28 September 2009

போக்கரி ராஜாக்களின் பொல்லாத வேட்டை


ஒரு காலத்தில் பொழுது போகவில்லையே என்று புலிகளை வேட்டையாடியவர்கள் இந்தியாவின் மகாராஜாக்கள். எந்த ஒரு மகாராஜா அதிகமான புலிகளைச் சுட்டார் என்றும் எந்த வகையான புலிகளைச் சுட்டார் என்றும் தேசிய அளவில் ஒரு சாதனைப் பட்டியலும் இருந்தது. ஒரு மகாராஜா ஒரு வேட்டையில் மூன்று புலிகளைச் சுட்டார் என்றால் அந்தச் செய்தி அடுத்த மகாராஜாவிற்குப் போகும். அந்த மகாராஜா நான்கு புலிகளைச் சுடுவார். அப்புறம் இன்னொரு மகாராஜா ஆறு புலிகளைச் சுடுவார். வேறொரு மகாராஜா ஏழு புலிகளைச் சுடுவார். தங்களின் பராக்கிரமத்தை அதன்வழி காட்டினார்கள். அவற்றில் ஆரோக்கியமற்ற அசிங்கத் தனங்கள் தெரிந்தன.

தாவி வரும் கடல் அலைகளை எண்ணிவிடலாம். அதில் தவழ்ந்து போகும் மீன்களை எண்ணிவிடலாம். மீன்கள் வந்து மோதும் கரையின் மணல்களை எண்ணிவிடலாம். ஆனால், இந்தியக் காடுகளில் காணாமல் போன புலிகளை மட்டும் எண்ணவே முடியாது என்று இந்திய எழுத்தாளர் ரபீந்தரநாத் தாகூர் ஒருமுறை மனமுடைந்து போய் சொன்னது நினைவிற்கு வருகிறது.
புலிகளைச் சுடுவதற்கான வெடி மருந்து சீனாவிலிருந்து ஒற்றர்கள் மூலம் கிடைத்தது. பாரசீகத்திலிருந்தும் கிடைத்திருக்கிறது. துப்பாக்கிகளைச் சொந்தமாக செய்து கொண்டார்கள். அனைத்தும் நாட்டுத் துப்பாக்கிகள். ஒரு விஷயம்! அகில இந்தியாவிலும் இருந்த மகா ராஜாக்களைப் பற்றிதான் பொதுவாகச் சொல்கிறேன். எந்த ஒரு மகாராஜாவையும் சிறுமை படுத்தவில்லை.

நிறைவான கல்வித்தரம் நிறையாத காலத்தில்
தெளிவான சிந்தனைகள் நிறையாமல் போயின


சங்ககால தமிழ் இலக்கியத்தில் புலியை முறத்தால் விரட்டியடித்த கதை இருக்கிறது. காதல் தலைவன் புலியின் பல்லைப் பிடுங்கி வந்து தாலி கட்டியதாகவும் கதை இருக்கிறது. விடுதலை வீரர் திப்பு சுல்தான், தனிமனிதராக புலியுடன் நின்று போராடி வெற்றிப் பெற்ற வீரக் கதையும் இருக்கிறது. 

சாலுக்கிய மன்னர்களான சக்திவர்மன், விமலாதித்தன், சோழ மன்னர்களான மதுராந்தகன், குலோத்துங்கன் போன்றவர்களும் புலிகளை எதிர்த்துப் போரடியுள்ளதாக வரலாறு சொல்கிறது. ஆனால், தமிழ் நாட்டு மன்னர்களும் சரி சமஸ்தான அதிபதிகளும் சரி பொழுது போக வில்லையே என்பதற்காக புலிகளைக் கொன்று குவித்ததாகச் சரித்திரமே இல்லை. 


வீரத்தை வெளிப்படுத்தவும் விரதத்தைக் கைவிடவும் எங்கோ ஒன்றிரண்டு நடைபெற்றிருக்கலாம். அதற்காக கணக்கு வழக்கில்லாமல் புலிகளைக் கொன்றிருப்பார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. சேர சோழ பாண்டிய மன்னர்களுக்குப் பின்னால் வந்த கதையைச் சொல்கிறேன். முல்லைக்குத் தேர் கொடுத்த மண்ணில் மனிதநேயங்கள் வாழ்ந்தன. இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இப்படியே பல காலமாக மகாராஜாக்கள் புலிகள் சுடுவதில் சாதனை படைத்து வந்தனர். பதப்படுத்தப்பட்ட புலிகளை அரண்மனைகளில் தொங்கவிட்டு அழகு பார்த்தனர். கஜானா நிறைந்து அந்தப்புரம் வழிய வேண்டும் என்று சிலர் அதன் மேல் அமர்ந்து யாகமும் செய்தனர்.

தங்களுடைய எதிரிகள் தங்களைப் பார்த்து பயப்பட வேண்டும்; அந்தப்புரத்து ராணிகள் மெச்ச வேண்டும்; அவர்களுக்கு இடையே போட்டி பொறாமை, இத்யாதி இத்யாதி வரவேண்டும் என்பதற்காகவே அந்த வீர சாகசம் செய்தனர் என்றும் சொல்லப் படுகிறது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வலதுகாலை எடுத்து வைப்பதற்கு முன்னதாகவே, மகாராஜாக்களுக்கு சுடும் ஆயுதங்கள் கிடைத்துவிட்டன. டச்சுக்காரர்களும் போர்த்துகீசியர்களும் கையை வீசிக் கொண்டு சும்மா ஒன்றும் வரவில்லை. துள்ளும் ரம்பைகளைக் கொண்டு வராவிட்டாலும் துப்பாக்கி ரவைகளைக் கொண்டு வந்தார்கள். வான்கோழிகளையும் வாளி வாளியாக வெண்ணெய்ப் பதார்த்தங்களையும் கொண்டு வந்தார்கள். குளிக்கவும் மினுக்கவும் நல்ல வாசனைப் பொருட்களைக் கொண்டு வந்தார்கள். அதை நாம் மறந்துவிடக்கூடாது.

துப்பாக்கிகள் வருவதற்கு முன்னரே யானைகள் மீது ஏறி வேட்டையாடினர். கண்ணியில் அல்லது கம்பி வலையில் சிக்கிய புலியை ஈட்டிகளால் குத்திக் கொன்றனர். அதைத் தூக்கி வந்து அரண்மனையில் போட்டு சர்க்கஸ் வேடிக்கை காட்டினர். புலியைச் சுடுவதும் கொல்வதும் வீரத்திற்கு விவேகம் சேர்ப்பதாக நினைத்திருக்கலாம். நிறைவான கல்வித்தரம் நிறையாத காலத்தில் தெளிவான சிந்தனைகள் நிறையாமல் போய்விட்டன.

சில சமயங்களில் போர் வீரர்கள் மட்டும் புலி வேட்டைக்குப் போவார்கள். ராஜா போகமாட்டார். புலி கிடைப்பது அதிர்ஷ்டத்தைப் பொருத்தது. புலி கிடைத்தால் முடிந்தவரை அதைக் கொல்லாமல் அப்படியே ஒரு கூண்டுக்குள் போட்டு அடைத்து வைத்து விடுவார்கள்.

குடிக்க தண்நீர் மட்டும் கொடுப்பார்கள். சாப்பாடு எதுவும் கொடுக்க மாட்டார்கள். ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் கழித்து ராஜா சகல பரிவாரங்களுடன் காட்டிற்குப் போவார். கூண்டைத் திறந்து விடுவார்கள். செத்தேன் பிழைத்தேன் என்று புலி தட்டுத் தடுமாறி வெளியே வரும். உடனே ராஜா சுட்டு வீழ்த்துவார். போர் வீரர்கள் கரகோஷம் செய்வார்கள். செய்தி எட்டு திக்கும் பரவும். அரண்மனை வட்டாரத்தில் கொண்டாட்டம் கோலாகலம்.

கொள்ளுக் கட்டை பணத்திற்கு கணக்குத் தேவையா

அந்தப்புர ராணிகளிடையே கிசுகிசுப்பு. அந்தக் காலத்தில் ஒரே ஒரு ராஜாவுக்கு ஒன்பது ராணிகள் இருந்தார்கள் என்பதெல்லாம் உண்மைதான். பற்றாக்குறைக்கு நூற்றுக்கணக்கில் வைப்பாட்டிகள். மக்கள் வரியின் மூலம் வருமானம் வருகிறது. அந்த வருமானத்தை இந்த மாதிரியான செலவுகள் செய்வதில் நியாயம் இருப்பதாகக் கற்பிக்கப்பட்டது.கொள்ளுக் கட்டை விற்ற பணத்திற்கு கணக்குத் தேவையா? சாமான்யர்களும் ஏற்றுக்கொண்டார்கள். இருக்கின்ற ஒன்றை, ஒன்றே ஒன்றை வைத்துக் கொண்டு குப்பை கொட்டுவதற்கே சாமான்ய மனிதர்கள் எல்லா காலத்திலும் கஷ்டப்படுகிறார்கள். இதில் டஜன் கணக்கில் ராணிகளா? அந்த ராஜாக்கள் எப்படி அத்தனை சந்திரமுகிகளை வைத்துக் கொண்டு பேர் போட்டார்கள். நினைத்துப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. விடுங்கள்... அது நமக்குத் தேவையில்லை.அப்புறம் சில நாட்கள் கழித்து, புலியைப் பிடித்த உண்மையான போர் வீரர்கள் மற்றவர்களுக்குத் தெரியாத வகையில் காணாமல் போய் விடுவார்கள். களையெடுப்பு என்று சொல்வார்களே. அதுதான் இது. ராஜாவின் ரகசியம் தெரிந்தவர்கள் ஆயிற்றே. ரகசியம் காக்கப்படுவதில் ராஜதந்திர முறை கையாளப்படும். இருந்தாலும் அந்தரங்க ஊழியர்களில் மகாராஜாவைப் பிடிக்காதவர் சிலர் இருக்கத்தானே செய்வார்கள். 


அவர்கள் மூலமாக ரகசியம் வெளியே போயின. ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைபற்றிய பின்னர் இந்த புலி வேட்டை வேறு வகையில் விஸ்வரூபம் எடுத்தது. அதற்கு முன்னரே டச்சுக்காரர்களும் போர்த்துகீசியர்களும் வந்து குசலம் விசாரித்துவிட்டனர். மகாராஜாக்களுடன் ஆங்கிலேயர்களும் சேர்ந்து கொண்டார்கள். புலி வேட்டையில் அது புதிய சகாப்தம். புலிகளைக் கொன்று தோள்களை உயர்த்திய அந்த மகாராஜாக்களின் நீண்ட பட்டியல் கைவசம் இருக்கிறது. அது நமக்கு தேவையில்லை.

அப்புறம் என்ன. இந்திராகாந்தி எனும் ஒரு 'மகராசி' வந்தார். மகாராஜாக்களின் 'பற்களை' எல்லாம் பிடுங்கினார். அவர்கள் பரிவலம் வந்த நிலத்தை எல்லாம் பிடுங்கி ஏழை எளியவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். முரட்டு ஜாமின் தாரர்களை சிறையில் தூக்கிப் போட்டார். காட்டில் வாழ்ந்த புலிகளுக்கு சாப விமோசனம் கொடுத்தார். மான்களுக்கும் மயில்களுக்கும் சரணாலயங்கள் கட்டிக் கொடுத்தார். வாயில்லா ஜீவன்களுக்கு வேதங்கள் படித்த அந்த மயிலையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். அண்மைய வரலாறு.

அடிமை வியாபாரத்திற்கு அரிச்சுவடி எழுதினார்கள்


அதற்கு முன்னர் ஆங்கிலேயர்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். உலகத்தில் பாதியை ஆட்சி செய்தவர்கள் இந்த ஆங்கிலேயர்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவில் பாதி, ஆசியாவில் பாதி என்று சேர்த்தால் அந்தப் பாதிக் கணக்கு சரியாக வந்துவிடும். ஒரு பெரிய பட்டியலே போடலாம். நம்ப முடியவில்லை. ஆனால், உண்மை அதுதான்.
இத்தனைக்கும் இங்கிலாந்து ஒரு சின்ன நாடு. உலக வரைபடத்தில் ஒரு குண்டுமணி அரிசி. ஆனால், உலக வல்லரசுகளான அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் இதனைக் கண்டு ஒரு கட்டத்தில் தலைதெரித்து ஓடியவை. 'மண்ணும் வேண்டாம் மகுடமும் வேண்டாம் ஆளை விடுங்கடா சாமி' என்று ஒலிம்பிக் ஓட்டம் ஓடியவை. பல போர்களைப் பார்த்தவை.

அமெரிக்காவில் மட்டும் ஆங்கிலேயர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் பருத்தி வியாபாரப் பணத்தைப் பதுக்கிக் கொண்டு போனார்கள். கிழக்கிலிருந்து தேயிலையைக் கொண்டு போய்க் கொட்டி கோதுமை அரிசியைக் கொண்டு வந்தார்கள். அடிமை வியாபாரத்திற்கு அரிச்சுவடி எழுதினார்கள். சுந்திரமாய்த் திரிந்த சிவப்பு இந்தியர்களைச் சுட்டுத் தள்ளினார்கள். கிழக்கே உதிக்கும் சூரியன் எங்களைக் கேட்டுத்தான் எழும். எங்களைக் கேட்டுத்தான் விழும் என்று வீரவசனம் பேசினார்கள்.
கணக்குப்படி பார்த்தால் அமெரிக்காகூட ஒரு காமன்வெல்த் நாடுதான். என்ன அமெரிக்கர்களின் சுதந்திரத் தாகத்தைச் சமாளிக்க முடியவில்லை. தாமஸ் பெயின் எனும் எழுத்தாளர் எழுதிய 'காமன் சென்ஸ்' என்ற நூல் பண்ணிய வேலை. அவ்வளவுதான். ஆங்கிலேயர்களின் மீசையில் மண் ஒட்டிக் கொண்டது. பெரிசாக ஒன்றும் இல்லை. இருந்தாலும் காமன்வெல்த் மாநாட்டுக் கூட்டங்களில் அமெரிக்கா ஒரு பார்வையாளராக இன்னமும் கலந்து கொள்கிறது. கொஞ்ச நஞ்ச ஈரப்பசை இருக்கத்தானே செய்யும்.

அண்ணாந்து பார்த்தால் ஆகாசம். மல்லாந்து படுத்தால் தமிங்கிலோ வாசம் என்று சொல்லும் அளவுக்கு பேர் போட்டு விட்டார்களே. அதுவரைக்கும் ஆங்கிலேயர்களைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்தியாவை முந்நூறு ஆண்டுகள் ஆண்டார்கள். வெறும் பத்தாயிரம் வெள்ளைக்கார அதிகாரிகளையும் 60,000 வீரர்களையும் வைத்துக் கொண்டு முப்பது கோடி இந்தியர்களை ஆட்சி செய்திருக்கிறார்கள். சாதாரண விஷயமா?

மக்களைப் பார்க்காத மகாராணி

1600 ஆம் ஆண்டு ஹெக்டர் எனும் கப்பல் பம்பாய்க்கு அருகில் உள்ள சூரட் எனும் இடத்தில் கரை தட்டியது. Commerce not Colonization என்பதே அவர்களுடைய முதுமொழியாக இருந்தது. வியாபாரம் - காலனித்துவம் அல்ல என்று சொல்லிதான் வந்தார்கள். ஆனால், கடைசியில் ஒரு துணைக் கண்டமே கண்நீர் விட்டு அழுதது. 19ஆம் நூற்றாண்டு முடிவதற்குள் இந்தியாவின் பெரும்பகுதியை ஆங்கிலேயர்கள் தங்கள் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டனர். அகில இந்திய மாட்சிமை தங்கிய மகாராணியாக விக்டோரியா முடி சூட்டிக் கொண்டார்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒரு முறைகூட விக்டோரியா மகாராணியார் இந்திய மண்ணில் கால் எடுத்து வைத்ததில்லை. ஆனால், அவர் இந்தியாவின் மகாராணி. தொலைபேசி, வானொலி, கம்பியில்லாத் தந்தி என்று எந்த ஊடகமும் இல்லாதக் காலக்கட்டம். பாய்மரக் கப்பல்கள் பருவக் காற்றை நம்பி பயணம் செய்த காலம் அது. மகாராணி லண்டனில் இருந்து கொண்டே அதிகாரம் செய்தார். ஒரு நாட்டின் மக்களைப் பார்க்காமலேயே அந்த நாட்டின் மகாராணியாக ஒருவர் இருந்தார் என்றால் அவர் இவராகத்தான் இருக்க வேண்டும். உலகம் போற்றும் சாதனை. ரொம்ப சந்தோஷம்.

ஆங்கிலேயர்கள் ஒரே ஒரு சின்னத் தோனிப் படகில் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு போக இந்தியாவிற்கு வந்தார்கள். அப்படி வந்தவர்கள் நான்கைந்து மாமாங்கத்தில் மாபெரும் கண்டத்தையே கண்டம் கண்டமாக வெட்டித் துண்டு போட்டார்கள். அப்புறம் அதில் சின்னச் சின்ன கூறுபோட்டார்கள். அப்புறம் அந்தக் கூறுகளில் இருந்த மக்களை இனவாரியாக மொழி வாரியாகப் பிரித்தார்கள். அப்புறம் இருப்பவர்களை Indentured Labor எனும் பேரில் வெளி நாடுகளுக்கு ஆசைகாட்டி அனுப்பி வைத்தார்கள்.
போன இடத்தில் கொத்தடிமை மொத்தடிமை என்று அவர்களைக் கசக்கிப் பிழிந்ததுதான் மிச்சம். இருக்கிற வரையில் அவர்களின் இரத்தத்தைச் சீவி எடுத்தார்கள். மலாயாவில் வெள்ளையாக வந்ததை சிகப்புக் கடுதாசியில் எழுதி விற்றுத் தீர்த்தார்கள். கடைசியில், அவர்களையும் அவர்களின் வாரிசுகளையும் 'எப்படியாவது பிழைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லி கைகழுவிக் கொண்டு போனார்கள். இந்தப் பெருமை ஆங்கிலேயர்களைத் தவிர வேறு யாருக்கு கிடைக்கும்.

மாலைத் தீவின் மாக்கடல் முத்துகள்


இந்த இடத்தில் ஒன்றை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கிலாந்து ஒரு சின்ன நாடு. அந்த நாட்டைக் காட்டிலும் நம் நாடு மலேசியா ஒன்றரை மடங்கு பெரியது. இங்கிலாந்தின் பரப்பளவு 244,755 சதுர கி.மீ. மலேசியாவின் பரப்பளவு 332,370 சதுர கி.மீ. அதைவிட பலப்பல மடங்கு பெரியது இந்தியா. அப்பேர்ப்பட்ட அந்த இந்தியாவை ஐம்பதே ஆண்டுகளில் எகிறிப் பிடித்தது இந்தக் குட்டி இங்கிலாந்து.அடுத்து வந்த முன்னூறு ஆண்டுகளுக்கு நசுக்கியும் போட்டது. அதற்கு என்ன காரணம்? இருந்த குட்டி ராஜாக்கள்தான் என்று இந்திய வரலாற்று அறிஞர்கள் மனமுடைந்து சொல்கிறார்கள். Indian Society and the Making of the British Empire எனும் நூலில் சதீஷ் சந்திரா என்பவரும் Political History of Carnatic Under the Nawabs எனும் நூலில் சஞ்சய் சுப்பிரமணியம் என்பவரும் எழுதியிருக்கிறார்கள். இந்திய வரலாற்று மேதை நீலகண்ட சாஸ்திரிகளும் குறைகளைக் கூறியிருக்கிறார். தப்பாக நினைக்க வேண்டாம். சில குட்டி ராஜாக்களின் செயல்களை உலகத்தின் பழமையான தொழிலுக்கு இணையானது என்றும் எழுதியிருக்கிறார்கள். அவ்வளவு வேதனை!பர்மாவில் இருந்த மலைஜாதிக் கற்களைக் கொண்டுவர ஆட்களை அனுப்பினார்கள். மலாயாவில் இருந்த காடுகளை வெட்டி தோட்டங்கள் போட ஆட்களை அனுப்பினார்கள். சிங்கப்பூரில் இருந்த பாசா காடுகளைத் திருத்தி காபிச் செடிகளை நட ஆட்களை அனுப்பினார்கள். கிறிஸ்மஸ் தீவுகளின் சுரங்கங்களை வெட்டி 'பாஸ்பேட்' எடுக்க ஆட்களை அனுப்பினார்கள். தென் ஆப்ரிக்காவில் காட்டுப் புதர்களை அழித்து கரும்புத் தோட்டங்கள் போட ஆட்களை அனுப்பினார்கள். மாலைத்தீவுகளின் ஆழ்கடலில் முத்துகள் எடுக்க ஆட்களை அனுப்பினார்கள். மடகாஸ்காரின் மலையடிவாரங்களில் வாசனைத் தாவரங்கள் நடுவதற்கு ஆட்களை அனுப்பினார்கள். பிஜி-சாலமான் தீவுகளின் உடலுழைப்புப் பண்ணைகளுக்கு ஆட்களை அனுப்பினார்கள். அனுப்பியவர்கள் ஆங்கிலேயர்கள். அனுப்பப் பட்டவர்கள் இந்தியர்கள்.

சொந்த பந்தங்களைப் பிரிந்து வந்தவர்களின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். வந்தவர்கள் எல்லோருமே தென் இந்தியர்கள். இப்போது இதைப் படிக்கும் பெரும்பாலோர் அந்த வரிசையில் வருகிறார்கள். என்னையும் சேர்த்துதான். என்னுடைய தாத்தா 1910ல் மலாயா வந்திருக்கிறார். நாம் எல்லாம் மூத்தத் தலைமுறைகளின் வழித்தோன்றல்கள். நம்முடைய மூதாதையர் அங்கேயும் இங்கேயும் எப்படி வேதனைப் பட்டிருக்கிறார்கள் என்பதை இப்போதைய சந்ததியினர் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி 'சஞ்சிக் கூலிகள்' எனும் கட்டுரையை விரைவில் எழுதுகிறேன். என் பேரப் பிள்ளைகள் படிக்க வேண்டும்.

கறுப்பர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை


Rudyard Kipling எனும் ஓர் எழுத்தாளர் இருந்தார். மிகவும் புகழ்பெற்றவர். அவர் இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே வாழ்ந்தார். அவர் எழுதிய 'ஜங்கல் புக்' எனும் நூல் மிகவும் பிரசித்தி பெற்றது. பலர் படித்திருக்கலாம். மிகச் சிறப்பான கிராமப்புற வாசனைகள் நிரம்பியது. இந்தியாவைப் பற்றிய உண்மையான வர்ணனை செய்தவர்களில் இவரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

அந்த அளவுக்கு தத்துவார்த்த கற்பனைகள். அதில் வரும் 'மவுக்லி' எனும் கதாபாத்திரம், படித்தவர் நெஞ்சில் எப்போதும் நிழலாடிக் கொண்டிருக்கும். அந்த மவுக்லி கதாபாத்திரம் கடைசியில் வனவிலங்கு அதிகாரியாக மாறுகிறார். விக்டோரியா மகாராணியாரிடம் இருந்து ஓய்வூதியம் பெறுகிறார். கதை அப்படி முடிகிறது. பாருங்கள். ஒரு கற்பனைக் கதையில்கூட ஆங்கிலேயர்களின் தலைமைத்தனம் ஊறுகாய் போல கொஞ்சம் கொஞ்சமாய்த் தொட்டுக் கொள்ளப் படுகிறது.

ஆங்கிலேயர்களுக்கும் இந்திய மக்களுக்கும் நேரடியான, நெருக்கமான சமூகத் தொடர்புகள் இருந்ததாகத் தெரியவில்லை. மன்றங்கள், கழகங்கள், விடுதிகள் போன்றவற்றில் இந்தியர்கள் உறுப்பியம் பெற முடியாது. அவற்றின் அலுவலகங்களுக்குள் நுழையவும் முடியாது. அவர்களின் வீடுகளுக்குள் இந்தியர்கள் போகக் கூடாது. கறுப்பர்களுக்கும் நாய்களுக்கும் உள்ளே நுழைய அனுமதி இல்லை என்று அமெரிக்காவில் அறிவிப்புப் பலகை போட்டிருப்பார்களாம்.

அந்த மாதிரி இந்தியாவிலும் அறிவிப்புப் பலகை போட்டிருக்கிறார்கள். சிம்லாவில் நடந்த உண்மை அது. அங்கேதான் ஆங்கிலேயர்களின் கோடைகால உல்லாச பங்களாக்கள் இருந்தன. இந்திய மக்கள் ஆங்கிலேயர்களைப் போன்று சட்டை சிலுவார் போட்டு தெருவில் நடப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்படியே மீறி நடந்தால் கசையடியிலிருந்து, அபராதத் தண்டனை வரை நடந்திருக்கிறது.

இந்தியர்கள் நுழையக் கூடாத தனிப்பட்ட விடுதிகளில் ஜாமீன் தாரர்கள், சாஹிப்புகள், குட்டி ராஜாக்கள், குறுநிலத்து மன்னர்கள் போன்ற மேலிடத்துப் புள்ளிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். இத்தாலிய விஸ்கி, பாரிஸ் வாயின், ரஷ்ய வாட்கா, ஜமாய்க்கா ரம், பெல்ஜிய பீர் என்று மதுபான வகையறாக்கள் ஆறாய் ஓடின. இளம் பெண்கள் குலுங்கி வர, நளினமான வக்கிர மொழிகள் சிப்பிக்குள் இருந்து வெளியே வந்திருக்கின்றன.

அதே அந்த மேல்தட்டுகள், சாமான்ய மக்களை அடிமைகளாக நடத்தியிருக்கிறார்கள். சர்வ கேவலமாகப் பேசியிருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. அந்தச் சுவடுகளின் தாக்கம்தான், மலேசியத் தோட்டங்களில் வாழ்ந்த ஆரம்பகால தாத்தா பாட்டிகளையும் பாதித்திருக்கிறது. கிராணிகளைக் கண்டால், சைக்கிளை விட்டு கீழே இறங்கி சலாம் போடுவது.

காலில் போட்டிருக்கும் காலணிகளைக் கழற்றி இரண்டு கைகளிலும் தூக்கிப் பிடித்துக் கொள்வது. வேட்டியைத் தூக்கி கோவணமாகப் பின்னிக் கொள்வது. மண்டோர்கள் žறும்போது மண்ணில் விழுந்து மன்னிப்பு கேட்பது. மானேஜர் அடித்துச் சாற்றும் போது அவனுடைய கால்களைக் கட்டிப் பிடித்துக் கண்நீர் வடிப்பது. இப்படி நிறைய உண்டு. சாமான்ய மக்களை மிகவும் ஏளனமாக நினைத்து கேவலமாக நடத்தி வந்திருக்கிறார்கள்.

படிப்பில்லாதவர்கள், மிரட்டினால் பதுங்கிப் போகிறவர்கள், உலகத் தரத்திற்கு உயர்ந்து வர முடியாதவர்கள் என்று ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள். அந்தக் கோட்பாட்டிற்கும் சூடம் காட்டி தூபம் போட்டிருக்கிறார்கள். அங்கேயும் இங்கேயும் எல்லாம் ஒன்றுதான். மொத்தத்தில் ஒரு கொத்தடிமை வாழ்க்கை.

நவரத்தின மாலைகளில்
நாய்களுக்கு கல்யாணம்


இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் போது நாடு முழுமையும் 565 சிற்றரசர்கள், நவாப்புகள், நிசாம்கள், சமஸ்தான் அதிபதிகள், ஜாமின் தாரர்கள், குறுநில மன்னர்கள், மகாராஜாக்கள் இருந்திருக்கிறாரகள். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் அவர்கள் பிடியில். சூடு சொரணையுள்ள சில வித்துகள் மட்டும் போர் முழக்கம் செய்தனர். அதனால் அவர்களுடைய மண் கோட்டைகள் தகர்ந்தன. மனைவி மக்கள் சின்னாபின்னமாயினர். ஹைதர் அலி, திப்பு சுல்தான், மார்தாண்ட வர்மா, ராம வர்மா, ரஞ்சிட் சிங், வீரபாண்டிய கட்ட பொம்மன், வேலு நாச்சியார் போன்ற மனித நேய அரசர்களை இதற்கு அடையாளம் காட்டலாம்.

சிற்றசர்களைத் தங்கள் பிடிக்குள் இழுத்துக் கொள்வது ஒரு பொழுது போக்கு என்றால் காடுகளில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த மான்களை வேட்டையாடுவதும் ஆங்கிலேயர்களின்மற்றொரு பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. அந்த மான்களின் இறைச்சியை கொண்டு வந்து வளர்ப்பு நாய்களுக்கு விருந்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் மத்திய மாநிலங்களில் ஒன்றில் இருந்த ஒரு சிற்றரசர் ஒரு படி மேலே போய் தன்னுடைய நாய்களுக்குப் படாடோபமாக கல்யாணமும் செய்து வைத்திருக்கிறார்.

எப்படிப்பட்ட கல்யாணம் தெரியுமா? யானைகளைக் கொன்று அவற்றின் தந்தங்களைச் சின்ன சின்னதாக வெட்டி எடுத்து வந்து, அதில் கம்பளம் செய்து, அந்தக் கம்பளத்தில் இந்த நாய்களை உட்கார வைத்து சீர் செனத்தியுடன் கல்யாணம் நடத்தியிருக்கிறார். மயில் இறகுகளால் செய்யப் பட்ட சிம்மாசனம் இந்த நாய்களுக்கு கொடுக்கப்படுள்ளன. இதற்காக எத்தனை மயில்களைக் கொன்றார்களோ தெரியவில்லை.

அது மட்டுமா. பர்மிய நவரத்தினக் கற்கள் பதித்த காசுமாலைகள் இந்த நாய்களுக்கு அணிவிக்கப் பட்டுள்ளன. இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட ராஜ முத்துகள் கழுத்துமாலைகளாகப் போடப் பட்டுள்ளன. சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தூய பட்டுத் துணிகள் அந்த நாய்களின் படுக்கைக்கு விரிக்கப்பட்டுள்ளன. எதற்காக அப்படிப்பட்ட அமர்க்களம். எதற்கும் ஒரு விவஸ்தை வேண்டாம்.

ஆனால், கதை வேறு மாதிரியாக போகிறது. அந்த நாயின் மீது மகாராணிக்கு அளவுக்கு மிஞ்சிய ஆசா பாசமாம். ராஜா காட்டுக்குப் போனால் அந்த நாய்தான் மகாராணிக்கு காவல் தெய்வம். அதனால் மகாராணியைச் சந்தோஷப்படுத்த சிற்றரசர் இப்படி ஒரு கல்யாணம் செய்து வைத்ததாகச் செய்தி. அந்தக் கல்யாணத்தில் உயர்மட்ட ஆங்கிலேய அதிகாரிகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். வைரவனுக்கு வைடூரிய மாலைகள் அணிவிக்கப்பட்டிருக்கின்றன. எது எப்படியோ பல உயிர்களைக் கொன்று ஒரு நாய்க்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த சீர்மிகு கல்யாணம்.

பொழுது போக்கிற்காக புலிகளை வேட்டையாடியது அந்தக் காலம். இப்போது அதை நினைத்துப் பார்த்தாலே குற்றமாகத் தெரிகிறது. உலகில் புலியினம் அழிந்து வருகிறது. ஜாவா புலி, பாலி புலி, காஸ்பியன் புலி, இவை முற்றாக அழிந்துவிட்டன. டாஸ்மேனியா புலியும் சென்ற நூற்றாண்டில் தான் அழிந்து போனது. சீனப் புலியும் அழிந்து வருகிறது.

எஞ்சி இருப்பவை சுமத்திரா, சைபேரிய, இந்திய, மலாயாப் புலிகள். இவற்றின் எண்ணிக்கை இப்போதைக்கு 6000 க்கு குறைந்துவிட்டதாக ஐ.நா புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. எவ்வளவோ கடுமையான சட்டங்கள் வந்துவிட்டன. இருந்தாலும் புலியை மருந்திற்காகக் கொன்று வருகிறார்கள்.

இப்படியே போனால் மனிதர்கள் பூமியிலுள்ள எல்லா இனத்தையும் அழித்து விடுவார்கள். நரமாமிசங்களைத் தின்னும் காட்டிமிராண்டிகள்கூட முள்கரண்டியால் சாப்பிடும் நாகரிகத்திற்கு மாறி விட்டார்கள். இருந்தாலும் புலிகளைக் கொல்லும் கேடு கெட்ட ஜென்மங்கள் இன்னும் மாறவில்லை. இரண்டுகாலில் உலவிக் கொண்டிருக்கின்றன.

எதிர்வரும் காலங்களில் போக்கிரிப் பிண்டங்களின் பொல்லாத வேட்டைகள் நடைபெறா வண்ணம் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நாலுகால் ஜீவன்களை வேட்டையாடும் இரண்டுகால் ஜீவன்களுக்கு நல்ல புத்தி கிடைக்கட்டும். தார்மீக சிந்தனையில் எல்லா உயிரினங்களையும் பேணிக் காப்போம். அது நம்முடைய கடமை.

6 comments:

 1. இந்திரா காந்தி, ப்ராஜக்ட் டைகர் போன்றவை கூட இந்த புலிகளை காப்பாற்ற முடியவில்லை. பாதி இந்த மகாராஜாக்கள் அழித்தார்கள். மீதி வன விலங்கு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து மற்றவர்கள் அழித்தார்கள்.

  ReplyDelete
 2. அந்த கால புகைப்படங்களை பார்ப்பதற்கு வித்தியாசமாக (இறந்துகிடந்த புலிகளைத்தவிர) இருந்தன. மிகவும் வித்தியாசமான பதிவுகள்.

  ReplyDelete
 3. different news and nice pics

  ReplyDelete
 4. very...very..intrestig stories

  ReplyDelete
 5. very...very..intrestig stories

  ReplyDelete
 6. நன்று. மேலும் எதிர்பார்ப்புடன்.

  ReplyDelete