18 April 2021

ஜாவா காட்டுக்குள் இஜோ திருமூர்த்தி ஆலயம்

இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தெளித்த பச்சைப் பசும் காடுகள். அந்தப் பச்சைக் காட்டுக்குள் அழகாய் உருவான ஓர் அதிசயமான கோயில். சிந்தாமல் சிதறாமல் வரலாற்றுச் சுவடுகளை அள்ளித் தெளிக்கும் அழகான கோயில். ஆயிரம் ஆண்டுகளாக நயனங்கள் பேசும் நளினமான கோயில்.

அதுதான் ஜாவா இஜோ கோயில். இந்தோனேசியாவின் கோயில்களில் மிக மிக அழகான கோயில். ஒரு முறை பார்த்தால் மறுபடியும் பார்க்கச் சொல்லும் பழைமையான கோயில்.


சும்மா சொல்லக் கூடாது. முன்பு காலத்தில் இந்தோனேசியா ஜாவா, சுமத்திரா தீவுகளை ஆட்சி செய்த பல்லவ அரசர்கள் பல ஆயிரம் கோயில்களைக் கட்டி அழகு பார்த்து இருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளாகக் கோயில் கட்டிடக் கலைகளில் மௌன ராகங்களைப் பாடி இருக்கிறார்கள்.

மஜபாகித் அரசு; மத்தாரம் அரசு; சிங்காசாரி அரசு; சைலேந்திரா அரசு; சுந்தா அரசு; ஸ்ரீ விஜய அரசு என்று இப்படி பற்பல அரசுகள் இந்து கோயில்களையும் பௌத்த விகாரங்களையும் கட்டிப் போட்டு, பல்லவர்களின் கலை கலாசாரத்திற்குப் பெருமை சேர்த்து இருக்கிறார்கள்

இந்தோனேசியாவின் மிகப் பெரிய எரிமலை மெராப்பி (Mount Merapi). கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த எரிமலைக்கு அருகில் 50 கி.மீ. வட்டாரத்திற்குள் நிறைய கோயில்களைக் கட்டி இருக்கிறார்கள். ஏன் தெரியுங்களா.


அப்பேர்ப்பட்ட மண் வளம். போட்டது எல்லாம் முளைக்கும்; நட்டது எல்லாம் விளையும் என்கிற இயற்கையின் அருள் கொடை. எரிமலைச் சாம்பல்கள் தான் அதற்கு முக்கியக் காரணம். சரி.

இந்தோனேசியாவில் மிகப் பெரிய இந்து ஆலயம் பிரம்பனான் திருமூர்த்தி ஆலயம். இந்த ஆலயம்கூட மெராப்பி எரிமலையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் தான் உள்ளது. 16-ஆம் நூற்றாண்டில் ஒரு பெரிய பூகம்பம். அப்போது பிரம்பனான் கோயிலின் பல பகுதிகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகள் இன்றும்கூட பரவிக் கிடக்கின்றன. போய்ப் பாருங்கள். தெரிய வரும்.

ஜாவா தீவில் அடிக்கடி எரிமலை வெடிப்புகள். அடிக்கடி பூகம்பங்கள். அங்குள்ள மக்களும் அதற்கு ஏற்றவாறு தங்களின் வாழ்வியலைத் தக்க வைத்துக் கொண்டு விட்டார்கள்.


எரிமலை கொந்தளிப்பாக இருந்தால் என்ன; பூகம்பத்தின் குமுறலாக இருந்தால் என்ன; அவர்களின் அழகிய மண் வாசனையை மட்டும் இன்றும்கூட விட்டுக் கொடுக்க மறுக்கிறார்கள். நாங்கள் மதம் மாறினாலும் எங்களின் மூதாதையரை மாற்றிக் கொள்ள மாட்டோம் என்று சொல்கிறார்கள்.

மெராப்பி எரிமலை கடந்த 400,000 ஆண்டுகளாகக் குமுறிக் கொண்டு இருக்கிறது. ஒரு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாபெரும் வெடிப்பு. பயங்கரமான சேதங்கள்.

சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மெராப்பி எரிமலை சின்னதாய் ஒரு தாலவட்டம் போடுகிறது. அப்படியே சின்னதாய் ஒரு புகைச்சல். நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரிதாய் ஓர் ஆலவட்டம். பெரிதாய்ப் பல வெடிப்புகள்.

