10 May 2011

ராஜாமணி மயில்வாகனம்

இணையக் கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவில் இந்த ஆய்வுப் புதினம் வெளிவந்துள்ளது. அதன் முகவரி:
http://ta.wikipedia.org/wiki/ராஜாமணி


ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள உருப்படியான ஒரு சப்பாத்து இல்லாமல் தவித்த ஒரு மலேசியப் பெண்மணியின் கதை. அவர் புகழ்பெற்ற ஓட்டப் பந்தய வீராங்கனை. 1964 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர்.

மலேசியப் பேரரசர் வழங்கிய ‘டத்தோ’ விருதைப் பார்த்து மகிழும் வீராங்கனை ராஜாமணி
ஆசியான், தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றவர். பல ஆசிய, தேசியச் சாதனைகளைப் செய்தவர். மலேசியாவின் ஓட்டப் பந்தய வீராங்கனைச் சாதனை விருதைப் பெற்ற முதல் மலேசியப்  பெண்மணி. மின்னல் தாக்கி 18 மணி நேரம் நினைவிழந்து உயிருக்குப் போராடியவர்.

நரம்பு மண்டலம் பாதிக்கப் பட்டதால் 1968 ஆம் ஆண்டு மெக்சிகோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனது. வறுமையான குடுமபத்தில் பிறந்து வாழ்ந்தவர். வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி ஓர் உயர் நிலைக்கு வந்தவர். இவர் புகழ் பெற்ற மலேசியப் பெண்களின் பட்டியலில் முதல் பத்து பெண்களில் ஒருவராகப் பவனி வருகிறார். அவர்தான் ராஜாமணி மயில்வாகனம்.

ஒன்பது வயதில் சாதனை

ராஜாமணி தன்னுடைய தொடக்கக் கல்வியை தாப்பா ஆங்கிலப் பள்ளியில் பெற்றார். அவர் நான்காம் வகுப்பில் படிக்கும் போது பள்ளிகளுக்கு இடையிலான 4X400 ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருக்கு வயது ஒன்பது. ஓட்டப் பந்தயத்தில் சிறந்து விளங்கும் சில பள்ளிகளும் அப்போட்டியில் கலந்து கொண்டன.

ராஜாமணியின் இளமை காலத் தோற்றம்
அந்தப் பந்தயத்தில் ராஜாமணி கடைசி ஓட்டக்காரர். அவர் அபார வேகத்துடன் ஓடி, தன் பள்ளியை முதல் நிலைக்கு கொண்டு வந்தார். அது பள்ளி ஆசிரியர்களை மட்டும் அல்ல, எல்லாரையும் ஆச்சரியப் பட வைத்தது. ஏன் என்றால் மற்ற பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் பலர் மாவட்ட, தேசிய ரீதியில் புகழ்பெற்றச் சிறந்த ஓட்டக்காரர்கள். பல சாதனைகளைச் செய்தவர்கள்.

1965ல் ராஜாமணி
ஓட்டப் பந்தய வரலாற்றையே மாற்றி அமைத்தார்

ஒன்பது வயது மாணவி மற்றவர்களைத் தோற்கடித்தது ஒரு சாதனையாகக் கருதப் பட்டது. அந்தச் சாதனைக்கு மூல காரணம் ராஜாமணிக்குப் பயிற்றுவித்த விளையாட்டு ஆசிரியர் கந்தவனம் என்பவரே. விளையாட்டுத் துறையில் கட்டொழுங்கும் கண்ணியமும் மிக மிக முக்கியம் என்று அவர் வலியுறுத்தி வந்தார்.

அந்த நிகழ்ச்சி ராஜாமணியின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியைத் தன் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்று என ராஜாமணி சொல்கிறார்.

ராஜாமணி பயிற்சியின் போது
அதன் பின்னர் 1962 ஆம் ஆண்டிலிருந்து 1966 ஆம் ஆண்டு வரை பேராக் மாநிலத்தின் சிறந்த ஓட்டக்காரராக ராஜாமணி புகழ் பெற்று விளங்கினார். அவரை மிஞ்சி ஓடக் கூடியவர் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஓட்டப் பந்தய வரலாற்றையே மாற்றி அமைத்தார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சைக்கிள் இரவல்

அதன் பின்னர் ராஜாமணி மாவட்ட, மாநில, தேசிய ஓட்டப் பந்தயங்களில் கலந்து பல வெற்றி வாகைகளைச் சூடினார். ஐந்தாம் படிவம் படிக்கும் போது ஓட்டப் பந்தயத் துறைக்குத் தற்காலிகமாக ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும் என்று நினைத்தார்.

அந்த ஆண்டு ராஜாமணிக்கு உயர்நிலைக் கல்வியின் இறுதி ஆண்டு. தேர்வு முடிந்த பிறகு ஓட்டப் பந்தயத்திற்கு வராமல் தூங்குவதிலேயே காலத்தைக் கழித்தார். இதனால் அவருடைய தந்தையார் அவரை ஆர். சுப்பையா எனும் ஓர் ஓட்டப் பந்தயப் பயிற்சியாளரிடம் கொண்டு சென்றார். மாலை 4.40 லிருந்து இரவு 7.30 வரை ஓட்டப் பயிற்சிகள். ராஜாமணியின் வீட்டிற்கும் பயிற்சி நடைபெறும் திடலுக்கும் சற்றுத் தூரம்.


மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் ரசாக்கிடம் இருந்து பரிசு.
அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போய் சைக்கிள்களை இரவல் கேட்பார். ஏன் என்றால் ராஜாமணியின் வீட்டில் அவருக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தர முடியாத நிலைமை. ராஜாமணியின் குடும்பம் அப்போது வறுமையில் வாழ்ந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு நாளும் யாருடைய சைக்கிளையாவது இரவல் வாங்கித் தான் பயிற்சி செய்யும் திடலுக்குச் செல்வார்.


1966 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழாவில்
குத்து விளக்குகள் சேகரிப்பதில் கொள்ளை ஆசை

ராஜாமணிக்கு வீட்டை அலங்கரிப்பதில் மிகவும் விருப்பம். தான் ஓடி வெற்றிப் பெற்ற சின்னங்ளுடன் விநாயகர் சிலைகளையும் நிறைய சேகரித்தார். அவற்றைத் தன்னுடைய பூசை அறையில் வரிசை வரிசையாக அடுக்கி வைத்தார். விதம் விதமான குத்து விளக்குகளைச் சேகரிப்பதிலும் அவருக்கு கொள்ளை ஆசை.

ஒரு நாள் ராஜாமணியின் தந்தையார் ஒரு செருப்பு தைப்பவரிடம் ராஜாமணியை அழைத்துச் சென்றார். அங்கே அவருக்குப் புதிதாக ஒரு புதிய செருப்பு தைத்துக் கொடுக்கப்பட்டது. அதுதான் அவருடைய முதல் ஓட்டப் பந்தயச் செருப்பு.


1964 ஆம் ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக்கில் ராஜாமணி
ராஜாமணியைக் கடைக்குக் கொண்டு போய் ஒரு தரமான, விலை உயர்ந்த சாப்பாத்தை வாங்கிக் கொடுக்க அவருடைய தந்தையாருக்குப் பண வசதி இல்லாமல் போய் விட்டது. அதனால் தான் மலிவான விலையில் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் ராஜாமணியை அழைத்துச் சென்றார். அந்தச் சப்பாத்துகளின் அடிப் பாகத்தில் சாதாரண ஆணிகள் வைத்து அடிக்கப் பட்டன.

மலிவான செருப்புகளை மறக்கவில்லை மறைக்கவும் இல்லை

ஆணிகள் தேய்ந்ததும் அல்லது ஆடத் தொடங்கியதும் அந்தச் சப்பாத்துகளுக்கு மறுபடியும் புதிய ஆணிகள் அடிக்கப் பட்டன. இப்படித் தான் ராஜாமணியின் திடல் வாழ்க்கை போய்க் கொண்டு இருந்தது. அந்தக் காலக் கட்டத்தில் ராஜாமணியின் குடும்பம் வசதியான வாழ்க்கையில் வாழவில்லை. சாப்பாட்டு மேசையில் என்ன இருந்ததோ அதை மட்டுமே குடும்பத்தினர் சாப்பிட்டு வந்ததாக ராஜாமணியே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

தங்களின் ஏழ்மையான வாழ்க்கையை ராஜாமணி ஒரு போதும் மறக்கவில்லை; மறைக்கவும் இல்லை. பத்திரிகைப் பேட்டிகளில் அவருடைய குடும்ப ஏழ்மை நிலைமையை இன்றும் நினைவு படுத்துகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னால் நேபாளத்தில் இருக்கும் காட்மாண்டு சென்றார். அங்கிருந்து கைலாசத்திற்குப் போகும் போது பத்திரிகையாளர்கள் அவரைப் பேட்டி கண்டார்கள். அந்தப் பேட்டியில் தன் குடும்ப ஏழ்மையைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

ஒரு முறை ஓட்டப் பந்தயத்திற்குப் பொருத்தமான சட்டை சிலுவார் வாங்க வேண்டும் என்று விளையாட்டுப் பயிற்றுநர் சுப்பையா சொன்னார். அதன் விலை 20 ரிங்கிட். அதைக் கூட ராஜாமணியின் தந்தையால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு குடும்பத்தில் பணச் சிரமம். அரசாங்கமும் உதவி செய்யவில்லை.


60 வயதில் ஓர் ஓட்டப் பந்தய திறப்பு விழாவில்
அறநிறுவனங்களும் ஆதரவு தரவில்லை. ஓர் ஒலிம்பிக் போட்டியில் ஓடவிருக்கும் ஒரு வீரரின் வேதனையான நிலைமை இன்றைய காலக் கட்டத்தில் எல்லாருடைய மனங்களையும் பாதிக்கின்றது. அதை எல்லாம் தாண்டி ராஜாமணி ஓடி சாதனைகள் செய்தார்.

ஒரு தமிழ்ப் பெண் ஒலிம்பிக்கிற்கு போகிறார்


அதனால், உடலைத் துவட்டப் பயன்படும் துண்டுகளை விளையாட்டுப் பயிற்றுநர் சுப்பையா வாங்கி வந்தார். அந்தத் துண்டுகளை ஒன்றாகப் பிணைத்து ஓட்டப் பந்தய உடைகள் தைக்கலாம் என்று அந்தத் துண்டுகள் ஒரு தையல்காரரிடம் கொடுக்கப் பட்டது. இதைக் கேள்விப் பட்ட ஒரு கடைக்காரர் மனம் இளகி இலவசமாக ஒரு ஜோடி ஓட்டப் பந்தய சட்டை சிலவார்களை ராஜாமணிக்கு வழங்கினார்.

அதன் பின்னர், ராஜாமணிக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப் பட்டன. ஆறு மாதங்கள் கடும் பயிற்சிக்குப் பின்னர் ராஜாமணி ஒலிம்பிக் குழுவில் சேர்வதற்கு தகுதி பெற்றார். அதுவரை அரசாங்கம் ராஜாமணிக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. 1964 ஆம் ஆண்டு தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள ராஜாமணி தகுதி பெற்றச் செய்தி நாடு முழுமையும் காட்டுத் தீ போல பரவியது.


மலாயா வாழ் இந்தியர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். முதன் முறையாக ஒரு தமிழ்ப் பெண் ஒலிம்பிக்கிற்கு போகிறார் என்பது அப்போதைய காலத்தில் பெரிய விஷயம். அதன் பிறகு தான் ராஜாமணியின் பெயர் பட்டி தொட்டி எல்லாம் உச்சரிக்கும் பெயராக மாறியது. அதுவரை ராஜாமணி வெளிநாடுகளுக்குச் சென்றது இல்லை.

ராஜாமணிக்கு - இந்தியாவில் இருந்து வந்த இந்திய உணவுகள்

அதே காலக் கட்டத்தில் மணி ஜெகதீசன் என்பவரும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப் பட்டார். மலேசிய வரலாற்றில் ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் இறுதிச் சுற்றில் இது வரை தேர்வு செய்யப் பட்ட ஒரே ஒரு மலேசியர் மணி ஜெகதீசன் என்பவர் மட்டுமே.

