06 செப்டம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 71

(இந்தக் கேள்வி பதில் அங்கம் 05.09.2010 மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்தது)

அகிலன் merrickraja@yahoo.com
கே: Defragment எனும் சுத்திகரிப்புச் செய்வதால் கணினிக்கு என்ன பயன்?
விளக்கம் கொடுக்க முடியுமா?

ப:
கணினிக்குள் ஒரு நிரலியைப் பதிப்பு செய்கிறோம். அல்லது ஓர் ஆவணத்தைச் சேமித்து வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். கணினியின் வன் தட்டில் அந்த ஆவணங்கள் நிரந்தரமாகப் பதிவு செய்யப் படுகின்றன.

வன் தட்டு என்றால் Hard Disk. பதிவு செய்யப் படும் போது அந்த ஆவணங்கள் தொடர்ச்சியாகவும் சீராகவும் பதிவு செய்யப் படுவது இல்லை.

ஆவணங்கள் என்றால் Files, Folders அல்லது Documents. பதிப்பு நேரத்தை மிச்சப் படுத்த கணினியும் ஒரு குறுக்கு வழியைக் கடைபிடிக்கிறது.

வன் தட்டில் எந்த எந்த இடங்களில் அப்போது காலியான இடம் இருக்கிறதோ அங்கே தகவல்களைக் கொண்டு போய் அவசரம் அவசரமாகப் பதித்து வைக்கிறது.

வேலையைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பது கணினியின் செயல்பாடு. அது கணினிக்குள் உட்செலுத்தப் பட்ட  தாரக மந்திரம்.

பின்னர் நாம் அந்த ஆவணத்தை அல்லது நிரலியைப் பயன் படுத்தக் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். கணினி என்ன செய்கிறது தெரியுமா.

அதை எடுத்துக்கொடுக்க, பதிப்பு செய்த இடங்களில் அலைந்து திரிகிறது. தகவல்களை வலை போட்டுத்  தேடுகிறது.

அப்புறம் அவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்க்கிறது.  நம்மிடம் கொண்டு வந்து காட்டுகிறது. நமக்கு என்னவோ பார்க்க ரொம்ப சிம்பிள். பாவம் கணினி, அதற்கு ரொம்ப சிரமம்.

தகவல்களைத் தேட கணினிக்கு  அதிக நேரமும் செலவாகிறது. இந்தப் போராட்டம் உள்ளே நடக்கும் போது கணினி மெதுவாக வேலை செய்வதாக நமக்கு ஒரு பிரமையும் தோன்றுகிறது.

முட்டைப் போட்ட வேதனை கோழிக்குத் தெரியும். மூட்டைத் தூக்கிய சோதனை முது குக்குத் தெரியும் என்பார்கள். அந்த மாதிரி அவரவர் அவஸ்தை அவர் அவருக்குத் தானே தெரியும்.

சரி. Defragment எனும் சுத்திகரிப்பு செய்கிறோம். உள்ளே என்ன நடக்கிறது தெரியுமா. உடைந்து போன ஆவணங்கள், நொறுங்கிப் போன செய்திகள், சிதறிப் போன தகவல்கள், சிதைந்து போன படங்கள் எல்லாம் சீராகச் சிறப்பாக அடுக்கப் படுகின்றன.

அப்புறம் வேடிக்கையைப் பாருங்களேன்.  தொண்டைத் தண்ணி காயந்து போன தொண்டனுக்கு தயிரும் மோரும் கிடைத்த மாதிரி மின்னல் வேகத்தில் வேலை நடக்கும். சுத்திகரிப்பு செய்வது எப்படி என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

கணினியின் முகப்புத் திரையில் My Computer எனும் சின்னம் இருக்கிறது. தெரியும் தானே. அதை வலது சொடுக்குச் செய்யுங்கள்.அதில் Manage என்பதைச் சொடுக்கினால் இடது பக்கம் Disk Defragmenter என்பது வரும்.

அதைச் சொடுக்குங்கள். வன் தட்டின் பிரிவுகள் தெரியும். அவற்றை ஒன்று ஒன்றாகச் சுத்திகரிப்புச் செய்யுங்கள். அவ்வளவுதான். சில சமயங்களில் அதிக நேரம் பிடிக்கலாம்.

வாரத்திற்கு ஒரு முறை சுத்திகரிப்புச் செய்யுங்கள். போதும். காலா காலத்திற்கும் கணினி உங்களைக் கை எடுத்துக் கும்பிடும்.

மாரியாயி <maari79@yahoo.com>
கே: சில பேராங்காடிகளில், புகழ் பெற்ற துணிக் கடைகளில் இரகசிய காமிரக்கள் நமக்குத் தெரியாமல் இருக்குமாம். நாம் உடை மாற்றும் போது நம்மைப் படம் பிடித்து வைத்துக் கொள்ளும் என்று கேள்வி பட்டேன். உண்மையா?

ப: எல்லாக் கடைகளிலும் இல்லை. ஆயிரத்தில் இலட்சத்தில் ஒன்று இரண்டு  இருக்கலாம். அதற்காக எல்லாரையும் ஒட்டு மொத்தமாகக் குறை சொல்லக் கூடாது. நம்முடைய இந்தியர்களின் கடைகளில் பெரும்பாலும் நல்ல நாணயமான ஊழியர்கள் பணி புரிகிறார்கள். வக்கிரப் புத்தி படைத்த சில சில்லறைகள் அங்கே இங்கே இருக்கத்தான் செய்கின்றன.

ஆடைகளை மாற்றிப் பார்க்கிறேன் என்று பெண்கள் சிலர் விலை உயர்ந்த உள்ளாடைகளை மாற்றிக் கொள்வது உண்டு. பணம் கட்டாமல் கம்பி நீட்டுவதும் உண்டு. அதைத் தவிர்க்க சில நிறுவனங்கள் இரகசியக் காமிராக்களைப் பொருத்தி வைத்து இருக்கின்றன.

பெண்கள் உடைகள் மாற்றுவதைக் காமிராவில் கவனிக்க வேண்டியது சில பெண் ஊழியர்களின் வேலை. காமிராவில் பதிவானது கணினியிலும் பதிவாகும் அல்லவா.

சரி. கணினியில் பதிவானதை அங்கே வேலை செய்யும் மற்ற ஆண்களும் அவர்களுடைய வசதியைப் போல பார்க்கலாம் இல்லையா. 

நீங்கள் ஆடை மாற்றும் அறைக்குள் நுழைய கதவைத் திறந்ததும் இரகசியக் காமிரா வேலை செய்ய ஆரம்பித்து விடும். நீங்கள் உடை மாற்றுவதை வீடியோ படம் எடுக்கும்.

அதன் பிறகு அந்த வீடியோ படங்கள் இணையத்தில் உலா வரலாம். உலகம் பூராவும் உள்ள கைப்பேசிகளுக்குள் தஞ்சம் போகலாம். அந்தக் கயவன் உங்களையே மிரட்டிப் பிணைப் பணம் கேட்டாலும் கேட்கலாம். சரி.

இரகசியக் காமிரா இருப்பதை கண்டு பிடிக்க ஒரு வழி இருக்கிறது. உடை மாற்றும் அறைக்குள் நுழைந்ததும் உங்கள் கைப்பேசியைக் கொண்டு யாரையாவது சும்மா அழைத்துப் பாருங்கள். அழைக்க முடிந்தால் சரி. அந்த அறையில் இரகசியக் காமிரா இல்லை என்று அர்த்தம்.

அழைக்க முடியா விட்டால் தெரிந்து கொள்ளுங்கள் காமிரா இருக்கிறது என்று. இந்த இரகசியக் காமிராவில் Fiber Optic எனும் ஒலி ஒளி நுண்ணிழைகள் உள்ளன. இவை கைப்பேசியின் ஒலி அலைகளை வெளியே போக விடாமல் தடுத்து விடும்.

நம்முடைய மனைவி, பிள்ளைகள், அக்கா, தங்கை, உற்றார் உறவினர் அனைவரிடமும் இந்த வழியைச் சொல்லிக் கொடுங்கள்.

பெண்மையைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. இந்தக் காமிராக்கள் ரிங்கிட் 320 லிருந்து 1200 வரை சந்தையில் கிடைக்கின்றன.

ரேகா சுப்பிரமணியம், தஞ்சோங் மாலிம், பேராக்
கே: Bluetooth என்பதைக் கண்டுபிடித்தது யார்? அதன் பயன்பாடுகள் என்ன?

ப:
இண்டர்நெட் எனும் இணையம் என்பது ஒரு தொழில்நுட்பம். அதைப் போல Bluetooth என்பதும் ஒரு தொழிநுட்பம் தான். இதை 'எரிக்சன்' நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தது.

சுழலி, தட்டச்சு, அச்சு இயந்திரம், கைப்பேசி, ஒலிப்பெருக்கி, மருத்துவச் சாதனங்கள், வாகனப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள், தொலைபேசிகள் போன்ற சாதனங்களைக் கணினியுடன் தொடர்பு கொள்ளச் செய்யும் தொழில்நுட்பமே Bluetooth.

தொடர்பு கொள்ளுதல் என்றால் கம்பி இல்லாமல் தொடர்புகளை ஏற்படுத்துதல். இந்த புளுடூட் தொழில்நுட்பம் நம்முடைய அன்றாடக் கணினி வாழ்க்கையை மிகவும் எளிமைப் படுத்துகிறது.

குறைந்த மின்சக்தியைப் பயன் படுத்துகின்றது. ஒரே சமயத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியது. நூறு அடி தூரம் வரை செயல் ஆற்றல் கொண்டது.

சென்ற ஆண்டு புளுடூட் 3.0 புதிய வெளியீடு வந்தது. இதன் மூலம் வீட்டில் உள்ள மின்சார விளக்குகள், காற்றாடிகள், குளிர்சாதனங்களை இயக்க முடியும். இதைத் தமிழில் நீலப் பற்கள் என்று சொல்லலாம்.

இருந்தாலும் செலாயாங் வாசகர் சுப்ரீம் சூரியா கோபித்துக் கொள்வார். ஏற்கனவே Facebook என்பதைத் தமிழில் முகநூல் என்று அழைப்பது தவறு என்று குறை பட்டுக் கொண்டார். எதற்கும் அவர் கருத்தை எதிர்பார்ப்போம்.

1 கருத்து: