28 August 2011

கணினியும் நீங்களும் - 93

(மலேசிய நண்பன் 27.03.2011 ஞாயிறு பதிப்பில் வெளியிடப் பட்டது)

சரவணன் குமார், சுங்கை பூலோ, சிலாங்கூர்
கே: ஐயா, நான் தமிழ்நாடு திருச்சியில் இருந்து இங்கு வந்து கடந்த ஆறு ஆண்டுகளாக வேலை செய்கிறேன். அண்மையில் என் நண்பர் அவர் வேலை  செய்யும் இடத்தில் இருந்து ஒரு பழைய கணினியை என்னிடம் வந்து கொடுத்தார். அது சரியாக வேலை செய்யவில்லை. இருந்தாலும் நான் செலவு செய்து பழுது பார்த்தேன். நன்றாக வேலை செய்வதைப் பார்த்த அந்த நண்பர் இப்போது அந்தக் கணினியை வேண்டும் என்கிறார். கொடுக்க முடியாது என்றேன். மிரட்டிப் பார்க்கிறார். மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது ஐயா. என்ன செய்யலாம்?


ப: நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அந்த மாதிரியான மனிதர்களை நண்பர் என்று அழைப்பதை முதலில் நிறுத்துங்கள். மனித நேயங்களை மறந்து வாழும் மானிடப் பிண்டங்கள் எல்லாம் எப்படி ஐயா நண்பர்களாக முடியும். சொல்லுங்கள். அற்ப சகவாசம் பிராண சங்கடம் எனும் பழமொழி இருக்கிறதே அது உங்களுக்குத் தெரியாதா.

பழுது பார்க்க நீங்கள் செலவு செய்த காசை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு கணினியைத் திருப்பிக் கொடுக்கலாம். கவலைப் பட வேண்டாம். என்னிடம் பழைய கணினிகள் இரண்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்றை உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். ஈப்போ வரும்போது பெற்றுக் கொள்ளுங்கள்.


நீங்கள் செலவு செய்த பணத்தைக் கேளுங்கள். அவர் கொடுக்க முடியாது என்றால் எனக்குத் தெரிவியுங்கள். சுங்கை பூலோவில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் புக்கிட் அமான் மலேசியப் போலீஸ் தலைமையகத்தில் ஓர் ஆணையர். அவரிடம் சொல்லி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்வோம். கவலைப் பட வேண்டாம்.


நீங்கள் ஒரு தமிழர். நானும் ஒரு தமிழர். நீங்கள்
ஒரு நம்பிக்கையுடன் அங்கே இருந்து இங்கே வந்து வேலை செய்கிறீர்கள். இங்குள்ள  தமிழர்கள் தான் உங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். அதை விடுத்து உங்களை ஏமாற்றி பிழைப்பது என்பது ஈனத் தனமான செயல். அப்படிப் பட்ட மனிதர்கள் எல்லாம் வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எது உங்களை விட்டுப் போனாலும் கவலைப் படாதீர்கள். தன்னம்பிக்கை மட்டும் விட்டுப் போகாமல் பார்த்துக் கொளுங்கள். ஏன் என்றால் தன்னம்பிக்கை என்பதுதான் வாழ்க்கை. அதுதான் ஆண்டவரின் அடுத்த அவதாரம். 


அய்யாவு காசிப்பிள்ளை, ஸ்கூடாய், ஜொகூர்

கே: கணினி தொடங்குவதற்கு முன் Booting நடைபெறுகிறது. அப்போது எந்த எந்தக் கோப்புகள் அல்லது நிரலிகள் இயக்கப் படுகின்றன?

ப:
முதன் முதலாகக் கணினியைத் திறந்ததும் ((On செய்ததும்) BIOS தன் வேலையைத் தொடங்கும்.  BIOS   என்றால் Basic Input Output System. தமிழில் ‘அடிப்படை உள்ளீடு வெளியீட்டு முறைமை’ என்று சொல்லலாம்.கணினியின் தாய்ப்பலகையில் அனைத்துச் சாதனங்களும் ஓர் ஆரம்ப நிலைக்கு கொண்டு வரும் முறைக்குத் தான் ‘அடிப்படை உள்ளீடு வெளியீட்டு முறைமை’ என்று பெயர்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேனே. கணினி இன்னும் அதன் விண்டோஸ் இயங்குதளத்தின் உள்ளே நுழையவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன் தான் இந்த BIOS வேலைகள் நடக்கும்.

கணினித் திரையில் ஆக முதன்முதலாக வெள்ளை எழுத்துகள் தெரியும். அவை தான் ’பையோஸ்’ அறிவிப்புகள். இந்த ’பையோஸ்’  முதலில் தாய்ப்பலகையைச் சோதனை செய்யும்.

தாய்ப்பலகையின் இயக்க முறை சரியாக இருந்தால் அடுத்து RAM எனும் தற்காலிக நினைவகத்தைப் பரிசோதிக்கும். அடுத்து Hard Disk எனும் வன் தட்டைச் சோதிக்கும்.

அடுத்து Graphic Card எனும் வரைகலை அட்டையைச் சோதிக்கும. இந்தக் கட்டத்தில் தாய்ப்பலகையில் பொருத்தப் பட்டு இருக்கும் சாதனங்கள் எல்லாம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும்.

ஏதாவது பிரச்னை என்றால் Error Messege என்று ஓர் எச்சரிக்கை திரையில் தெரியும். அப்புறம் அதோடு அதன் வேலையையும் நிறுத்திக் கொள்ளும். ஓர் அடி மேலே போகாது.

இவை அனைத்தும் சோதனை செய்யப் படுவதை POST  அல்லது Power On Self Test என்று சொல்வார்கள். சரி. எல்லாம் ஓ.கே. என்றால் ’பையோஸ்’ நெகிழ்தட்டின் (Floppy Disk) பக்கம் தன் கடைக்கண் பார்வையைத் திருப்பும்.

நெகிழ்தட்டில் DBR எனும் Dos Boot Record இருக்கிறதா என்று பார்க்கும். ’டிபிஆர்’ எனும் இயக்கப் பதிவுகள் நெகிழ்தட்டில் இல்லை என்றால் வன் தட்டிற்குப் போய் MBR எனும் Master Boot Record இருக்கிறதா என்று பார்க்கும்.

Master Boot Record என்றால் தலைமை இயக்கப் பதிவு. கணினியை இப்படித் தான் இயக்க வேண்டும் என்கிற பதிவு. அடுத்து இந்த MBR உடனே DBR ஐத் தேடும். DBR இல்லை என்றால் வேலைகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப் படும்.

DBR இருந்தால் உடனே IO.SYS எனும் தகவல் கோப்பு தற்காலிக நினைவகத்தில் ஏற்றம் செய்யப் படும்.

அடுத்ததாக இந்த IO.SYS கோப்பு,  CONFIG .SYS எனும் மற்றொரு கோப்பைப் பரிசீலிக்கிறது. எல்லாம் சரி என்றால், இந்த ‘கன்பிக்.சிஸ்’ கோப்பு MSDOS.SYS எனும் கோப்பை ஏற்றம் செய்கிறது. கடைசியாக மிக மிக முக்கியமான COMMAND. COM எனும் கோப்பு ஏற்றம் காண்கிறது.

அதைத் தொடர்ந்து இறுதியாக AUTOEXEC.BAT எனும் கோப்பு கணினிக்குத் தேவையான இயக்கிகளை எல்லாம் பதிவு செய்து விண்டோஸ் இயங்குதளத்திற்குள் ஏற்றம் செய்கிறது. இயக்கி என்றால் Driver.

அப்புறம் தான் விண்டோஸ் இயங்குதளம் தன் வேலையை ஆரம்பிக்கும். விண்டோஸ் சின்னம் கணினித் திரையில் தெரியும்.

இத்தனை ‘பையோஸ்’ வேலைகளும் பத்து விநாடிகளில் செய்து முடிக்கப் படுகின்றன. என்ன அதிசயம் பாருங்கள்.

இனிமேல் கணினியைத் தட்டி விட்டதும் கணினியின் உள்ளே ‘பையோஸ்’ என்ன செய்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள். அதன் லீலா விநோதங்களுக்கு மதிப்பு கொடுங்கள்.

கணினிக்கு மரியாதை செய்யுங்கள். கணினி எனும் சரஸ்வதி தேவியை ஆண்டவன் நமக்கு அன்பளிப்பாகக் கொடுத்து இருக்கிறார். அதை நாம் தெய்வமாக நினைத்து கையெடுத்துக் கும்பிடுவோம்.பூர்ணம் விஸ்வநாதன், செபாராங் பெராய், பினாங்கு

கே:  LAN என்றால் என்ன?

ப: 
Local Area Network என்பதே அதன் சுருக்கம். பல கணினிகளை ஒரே ஒரு தலைமைக் கணினியுடன் இணைக்கும் அமைப்பே இந்த ‘லான்’ முறை. இதைத் தமிழில் ‘உள்ளக வலைப்பின்னல்’ என்று அழைக்கலாம்.கலாமஞ்சரி நாயுடு, ஜாலான் ஈப்போ, கோலாலம்பூர்

கே: Cyber Space எனும் சொற்கள் அடிக்கடி பயன் படுகின்றன. அதன் அர்த்தம் என்ன என்று சொல்லுங்கள்?


ப:
1984 ஆம் ஆண்டு வில்லியம் கிப்சன் எனும் ஓர் அறிவியல் கதாசிரியர் ‘நியூரோ மென்சர்’ எனும் நாவலை எழுதினார். அதில் அவர் சைபர் ஸ்பேஸ் எனும் ஒரு சொல்லை முதன் முதலில் பயன் படுத்தினார்.

சைபர் ஸ்பேஸ் என்றால் எவராலும் கண்ணால் காண முடியாத ஓர் இடம். ஆனால், அப்படி ஓர் இடம் இருக்கிறது என்பது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று. தமிழில் ’மின் வெளி’ என்று அழைக்கலாம்.

ஆக, அப்படி பார்க்க முடியாத ஒரு கற்பனையான இடத்தைத் தான் சைபர் ஸ்பேஸ் என்று அவர் அழைத்தார். இந்தச் சொல்லை 1989ல் இணைய உலகம் பயன்படுத்த ஆரம்பித்தது. இணைய உலகத்தை சைபர் ஸ்பேஸ் என்று அழைத்தாகள். இப்போதும் அப்படித் தான் அழைக்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாத இணைய வலைப் பின்னலில் நுழைந்து அங்கு உள்ள படங்களைப் பார்க்கிறோம். ஆவணங்களைப் படிக்கிறோம். பாடங்களைப் பதிவிறக்கம் செய்கின்றோம். அவற்றை அனுபவ ரீதியாக உணர்கின்றோம். ஆனால், பார்த்தது இல்லை. ஆகவே, இணையத்தை ’சைபர் ஸ்பேஸ்’ என்று அழைப்பதில் தவறு இல்லையே.

சுந்தரராஜன் பெருமாள், ஜாலான் காசிங், பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர்.

கே: சிடி-ரோம் டிரைவின் வேகத்தை 20X, 48X, 52X என்று குறிப்பிடுகிறார்கள். அதில் X என்றால் என்ன?

ப:
சிடி-ரோம் என்றால் குறும் தட்டு. சிடி-ரோம் டிரைவ் என்றால் குறும் தட்டகம். முதன்முதலில் வெளிவந்த குறும் தட்டகத்தின் வேகம் 150 KBPS. இந்தக் குறும் த்ட்டகங்கள் 1990 களில் வெளிவந்தவை. விலையும் அதிகம்.KBPS என்பதன் விரிவாக்கம் Kilo Bytes Per Second. அப்படி என்றால் ஒரு விநாடியில் எத்தனை ‘பைட்ஸ்’ தகவல்கள் பரிமாறப் படுகின்றன என்பதை அது குறிக்கிறது. ஆக, ஆரம்பத்தில் வெளிவந்த குறும் தட்டகத்தின் வேகம் 150 KBPS ஆக இருந்தது.

பின்னர், வேகம் கூடிய தட்டகங்கள் வெளிவந்தன. புதிய குறும் தட்டகங்களின் வேகத்தை எடுத்துச் சொல்ல பழைய குறும் தட்டகங்களின் வேகத்தை அடிப்படையாக எடுத்துக் கொண்டார்கள். ஆகவே 20X என்றால் 20 X 150 =3000 கேபிபிஎஸ் என்று பொருள்.

இப்போது 80X குறும் தட்டகங்களும் வெளிவந்து விட்டன. பழைய 2X குறும் தட்டின் விலை அப்போதைய விலையில் நான்கு ரிங்கிட். இப்போதைய குறும் தட்டின் விலை வெறும் நாற்பது காசுகள் தான். கணினி உலகம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. விரட்டிப் பிடியுங்கள்.

No comments:

Post a Comment