21 ஆகஸ்ட் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 69 (22.08.2010)



(மலேசிய நண்பன் 22-08-2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம். மற்றவை Archive எனும் பகுதியில் கிடைக்கும்.)


மணிவண்ணன், லூயி தீமோர், கெமாயாங்
கே: தமிழ்மொழிக்கு எழுத்துச் சீர்த்திருத்தம் தேவை என்று சிலர் கட்சி கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். உண்மையிலேயே நமக்கு இப்போது எழுத்துச் சீர்த்திருத்தம் அவசியம் தானா?

ப:
இளமை காலாவதியாகிறது. பணி ஓய்வு பெறும் காலம் வருகிறது. அந்த மாதிரியான சமயங்களில் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சியைப் பார்த்து வாழ்க்கையை ரசிக்க வேண்டும். அதை விட்டு விட்டு இருக்கிற தமிழைத் திருத்துகிறேன் என்று கிளம்பினால் மன உளைச்சல் தான் மிஞ்சும்.

இருக்கிற மனைவி அழகாகத்தானே இருக்கிறாள். இன்னும் அழகாய் ஆக்கிக் காட்டுகிறேன் என்று கிறுக்குப் பிடித்து அலையக் கூடாது. அழகாக இருந்தவளை அசிங்கமாக்கிய  பாவத்தைச் சுமக்கக் கூடாது.

கணினியின் நிரல் ஆக்கத்திற்கு CPU எனும் மத்தியச் செயலகத்தின் வேகம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு Parsing எனும் கணினிக்கு உள்ளே இருக்கும் பகுத்தறித் தன்மை கூடுதலாக இருக்க வேண்டும். இது கணினி அறிஞர்களுக்குத் தெரிந்த விஷயம். இந்த Parsing கணினிப் பகுத்தறித் தன்மையைக் கூடுதலாக்க வேண்டும் என்றால் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் தேவை என்கிறார்கள் ஒரு தரப்பினர். என்னய்யா இது. அநியாயமாக இருக்கிறது. இப்போது வரும் Dual Core கணினிகள் இந்த Parsing தன்மைகளை எல்லாம் தாண்டி எங்கேயோ போய் விட்டன.

இவர்கள் என்னடா என்றால் இன்னும் பழைய குண்டு சட்டிக்குள் கும்பிப் போன குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். (குதிர்+ஐ). எங்கேயாவது காமா சோமா இருப்பான். அங்கே போய் காது வலிக்கிற மாதிரி பூ சுற்றுங்கள். இருக்கின்ற தாய்மொழியைக் கட்டாயம் ஆக்க துப்பு இல்லை. சீர்திருத்தம் செய்து கிழிக்கப் போகிறார்களாம்.


இப்போது இருக்கும் தமிழ் எழுத்துருகளை மாற்றினால் அச்சுத்துறையில் பெரிய பெரிய மாறுதல்கள் செய்ய வேண்டி வரும். உலகத்தில் உள்ள எல்லா தமிழ்ப் புத்தகங்களையும் மாற்றியாக வேண்டும். உலகத்தில் இருக்கிற எல்லா தமிழ் நிரலிகளையும் மாற்றியாக வேண்டும்.

உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களின் கணினிகளையும், ஏதாவது ஒரு வகையில் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும்.இப்போது தமிழில் இலவசமாக நிரலிகள் கொடுப்பவர்கள் கூட காசு கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அது மட்டுமா. சின்னச் சின்னப் பதிப்பகங்கள் எல்லாம் அடிபட்டு போகும். தமிழில் Unicode எனும் ஒருங்குறி இருக்கிறதே. அப்புறம் ஏன் அய்யா தமிழ்ச் சீர்த்திருத்தம்.

பேரும் புகழும் கிடைக்க ஆசைப் படலாம். ஆனால், உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த வேதனையில் அந்த ஆசை வரக்கூடாது. திசை மாறி வீசும் காற்றில் குளிர்காய்ந்து, ஆனந்த பைரவிக்கு காம்போதியில் சுதி தேடுவதில் அர்த்தமே இல்லை. தமிழ் மொழி சீர்திருத்தம் செய்யப்பட்ட  செம்மொழி. அதைச் செத்துப் போன மொழியாக ஆக்கவேண்டாம். அந்தப் பாவத்தை ஏழேழு ஜென்மத்திற்கும் சுமக்க வேண்டாம்.

ம்அல்எ‘‘ச்இய்அ  ந் அண்ப்அன் - இது என்ன எழுத்து என்று புரிகிறதா? எழுத்துச் சீர்த்திருத்தம் வந்தால் மலேசிய நண்பன் என்பதை இப்படியும் எழுதச் சொல்லுவார்கள். ஆக, இப்பொழுதே எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

பெயர் வேண்டாம், ஜொகூர் பாரு (குறும் செய்தி)
கே: சார், இது மிகவும் அவசரமான தேவை. என் நண்பன் தன்னுடைய மின்னஞ்சலின் கடவுச் சொல்லை மறந்து விட்டான். மின்னஞ்சலை எப்படியாவது திறக்க வேண்டும். அதில் முக்கியமான விஷயம் இருக்கிறது. அவனுடைய மின்னஞ்சல் இது தான் subashini_xxxxx@gmail.com. உடனடியாகக் கடவுச் சொல்லைக் கண்டுபிடித்து எனக்கு அனுப்பி வையுங்கள். நான் அவனிடம் கொடுத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள். ரொம்ப அவசரம் சார்.


ப: மின்னஞ்சல் கடவுச் சொல்லை மீட்கச் சொல்லிக் கேட்டவர்களிடம் இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைத்து இருக்கிறது. உங்கள் பெயரை வெளியிட வில்லை. நான் ஒன்று கேட்கிறேன். தப்பாக நினைக்க வேண்டாம். அடுத்த வீட்டுக்காரனுக்கு வயிற்றுவலி என்றால் பக்கத்து வீட்டுக்காரனுக்கு அப்படி  என்ன அய்யா அவசரம். தேனும் பாலும் கலந்து தெருவெல்லாம் ஓடுகிறது. சொல்லுங்கள்.

அதில் அவன் இவன் என்று ஏக வசனம் வேறு. ஆனால், மின்னஞ்சல் முகவரி யாரோ ஒரு பெண்ணின் பெயரில் இருக்கிறது. ஒன்று மட்டும் உண்மை. யாரோ ஒரு பெண்ணின் கடவுச் சொல்லைக் கேட்கிறீர்கள் என்பது மட்டும் நன்றாகத் தெரிகின்றது. உங்க மாதிரி எத்தனை பேரை நான் பார்த்து இருப்பேன். தேவையா? அடுத்து வரும் பதிலையும் படியுங்கள்.

திருமதி. கல்பனா, மலாக்கா
கே: என்னுடைய மின்னஞ்சல்களை என் கணவர் எனக்குத் தெரியாமல் படிக்கிறார் என்று நினைக்கிறேன். என் அலுவலக ஊழியர்கள் அலுவல் சம்பந்தமாக எனக்கு மின்னஞ்சல்கள் அனுப்புவார்கள். மறைமுகமாகப் பட்டும் படாமலும் அடிக்கடி குத்தலாக குதர்க்கமாகப் பேசுவார். அவர் பேச்சில் இருந்து சந்தேகம் வருகிறது. அந்தச் சொற்கள் மனதை வேதனைப் படுத்துகின்றன. அவரைக் கொஞ்சம் முறைத்துப் பார்த்தால் சாந்தமாகி விடுவார்.


ப: உங்களுடைய நலன் கருதி ஊர் பெயரை மாற்றி இருக்கிறேன். வேலை செய்யும் மனைவியைப் பார்த்து ஆதங்கப் படுவது கணவர்கள் பலரிடம் உள்ள ஒரு ஜனரஞ்சகமான ஒற்றுமை. உங்கள் வீட்டில் மட்டும் இல்லை. உலகம் பூராவும் உலா வரும் ஒரு நவீனமான அரிச்சுவடி. அது ஓர் ஆதங்கமான உணர்வு. அவ்வளவுதான். பெரிது படுத்த வேண்டாம். இந்த இடத்தில் ஆதங்கம் என்பதை வயிற்றெரிச்சல், தாழ்வு மனப்பான்மை என்று கூட சொல்லலாம். உங்கள் பிரச்னைக்கு வருகிறேன்.பட்டும் படாமலும் குதர்க்கமாகப் பேசுகிறார் என்பதற்காக அவர் உங்கள் மின்னஞ்சலைப் படிக்கின்றார் என்று அர்த்தம் ஆகி விடாது.