பிரதமர் துன் ரசாக் அவர்களுடன்
ஒலிம்பிக் வீரர் டான்ஸ்ரீ மணி ஜெகதீசன்
வீராங்கனை ராஜாமணி
மலேசியாவில் மட்டும் அல்ல. உலகம் முழுமைக்கும் ஒலிம்பிக் 100 மீட்டர் இறுதிச் சுற்றில் தேர்வு செய்யப் பட்ட ஒரே தமிழர் அவர் தான். இப்போது மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். இவருக்கு மலேசியாவின் ஆக உயரிய விருதுகளில் ஒன்றான டான்ஸ்ரீ விருது வழங்கப் பட்டது.

ராஜாமணி தோக்கியோ சென்ற போது உலகம் முழுவதும் இருந்து வந்த பல போட்டியாளார்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தோக்கியோவில் அவருக்கு 64 ரிங்கிட் சேவை அன்பளிப்பு மட்டுமே வழங்கப் பட்டது. தோக்கியோவில் இருந்த போது இந்திய அணியினருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ராஜாமணிக்கு கிடைத்தது.


மலேசிய அரசாங்கம் புதிய வெள்ளித்தாள் வெளியிட்ட போது
அவர்கள் இந்தியாவில் இருந்து சொந்த சமையல்காரர்களை அழைத்து வந்து இருந்தனர். ராஜாமணிக்கும் இந்திய அணியினர் இந்திய உணவுகளை கொடுத்து உதவினர்.

அங்கே வந்து இருந்த அனைவரும் தங்கள் நாடுகளை பிரதிநிதிப்பதில் பெருமை அடைந்தனர். ராஜாமணியும் மலேசியாவைப் பிரதிநிதிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். இந்த ஒலிம்பிக் போட்டியில் ராஜாமணி வெற்றி பெறவில்லை. இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இருப்பினும் அவருக்கு ஒலிம்பிக் அனுபவங்கள் நிறைய கிடைத்தன.

1964 ஆம் ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக்கில்
இந்தியா தங்கம் வென்றது. அதன் ஹாக்கி
குழுவின் கேப்டன் சராஞ்சித் சிங்

மலேசியாவின் தேசிய கீதம்: ராஜாமணியின் கண்களில் கண்ணீர்

1965 ஆம் ஆண்டு சியாப் விளையாட்டுப் போட்டியில் ராஜாமணி நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார். சியாப் விளையாட்டுப் போட்டி என்றால் South East Asia Peninsula என்று ஆங்கிலத்தில் பொருள் படும். இந்தப் போட்டி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடை பெற்றது. இதில் 33 தங்கங்களைப் பெற்று மலேசியா இரண்டாவது நிலையில் வந்தது.

‘ஒவ்வொரு முறையும் நான் மேடையில் ஏறி பதக்கங்களைப் பெறும் போது மக்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். சந்தோஷக் குரல் எழுப்பினர். நாட்டிற்கு மேலும் புகழ் சேர்க்க வேண்டும் எனும் எண்ணம் எனக்கு அப்போது ஏற்பட்டது. நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கும் போது என் கண்களில் நீர் வழிந்தது’ என்று ராஜாமணி கண்கலங்கிச் சொல்கிறார்.


2010 ல் ராஜாமணி பிறந்த ஊர் - தாப்பா
‘நான் திடலில் ஓடும் போது என் தந்தை பார்வையாளர்கள் மேடையில் இருந்து பார்ப்பார். நம் நாட்டின் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களும் வந்து கவனிப்பார். அது எனக்கு பெருமையாக இருக்கும்’ என்று மகிழ்ச்சியுடன் ராஜாமணி சொல்கிறார்.

ஓட்டப் பந்தயப் பயிற்சிகள் நடைபெறும் போது ராஜாமணிக்கு சிறப்பு உணவுகள் வழங்கப் படவில்லை. ஆசிரியர்களுக்கு என்ன உணவு வழங்கப் பட்டதோ அதே உணவு தான் ராஜாமணி போன்ற விளையாட்டாளர்களுக்கும் வழங்கப் பட்டது.

18 மணி நேரம் சுய நினைவை இழந்தார்

1968 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி தன் வாழ்நாளில் மறக்க முடியாதது என்று ராஜாமணி சோகமாகச் சொல்கிறார். கோலாலம்பூரில் உள்ள கர்னி சாலையில் போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது கனத்த மழை பெய்து கொண்டு இருந்தது. ராஜாமணியுடன் செரில் டோரல், இஸ்தியாக் முபராக், பி.என்.கோவிந்தன் போன்ற விளையாட்டாளர்களும் இருந்தனர். திடீரென்று பயங்கரமான மின்னல். தொடந்து இடி முழக்கம்.


தென் கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில்
4 தங்கப் பதக்கங்களை வென்றவர்
செரில் டோரல் கீழே விழுந்தார். ராஜாமணி மயக்கம் அடைந்து சுயநினைவு இல்லாமல் போனார். கோவிந்தன் அதே இடத்தில் காலமானார். இஸ்தியாக் முபராக்கும் மற்றவர்களும் ராஜாமணியைத் தூக்கிக் கொண்டு கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு விரைந்தாரகள். ராஜாமணிக்குத் தற்காலிகமாக நினைவு இல்லாமல் போனது. என்னதான் நடந்தது என்றும் அவருக்குத் தெரியவில்லை. 18 மணி நேரம் அவர் சுயநினைவு இல்லாமல் உயிருக்குப் போராடி இருக்கிறார்.


மூன்றாம் வகுப்பு சிகிச்சை

செய்திதாள்களைப் படித்த பின்னர் தான் மின்னல் தாக்கியது ராஜாமணிக்குத் தெரிய வந்தது. கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் இரண்டு படுக்கைகளுக்கு நடுவில் ஒரு தற்காலிகப் படுக்கை போடப் பட்டு அதில் ராஜாமணி கிடத்தி வைக்கப் பட்டார். மூன்று நாட்கள் அவருக்கு அந்த நிலையில் சிகிச்சை அளிக்கப் பட்டது. அவருக்கு சாதாரணமான சிகிச்சையே அளிக்கப் பட்டது.


இஸ்தியாக் முபராக்.
ராஜாமணியைக் காப்பாற்றியவர்.  

மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர்.  
ஒரு நாட்டிற்காக உயிரையே பணயம் வைக்கும் ஒரு வீராங்கனைக்கு எத்தனை மோசமான மருத்துவ வசதிகள் என்று நாளிதழ்கள் கருத்துகள் தெரிவித்தன. ராஜாமணியை மிகவும் பாதித்த விஷயங்களில் இதுவும் ஒன்று. உயிரே போய்க் கொண்டு இருக்கிறது. மருத்துவமனை அதிகாரிகள் பணத்தைப் பெரிதாக நினைத்துப் பார்த்து இருக்கிறார்கள். இந்த நிலைமை மாறி விட்டது. இப்போது உள்ள விளையாட்டாளர்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கிறது. மாதாமாதம் ஆயிரக் கனக்கில் சம்பளமும் கிடைக்கிறது. இதைத் தான் ராஜாமணியும் எதிர்பார்த்தார்.

பிரதமர் துங்கு வருகை

பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் ராஜாமணியை நேரில் பார்க்க வருகிறார் எனும் செய்தி மருத்துவமனை வட்டாரத்தில் பரவியது. உடனே ராஜாமணி முதலாம் வகுப்பிற்கு மாற்றப் பட்டார்.


மலேசியத் ’தந்தை’ முதல் பிரதமர்
துங்கு அவர்கள். ராஜாமணியின்
ஓட்டங்களை ரசித்து மகிழ்ந்தவர்.

இருப்பினும் பிரதமர் துங்கு வரவில்லை. ஆர்கிட் பூக்கூடையை அன்பளிப்பாக அனுப்பி வைத்திருந்தார். அந்த அன்பளிப்பு ராஜாமணிக்கு ஓர் ஊட்டச்சத்து வைத்தியமாக அமைந்தது.

பத்து நாட்களுக்குப் பிறகு ராஜாமணி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மருத்துவச் செலவுகளை விளையாட்டு அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்கள். மூன்று மாதங்கள் ஆகியும் அதிகாரிகள் கட்டணத்தைக் கட்டவில்லை.

பணத்தைக் கட்டு ராஜாமணி

மருத்துவமனை நினைவுக் கடிதங்களை அனுப்பியும் தக்க நடவடிக்கை எடுக்கப் படவில்லை. ராஜாமணியைத் திருமணம் செய்யவிருந்த ராஜலிங்கத்தைக் கட்டுமாறு மருத்துவமனை கேட்டுக் கொண்டது. பின்னர் ராஜலிங்கம் தான் அந்த மருத்துவத் தொகையைக் கட்டினார்.

அந்த மின்னல் தாக்குதல் நிகழ்ச்சி ராஜாமணியின் விளையாட்டு வரலாற்றையே ஒரு முடிவிற்கு கொண்டு வந்தது.


2010 ஆம் ஆண்டில் மலேசிய விளையாட்டு
கலைக்களஞ்சிய வெளியீட்டு விழாவில் ராஜாமணி
அப்போது அவருக்கு வயது 25. ‘அந்த நிகழ்ச்சி என் மனதை மிகவும் அலைக் கழித்தது. நான் செத்துப் போய் இருப்பேன். ஆண்டவன் புண்ணியத்தில் பிழைத்துக் கொண்டேன்.

அதன் பின்னர் எனக்கு விளையாட்டுத் துறையில் ஆர்வம் இல்லாமல் போனது. ஒரு முற்றுப் புள்ளி வைப்பது என்று முடிவு செய்தேன்’ என்கிறார்.


மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் ஆலோசகராக ராஜாமணி

1965 ஆம் ஆண்டு சியாப் விளையாட்டுப் போட்டிகளின் 200மீ, 400மீ, 800மீ, 4X100 மீ ஓட்டப் பந்தயங்களில் மலேசியாவுக்கு நான்கு தங்கப் பதக்கங்களை வாங்கிக் கொடுத்தவர்.

1966 ஆம் ஆண்டு ஆசியான் விளையாட்டுப் போட்டியில் 400மீ ஓட்டப் பந்தயத்தில் மலேசியாவுக்குத் தங்கப் பதக்கத்தை வாங்கிக் கொடுத்தவர்.

1967 ஆம் ஆண்டு சியாப் விளையாட்டுப் போட்டிகளின் 200மீ, 400மீ ஓட்டப் பந்தயத்தில் இரண்டு தங்கப் பதக்கங்களை வாங்கிக் கொடுத்தவர்.

அப்பேர்ப் பட்ட ஒரு வீராங்கனைக்கு மூன்றாம் வகுப்பு மருத்துவ சிகிச்சை. அதுவே ராஜாமணியைப் பெரிதும் பாதித்தது.

காதல் திருமணம்

1972 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 26 ஆம் திகதி ராஜாமணி, தான் ஏழரை ஆண்டுகள் காதலித்த ராஜலிங்கம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ராஜலிங்கம் ஒரு போலீஸ் அதிகாரி. மலாக்கா ஜாசினில் அதிகாரியாக இருந்தவர். 1964 ஆம் ஆண்டு இருவரும் ஒரு விளையாட்டுப் போட்டியில் சந்தித்துக் கொண்டனர். அதன் பின்னர் நட்பு வளர்ந்தது. அதுவே காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.

ராஜாமணி தற்சமயம் உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தேசிய விளையாட்டு மன்றம் போன்றவற்றில் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். 1992, 1994 ஆம் ஆண்டுகளில் தாமஸ் கிண்ணப் போட்டியாளர்களுக்குப் பயிற்சியாளராகவும் இருந்தவர்.

பேரப்பிள்ளைகளின் மகிழ்ச்சி

‘ஒரு நாட்டைப் பிரதிநிதிப்பது என்பது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் ஆயுள்கால வாய்ப்பு. அதை நான் முறையாகப் பயன் படுத்திக் கொண்டேன். என்னுடைய மலேசிய நாட்டிற்குப் புகழையும் பெருமையையும் தேடிக் கொடுத்தேன். இரண்டு பிரதமர்களிடம் தங்கக் கேடயங்களை வாங்கினேன். மலேசியாவின் மாட்சிமை தங்கிய பேரரசர் அவர்களிடம் இருந்து டத்தோ விருதை வாங்கினேன்.’

’நாளிதழில்களில் நான் டத்தோ பட்டம் வாங்கும் என் படங்களைப் பார்த்து என் பேரப் பிள்ளைகள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். அது எனக்குப் போதும். நான் எங்கே சென்றாலும் மலேசிய மக்கள் என்னை அன்புடன் கவனிக்கின்றனர். சில உணவகங்களில் நான் சாப்பிட்டதற்கு கட்டணம் கூட வாங்குவது இல்லை.’ என்று கண்ணீர் மலகப் பேசினார்.

’தாப்பா நகரக் காய்கறிச் சந்தையில் நான் வாங்கும் காய்கறிகளுக்குப் பல சமயங்களில் வியாபாரிகள் காசு வாங்க மறுக்கின்றனர். ஒரு கத்தரிக்காயை எடுத்தால் மூன்று காய்களை எடுத்துப் போட்டு’ எடுத்துப் போ’ என்கின்றார்கள். எனக்கே மனசு சங்கடமாக இருக்கும். ராஜாமணியாகிய நான சாதித்தது மலேசிய மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றது’ என்று ராஜாமணி பெருமையாகச் சொல்கிறார்.


நமது பார்வையில்

மலேசிய மக்களின் மனங்களில் ராஜாமணி வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மறுபடியும் ஒரு ராஜாமணி பிறக்க வேண்டும். புலம் பெயர்ந்த மலேசியத் தமிழர்களின் பெருமைகளுக்கு மறுபடியும் ஒரு ராஜாமணி மகுடம் சூட்ட வேண்டும்.

3 comments:

 1. நம் நாட்டில் பல தமிழர்கள் சாதனை புரிந்து இருக்கிறார்கள் அதில் ஒருவர் தான் இந்த வீர பெண்மணி திருமதி ராஜாமணி அவர்கள் .
  அவர்களின் வாழ்கை வரலாற்றை படித்த பிறகு அவரின் வாழ்கையில் இவ்வளவு சோகங்களா என்று நினைக்கும் பொது மனம்
  கலங்குகிறது.இவரை போல் இன்னும் பல ராஜாமணிகள் பிறக்கு வேண்டும் நம் மலைய்சிய தமிழர்களின் பெருமை சேர்க்க.

  ReplyDelete
 2. வணக்கம். தங்கள் கருத்திற்கு நன்றி. சின்னச் சின்னச் செய்திகளை விளம்பரப் படுத்தி வாழும் உலகில் சிபில் தன் உயிரையே தியாகம் செய்தவர். அவரை மறக்கலாமா. சொல்லுங்கள். அவரைப் போல இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களை அறிமுகம் செய்வோம். நான் ஒரு மலேசியத் தமிழன் என்று சொல்வதை விட ஒரு மலேசியத் தமிழ் வரலாற்றுத் தமிழன் என்று சொல்வதில் பெருமை படுகிறேன். அன்பு நண்பரே, மிகைப் படுத்திக் கொண்டு வாழ்வதில் ஓர் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. என் பேரப் பிள்ளைகளும் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். நன்றி.

  ReplyDelete
 3. அடுத்து மலேசியாவிலேயே ஆக உயர்ந்த காவல் துறைப் பதவியான ஆணையர் பதவியைப் பெற்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் சந்திரமலர் பற்றிய ஒரு சன்னமான வரலாற்றைத் தொகுத்துக் கொண்டு இருக்கிறேன். விரைவில் விக்கிபீடியாவில் பார்க்கலாம். படியுங்கள். நம் மலேசியத் தமிழர்களைப் பற்றி எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்களும் விக்கிப்பீடியாவின் பயனர் ஆகலாம்.

  ReplyDelete