27 செப்டம்பர் 2009

கணினியும் நீங்களும் – 27.09.2009

நீலன் neelan_t@yahoo.com.my
கே: என்னுடைய Desktop மேலே உள்ள அடையாளச் சின்னங்கள் பெரிது பெரிதாக மாறிவிட்டன. என்ன செய்தும் சின்னதாக வரவில்லை. என்ன செய்தால் சின்னதாகும்?

ப: Desktop என்பதைத் தமிழில் முகப்புத் திரை என்று சொல்லலாம். கணினியைத் திறந்ததும் முதன்முதலில் ஒரு திரை வருகிறதே அதுதான் இந்த முகப்புத் திரை. நம் கணினியின் உள்ளே என்னென்ன நிரலிகள், செயலிகள், ஆவணங்கள், படங்கள் இருக்கின்றனவோ அவற்றின் அடையாளமாக சின்னச் சின்ன அடையாளங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆக, இந்தச் சின்னங்கள் பெரிதாக மாறிவிட்டன என்று சொல்கிறீர்கள்.

நீங்கள் ஊரில் இல்லாத போது, யாரோ ஊர் பேர் தெரியாத கணினி வித்துவான்கள் அல்லது கற்றுக் குட்டிகள் உங்கள் கணினியை ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கலாம். ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்கிற ஆராய்ச்சிதான். தயவு செய்து பெரிய மனசு பண்ணி பிரச்னையைப் பெரிசு படுத்த வேண்டாம்.

சரி. எப்படி பிரச்னையைத் தீர்ப்பது. முகப்புத் திரையில் காலியாக உள்ள இடத்தில் சுழலியினால் வலது சொடுக்கு செய்யுங்கள். Properties என்பதைச் சொடுக்கி Appearance என்று வரும் பட்டையையும் முடுக்கி விடுங்கள். அப்புறம் Effects என்பதைத் தேர்வு செய்தால் அடுத்து Advanced Appearance எனும் திரை வரும். அதில் Icon என்பதைத் தட்டுங்கள். Icon என்பது முகப்புத் திரையில் தெரியும் அடையாளச் சின்னம். சரியா.

இந்த இடத்தில் சின்னத்தின் அளவைச் சின்னதாக ஆக்கிக் கொள்ளுங்கள். OK பொத்தானைத் தட்டிவிட்டு வெளியே வாருங்கள். அதற்கு அப்புறம் Display Properties எனும் திரை தெரியும். அதில் Apply என்பதைத் தட்டுங்கள். சில விநாடிகளில் உங்கள் கணினித் திரை சாம்பல் நிறத்திற்கு மாறும். கவலைப் பட வேண்டாம்.

வருவது எல்லாம் நன்மைக்கே என்று பேசாமல் இருக்கவும். இன்னும் ஓர் அறிவிப்பு வரும். அதையும் OK செய்யுங்கள். அப்புறம் அடையாளச் சின்னங்கள் எல்லாம் சின்னதாக மாறி இருக்கும். இப்போது சந்தோஷம்தானே! இவை எல்லாம் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு. விண்டோஸ் விஸ்தாவைப் பயன் படுத்தினால் Personalize > Window Colour and Appearance > Advanced எனும் இடத்திற்குப் போய் மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

எஸ்.திருக்குமரன், செலாமா, பேராக்
கே: என்னுடைய கணினியில் பல Screen Savers உள்ளன. இதனால் கணினியின் வன்தட்டில் அதிக இடம் பிடிக்கிறது. எப்படி காப்பாற்றுவது?


ப: எதைக் காப்பாற்றச் சொல்கிறீர்கள். உங்கள் Hard Disk எனும் வன்தட்டையா இல்லை ஆசை ஆசையாக நீங்கள் வளர்த்து வரும் Screen Savers எனும் திரைக் கோலங்களையா. உங்களுக்கு ஒன்று தெரியுமா. எவ்வளவுக்கு எவ்வளவு கணினியில் திரைக் கோலங்கள் இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்தக் கணினிக்கு ஆபத்து. ஒன்று அல்லது இரண்டை வைத்துக் கொண்டு மற்றதை அழித்து விடுங்கள். திரைக் கோலங்கள் வன் தட்டில் நிறைய இடங்களை எடுத்துக் கொள்ளும். பல பிரச்னைகளை உருவாக்கி விடும்.

ரிஷ்வானா  rizwana2182@yahoo.co.in
கே: கணினித் துறையில் சிறந்து விளங்குபவர்கள் பெண்கள்தான் என்று என் நண்பர் சொல்கிறார். ஆண்கள்தான் என்று நான் சொல்கிறேன். நீங்கள் யார் பக்கம்?


நான் நன்றாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா இல்லை நான் இருக்கும் பகுதியில் நிலநடுக்கம் வர வேண்டும் என்று ஆசைப் படுகிறீர்களா. பரவாயில்லை. கேள்வி கேட்டு விட்டீர்கள். அமெரிக்காவில் ஓர் ஆராய்ச்சி செய்தார்கள். ஒரு வாரத்தில் செய்யக்கூடிய வேலையை ஆண்கள் ஐந்து நாட்களில் செய்து முடிக்கிறார்கள். பெண்கள் ஒரு வாரத்தில் முடிக்கிறார்கள். கொடுத்த வேலையை முடிப்பதில் பெண்கள் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். ஆண்கள் கொடுத்த வேலையிலிருந்து தள்ளி போய் மாற்று கோணங்களில் அலசிப் பார்க்கிறார்கள். இப்படி பல கருத்துகள் இருக்கின்றன. என்னைக் கேட்டால்... ஆண்கள் என்று சொல்லி பாசமிகு பெண்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள விரும்பவில்லை.

