20 நவம்பர் 2011

கணினியும் நீங்களும் – 121

அம்மணி சுப்பிரமணியம்  ammanee@ymail.com
கே: உலகத்தின் மக்கள் தொகை 7 பில்லியனை இன்னும் சில வாரங்களில் தொட்டுவிடும் என்று சொல்கிறார்கள். உங்கள் இணையம் என்ன சொல்கிறது?


ப: 1960-இல் உலக மக்கள் தொகை 3.5 பில்லியனாக இருந்தது.  ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் இரட்டிப்பாகி விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் ஏழு பில்லியனைத் தொட்டு விடும் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட்டு கட்டுப்படி ஆகுமா. இப்போதே பல ஏழை நாடுகள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நிற்கின்றன. அதை விடுங்கள். உங்களுக்கு ஓர் அதிசயமான நிரலியைத் தருகிறேன்.

நம்முடைய மனித இனம்  தோன்றிய காலத்தில் இருந்து நீங்கள் எத்தனையாவது மனிதராகப் பிறந்து இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லும் ஓர் இணையத் தளம் உருவாக்கப் பட்டுள்ளது. இதை லண்டன் பி.பி.சி. வானொலி நிலையம் உருவாக்கி இருக்கிறது. அதில் உங்களுடைய பிறந்த தேதியைக் கொடுத்தால் போதும். நீங்கள் இந்த உலகில் எத்தனையாவது மனிதராகப் பிறந்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுகிறது. அது மட்டும் இல்லை. உலகில் இதுவரை வாழ்ந்த மனிதர்களில்  நீங்கள் எத்தனையாவது மனிதராக வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் சொல்லி விடுகிறது.  நல்ல ஓர் அருமையான நிரலி.

அதன் முகவரி: http://www.bbc.co.uk/news/world-15391515.
இந்த இணையத் தளம் Global Footprint Network எனும் இணையத் தளத்துடன் இணைந்து செயல் படுகிறது.

என் பிறந்த தேதியைக் கொடுத்தேன். இப்போது இந்த உலகில் வாழும் மனிதர்களில் நான் 2,478,881,987 ஆவதாகப் பிறந்தவன் என்று சொல்கிறது. இதுவரை பூமியில் வாழ்ந்தவர்களில் நான் 75,484,479,557 ஆகப் பிறந்த மனிதன் என்றும் சொல்கிறது.

நம்முடைய பூமியில் வாழ்ந்த அந்த மனிதர்களில் அசோகர், அலெக்ஸாண்டர், ஜெங்கிஸ்கான், நெப்போலியன், மகாத்மா, அன்னை திரேசா போன்ற மாமனிதர்களுடன் மலாக்கா பரமேஸ்வராவும் இருக்கிறார். கடாரம் கொண்ட ராஜா ராஜா சோழனும் இருக்கிறார். அதில் நானும் நீங்களும் இருக்கிறோம். மனதிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கின்ரது. கணினி கணக்குப் பண்ணிச் சொல்லுவதை நம்பித் தானே ஆக வேண்டி உள்ளது. எதற்கும் நீங்கள் முயற்சி செய்து பாருங்களேன்.


அசோக் முகிலன்
கே: சென்ற வாரத்திய ‘கணினியும் நீங்களும்பகுதியில் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் காஞ்சிபுர காஞ்சி ஆசிரமத்திற்குப் போய் புத்த மதத்தைத் தழுவியதாக எழுதி இருந்தீர்கள். ஆனால், உண்மையில் முதலில் அவர் இந்து சமயத்தைத் தழுவினார் என்பதைப் பற்றி எந்தத் தகவலையும் தரவில்லை. அவர் அமெரிக்காவில் படிக்கும் போது ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு உணவிற்காக ஹரே கிருஷ்ணா ஆசிரமத்திற்கு ஏழு மைல் நடந்தே போய் இருக்கிறார் என்பதையும் நீங்கள் எழுதவில்லை.

ப: தவற்றைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. யானைக்கும் அடி சறுக்கும் தெரியும் இல்லையா. என்ன செய்வது. வழுக்கி விழுந்து விட்டது. தூக்கி விட்டதற்கு மறுபடியும் நன்றிகள். இன்னொரு விஷயம். ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் காஞ்சிபுர காஞ்சி ஆசிரமத்தில் இந்து சமயத்தைத் தழுவியது உண்மை. பின்னர், அமெரிக்கா திரும்பிய போது புத்த மதத்தைத் தழுவி இருந்தார் என்பதும் உண்மை. ஒரு சில நாட்கள் இந்து சமயத்தில் ஐக்கியமாகி இருந்தார். 

இந்த இடத்தில் தான் குழப்பம் வந்தது. அதனால், ஒட்டு மொத்தமாக அவரைப் புத்து சமயத்தவர் என்று எழுதி விட்டேன். தம்பி அசோக்கு... இப்படி எல்லாம் கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு படிப்பீர்கள் என்று தெரியாமல் போய் விட்டது ஐயா. இனிமேல் பார்த்துப் பதனமாய் எழுத முயற்சி செய்கிறேன்.


சேகரன் சுபரத்தினம்  segaran_vasan@gmail.com
கே: பேஸ்புக் போல வேறு இணையத் தளங்கள் உள்ளனவா?
ப: ஒரு முப்பது நாற்பது சமூகத் தளங்கள் உள்ளன. அவற்றில் சில பிரபலமான தளங்களின் பெயர்களைத் தருகிறேன். Bebo, Flickr, Orkut, Mosoto, Wallop, Mashable, Myspace, Linkedin,  Youtube,  Tagged,  Xing,  Living Social போன்றவை நம்பகரமான தளங்கள். இவற்றில் என்னுடைய தேர்வு : ஆர்க்குட், யூ டியுப்.



ராஜ் பாய்  rajboy42@yahoo.com
கே: Microsoft Excel இல் IF  எனும் கட்டளையை எப்படி பயன்படுத்துவது? பலருக்கு சரியாகப் புரியவில்லை. அதைப் பயன்படுத்துவது சிரமம் என்று சிலர் சொல்கிறார்கள்.


ப: பொதுவாக, Microsoft Office இல் Excel என்பது மிகவும்  பயன் தரும் நிரலி ஆகும். ஆனால் இந்த எக்சலில் நூற்றுக்கணக்கான Functions எனும் செயலாற்றிகள் உள்ளன.  இந்தச் செயலாற்றிகளைச் சூத்திரங்கள் என்று அழைக்கலாம். இந்தச் சூத்திரங்களை முழுமையாகப் பயன்படுத்துபவர்கள் மிக மிகக் குறைவு. எக்சலை வைத்துக் கொண்டு ஒரு சின்ன மினிமார்க்கெட்டின் கணக்கு வழக்குகளைச் சரியாகச் செய்து விட முடியும். IF  எனும் கட்டளை எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

IF நிபந்தனையின் அமைப்பு : (Syntax of Ifcondition)

=if(condition, value if true, value if false)

Condition என்பதில் நமக்குத் தேவையான கட்டளைகளைக் கொடுக்க வேண்டும்.

நாம் கொடுக்கும் கட்டளை சரியாக இருந்தால் சரியான மதிப்பு வரும். தவறாக இருந்தால் தவறான மதிப்பு வரும்.


ஒரு சின்ன எடுத்துக்காட்டு. ஒருவருடைய வயது 17 க்கும் மேல் இருந்தால் அவர் மலேசியாவில் கார் ஓட்டத் தகுதி பெற்றவர். இல்லை என்றால் கார் ஓட்டத் தகுதி இல்லாதவர். இதை எப்படி எக்சலில் கட்டளை பிறபிப்பது.

=if(age>18,"Eligible to drive","No eligible")
எக்சலில் பயன்படுத்தும் முறை : =if(A1>18,"Eligible to drive", "No eligible")

2. சரி, ஓர் அடகுக் கடையில் வட்டி வசூல் செய்யப் படுவதை எப்படி எக்சலில் குறிப்பிடுவது. பொதுவாக, மலேசியாவில் 100 ரிங்கிட்டிற்கு மேல் இருந்தால் இரண்டு விழுக்காடு வட்டி.  100 ரிங்கிட்டிற்கு கீழ் இருந்தால் 2.5 விழுக்காடு வட்டி. இது ஓர் எடுத்துக்காட்டு தான்.  இதை எப்படி IF கட்டளையில் செயல்படுத்துவது

=if(amount>100, amount*2, amount*2.5)
எக்சலில் பயன்படுத்தும் முறை : =if(A1>100,A1*2,A1*2.5)
அடுத்து அடுத்து வரும் பகுதிகளில் இதைப் பற்றி விளக்கமாகச் சொல்கிறேன். இப்போதைக்கு இது போதும்

1 கருத்து: