14 November 2010

கணினியும் நீங்களும் - பகுதி 77

(21.11.2010 ஞாயிற்றுக் கிழமை கேள்வி பதில்களை காலை 10.00 மணிக்கு மேல் பார்க்கலாம்) 
 

இரா.தர்மசீலன், கோப்பிசான், கோப்பேங்
கே: கணினியை வைரஸ் தாக்கிவிட்டது என்கிறார்களே, வைரஸ் என்றால் என்ன?


ப: கணினி வைரஸ் என்பது கணினியைத் தாக்கும் ஒரு நச்சு நிரலி. கணினித் துறையில் தேர்ச்சிப் பெற்ற நிபுணர்களால் எழுதப் படும் சின்னச் சின்ன நிரலிகள். இந்த நிரலிகளை விஷமத் தனத்திற்காக அல்லது விளையாட்டிற்காக எழுதுவார்கள்.

இந்த நச்சு நிரலி ஒரு கணினிக்குள் நுழைந்ததும் கணினி முழுமையும் பரவி சேதம் விளைவிக்கும். ஒவ்வொரு வைரஸ் நச்சு நிரலிக்கும் தனித் தனியாக சில எழுத்துக் கோவைகள் இருக்கும். அவற்றுக்குப் பெயர் Strings. இதை Signatures என்பார்கள்.

இதுதான் நச்சு நிரலியின் கையெழுத்து. இந்தக் கையெழுத்தை வைத்துதான் ஒரு நச்சு நிரலியின் தலை எழுத்து நிர்ணயம் செய்யப் படுகிறது. Vital Information Resources Under Siege என்பதன் சுருக்கமே Virus.

1960 ஆம் ஆண்டுகளில் நடந்த சம்பவம். கணினி அறிஞர்கள் கணினியை இயக்குவதற்கான அடிப்படை நிரலிகளை எழுதிக் கொண்டு இருக்கும் போது தற்செயலாக ஒரு நிரலியைக் கண்டுபிடித்தார்கள். தானாகவே மாறும் தன்மை கொண்ட நிரலி. அதற்கு Self Altering Automata என்றும் பெயர் வைத்தார்கள்.

1980 ஆம் ஆண்டில் அந்த நிரலி ஆராய்ச்சிக் கூடத்தை விட்டு வெளியாகி விஷமிகளின் கைகளில் சிக்கியது. அதுவே இப்போது வைரஸ் எனும் பெயரில் கணினி உலகைக் கலக்கிக் கொண்டு இருக்கிறது.

சின் ஆறுமுகம், பாரிட் ஜாவா, பத்து பகாட்.
கே: நம்முடைய கணினியின் Operating System எனும் இயங்கு தளத்தை 'சி' எனும் கணினி மொழியில் எழுதி இருக்கிறார்களாம். உண்மையா? முதன் முதலில் வெளிவந்த கணினி மொழி எது?
ப: நாம் ஒரு தமிழரைப் பார்த்தால் தமிழில் பேசுகிறோம். சீனச் சகோதரரைப் பார்த்தால் நம்முடைய மலேசிய மொழியைப் பயன் படுத்துகிறோம்.


ஒரு வெள்ளைக்காரரைப் பார்த்தால் ஆங்கிலத்தில் பேசுகிறோம். இல்லையா. அந்த மாதிரி கணினிக்குத் தெரிந்த மொழி ஒன்று இருக்கிறது. அதற்குப் பெயர் Machine Language.

கணினி புரிந்து கொண்டு செயல் படுகின்ற மொழி. அந்த மாதிரியான மொழிகளில் C, C++, C#, Java, Pascal, Cobra என்று ஒரு நூறு மொழிகள் உள்ளன. இவற்றில் எல்லாம் மிகவும் வலிமையான மொழி C மொழி ஆகும்.

விண்டோஸ் இயங்குதளம் அந்த மொழியில் தான் எழுதப் பட்டு இருக்கிறது. மிகவும் பிரமாதமான மொழி. அந்த மொழியை படிப்பதற்கு மூன்று ஆண்டுகள் பிடிக்கும். எனக்குப் பிடித்த மொழி ஜாவா. அதைப் படிக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன.

சரி. முதன் முதலில் வெளிவந்த கணினி மொழி Fortran. ஐ.பி.எம் நிறுவனம் 1957 ஆம் ஆண்டில் உருவாக்கியது. FORmula TRANslation என்பதன் சுருக்கம். கணித அறிவியல் பணிகளுக்கு இந்த மொழி பயன் படுத்தப் படுகிறது.

ஒரு கல்லூரி மாணவி, ஜோகூர்

கே: நான் உங்களிடம் PHP கணினி மொழி பற்றிய கேள்வியைக் கேட்டேன். ஆனால், நீங்கள் ஒரு கணினியை Format எனும் சுத்திகரிப்பு செய்வது எப்படி என்று யாரோ கேட்ட கேள்வியை நான் கேட்டதாகப் பத்திரிகையில் போட்டு இருக்கிறீர்கள். ஒரு கல்லூரியில் கணினித் துறையில் படிக்கும் மாணவிக்கு 'பார்மேட்' செய்யத் தெரியாதா? என்னுடன் படிப்பவர்கள் இது கூடவா எனக்குத் தெரியவில்லை என்று நினைக்க மாட்டார்களா?
ப: அப்படியா. மடிக்கணினியை Format செய்வது என்பது கணினி சம்பந்தமான ஒரு நல்ல கேள்வி. எல்லாருக்கும் பயன்படும் கேள்வி. அந்தக் கேள்வி உங்களுடைய கணினித் திறமையைச் சிறுமை படுத்தி விட்டதாகச் சொல்கிறீர்கள். நீண்ட வசை மொழிகளை வேறு எழுதி இருக்கிறீர்கள். ரொம்ப நன்றி.


உங்களுக்கு ஒன்று தெரியுமா. உலகத்திலேயே மிகச் சிறந்த சிறுவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி Mr.Bean. அந்த மிஸ்டர் பீனின் மனைவி சுனேத்ரா ஓர் இந்தியர்.

ஓர் இந்தியரைக் கல்யாணம் செய்து கொண்டதால் மிஸ்டர் பீன் என்கின்ற ரோவான் அட்கின்சனை ஆங்கிலேயர்கள் தவறாக நினைக்கவில்லையே.

அதனால் மிஸ்டர் பீனின் கலைத் திறைமை சிறுமைப் பட்டுப் போகவில்லையே. பார்க்கும் பார்வைகள் வேறு. பாவனைகளும் வேறு.

கமலேஸ்வரி, ஈப்போ - k_wary@hotmail.com
கே: இப்போது பயன்பாட்டில் உள்ள Browser எனும் உலவிகளில் 'பயர் பாக்ஸ்' முதல் இடத்திற்கு வந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை?
ப: Fire Fox எனும் 'நரிப் பிழம்பு' உலவியை Mozilla நிறுவனம் இலவசமாகக் கொடுக்கிறது. சரி. இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இந்த நரிப் பிழம்பின் சாதனைகளைக் கண்டிப்பாக இங்கே சொல்ல வேண்டும்.


இணையத்தில் உலவ வேண்டும் என்றால் அதற்கு ஒரு நிரலி வேண்டும். அந்த நிரலிக்குப் பெயர்தான் உலவி. அந்த உலவி கணினியில் இல்லை என்றால் நீங்கள் இணையத்திற்குள் நுழைய முடியாது.

விண்டோஸ் பயன்படுத்துபவர்களுக்குப் பிரச்னை இல்லை. அதைப் பயன்படுத்தாதவர்கள் என்ன செய்வார்கள். சிலர் விண்டோஸக்குப் பதிலாக Linux, Mac போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்காகச் செய்யப் பட்டதுதான் இந்த

நரிப் பிழம்பு எனும் உலவி. இந்த உலவியைத் தயாரிக்க ஆரம்பித்ததும் உலகத்தில் உள்ள எல்லா தலை சிறந்த கணினி வல்லுநர்களும் உதவிக்கு வந்து விட்டார்கள்.

மைக்ராசாப்ட் நிறுவனத்தின் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவியின் நம்பகத் தன்மை குறையக் குறைய, இணையப் பயன்பாட்டிற்கு உலக மக்கள் வேறோர் உலவியை விரும்பினார்கள். ஆக, வேகமாகவும் பாது காப்பாகவும் அதே சமயத்தில் பற்பல புதிய நவீன வசதிகளைத் தரும் நரிப் பிழம்பு எனும் உலவி வடிவம் அமைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பொறியியல் வல்லுநர்கள் மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார்கள். உலகம் முழுமையும் இந்த வல்லுநர்கள் அல்லும் பகலும் உழைத்தார்கள். சம்பளம், ஊதியம், விளம்பரம், புகழ்ச்சி  என்று எதுவுமே பார்க்கவில்லை.

இப்படியே 22 ஆயிரம் bugs எனும் தடைகளை நிவர்த்தி செய்தார்கள். கடைசியில் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. இதற்கு பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

கூடுதல் பாதுகாப்பு, அதிவேக இயக்கம், தோற்றப் பொலிவு, user friendly எனும் பயன்படுத்துவோர் இலகுத் தன்மை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இது வெளியான நாள் அன்று கணினி உலகில் ஒரு சாதனை படைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது.

ஒரே நாளில் 83 இலட்சம் பேர் பதிவிறக்கம் செய்தார்கள். எந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேர் என்பதை http://www.spreadfirefox.com/enUS/worldrecord/  எனும் இணையத் தளத்திற்குப் போனால் தெரியும். உலகின் 52 மொழிகளில் கிடைக்கிறது. அந்தந்த மொழிகளில் செயல் படுகிறது.

தமிழ் மொழியிலும் செயல் படுகிறது. உண்மையிலேயே ஓர் அற்புதமான உலவி. அத்தனை அதிசயமான சிறப்புகள் உள்ளன.

http://www.getfirefox.com எனும் இடத்தில் கிடைக்கிறது. உலக மக்களுக்கு கிடைத்த ஓர் இணையச் சுரபி இந்த பயர் பாக்ஸ் உலவி.

1 comment:

  1. soory sir i dont have tamil software , so i write in english please dont misunderstand. ok i want to admit its realy a gift for all of us to have a man like you. lighten our burden. ok my question is. is it watchingonline movies at frrefullmovies.net is legal? and is thereany website to download songs legaly?

    ReplyDelete