லோகேஸ் பிபி bibi_1323@yahoo.com
கே: இந்தக் கேள்வி பதில் அங்கத்தைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடலாமே?


பலர் சொல்லி இருக்கிறார்கள். ஞாயிறு பொறுப்பாசிரியர் அன்பழகன் அவர்களும் இதே கருத்தைச் சொல்லி வருகிறார். அதற்கு சரியான நேரம் வர வேண்டும். முதலில் என் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. பார்ப்போம். வெளியிட்டதும் முதல் நூலை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தவிர http://ksmuthukrishnan.blogspot.com/ எனும் இணையத் தளத்தில் இந்தக் கேள்வி பதில் அங்கம் வெளிவருகிறது. போய்ப் பாருங்கள்.

ஆர்.ஜெகநாதன், சிலிம் ரிவர்.
கே.என்னுடைய கணினியைத் தொடங்கியதும்  "Your computer might be at risk" என்று செய்தி வருகிறது. எப்படி நிறுத்துவது. என்னுடைய கணினி நன்றாக வேலை செய்கிறது. அப்புறம் ஏன் update கோப்புகள்? தேவை இல்லை என்று நினைக்கிறேன்.


ப: என் மகனுக்கு ஏ,பி,சி,டி எல்லாம் நல்லாத் தெரியும். அப்படியே தலைகீழாச் சொல் லுவான். அது போதும். அதை வைத்து பிழைச்சுக்குவான். எதற்கு பள்ளிக்கூடத்திற்கு எல்லாம் அனுப்பி, சிலுவார் சட்டை வாங்கி, புக்குகளை வாங்கி... என்று சொல்லக் கூடாது. அது தப்பு இல்லையா.

மைக்ராசாப்ட் நிறுவனத்திலிருந்து அடிக்கடி புதிய புதிய பதிவுகளை உங்கள் கணினிக்கு அனுப்பி வைப்பார்கள். அதை வேண்டாம் என்று சொல்வது தவறான முடிவு. உங்கள் கணினி நன்றாக இயங்கலாம். அப்படி நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதன் உள்ளே இருக்கும் பிரச்னை உங்களுக்குத் தெரியுமா. அது வாயில்லா ஜ“வன். அதற்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கத்தான் இந்தப் புதிய பதிவுகள். அதாவது Updates.

அதையும் மீறி வேண்டும் என்றால் வழி இருக்கிறது. Start>> Control Panel>> Security Center எனும் இடத்திற்குப் போய் Change the way Security Center alerts me என்பதைச் சொடுக்கவும். அங்கு இருக்கும்  Automatic Updates என்பதைச் சொடுக்கினால் பிரச்னை தீர்ந்தது. மறுபடியும் எச்சரிக்கை செய்கிறேன். இது உங்கள் கணினியைப் பாதுகாப்பு இல்லாமல் ஆக்கிவிடும். அப்புறம் உங்கள் இஷ்டம்.

முருகன் சுப்பிரமணியம் Murugan_Subramaniam@ameron.com.my
கே: நாம் இணையத்தில் தகவல் தேடிக்க் கொண்டிருக்கும் போது சில சமயங்களில் விளம்பரங்கள் வருகின்றன. அதில் இரண்டு அழகிகள் படம் வரும். அவர்களுடைய பெயர், வயது போட்டிருக்கும். நான் தனியாக இருக்கிறேன். என்னைச் சந்திக்க வேண்டும் என்றால் 'கிளிக்' செய்யுங்கள் என்று வருகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் நான் குவாந்தானில் இருப்பது விளம்பரம் செய்பவர்களுக்கு எப்படி தெரியும்?


ப: இந்த விளம்பரங்களில் geotargeting எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. ஒவ்வொரு கணினிக்கும் ஒவ்வொரு இணைய முகவரி இருக்கிறது. அந்த இணைய முகவரியைப் பயன்படுத்தி உங்கள் இடம் அறியப் படுகிறது. அதாவது நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்பது தெரிய வருகிறது.

இருந்தாலும், உங்களின் பெயர், முகவரி, கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி, வயது போன்றவறைக் கண்டறிய முடியாது. அதனால்தான் உங்களுக்கு கவர்ச்சி காட்டி, ஆசை காட்டி ஏதாவது ஒரு வகையில் தகவல்களைப் பெற்று விடுவார்கள். விளம்பரம் செய்பவர்களுக்கு பல வகைகளில் இலாபம் இருக்கிறது. அந்த அழகிகளினால் ஆபத்துதான் அதிகம். எலி ஏன் சட்டை போடாமல் ஓடுகிறது என்று பெரிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம். இருக்கிறதை வைத்து ஒப்பேற்றிக் கொள்வதே பெரிய விஷயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக