21 September 2012

தாஜ் மகால் சரிந்து வருகிறது

[இந்தக் கட்டுரை 07.07.2012 மலேசியா தினக்குரல் நாளிதழில் பிரசுரமானது]
லக அதிசயங்களில் ஓர் உன்னதமான ஓவியம் தாஜ் மகால். வாழ்ந்த தலைமுறைகளுக்கு மகத்துவம் சொன்ன தத்துவம். வாழ்கின்ற தலைமுறைக்கு மகிமைகளைப் பேசும் சித்தாந்தம். ஆழமான அன்பையும் பாசத்தையும் அடையாளமாகக் காட்டும் ஓர் அழகுச் சின்னம். அப்பேர்ப்பட்ட ஓர் அழகு ஓவியம், இப்போது சரிந்து விழும் ஆபத்தில் சிக்கி நிற்கிறது. மனதை நிலைகுலையச் செய்யும் வேதனையான செய்தி.இந்தியாவை ஆட்சி செய்த பேரரசுகளில் மொகலாயப் பேரரசு என்பது மறக்க முடியாத மாபெரும் அரசு. வரலாற்றுச் சுவடுகளில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை எழுதிச் சென்ற சாம்ராஜ்யம். அந்தச் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது மன்னன் ஷா ஜகான். அவர் கட்டியதே இந்தத் தாஜ் மகால்.

அவருடைய இளம் மனைவி மும்தாஜ் மகால். இவர் 1631இல் தன்னுடைய பதினான்காவது குழந்தையைப் பெறும் போது இறந்து போனார். ஏற்கனவே ஏழு குழந்தைகள் இறந்து போயின. அவருடைய நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு தாஜ் மகால் கட்டப்பட்டது.  


1654 ஆம் ஆண்டு வரையில் கட்டுமானம் நடைபெற்றது. தவிர,  இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின் நாள்களில் தாஜ் மகாலைப் போன்று வேறு ஒரு கட்டடத்தை உருவாக்கக் கூடாது என்பதற்காக அவர்களின் கைகள் துண்டிக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அதுவும் ஒரு புரியாத புதிர்.

இந்தக் கட்டத்தில் அந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய ‘ஜீவியமா தெய்வீகக் காதல் சின்னமா… மொகலாய சாம்ராஜ்ய தீபமே - சிரித்த முகத்தோடு நினைவில் பொங்கும் ரூபமே… மும்தாஜே’ எனும் பாடல் நினைவிற்கு வருகிறது.தாஜ் மகால் உலக அளவில் கோடிக் கோடியான மனிதர்களுக்கு தெரிந்த ஒரு வரலாற்றுக் காவியம். இது ஆக்ராவில் இருக்கிறது. இக்கட்டிடம் முழுவதும் சலவைக் கல் எனும் பளிங்குக் கற்களால் ஆனது.  

ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் இருக்கிறது. உலக அதிசயங்களின் பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்தச் சலைவைக் கல் அதிசயத்தை பார்ப்பதற்கு ஆண்டு தோறும் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஆக்ராவிற்கு வருகின்றனர்.சரி. 360 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தாஜ் மகால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர். கட்டடத்தின் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன.

தாஜ்மகால் நீண்டு நிலைத்து நிற்பதற்கு யமுனை நதி ஒரு முக்கிய காரணமாகும். ஆனால், அந்த நதி நாளுக்கு நாள் சாக்கடையாக மாறிவருகிறது. தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. காடுகள் அழிக்கப் படுகின்றன. இந்தச் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் தாஜ் மகாலையே அழித்து விடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.அத்துடன், தாஜ்மகாலின் அடிக்கட்டுமானம் வேறு தளர்ந்து வருகிறது. மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் விழிப்புணர்வு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சமாதியில் விரிசல்கள் ஏற்பட்டு வருவதாக கடந்த 2010ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 4 தூபிகளும் ஆட்டம் கண்டு வருகின்றன.

உலகப்புகழ் மங்காது இருந்து வரும் காதலர்களின் இலட்சியச் சின்னமான இந்த தாஜ் மகால் அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும். உலக மக்கள் ஒன்று திரண்டு ஆதரவளிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறைகூவல் விடுக்கின்றனர்.’தாஜ்மகாலைக் காப்பாற்றுங்கள்’ எனும் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவராக ராம் ஷங்கர் கதேரியா என்பவர் இருக்கிறார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர். இன்னும் 3 முதல் 5 ஆண்டுகளில் தாஜ்மகால் இடிந்து விழும் அபாயம் உள்ளது என்று இந்திய அரசாங்கத்திடம் அறிக்கை சமப்பித்து உள்ளார்.

மேலும் கட்டிடக் கலையின் உன்னத வடிவமான இந்தத் தாஜ்மகாலின் பளபளப்பும் மறைந்து வருகிறது. இப்படியே சென்றால் நுழைவாயிலில் இருக்கும் தூபிகளும் சரிந்து விழும் அபாயம் உள்ளது என்கிறார்.கடந்த 30 ஆண்டுகளாக அடிக்கட்டுமானத்தைப் பார்வையிட யாரையும் இந்திய அரசு அனுமதிக்கவில்லை, அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என்றால் அப்புறம் ஏன் யாரையும் அனுமதிப்பது இல்லை என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தாஜ் மகாலுக்கு அருகில் மதுரா எண்ணெய்த் தொழில்சாலை இருக்கிறது. ஒரு நெடுஞ்சாலையும் இருக்கிறது. தொழில்சாலையில் இருந்து வெளியாகும் புகையும், வாகனங்களின் புகையும் தாஜ் மகாலை மஞ்சள் நிறமாக மாற்றி வருகின்றன.

அதனால், தாஜ் மகாலுக்கு அருகில் அரை மைல் தூரத்திற்கு வாகனங்கள் செல்லக்கூடாது என்று அண்மையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆக்ரா நகரின் சுற்றுப்பகுதிகளில் துளசிச் செடிகளை நடப் பட்டு வருகின்றன. இதுவரை முப்பது இலட்சம் செடிகள் நடப்பட்டுள்ளன. துளசிச் செடிகளுக்கு காற்றுத் தூய்மைக் கேட்டைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

தாஜ் மகாலைப் பற்றி மிகுந்த நிபுணத்துவம் பெற்ற வரலாற்று ஆசிரியர் ராநாத். அவர் சொல்கிறார். ‘யமுனை நதியின் ஓரத்தில் இருக்கிறது தாஜ்மகால். அந்த நதி இப்போது வற்றிக் கொண்டு வருகிறது. அதனால் இப்போது தாஜ்மகாலின் அடித்தளங்கள் ஆட்டம் கண்டு வருகின்றன’ என்கிறார்.

யமுனை நதி வறண்டு போனால் தாஜ்மகால் நீடிக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகக் கூறுகிறார். இந்தச் செய்தியைக் கேள்வி பட்டதும் மனதிற்கு வேதனையாக இருக்கிறது.

உடனடியாக சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இல்லை என்றால் தாஜ்மகாலின் ஆயுள் வெகு விரைவில் ஒரு கேள்விக் குறியாகிவிடும். உலகம் ஓர் அதிசயத்தை இழந்துவிடும். எதிர்காலச் சந்தியினர் ஏடுகளில் மட்டுமே படிக்க முடியும்.

No comments:

Post a Comment