30 October 2011

கணினியும் நீங்களும் – 119

பிரீத்தி சந்தானம்  preetisanthnam@ymail.com
கே: இணையம் மூலமாக இலவச மென்பொருட்களை அதாவது நிரலிகளை நாம் இலவசமாகப் பதிவிறக்கம் செய்கிறோம். அப்படி பதிவிறக்கம் செய்யும் போது அந்த நிரலிகள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை என்று தெரியவில்லை. அவை பாதுகாப்பானவை என்று எப்படி கண்டறிவது? உங்களுக்கு வாசகர்களின் சார்பில் தீபாவளி வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன். இறைவன் அருள் புரிவானாக.

 

ப:
தங்களின் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. தீபாவளி வாழ்த்துகள் வழங்கிய அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் நன்றிகள்.

இணையம் என்பது நம் வாழ்க்கையில் ஓர் இனிமையான தோழனாகி விட்டது. படங்கள், பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி மகிழ்ச்சி அடைய அந்த இனிமைப் பொக்கிஷம் உதவி செய்கின்றது.

ஆனால் இலவசமாகக் கிடைக்கும் பொருட்களினால் அந்தக் கணினி பாதிப்பு அடையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.  இதை நாம் மறந்து விடக் கூடாது. ஆகவே நாம் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போது நல்ல சில வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

  1. இலவசம் என்று தெரிந்ததும் கிடைக்கின்ற மென்பொருட்கள் எல்லாவற்றையும் நம் கணினியில் பதிப்பு செய்து பார்க்க வேண்டும் எனும் உந்துதலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பதிவிறக்கம் செய்யப் படும் நிரலிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே அவற்றைக் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

  1. பதிவிறக்கம் செய்யப் படும் நிரலி அல்லது நிரலிகளால் ஒருமுறை மட்டும் தான் பயன் பெற முடியும் என்ற ஒரு நிலை இருந்தால் தயவு செய்து அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்யவே வேண்டாம்.

  1. எந்த ஓர் இலவச நிரலியையும் அதனுடைய தயாரிப்பு இணையத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் தங்களின் நிரலியைப் பற்றி அவர்களே தரம் உயர்த்திப் பேசுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.

  1. இலவச நிரலிகளைத் தரம் பிரித்து அவற்றை முறையாக  தொகுத்து வழங்கும் தளங்களான cnet, brothersoft, majorgeek, softpedia, filehippo, tucows, pcworld போன்ற நம்பிக்கையான தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

  1. நம்பிக்கையான தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்தாலும் மற்ற கணினிப் பயனர்களின் கணிப்பும் விமர்சனங்களும் எப்படி உள்ளன என்பதையும் கண்டறியுங்கள்.

  1. cnet, tucows, pcworld  போன்ற பிரபல தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போது, தகுதி மதிப்பீடு (Product Ranking) 1 அல்லது 2 க்குள் இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். மதிப்பீடு 3 ஆக இருந்தால் பரவாயில்லை. ஆனால், 4 அல்லது 5 க்குப் போனால் அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

  1. ஒரு தளத்தில் இருந்து ஒரு நிரலியைப் பதிவிறக்கம் செய்யும் போது கடந்த காலங்களில் எத்தனை பேர் அதனைப் பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள். அதிகமானோர் பதிவிறக்கம் செய்து இருந்தால் அந்த மென்பொருள் அப்போதைய சமயத்தில் நன்றாக இருக்கிறது என்று பொருள்.  ஆக, அந்த நிரலியை தயக்கம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம். எடுத்துக் காட்டாக AVG Anti-Virus Free Edition 2012 எனும் இலவச நச்சுக்கொல்லி நிரலி. இதை 17.10.2011 ஆம் தேதி இரவு 10.45 வரை 1,131,556 பேர் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். அதாவது 11 இலட்சம் பேர்.

  1. அடுத்து, கணினியில் ஒரு வேலையைச் செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட நிரலிகளைக் கணினியில் வைத்து கொள்ள வேண்டாம். எடுத்துக்காட்டாக Video Players, PC Cleaners, Photo Editors, Downloaders. இவற்றில் ஒவ்வொன்றிலும் உங்களுக்கு பிடித்த ஒரே ஒரு நிரலியை மட்டும் கணினியில் வைத்து கொள்ளுங்கள். தேவையில்லாத மற்ற நிரலிகளை அப்புறப் படுத்தி விடுங்கள்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்கள் கணினி உங்கள் பேச்சைக் கேட்கும். இல்லை என்றால் மன்னியுங்கள்... அம்மி மிதிக்காது. அருந்ததி பார்க்காது. படுத்துத் தூங்கப் பாய் மட்டும் கேட்கும். புரியும் என்று நினைக்கிறேன்.

திருவாளர்.ஆக்சிஜன், லாபு, நெ.செ.
கே: கணினியை ஒரு தெய்வமாக நினைத்துக் கும்பிட வேண்டும் என்று உங்களுடைய வலைப்பதிவில் (15.9.2009 Word Press) எழுதி இருக்கிறீர்கள். இருந்தாலும் அது எனக்குச் சரியாகப் படவில்லை. மனிதன் கண்டுபிடித்த ஒரு சாதனத்தை எப்படி தெய்வமாக நினைத்துக் கும்பிடுவது  என்பது தான் புரியவில்லை. இது என் கருத்து.


ப: (சில காரணங்களுக்காக உங்களுடைய உண்மையான பெயர் வெளியிடப்பட வில்லை)
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளி நாட்டில் ஒரு தமிழ் இளைஞர் ஒரு நாய்க்கு தாலி கட்டி அதை தன் மனைவியாக்கிக் கொண்டார். பலர் அதைப் படித்தும் இருப்பார்கள். அது அவருக்குச் சரியாகப் பட்டது. செய்தார்.

யாருக்கு எது சரியாகப் படுகிறதோ அதை அவர்கள் செய்கிறார்கள். அவ்வளவு தான். அவர் எப்படி குடும்பம் நடத்துகிறார் என்பது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதில் சம்பந்தப் பட நமக்கு உரிமை இல்லை. சரியா. நம்ப கதைக்கு வருவோம்.

கலைமகளின் மறு வடிவமான பாட நூல்களையும், அச்சடித்த எழுத்துப் படிவங்களையும் நாம் தொட்டுக் கும்பிட வில்லையா. நீங்கள் கும்பிட்டு இருக்க மாட்டீர்கள். அதான் இந்தக் கேள்வியைக் கேட்டு இருக்கிறீர்கள்.

கல்லையும் புல்லையும் தெய்வமாக நினைத்துக் கும்பிடும் மனிதர்கள் வாழும் அதே மண்ணில் தான் நானும் வாழ்கின்றேன். கணினியை ஒரு  தெய்வமாக நினைக்கிறேன். அதனால் எதுவும் குறைஞ்சு விடப் போவதில்லை. என் கண்களுக்கு கணினி ஒரு தெய்வமாகத் தெரிகின்றது. அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.

ஆறறிவு படைத்த மனிதனையே மிஞ்சிப் போகும் கணினி மனுக்குலத்திற்கு ஒரு ஜீவநாடி. எனக்கு தெய்வமாகப் படுகின்றது. ஆனால், ஆறறிவு இருந்தும் ஐந்தறிவில் மோப்பம் பிடிக்கும் ஒரு சில கண்களுக்கு கணினி ஒரு தெய்வமாகத் தெரியும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது என் கருத்து.

No comments:

Post a Comment