28 அக்டோபர் 2012

நாகப் பாம்புகளிடம் மாணிக்கக் கல் இருக்கிறதா?

மலேசியாவில்  ’மயில்’ மாத இதழில் ‘அறியாமையும் அறிவியலும்’ எனும் கட்டுரைத் தொடரை எழுதி வருகிறேன். இந்தக் கட்டுரை ஜனவரி 2012 இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

அம்பிகா சீனிவாசன் அவர்களை பற்றி விக்கிப்பீடியாவில் எழுதப்பட்டுள்ளது.


மயில் தாளிகை மலேசியா

அது ஒரு டுரியான் தோப்பு. நள்ளிரவு நேரம். பற்றாக்குறைக்கு அன்று அமாவாசை. கண்களுக்கு எட்டிய தூரம் வரையில் இருட்டு. ஆனால், வானத்தில் லேசாக வெளிர் பட்டிருந்தது. அந்த டுரியான் தோப்பின் நட்ட நடுவில் ஓர் அத்தாப்புக் குடிசை. விளக்குகளை அணைத்துவிட்டு திருப்பதி கண்களை மூடினார்.


இரவு நேரங்களில் டுரியான் பழங்களைத் திருடிச் செல்லும் கும்பலைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும். அதற்காக விளக்குகளை அணைத்து வைத்து இருந்தார். அப்போது குடிசைக்கு மிக அருகில், அதாவது பரணுக்கு கீழே உஷ்ஷ்... உஷ்ஷ்... எனும் ஒரு நீண்ட நெடிய சீறல் ஒலி. கண்களைத் திறந்து பார்த்தார்.



அங்கே அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலைய வைத்தது. ஒரு பெரிய நாகப்பாம்பு. வளைந்து வளைந்து ஊர்ந்து சென்றது. தொடர்ந்தால் போல இரத்தத்தை உறைய வைக்கும் சீறல் சத்தம்.

மூச்சை ‘தம்’ கட்டிப் பிடித்துக் கொண்டார். அப்போது அந்தப் பாம்பு தன் வாயில் வைத்து இருந்த மாணிக்கக் கல்லை கீழே உமிழ்ந்து போட்டது. அந்த மாணிக்கக் கல்லின் வெளிச்சத்தில் இரையைத் தேடத் தொடங்கியது. 

அசல் மாணிக்கக் கல்

பாம்பு கொஞ்ச தூரம் போய்விட்டது. குடிசையில் இருந்து மெதுவாகக் கீழே இறங்கிய திருப்பதி அருகில் கிடந்த மணலை அள்ளி மாணிக்கக் கல்லின் மீது போட்டு அதை மறைத்து விட்டார்.

வேகம் வேகமாக குடிசை மேல் ஏறி மறைந்து கொண்டார். வெளிச்சம் இல்லாததால் பழைய இடத்திற்குத் திரும்பிய நாகப்பாம்பு, உமிழ்ந்து போட்ட மாணிக்கக் கல்லைத் தேடத் தொடங்கியது. வெகு நேரம் தேடியது. மாணிக்கக் கல் கிடைக்கவில்லை.

பூனையின் பார்வையில் ஐஸ்வர்யா ராய்
பூனையின் பார்வையில் ஐஸ்வர்யா ராய்

வேதனை அடைந்த நாகப்பாம்பு, நிலத்தை மூன்று முறை ஆக்ரோஷமாகக் கொத்தியது. அதன் பின்னர் அது இறந்து போனது. கீழே நடந்த அனைத்தையும் திருப்பதி பார்த்துக் கொண்டிருந்தார்.  

பாம்பு இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட அவர் மேலே இருந்து கீழே இறங்கி வந்தார். மணலை அப்புறப் படுத்தி விட்டு, மாணிக்கக் கல்லை மட்டும் எடுத்துக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தார்.

அதன் பின்னர் அவருக்கு இலட்சக் கணக்கில் லாட்டரி அடித்தது. பெரிய பணக்காரன் ஆனார். அப்புறம் என்ன. ஊரில் இருந்தவர்கள் எல்லாம் அடித்துப் பிடித்துக் கொண்டு அவருக்கு பெண் கொடுக்க முன் வந்தார்கள். ஏக போக வாழ்க்கை வாழ்ந்தார்.

மனிதப் பார்வையில் ஐஸ்வர்யா ராய்
மனிதப் பார்வையில் ஐஸ்வர்யா ராய்

திருப்பதி என்பவர் திருப்பதி மலைக்கு திரும்பத் திரும்பப் போய் வந்தார். ஆனால் என்ன, அவரைப் பற்றி யாரும் இன்னும் வரலாற்றில் எழுதவில்லை. ஆக, உங்களுக்கும் பணக்காரனாக வேண்டும் என்கிற ஆசை வந்து இருக்கும்.  

அதனால், இரவு நேரத்தில் நீங்களும் நாகப் பாம்புகளைத் தேடி காடு மலைகளுக்குப் போய் வாருங்கள். இன்னும் ஒன்று. நீங்கள் தனந்தனி ஆளாகத் தான் போக வேண்டும். துணைக்கு யாரையும் கூட்டிக் கொண்டு போக முடியாது. சரியா. அப்புறம் காட்டிலேயே படுத்துத் தூங்க வேண்டும்.

காளை மாட்டின் கண்களில் ஐஸ்வர்யா ராய்
காளை மாட்டின் கண்களில் ஐஸ்வர்யா ராய்

புலி, யானை, கரடி இவற்றுக்கு எல்லாம் நீங்கள் பயப்படக் கூடாது. மாணிக்கக் கல் என்கின்ற மந்திரச் சொல்லைச் சொல்லி கொண்டே இருங்கள். உங்களுக்கும் மாணிக்கக் கல் கிடைக்கலாம். வைரம் வைடூரியம், கோமேதக கற்களும் கிடைக்கலாம். அப்புறம் என்ன. பில் கேட்ஸ் அவர்களுடன் கோடிகளில் கூட மோதிப் பார்க்கலாம்.

அண்மையில் ஒரு நண்பர் இப்படி ஒரு கதையை ஏற்ற இறக்கத் தொனிகளில் படு சுவாரஸ்யமாக என்னிடம் சொன்னார். சொன்னவர் பல்கலைக்கழ்கத்திற்குப் போய் பட்டம் வாங்கி வந்தவர். நன்றாகப் படித்தவர். 

மனிதக் கண்களில் சிநேகா
மனிதக் கண்களில் சிநேகா
இவர் மட்டும் அல்ல. இவரைப் போல பலர் இந்த மாதிரியான கதைகளைச் சொல்லி வருகிறார்கள். சின்ன வயதில் தோட்டப் புறத்தில் வாழ்ந்த போது இந்த மாதிரி கதைகளை நிறைய கேட்டு இருக்கிறேன்.

உண்மையிலேயே நாகப்பாம்பு அமாவாசை இரவு நேரத்தில் மாணிக்கக் கல்லைக் கீழே கழற்றி வைக்குமா? இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது. சரி. அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

காளை மாட்டின் கண்களில் கண்னன் ராதை
காளை மாட்டின் கண்களில் கண்ணன் ராதை

ஒரு நாகப்பாம்பு 100 வருடம் உயிர்வாழும் என்று சொல்கிறார்கள். அந்தப் பாம்பு தன் வாழ் நாளில் யாரையும் தீண்டாமல் இருந்தால் அதன் விஷம் இறுகிப் போய் ஒரு மாணிக்கக் கல்லாக மாறும். அந்த மாணிக்கக் கல்லை இரவு நேரங்களில் பாம்பு உமிழ்ந்துவிட்டு அதன் வெளிச்சத்தில் இரை தேடப் போகும் என்பது எல்லாம் முழுக்க முழுக்க கற்பனைக் கதைகளே.  

அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. உண்மையில் மாணிக்கக் கல் என்பது ‘அலுமினியம் ஆக்சைடு’ Aluminum Oxide (Al 2 O3). மற்றும் குரோமியம் கலந்த ஒரு கனிமப்பொருள் ஆகும்.

மனிதக் கண்களில் கண்னன் ராதை
 மனிதக் கண்களில் கண்ணன் ராதை

மாணிக்கக் கல்லை ஆங்கிலத்தில் Ruby என்று அழைக்கிறார்கள். இந்த மாணிக்கக் கல் இளம் அல்லது அடர் சிவப்பு நிறத்தில் உள்ள ஒரு படிக்கக்கல் ஆகும். இயற்கையாக கிடைக்கும் மாணிக்கம் மிகத் தூய்மையாக இருக்காது.

வைரத்தை போலவே இதுவும் பட்டை தீட்டப்பட வேண்டும். கல்லின் நிறம், அமைப்பு, ஒளிரும் தன்மை, எடை ஆகியவற்றை கொண்டே அதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகின்றது.

மாணிக்கம் 2050 செண்டிகிரேட் வெப்பத்தில் உருகக்கூடியது. பர்மா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா, தென் ஆப்ரிக்கா, இந்தியா, கென்யா, நேபாளம், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் வெட்டி எடுக்கப்படுகிறது.

வைரம் (Diamond), மாணிக்கம் (Ruby), மரகதம் (Emerald), வைடூரியம் (Cat’s eye), கோமேதகம் (Hessonite), முத்து (Pearl), பவளம் (Coral), புஷ்பராகம் (Topaz), நீலம் (Sapphire) ஆகிய இந்த ஒன்பது கற்களும் சேர்ந்துதான் நவரத்தினம் என்று அழைக்கப்படுகிறது. பாம்புகளுக்கு இந்த நவரத்தினக் கற்களைப் பற்றி எதுவுமே தெரியாது. பாவம் அந்தப் பாம்புகள்.

உண்மையில் பாம்புகளைப் பற்றி பல தவறான கருத்துகள் சொல்லப் படுகின்றன. பழிவாங்கும் குணம் பாம்புகளுக்கு உண்டு என்று தமிழ்ப் படங்களில் சித்தரிக்கப் படுகின்றது. சிவப்பு சேலை கட்டிய பெண்களை மாடுகள் விரட்டுவது போலத்தான் பாம்புகளுக்கும் கெட்ட பெயர்.  

உண்மையில் மாடுகளுக்கு கறுப்பு வெள்ளையைத் தவிர வேறு எந்தக் கலருமே தெரியாது. அந்த மாதிரி பாம்புகளுக்கு எந்த பொருளையும் தெளிவாகப் பார்க்க இயலாது. அதாவது அதற்கு எல்லாமே சிவப்பும் மஞ்சளும் கலந்த ஒரு மங்கலான பொருளாகத்தான் தெரியும்.

பொருட்களின் அசைவுகளைக் கொண்டுதான் மரம், செடி, ஊர்வன, பறப்பன என்று அறிந்து கொள்கிறது. ஆக, எந்தப் பொருளையும் தெளிவாகப் பார்க்க இயலாத ஓர் ஐந்தறிவு உயிரினத்திற்கு எப்படி குறிப்பிட்ட ஒரு மனிதனை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

எல்லா பாம்புகளும் அசைவம் தான். ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம். பாம்பு பால் குடிக்கவே குடிக்காது. தமிழ் சினிமாக்களிலும் சீரியசான சீரியல்களிலும் தான் பாம்பு பால் குடிப்பதைப் பார்க்கலாம்.  

உண்மையில் எந்தப் பாம்பும் பால் குடிக்காது. மேலும் பாலைக் குடிப்பதற்க்கான எந்த ஒரு வசதியான உறுப்பு அமைப்பும் அதன் வாயில் இல்லை. அதற்கு காரணம் பாம்புக்கு நாக்கு கிடையாது.

நாக்கை போல பாம்பு வெளியே நீட்டுவது அதனுடைய மூக்கைதான். அதன் மூக்கை வைத்துதான் தன் அருகில் இருக்கும் இரையின் வாசனையை உணர்ந்து கொள்கிறது. அந்தப் பொருளின் அசைவுகளை வைத்து அது என்ன பொருள் என்பதையும் அனுமானிக்கிறது. இன்னும் ஒன்று.

பாம்பு செத்த உயிரினம் எதையுமே சாப்பிடாது. அது தவளையாக இருந்தாலும் சரி இல்லை தண்டூரிச் சிக்கனாக இருந்தாலும் சரி சாப்பிடவே சாப்பிடாது. தனக்குரிய இரை எதுவாக இருந்தாலும் அது உயிருடன் இருந்தால் மட்டுமே பாம்பு அதை விழுங்கும்.

பாம்புக்கு காது கிடையாது. ஆகையால் பாம்பு மகுடியின் இசைக்கு ஏற்ப குச்சுப்புடி ஆடுகிறது பரதநாட்டியம் ஆடுகிறது என்பது எல்லாம் சும்மா பேச்சு. 

பாம்பினால் தனது வயிற்றுத் தசை மூலம் நிலத்தில் ஏற்படும் எந்த ஒரு சின்ன அதிர்வையும் உணர்ந்து கொள்ள முடியும். 100 அடி தூரத்தில் நடந்து வரும் ஒரு மனிதனின் காலடி சத்தத்தைக் கேட்ட அந்த வினாடியே அந்த இடத்தை விட்டு ஊர்ந்து சென்று விடும்.

ஆக, இனி எதிர்காலத்தில் யாராவது பாம்பு பால் குடிக்கிறது, பரதநாட்டியம் ஆடுகிறது, மாணிக்கக் கல்லைக் கழற்றிப் போடுகிறது, பழி வாங்க வாசல் கதவைத் தட்டுகிறது என்று சொன்னால்... 

தயவு செய்து இங்கே நான் சொன்னதைச் சொல்லுங்கள். மீறிப் போனால் ஐயா சாலமன் பாப்பையாவைக் கூட்டி வந்து ’ஒரு பாம்பு பரநாட்டியம் ஆடுமா ஆடாதா’ என்று ஒரு பட்டி மன்றத்தை நடத்தி விடுவோம்!

26 அக்டோபர் 2012

அஸ்னால் போல்க்கியா புருணை சுல்தான்

(இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 15.10.2012 நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது)

ஒரே ஒரு விநாடி நேரம். இந்த உலகத்தில் ஒரு விநாடி நேரத்தில் என்ன என்ன நடக்கும். கண்ணை மூடிக் கொண்டு கொஞ்சம் நேரம் கற்பனை செய்து பாருங்கள். கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்கே இரண்டு விநாடிகள். அப்புறம் என்ன இதில் உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்பது என்று கேட்கிறீர்களா. பரவாயில்லை. சண்டை வேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன்.
புருணை சுல்தான்
ஒரு விநாடி நேரத்தில் மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு குழந்தை ஆசியாவில் பிறந்தால், இன்னும் ஒன்று ஆப்பிரிக்காவில் பிறக்கிறது. இன்னும் ஒன்று ஆர்டிக் துருவத்தில் பிறக்கிறது. இந்த இரண்டு வாசகங்களையும் படித்து முடிப்பதற்குள் முப்பது குழந்தைகள் பிறந்து விடுகின்றன. ஆக, ஒரு மணி நேரத்தில் 10,000 குழந்தைகள். ஒரு நாளைக்கு 250,000 குழந்தைகள். மிச்சத்தை நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அஸ்னால் போல்க்கியாவின் அரண்மனை
ஒரு விநாடியில் 12 கணினிகள் விற்கப்படுகின்றன. இரண்டு பிளேக் பெரி கைப்பேசிகள் விற்கப்படுகின்றன. 700 விரலிகள் எனும் Thumb Drives விற்கப்படுகின்றன. 15 ஐபோன்கள் விற்கப்படுகின்றன. 20 இலட்சம் பேர் பாலுணர்வுக் கிளர்ச்சிப் படங்களைப் பார்க்கிறார்கள். சராசரியாக ஒரு விநாடிக்கு ஓர் இறப்பு நடக்கிறது.

மகளின் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார்.
இதன் சக்கரங்கள் அசல் தங்கத்தால் செய்யப்பட்டவை.
ஒன்று. இரண்டு. மூன்று. நான்கு. ஐந்து, என்று சொல்லி முடிப்பதற்குள் உலகம் பூராவும் ஐம்பது கைப்பேசிகள் விற்கப்படுகிறன. ஒரு கார் விற்கப்படுகிறது. இருபது கோடி ரிங்கிட்டிற்கு போர் ஆயுதங்கள் பேரம் பேசப்படுகின்றன. பத்து இலடம் பேர் விமானத்தில் பறக்கிறார்கள்.

அஸ்னால் போல்க்கியாவின் மகள்
இன்னும் ஒரு வேதனையான செய்தி. ஒரு நாளைக்கு ஆப்பிரிக்காவில் மட்டும் 2000 குழந்தைகள் பசிப் பட்டினியால் செத்துப் போகின்றன. இங்கே நம்ப நாட்டில் சோற்றைப் போட்டு பிள்ளைகளைச் சாப்பிடச் சொல்லிக் கெஞ்ச வேண்டியதாக இருக்கிறது. கோலாலம்பூர், பெட்டாலிங் தெரு ஓரத்தில் ஒரு துண்டை விரித்துப் போட்டாலும் போதும். சொல்லி வைத்து இரண்டு மாதத்தில் ஒரு குட்டி ஆனந்தகிருஷ்ணனாகி விடலாம். நான் சொல்லவில்லை. சிலர் பேசிக் கொள்கிறார்கள்.

உலகில் இந்த மாதிரி 10 கார்கள் மட்டுமே உள்ளன.
அதை விடுங்கள். அதற்கு நேர்மாறாக சில வீடுகளில் ரொம்பவுமே நடக்கிறது. நொறுக்குத் தீனி எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். முப்பொழுதும் கைப்பேசிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அங்கேயே அதிலேயே  24 மணி நேரமும் தொங்கி வழிய வேண்டும். சீரியல் நாடகங்களைப் பார்த்துக் குடும்பமே அழுதுத் தொலைக்க வேண்டும். அது ஒரு நல்ல நவீனமான கலாசாரம் என்று சிலர் நினைத்துக் கொள்ளலாம். அப்படி நினைத்தால், அதைவிட ஒரு மோசமான அபச்சாரம் உலகத்தில் வேறு எதுவும் இருக்கவே முடியாது. விஷயத்திற்கு வருகிறேன்.
அரண்மனையின் உள்ளே
இதை எல்லாம் தாண்டி இன்னும் ஒரு விசயம் வருகிறது. நம்ப நாட்டிற்கு பக்கத்தில் ஒரு நாடு இருக்கிறது. அதன் பெயர் புருணை. அதன் அரசரின் பெயர் அஸ்னல் போல்க்கியா ஒரே ஒரு விநாடி நேரத்தில் . அவருடைய கணக்கில் எவ்வளவு பணம் சேர்கிறது தெரியுமா. சொன்னால் நம்பமாட்டீர்கள். விநாடிக்கு 450 ரிங்கிட். ஒரு நிமிடத்திற்கு 28 ஆயிரம் ரிங்கிட்.  ஒரு மணி நேரத்திற்கு 16 இலட்சம் ரிங்கிட். ஒரு நாளைக்கு நான்கு கோடி ரிங்கிட். தொண்டையைக் கொஞ்சம் நனைத்துக் கொள்ளுங்கள்.

தங்கத்தால் செய்யப்பட்ட கழிவறை
மனிதர்களில் சிலர் பிறக்கும் போதே பணக்காரர்களாகப் பிறந்து விடுகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இந்த அஸ்னல் போல்க்கியா. உலகப் பணக்காரர்களின் தலைமகன். செல்வம் கொழிக்கும் நாடான புருணையின் தலைவர். தவிர, அதிபர் பிரதமர் எல்லாம் அவரேதான். அவர் வைத்ததுதான் சட்டம். அவர் கிழித்தக் கோட்டைத் தாண்டிப் போக யாருக்கும் அங்கே துணிச்சல் இல்லை.

