12 July 2010

கணினியும் நீங்களும் - பகுதி 64

(இந்தக் கேள்வி பதில் அங்கம் 11.07.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்களை Archive 2009, 2010 எனும் பிரிவுகளில் படிக்கலாம்.)

ஜீவா கலிய பெருமாள்   jeevaria@yahoo.com

கே: சில சமயங்களில் என்னுடைய Firefox அல்லது Internet Explorer உலவிகள் வேலை செய்யாமல் போய் விடுகின்றன. அவை இல்லாமல் இணையத்திற்குள் நுழைய விண்டோஸ் இயங்குதளத்தில் வேறு வழி இருக்கிறதா?

ப:
உடனடி உதவிக்கு Calculator எனும் கணக்கியைப் பயன் படுத்தலாம். என்ன இது. இணையத்திற்குள் நுழைய கால்குலேட்டரா. இது என்ன புதுக் கதையா இருக்குது என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. Start >> All Programs >> Accessories >> Calculator எனும் இடத்தில் அந்தக் கணக்கி கிடைக்கும். அதில் மேலே வலது பக்கம் இருக்கும் Help >> Help Topics என்பதைச் சொடுக்குங்கள்.

திரையின் ஆக மேலே ஒரு கேள்விக் குறி இருக்கும். அதை வலது சொடுக்கு செய்யுங்கள். Jump to URL... என்பதைச் சொடுக்கியதும் ஒரு வசனப் பெட்டி வரும். அதில் http://ksmuthukrishnan.blospot.com என்று தட்டச்சு செய்யுங்கள். அல்லது உங்களுப் பிடித்தமான வேறு ஓர் இணையப் பக்க முகவரியைத் தட்டச்சு செய்யலாம். 'பளிச்' என்று வலைப் பக்கம் வரும். இப்படியும் முடியுமா என்று  நீங்களே மலைத்துப் போவீர்கள்.  முயற்சி செய்து பாருங்கள்.

கவிச் சூரியா kavisuriyasarvu@gmail.com

கே: ஆங்கிலம்-தமிழ் அகராதி மிகவும் அவசரமாகத் தேவைப் படுகிறது. இணையத்தில் எங்கே கிடைக்கும்?

ப:
பல ஆங்கில-தமிழ் அகர வரிசைகள் இணையத்தில் இருக்கின்றன. ஆனால், நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த ஒன்று இருக்கிறது. தமிழ் நாட்டைச் சேர்ந்த பழனியப்பா சகோதரர்கள் உலகத் தமிழர்களுக்கு இலவசமாகக் கொடுத்து இருக்கிறார்கள். அதன் பெயர் 'பால்ஸ் தமிழ் இ-அகராதி.
http://mayuonline.com/eblog/2009/02/14/download-free-pals-tamil-e-dictionary/எனும் இடத்தில் கிடைக்கிறது. பதிவிறக்கம் செய்யுங்கள். பிரச்னை என்றால் எனக்கு அழையுங்கள். என்னுடைய வலைத் தளத்திற்குப் போனால் சிரமம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம்.


மேகநாதன் தனசாமி, கம்போங் கெப்பாயாங், பேராக்

கே: திருப்பதி கோயிலுக்கு போகலாம் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் எனக்கு அடுத்த வருஷம் பிப்ரவரி மாதம் கல்யாணம். மொட்டைப் போட்டு வந்தால் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று என்னவள் பிடிவாதம் பிடிக்கிறார். தயவு செய்து இணையத்தில் போய் திருப்பதியின் உன்னதமானச் சிறப்புகளைப் பார்த்துச் சொல்லுங்கள். என்னவள் மனதை மாற்றுங்கள். திருப்பதி ஆண்டவரின் திருப் பிரசாதம் உங்களை வந்து சேரும்.

ப:
நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் என்பது காலம் காலமாக கரை ஏறி வந்த காவியத் தத்துவம். சொல் பலம் சூடு பலம் என்று ஒன்றைச் சொல்வார்கள். அதில் சொல் என்பது தமிழ்ச் சொல். சூடு என்பது கன்னடச் சொல். இந்த இரண்டும் கலந்தது தான் திருப்பதி என்கிற திருவேங்கடச் சாமியாரின் சன்மார்க்கச் சொல். அவரை நினைத்துப் போங்கள். மொட்டை போடுங்கள். நல்ல படியாக வாருங்கள். எல்லாம் நல்ல படியாக நடக்கும்.

நீங்கள் மொட்டை போடுவது பத்தாவது மாதம். கல்யாணம் பிப்ரவரி மாதம். இடையே ஐந்து மாதங்கள். அந்த ஐந்து மாதத்தில் சகாரா பாலைவனமாக இருந்த உங்களின் தலைக் கவசம்  அமேசான் காடாக மாறி இருக்கும். முடிந்தால் அதில் அனாகோண்டா மனாகோண்டா வேட்டை கூட ஆடலாம்.