சில வெடிப்புகள் பல நூறு ஆயிரம் உயிர்களைப் பலி கொண்டு உள்ளன. 1006, 1786, 1822, 1872, 1930-ஆம் ஆண்டுகளில் பெரிய பெரிய வெடிப்புகள். 1930-ஆம் ஆண்டு வெடிப்பில் 13 கிராமங்கள் அழிந்தன. 1,400 பேர் கொல்லப் பட்டனர்.

1006-ஆம் ஆண்டில் மிகப் பெரிய ஒரு வெடிப்பு. மத்திய ஜாவா முழுவதும் எரிமலைச் சாம்பலால் மூடப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த வெடிப்பு தான் மத்தாரம் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் சொல்லப் படுகிறது.

ஜாவா தீவில் வாழும் ஜாவானிய மக்களில் பெரும்பாலோர் இந்தியப் பாரம்பரியப் பண்பாட்டுப் பின்னணியில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்தவர்கள். அங்கு உள்ள ஆயிரக் கணக்கான கோயில்களே அதற்குச் சான்றுகளாக அமைகின்றன.


இஜோ கோயில் (Ijo Temple) இந்தோனேசியா, ஜாவா, யோக் ஜகர்த்தாவில் (Yogyakarta) இருந்து 18 கி.மீ. தொலைவில் ரத்து போகோ (Ratu Boko Palace) அரண்மனை வளாகத்தில் அமைந்து உள்ளது. 10-ஆம்; 11-ஆம் நூற்றாண்டுகளில் கட்டம் கட்டமாய்க் கட்டப்பட்ட கோயில்.

மத்தாரம் பேரரசை (Mataram Kingdom) பூமி மத்தாரம் (Bhumi Mataram) என்றும் அழைப்பார்கள். இந்தப் பேரரசை ஆட்சி செய்த அரசர்கள் தான், இஜோ கோயிலையும் கட்டினார்கள். இந்தக் கோயிலைக் கட்டுவதற்கு முன்னர் 8-ஆம்; 9-ஆம் நூற்றாண்டுகளில் இவர்கள் ஜாவாவில் நிறைய கோயில்களைக் கட்டி இருக்கிறார்கள்.

இவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் ஜாவானிய கலைக் கலாசாரம்; கட்டிடக் கலைகள் நன்கு மலர்ந்தன. உச்சம் கண்டன. மத்தாரம் பேரரசின் மையப் பகுதியான கேது (Kedu); கெவு சமவெளிகளில் (Kewu Plain) நிறைய கோயில்கள் உள்ளன. கலாசன் (Kalasan); சேவு (Sewu); போரோபுதூர் (Borobudur); பிரம்பனான் (Prambanan) கோயில்கள் போன்றவை குறிப்பிடத் தக்கவை  


இந்தக் கோயில்கள் அனைத்தும் இன்றைய யோக் ஜகார்த்தா நகரத்திற்கு மிக அருகில் உள்ளன. ஜாவாவில் மட்டும் அல்ல. சுமத்திரா, பாலி, தெற்கு தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் மத்தாரம் பேரரசு மேலாதிக்கம் செய்து உள்ளது. அதில் கம்போடியாவில் இருந்த கெமர் பேரரசும் அதன் மேலாதிக்க அரசாக இருந்து உள்ளது.

பிற்காலத்தில் மத்தாரம் பேரரசு மதத்தின் அடிப்படையில் இரண்டு வம்சாவளி அரசுகளாகப் பிரிக்கப் பட்டன. ஒன்று பௌத்த மத அரசு. மற்றொன்று சிவ சமய (Shivaist) அரசு. ஒரு கட்டத்தில் அங்கே உள்நாட்டுப் போர்.

அதனால் மத்தாரம் பேரரசு இரண்டு சக்தி வாய்ந்த அரசுகளாகப் பிரிக்கப் பட்டது. ஜாவாவில் ராக்காய் பிகாடன் (Rakai Pikatan) தலைமையில் மேடாங் அரசு (Medang kingdom). இது சிவ சமயத்தைப் பின்பற்றியது.

