26 January 2014

இளம்பெண்கள் கைப்பேசி எண்களைக் கொடுப்பதால் ஏற்படும் தொல்லைகள்

கணினியும் நீங்களும் - மலேசியா தினக்குரல் நாளிதழ்
26.01.2014 ஞாயிறு மலர்

..................................................................................................................................................

சரவணன் குமார், சுங்கை பூலோ, சிலாங்கூர்
கே: ஐயா, நான் தமிழ்நாடு திருச்சியில் இருந்து இங்கு வந்து கடந்த ஆறு ஆண்டுகளாக வேலை செய்கிறேன். அண்மையில் என் நண்பர் அவர் வேலை  செய்யும் இடத்தில் இருந்து ஒரு பழைய கணினியை என்னிடம் வந்து கொடுத்தார். அது சரியாக வேலை செய்யவில்லை. நான் செலவு செய்து பழுது பார்த்தேன். நன்றாக வேலை செய்வதைப் பார்த்த அந்த நண்பர் இப்போது அந்தக் கணினியை வேண்டும் என்கிறார். கொடுக்க முடியாது என்றேன். மிரட்டிப் பார்க்கிறார். மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது ஐயா. என்ன செய்யலாம்?ப: நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அந்த மாதிரியான மனிதர்களை நண்பர் என்று அழைப்பதை முதலில் நிறுத்தி விடுங்கள். மனித நேயங்களை மறந்து வாழும் மானிடப் பிண்டங்களை எல்லாம் எப்படி ஐயா நண்பர்கள் என்று முடியும். சொல்லுங்கள். அற்ப சகவாசம் பிராண சங்கடம் எனும் பழமொழி இருக்கிறதே அது உங்களுக்குத் தெரியாதா.

பழுது பார்க்க நீங்கள் செலவு செய்த காசை, அவரிடம் இருந்து முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு கணினியைத் திருப்பிக் கொடுக்கலாம். கவலைப் பட வேண்டாம்.

என்னிடம் பழைய கணினிகள் இரண்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்றை உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். ஈப்போ வரும்போது பெற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் செலவு செய்த பணத்தைக் கேளுங்கள். அவர் கொடுக்க முடியாது என்றால் எனக்குத் தெரிவியுங்கள். சுங்கை பூலோவில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் புக்கிட் அமான் மலேசியப் போலீஸ் தலைமையகத்தில் ஓர் ஆணையர். அவரிடம் சொல்லி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்வோம். கவலைப் பட வேண்டாம்.

நீங்கள் ஒரு தமிழர். நானும் ஒரு தமிழர். நீங்கள் ஒரு நம்பிக்கையுடன் அங்கே இருந்து இங்கே வந்து வேலை செய்கிறீர்கள். இங்குள்ள  தமிழர்கள் தான் உங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். அதை விடுத்து உங்களை ஏமாற்றி பிழைப்பது என்பது ஈனத் தனமான செயல். அப்படிப் பட்ட மனிதர்களை எல்லாம் வெட்கம் கெட்ட ஜென்மங்கள் என்று சொன்னால் தப்பே இல்லை.

உங்கள் வாழ்க்கையில் எது உங்களை விட்டுப் போகலாம். ஆனால், தன்னம்பிக்கை என்பதை மட்டும் விட்டுப் போகாமல் பார்த்துக் கொளுங்கள். தன்னம்பிக்கை என்பதுதான் வாழ்க்கை. அதுதான் ஆண்டவரின் அடுத்த அவதாரம்.

..................................................................................................................................................

சுந்தரராஜன் பெருமாள், ஜாலான் காசிங், பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர்.
கே: சிடி-ரோம் டிரைவின் வேகத்தை 20X, 48X, 52X என்று குறிப்பிடுகிறார்கள். அதில் X என்றால் என்ன?ப: ’சிடி-ரோம்’ என்றால் குறும் தட்டு. ’சிடி-ரோம் டிரைவ்’ என்றால் குறும் தட்டகம். முதன்முதலில் வெளிவந்த குறும் தட்டகத்தின் வேகம் 150 KBPS. இந்தக் குறும் தட்டகங்கள் 1990-களில் வெளிவந்தவை. விலையும் அதிகம். KBPS என்பதன் விரிவாக்கம் Kilo Bytes Per Second.

அப்படி என்றால் ஒரு விநாடியில் எத்தனை ‘பைட்ஸ்’ தகவல்கள் பரிமாறப் படுகின்றன என்பதைக் குறிக்கிறது. ஆக, ஆரம்பத்தில் வெளிவந்த குறும் தட்டகத்தின் வேகம் 150 KBPS ஆக இருந்தது.

பின்னர், வேகம் கூடிய தட்டகங்கள் வெளிவந்தன. புதிய குறும் தட்டகங்களின் வேகத்தை எடுத்துச் சொல்ல பழைய குறும் தட்டகங்களின் வேகத்தை X  எனும் அடிப்படையில் எடுத்துக் கொண்டார்கள்.

ஆகவே 20X என்றால் 20 X 150 = 3000 கே.பி.பி.எஸ். என்று பொருள். அதாவது ஒரு விநாடிக்கு 3000 பைட்ஸ் தகவல்களை பரிமாறிக் கொள்கிறது என்று பொருள்.

ஒரு ’பைட்’ என்றால் என்ன என்று கேட்கலாம். ‘அ’ எனும் எழுத்துக்கு எட்டு பைட்ஸ்கள். ‘ஆ’ எனும் எழுத்துக்கும் எட்டு பைட்ஸ்கள்தான். உலகத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் எட்டு பைட்ஸ்களைத் தான் கொடுத்து இருக்கிறார்கள்.

அந்தக் கணக்குப் படி, ஒரு விநாடி நேரத்தில் 400 எழுத்துகளை, அந்தத் தட்டகம் படிக்கின்றது. புரியுதுங்களா.

இப்போது 80X குறும் தட்டகங்களும் வெளிவந்து விட்டன. பழைய 2X குறும் தட்டின் விலை அப்போதைய விலையில் நான்கு ரிங்கிட். இப்போதைய குறும் தட்டின் விலை வெறும் நாற்பது காசுகள் தான். 

சில ஆண்டுகளுக்கு முன்னால் ’புளுரே’ எனும் தட்டகங்களும் வந்துவிட்டன. ஒரே ஒரு ’புளுரே’ தட்டை வைத்துக் கொண்டு உலகத்தில் உள்ள அத்தனை பேருடைய முகவரி விவரங்களை எழுதி வைத்துக் கொள்ள முடியும். அவர்களின் பூர்வீகத்தையும் எழுதி வைக்க முடியும். ஆக, கணினி உலகம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. விரட்டிப் பிடியுங்கள்.

..................................................................................................................................................

மா. நல்லபெருமாள், ஜே.பி.ஜே. கோலகங்சார்
கே: சில இளம்பெண்கள் மற்றவர்களிடம் கொஞ்சம் பழகியதும் தங்களின் கைப்பேசி எண்களைக் கொடுத்து விடுகின்றனர். கடைசியில் தொல்லைகளில் மாட்டிக் கொண்டு அவதிப் படுகின்றார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?


ப: நான் என்ன சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு சிலர் சொன்னால் கேட்க மாட்டார்கள். பட்ட பிறகுதான் வேதனை தெரியும். நெருப்பு சுடும் என்று சொல்லிப் பாருங்கள்.

அது என்ன சுடும் என்று திருப்பிக் கேட்பார்கள். சுட்ட பிறகு ‘ஐயோ சுட்டு புடுச்சே...  ஐயோ சுட்டு புடுச்சே... ’ என்று ஒப்பாரி வைப்பார்கள்.

ஆக, சில ஜென்மங்களைத் திருத்தலாம். ஒரு சில ஜென்மங்களைச் சுட்டுப் போட்டாலும் திருத்தவே முடியாது. எல்லோரையும் சொல்லவில்லை. பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் திருவிளையாடல் படத்தில் தருமி நாகேஷ் நினைப்வுக்கு வருகிறது. என்னைக் கேட்டால்  கைப்பேசியும் அதில் தொங்கி வழிவதும் என்று சொல்வேன்.

அதற்காகச் சண்டைக்கு வரவேண்டாம். கைப்பேசியை ஒரு பொழுது போக்காகக் கருதும் பெண்கள், தயவு செய்து கொஞ்சம் யோசிக்க வேண்டும். சொல்ல வேண்டியது என் கடமை.

1. அவசியமின்றி யாருக்கும் கைப்பேசி எண்களைக் கொடுக்காதீர்கள். புருஷனுக்கும் பிள்ளைகளுக்கும் தெரிந்தால் போதும்.

2. பொது இடங்களில் நீட்டப்படும் வருகைப் பதிவேடுகளில் உங்கள் கணவர் அல்லது தந்தையின் கைப்பேசி எண்களைப் பதிவு செய்யுங்கள். உங்கள் எண்களைப் பதிவு செய்ய வேண்டாம். பிற்கு ஆபத்தாக முடியும்.

3. அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளைத் தவிர்க்கவும். எடுத்து ‘Wrong Number' என்று சொல்லி வைத்து விடுங்கள்.

4. கடலைபோடும் ஆசாமிகள் இருக்கிறார்கள். வேலை வெட்டி இல்லாத ஜென்மங்கள். அவர்களிடம் கறார் வேண்டும்.

5. நன்றாகப் பேசுபவர் எல்லாம் நல்லவர் என நம்பாதீர்கள். இனிக்க இனிக்கப் பேசுபவர்கள் எல்லாம் நல்லவர்கள் அல்ல.

6. ஆயிரம் சத்தியம் செய்வார்கள். கடைசியில் காரியத்தைச் சாதித்துக் கொண்டு கம்பி நீட்டி விடுவார்கள். கடைசியில் அவதிப்படுவது நீங்கள் தான்.

7. வீட்டிலேயே இருக்கும் பெண்கள் ஆக்கப் பூர்வமான காரியங்களில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்காக மெகா சீரியல்களில் இறங்கி புருசன், டிவி பெட்டியைத் தூக்கிப் போட்டு உடைக்கிற மாதிரி வைத்துக் கொள்ள வேண்டாம்.

..................................................................................................................................................

ஜான் பீட்டர்ஸ், ஆயர் குரோ, மலாக்கா
கே: கணினி வைரஸ்கள் என்னென்ன தீமைகளைச் செய்கின்றன?


ப: பட்டியல் போட முடியாது. Trojan எனும் கணினி அழிவி உங்களுடைய கணினிக்குள் நுழைந்து விட்டால், நீங்கள் செய்யும் வேலைகளைக் கவனித்து வரும். நீங்கள் பயன்படுத்தும் கடன் அட்டை இலக்கங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளும். talking-trojan இணைய வங்கியில் பயன்படுத்தும் கடவுச் சீட்டுகளையும் எடுத்து வைத்துக் கொள்ளும்.

அப்புறம் தனது எஜமானனுக்கு (Owner of the Virus) இணையத்தின் வாயிலாக சகவாசமாக ரகசியங்களை அனுப்பி வைக்கும்.

சில நச்சுநிரல்கள் கணினியின் நிரலிகளில் கோப்புகளை அழித்தல், கோப்புகளின் குணாதிசயங்களை மாற்றுதல் போன்றவற்றைச் செய்யும். இவை கணினியின் நினைவகத்தைப் பயன்படுத்துகின்றன.

நீங்கள் பயன்படுத்தும் Programs எனும் நிரலிகளில் குழப்பத்தை உண்டு பண்ணும். கணினியை நிலைகுலையச் செய்யும். சில அழிவிகள் கணினி தொடங்குவதையும் மெதுவாக்கும். வேலை செய்யும் வேகத்தைக் குறைக்கும்.

அழிவி அல்லது நச்சுநிரல் எல்லாம் ஒன்றுதான். சில அழிவிகள் வெடிகுண்டு போல குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெடித்து தம் அழிவு வேலைகளைச் செய்யும்.

ஆக உங்களுடைய கணினி 30 வினாடிகளில் இருந்து 40 வினாடிகளுக்குள் இயங்குதளத்தைத் தொடங்க வேண்டும். கூடுதல் நேரம் எடுத்தால் முதலில் நச்சு நிரலைக் கவனிக்க வேண்டும். அதை (Update) எனும் இற்றை செய்தல் வேண்டும்.

3 comments:

 1. எதேச்சையாக உங்கள் வலைப்பக்கம் வந்தேன். எனக்கு ஒரு சந்தேகம்.
  பல வலைப்பக்கங்களில் "google pays me $200.00 per hour " என்கிற POPUP வருகிறது. இது எவ்வளவு தூரம் உண்மை ? Google மூலம் ஏதோ ஒரு சேவை செய்து பணம் ஈட்டுவது சாத்தியமா ?

  ReplyDelete
 2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

  வலைச்சர தள இணைப்பு : தேனிலவு செல்ல அழகான இடங்கள்

  ReplyDelete