இணையத்தில் திருப்பதி சாமியாரைப் பற்றி தேடிப் போனேன். இலட்சக் கணக்கான தகவல்கள். அதைப் பார்த்த பிறகு நானும் மொட்டை போட்டுக் கொள்ளலாம் என்ற ஆசையும் வந்து விட்டது. பின் குறிப்பு: நீங்கள் சொல்கிற அதே அக்டோபர் மாதம் நானும் என்னவர்களும் பெங்களூர் போகிறோம். முடிந்தால் அங்கே சந்தித்துக் கொள்வோம்.


தரணி பாகன்,   dharani.pagan@gmail.com

கே: விண்டோஸ் விஸ்த்தாவிற்கும் விண்டோஸ் 7க்கும் உள்ள நிறை குறைகள் என்ன? ஏன் எல்லோரும் விண்டோஸ் விஸ்த்தா வேண்டாம் என்று விண்டோஸ் எக்ஸ்.பிக்கு போகிறார்கள். விண்டோஸ் 7 நன்றாக வேலை செய்ய வில்லையா? இந்த இரண்டில் எது உங்களுக்குப் பிடித்தது?

ப:
விண்டோஸ் விஸ்த்தா என்பது ஒரு நல்ல திட்டம். அதில் ஒரு சின்ன குளறுபடி நடந்து விட்டது. விஸ்த்தாவின் பழைய பெயர் லோங் ஹார்ன். Longhorn.

மைக்ராசாப்ட் நிறுவனத்தில் வேலை செய்த இந்தியர்கள் தான் விண்டோஸ் விஸ்த்தாவை உருவாக்கினார்கள். அதற்கு விஸ்த்தாரா  என்றும் பெயரும்  வைத்தார்கள். அந்தப் பெயர் நன்றாக இல்லை. விண்டோஸ் விஸ்த்தா என்று வைத்தால் நன்றாக இருக்கும் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். அவர்தான் ஜெனிபர் காதரின் கேட்ஸ். இவர் வேறு யாரும் இல்லை. பில் கேட்ஸ’டம் பாசமிகு மகள்.

மக்கள் குரலே மகேசன் குரல் என்பார்கள். ஆனால், பில் கேட்ஸ் அதை மகள் குரலே மகேசன் குரல் என்று மாற்றம் செய்து இருக்கிறார். எல்லாம் அந்த 'ரா' என்கிற ஒரே ஓர் எழுத்து பண்ணிய வேலை.

இந்தக் கட்டத்தில் ஏதோ கொஞ்சம் கெடுபிடி நடந்து இருக்கிறது. அதில் ஓர் ஆயிரம் பேர் இந்தியாவிற்குத் திரும்பி வந்து விட்டார்கள்.

அவர்களில் சிலர் இந்தியாவில் இருந்து கொண்டே கரையான் மாதிரி விஸ்த்தாவின் இயங்கு முறையைக் கடித்துக் கடித்துக் கரைத்தும் இருக்கிறார்கள். வேறு வழி இல்லாமல் அவசரம் அவசரமாக விண்டோஸ் 7ஐ உருவாக்கினார்கள். இது தான் நடந்தது. மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு 375 கோடி டாலர்கள் நட்டம். நம்ப காசிற்கு பத்து பில்லியன் ரிங்கிட். மைக்ராசப்ட் நிறுவனத்தில் வேலை செய்த இந்தியர்களிடம் இருந்து கசிந்த உண்மைகள்.

என்றைக்கும் இந்தியர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் பில் கேட்ஸ் அடிக்கடி இப்போது இந்தியாவிற்கு வருகிறார் போகிறார்.  சந்தனம் குங்குமம் எல்லாம் வைத்துக் கொள்கிறார்.

அடுத்து 2012 ஆண்டு வாக்கில் விண்டோஸ் 8 விற்பனைக்கு வருகிறது. விண்டோஸ்களில் எனக்குப் பிடித்தது விண்டோஸ் எக்ஸ்.பி. இதைத் தான் இன்னமும் பயன் படுத்தி வருகிறேன்.

திருவாளர் எஸ்.கே, தாப்பா, பேராக்

கே: ஒரு சில தினங்களுக்கு முன்னால் என் கணினியில் கோளாறு ஏற்பட்டு விட்டது. நான் அழைத்துப் பேசிக் கொண்டு இருக்கும் போது உங்களுடைய கைப்பேசியைத் திடீரென அடைத்து விட்டீர்கள். அப்புறம் நீங்கள் அழைத்து 'பேட்டரி' முடிந்து விட்டது என்று சொன்னீர்கள். ஆனால் பேட்டரி முடிந்து விட்டதாகச் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கைப்பேசியின் மாடலைச் சொல்லுங்கள். ஒரு பேட்டரி வாங்கி அனுப்பி வைக்கிறேன். சேவை செய்தால் சுத்தமாகச் செய்ய வேண்டும். சோமாங்கித் தனமாகச் செய்து பேர் வாங்கிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ப:
நன்றி. குறைகளைச் சுட்டிக் காட்டும் போது அவற்றை ஏற்றுக் கொள்கிற பக்குவம் நமக்கு வேண்டும். பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால் கால் என்று நினைத்தால் ரொம்ப கஷ்டம்.

சில சமயங்களில் நம்முடைய நல்ல எண்ணங்கள் மற்றவர் பார்வையில் இருந்து மறைந்து நிற்கலாம். ஓட்டப் பந்தயத்தில் கால்கள் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் கடைசியில் கைகள் தான் பரிசுகளைப் போய் வாங்கிக் கொள்கின்றன.


ஜோசியர், ஸ்ரீ கோம்பாக், கோலாலம்பூர்

கே: என் கணினியில் விண்டோஸ் 7 Starter Edition எனும் விண்டோஸ் இயங்கு தளத்தைப் பயன் படுத்துகிறேன். அதில் ஸ்ரீ ஜாதகா நிரலியைப் பதிப்பு செய்தேன். Runtime Error என்று அறிவிப்பு வருகிறது. பதிப்பு செய்ய முடியவில்லை. அதே போல கோயம்புத்தூரில் இருந்து RM3120 ரிங்கிட் கொடுத்து வாங்கி வந்த ஜாதக நிரலியும் வேலை செய்யவில்லை. முன்பு விண்டோஸ் XP யைப் பயன் படுத்திய போது எல்லாமே நன்றாக வேலை செய்தது. ஏன் இந்தப் பிரச்னை. எப்படி தீர்ப்பது?

ப:
ஒன்றை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன் படுத்துவது விண்டோஸ் 7 Starter பதிப்பு. இதில் விண்டோஸ் இயங்குவதற்கான மிக மிக அடிப்படையான வசதிகள் மட்டுமே இருக்கும். விலை RM100 ரிங்கிட்டுக்குள் இருக்கும். இதைத் தான் பெரும் பாலான கடைகளில் பதித்துக் கொடுப்பார்கள். ஏன் என்றால் அதன் விலை மிகவும் குறைவு.

இதற்கு அடுத்து Windows 7 Basic. அடுத்து Windows 7 Home. அடுத்து Windows 7 Professional. அதற்கு அடுத்து Enterprise. அடுத்து Corporate. அப்புறம் கடைசியாக Ultimate. கடைசியாகச் சொன்னேனே விண்டோஸ் 'அல்டிமேட்'. இதன் விலை RM1500 வரை இருக்கும். அதாவது ஒரு மேசைக் கணினியின் விலையை விட இந்த மென்பொருளின் விலை அதிகம். சரியா.

ஆக, அந்த Starter பதிப்பை வைத்துக் கொண்டு அதில் நீங்கள் பல முக்கியமான நிரலிகளைப் பதிப்பு செய்ய முடியாது. கிண்டர்கார்டன் படிக்கும் பாலகனிடம் போய் யுனிவர்சிட்டி புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொன்னால் எப்படி. அந்த மாதிரிதான் சாதாரண Starter Editionல் பெரிய பெரிய நிரலிகளைப் பதிக்க முடியாது. குறைந்த பட்சம்  Windows 7 Homeக்குப் போய் விடுவது நல்லது.

ஆக, இந்த Starter Edition வைத்துக் கொண்டு நானும் விண்டோஸ் 7 பாவிக்கிறேன் என்று சொல்லலாம். அதனால் உங்களுக்குத் தான் பின்னாளில் கஷ்டம். உங்களின் கணினியும் மீது குறையை வைத்துக் கொண்டு நிரலிகளின் மீது பழியைப் போடாதீர்கள். இந்தப் பிரச்னையைத் தீர்க்க என்ன வழி முறைகள் என்பதைப் பிறகு சொல்கிறேன்.


மாதவன் முத்துக்குட்டி madhu57m@gmail.com

கே: இணையத்தின் வேகத்தை அதிகரிக்க ஏதாவது வழி முறை இருக்கிறதா? என் கணினி மெதுவாக வேலை செய்கிறது?

ப:
கணினியை ஒரு கோயிலாக நினைத்து நடத்த வேண்டும். அதுவும் நம் மேல் ஆசைப் பட்டு நமக்கு தீர்த்தம் திருப் பிரசாதம் எல்லாம் கொடுக்கும். நல்ல படியாகப் பார்த்துக் கொள்ளும். அதில் குப்பைக் கூளங்களைப் போட்டு நிரப்பி வைத்தால் கூவத்தின் நறுமண அலைகள்தான் முட்டி மோதும். கணினியின் உள்ளே இருக்கும் Duplicate Dll கோப்புகளை நீக்கி விட்டால் நம்முடைய கணினி வேகமாக வேலை செய்யும். PC Cleaner எனும் ஒரு நிரலி இருக்கிறது. அதை உங்கள் கணினியில் பதித்துக் கொள்ளுங்கள்.
http://www.softpedia.com/progDownload/Pc-Cleaner-Download-2024.html

2 comments:

  1. கணினி பற்றி கேள்வி தொகுப்பு கண்டேன். நல்ல இடுகை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. எனக்கு மிகும் பயனாக உள்ளது இந்த
    கேள்வி பதில் பக்கம் . உங்கள் சேவை எங்கள் தேவை
    மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete