08 June 2014

கஸ்தூரி பட்டு

மலேசியா தினக்குரல் நாளிதழில் 28.06.2013-இல் பிரசுரிக்கப் பட்டது.

மலேசிய நாடாளுமன்றத்தில் எதிர் அணியில் இருக்கும் ஒரே தமிழ்ப் பெண். 2013-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், பினாங்கு, பத்து கவான் நாடாளுமன்ற தொகுதியில் 25,962 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றவர். 

கஸ்தூரி பட்டு
சீனர்கள் பெரும்பான்மையாக வாழும் ஓர் இடத்தில், ஒரு தமிழ்ப் பெண் வெற்றி பெற்றது ஒரு வரலாறு. உலகத் தமிழர்கள் பெருமைப் பட வேண்டிய விஷயம்.

முன்பு மலேசிய நாடாளுமன்றத்தில், பலருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய, பட்டு என்பவரின் மகள் தான் கஸ்தூரி பட்டு. தந்தையார் மறைந்து போனாலும், அவர் வழியைப் பின்பற்றி அவர் இல்லாமலேயே ஜெயித்துக் காட்டி இருக்கிறார். மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு.
அருகில் பேராக் மாநில முன்னாள் சபாநாயகர் வி. சிவகுமார்

இப்போது மலேசிய நாடாளுமன்றத்தில் மூத்த அமைச்சர்களுக்கே சவால் விடுக்கும் ஒரு துணிச்சலான பெண்மணி. அவருக்கு வயது 34. இன்னும் திருமணம் ஆகவில்லை. 

தேர்தல் காலத்தில் ஒரு மேடையில் மலேசியப் பிரதமர் நஜீப் பேசிக் கொண்டு இருக்கிறார். கொஞ்ச தூரம் தள்ளி இன்னொரு மேடையில், கஸ்தூரி பேசிக் கொண்டு இருக்கிறார். மலையும் மடுவும் மோதிக் கொள்வதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பிரதமரே களம் இறங்கி இருக்கிறார். நமக்கு வெற்றி கிடைக்குமா என்றுகூட கஸ்தூரி பயந்து போனாராம். ஆனால், பினாங்கு சீன மக்கள் வேறு மாதிரியாகத் தீர்ப்பை எழுதி விட்டனர். 


தேர்தல் பிரசார அலுவலகத்தில்

பத்து காவான் நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பாரிசான் நேசனல் கட்சியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனை 25,962 வாக்குகள் வித்தியாசத்தில் கஸ்தூரி தோற்கடித்தார். அந்தத் தொகுதியில் பதிவுபெற்ற வாக்காளர்கள் 57,593 பேர். சீனர்கள் 65 விழுக்காடு கொண்ட தொகுதி.

எதிர் அணியில் நாடாளுமன்றத்திற்குப் போகும் முதல் தமிழ்ப் பெண்

அரசியல் என்பது குண்டு குழிகள் நிறைந்த நெடுஞ்சாலை. நின்று நிதானமாக நடை போடுகின்றார். காட்டுக் கூச்சல்களுக்கு நடுவிலும் அழகான மேடைப்

பேச்சுகள். சரியான நேரத்தில் சரியான சரீர வாசகங்கள். தந்தை பட்டுவின் சமூகச் சிந்தனைகளைக் கிள்ளிப் பார்க்கும் அணுகுமுறைகள். அரசியல் வானில் ஒரு புதிய நிலவு உதயமாகின்றது. எதிர் அணியில் நாடாளுமன்றத்திற்குப் போகும் முதல் தமிழ்ப் பெண். 


கஸ்தூரியின் தேர்தல் பிரசாரப் பதாகை

தாய்மையின் மெல்லிய உணர்வுகளுக்கும் தாலாட்டுக் கேட்கப் போகின்றது. நாமும் கேட்கப் போகின்றோம். அவர்தான் கஸ்தூரிராணி பட்டு. மக்களவைக் கச்சேரிகளுக்குச் சுதி சேர்க்கப் போகும் ஒரு கஸ்தூரி மானை

வாழ்த்துகிறோம். வாழ்த்துகள் மகளே!

முன்பு மலேசிய நாடாளுமன்றத்தில் பி. பட்டு என்பவர் பலருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். அரசியல் அரிச்சுவடிகளை ஆதாரங்களுடன் பார்த்தவர். 

சீன வாக்களர்களுடன் மேடைப் பேச்சு

அரசியல் சட்டச் சிக்கல்களின் முடிச்சுகளுக்கு சாணக்கியமானத் தீர்வுகளைக் கண்டவர். இருந்தாலும் கொள்கைவாதத்தில் முரட்டுத்தனம். தன்மான வாதத்தில் அதீதமானப் பிடிவாதம். அவர் ஒரு பழம்பெரும் அரசியல்வாதி. அருமையான மனசு. அப்போதைய பழசுகளின் பெரிசு. அப்படி தாராளமாய்ச் சொல்லலாம். தப்பு இல்லை.

பன்மொழித் திறன் பெற்றவர் அமரர் பட்டு

பன்மொழித் திறன் பெற்றவர் அமரர் பட்டு. தமிழ் மொழியில் சிறப்பாக பேசும் பேச்சாளர்களில் ஒருவர். ஜனநாயகச் செயல் கட்சியில் முக்கிய தலைவராக வலம் வந்தவர். 1974-ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில், சுங்கை சிப்புட் தொகுதியில், அப்போது அங்கு  முதன் முறையாகப் போட்டியிட்ட சாமிவேலுவிடம் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


பாக்காத்தான் ராக்யாட் சின்னத்தில் தேர்தல் பிரசாரம்

அதன் பின்னர் பேராக், மெங்லெம்பு தொகுதியில் ஜனநாயகச் செயல் கட்சியின், நாடாளுமன்ற வேட்பாளராக வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் கர்ஜனைக் குரல் எழுப்பும் இந்தியத் தலைவராகவும் உயர்ந்தார்.

சிம்மக் குரலாக பரிணமிப்பார்

இன்று, அவருடைய வழியில் அதே ஜனநாயகச் செயல் கட்சியின் வழி அரசியலில் குதித்து இருக்கும் கஸ்தூரி, பத்து கவான் தொகுதியில் வென்று நாடாளுமன்றத்தில் மற்றொரு சிம்மக் குரலாக பரிணமிப்பார் என நம்பலாம்.


மலேசிய நாடாளுமன்றத்திற்கு முன் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி

1990-களில் கோப்பேங் புலி என்றும் ஈப்போ சிறுத்தை என்றும் மெங்லெம்பு மீசைக்காரர் என்றும் அன்பாக அழைக்கப்பட்டவர் அமரர் பட்டு. அரிதாய்க் கிடைத்த சீன மொழி ஆற்றலைப் பெரிதாய் வளர்த்துக் கொண்டவர். கம்பீரத் தொனியில் கராராகப் பேசியவர். மலேசியச் சீனர்களைத் தன் பக்கம் சுண்டி இழுத்தவர், சிம்மக் குரலோன் பட்டு எனும் சிறப்புக்கும் உரியவர். அவருடைய மகள்தான் இந்தக் கஸ்தூரிராணி பட்டு.

பாலூறும் முகம் தேனூறும் பேச்சு

பாலூறும் முகம், தேனூறும் பேச்சு, கள்ளூறும் பார்வை, குழைந்து புதைத்தப் பாவையோ எனும் கவிதை வரிகளுடன் ஒரு நம்பிக்கை நட்சத்திரத்தை அறிமுகம் செய்கின்றேன். 


பாஸ் கட்சியின் மூதத் தலைவர்

உலக அரசியல் வரலாற்றில் அப்பாவைப் போல பெண்கள் சிலர், அதிபர்களாக, பிரதமர்களாகப் பதவியில் பீடு நடை போட்டுள்ளனர். இந்தியத் துணைக் கண்டத்தைப் பாருங்கள். மூன்று தலைமுறைகளில் நான்கு வரலாறுகள் சரித்திரம் எழுதி இருக்கின்றன.

1960-ஆம் ஆண்டில் உலகின் முதல் பெண் பிரதமர் எனும் ஒரு சாதனையைச் செய்தவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா. இவருடைய கணவர் ஆர்.டி. பண்டாரநாயகா என்பவர் இலங்கையில் அமைச்சராக இருந்து, பின்னர் கொஞ்ச காலம் பிரதமராகவும் பதவி வகித்தவர். இவர்களின் மகள்தான் சந்திரிகா குமாரதுங்கா. பின்னாளில் இலங்கையின் பிரதமராக வந்தவர்.

பெனாசிர் புட்டோ நல்ல ஓர் அரசியல் அழகி

1973-இல் கிழக்கு பாக்கிஸ்த்தான் வங்காளதேசமாக மாறிய போது, அதன் முதல் பிரதமர்தான் ஷெயிக் முஜிபுர் ரஹ்மான். அதிபராகப் பதவிக்கு வந்தவர். பிரதமராக மறைந்தவர். அவாமி லீக் கட்சியின் தலைவர். வங்கத்துச் சிங்கம் எனும் அடைமொழியுடன் புகழப்பட்டவர். இவருடைய மகள் ஷெயிக் ஹசினா.


பினாங்கு மாநிலத்தின் மூத்த அரசியல்வாதிகள்

1990-களில் வங்காள தேசத்தின் பிரதமாராகப் பதவி வகித்தவர். இங்கேயும் அப்பா பிரதமராக இருந்தார் மகளும் பிரதமராக வந்தார் கதை வருகிறது. அடுத்து கொஞ்சம் தள்ளி, மேற்கு பக்கம் பார்த்தால் பாக்கிஸ்தான். அதன் முன்னாள் பிரதமராக இருந்தவர் அலி புட்டோ. அவருடைய மகள்தான் பெனாசிர்

புட்டோ. இவரும் பாக்கிஸ்தானின் பிரதமராக இருந்தவர். இங்கேயும் அப்பா பிரதமராக இருந்தார் மகளும் பிரதமராக இருந்தார் கதை வருகிறது.  பெனாசிர் புட்டோ நல்ல ஓர் அரசியல் அழகி. உலக அழகிப் போட்டிக்குப் போய் இருந்தால், இப்போதைய ’ஐஸ்’ கள் எல்லாம் இடம் தெரியாமல் கரைந்து போயிருக்கும்.


இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி

பெனாசிர் புட்டோ போராடுவதற்கு என்றே பிறந்த ஒரு துணிச்சல்காரப் பெண்மணி. ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னால், அநியாயமாக அவரைச் சுட்டுச் சாய்த்துவிட்டார்கள்.முதியோர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு

சரி, இதற்கு எல்லாம் சிகரம் வைப்பது போல வருபவர்தான் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி. அரிசிக்கும் சீனிக்கும் எப்படி விளம்பரம் தேவை இல்லையோ அதே போல இவருக்கும் விளம்பரம் தேவை இல்லை. இவருடைய தந்தையார்தான் ஆசிய ஜோதி நேரு. ரோசாப்பூ மன்மதராசா. இங்கேயும் அப்பா பிரதமராக இருந்தார் மகளும் பிரதமராக இருந்தார் என்பது உலகம் அறிந்த செய்தி.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

மலேசியாவின் பக்கத்து தாமானில் இருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டை மறந்துவிட்டோம். அங்கே ஆரியோ மகாபகால் அதிபராக இருந்த  போது அந்த நாட்டின் ஊழல்களுக்கு ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்று போட்டி வைத்த ஓர் அரசியல் கில்லாடி. கடைசியில் அவரே அந்த ஊழலில் மாட்டிக் கொண்டார். தந்தையார் பட்டுவின் பெயரில் ஈப்போ நகரில் ஒரு சாலைக்குப் பெயர்


இவருடைய அப்பாவும் அந்த நாட்டின் அதிபராக இருந்தவர். கண்களைக் கசக்கி உலக அரசியலை இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால் அப்பா மகள் அரசியல் விஷயங்கள் நிறைய கிடைக்கும்.

இங்கே மலேசியாவை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போதைக்கு நம் கண்களுக்கு வெளிச்சமாகத் தெரிகிறவர்கள் அன்வார் இப்ராஹிம், அவருடைய மகள் நூருல் இசா. இருவரும் அப்பா மகள் ஜோடிதானே. அப்பாவும் மகளும் கலக்கிக் கொண்டு திரிகிறார்கள். அந்த வரிசையில் ஒரு புதிய வரவுதான் நம்முடைய கஸ்தூரிராணி பட்டு. 

தந்தை மகள் பாசப்பிணைப்புகள்

அரசியலே உலகம் என்று வாழ்ந்தவர் பி. பட்டு. ஆனால், அந்த அரசியலையும் தாண்டி ஒருவர் வருகிறார் என்றால் அவர்தான் பட்டுவின் மகள் கஸ்தூரிராணி. பட்டுவின் மொத்த சந்தோசத்திற்கும் கஸ்தூரிதான் மூலப் பொருளாக விளங்கி வந்துள்ளார். பிறந்த அந்த நாளிலிருந்து கஸ்தூரி வளர்ந்த ஒவ்வொரு நொடியிலும் பட்டுவிற்குச் சந்தோசங்களை அள்ளிக் கொடுத்தவர்.


’இன்றே மாற்றுவோம் மலேசியாவை தூய்மையாக்குவோம்’ பதாகை

’அவளுக்கு சாதாரண சளி பிடித்தால் கூட இரவு முழுவதும் தூங்க மாட்டேன். கூடவே இருப்பேன். அவள் இல்லாமல் நான் வெளியே செல்வது குறைவு. எனக்கும் அவளுக்கும் இருந்த பாசப்பிணைப்பு என் அரசியலே பொறாமை படும் அளவுக்கு தடுமாறிப் போனது.’ இப்படி பட்டுவே ஒருமுறை சொல்லி இருக்கிறார்.

பொல்லாத காலன் சொல்லாமல் கொள்ளாமல்

அது ஒரு தகப்பனுக்கும் ஒரு மகளுக்கும் உள்ள பந்தபாசம். ஆனால், பலருக்கு சிம்ம சொப்பனமாக அசை போட்ட பட்டுவின் அதே நாடாளுமன்றத்தில் தன்னுடைய வாரிசும் ஒருநாள் காலடி எடுத்து வைக்கும் என்று அவர் கற்பனைகூட செய்து இருக்க மாட்டார். ஆனால், அதுதான் நடக்கிறது.
 
 
மலேசிய நாடாளுமன்றத்தின் சிம்ம சொப்பனம் அமரர் பட்டு
அரிதிலும் அரிதான அந்தக் காலக் கோடுகளைக் காண அவர் இப்போது இல்லை. பொல்லாத காலன் சொல்லாமல் கொள்ளாமல் அவரிடம் கால்ஷீட்டை வாங்கிக் கொண்டான். இருந்தாலும் பரவாயில்லை பட்டு. உங்களுக்காக நாங்கள் உங்கள் மகள் கஸ்தூரியை ஒவ்வொரு நாளும் பார்க்கிறோம். வாழ்த்துகிறோம். ஆராதிக்கிறோம்.

பட்டுவின் அரசியல் வாழ்க்கை கசப்பானது

பட்டுவின் அரசியல் வாழ்க்கை கொஞ்சம் கசப்பானது. கரடுமுரடானது. 1978-ஆம் ஆண்டு அரச மலேசிய கப்பல்படை ஸ்வீடன் நாட்டில் இருந்து 90 இலட்சம் ரிங்கிட்டிற்கு ஸ்பீக்கா எரிபடை குண்டுகளை வாங்கியது. அதில் சில பிரச்னைகள் உள்ளன என்று பட்டுவும், லிம் கிட் சியாங்கும் பொதுப்படையாகச் சொல்லப் போய், இருவருமே உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.பட்டுவின் பெயரில் சாலைைத் திறப்பு விழ - பினாங்கு முதலமைச்சர்
அதைப் போல 1987-இல் துன் மகாதீர் மலேசியாவின் பிரதமராக இருந்த போது ‘ஓப்பராசி லாலாங்’ கைது நடவடிக்கை நடைபெற்றது. அதில் பட்டு, கர்பால் சிங், லிம் குவான் எங், லாவ் டாக் கீ, வி.டேவிட் போன்றவர்கள் கைது செய்யப்பட்டு கமுந்திங் சிறையில் இரண்டு ஆண்டுகளுக்குத் தடுத்து வைக்கப்பட்டனர். அதுவும் பட்டுவின் வாழ்க்கையில் கசப்பான வேதனைகள்.  

சாமிவேலுவை எதிர்த்து நின்று


ஈப்போ மெங்லெம்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்பட்டுவின் வாழ்க்கை வரலாற்றை நான்கு ஐந்து வரிகளில் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். அப்போதுதான் அவர் என்ன என்ன சிரமங்களை அனுபவித்து இருக்கிறார் என்பது தெரியவரும்.ஜெலுத்தோங் புலி கர்ப்பால் சிங்கும் பட்டுவும்

கோப்பேங் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1982 லிருந்து 1986 வரையில் ஈப்போ, மெங்லெம்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். 1986 லிருந்து 1990 வரையில் பினாங்கு பாகான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.

1990-இல் சுங்கை சிப்புட் தொகுதியில் அதன் சிங்கமான சாமிவேலுவை எதிர்த்து நின்று 1763 வாக்குகளில் தோல்வி கண்டவர். அவருக்கு 12,664 வாக்குகளும் சாமிவேலுவிற்கு 14,427 வாக்குகளும் கிடைத்தன.