மனைவியை அளவுக்கு மீறி நேசிப்பதால் சிலருக்கு அந்த மாதிரியான கோளாறுகள் வரலாம். மனைவியின் மீது உள்ள அதீதமான அன்பின் காரணமாகவும் சிலர் அப்படி நடந்து கொள்வதும் உண்டு. அவர் மீது சந்தேகப் படுவதை முதலில் விடுங்கள்.

இனிமேல் உங்கள் மின்னஞ்சலைப் படிப்பதற்கு முன்னால் அவரையும் அழையுங்கள். ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்காரச் சொல்லுங்கள். அஞ்சலை அவருக்கு முன்னால் சத்தம் போட்டு படியுங்கள்.

ஒரு சிலவற்றை அவரே படிக்கட்டும். இந்த மாதிரி ஒரு சில தடவை செய்து பாருங்கள். அப்புறம் அவரே அம்மா தாயே ஆளை விடுமா என்று ஓடி விடுவார்.

இந்த இடத்தில் என்னுடைய தனிப்பட்ட கருத்தைச் சொல்ல வேண்டி இருக்கிறது. அடுத்தவர் மின்னஞ்சலைப் படிப்பது இருக்கிறதே அது ஒரு பெரிய அசிங்கத் தனமான செயல். அதுவும் சொந்த மனைவியின் மின்னஞ்சலைத் திருட்டுத் தனமாய்ப் படிப்பது சில்லறைத் தனமான செயல்.

மனைவி சம்மதம் கொடுத்து இருந்தாலும் அவளுக்கு வரும் கடிதங்களைப் படிக்காமல் இருப்பது ஆண்மைக்கு அழகு. அப்போதுதான் கணவன் மீது மனைவிக்கு உயர்வான மரியாதை உண்டாகும். பயம் கலந்த பக்தியும் உண்டாகும்.

கே.எல்.நாராயணன், பத்து காஜா, பேராக்
கே: நம்முடைய கைப்பேசியில் திருக்குறள், பாரதியார் பாடல்களைப் பதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. எங்கே கிடைக்கும்?

ப:
செந்தமிழ் நாடெனும் போதினிலே என்று பாரதியார் பாடினார். அந்தப் பாரதியார் என்பவர் யார் என்று இப்போதைய இளைஞர்களில் சிலர் கேட்கும் காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அந்த அளவுக்கு உலகத்தில் ஓர் அவசர காலக் கோலம். எல்லாமே அவசரம் அவசரமாக நடக்கிறது. அந்த அவசரத்திலும் சிலர் பாரதியாரை மறக்காமல் அவருடைய பாடல்களைக் கேட்கிறார்கள். அவர்களில் நீங்கள் ஒருவர். வாழ்த்துகள்.


உங்களுடைய கைப்பேசியில் பாரதியார் பாடல்களைப் பதிக்க முடியும். அது மட்டும் அல்ல. அகநானூறு, புறநானூறு, பத்துப் பாட்டு, பதிற்றுப் பத்து என்று நூற்றுக்கணக்கான இலக்கியப் பாடல்கள் ஒரு தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. வாரக் கணக்கில் இணையத்தில் அலசல் செய்த பலன்.

http://www.fublish.com/beta/browse/books/Bharathiyar_Padalkal எனும் இடத்தில் அந்த இலக்கிய நயனங்கள் கிடைக்கின்றன. முதலில் அங்கு போய் உங்கள் கணினிக்குள் அவற்றைப் பதித்துக் கொள்ளுங்கள். பின்னர் கைப்பேசிக்குள் பதிப்பு செய்து கொள்ளலாம்.

