11 August 2010

கணினியும் நீங்களும் - பகுதி 67 (08.08.2010)

(மலேசிய நண்பன் 08-08-2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம். மற்றவை Archive எனும் பகுதியில் கிடைக்கும்.)

ஜீவா கலியபெருமாள் jeevaria@yahoo.com
கே: என்னுடைய கணினியில் USB எனும் விரலியைப் போட்டு Format செய்ய இயலவில்லை. அப்படியே முயற்சி செய்தாலும் Windows can not format this drive எனும் அறிவிப்பு வருகிறது. என்ன செய்வது?

ப:
Format என்றால் ஒரு புதிய நிலைக்கு கொண்டு வரும் நிலைமை. ஒரு துளி அழுக்கு அசடு இல்லாமல் சுத்தம் செய்வதைத் தான் Format என்கிறோம். தமிழில் சுத்திகரிப்பு என்கிறோம். கணினிக்குள் இருக்கும் வன் தட்டின் ஆவணங்களை முற்றிலுமாக துடைத்து அழிப்பதைத் தான் சுத்திகரிப்பு  என்று சொல்கிறார்கள். அதைப் போல விரலியின் ஆவணங்களைத் துடைத்து அழிப்பதையும்  சுத்திகரிப்பு  என்று சொல்லலாம்.

இந்த மாதிரி சுத்திகரிப்பு செய்வதால் அந்தச் சாதனம் பின்னர் வேகமாக வேலை செய்யும். அதனுள் இருக்கும் நச்சு அழிவிகளும் அழிக்கப் படும். அந்தச் சாதனத்தின் இயக்கம் மிக மிக அருமையாக புதுமையாக இருக்கும். சரியா.

உங்கள் விரலி பிரச்னைக்கு வருகிறேன். கணினியின் முகப்புத் திரையில் My Computer எனும் சின்னம் இருக்கும். அதை வலது சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage என்பதைச் சொடுக்குங்கள். Disk Management எனும் ஒரு பிரிவு இருக்கும். அதைச் சொடுக்கி விடுங்கள். ஒரு பட்டியல் வரும். அந்தப் பட்டியலில் உங்களுடைய விரலி இருக்கும். அதில் வலது சொடுக்கு செய்து Format செய்து விடுங்கள். உங்கள் பிரச்னை தீர்ந்தது.

செல்வராஜ் குழந்தையன்
கே: உலகத்திலேயே மிகவும் புகழ் பெற்ற Facebook எனும் சமூக வலைத் தளத்தை 19 வயது இளைஞர் உருவாக்கினார் என்று சொல்கிறார்களே உண்மையா? அந்தத் தளத்தை முகநூல் என்று அழைக்கலாமா?

ப:
'பேஸ் புக்'கை முகநூல் என்று அழைப்பதில் தவறு இல்லையே. நல்லத் தமிழ்ச் சொல் தானே. அந்தச் சொல்லை உருவாக்கியவர்கள் மலேசிய வானொலி மின்னல் எப்.எம் அறிவிப்பாளர்கள். அவர்களுக்கு முதலில் நன்றி சொல்வோம். 'பேஸ் புக்' சமூகத் தொடர்பு தளத்தை உருவாக்கியவர் Mark Zuckerberg எனும் இளைஞர். அமெரிக்காவில் ஹாவார்ட் பல்கலைக்கழகம் இருக்கிறது.

அதில் மார்க் சுக்கர்பெர்க் படித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு வயது 19. அந்தப் பல்கலைக்கழகத்தில் தான் இந்த முகநூலை முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு அதன் பயன்பாடுகள் மற்ற மற்ற பல்கலைக்கழகங்களிலும் அறிமுகம் செய்யப் பட்டது. மேலும் பரவலாக்கப் பட்டு உலக அளவில் பயன் படுத்தப் படுகிறது. உலகம் முழுமையும் 350 மில்லியன் பயனர்கள் முகநூலைப் பயன்படுத்துகின்றார்கள். ஒவ்வொரு மாதமும் 2500 மில்லியன் படங்கள் பதிவேற்றம் செய்யப் படுகின்றன.

(கணினியின் மூலமாக ராசி பலன், பிறப்பு ஜாதகம் பார்க்க விரும்புகிறவர்கள் தங்களுடைய முழுப் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகிய விவரங்களைத் தெரியப் படுத்தவும். கைப்பேசி எண்:0125838171. அல்லது ksmuthukrishnan@gmail.com. மின்னஞ்சல் மூலமாக ஜாதகம் அனுப்பி வைக்கப் படும். சேவைக் கட்டணம் 30 ரிங்கிட். வெளிநாட்டுத் தமிழர்களுக்கு இலவசம்.)

அருள்தாஸ் லோசன்பிரபு
கே: சார், 'ஜன கன மன' என்பது இந்திய தேசிய கீதம். ஆனால், 'வந்தே மாதரம்' தான் இந்திய தேசிய கீதம் என்று என் நண்பர் சொல்கிறார். எனக்கு குழப்பமாக இருக்கிறது. தயவு செய்து இணையத்தில் போய் உண்மையைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.

ப:
ஜன கன மன என்பதுதான் இந்திய தேசிய கீதம். 1912 ஆம் ஆண்டு பாரத் வித்தா எனும் நாளிதழில் அறிஞர் ராபிந்திரநாத் தாகூர் ஒரு கவிதை வரைந்தார். அதன் பெயர் Morning Song of India. அந்தக் கவிதைதான் இந்த ஜன கன மன. 52 விநாடிகளுக்கு ஒலிக்கும் கீதம்.

ஆனால், வந்தே மாதரம் என்பது தேசிய பாடல். இந்தக் கட்டத்தில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தேசிய கீதம் என்பது வேறு. தேசிய பாடல் என்பது வேறு. சந்திர சட்டர்ஜி என்பவர் ஆனந்த மாதா எனும் நாவலை எழுதினார். அந்த நாவலில் இந்த வந்தே மாதரம் பாடல் வருகிறது. அந்தப் பாடலை தேசியப் பாடலாக உருவகம் கொடுத்து விட்டார்கள். 1896 ஆம் ஆண்டில் இருந்து வந்தே மாதரம் இந்தியாவின் தேசியப் பாடலாக விளங்கி வருகிறது.


சுந்தரம் எம்  
கே: 3G கைப்பேசி என்கிறார்களே அப்படி என்றால் என்ன?
ப: 
3G என்றால் 3 Generation. 3G கைப்பேசி என்றால் மூன்றாம் தலைமுறைக் கைப்பேசி. கணினியின் வளர்ச்சி பல்வேறு தலைமுறைகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. அதைப் போல கைப்பேசிகளுக்கும் பல தலைமுறைகள் உள்ளன. இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் 1G கைப்பேசிகள் வெளிவந்தன. இவை Analog குறிகளைப் பயன்படுத்திச் செயல் படும் கைப்பேசிகள். Analog என்றால் வெறும் எழுத்து கள், எண்களைப் பயன் படுத்தும் முறை. படங்கள் எதையும் பார்க்க முடியாது. 1991ல் டிஜிட்டல் முறையில் கைப்பேசிகள் வெளிவரத் தொடங்கின.

இந்த டிஜிட்டல் முறைதான் 2G தலைமுறை. டிஜிட்டல் என்றால் மிக மிகத் துல்லிதமாக எழுத்துக் குறிகள், படங்களை அனுப்பும் முறை. ஆவணங்களைச் சேர்த்து வைக்கும் மறுமலர்ச்சி இந்த முறையில் ஏற்பட்டது. இப்போது 3G கைப்பேசிகள் வந்துவிட்டன. மூன்றாம் தலைமுறைக் கைப்பேசிகள்.

இந்த வகை கைப்பேசிகளில் மின்னஞ்சல், இணையம், காணொளிகள், பாடல்கள் என்று பல வகையான வசதிகள் உள்ளன. அகன்ற அலை வரிசை இணைய வசதிகளும் 3G கைப்பேசிகளில் இருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள ஒருவரின் முகத்தைக் கைப்பேசியில் பார்த்தவாறு இங்கே மலேசியாவில் உள்ளவர் பேச முடியும். அதே மாதிரி அங்கே உள்ளவர் உங்கள் முகத்தையும் பார்க்க முடியும்.

அண்மையில் அமெரிக்க விஞ்ஞானிகள் சந்திரனுக்குப் போனார்கள். அங்கே இருந்து இந்த 3G கைப்பேசியைப் பயன் படுத்தி பூமியில் உள்ளவர்களிடம் பேசி இருக்கிறர்கள். பெரிய சாதனைதானே.

அடுத்ததாக 4G கைப்பேசிகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் வெளி வரலாம். 4G கைப்பேசிகளைப் பயன்படுத்தி அலுவலகத்தில் இருந்து வீட்டில் நடப்பதை ரகசியமாகப் பார்க்க முடியும். கைப்பேசியில் கட்டளை போட்டு காரின் கதவைத் திறக்க முடியும். உடம்பின் சின்னச் சின்னப் பாகங்களை எக்ஸ்ரே எடுக்க முடியும்.

மனைவி வீட்டு வேலைகளை ஒழுங்காகப் பார்க்கிறாளா. சீரியல்களைப் பார்த்து சீரியஸாகிப் போகிறாளா. அதை வைத்துக் கொண்டு நிறைய குற்றப் பத்திரிகைகளைத் தயாரிக்க முடியும். எதற்கும் பெண்களே கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். உலகம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. விரட்டிப் பிடியுங்கள்.


குமாரி தட்சாயினி, அசகான், மலாக்கா
கே: E-currency என்றால் என்ன? எப்படி பதிந்து கொள்வது?
ப: 
Electronic currency என்பதைத் தான் இ-கரன்சி என்கிறோம். தமிழில் மின் நாணயம் என்று சொல்லலாம். இணையம் மூலமாக பணம் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் இந்த முறை பயன் படுகிறது. இதில் Alertpay என்பது ஒரு வகை. மற்றொன்று Paypal முறை. இன்னும் சில வகைகள் உள்ளன. அவை இன்னும் பிரபலம் ஆகவில்லை. ஒரு மின் நாணயக் கணக்கு திறப்பதற்கு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் இருக்க வேண்டும். நீங்கள் 18 வயதுக்கும் மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். https://www.paypal.com/ எனும் முகவரிக்குச் சென்று பதிந்து கொள்ளுங்கள். சுலபமாகப் பதிந்து கொள்ள முடியும்.


முருகன் குப்புசாமி
கே: திருடு போன கைப்பேசியைக் கண்டுபிடிக்க வழி இருக்கிறதா?
ப:
வழி இருக்கிறது. ஆனால், நோக்கியா கைப்பேசிகளில் மட்டுமே செயல் படும். கீழே கொடுக்கப் பட்டு இருக்கும் இணையத் தளத்திற்குப் போய் ஒரு நிரலியைப் பதிவி இறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://www.ziddu.com/download/5424188/Nokia_Antitheft.zip.html
பின்னர் உங்கள் கைப் பேசியில் பதிப்பு செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்கள் நோக்கியா கைப்பேசி திருடு போனதாக வைத்துக் கொள்வோம்.

திருடியவர் என்ன செய்வார். கைப்பேசியை முதலில் அடைத்து விடுவார். பின்னர் அவருடைய 'சிம்' அட்டையை உங்கள் கைப்பேசிக்குள் போட்டு சந்தோஷப் படுவார். இனிமேல் யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு திருடி வந்த கைப்பேசியை முடுக்கி விடுவார். கைப்பேசியைத் தொடக்கியதும் 'இந்தக் கைப்பேசி உங்களுக்குச் சொந்தமானது இல்லை. தயவு செய்து அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கவும்' என்று அறிவிப்பு வரும். அப்புறம் சும்மா இருக்காது. சத்தம் போடும். 'பீப் பீப்' என்று எரிச்சலான சத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். உங்களுக்கும் ஒரு செய்தி அனுப்பும். பெரிய தலைவலியைக் கொடுக்கும்.

4 comments:

  1. த‌மிழில் ப‌ல‌ ந‌ல்ல‌ விள‌க்க‌ங்க‌ள். ந‌ன்றி.

    ReplyDelete
  2. த‌மிழில் ப‌ல‌ ந‌ல்ல‌ விள‌க்க‌ங்க‌ள். ந‌ன்றி.

    ReplyDelete
  3. மிகவும் நல்லது உங்கள் ப்ளாக்.

    ReplyDelete