10 November 2010

கணினியும் நீங்களும் - பகுதி 75
சரவணன் சற்குணன், தம்பின்
கே: கணினி மூலமாக மின்சாரம், தண்நீர், அஸ்ட்ரோ, இண்டா வாட்டர் சேவைக் கட்டணங்களைக் கட்டுவது தேவை இல்லாத தலைவலிகள் என்று சிலர் புலம்புகிறார்கள். உங்கள் கருத்து என்ன?
மலேசியா அஸ்ட்ரோ நிறுவனத்தின் சின்னம். மலேசியக் கோடீஸ்வரர் திரு.அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமான நிறுவனம்

ப: வீட்டில் இருக்கும் மனைவி ஆசை ஆசையாகச் செய்து கொடுக்கும் இட்லி தோசை இருக்கிறதே அது சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பாருங்கள், பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பார்வதி அம்மாள் கடையில் சுட்டுத் தரும் இட்லி தோசை மட்டும் ரொம்பவும் பிடிக்கும். ரொம்பவும் ருசியாக இருக்குமாம். இது எல்லாம் ஒரு நினைப்பு. அந்த நினைப்புதாங்க  பிழைப்பையே கெடுக்கிறது. மனைவியின் அருமை போகப் போகத்தான் தெரியும். அப்படித் தாங்க எல்லாம்.

உலகமே கணினி மயமாக மாறி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் கணினி இல்லை என்றால் மனுக்குலம் இயங்காது எனும் ஒரு நிலைமை ஏற்படப் போகிறது. உண்மையிலும் உண்மை.

அதற்குள் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். அது என்ன கணினி, தேவையில்லாத ஒரு பிரச்னை என்று நீங்கள் நினைத்தால், பின்னர் பிரச்னை உங்களுக்குத்தான்.

ஏனென்றால், கணினி இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்ற நிலை உண்டாகிவிட்டது. அப்போது நீங்கள் நிச்சயம் பின் தள்ளப்படுவீர்கள். அப்புறம் உங்கள் சந்ததியினர் உங்களை மதிப்புக் குறைவுடன் பார்க்கலாம்.

உலகளாவிய ஞான சூன்யமாகப் பார்த்தாலும் பார்க்கலாம். அந்த மாதிரியான நிலைமை வந்து கொண்டு இருக்கிறது. அதற்குள் கணினியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். அறிந்து கொள்ளுங்கள். படித்துக் கொள்ளுங்கள். நான் சொல்வதை நம்புங்கள்.

ஆசிராவரணி, தாமான் இண்டா, தெலுக் இந்தான்
கே: கணினி மனிதனின் அறிவை மிஞ்சி விடுமா?
எதிர்கால மடிக்கணினி

ப: நல்ல கேள்வி. மனிதனைப் போல கணினியால் சிந்திக்க முடியாது. நல்லது கெட்டது சரி பிழை என்று எதுவுமே அதற்கு தெரியாது. தன்னை உருவாக்கியது யார் என்றும் தெரியாது. ஆனால், மனிதன் சொல்லும் கட்டளைகளை நொடிப் பொழுதில் செய்து விடுகிறது. மனிதன் சொன்னால்தான் அது கேட்கும். செய்யும்.

சொன்னதைச் செய்யக்கூடியது. அவ்வளவுதான்! சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அதற்கு இல்லை. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மனிதனின் கட்டளைகளை நிறைவேற்றும் போது மனிதனையே அது மிஞ்சிவிடுகிறது. இருப்பினும் அதன் வேகம் இருக்கிறதே அது மனித மூளையின் வேகத்தையே தாண்டிவிடுகிறது. அபாரமான வேகம்.

அண்மையில் Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தக் விஷயத்தில் கணினி மனிதனைப் போல சிந்தித்துச் செயலாற்றத் தொடங்கி விடும். அப்புறம் என்ன.

கணினிகளுக்கும் மனிதர்களைப் போல ஆசாபாசங்ககள் வந்துவிடும். அடுத்து வீட்டு கணினியை இந்த வீட்டிக் கணினி குறை சொல்லும். இந்த வீட்டுக் கணினி எதிர்வீட்டுக் கணினியை வம்புக்கு இழுக்கும்.

மெகா சீரியல்கள் பார்ப்பதில் கணினிகளுக்குள் வாய்ச்சண்டை வரலாம்.   அடடா... கவலைப்பட வேண்டாம். இதற்கு இன்னும் இருபது ஆண்டுகள் பிடிக்கும். நடக்கப் போகிறது என்னவோ உண்மை. பொறுத்து இருங்கள். வேடிக்கையைப் பார்க்கலாம்!

ஜெயக்குமார் சிவபாலன், பத்தாங் பெர்சுந்தை
கே: கணினியைப் பயன் படுத்திக் கெட்டுப் போனால் அதைப் பழுது பார்க்க நிறைய காசு செலவு ஆகிறது. கணினி கெட்டுப் போகாமல் இருக்க வழி இருக்கிறதா?
கணினியைப் பாதுகாக்க வேண்டும்தான். அதற்காக மருத்துவரைக் கூப்பிட்டு அதன் இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது என்று எல்லாம் சோதனை செய்யவது...

ப: வானொலி, தொலைக்காட்சி, கைத்தொலைப்பேசி, சலவைச் சாதனம், கார் போன்றவை நம் வாழ்க்கையில் அத்தியாவசியச் சாதனங்கள். அவை எப்படி இயங்குகின்றன என்பது பலருக்குத் தெரியாது. இருந்தாலும் அவை நம் வாழ்வில் ஒன்றாய்க் கலந்து விட்டன.

இந்தச் சாதனங்கள் பழுது அடைந்து போனால், பழுது பார்ப்பவரிடம் எடுத்துச் செல் கிறோம். žர் செய்து கொள்கிறோம். அதே போலதான் கணினியும். கணினியைத் தவறாகப் பயன்படுத்திக் கெட்டுப் போனால் பெரிய தொல்லை என்று பலர் தயக்கம் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

கெட்டுப் போன கிட்னியை வெட்டி வீசிவிட்டு வேறு ஒன்றை வைத்துக் கொள்வது நடைமுறைக்கு வந்துவிட்டது இல்லையா. ஆக, வீட்டிலிருக்கும் வளர்ப்புப் பிள்ளையாகக் கணினியை நினைக்க வேண்டும்.

கெட்டுப் போகாத பொருள் எதுதான் இல்லை. சொல்லுங்கள். எல்லாமே  ஒரு நாள் பழுதாகிவிடும். சந்தையில் விற்கும் கண்ட கண்ட பவுடர்களைப் பூசி நம்முடைய உடலை நாம் அழகு பார்க்கவில்லையா.

போற்றிப் போற்றி பார்க்கும் இந்த உடலும் ஒரு நாளைக்குப் பழுதாகி மண்ணுக்குப் போகிறதுதானே.

அதற்கு ஏதாவது ஒன்று வந்துவிட்டால் டாக்டரைப் போய்ப் பார்க்கவில்லையா.  அதைப் போல கணினியும் ஒரு நாள் பழுதாகும். žர் செய்ய வேண்டும். அவ்வளவுதான். அப்படி நினைத்துக் கொண்டு அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்க வேண்டும்.

முதலில் கணினி கெட்டுப் போனால் எனும் அச்சத்தைத் தூக்கி வீச வேண்டும். வந்தது வரட்டும் எனும் நம்பிக்கை வரட்டும். இப்பொழுது வரும் கணினிகள் சுலபத்தில் கெட்டுப் போகாதவை.

உள்ளே தூசி புகுந்தால் தும்மலும் வராது. வெளியே தண்நீர் பட்டால் காய்ச்சலும் வராது. சரியா. கணினிகள் மனிதர்களுக்கு மிகவும் விசுவாசமாகிக் கொண்டு வருகின்றன.

பத்மாவதி, ஆர்.ஆர்.ஐ, சுங்கை பூலோ
கே: கணினியில் 'மூர் விதி' என்று இருக்கிறதாம். அப்படி என்றால் என்ன?
இவர்தான் கணினி வித்துவான் கோர்டன் மூர்

ப: மூர் விதி என்பதை ஆங்கிலத்தில் Moore's Law என்கிறார்கள். Intel கணினி நிறுவனத்தை உருவாக்கியவர்களில் Gordon E. Moore என்பவர் ஒருவர். இவர் 1965 ஆம் ஆண்டில் கணினிகளைப் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தார்.

ஒவ்வோர் பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை கணினியின் ஆற்றல், செயல் பாட்டுத் திறன்  இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதே சமயத்தில் அதன் தயாரிப்பு விலை இரண்டு மடங்காகக் குறையும். இதுதான் அவர் சொன்ன தீர்க்கதரிசனச் சொற்கள்.

இதை மூர்ஸ் கோட்பாடு என்கிறார்கள். கடந்த நாற்பது ஆண்டுகளில் அவர் சொன்னது என்னவோ அது சரியாகவே நடந்து வருகிறது. கணினி உலகில் இப்படி ஓர் அதிசயம் நடக்கும் என்று முன்னறிந்து சொல்லி விட்டார்.

அவர் வியூகம் செய்தது போல கணினியின் ஆற்றல், திறன், சக்தி, வேகம், நம்பிகை எல்லாமே  படுபயங்கரமாகக் கூடிவிட்டது. அதற்கு ஏற்றவாறு அதன் விலையும் அளவுக்கு அதிகமாகக் குறைந்தும் விட்டது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 35 கோடி ரிங்கிட்டிற்கு விலை போன வன்தட்டு இன்று முன்னூறு வெள்ளிக்கு விற்கப் படுகிறது. இது எங்கு போய் முடியுமோ தெரிய வில்லை.

இந்த நிலைமை இன்னும் இருபது ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என்று நிபுணர்கள் ஆருடம் சொல்கிறார்கள். எதற்கும் ஓர் இல்லை இருக்கும் இல்லையா. Infinity எனும் இல்லாமை நிலைமை வர முடியாது.

உங்கள் வீட்டில் இப்பொழுது இருக்கும் கணினியின் விலை ஏறக்குறைய ஆயிரம் ரிங்கிட் இருக்கும் என்று வைத்துக் கொள்வோம். இதே கணினி பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்திருந்தால் அதன் விலை RM8,000 ஆக இருந்திருக்கும்.

இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் விலை ஐம்பது ரிங்கிட்டிற்கும் கீழே குறைந்து போயிருக்கும். போதுமா! அதற்குள் கணினியின் திறமை எங்கேயோ போயிருக்கும். நீங்களும் நானும் கற்பனை செய்து பார்க்க முடியாது.

இப்போதுள்ள கணினிகள் இன்னும் பத்து ஆண்டுகளில் பத்து காசுப் பொருள் ஆகிவிடும். சும்மா கொடுத்தாலும் யாரும் வாங்கிக் கொள்ளக் கூட மாட்டார்கள். அப்படி ஒரு நிலைமை கண்டிப்பாக வரும். நினைவில் வைத்துக் கொள்வோம்.

குமாரி லெட்சுமி வீரராகு, சித்தியவான் (குறும் செய்தி 3.10.2010)
கே: Hard Disk என்பதை வன்தட்டு என்கிறோம். முதன் முதலில் கண்டுபிடிக்கப் பட்ட வன்தட்டுகளைப் பற்றி ஏதாவது தகவல் சொல்லுங்கள்?
வன்  தட்டின் உட்பாகம்

ப: நம் கணினியில் உள்ள வன்தட்டில் தான் செய்திகள் படங்கள் தகவல்கள் எல்லாமே பதிவு செய்யப் படுகின்றன. இங்குதான் கணினியின் Operating System அமர்ந்து கொண்டு கணினியை இயக்குகிறது. 1956ல் தான் வன்தட்டைக் கண்டுபிடித்தார்கள். IBM நிறுவனம் கண்டுபிடித்தது.

அதன் கொள்அளவு 5 MB. இங்கே கொள் அளவு என்றால் Space. வன் தட்டின் பெயர் RAMAC 305. இரண்டு பெரிய குளிர்சாதனப் பெட்டிகளை ஒன்றாகச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்கும். அவ்வளவு பெரியது.  அப்போதைக்கு அது பெரிய விஷயம். அதன் விலை 50,000 அமெரிக்க டாலர்கள்.

இப்போது நாம் 1 Terra Byte வன்தட்டுகளைப் பயன் படுத்துகிறோம். இது அப்போது இருந்திருந்தால் இதன் விலை என்ன தெரியுமா. மயக்கம் போட்டு விழ வேண்டாம். 35 கோடி மலேசிய ரிங்கிட். அதாவது பினாங்கு பாலத்தைப் பாதி கட்டி முடித்து விடலாம்.


கொள் அளவு விளக்கம்
0 அல்லது 1 = 1 Bit
8Bits = 1 Byte(B)
1000(B) Bytes = 1 Kilo Byte(KB)
1000(KB) Kilo Bytes = 1 Mega Byte(MB)
1000(MB) Mega Bytes = 1 Giga Byte(GB)
1000(GB) Giga Bytes = 1 Terra Byte(TB)
1000(TB) Tera Bytes = 1 Peta Byte(PB)
1000(PB) Peta Bytes = 1 Exa Byte(EB)

இப்போது நாம் 2010 ஆண்டில் 'பெத்தா பைட்'டில் இருக்கிறோம்.


கமலேஸ்வரி, ஈப்போ - k_wary@hotmail.com
கே: இப்போது பயன்பாட்டில் உள்ள Browser எனும் உலவிகளில் 'பயர் பாக்ஸ்' முதல் இடத்திற்கு வந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?
பயர் பாக்ஸ் - உலகின் தலை சிறந்த உலவி

ப: Fire Fox எனும் 'நரிப் பிழம்பு' ஐ Mozilla நிறுவனம் இலவசமாகக் கொடுக்கிறது. இந்த நரிப் பிழம்பின் சாதனைகளை இங்கே சொல்ல வேண்டும். இணையத்தில் உலவ வேண்டும் என்றால் அதற்கு ஒரு நிரலி வேண்டும். அந்த நிரலிக்குப் பெயர்தான் உலவி. அந்த நிரலி கணினியில் இல்லை என்றால் நீங்கள் இணையத்திற்குள் நுழைய முடியாது.

விண்டோஸ் பயன்படுத்துபவர்களுக்குப் பிரச்னை இல்லை. அதைப் பயன்படுத்தாதவர்கள் என்ன செய்வார்கள். சிலர் விண்டோஸ”க்குப் பதிலாக Linux, Mac போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

இவர்களுக்காகச் செய்யப் பட்டதுதான் இந்த நரிப் பிழம்பு எனும் உலவி. இந்த உலவியைத் தயாரிக்க ஆரம்பித்ததும் உலகத்தில் உள்ள எல்லா தலை சிறந்த கணினி வல்லுநர்களும் உதவிக்கு வந்து விட்டார்கள்.

மைக்ராசாப்ட் நிறுவனத்தின் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியின் நம்பகத்தன்மை குறையக் குறைய, இணையப் பயன்பாட்டிற்கு உலக மக்கள் வேறோர் உலவியை விரும்பினார்கள்.

ஆக, வேகமாகவும் பாதுகாப்பாகவும் அதே சமயத்தில் பற்பல புதிய நவீன வசதிகளைத் தரும் நரிப் பிழம்பு எனும் உலவி வடிவமைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பொறியியல் வல்லுநர்கள் மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார்கள். உலகம் முழுமையும் இந்த வல்லுநர்கள் அல்லும் பகலும் உழைத்தார்கள். சம்பளம், ஊதியம், விளம்பரம், புகழ்ச்சி  என்று எதுவுமே பார்க்கவில்லை.

இப்படியே 22 ஆயிரம் bugs எனும் தடைகளை நிவர்த்தி செய்தார்கள். கடைசியில் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. இதற்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

கூடுதல் பாதுகாப்பு, அதிவேக இயக்கம், தோற்றப் பொலிவு, user friendly எனும் பயன்படுத்துவோர் இலகுத் தன்மை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இது வெளியான நாள் அன்று கணினி உலகில் ஒரு சாதனை படைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது.

ஒரே நாளில் 83 இலட்சம் பேர் பதிவிறக்கம் செய்தார்கள். எந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேர் என்பதை http://www.spreadfirefox.com/enUS/worldrecord/  எனும் இணையத் தளத்திற்குப் போனால் தெரியும். உலகின் 52 மொழிகளில் கிடைக்கிறது. அந்தந்த மொழிகளில் செயல்படுகிறது.

இந்த உலவி தமிழ் மொழியிலும் செயல் படுகிறது. உண்மையிலேயே ஓர் அற்புதமான உலவி அத்தனை அதிசயமான சிறப்புகள் உள்ளன. http://www.getfirefox.com எனும் இடத்தில் கிடைக்கிறது. உலக மக்களுக்கு கிடைத்த ஓர் இணையச் சுரபி இந்த பயர் பாக்ஸ் உலவி.

2 comments:

  1. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete