17 March 2013

மலேசிய அழகி தனுஜா ஆனந்தன்
முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு, தனுஜா எனும் இந்த மலேசிய உலக அழகி தனுஜா ஆனந்தன் நல்ல ஓர் எடுத்துக்காட்டு. பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்பது பிடிவாதமான கொள்கை. வெற்றி பெற முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.  இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள்.


தனுஜா ஆனந்தன், (Thanuja Ananthan) 2009ஆம் ஆண்டின் மலேசிய அழகி. 2009இல், உலகின் 112 நாடுகளின் உலக அழகிகள் பங்கு பெற்ற உலக அழகிப் போட்டியில், தனுஜா ஆனந்தன் 20வது இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டவர். உலக அளவில் பல வனவிலங்கு காப்பங்களின் நல்வழி, புனர்வாழ்வு ஆர்வலராகச் சேவை செய்து வருகின்றார்.

இவர் ஒரு வழக்குரைஞர். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். பேத்தா எனும் மலேசிய விலங்கு நல்வாழ்வு மேம்பாட்டு வாரியத்தின் தூதுவர். மலேசியப் புற்று நோய்ச் சங்கத்தின் ஆயுள்காலப் பணியாளர். இவருக்கு வயது 25.


2008ஆம் ஆண்டு மலேசிய அழகிப் போட்டியில் தனுஜா தோல்வி அடைந்தார். இறுதிச் சுற்றில் 19 பேர் பங்கெடுத்துக் கொண்டனர். அதில் சூ வின்சி எனும் சீனப் பெண் வெற்றி அடைந்தார். 

இருப்பினும், பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் எனும் பிடிவாதமான கொள்கையும், வெற்றி பெற முடியும் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையும், இவருடைய திடமான கொள்கைப்பாடாக அமைந்தன.


மறுபடியும் 2009ஆம் ஆண்டில் பங்கெடுத்தார். அதற்கு முன், பல மாதங்களுக்கு தீவிரமான ஒப்பனைப் பயிற்சிகளை மேற்கொண்டார். அத்துடன், ஓய்வற்ற ஒத்திகைகளும் தொடர்ந்தன. அவை எல்லாம் ஒன்றாக இணைந்து, அவருக்கு அழகுராணி எனும் பரிசை வழங்கி ஒரு முத்தாய்ப்பு வைத்தன.

முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு, தனுஜா எனும் இந்த மலேசியத் தமிழ்ப்பெண் நல்ல ஓர் எடுத்துக்காட்டு.

இறுதிச் சுற்றுக்கு 18 பெண்கள்

2009ஆம் ஆண்டு மலேசிய அழகிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 18 பெண்கள் தேர்வாயினர். பொதுவாக, உலக அழகிப் போட்டிகளில், இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறுபவர்களிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்கப்படும்.


அந்தக் கேள்விக்கு அவர் அளிக்கும் விவேகமான, சாதுர்யமான, புத்திசாலித்தனமான பதிலில் இருந்துதான் அவர் மலேசிய அழகியாக அல்லது உலக அழகியாகத் தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் தனுஜாவிடம், ‘உங்களுக்கு ஓர் அவதூறு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்,


அவதூறுகள் என்பது மிக இழிவான கிசுகிசுக்கள். அவற்றிற்கு மன்னிப்பு என்பதே கிடையாது.[8] முன்பும் சரி இனி என்றும் சரி, எனக்கு அந்த மாதிரி ஒரு நிலைமை வராது என்று உறுதியாகச் சொல்வேன். எனக்கு என்று தனிப்பட்ட கொள்கைகள் உள்ளன. அந்தக் கொள்கைகளில் இருந்து நான் வெளியே வர முடியாது. வரவும் மாட்டேன். நான் எதை நம்புகின்றேனோ, அதற்கு முரண்பாடான கருத்துகளை நான் என்றைக்குமே ஏற்றுக் கொள்வதும் இல்லை.


அடுத்த நிமிடம் அவருக்கு மலேசிய அழகியின் கிரீடம் சூட்டப்பட்டது. ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த வாக்குகளில் அவரைத் தேர்வு செய்தனர்.

112 நாடுகளின் அழகிகள்

அதே 2009ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி, தென் ஆப்பிரிக்கா, ஜொகானஸ்பர்க் மாநகரில் உலக அழகிப் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் தனுஜா, மலேசியாவைப் பிரதிநிதித்தார். 


இதில் 112 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். உலகம் முழுமையும் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை 600 மில்லியன் மக்கள் பார்த்தனர். அதில் அவருக்கு 20வது இடம் கிடைத்தது.


இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, Miss World Top Model எனும் அழகுநய அழகிப் போட்டி நவம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. அதில் தனுஜா எட்டாவது இடத்தைப் பெற்றார்.

பொதுச் சேவைகள்

சிலாங்கூர் மாநில விலங்கு வதைத் தடுப்புக் கழகத்தின் பரப்புரையாளராகச் சேவை செய்து வரும் தனுஜா, தனக்கு ஓய்வு கிடைக்கும் போது எல்லாம் அந்தக் கழகத்தில் பராமரிக்கப் படும் நாய்கள், பூனைகள், செல்லப் பிராணிகளுடன் நேரத்தைக் கழிப்பதை ஒரு பொழுது போக்காகக் கொண்டுள்ளார்.


தவிர, PETA எனும் மலேசிய விலங்கு நல்வாழ்வு மேம்பாட்டு வாரியத்தின் தூதுவராகச் சேவை செய்கின்றார். கோலாலம்பூரில் நடைபெறும் பல்வேறு விலங்கு நல அமைப்புகளின் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார்.

மருமகள் படித்துக் கொடுத்த பெண்

2005ஆம் ஆண்டில், என்னுடைய மூத்த மருமகள் கோலாலம்பூர், புக்கிட் நானாஸ் கான்வெண்ட் பள்ளியில் ஐந்தாம் படிவ மாணவிகளுக்கு ஆசிரியையாக இருந்தார். 


அப்போது தனுஜாவுக்கும் படித்துக் கொடுத்தார். வரலாற்றுப் பாடங்களில் தனுஜா ஆர்வம் காட்டியதாக மருமகள் சொல்கிறார். தனுஜா இன்னும் தொலைபேசியின் வழி தொடர்பு வைத்து இருக்கிறார். என் மருமகள் இப்போதும் அப்பள்ளியில்தான் பணியாற்றுகிறார்.

நாளிதழ்களின் பாராட்டுகள்

தனுஜா ஆனந்தன், மலேசியாவில் உள்ள ஆதரவற்றச் சிறார்கள் இல்லங்களுக்குச் செல்வதை ஒரு வழக்கமாகவும், ஒரு வாடிக்கையாகவும் பேணிக் காத்து வருகின்றார். அங்குள்ள சிறுவர்களுக்கு இலவசமாக பரிசு பொருள்களையும், உணவு வகைகளையும் வழங்கி பெருமைப் படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறார்.


இவர் ஒரு வழக்குரைஞர் என்பதால், மலேசியாவின் பிரபல பெரிய நிறுவனங்கள் இவரை அழைத்து தங்களின் ஊழியர்களுக்கு விழிப்புரைகளை ஆற்றச் சொல்கின்றன. அதன் மூலம் அவருக்கு நிதி அன்பளிப்புகள் கிடைக்கின்றன.


அந்த நிதிகளை இவர் அப்படியே அனாதை இல்லங்களுக்குத் திருப்பிவிடுகிறார். இவருடைய இந்த இலட்சியக் கொள்கைகளைப் பற்றி மலேசியாவில் உள்ள நாளிதழ்கள் நிறைய செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

மலேசியப் புற்று நோய்ச் சங்கம்

மலேசியப் புற்று நோய்ச் சங்கத்திலும் தனுஜா ஆழ்ந்த ஈடுபாடுகளைக் காட்டி வருகின்றார். அந்தச் சங்கத்திற்கு தன்னால் இயன்ற பொருளுதவிகளையும் செய்து வருகிறார்.

 
Aug 28, 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி, மலேசியப் புற்று நோய்ச் சங்கத்திற்கு நிதியுதவி திரட்டும் வகையில், மலேசியாவின் ஆக உயரமான கினபாலு மலையில் ஏறி சாதனை படைத்தார். அதன் மூலம் ரிங்கிட் 50 ஆயிரம் கிடைத்தது.


அவருக்குத் துணையாக அவருடைய தங்கை அனுஜாவும் மலை ஏறினார். தனுஜாவும் அனுஜாவும் ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த அக்காள் தங்கைகள். 2012 ஜூலை மாதம் ஓர் இசைக் காணொளியை வெளியிட்டதன் மூலம், மலேசியப் புற்று நோய்ச் சங்கத்திற்கு ரிங்கிட் 5 இலட்சம் வசூல் செய்து தரப்பட்டது.

சர்ச்சை

2012 செப்டம்பர் மாதத்தில் Dermalogica எனும் சருமப் பாதுகாப்பு நிறுவனம் ஒரு விளம்பரத்தில் நடிக்க இவருக்கு அழைப்பு விடுத்து இருந்தது. அதில் தன் சருமத்தின் அழகைக் காட்ட சற்றே கூடுதலாகக் கவர்ச்சி காட்டி இருந்தார் என்று சொல்லப்படுகிறது.  அந்த விளம்பரப் படம் ஒரு தரப்பினரின் குறைகூறல்களுக்கும் உள்ளாகியது.

தான் கவர்ச்சியைக் காட்டவில்லை; கவர்ச்சி என்றால் என்ன என்று சொல்ல வந்ததாக தனுஜா கூறினார். இதில் ஒரு தரப்பினர், தனுஜா அப்படியே நடித்து இருந்தாலும் அதில் கிடைத்த ரிங்கிட் மூன்று இலட்சம் பணத்தையும், அனாதை ஆசிரமங்களுக்கு அப்படியே தானமாகக் கொடுத்துவிட்டாரே என்று வாதாடினர். 

மலேசியாவில் உள்ள சில அனாதை ஆசிரமங்களின் ஊழியர்களும், குழந்தைகளும் தனுஜாவுக்கு ஆதரவாக எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

மலேசிய விழாக்கள்

தனுஜாவின் சமூகக் கொள்கைகள், மலேசியர்கள் பலருக்குப் பிடித்து இருப்பதால், அந்தச் சர்ச்சை பெரிதாக்கப்படவில்லை. மலேசிய ஊடகங்களும் அந்தச் சர்ச்சையைச் சாந்தப்படுத்தி அமைதியாக்கிவிட்டன. 

அதன் பின்னர் விளம்பரப் படங்களில் நடிப்பதைத் தனுஜா நிறுத்திக் கொண்டார். பகலில் நீதிமன்றத்திற்குச் சட்ட நூல்களுடன் போகும் இவர், மாலை வேலைகளில் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இன்றும், எல்லா வகையான இந்திய, சீன, மலாய் பாரம்பரிய மலேசிய விழாக்களிலும், சமய நிகழ்ச்சிகளிலும் கலந்து சிறப்பு செய்கின்றார். தீபாவளி, நோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை நிகழ்ச்சிகளில் ஏழை எளியவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றார்.

6 comments:

 1. samaran bala18/3/13 12:54 AM

  எல்லாம் சரி - தன இனத்திற்கும், இனப்படுகொலைக்கும் என்ன செய்தார்??

  ReplyDelete
  Replies
  1. அவரைக் கேட்டுத்தான் சொல்ல வேண்டும்.

   Delete
 2. கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி.

   Delete
 3. கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

  ReplyDelete
 4. கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

  ReplyDelete