பிரச்னை என்றால் அழைத்துப் பேசுங்கள். எல்லாம் சரி. உங்களுடைய பொன் பாவலர் மன்றம் பல அழகான சமூகச் சேவைகள் செய்து வருவதாகக் கேள்வி பட்டோம். தொடரட்டும் மன்றக் குழுவினரின் சேவைகள்.

அகிலன் merrickraja@yahoo.com
கே: Defragment எனும் சுத்திகரிப்புச் செய்வதால் கணினிக்கு என்ன பயன்?
விளக்கம் கொடுக்க முடியுமா?

ப:
கணினிக்குள் ஒரு நிரலியைப் பதிப்பு செய்கிறோம். அல்லது ஓர் ஆவணத்தைச் சேமித்து வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.


கணினியின் வன் தட்டில் அந்த ஆவணங்கள் நிரந்தரமாகப் பதிவு செய்யப் படுகின்றன. வன் தட்டு என்றால் Hard Disk. பதிவு செய்யப் படும் போது அந்த ஆவணங்கள் தொடர்ச்சியாகவும் சீராகவும் பதிவு செய்யப் படுவது இல்லை. ஆவணங்கள் என்றால் Files, Folders அல்லது Documents. பதிப்பு நேரத்தை மிச்சப் படுத்த கணினியும் ஒரு குறுக்கு வழியைக் கடைபிடிக்கிறது. வன் தட்டில் எந்த எந்த இடங்களில் அப்போது காலியான இடம் இருக்கிறதோ அங்கே தகவல்களைக் கொண்டு போய் அவசரம் அவசரமாகப் பதித்து வைக்கிறது.

வேலையைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பது கணினியின் செயல்பாடு. அது கணினிக்குள் உட்செலுத்தப் பட்ட  தாரக மந்திரம்.

பின்னர் நாம் அந்த ஆவணத்தை அல்லது நிரலியைப் பயன் படுத்தக் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். கணினி என்ன செய்கிறது தெரியுமா. அதை எடுத்துக்கொடுக்க, பதிப்பு செய்த இடங்களில் அலைந்து திரிகிறது. தகவல்களை வலை போட்டுத்  தேடுகிறது.

அப்புறம் அவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்க்கிறது.  நம்மிடம் கொண்டு வந்து காட்டுகிறது. நமக்கு என்னவோ பார்க்க ரொம்ப சிம்பிள். பாவம் கணினி, அதற்கு ரொம்ப சிரமம்.

தகவல்களைத் தேட கணினிக்கு  அதிக நேரமும் செலவாகிறது. இந்தப் போராட்டம் உள்ளே நடக்கும் போது கணினி மெதுவாக வேலை செய்வதாக நமக்கு ஒரு பிரமையும் தோன்றுகிறது. முட்டைப் போட்ட வேதனை கோழிக்குத் தெரியும். மூட்டைத் தூக்கிய சோதனை முது குக்குத் தெரியும் என்பார்கள். அந்த மாதிரி அவரவர் அவஸ்தை அவர் அவருக்குத் தானே தெரியும்.

சரி. Defragment எனும் சுத்திகரிப்பு செய்கிறோம். உள்ளே என்ன நடக்கிறது தெரியுமா. உடைந்து போன ஆவணங்கள், நொறுங்கிப் போன செய்திகள், சிதறிப் போன தகவல்கள், சிதைந்து போன படங்கள் எல்லாம் சீராகச் சிறப்பாக அடுக்கப் படுகின்றன. அப்புறம் வேடிக்கையைப் பாருங்களேன்.  தொண்டைத் தண்ணி காயந்து போன தொண்டனுக்கு தயிரும் மோரும் கிடைத்த மாதிரி மின்னல் வேகத்தில் வேலை நடக்கும். சுத்திகரிப்பு செய்வது எப்படி என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. கணினியின் முகப்புத் திரையில் My Computer எனும் சின்னம் இருக்கிறது. தெரியும் தானே. அதை வலது சொடுக்குச் செய்யுங்கள்.

அதில் Manage என்பதைச் சொடுக்கினால் இடது பக்கம் Disk Defragmenter என்பது வரும். அதைச் சொடுக்குங்கள். வன் தட்டின் பிரிவுகள் தெரியும். அவற்றை ஒன்று ஒன்றாகச் சுத்திகரிப்புச் செய்யுங்கள். அவ்வளவுதான். சில சமயங்களில் அதிக நேரம் பிடிக்கலாம்.

வாரத்திற்கு ஒரு முறை சுத்திகரிப்புச் செய்யுங்கள். போதும். காலா காலத்திற்கும் கணினி உங்களைக் கை எடுத்துக் கும்பிடும். 

மா. இளவேணன், சிரம்பான் ஜெயா
கே: நான் ஒரு பள்ளி ஆசிரியர். என் மாணவர்கள் எழுதிய கட்டுரைகளை Audio CD ஆக மாற்ற முடியுமா? அதாவது நாம் எழுதியதை ஒலியாக்கம் செய்ய முடியுமா?

ப:
நல்ல கேள்வி. உங்கள் கேள்விக்குப் பதில் முடியும். மாணவர்கள் எழுதியதைப் படித்துக் காட்டும் ஒரு நிரலி இருக்கிறது. இலவசமாகவும் கிடைக்கிறது. அந்த நிரலியை Speaking Notepad என்று சொல்வார்கள். http://www.4shared.com/file/-orY3_K4/Speaking_Notepad_v51.html எனும் இணையத் தளத்திற்குப் போக வேண்டும். அங்கே Muat Turun Sekarang என்பதைச் சொடுக்க வேண்டும். அல்லது http://rapidshare.com/files/285112981/Speaking_Notepad_6.0.rar எனும் இணையத் தளத்தில் கிடைக்கும்.


பதிவிறக்கம் செய்ததும் அதை உங்கள் கணினியில் பதிப்பு எனும் Install செய்யுங்கள். அதன் பின்னர் நீங்கள் தட்டச்சு கட்டுரையின் இடத்தைக் காட்டுங்கள். நிரலியில் Reading என்பதைச் சொடுக்குங்கள். கட்டுரை படிக்கப் படும்.

இதில் 12 குரல்கள் உள்ளன. ஆண்குரல் வேண்டுமா பெண்குரல் வேண்டுமா. எந்தக் குரல் வேண்டுமோ அதைத் தேர்வு செய்யுங்கள். பிறகு அதை எம்.பி.3 வடிவத்திற்கு மாற்றி குறுந்தட்டாகத் தயாரித்துக் கொள்ளலாம். பிரச்னை இருந்தால் 012-5838171 எனும் என்னுடைய கைப்பேசி எண்களுக்கு அழையுங்கள்.

திருமதி. ஜமீலா பகருதீன், செந்தூல் டாலாம், கோலாலம்பூர்
கே: Blackberry எனும் கைப்பேசிகளின் விற்பனையைப் பல நாடுகளில் தடை செய்கிறார்கள். ஏன்? மலேசியாவில் தடை செய்யப் படுமா? நீங்கள் எந்த வகையான கைப்பேசியைப் பயன் படுத்துகிறீர்கள்?

ப:
முன்பு வந்த கைப்பேசிகளில் குறும் செய்திகளை மட்டும் அனுப்ப முடிந்தது. இப்பொழுது வரும் கைப்பேசிகளில் பெரும்பாலானவை 3G கைப்பேசிகள். இந்தக் கைப்பேசிகள் அசுரத் தனமான செயல் ஆற்றல் கொண்டவை. இவற்றில் குறும் செய்திகள், மின்னஞ்சல்கள், இணைய வசதிகள், காணொளி, புகைப்படக் கருவி, வீடியோ கருவி, வங்கியில் இருந்து பணம் எடுக்கும் கொடுக்கும் வசதி, கணினியும் கைப்பேசியும் உறவாடிக் கொள்ளும் வசதி என்று பல வசதிகள் உள்ளன.


இதில் மிக மிக முக்கியமானவை இணைய வசதி, மின்னஞ்சல் அனுப்புவது, மின்படங்கள் அனுப்புவது, வீடியோ படங்களை அனுப்புவது. பொதுவாக மற்ற வகையான கைப்பேசிகளில் அனுப்பும் போது அரசாங்கம் இடை மறித்து அந்தத் தகவல்களைப் படிக்க முடியும். நாட்டின் தற்காப்பு, பாது காப்பு முறைகளுக்கு பாதகமானவற்றைத் தடை செய்ய முடியும். அனுப்பியவர்களைக் கண்டு பிடிக்க முடியும். தண்டிக்கவும் முடியும்.

ஆனால், இப்போது வரும் Blackberry எனும் கைப்பேசிகளில் அனுப்பப் படும் தகவல்களை அரசாங்கத்தால் இடை மறிக்க முடியாது.

அதாவது ஒட்டு கேட்க முடியாது. ஏன் என்றால் இந்தக் கைப்பேசி அனுப்பும் தகவல்கள் Encryption எனும் இரகசிய முறையில் அனுப்பப் படுகிறது. அனுப்புவருக்கும் பெறுவருக்கும் மட்டுமே இரகசியம் தெரியும். மற்ற எவருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை.

ஆனானப் பட்ட அரசாங்கத்தாலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆக, இந்தக் கைப்பேசிகள் பயங்கரவாதிகளின் கைகளுக்குப் போனால் என்ன ஆகும். ஒரு நாட்டின் நிலைமை என்ன ஆகும்.

அதை முன்னிட்டு அந்தக் கைப்பேசிகளில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னார்கள். தயாரிக்கும் RIM எனும் கனடிய நிறுவனம் ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால் தான் தடை செய்கிறார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளில் முதல் தடை வந்து இருக்கிறது. அடுத்து இந்தியாவும் இந்தோனாசியாவும் போர்க் கொடிகளைத் தூக்கி உள்ளன. இனிமேல் தான் முடிவுகள் வரலாம். இந்தக் கைப்பேசிகளுக்கு மலேசியாவில் தடை செய்யப் பட வில்லை. நான் பயன் படுத்துவது நோக்கியா 3G வகை.

ஜெ.தர்மசீலன், சிகாம்புட், கோலாலம்பூர்
கே: கணினியின் சேவை இல்லாமல் எதிர்காலத்தில் மனித இனம் பேர் போட முடியாது என்கிறார்களே. என்ன சார் கதை?

ப:
கதை இல்லை சார், கண்ணுக்கு முன்னால் நடந்து கொண்டு இருக்கிற மாயா ஜாலம். புரிகிறதா. போகிற போக்கைப் பார்த்தால் கணினி மனிதனை அடிமை ஆக்கி விடும் போல தெரிகிறது. இந்த அழகான  குட்டி தெய்வம் இருக்கிறதே இது வந்த பிறகு மனிதன் ரொம்பவும் சோம்பேறி ஆகி விட்டான். உண்மைதாங்க. இப்பவே மனிதனின் வேலைகளில் பாதியைக்  செய்கிறதே. இன்னும் கொஞ்ச நாளில் அதற்கு கல்யாண ஆசை வந்தாலும் வரலாம். யார் கண்டது.


இன்னும் ஒரு விஷயம். கணினி ஜோசியம் பார்க்கிறது அய்யா. ஜோசியம் பார்க்கிறது. அதுவும் நூற்றுக்கு 90 விழுக்காடு சரியாகவும் இருக்கிறது. ஒரு காசோலையை எழுதி வங்கியில் உள்ள ஒரு பெட்டியில் போடுகிறோம். அது என்னடா என்றால் அந்தக் காசோலையைச் சரி பார்த்து பணத்தைக் கொடுத்தும் விடுகிறது. இத்தனைக்கும் மனித வேலை என்று எதுவுமே  அங்கே இல்லை.

4 கருத்துகள்:

  1. Defragment பற்றிய தகவல் அருமை சார்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா25/9/11, PM 7:13

    ungal sevai thodarattum....

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா14/3/12, AM 12:03

    பேசும் நோட்புக் பற்றிய தகவல் அருமை சார்

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா14/3/12, AM 12:05

    பேசும் நோட்புக் பற்றிய தகவல் அருமை சார்

    பதிலளிநீக்கு