04 April 2010

கணினியும் நீங்களும் - பகுதி 30

ஜி. ராமன்  graman@tm.com.my

கே: இணையத்தில் வெளிவரும் செய்திகள் எல்லாம் உண்மையாக இருக்குமா?

ப: அரிச்சந்திரன் காலத்தில் கைப்பேசி, கணினி எதுவும் இல்லை. அதனால் அவர்கள் காலத்தில் எவருக்கும் பொய் பேச வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது. கைப்பேசி இருந்திருந்தால் பொய் பேச கற்றுக் கொண்டிருப்பார்கள். அரிச்சந்திர புராணமும் நமக்கு கிடைத்திருக்காது. கணினியைப் பயன் படுத்து பவர்களைவிட கைப்பேசிகளைப் பயன் படுத்து பவர்கள்தான் அதிகம் பொய் பேசுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இணையத்தில் வெளிவரும் செய்திகளில் 90 விழுக்காடு உண்மை. மற்றவை பொய் அல்லது கட்டுக் கதைகள். ஆக, கணினியும் கைப்பேசியும் பொய் பேசத் தெரியாத வாயில்லா ஜ“வன்கள். அவற்றைப் பயன் படுத்தும் மனிதர்கள் தான் அவற்றிற்குப் பொய் பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அகஸ்டின் சின்னப்பன் முத்ரியார்  augustin@malaysiaairlines.com

கே: என் நண்பர் இடது கைப் பழக்கம் உள்ளவர். அவருக்கு ஏற்றவாறு Mouseஐ மாற்ற முடியும் என்று சொல்கிறார்கள். எப்படி சார்?

ப: நீண்ட நாட்களாகக் கேள்விகள் கேட்டு வருகிறீர்கள். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. Mouse எனும் சுழலியை இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும். எல்லா சுழலிகளுக்கும் இரண்டு பொத்தான்கள் இருக்கும். Left Click என்றால் இடது சொடுக்கு. Right Click என்றால் வலது சொடுக்கு. இது உலகம் முழுமையும் பயன் படுத்தப் படும் முறை. இந்தச் சுழலியை விசைப் பலகைக்கு வலது பக்கமாக வைத்துக் கொள்வோம். விசைப் பலகை என்றால் Key Board. இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்குச் சுழலியை விசைப் பலகைக்கு இடது பக்கமாகக் கொண்டு வர வேண்டும்.

இதில் இந்தப் பொத்தான்களின் செயல் பாடுகளை மாற்ற வேண்டும். சரி, எப்படி செய்வது. Start >> Control Panel >> Mouse >> Buttons >> Switch Primary and Secondary Buttons என்பதைச் சொடுக்கி விட்டு வெளியே வாருங்கள். அப்புறம் சுழலியின் செயல் பாடுகள் எல்லாம் மாறிப் போயிருக்கும். Left Click என்பது வலது சொடுக்காக மாறி இருக்கும். Right Click என்பது இடது சொடுக்காக மாறி இருக்கும். பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டுமானால், அதே இடத்திற்குப் போய் Deselect செய்து விடுங்கள்.

கீதா குமாரி  geethakumari34@gmail.com

கே: புதிதாகக் கணினியை வாங்கும் போது Dual Core Processor உள்ள கணினியைப் பார்த்து வாங்குவது நல்லது என்று சொல்கிறார்கள். இந்த 'டுவல் கோர் புரசசர்' என்றால் என்ன? அதன் பயன் என்ன?

ப: Processor என்பது கணினியைச் செயல் படுத்தும் ஒரு சாதனம். இதைச் 'செயலி' என்றும் சொல்லலாம். இங்கே இருந்துதான் கணினிக்கு கட்டளை பிறப்பிக்கப் படுகின்றது. என்ன என்ன வேலைகளை எப்படி எப்படி செய்ய வேண்டும் என்று ஆணை இடப் படுகிறது. 

இந்தச் சாதனம் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாகச் செயல் படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு கணினியும் வேகமாகச் செயல் படும். 2007 ஆண்டு வரை எல்லா கணினிகளிலும் ஒரே ஒரு செயலிதான் இருந்தது. அதாவது ஒரே ஒரு Processor தான் இருந்து வந்தது. அதன் பின்னர் இண்டல் நிறுவனம் Dual Core Processor எனும் செயலியை அறிமுகம் செய்தது. இரண்டு செயலிகள் ஒரே கணினிக்குள் இருக்கும். இரண்டும் ஒரே சமயத்தில் வேலை செய்யும்.

கணினியின் எல்லா வேலைகளையும் இரண்டும் சரி சமமாகப் பகிர்ந்து கொள்ளும். கணினியின் திறன் பல மடங்கு கூடுகிறது. அதனால் கணினியும் வேகமாக வேலை செய்கிறது. நாம் கணினிக்கு கொடுக்கும் எந்த வேலையையும் மிக மிக எளிதாகச் செய்தும் கொடுத்து விடுகிறது. இப்பொழுது வரும் கணினிகளில் இந்த 'டுவல் கோர் புரசசர்' முறை இருக்கிறது.

தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டியது இல்லை. இந்தச் செயலிகளில் இன்னோர் அதிசயமும் நடந்து கொண்டிருக்கிறது. AMD எனும் நிறுவனம் Triple Core Processor எனும் புதியச் செயலியைக் கண்டு பிடித்திருக்கிறது. படு பயங்கரமான வேகத்தில் வேலை செய்கிறதாம். அதைப் பற்றி பின்னர் விரிவாகச் சொல்கிறேன்.


ஜ“வ கலிய பெருமாள் jeevaria@yahoo.com

கே: நான் எந்த நிரலியையும் கணினிக்குள் பதிவு செய்தாலும் You must have Administrator rights to install on this computer. Please log in to an account with Administrator rights and run this installation again என்று வருகிறது. பெரிய தலைவலியாக இருக்கிறது சார். இதை எப்படி தீர்ப்பது?

ப: கணினியைப் பொருத்தவரையில் Administrator என்பவர்தான் அதற்கு அதன் ஏகோபித்தத் தலைவர். Administrator என்றால் நிர்வாகி அல்லது நடத்துனர். கணினியில் எந்தத் தடையும் இல்லாமல் போகலாம் வரலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதிக உரிமைகளைக் கொண்டவர் இந்த நிர்வாகி.

புதிய நிரலிகளைப் பதிப்பிக்கும் போது பதிப்பவருக்கு நிர்வாக உரிமைகள் இருக்கின்றனவா என்று கனினி கண்காணிக்கும். பதிப்பவருக்கு உரிமை இல்லை என்றால் நீங்கள் சொன்ன அந்த எச்சரிக்கை வரும். பொதுவாக, இந்தச் செயலாக்கம் கணினிக்குள் மறைத்து வைக்கப் பட்டிருக்கும். சரி. இதை எப்படி மாற்றுவது.

விண்டோஸ் எக்ஸ்பி பயன் படுத்தினால் இப்படி செய்யுங்கள். கணினியை Restart செய்யுங்கள். கணினி செயல்பட ஆரம்பிக்கும் போது F8 என்ற பொத்தானைத் தட்டுங்கள். ஒரு பட்டியல் வரும். அதில் Safe Mode என்பதைத் தட்டுங்கள். உள்ளே நுழையும் போது Administrator எனும் கணக்கில் நுழையுங்கள். Start >> Run >> என்பதில் 'Control userpasswords2' என்று தட்டச்சு சேயுங்கள்.

அங்கே ஒரு புதிய முகப்பு வரும். அதில் உங்கள் Administrative Account ஐ சொடுக்கி விடுங்கள். அப்புறம் Reset Password எனும் பொத்தானைத் தட்டி விடுங்கள். புதிய சங்கேதச் சொல்லை தட்டச்சு செய்து விட்டு வெளியே வாருங்கள். கணினியை அடைத்துவிட்டு மறுபடி இயக்கி விடுங்கள். அவ்வளவுதான் பிரச்னை தீர்ந்தது.

கே.எஸ்.பெருமாள்  ksperumal@gmail.com

கே: விண்டோஸ் வந்த வரலாற்றைச் சொல்ல முடியுமா?

ப: இப்போது விண்டோஸ் 7 வந்துவிட்டது. அதற்கு முன்னர் என்ன என்ன விண்டோஸ் வந்தன என்பதைப் பாருங்கள்
 • 1983-விண்டோஸ்
 • 1985-விண்டோஸ் 1
 • 1987-விண்டோஸ் 2
 • 1990-விண்டோஸ் 3
 • 1991-விண்டோஸ் மல்டி மிடியா
 • 1992-விண்டோஸ் 3.1
 • 1993-விண்டோஸ் NT 3.1
 • 1994-விண்டோஸ் Work Groups 3.11
 • 1995-விண்டோஸ் 95
 • 1996-விண்டோஸ் NT 4
 • 1997-விண்டோஸ் CE 2
 • 1998-விண்டோஸ் 98
 • 1999-விண்டோஸ் CE 2.1
 • 2000-விண்டோஸ் 2000
 • 2000-விண்டோஸ் Millenium
 • 2001-விண்டோஸ் XP
 • 2003-விண்டோஸ் Server
 • 2006-விண்டோஸ் Vista
 • 2009-விண்டோஸ் 7
 • 2011-விண்டோஸ் 8
 •  2015-விண்டோஸ் 10


மங்களம் மணியரசு  mansya91@gmail.com

கே: விண்டோஸ் ரிஜிஸ்டரி குறித்து அதிகம் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். இணையத்தில் பல தளங்கள் இருக்கின்றன. இருந்தாலும் தெளிவாக இல்லை. ஒரு நல்ல இடத்தைச் சொல்லுங்கள்.

ப: Windows Registry பற்றி பேசுகிறீர்கள். கணினியின் உயிர் நாடியில் கையை வைத்து பேசுகிறீர்கள் என்பதை நினைவு படுத்துகிறேன். கணினியின் இந்த உயிர்ப் பேழைக்குள் போய் ஒரே ஓர் எழுத்தைத் தவறாக மாற்றினலும் எல்லாம் குட்டிச் சுவராகி விடும். கணினி நிலைகுத்திப் போகும். கணினி கசாப்புக் கடைக்கு வழி கேட்கும். கணினியைப் பழுது பார்ப்பவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். உச்சந்தலையில் ஒன்பது கிலோ இரும்பைப் போட்டு அடித்தால், பாவம் அந்தத் தலைதான் என்ன செய்யும்.

அந்த மாதிரிதான் நிலைமை இங்கே. ஆக, கணினியைப் பற்றி கரைத்துக் குடித்திருந்தால் தவிர விண்டோஸ் ரிஜிஸ்டரியின்  உள்ளே நுழைய வேண்டாம். என்ன செய்வது. ஆசைப் படுகிறீர்கள். www.winguides.com/registry எனும் இணையத் தளத்தில் தகவல்கள் உள்ளன. போய்ப் பாருங்கள்.

தவிர www.majorgeeks.com/download.php?det=539 எனும் தளத்தில் நல்ல தகவல்கள் உள்ளன. ரிஜிஸ்டரியில் கை வைக்கும் முன் அதை ஓர் இடத்தில் பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பிரச்னை ஏதும் வந்தால் அங்கே இருந்து கோப்புகளை மீட்டுக் கொள்ளலாம். மீண்டும் எச்சரிக்கிறேன். பத்திரம்!

கிருபா சங்கர், பொந்தியான், ஜொகூர்

கே: மனிதனால் செய்ய முடியாததைக் கணினியால் செய்ய முடிகிறது. கணினி மனிதனை மிஞ்சி விடுமா?

ப: அது எல்லாம் சும்மா பேச்சு. மனிதனுக்குக் கட்டுப் பட்டதுதான் கணினி. அவன் இல்லை என்றால் எதுவும் அசையாது என்பார்கள். அந்த மாதிரி மனிதன் இல்லை என்றால் வெளியே போய் எந்த ஒரு புல்லையும் கணினியால் பிடுங்க முடியாது. ஆக, கணினியை இயக்குவது ஆட்டுவது எல்லாம் மனித மூளைதான். Artifical Intelligence System எனும் செயற்கை மூளைத் திறனைக் கணினிக்குப் பயன் படுத்தி வருகிறார்கள்.

மனிதனைப் போன்று உணர்ச்சி பூர்வமாக சிந்திக்கும் திறமை கிடைக்கலாம். இருந்தாலும் மனிதனுடைய நிலைமைக்கு வர முடியாது என்பது என் கருத்து. சரி. இன்னொரு விஷயம். கணினியில் CON என்று தட்டச்சு செய்து ஒரு கோப்பு (Folder) உருவாக்கிப் பாருங்கள். முடிகிறதா. முடியாது. ஏன் தெரியுமா? மன்னிக்கவும். அது எனக்கும் தெரியாது.

No comments:

Post a Comment