சுமத்திராவில் பாலபுத்ரதேவா (Balaputradewa) தலைமையில் ஸ்ரீ விஜய பேரரசு (Srivijaya). இது புத்த மதத்தைப் பின்பற்றியது. இவர்களுக்கு இடையிலான பகைமை கி.பி.1006-ஆம் ஆண்டு வரையிலும் ஒரு முடிவிற்கு வரவில்லை.

1006-ஆம் ஆண்டில் மெராப்பி மலை பயங்கரமாக வெடித்தது. அதன் தாக்கத்தில் மத்தாரம் அரசர்களும் கொஞ்ச நாட்களுக்கு அடங்கிப் போனார்கள். இரண்டு ஆண்டுகள் தான் அமைதி. அப்புறம் மறுபடியும் பிணக்குகள்.

அந்தக் காலக் கட்டத்தில் ஊராவரி (Wurawari) எனும் ஒரு சின்ன அரசு ஜாவாவில் இருந்தது. மேடாங் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அடிமை அரசு. இந்த ஊராவரி அரசை, மேடாங் அரசுக்கு எதிராக ஸ்ரீ விஜய அரசு தூண்டி விட்டது.

அதாவது மேடாங் அரசை எதிர்த்துக் கலகம் செய்யுமாறு தூண்டி விட்டது. அப்போது மேடாங் அரசின் தலைநகரம் வத்துகலூ (Watugaluh). கிழக்கு ஜாவில் இருந்தது. கலகம் தொடங்கியது. பற்பல சேதங்கள். அதில் வத்துகலூ நகரம் சூரையாடப் பட்டது.


அதன் பின்னர் ஸ்ரீ விஜய பேரரசிற்கு எல்லாமே ஏறுமுகம். இந்தோனேசியாவில் எதிர்ப்பு இல்லாத மாபெரும் சக்தியாகவும்; எதிர்க்க முடியாத மேல் ஆதிக்கமாகவும் உச்சத்தில் இமயம் பார்த்தது.

வத்துகலூ கலத்திற்குப் பின்னர் மேடாங் அரசின் சிவ சமய வம்சாவழியினர் தப்பிப் பிழைத்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் 1019-ஆம் ஆண்டில் மேடாங் சிவ சமய வம்சாவளியினர் கிழக்கு ஜாவாவை மீட்டு எடுத்தனர்.

அதன் பின்னர் ககுரிபான் (Kahuripan kingdom) எனும் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கினார்கள். அந்தப் புதிய அரசாங்கம் உருவாக்கப் படுவதற்கு பாலி தீவை ஆட்சி புரிந்த உதயனா அரசரின் மகன் ஆர்லங்கா (Airlangga) பெரிதும் உதவி செய்தார்.

ஆர்லங்காவின் முழுப் பெயரைக் கேட்டால் வியப்பாக இருக்கும். ஸ்ரீ லோகேஸ்வர தர்ம வங்ச ஆர்லங்கா ஆனந்த விக்கிர முத்துங்க தேவா (Sri Lokeswara Dharma Wangsa Airlangga Ananta Wikra Mottungga Dewa). அப்போதைய அரசர்களின் பெயர்களில் அவர்களின் பரம்பரை பெயர்களும் சேர்ந்து வரும். சரி.

இஜோ கோயில் மிகப் பழைமையான கோயில். ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கோயிலின் வளாகம் யோக் ஜகார்த்தா, சிலேமான் (Sleman) மாநிலம், பிரம்பனான் (Prambanan) மாவட்டம், சம்பிரெஜோ (Sambirejo) கிராமம், குரோயோகன் (Groyokan) குக்கிராமத்தில் அமைந்து உள்ளது.

இஜோ கோயிலுக்கு அருகில் ஒரு மலை. அதன் பெயர் குமுக் இஜோ (Gumuk Ijo) மலை. அந்த மலையின் பெயரில் இருந்து தான் கோயிலுக்கும் பெயர் வந்தது.

கோயிலின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 410 மீட்டர். கோயிலைச் சுற்றிலும் நெல் வயல்கள். அருகாமையில் அடிசுசிப்தோ அனைத்துலக விமான நிலையம் (Adisucipto International Airport) உள்ளது. இந்தக் கோயில் இருப்பதால் தான் விமான நிலையத்தை விரிவுபடுத்த முடியாமல் தயங்கி நிற்கிறார்கள். ஆக கோயிலைப் பாதுகாக்கும் பொருட்டு விமான நிலையத்தையே வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள்.


கோயில் வளாகம் பல படிவரிசைகளைக் கொண்டு உள்ளது. மேற்கு பகுதியில் சில கோயில் இடிபாடுகள் கண்டுபிடிக்கப் பட்டன. அவற்றில் பெரும்பாலானவை இன்றும் தோண்டப்பட்டு வருகின்றன.

இந்தப் படிவரிசைகளில் 10-க்கும் மேற்பட்ட சிறிய கோயில்களின் இடிபாடுகள் இன்னும் புதைபட்ட நிலையில் உள்ளன. இவற்றுக்குப் பெரும்வரம் (Perwara) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

பெரும்வரம் கோயில்களில் ஒரு சில கோயில்கள் நல்ல நிலையில் உள்ளன. அவை தான் இப்போதைக்கு இஜோ கோயில்களின் தலையாய கோயில்களாகும்.

இந்து மதத்தின் மிக உயர்ந்த மூன்று தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் திரிமூர்த்திகளைப் பெருமை படுத்துவதற்காக மூன்று பெரும்வரம் கோயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த மூன்று கோயில்களிலும் உள் அறைகள் உள்ளன. சாய்சதுர வடிவத்தில் துளையிடப்பட்ட ஜன்னல்கள் உள்ளன. இரத்தினமாலை வடிவத்தில் கூரைகள் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. பிரதான கோயில் சதுர வடிவத்தில் அமைந்து உள்ளது.

கோயிலின் மேலே ஒன்பதாவது அடுக்கில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. மர்மமான எழுத்துகளின் வடிவங்கள். "ஓம் சர்வ வினாசா... சர்வ வினாசா" எனும் எழுத்துகள். மந்திர எழுத்துக்கள் என்றும் சொல்கிறார்கள். 16 முறை எழுதப்பட்டு உள்ளன.

இஜோ கோயிலில் நுழைவுக் கட்டணம் இல்லை. கார், மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கிறார்கள். சூரியன் மறைவதைப் பார்ப்பதற்கு அருமையான இடம். கண்கொள்ளா காட்சி. மாலை ஐந்து மணிக்குள் அங்கே இருக்க வேண்டும்.


இஜோ கோயில் மற்ற மற்ற சுற்றுலா இடங்களுக்கும் அருகில் உள்ளது. இதற்கு அருகில் பிரம்பனான் கோயில்; பிலாசான் கோயில் (PLAOSAN TEMPLE); அபாங் கோயில் (ABANG TEMPLE); பிந்தாங் மலை, பழைமையான லங்கேரான் எரிமலை (NGLANGGERAN ANCIENT VOLCANO) போன்றவை உள்ளன.

இஜோ கோயில் கடல் மட்டத்தில் இருந்து 410 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த உயரத்தின் காரணமாக கீழே உள்ள விவசாய நிலங்களின் அழகுக் காட்சிகள்; இயற்கைக் காட்சிகளை நன்றாக ரசிக்கலாம்.

ஒரு கோயிலைக் காப்பாற்றுவதற்காக ஒரு விமான நிலையத்தையே வேறு ஓர் இடத்திற்கு மாற்றுகிறார்கள். ஆனால் வேறு சில இடங்களில் அப்படி இல்லீங்க. ரூம் போட்டு விடிய விடிய டிஸ்கசன் செய்து இருக்கிற கோயில்களை எல்லாம் எப்படி உடைக்கலாம் என்று பிளேன் போடுகிறார்கள். வேறு என்னங்க சொல்வது.

இந்தோனேசிய வரலாறு இதிகாசங்களை மறைக்காத வரலாறு. இந்தியக் கலாசாரங்களைப் போற்றுகின்ற வரலாறு. கைகூப்புகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.04.2021

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Ijo_Temple

2. https://web.archive.org/web/20130215110217/http://candi.pnri.go.id/jawa_tengah_yogyakarta/index.htm

3. https://www.yogyes.com/en/yogyakarta-tourism-object/candi/ijo/

4. http://mitos-cerita-legenda.blogspot.com/2017/01/kerajaan-wura-wuri.html
 

No comments:

Post a Comment