசுக்கு எதிராக ஸ்ரீ விஜய அரசு தூண்டி விட்டது.

அதாவது மேடாங் அரசை எதிர்த்துக் கலகம் செய்யுமாறு தூண்டி விட்டது. அப்போது மேடாங் அரசின் தலைநகரம் வத்துகலூ (Watugaluh). கிழக்கு ஜாவில் இருந்தது. கலகம் தொடங்கியது. பற்பல சேதங்கள். அதில் வத்துகலூ நகரம் சூரையாடப் பட்டது.


அதன் பின்னர் ஸ்ரீ விஜய பேரரசிற்கு எல்லாமே ஏறுமுகம். இந்தோனேசியாவில் எதிர்ப்பு இல்லாத மாபெரும் சக்தியாகவும்; எதிர்க்க முடியாத மேல் ஆதிக்கமாகவும் உச்சத்தில் இமயம் பார்த்தது.

வத்துகலூ கலத்திற்குப் பின்னர் மேடாங் அரசின் சிவ சமய வம்சாவழியினர் தப்பிப் பிழைத்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் 1019-ஆம் ஆண்டில் மேடாங் சிவ சமய வம்சாவளியினர் கிழக்கு ஜாவாவை மீட்டு எடுத்தனர்.

அதன் பின்னர் ககுரிபான் (Kahuripan kingdom) எனும் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கினார்கள். அந்தப் புதிய அரசாங்கம் உருவாக்கப் படுவதற்கு பாலி தீவை ஆட்சி புரிந்த உதயனா அரசரின் மகன் ஆர்லங்கா (Airlangga) பெரிதும் உதவி செய்தார்.

ஆர்லங்காவின் முழுப் பெயரைக் கேட்டால் வியப்பாக இருக்கும். ஸ்ரீ லோகேஸ்வர தர்ம வங்ச ஆர்லங்கா ஆனந்த விக்கிர முத்துங்க தேவா (Sri Lokeswara Dharma Wangsa Airlangga Ananta Wikra Mottungga Dewa). அப்போதைய அரசர்களின் பெயர்களில் அவர்களின் பரம்பரை பெயர்களும் சேர்ந்து வரும். சரி.

இஜோ கோயில் மிகப் பழைமையான கோயில். ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கோயிலின் வளாகம் யோக் ஜகார்த்தா, சிலேமான் (Sleman) மாநிலம், பிரம்பனான் (Prambanan) மாவட்டம், சம்பிரெஜோ (Sambirejo) கிராமம், குரோயோகன் (Groyokan) குக்கிராமத்தில் அமைந்து உள்ளது.

இஜோ கோயிலுக்கு அருகில் ஒரு மலை. அதன் பெயர் குமுக் இஜோ (Gumuk Ijo) மலை. அந்த மலையின் பெயரில் இருந்து தான் கோயிலுக்கும் பெயர் வந்தது.

கோயிலின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 410 மீட்டர். கோயிலைச் சுற்றிலும் நெல் வயல்கள். அருகாமையில் அடிசுசிப்தோ அனைத்துலக விமான நிலையம் (Adisucipto International Airport) உள்ளது. இந்தக் கோயில் இருப்பதால் தான் விமான நிலையத்தை விரிவுபடுத்த முடியாமல் தயங்கி நிற்கிறார்கள். ஆக கோயிலைப் பாதுகாக்கும் பொருட்டு விமான நிலையத்தையே வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள்.


கோயில் வளாகம் பல படிவரிசைகளைக் கொண்டு உள்ளது. மேற்கு பகுதியில் சில கோயில் இடிபாடுகள் கண்டுபிடிக்கப் பட்டன. அவற்றில் பெரும்பாலானவை இன்றும் தோண்டப்பட்டு வருகின்றன.

இந்தப் படிவரிசைகளில் 10-க்கும் மேற்பட்ட சிறிய கோயில்களின் இடிபாடுகள் இன்னும் புதைபட்ட நிலையில் உள்ளன. இவற்றுக்குப் பெரும்வரம் (Perwara) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

பெரும்வரம் கோயில்களில் ஒரு சில கோயில்கள் நல்ல நிலையில் உள்ளன. அவை தான் இப்போதைக்கு இஜோ கோயில்களின் தலையாய கோயில்களாகும்.

இந்து மதத்தின் மிக உயர்ந்த மூன்று தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் திரிமூர்த்திகளைப் பெருமை படுத்துவதற்காக மூன்று பெரும்வரம் கோயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த மூன்று கோயில்களிலும் உள் அறைகள் உள்ளன. சாய்சதுர வடிவத்தில் துளையிடப்பட்ட ஜன்னல்கள் உள்ளன. இரத்தினமாலை வடிவத்தில் கூரைகள் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. பிரதான கோயில் சதுர வடிவத்தில் அமைந்து உள்ளது.

கோயிலின் மேலே ஒன்பதாவது அடுக்கில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. மர்மமான எழுத்துகளின் வடிவங்கள். "ஓம் சர்வ வினாசா... சர்வ வினாசா" எனும் எழுத்துகள். மந்திர எழுத்துக்கள் என்றும் சொல்கிறார்கள். 16 முறை எழுதப்பட்டு உள்ளன.

இஜோ கோயிலில் நுழைவுக் கட்டணம் இல்லை. கார், மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கிறார்கள். சூரியன் மறைவதைப் பார்ப்பதற்கு அருமையான இடம். கண்கொள்ளா காட்சி. மாலை ஐந்து மணிக்குள் அங்கே இருக்க வேண்டும்.


இஜோ கோயில் மற்ற மற்ற சுற்றுலா இடங்களுக்கும் அருகில் உள்ளது. இதற்கு அருகில் பிரம்பனான் கோயில்; பிலாசான் கோயில் (PLAOSAN TEMPLE); அபாங் கோயில் (ABANG TEMPLE); பிந்தாங் மலை, பழைமையான லங்கேரான் எரிமலை (NGLANGGERAN ANCIENT VOLCANO) போன்றவை உள்ளன.

இஜோ கோயில் கடல் மட்டத்தில் இருந்து 410 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த உயரத்தின் காரணமாக கீழே உள்ள விவசாய நிலங்களின் அழகுக் காட்சிகள்; இயற்கைக் காட்சிகளை நன்றாக ரசிக்கலாம்.

ஒரு கோயிலைக் காப்பாற்றுவதற்காக ஒரு விமான நிலையத்தையே வேறு ஓர் இடத்திற்கு மாற்றுகிறார்கள். ஆனால் வேறு சில இடங்களில் அப்படி இல்லீங்க. ரூம் போட்டு விடிய விடிய டிஸ்கசன் செய்து இருக்கிற கோயில்களை எல்லாம் எப்படி உடைக்கலாம் என்று பிளேன் போடுகிறார்கள். வேறு என்னங்க சொல்வது.

இந்தோனேசிய வரலாறு இதிகாசங்களை மறைக்காத வரலாறு. இந்தியக் கலாசாரங்களைப் போற்றுகின்ற வரலாறு. கைகூப்புகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.04.2021

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Ijo_Temple

2. https://web.archive.org/web/20130215110217/http://candi.pnri.go.id/jawa_tengah_yogyakarta/index.htm

3. https://www.yogyes.com/en/yogyakarta-tourism-object/candi/ijo/

4. http://mitos-cerita-legenda.blogspot.com/2017/01/kerajaan-wura-wuri.html




 

17 ஏப்ரல் 2021

இந்தோனேசியா இலிங்கசாரம் சிவாலயம்

தமிழ் மலர் - 17.04.2021

இந்தோனேசியா பாலித் தீவிற்கு அருகில் லொம்போக் தீவு (Lombok). சுந்தா தீவுக் கூட்டத்தில் ஒரு சிறிய தீவு. அந்தத் தீவின் தலைநகரம் மத்தாரம். அந்த நகரத்தில் இருந்து ஆறு கி.மீ. தொலைவில் ஒரு கிராமம். பெயர் இலிங்கசாரபுரம். இந்தக் கிராமத்தில் ஓர் அழகிய ஆலயம். பெயர் இலிங்கசாரம் ஆலயம்.

சிவனைப் பின்னணியாகக் கொண்ட ஆலயம். ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட ஆலயம். கடந்த சில பத்தாண்டுகளாக அந்த ஆலயத்தைப் புனரமைப்புச் செய்து வருகிறார்கள்.

லொம்போக் தீவில் சாசாக் எனும் மொழியைப் பயன்படுத்துகிறார்கள் (Sasak language). சாசாக் மொழி என்பது பாலினிய மொழியும் (Balinese); சும்பாவா மொழியும் (Sumbawa) கலந்த மொழியாகும். அந்த சாசாக் மொழியில் இலிங்கசாரம் (Pura Lingsar) என்றால் சிவாலயம். அதாவது சிவனின் ஆலயம் என்று பொருள்.

சைவ சமயத்தின் முழு முதல் கடவுளரார் சிவன். அவரைக் குறிக்கும் ஒரு வடிவம் தான் இலிங்கம். அருவம், உருவம், அருவுருவம் எனும் மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் என்பது அருவுருவ நிலையாகும்.

இலிங்க வழிபாடு மிகவும் பழமையானது. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இந்த வழிபாடு நிலவி இருக்கலாம். சான்றுகள் கிடைத்து உள்ளன.


லொம்போக் தீவில் இலட்சக் கணக்கான இந்தோனேசிய இந்து மக்கள் வாழ்கிறார்கள். பற்பல நூற்றாண்டுகளாக இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறார்கள்.

அந்தக் கிராமத்தில் மட்டும் அல்ல; அந்தக் கிராமம் அமைந்து இருக்கும் லொம்போக் தீவிலும் இந்தோனேசிய இந்து மக்கள் வாழ்கிறார்கள். லொம்போக் தீவு 4,725 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 35 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

லொம்போக் தீவும் பாலி தீவும் அருகாமைத் தீவுகள். ஏறக்குறைய 30 கி.மீ. இடைவெளி. சின்னச் சின்னப் படகுகள் மூலமாக ஐலசா பாடிக் கொண்டே லொம்போக் தீவை அடைந்து விடலாம்.

இலிங்கசாரம் கிராமத்து ஆலயங்களில் இலிங்கசார சிவாலயம் மிக முக்கியமான ஆலயமாகும். இந்த ஆலயத்தைப் பற்றி பலருக்கும் தெரியாது. அண்மையில் தான் காட்டுக்குள் மறைந்து கிடந்த இந்த ஆலயத்தைக் கண்டுபிடித்தார்கள்.

இந்த ஆலயத்திற்கு அருகில் வேறு நிறைய ஆலயங்கள் மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். மீட்டு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தோனேசிய அரசாங்கம் கணிசமான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்து மீட்புப் பணிகளைச் செய்து வருகிறது.

இந்தப் பழங்கால ஆலயங்களை மீட்டு எடுப்பதால் இந்தோனேசியாவின் பழைய தொன்மை வரலாறு மட்டும் மீட்டு எடுக்கப்படவில்லை. அதன் மூலமாக வருமானமும் அரசாங்கத்திற்கு கிடைக்கிறது. அதோடு பல நூறு பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்கள் அமைகின்றன.

கலைக் கண்ணோடு பார்க்காமல் கலைக் காரியங்களைச் சாதிக்கும் கண்ணோடும் பார்க்கிறார்கள். அதனால் தான் இந்தோனேசியாவிற்கு மில்லியன் கணக்கில் சுற்றுலாப் பயணிகள் படை எடுத்துப் போகிறார்கள். கோடிக் கணக்கில் பணம் குவிகிறது.

மற்ற ஒரு சில நாடுகளைப் போல இல்லை. இருக்கிற இந்து சமயம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களை எல்லாம்; நேரம் கிடைக்கும் போது எல்லாம் நொறுக்குத் தீனி போல நொறுக்கிக் கொண்டு போகிறார்கள். மதச் சகிப்புத் தெரியாத மனிதர்கள்.

அப்புறம் என்னங்க. உழைத்துப் போட ஆள் இருக்கிரது. உட்கார்ந்து சாப்பிட குடிசை இருக்கிறது. அது போதுங்க. அந்த நினைப்பில் வாழும் மனிதர்களைத் தட்டி எழுப்புவது சற்றுச் சிரமமே.

இலிங்கசாரம் சிவாலயம் அந்தத் தீவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இலிங்கசாரம் ஆலயம் 1714-ஆம் ஆண்டில் அனாக் ஆகோங் நுகுரா (Anak Agung Ngurah) எனும் மன்னரால் கட்டப்பட்டது.

இவர் பாலி தீவை ஆட்சி செய்த மன்னர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவர். பாலினியக் கட்டிடக் கலையில் இந்த ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த ஆலயத்தைச் சுற்றிலும் பச்சைப் பசுமையான நெல் வயல்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சைப் பசேல் காடுகள். முன்பு காலத்தில் எரிமலைச் சாம்பல்கள் பரவியதால் அந்த மண் பச்சையாகப் பசுமையாக வடிவம் கண்டது. எது போட்டாலும் விளையும் எனும் அமைப்பு கொண்டது.


இந்தோனேசியா எனும் நாட்டையும் இந்தோனேசியாவில் உள்ள இந்து ஆலயங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அந்த நாட்டில் ஆலயங்கள் ஆழமாய்ப் பதிந்து விட்டன. இந்தோனேசிய மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

இந்தோனேசியாவின் கடந்த கால கலாசாரத்தின் விளைபொருளாகத் தான் ஆலயங்கள் அங்கே காட்சி அளிக்கின்றன. கடந்த கால அரசுகளின் கடந்த காலத்தையும் பிரதிபலிக்கின்றன. அங்கு உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்கள் அங்கு வாழ்ந்த மன்னர்களால் கட்டப் பட்டவையாகும்.

பாலி தீவில் வாழ்ந்த அரசர்கள் லோம்போக் தீவின் மீது படை எடுத்து அங்கு வாழ்ந்த மக்கள் மீது இந்து சமய நம்பிக்கைகளைப் பரப்பினார்கள். அதனால் பாலி தீவு இந்துக்களுக்கும் லொம்போக் மக்களுக்கும் இடையிலான சமய ஒற்றுமை பரவியது.

இலிங்கசார சிவாலயத்திற்கு யார் வேண்டும் என்றாலும் போகலாம் வரலாம். காலை முதல் மாலை வரை ஆலயம் திறந்து வைக்கப் படுகிறது. ஒரு சிறிய நன்கொடை எதிர்பார்க்கப் படுகிறது. இலிங்கசார சிவாலய வளாகத்தில் நான்கு சிவாலயங்கள் உள்ளன.

1. குனோங் ரிஞ்சனி (லோம்போக்கில் உள்ள தெய்வங்களின் இருக்கை).

2. குனோங் அகோங் (பாலி தீவில் உள்ள தெய்வங்களின் இருக்கை}.

மேலும் இரு தீவுகளுக்கும் இடையிலான ஒற்றுமையைக் குறிக்கும் இரட்டைச் சன்னதிகள்.

இலிங்கசார சிவாலய வளாகத்தில் விஷ்ணு தெய்வத்திற்கு உருவாக்கப்பட்ட தாமரைக் குளம் உள்ளது. அந்தக் குளத்தில் நிறையவே விலாங்கு மீன்கள். அவற்றைப் புனிதப் படைப்புகளாகக் கருதுகிறார்கள். அவற்றுக்கு அவித்த முட்டைகள் உணவாக வழங்கப் படுகின்றன. அந்த விலாங்கு மீன்களுக்கு உணவளிப்பது அதிர்ஷ்டமாகவும் கருதப் படுகிறது.

Lingsar origin from sasak language mean clear revelation from God. The festival at Pura Lingsar is held every 6th full moon or purnamaning sasih kenem on Balinese saka calendar dan 7th full moon or sasih kepitu on Sasak calendar.

2018-ஆம் ஆண்டு லொம்போக் தீவில் ஒரு சுனாமி. மிக அண்மையில் நடந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் இந்த இலிங்கசார சிவாலயத்தில் தான் கொஞ்ச காலம் தங்கி இருந்தார்கள். இனம் மதம் பார்க்காமல் இந்த ஆலயத்தில் அடைக்கலம் பெற்றார்கள்.

இலிங்கசார சிவாலயத்திற்கு பல நூறு மைல்களுக்கு அப்பால் ஜாவா, ஜோக் ஜகார்த்தா, பிரம்பனான் ஆலயம் உள்ளது. கேள்விப்பட்டு இருப்பீர்கள். பிரம்பனான் ஆலயம் தான் உலகிலேயே மிகப் பெரிய சிவன் ஆலயம் ஆகும். 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இதற்கு 600 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பாலித் தீவில் புரத்தான் (Pura Bratan) சிவன் ஆலயம் 1633-ஆம் ஆண்டு கட்டப் பட்டது. சிவனுக்கும் பார்வதிக்கும் நினைவுச் சின்னமாகக் கட்டப்பட்டது.

பாலித் தீவின் தலை நகரம் டென்பசார். அங்கு இருந்து சிங்கராஜா செல்லும் வழியில் பெடுகுல் (Bedugul) எனும் இடத்தில் ஒரு மலை ஏரி உள்ளது. அதன் பெயர் புரத்தான் ஏரி (Lake Bratan). பாலித் தீவின் வடக்கே உள்ளது. அங்குதான் புரத்தான் சிவன் ஆலயம் உள்ளது. அதற்கும் பின்னர்தான் லொம்போக் இலிங்கசார சிவாலயம் கட்டப் பட்டது.

இந்தோனேசியாவில் இந்து மதம் பன்னெடும் காலமாகப் பயணித்து உள்ளது. மற்ற மற்ற மதங்கள் வருவதற்கு முன்னரே அங்கே இந்து மதம் முக்கியமான மதமாக விளங்கி உள்ளது.

இந்தோனேசியாவிற்கு வணிகம் செய்ய வந்தவர்களும் சரி; பேரரசுகளை உருவாக்கியவர்களும் சரி; மகாபாரதம் இராமாயணம் போன்ற புராண இதிகாசங்களை வேரூன்றச் செய்து விட்டார்கள்.

வாயாங் கூலிட் எனும் நிழல் பொம்மலாட்டம்; மேடை நாடகங்கள்; கிராமப்புறக் கூத்துகள் வழியாக மகாபாரதம்; இராமாயணக் காவியங்கள் இந்தோனேசியாவில் பிரபலம் அடைந்து விட்டன.

இந்த லொம்போக் தீவில் பலரின் பெயர்கள் இந்திரா, கிருஷ்ணா, குணவான், சத்தியவான், தர்மவான், குபேரன், சித்தார்த்தா (Sudarto), சூரியா, தேவி, பிரிதிவி, ஸ்ரீ, சிந்தா, ரத்னா, பரமிதா, குமலா, இந்திரா, ராதா, பிரியா, மேகவதி என்று உள்ளன.

அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் “நீங்கள் ஏன் இப்படி இந்தியப் பெயர்களை வைத்துக் கொள்கிறீர்கள்?” என்று கேட்பது உண்டு. அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கள் மதத்தை மாற்றிக் கொண்டோம். எங்கள் முன்னோர்களை அல்ல. அவர்களை எங்களால் மாற்ற இயலாது” என்று பதில் சொல்வார்களாம். இது எப்படி இருக்கு என்று என்னைக் கேட்க வேண்டாம். அவர்களின் பதிலேயே பதில் உள்ளது.

உலக வரலாற்றில் பற்பல நாகரிகங்கள் வந்தன. பார்த்தன. சென்றன. அவற்றில் உச்சம் பார்த்த சில நாகரிகங்கள் இடம் தெரியாமல் மறைந்தும் போயின. அவற்றில் சில அட்ரஸ் இல்லாமலேயே சிதைந்தும் போயின. இவை அனைத்தும் நவீன காலத்து மனிதர்களால் காலா காலத்துக்கும் மறக்கப்பட்ட நாகரிகங்கள்.  

அவற்றில் தமிழர்கள் நாகரிகம் மட்டும் ஏனோ தெரியவில்லை. திசை திரும்பிய இடம் எல்லாம் தழைத்து ஓங்கியது. பல ஆயிரம் ஆண்டுகளாகச் செழித்து வளர்ந்தது. அந்த நாகரிகத்தின் பண்பாட்டுச் சுவடுகளும் கலைச் சுவடிகளும் தென்கிழக்கு ஆசியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரந்து விரிந்து படர்ந்து கிடந்தன.

யார் கண்பட்டதோ தெரியவில்லை. இப்போது பல இடங்களில் அந்தப் பண்பாட்டுச் சுவடுகளும்; அந்தப் பண்பாட்டுச் சுவடிகளும்; நேற்று ஐலசா பாடி வந்த சாதி சனங்களால் ஓரங்கட்டப்பட்டு; ஒதுக்கப்பட்டு பாவப்பட்ட பிள்ளையாய் பரிதவித்து நிற்கின்றன. அதனால் என் சின்ன நெஞ்சிலும் சின்னப் பெரிய வேதனைகள். சன்னமாய் வலிக்கின்றன. சமயங்களில் அதிகமாகவும் வலிக்கின்றன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.04.2021

சான்றுகள்:

1. Pura Lingsar - https://www.lonelyplanet.com/indonesia/nusa-tenggara/mataram/attractions/pura-lingsar/a/poi-sig/452517/356598

2. Sasak language - https://en.wikipedia.org/wiki/Sasak_language

3. Pura Lingsar was built by Anak Agung Ngurah in 1714 - https://en.wikipedia.org/wiki/Pura_Lingsar

4. Bagian Proyek Pembinaan Permuseuman Nusa Tenggara Barat (1997). Peninggalan sejarah dan kepurbakalaan Nusa Tenggara Barat

5. Karda, Made (2015). "Fenomena Kemaliq Lingsar Analisis Wetu Telu (Kajian) Perspektif Budaya" (PDF). Media Bina Ilmiah (in Indonesian). 9 (23).



 

11 ஏப்ரல் 2021

இனிலா ரேடியோ மலேசியா

தமிழ் மலர் - 11.04.2021

மலாயா வானொலியின் முதல் கலப்பட நிகழ்ச்சி. கோலாலம்பூரில் 1957-ஆம் ஆண்டு இறுதிவாக்கில் நடைபெற்றது. மலாயா சுதந்திரம் பெற்று களை கட்டிய நேரம். அப்போது துங்கு அவர்கள் பிரதமராக இருந்தார். இவருடைய அரிய பெரிய சேவைகளைப் போற்ற வேண்டும். மரியாதை செய்ய வேண்டும் எனும் நல்ல நோக்கத்தில் ஒரு கலப்பட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள்.

மலேசிய வானொலியின் இந்தியப் பகுதி அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. ’இந்தியப் பகுதி’ என்று தான் முன்பு அழைத்தார்கள். தமிழ் மொழி பிரதான மொழியாக இருந்தாலும் தெலுங்கு மலையாளம் இந்தி மொழி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்தியப் பகுதி ஒரு கூட்டு ஒலிபரப்பு அமைப்பு.

1957-ஆம் ஆண்டு கலப்பட நிகழ்ச்சி, தேசிய அளவிலான மாபெரும் நிகழ்ச்சி; பிருமாண்டமான நிகழ்ச்சி. லேக் கார்டன் எனும் கோலாலம்பூர் மாநகர் பூஞ்சோலை நீர்க்குள வளாகத்தில் நடந்தது.

இப்போது தாசேக் பிரதானா தித்திவாங்சா என்று சொல்கிறார்கள். அப்போது லேக் கார்டன் என்று அழைத்தார்கள். 1960-களில் லேக் கார்டன் மிகவும் புகழ்பெற்ற இடமாகும். மாலை நேரங்களில் நூற்றுக் கணக்கில் மக்கள் வருவார்கள். போவார்கள்.


ஒரு சின்னத் திருடு; ஒரு சின்ன கொள்ளைச் சம்பவம் என்று எதுவுமே இல்லை. நாங்கள் பார்த்ததும் இல்லை. கேட்டதும் இல்லை. போலீஸ்காரர்களுக்கு வேலையே இல்லை என்றுகூட சொல்வார்கள்.

இப்போது பாருங்கள். போலீஸ் நிலையம் என்று சொல்லி அங்கே ஒரு பெரிய காவல் நிலையத்தையே கட்டிப் போட்டு வைத்து இருக்கிறார்கள். நிலைமை ரொம்பவும் மாறிவிட்டது. அதைப் பற்றி எழுதினால் அதுவும் ஒரு பெரிய கதையாகி விடும்.

லேக் கார்டன் என்கிற அதே பழைய இடம்தான் மலேசியத் தமிழர்களின் வரலாற்றிலும் ஒரு வரலாறு பதித்தது. மற்ற மற்ற மொழிப் பகுதிகளும் அந்தக் கலப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டன. திகட்டத் திகட்ட உதவிகள் செய்தன என்று மலேசியாவில் மூத்தப் பத்திரிகையாளர் ஒருவர் சொல்லி இருக்கிறார்.

அந்தக் காலக் கட்டத்தில் உண்மையிலேயே அது ஒரு பிருமாண்டமான தமிழர் நிகழ்ச்சி. 15,000 - 20,000 பேர் கண்டு களித்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியர்கள் மட்டும் அல்ல. மலேசியாவின் மூவின மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

அந்த நிகழ்ச்சி மலாயா வானொலியின் தமிழ்ப் பகுதிக்கு ஒரு பெரிய அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது. தமிழ்ப் பகுதிக்கு மட்டும் அல்ல. ஒட்டு மொத்த மலாயா வானொலிக்கே அது ஒரு பெரிய அங்கீகாரமாகவும் அமைந்தது.

சரி. மின்மினியாய் மின்னல் எப்.எம். என்று தலைப்பை வைத்துவிட்டு, எங்கே எங்கேயோ இழுத்துக் கொண்டு போவதாக நினைக்க வேண்டாம். மன்னிக்கவும்.  

வரலாறு என்பது ஒரு பெரிய ஆறு. அதாவது வரல் ஆறு என்பதுதான் வரலாறாக மாறியது. சுருக்கமாகச் சொன்னால், வரலாறு என்றால் வந்த வழி. ஆக அந்த வழியில்தான் நானும் வந்து கொண்டு இருக்கிறேன். சரிங்களா. அதை இப்படியும் சொல்லலாம்.

ஒரு பிள்ளையைப் பெற்றாகி விட்டது. அதற்குப் பெயரும் வைத்தாகி விட்டது. இருந்தாலும், அந்தக் குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும் போது, எப்படி எப்படி எல்லாம் முட்டி மோதி இருக்கும். எப்படி எப்படி எல்லாம் முறுக்கு பண்ணி இருக்கும். சுமந்தவளைச் சும்மா தூங்க விட்டு இருக்குமா.

அப்பனை விட்டுத் தள்ளுங்கள். அடுத்து வீட்டுக்கு கேட்கிற மாதிரி குறட்டை விட்டுத் தூங்கி இருப்பார். அந்த மாதிரியான கஷ்டங்களை எல்லாம், பெற்றவளே சொல்லும் போது எவ்வளவு பெரிய விசயங்கள் வெளியே வருகின்றன. எவ்வளவு பெரிய பிரமிப்புகள். ஆக அந்த மாதிரிதான் இங்கேயும். புரியுதுங்களா.


மலாயா வானொலி பிறந்து வளர்ந்த கதை ஒரு பெரிய வரலாற்றுக் கதை. அதை நான்கு வரிகளில் சொல்லி முடிக்க முடியாது. அந்த வரலாற்றில் ஒரு பச்சைச் சிசு தான் இந்த நம்முடைய மின்னல் எப்.எம். பண்பலை.

தொலைக்காட்சிச் செய்திகள். தெரியும் தானே. ஒரு முக்கியமான அன்றாட நிகழ்ச்சி. பார்ப்பவர்கள், கேட்பவர்கள் பெரும்பாலும் செய்தி வாசிப்பாளரின் முகத்தைத்தான் முக்கியமாகப் பார்ப்பார்கள். குரலின் தொனியைக் கேட்பார்கள். உச்சரிப்பைக் கவனிப்பார்கள்.

அப்புறம் அவர் அணிந்து இருக்கும் சேலை அல்லது மேலங்கியைப் பார்ப்பார்கள். அவருக்கு ‘மேச்’ பண்ணுகிறதா என்கிற ஒரு குட்டி ஆராய்ச்சி பண்ணுவார்கள். இந்த மாதிரி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்காதவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிலரைத் தான் சொல்கிறேன். எல்லாரையும் சொல்லவில்லை.


ஆனால் அந்தச் செய்தி நிகழ்ச்சிக்குப் பின்னால், எத்தனை பேருடைய உழைப்பு, எத்தனை பேருடைய சுறுசுறுப்புகள், எத்தனை பேருடைய அர்ப்பணிப்புகள் தேங்கிப் புதைந்து கிடக்கின்றன. இது எத்தனைப் பேருக்குத் தெரியும்.

ஒரு செய்தி நிகழ்ச்சி தயாரிப்புக்குப் பின்னால் குறைந்த பட்சம் ஒரு இருபது பேரின் கடுமையான உழைப்புகள் மறைந்து கிடக்கும். இந்த விசயம் பலருக்குத் தெரியாது.

அதே போலத் தான் மின்னல் எப்.எம். வானொலியிலும் நடக்கிறது. செய்தி ஆசிரியர், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு செய்திகளைத் தொகுக்க வேண்டும். ஒரு சின்ன ‘மிஸ்டேக்’. அவ்வளவுதான். எரிமலை வெடிக்கும். சுனாமி ஆர்ப்பரிக்கும். முள்வேலியில் நின்று கொண்டு வேலை செய்ய வேண்டிய ஓர் இக்கட்டான நிலைமை.

பெரும்பாலும், ஒரு செய்தி ஆசிரியர் தன்னுடைய துணை ஆசிரியர்களையும் மொழிப் பெயர்ப்பாளர்களையும் தான் முழுக்க முழுக்க நம்பி இருக்க வேண்டும். தெரியாமல் தவறுகள் நடந்து விடலாம். அவற்றுக்கு எல்லாம் ஆசிரியர்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஆங்கிலத்தில் ‘டீட்’ (Deed) என்று ஒரு சொல் இருக்கிறது. தமிழில் ஆவணம் என்று பொருள். ஒரே ஓர் எழுத்தைத் தவறாகப் போட்டால் போதும். அவ்வளவுதான். ’டீட்’ என்பது ’டெட்’ (Dead) என்று மாறிப் போகும். ’டெட்’ என்றால் இறப்பு. அப்புறம் செய்தி ஆசிரியரின் கதையும் ஒரு ’டெட்’ செய்தியாகிவிடும்.

அதே மாதிரி ஒரு கதை இருக்கிறது. 1970-களில் தமிழ்ப்பகுதியில் ஒரு தவறு நடந்து விட்டது. யார் எவர் என்ன என்று கேட்க வேண்டாம். மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகில் தடம் பதித்த அருமையான பத்திரிகையாளர். செய்திப் பிரிவில், துணை ஆசிரியர்கள் எதிர்பாராமல் செய்த ஒரு சின்ன தவறு.

அதற்காக அந்தச் செய்தி ஆசிரியர் பதவி நீக்கம் செய்யப் பட்டார். இருந்தாலும், திறமைசாலிகளுக்கு எப்போதுமே மதிப்பும் மரியாதையும் உண்டு. பின்னர் காலத்தில் அவர் ஓர் ஆங்கிலப் பத்திரிகைக்குத் தலைமை ஆசிரியர் ஆனார். பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றார் என்பது காலம் சொல்லும் உண்மை.

ஆக இனிமேல் வானொலியில் செய்திகளைக் கேட்கும் போது, யார் ’செய்தி ஆசிரியர்’ என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். செய்தி வாசிப்பவர் அவர் பாட்டிற்குச் செய்தியை வாசிக்கட்டும்.

ஆனால், செய்தி வாசிப்பவருக்குப் பின்னால் எத்தனை பேருடைய உழைப்பு பின்னிப் பிணைந்து இருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

அதுவே அந்த ஆசிரியருக்கு நீங்கள் செய்யும் மரியாதையாகும். முன்பு எல்லாம் செய்தி ஆசிரியரின் பெயரைச் சொல்ல மாட்டார்கள். இப்போது சொல்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பத்து மாதம் கஷ்டப் பட்டவள் அம்மா. ஆனால் பிள்ளையின் பெயருக்குப் பின்னால் அப்பாவின் பெயர் வரும். என்ன செய்வது. அது மனிதயினம் எப்போதோ எழுதிக் கொடுத்த பழைய காசோலை. இருந்தாலும் கையெழுத்து இன்னும் காலாவதி ஆகவில்லை. ஆக அந்தப் பிள்ளையின் அம்மா யார் என்பதைத் தெரிந்து கொள்ள் முயற்சி செய்வதில் தப்பு இல்லையே.

மின்னல் எப்.எம். மலேசிய மக்களுக்குத் தேவையான தகவல்களையும், செய்திகளையும் வற்றாமல் வழங்கி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் நிகழ்ச்சிகளை வழங்குவதில் முன்னணி வகிக்கிறது.

1957 நேயர் விருப்பம்

அரசாங்க நிறுவனம் என்பதால் அரசு சார்ந்த கொள்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப் படுகிறது. கொடுக்கப்பட்ட பொறுப்புகளை இதுநாள் வரைக்கும் நல்லபடியாகத் தான் செய்து வருகிறது.

மற்றபடி அரசாங்கத்தின் கொள்கைப் பிரசாரங்களுக்குப் பக்க பலமாகவும் நிற்கிறது. அந்தக் கொள்கைகள் மக்களுக்குப் போய்ச் சேர்கிறதா என்பதுதான் முக்கியம். மின்னல் எப்.எம். பண்பலையின் தலையாய நோக்கமும் அதுதான்.

ஒரு பந்தயத்தில் கலந்து கொள்ளும் குதிரை, அதன் கால்களில் சலங்கை கட்டி ஓடுகிறதா என்று பார்ப்பதில் அர்த்தம் இல்லை. கடிவாளத்தை யார் பிடித்து இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். ஏன் என்றால் மின்னல் எப்.எம். ஓர் அரசாங்க நிறுவனம் ஆகும்.


1957 நேயர் விருப்பம்


1950-களில் மலாயா வானொலியின் (Radio Malaya) செய்திகள், சிங்கப்பூரில் இருந்து ஒலிபரப்பு செய்யப் பட்டன. கோலாலம்பூர், பினாங்கு நிலையங்களில் இருந்து வட்டாரச் செய்திகள், பாரம்பரிய இசைகள், வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகின. இதைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

பின்னர் 1951-இல், புடு சாலையில் உள்ள தாங் லிங் மருத்துவமனையில் ஓர் அறையில் இருந்து ஒலிபரப்புகள் தற்காலிகமாக நடைபெற்றன. அதற்கு முன்னர் சிங்கப்பூரில் கத்தே அரங்கத்தில் இருந்து தமிழ்ச் சேவைகள் தொடங்கப் பட்டன.

அதன் பின்னர் புடு சாலையில் இருந்து ஜாலான் யாங் எனும் இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த ஜாலான் யாங் இப்போது ஜாலான் சந்திரசாரி (Jalan Cenderasari) என்று அழைக்கப் படுகிறது.

அடுத்து 1956-ஆம் ஆண்டு கூட்டரசு மாளிகையில் (Federal House) இருந்து சேவைகள் தொடர்ந்தன.

1963-ஆம் ஆண்டு மலேசியா உருவானது. அதுவரை மலாயா வானொலி என்று அழைக்கப்பட்டது, அதன் பின்னர் மலேசிய வானொலி ஆனது. அதாவது ரேடியோ மலாயா என்பது ரேடியோ மலேசியா ஆனது.

சரவாக் சபா மாநிலங்களுக்கான ஒலிபரப்புச் சேவைகளும் கூட்டரசு மாளிகையில் இருந்துதான் தொடங்கப் பட்டன. 1960-ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக, தனியார் வர்த்தக விளம்பரங்கள் மலேசிய வானொலியில் இடம் பெற்றன. அரசாங்கத்திற்கு ஓரளவிற்கு வருமானத்தையும் கொண்டு வந்தன.  

1963 செப்டம்பர் 16-ஆம் தேதி, இனிலா ரேடியோ மலேசியா (INILAH RADIO MALAYSIA) எனும் அறிமுக வாசகத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். மலாயா எனும் சொல்லைக் கேட்டு வந்தவர்களுக்கு, மலேசியா எனும் சொல் புதுமையாகவும் பெருமையாகவும் இருந்தது.

அறிவிப்பாளர்கள் சொல்லும் போதும் ஒரு கம்பீரமான தொனியும் இருக்கும். இன்றும் ஒருவருடைய குரல் எங்களுக்கு நன்றாக நினைவிற்கு வருகிறது.

அந்தக் காலக் கட்டத்தில் ரெ.கார்த்திகேசு, அறிவிப்பு செய்யும் போது ஓர் உயர்ந்த குரலில் மிக அழுத்தமாக இனிலா ரேடியோ மலேசியா என்பார். இன்னும் அந்தக் குரல் மனசுக்குள் ஒலிக்கிறது. ஒரு தெம்பு கிடைத்த மாதிரியும் இருக்கும். அது ஒரு கனாக்காலம்.

முனைவர் ரெ. கார்த்திகேசு, மலேசிய வானொலியில் 1961 முதல் 1976 வரை அறிவிப்பாளராக இருந்தவர். ஒரு பன்முகக் கலைஞர். இவர் ஓர் அறிவிப்பாளர் மட்டும் அல்ல. ஒரு தயாரிப்பாளர். வானொலி நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர்.


பின்னர் இவர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர். ஒலிபரப்புத் துறையின் தலைவர். பேராசிரியர். பல்கலைக்கழகச் செனட் உறுப்பினர் என பல பொறுப்புகள்.

ஓர் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். 1960-களில் ரெ. கார்த்திகேசு செய்தி வாசிக்கும் போது அவரைப் பற்றி ஒரு பெரிய கற்பனையே செய்து வைத்து இருந்தேன். கடைசியில், இவர் ஓர் எளிமையான மனிதர் என்று தெரிய வந்ததும் திகைப்புகள் திசைக்கு ஒன்றாய் சிறகடித்துப் பறந்தன. நல்ல ஒரு நண்பராக வருவார் என்று கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. கற்பனைகள் சில சமயங்களில் நிதர்சனமான உண்மைகளாகி விடுகின்றன. அதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

மலேசிய வானொலியின் வரலாற்றில் 1963 டிசம்பர் 28-ஆம் தேதி, மேலும் ஒரு மைல்கல். அன்றைய தினம்தான் மலேசியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு அறிமுகமானது.

வானொலி என்பது வேறு. தொலைக்காட்சி என்பது வேறு என்று நீங்கள் சொல்ல வரலாம். உண்மைதான். இல்லை என்று சொல்லவில்லை. இருந்தாலும், மலேசிய வானொலி அறிமுகமாகி ஒரு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான் தொலைக்காட்சி சேவை வந்தது.

மலேசிய வானொலிதான் ஒரு முன்னோடி. மலேசிய மனங்களில் நெஞ்சுக்கு நேராக நின்று பேசிய ஒரு வான்சிறகு. வானொலி ஒரு தகப்பன் என்றால் தொலைக்காட்சி என்பது ஒரு மகன்.

ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. வானொலியை மிஞ்சி தொலைக்காட்சி எங்கோ போய்விட்டது. தந்தையை மிஞ்சிய தனயன் கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.04.2021