09 ஜூன் 2011

பிலோமினா தமிழ்ப்பள்ளி

இணையக் கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவில் இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது. அதன் முகவரி:
http://ta.wikipedia.org/wiki/பிலோமினா_தமிழ்ப்பள்ளி
மலேசியப் பிரதமர்த் துறை அமைச்சர் முருகையா
2009 ஆம் ஆண்டின் விளையாட்டுப் போட்டியை திறந்து வைக்கிறார்

பிலோமினா தமிழ்ப்பள்ளி
, மலேசியாவின் பேராக், ஈப்போ நகரத்தின் சிலிபின் சாலையில் உள்ள புகழ் பெற்ற ஒரு தமிழ்ப்பள்ளி. பொதுவாக மலேசியா வாழ் மக்கள் பிலோமினா தமிழ்ப்பள்ளி என்று தான் இப்பள்ளியை அழைப்பார்கள். 

ஆனால் அதன் உண்மையான பெயர் செயிண்ட் பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி ஆகும். இந்தப் பள்ளி அந்தக் காலக்கட்டத்தில் ஈப்போவில் உள்ள கான்வெண்ட் ஆங்கிலப் பள்ளியின் கிளைப் பள்ளியாக இயங்கி வந்தது. 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி இப்பள்ளி அதிகாரப் பூர்வமாகத் திறக்கப் பட்டது.

1938ஆம் ஆண்டு இப்பள்ளியில் 21 மாணவர்கள் 3 ஆசிரியர்கள் இருந்தனர். முதலாம் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்பு வரை மூன்று வகுப்புகள் மட்டுமே இருந்தன. 

1941 ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்தது. பின்னர் 4, 5, 6 ஆம் வகுப்புகள் திறக்கப் பட்டன.

ஜப்பானியர் ஆட்சி காலத்தின் போது ஜப்பானிய மொழியைப் போதிக்கும் மையமாகவும் அந்தப் பள்ளி விளங்கியது. அதனால் இரண்டரை ஆண்டுகளுக்குத் தமிழ்மொழி போதிப்பு அங்கு நடைபெறவில்லை. 1945 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப் பட்டது.

1950 ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 130 மாணவர்கள் பயின்று வந்தனர். 1965இல் அப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்தது. 2010இல் மாணவர் எண்ணிக்கை 400க்கும் மேல் உள்ளது. இப்போது அப்பள்ளியில் 21 ஆசிரியர்களும் 3 அலுவலர்களும் பணிபுரிகின்றனர்.

அடிக்கல் நாட்டு விழா

1950களில் பிலோமினா தமிழ்ப்பள்ளி செப்பனிடப் பட்டது. பணப் பற்றாக்குறையினால் அப்பள்ளி பலகைச் சட்டங்களால் கட்டப் பட்டது. அதனால் 1990 ஆம் ஆண்டுகளில் கரையான் அரிப்பினால் பள்ளி சரிந்து விழும் ஒரு நிலைமையும் ஏற்பட்டது.

மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஒரு புதுக் கட்டடம் கட்டுவது என பொதுமக்கள் முடிவு செய்தனர். ஒரு செயல் குழுவும் அமைக்கப் பட்டது. 

அப்போது மலேசியாவின் பொதுப் பணி அமைச்சராக டத்தோ ஸ்ரீ சாமிவேலு இருந்தார்.

பேராக் மாநிலத்தின் ஒற்றுமைத் துறை அமைச்சராக டத்தோ ஜி.ராஜு இருந்தார். இவர்கள் இருவரிடமும் உதவி கேட்கப் பட்டது. அவர்கள் இருவரும் உதவி செய்ய முன் வந்தனர்.

1995 ஜூன் மாதம் 17 ஆம் தேதி பிலோமினா தமிழ்ப் பள்ளியின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. நடுவண் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு அடிக்கல் நாட்டினர்.

குளு குளு கணினி அறை

புதிய கட்டடம் கட்டப் படுவதால் வேறு பள்ளிக்கு மாணவர்கள் தற்காலிகமாக மாற்றம் செய்யப் பட்டனர். ஈப்போவில் உள்ள காரனேஷன் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் தங்கிப் படித்தனர். 1997 ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி புதிய பள்ளி மாணவர்களுக்காகத் திறக்கப் பட்டது.

1997 ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைக்கப் பட்டது. பழைய பள்ளிக்கூடம் இருந்த இடத்திலேயே புதிய மூன்று மாடிக் கட்டடம் இப்போது மிகக் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது.

புதிய பள்ளியில் 12 வகுப்பறைகள், ஓர் அறிவியல் கூடம், ஓர் இசை அரங்கம், ஒரு கணினி அறை உள்ளன. குளு குளு கணினி அறையில் 20 கணினிகள் உள்ளன. தற்சமயம் இப்பள்ளியில் 452 மாணவிகள் படிக்கின்றனர். 25 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அலுவலர்கள் நால்வர் உள்ளனர்.

நாடு போற்றும் நல்ல அழகான ஓர் அருமையான தமிழ்ப்பள்ளி. மலேசியாவில் தமிழர்கள் வாழ வேண்டும் என்றால் முதலில் தமிழ் மொழி வாழ வேண்டும்.

ஆக இந்த மலேசிய நாட்டில் தமிழ் மொழியும் தமிழர்களும் வாழ தமிழ்ப்பள்ளிகள் தான் ஜீவநதிகளாக ஆனந்த பைரவிகள் பாடுகின்றன. அந்தப் பள்ளிகளில் ஒன்றுதான் பிலோமினா தமிழ்ப்பள்ளி. 

சிரம் தாழ்த்திக் கைகூப்புகிறேன்.



1 கருத்து:

  1. வணக்கம் ஐயா.இப்பொழுதுதான் தங்களது வலைப்பதிவுகளை வாசிக்க நேரம் கிடைத்தது.
    இது அருமையான பதிவு ஐயா..பிரபலமான பள்ளிக்கு அழகான அறிமுகம்..நிறைய தகவல்களை அறிந்துக்கொண்டேன்.
    நானும் பேராவிலுள்ள ஈப்போ நகரை சேர்ந்தவந்தான்..என் அம்மாவும் இந்த பள்ளியில் பயின்றவர்தான்..நிறைய விஷயங்களை ஏற்கனவே பகிர்ந்துள்ளார்.
    வாழ்த்துக்கள், தொடரட்டும் தங்கள் கைவண்ணம்..உயரட்டும் தமிழ்.

    பதிலளிநீக்கு