விமானத்தில் சுல்தானின் படுக்கை
அஸ்னல் போல்க்கியா  பயன்படுத்தும் பொருட்கள் எல்லாமே தங்கத்தால் ஆனவை. அவர் சாப்பிடப் பயன்படுத்தும் கரண்டி, கத்தி, தட்டு, தாம்பாளம் எல்லாமே தங்கத்தால் செய்யப்பட்டவை. அவர் போட்டு இருக்கிற சட்டை சிலுவார்கூட தங்க வெள்ளி இழைகளால் செய்யப்பட்டவை. அவர் பயன்படுத்தும் கழிவறை இருக்கிறதே, அதுகூட தங்கத்தால் செய்யப்பட்டது.

கழிவரையில் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் வாளி, குவளை எல்லாமே தங்கமோ தங்கம். பல் விலக்க தங்க பிரஷ். சீப்புகூட தங்கத்தால் செய்யப்பட்டது. ஆக, ஒன்றும் பேச வேண்டாம். பேசாமல் படியுங்கள்.

அவர் தங்கி இருக்கும் அரண்மனை உலகத்திலேயே அதிகமான செலவில் கட்டப்பட்டது. எத்தனை கோடி என்று எண்களால் எழுதினால், அதைப் படித்து முடிப்பதற்குள் தலை கிறுகிறுத்துப் போய்விடும். அந்த அரண்மனையில் 1888 அறைகள் உள்ளன. அவற்றில் 650 அறைகள், உயர் மகிழ்ச்சிக்கு வழிகாட்டும் பகட்டான சொகுசு அறைகள். ஒவ்வொரு சொகுசு அறையிலும் எட்டு இலட்சம் ரிங்கிட்டிற்கு அலங்காரப் பொருள்கள்.

ஆக, யாராவது ஒரு விருந்தாளி அங்கே போய்விட்டால், அந்த அரண்மனையின் எல்லா அறைகளையும் சுற்றிப் பார்க்க 24 மணி நேரம் பிடிக்கும் என்று கணக்குப் போட்டுச் சொல்கிறார்கள். அதுவும் ஓர் அறையில் முப்பது விநாடி நேரம் செல்வழித்து அரக்க பரக்க ஓடினாலும் முழுசாக ஒரு நாள் பிடித்துவிடுமாம்.  

அப்புறம் அந்த அரண்மனையில் தனித்தனி குளியலறைகள் என்றால் 257 அறைகள் உள்ளன. பெரும்பாலானவற்றின் உள்அலங்காரப் பொருள்கள் தங்கத்தால் இழைக்கப்பட்டவை. அந்த அரண்மனையின் கார் நிறுத்தும் இடத்தில் மட்டும் ஒரே சமயத்தில்  110 கார்களை நிறுத்தி வைக்க முடியும்.

சுல்தான் அஸ்னால் போக்கியாவின் மகளுடைய திருமணம் அண்மையில் நடைபெற்றது. ஒரு நாள் இரண்டு நாள் கல்யாணம் இல்லை. பதினான்கு நாள்களுக்குத் திருமண வைபோகம். 25 நாடுகளின் தலைவர்களும் குடும்பங்களும் வந்து கலந்து கொண்டன. அவர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி ரிங்கிட் செலவு செய்யப்பட்டது. இதுகூட பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், லட்சுமி மிட்டல் என்கிற இந்தியக் கோடீஸ்வரர் தன் மகளுக்கு லண்டனில் திருமணம் செய்து வைத்தார். மூன்று நாள் திருமணத் திருவிழாவிற்கு முப்பது கோடி செலவு செய்தாராம். இந்த லட்சுமி மிட்டல் நொடித்துப் போகும் இரும்பு தொழில்சாலைகளை அடிமாட்டு விலைக்கு வாங்குவார். அங்கே இங்கே பழுது பார்த்து அதை அப்படியே ஐஸ்வரியா மாதிரி அழகு படுத்தி ஜோடித்து, ஆஸ்திரேலியா மாட்டு விலைக்கு விற்றுப் பணம் பார்த்து விடுகிறார். இப்போது உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர். பில் கேட்ஸுக்கு அடுதத நிலை. நம்ப ஊர் ஆனந்தகிருஷணன் இருக்கிறாரே அவர் இவரிடம் கொஞ்சம் தள்ளியேதான் நிற்க வேண்டும்.

அஸ்னால் போல்க்கியாவிடம் இருக்கும் கார்களைப் பற்றிய ஒரு சின்ன தகவலையும் சொல்லிவிடுகிறேன். அவரிடம் 531 மெர்சிடிஸ்கள், 367 பெராரிகள், 362 பெண்ட்லிகள், 185 பி.எம்.டபிள்யூகள், 177 ஜாகுவார்கள், 160 போர்சேகள், 130 ரால்ஸ் ராய்கள், 20 லம்போஜினிகள் என்று மொத்தம் 1932 கார்கள் உள்ளன. இதில் ஒரு ரால்ஸ் ராய் காரின் உடம்புக்கூடு, 24 காரேட் தங்கத்தால் செய்யப்பட்டது. உலகத்திலேயே அதிக விலை உள்ள காரும் இங்கேதான் இருக்கிறது. பெயர் Star of India. அதன் மதிப்பு 42 மில்லியன் ரிங்கிட். 

இவரிடம் Mercedes-Benz CLK GTR எனும் ஒரு மெர்சிடிஸ் ரகக் கார் இருக்கிறது. இதுதான் உலகத்தில் அதிகமான விலை கொண்ட மெர்சிடிஸ் ஆகும். 612 குதிரை சக்தி கொண்டது. ஒரே ஒரு விநாடி நேரத்திற்குள் அதன் வேகம் 60 கிலோ மீட்டரைத் தாண்டிவிடும். பார்முலா ஓன் கார் பந்தயங்களில் பயன்படுத்தப்படும் கார்களையும் வாங்கி அடுக்கி வைத்து இருக்கிறார். அதில் ஒன்று F90 Ferrari Testarossa. இந்த ரகத்தில், உலகத்தில் ஆறே ஆறு கார்கள்தான் உள்ளன.

சேமிப்புக் கிடங்கில் இருக்கும் கார்களில் ஒரு நாளைக்கு ஒரு காரை ஓட்டினாலும் எல்லாக் கார்களையும் ஓட்டி முடிக்க ஐந்து வருடங்கள் பிடிக்குமாம். இந்தக் கார்கள் எல்லாம் இப்போது கார் சேமிப்புக் கிடங்கில் தூசி மண்டிக் கிடக்கின்றன என்பதுதான் வேதனையான செய்தி.

ஒரு கஞ்சில் காரை வாங்கி, அதற்கு ஒழுங்காய்ப் பெட்ரோல் ஊற்றி ஓட்டுவதற்கே இங்கே பலர் விழி பிதுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அங்கே பாருங்கள். விதம் விதமான கார்கள். எல்லாமே ஆடம்பரமான, அட்டகாசமான பகட்டுத்தனமான கார்கள். வாழ்ந்தால் அப்படி வாழ வேண்டும். பெருமூச்சு விட்டுக் கொள்வோம். வேறு என்னதான் செய்வது.

அஸ்னால் போக்கியா 1946 ஜூலை 15ஆம் தேதி பிறந்தவர். 1967ஆம் ஆண்டு புருணையின் சுல்தானாகப் பதவி ஏற்றார். இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். முதல் மனைவியின் பெயர் பெங்கீரான் அனாக் சலேஹா. இரண்டாவது மனைவி ஹஜ்ஜா மரியம். இவர் ஒரு விமானப் பணிப்பெண். 2003 ஆம் ஆண்டு மணவிலக்கு செய்துவிட்டார். 2005ஆம் ஆண்டில் நம்ம ஊர் டி.வி.3 நிகழ்ச்சித் தொகுப்பாளர் அஸ்ரினாஸ் மசார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 33 வயதுகள் வித்தியாசம். இந்தத் திருமணமும் சரிபட்டு வரவில்லை. 2010 இல் விவாகரத்தில் போய் முடிந்தது. இப்போது, அஸ்னால் போக்கியாவிற்கு 12 பிள்ளைகள். ஒன்பது பேரப்பிள்ளைகள்.

இவருடைய தம்பி ஜெப்ரி போல்க்கியாவை நம்பி 1200 கோடி ரிங்கிட் மோசம் செய்யப்பட்டார். அதனால் அவரை தன் குடும்பத்தில் இருந்தே விலக்கி வைத்தும் இருக்கிறார்.

ஆக, பாதாளம் வரையில் பணத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது என்று தெரியாமல், பாவம் மனிதர் தடுமாறிக் கொண்டு இருக்கிறார். உதவி செய்வதாக இருந்தால் சொல்லுங்கள். ஒரு புறாவைப் பிடித்து தூது அனுப்பி வைத்துப் பார்ப்போம். மற்றபடி புறா உயிரோடு திரும்பி வருமா வராதா என்பதற்கு அடியேன் உத்தரவாதம் வழங்க முடியாது.

11 அக்டோபர் 2012

மலேசியத் தமிழர்களும் இணையமும்


மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சென்ற 23.01.2011 ஆம் திகதியில் கோலாலம்பூரில் மலேசிய இணைய விழா நடத்தியது.  அதில் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரை. 

10 அக்டோபர் 2012

தமிழர்கள் மறந்த களப்பிரர்கள்

[இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 09.09.2012 நாளிதழில் வெளிவந்த கட்டுரை]

உலகத் தமிழர்களுக்குத் திருக்குறளைக் கொடுத்தவர்கள். சீவக சிந்தாமணி, முதுமொழிக் காஞ்சியைக் கொடுத்தவர்கள். கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி அந்தாதி என்று எத்தனையோ காப்பியங்களைத் தந்தவர்கள். நாலாடியாரும் இவர்கள் காலத்தில் வந்தது தான். காரைக்கால் அம்மையாரின் நூல்களும், இவர்களின் காலத்து முதன்மை நூல்கள். முத்தொள்ளாயிரமும் திருமந்திரமும் இவர்கள் காலத்தில் வளர்ந்தவைதான். 


தாழிகை, துறை, விருத்தம் எனப் புதிய பா வகைகளைத் தமிழ்க் கவிதைகளுக்கு கொடுத்துச் சென்றவர்கள். அதையும் தாண்டி ஒன்று உள்ளது. இப்போது நாம் எழுதுகிறோமே தமிழ் எழுத்துகள், இவை எல்லாம் சிந்துவெளி பாளி எழுத்துகளாக இருந்தவை. அவற்றை வட்ட எழுத்துகளாக மாற்றியதும் இவர்கள்தாம்.

அப்படிப்பட்ட மனிதர்களின் வரலாறு மறைந்து போய்க் கிடக்கிறது. தமிழர்களின் நினைவுச் சுவடுகளில் இருந்து அந்த மனிதர்கள், ஒட்டு மொத்தமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர். வேதனையான ஆவணங்கள் கோவணங்களைக் கட்டி அழுகின்றன. தயவுசெய்து படியுங்கள். உண்மை புரியும்.

சோழர்களுக்கு புகழாரங்கள்

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள். இவர்களைத் தெரியும்தானே. அசைந்தால் அங்கே ஒன்று. இசைந்தால் இங்கே ஒன்று என்று தமிழகம் முழுமையும் கோயில்களைக் கட்டி அழகு பார்த்தவர்கள். இதில் கடைசியாக வந்த சோழர்களுக்கு மட்டும் பெரிய பெரிய புகழாரங்கள். ஆர்ப்பாட்டமான சுவர் ஓவியங்கள். உலகத்தின் உச்சிக்கே அவர்களை ஏற்றியும் வைத்து இருக்கிறார்கள்.

ஆனால், பல்லவர்களைப் பற்றி அதிகம் இருக்காது. சாளுக்கிய மன்னன் புலிகேசியை நீயா நானா என்று பதம் பார்த்தவர்கள் இந்தப் பல்லவர்கள். வாதாபியை பாதாம் பருப்பாக வறுத்து எடுத்தவர்கள். பல்லவர்களைப் போல, களப்பிரர்களைப் பற்றியும் தமிழக வரலாற்றில் அதிகம் இருக்காது. உண்மையில் எல்லாருக்கும் சம நீதி வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

அதுதான் உண்மை. ஆனால், வழங்கப்படவில்லையே. ஏன்? அதுதான் இன்றைய வழக்கு. இப்போதைய வழக்கு. இன்று நாம் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு. சான்று: http://voiceofthf.blogspot.com/2012/02/blog-post.html

தமிழுக்கு உயிர் கொடுத்தவர்கள்

இத்தனைக்கும் தமிழகத்தின் வடபகுதியைச் சோழர்களைவிட மிகச் சிறப்பாக ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். அதையும் தாண்டி, தமிழுக்கு உயிர் கொடுத்தவர்கள் களப்பிரர்கள். ஆனால், அப்படிப்பட்ட களப்பிரர்கள் ஏன் இந்த இருட்டடிப்பு செய்யப்பட்டனர் என்பதுதான் புரியவில்லை. கல்லூரியில் படித்த நினைவுகள். இப்போது உதவி செய்கின்றன. சரி. விசயத்திற்கு வருவோம்.

தமிழக வரலாற்றில் அதிகமான பாதிப்பை உண்டாக்கியவர்கள் சேரனும் இல்லை. சோழனும் இல்லை. பாண்டியனும் இல்லை. பல்லவர்கள்தான். பல்லவர்கள். மறுபடியும் சொல்கிறேன். பல்லவர்கள்தான். அவர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உலகத்தில் வாழும் அத்தனைத் தமிழர்களும் சாகும் வரை, பல்லவர்களை மறந்துவிடக் கூடாது.

பல்லவர்கள்தான் தமிழகத்தின் சிலை ஓவியங்களுக்கு உயிர் கொடுத்தவர்கள். மாமல்லபுரத்தைக் கட்டியவர்கள். மறைக்கப்பட்ட தமிழகக் குகைக் கோயில்களில், தெய்வீகமான ஓவியங்களை வார்த்துக் காட்டியவர்கள். சேரனும் இல்லை. சோழனும் இல்லை. பாண்டியனும் இல்லை. பல்லவர்கள்தான்.

மாமல்லபுரம் மகாபலிபுரம்

பல்லவர்கள் சிற்பக் கலையில் புரட்சி செய்தவர்கள். மகாபலிபுரத்தில் அழகு அழகான கருங்கல் சிலைகளை நீங்கள் பார்த்து இருக்கலாம். அத்தனையும் பல்லவர்களின் சித்தங்கள். காவேரியில் கல்லுக்கு அடியிலும் சிற்பங்களை வடித்தவர்கள் இந்தப் பல்லவர்கள். தங்களைப் பற்றி, நிறைய குறிப்புகளை விட்டுச் சென்றவர்கள். மாமல்லபுரம் என்பதும் மகாபலிபுரம் என்பதும் இரண்டும் ஒன்றுதான்.

ஆனால், தமிழக வரலாற்றைப் படித்துப் பாருங்கள். சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களுடன் பல்லவர்களை இணைக்கும் குறிப்புகள் எப்போதுமே இருக்கா. பல்லவர்கள் தனியாகத்தான் இருப்பார்கள். ஏன்? அதே போல களப்பிரர்களைப் பற்றியும் அதிகமான வரலாறு இருக்காது.

களப்பிரர்களின் காலம், ஓர் இருண்ட காலம் என்று ஓரம் கட்டப்பட்டு இருக்கும். உண்மையிலேயே அதிகம் மறக்கப்பட்ட காலம் களப்பிரர் காலம்தான். களப்பிரர்கள் யார்? இவர்கள் எங்கு இருந்து வந்தார்கள். கொஞ்சம் அலசிப் பார்ப்போம். களப்பிரர்கள் 3-ஆம் நூற்றாண்டில் இருந்து 6-ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள். தமிழகத்தின் மீது களப்பிரர்கள் படை எடுத்த போது, முதுகுடுமிப் பேர்வழுதி பாண்டியன் என்பவர் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தார். அத்துடன் தமிழின் கடைச் சங்கம் ஒரு முடிவுக்கு வந்தது என்று அறிஞர் டி.வி.சதாசிவ பண்டாரத்தார் சொல்கின்றார்.

இது எல்லாம் 1700 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. அப்போது கேரளா என்பதும் இல்லை, கர்நாடகா என்பதும் இல்லை. எல்லாமே தமிழகம்தான். ஆனால், இப்போது நடக்கிற கூத்தைப் பாருங்கள். முல்லைப் பெரியாறும் காவேரியும் கண்ணீர்விட்டு அழுவதைப் பார்த்தால், மறுபடியும் பல்லவர்களும் வல்லவர்களும் வர வேண்டும் என்கிற ஆசை, சுற்றிச் சுற்றி அடிக்கின்றது. மனசுக்கு ரொம்பவும் சங்கடமாக இருக்கிறது.

களப்பிரர் பற்றிய உண்மைகள் தெரிய வேண்டும் என்றால் தமிழ் நாவலர் சரிதை, யாப்பருங்கலக் காரிகை, பெரிய புராணம், காசாக்குடிச் செப்பேடுகள், திருப்புகலூர் கல்வெட்டு, வேள்விக்குடி சேப்பேடுகளைப் படியுங்கள். உண்மை தெரியும்.

ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்னால், கேரளா எனும் ஒரு பகுதி இல்லை. 12 ஆம் நூற்றாண்டில்தான் கேரள மொழியும் உருவானது. அதுவரை கேரளாவில் பேசப்பட்ட மொழி தமிழ்மொழிதான். அந்தக் காலக்கட்டத்தில் அந்த நிலப்பகுதியை சேர மன்னர்கள் ஆண்டு வந்தனர். [http://en.wikipedia.org/wiki/Kerala]

வரலாற்று ஆசிரியர்களால் ‘இருண்ட காலம்’ என்று வர்ணிக்கப்படும், அந்தக் காலத்தைப் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்துள்ளனர். அதற்குக் காரணம் உண்டு. நீங்களே புரிந்து கொள்வீர்கள். அதைப் பற்றிய ஆய்வுகளைச் செய்து வரலாற்றின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் மயிலை.சீனி. வேங்கடசாமி எனும் வரலாற்று அறிஞர்.

களப்பிரர்கள் இந்து மதத்தை ஆதரித்தனர். இருந்தாலும் அவர்கள் புத்த, சமண மதங்களைச் சார்ந்தவர்கள். களப்பிரர்கள் செய்த ஒரு தவறு என்னவென்றால், ஆரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நில தானங்களைத் தடுத்து நிறுத்தியதுதான். அதனால் அவர்கள் இந்து மதத்தை ஆதரிக்கவில்லை எனும் கருத்து உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் அவர்கள் ஆரியர்களின் எதிரிகளாகவே அடையாளம் காணப்பட்டனர்.

தயவுசெய்து வாசகர்கள் மன்னிக்கவும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதைத்தான் சொல்ல வருகிறேன். மற்றபடி தமிழர்களின் சாதி சம்பிரதாயங்களைப் பற்றி சொல்லவில்லை. தமிழர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்து, அதில் மூத்த பிரிவில் தங்களை நிலைப்படுத்தியவர்கள் ஆரியர்கள்.

பாண்டிய மன்னர்களை நம்ப வைத்து, அவர்களைப் பதினாறு வகையான தானங்கள் செய்யச் சொல்லி ஆரியர்கள் நலம் பெற்றனர். [சான்று: தமிழ் மக்கள் வரலாறு. அயலவர் காலம்.க.ப.அறவாணன். மார்ச் 2006. பக்:59]
எடைக்கு எடை ஆரியர்களுக்குப் பொன் கொடுக்கும் பழக்கம் அக்காலத்திலேயே தொடங்கியது.

தமிழுக்கே உரிய எழுத்துகள் வழக்கில் இருந்த போதும் பிராமி எழுத்துகளையே கல்வெட்டுகளில் அமைத்தனர். ஆரியர்களுக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. அந்த நிலங்களில் இருந்து கிடைத்த வருமானம் ஒட்டு மொத்தமாக ஆரியர்களுக்கே போய்ச் சேர்ந்தன. அதைத் தடுத்து நிறுத்தி, நிலங்களை மறுபடியும் ஏழைகளுக்கே திருப்பிக் கொடுத்தனர். அதுதான் களப்பிரர்கள் செய்த தவறு.

களப்பிரர்கள் ஆட்சி முடிவுக்கு வந்ததும், அவர்களைப் பற்றிய ஆவணங்கள் எல்லாமே அழிக்கப்பட்டுவிட்டன. அதனால், களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலம் என்று சொல்லப்படுகிறது. வரலாற்றில் கறுப்புப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

உண்மையிலேயே களப்பிரர்கள், கன்னட நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள். திப்பு சுல்தானைத் திராவிடத் தமிழனாக ஏற்றுக் கொள்ளும் தமிழகம் ஏன், களப்பிரர்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. களப்பிரம் என்பது தமிழா, கன்னடமா என்பது முக்கியம் இல்லை. ஆனால், அவர்கள் தமிழகத்தில் நல்ல ஓர் அரசை உருவாக்கி நிர்வாகித்தனர் என்பதுதான் பாராட்டப்பட வேண்டிய விசயம்.

களப்பிரர்கள் காலத்தில்தான் பல்வேறு தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டன. புதிய பா வகைகள் உருவாக்கப்பட்டன. களப்பிரர்கள் வருவதற்கு முன், தமிழ் இலக்கியத்தின் இடைச் சங்கத்தில் ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைப் பாக்கள்தான் இருந்தன. அதற்குள்ளேயே தமிழ்ப்பாக்கள் முடங்கிக் கிடந்தன. ஆக, களப்பிரர்கள் வந்த பிறகுதான் தாழிகை, துறை, விருத்தம் எனப் புதிய பா வகைகள் வந்தன.

களப்பிரர்கள் காலத்தில் ஆட்சி மொழியாகத் தமிழ்மொழியாக இருந்தது. இவர்களின் காலத்தில்தான் தமிழ்மொழி நன்றாக வளர்ச்சி அடைந்து இருந்தது. அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள் தோன்றின. நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள் தோன்றின. விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூலும் உருவானது.

கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இறையனார் களவியல் உரை தோன்றியது. பிராமிய எழுத்தாக இருந்த தமிழ் எழுத்து, வட்டெழுத்தாக மாறியதும் களப்பிரர் காலத்தில்தான். ஆக, தமிழுக்கு இத்தனைத் தொண்டுகள் செய்தவர்களின் காலத்தை எப்படி இருண்ட காலம் என்று சொல்ல முடியும். சொல்லுங்கள்.

களப்பிரர் காலத்தில், நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக ஒரு தமிழர் இருந்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அதற்காக, களப்பிரர் அரசர்களுக்கு வக்காளத்து வாங்குகிறேன் என்று சொல்ல வேண்டாம். ஏன் களப்பிரர்கள் தமிழக வரலாற்றில் இருந்து ஓரம் கட்டப்பட்டனர் என்பதே என்னுடைய ஆதங்கம்.

களப்பிரர் மட்டும் அல்ல, ஆரிய ஆதிக்கம் தொடர்பாக கேள்விகளை எழுப்பிய பல்வேறு தத்துவ ஆவணங்கள், முற்றாக அழிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சோழர்கள் காலத்தில்தான் கட்டக் கலை வளர்ந்தது என்பது எல்லாம் சரியான கூற்று அல்ல. சோழர்கள் காலத்துக் கோயில்கள் மட்டும்தான் நமக்கு தெரிகின்றன. ஆனால், அவர்களுடைய கோட்டைக் கொத்தளங்கள், அரண்மனைகள் எங்கே போயின? சோழர்கள் காலத்தில் கட்டடக் கலை, பெரிதுபடுத்தப்பட்டது அல்லது விரிவு செய்யப்பட்டது என்று மட்டும் சொல்லலாம்.

சோழர்கள் அல்லது பல்லவர்களைப் போல களப்பிரர்கள் கோயில்களைக் கட்டவில்லை என்பது உண்மைதான். ஆனால், சோழர் காலத்தில் ஆயிரக்கணக்கான விவசாய மக்கள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

தஞ்சைப் பெரிய கோயில் எப்படிக் கட்டப்பட்டது. சொல்லுங்கள். போர்க் களத்தில் பிடிபட்ட அடிமைகள்; அவர்களின் ஆண்டுக்கணக்கான உழைப்பு; எதிரிகள் நாட்டில் கிடைத்த செல்வங்கள்தான் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்படுவதற்குச் சாத்தியக் கூறுகளாக அமைந்தன.

விண்ணை முட்டும் தஞ்சைக் கோபுரத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நன்றாகப் பார்த்தவர்களுக்குத் தெரியும். சோழனின் கட்டிடக் கலையை விட, ஆயிரக்கணக்கான அடிமைகளின் உழைப்புகள் அங்கே தெரிகின்றன. எதிரிகளின் நாடுகளில் சுரண்டி எடுத்து வரப்பட்ட செல்வங்கள் தெரிகின்றன. சோழர்களின் ஆதிக்கத்தினால் ஏற்பட்ட வேதனைகள் தெரிகின்றன. இவைதான் என் கண்களுக்கும் தெரிகின்றன.

மக்களுக்கு ஒரு பிரமிப்பு கலந்த பயம் வர வேண்டும். மன்னர் மீது மக்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றால், அவர் மீது பயம் இருக்க வேண்டும். அதற்காகத்தான், அத்தகைய பிருமாண்டமான கட்டடிடங்களை அன்றைய அரசர்கள் கட்டினார்கள்.

அண்மைய காலமாக, பழைய சைவ ஆய்வாளர்கள் மறைந்து வருகின்றனர். புதிய தலைமுறை ஆய்வாளர்கள் உருவாகி வருகின்றனர். களப்பிரர் பற்றிய புதிய பார்வையும் உருவாகி வருகிறது.

இன்னும் ஒன்று. உலகப் பொதுமறை திருக்குறளும் களப்பிரர் காலத்தில் உருவானதுதான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.. அதற்கு முன்னரே முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் திருக்குறள் உருவாக்கம் பெற்றது. எனினும், களப்பிரர் காலத்தில்தான், அதற்கு ஓர் உண்மையான வடிவம் கிடைக்கப் பெற்றது. நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா. நானும் தடுமாறுகின்றேன்.

களப்பிரர் காலத்தில் பல சமண குடைவரைக் கோயில்கள் தமிழ்நாட்டில் கட்டப்பட்டன. எடுத்துக்காட்டாக, குமரிமாவட்டத்தில் இருக்கும் சிதறால் மலை, உளுந்தூர்ப் பேட்டையில் இருக்கும் அப்பாண்டநாதர் கோயில் ஆகியவற்றைச் சொல்லலாம். இவை களப்பிரர் காலத்தில் உருவாக்கப்பட்டவை. அவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு வர வேண்டும். களப்பிரர்களைப் பற்றிய புதிய வரலாறு விரிவாக எழுதப் படவேண்டும். களப்பிரர் காலத்தை இருண்ட காலமாக இரட்டடிப்பு செய்யக்கூடாது.

களப்பிரர்கள் காவேரிப்பட்டணத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். அவர்கள் தங்களைப் பற்றிய பட்டயங்கள், கல்வெட்டுகள் எதையும் விட்டுச் செல்லவில்லை. அவர்களின் அரசர்களைப் பற்றியும் குறிப்புகள் எழுதி வைக்கவில்லை. அழிக்கப்பட்டுவிட்டன என்று சொல்லலாம்.

களப்பிரர்கள் வடமேற்கே கர்நாடகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படி தமிழகம் வடமேற்கில் இருந்து வந்தவர்களால் ஆளப்பட்டதால், அதனை இருண்ட காலம் என்று கூறுகின்றனர். ஆனால் இந்தக் கூற்றை ஒரு வலுவான கூற்றாக ஏற்கமுடியாது. ஏன் என்றால் களப்பிரர்கள் மொழி தமிழ் மொழியே ஆகும். கன்னடம் என்ற மொழி உருவானதே கிபி 10-ஆம் நூற்றாண்டில்தான். ஆனால், களப்பிரர்கள் தமிழகத்தை 3-ஆம் நூற்றாண்டிலேயே ஆட்சி செய்து இருக்கின்றனரே.

ஒரு குறிப்பிட்ட காலத்தை, பொற்காலம் என்று சொல்வதற்கு சில காரணங்கள் உள்ளன. அந்தக் காலத்தில் போர் எதுவும் இல்லாமல், அரசியல் குழப்பங்கள் எதுவும் இல்லாமல் இருந்து இருக்க வேண்டும். மக்கள் அமைதியாக வாழ்ந்து இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் கலை, சிற்பம், ஓவியம், மொழி போன்றவை நன்கு வளர்ந்து இருக்க வேண்டும். களப்பிரர்கள் காலத்தில் போர் நடைபெற்றதா, அரசியல் குழப்பங்கள் இருந்தனவா, மக்கள் அமைதியுடன் வாழ்ந்தனரா என்பதற்கு ஆதாரங்கள் எதுவுமே இல்லை.

களப்பிரர்கள், பல்லவர்களைப் போல சிற்பக்கலையையும், சோழர்களைப் போல கட்டடக் கலையையும் வளர்த்ததற்கு எந்தவித சான்றுகளும் இல்லை. ஆனால், அவர்கள் காலத்தில் சீவகசிந்தாமணி, குண்டலகேசி மற்றும் பதினென்கீழ்கணக்கு இயற்றப்பட்டன. இருந்தாலும் அதனைக் களப்பிரர் மன்னர்கள் ஆதரித்தனரா என்பதற்கும் சரியான ஆதாரங்கள் இல்லை. இத்தகைய காரணங்களினால், களப்பிரர்களின் காலத்தை ஓர் இருண்ட காலம் என்று அழைத்து இருக்கின்றனர்.

களப்பிரர்கள் முன்னூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தார்கள். பல மாற்றங்களைச் செய்து இருக்கின்றனர். இரண்டாம் விக்கிரமாதித்தன் நேரூர்கொடை வினைய ஆதித்தனின் அரிகரகொடை செப்பேட்டில் இந்தத் தகவல்கள் எழுதப் பட்டு இருக்கின்றன. ஆக, களப்பிரர்கள் தமிழர்களா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


கி.பி.7-ஆம் நூற்றாண்டில் கொடுங்கன் பாண்டியன், சிம்ஹவிஷ்ணு பல்லவன், மற்றும் சாளுக்கிய மன்னர்களால் களப்பிரர்கள் தோற்கடிக்கப்பட்டனர். தஞ்சை மற்றும் புதுக்கோட்டையை 8-ஆம் நூற்றாண்டில் இருந்து 11-ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்ட முத்தரையர்கள், களப்பிரர்களின் சந்ததியினர் என்றும் சொல்லப்படுகிறது. களப்பிரர்கள் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அது நடந்தது அவர்களின் இறுதிக் காலத்தில்தான். அதை நாம் மறந்துவிடக்கூடாது.


கடைசியாக ஒரு செய்தி. 1700 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ்ப் பெண்கள் நெற்றியில் குங்குமம் இட வேண்டும் என்று ஒரு சட்டத்தையே கொண்டு வந்தவர்கள் இந்தக் களப்பிரர்கள்தான்.

04 அக்டோபர் 2012

சாமிவேலு சிங்கத்தை வீழ்த்திய ஜெயக்குமார்

மலேசியாவில் அசைக்க முடியாத ஒரு மாமனிதர் சாமிவேலு. சரித்திரம் படைத்தார். நிறைய நல்லவை செய்து இருக்கிறார். நல்ல மனிதர். கேட்பார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போன மனிதர்.

அந்தச் சிங்கத்தை அசைத்த ஒரு சாதாரண மனிதனின் வரலாறு வருகிறது. படியுங்கள். அதே சமயத்தில் அவருடைய அருவருடிகளினால் எப்படி கீழே தள்ளப் பட்டார் என்பதையும் படியுங்கள்.

அண்மையில் அவரைச் சந்திதேன். மனம் விட்டுச் சொல்கிறார். ‘முத்து அவங்க எல்லாம் பிடுங்கிச் சாப்பிட்டவங்கய்யா... எத்தனை நாளைக்கு... சொல்லுங்க முத்து... பரவாயில்ல.. நல்லா வாழ்ந்துட்டு போவட்டும்’. இப்படி டத்தோ சாமிவேலு சொல்கிறார்.

இந்த வாசகங்களைப் பற்றி என்னை நினைக்கிறீர்கள்.