பட்டுவின் தோல்வியில் பல பிரச்சனைகள்

தேர்தல் முடிவின் போது பட்டுவைப் பார்த்து சாமிவேலு சொன்னது சிலரின் நினைவுகளுக்கு இப்போது வரலாம். ‘நீ ஜெயித்தால் நம் இந்தியர்களுக்கு ஒரு நாடாளுமன்ற இடம் மட்டும்தான் கிடைக்கும். ஆனால் நான் தோற்றுப் போனால் ஓர் அமைச்சர் பதவியே பறிபோய்விடும். திரும்பக் கிடைக்குமா. சந்தேகம்.’ அலுவலகத்தில் கஸ்தூரி

சொன்னதில் உண்மை இருக்கிறது. பட்டுவின் தோல்வியில் பல பிரச்சனைகள் இருந்தன என்றுகூட சொல்லப்படுகிறது.  எது எப்படியோ இப்போதைக்கு அது முக்கியம் இல்லை. ஏன் என்றால் அது ரொம்பவும் லேட்டாகிப் போன நியூஸ்.

1995 ஜூலை 12-ஆம் தேதி ஈப்போ மருத்துவமனையில் மாரடைப்பினால் பட்டு இறந்து போனார். அப்போது கஸ்தூரிராணிக்கு 16 வயது. அவர் இறந்த பிறகு அன்னார் ஆற்றிய சேவைகளுக்கு மரியாதை செய்ய, பேராக் மக்கள் விரும்பினர். 


நகராண்மைக் கழக ஊழியர்கள்

பேராக் வாழ் மக்களுக்கு கஸ்தூரிராணியின் அப்பா நிறைய உதவிகளைச் செய்து இருக்கிறார். அவருக்கு அங்காடிக்காரர்கள், தொழிலாளர்கள், சாப்பாட்டுக் கடைக்காரர்கள், நகராண்மைக் கழக ஊழியர்கள்தான் நெருங்கிய அன்றாட நண்பர்களாக இருந்துள்ளனர். தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்திய கார்
பள்ளிப் பிள்ளைகளுக்கு கைச் செலவுகளுக்கு காசு கொடுக்கும் ஒரு நல்ல பழக்கம் இவரிடம் இருந்துள்ளது. இவரிடம் காசு இருக்கிறதோ இல்லையோ முக்கியம் இல்லை. பள்ளிப் பிள்ளைகளுக்கு காசு கொடுப்பதில் இவருக்கு ஓர் அலாதிப் பிரியம். அதற்குத் துணையாக இருந்தவர் கஸ்தூரிராணி. அப்போது கஸ்தூரிராணிக்கு பதின்ம வயது.

அப்பாவின் ஓய்வூதியப் பணத்தில் படித்த மகள்

ஒரு தடவை கஸ்தூரிராணி வாங்கிச் சாப்பிடுவதற்காக வைத்து இருந்த காசை அவரிடம் நைசாகப் பேசி வாங்கி, புந்தோங் பள்ளிப் பிள்ளைகளுக்கு ‘செண்டோல்’ வாங்கிக் கொடுத்தாராம். அங்குள்ள பெற்றோர்கள் இன்னும் சொல்கிறார்கள்.

அதாவது தன்னிடம் காசு இல்லாத போது மகளிடமே காசைக் கடனுக்கு வாங்கி தானம் செய்த சந்தோஷம் எத்தனை அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும். சொல்லுங்கள். காசு என்னவோ பெரிய தொகை இல்லை. இருந்தாலும் மனசு வேண்டுமே. ஒரு முறை இரண்டு முறை இல்லை. பலமுறைகள் அந்த மாதிரி நடந்து இருக்கிறது. 


ஈப்போ நகராட்சி மன்றத்தின் தலைவர்

கடன் வாங்கிய காசை கஸ்தூரிராணியிடம் திருப்பிக் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. அதைக் கஸ்தூரியிடம்தான் கேட்க வேண்டும். இருந்தாலும் அப்பாவின் ஓய்வூதியப் பணத்தில்தானே கஸ்தூரிராணி மலாயாப் பல்கலைக்கழகத்திற்குப் போய்ப் படித்து பட்டம் வாங்கினார்.

ஈப்போ நகராட்சி மன்றத்தின் தலைவர்களில் ஒருவராக பட்டு இருக்கும் போது இவர் நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார். அவரிடம் உதவி பெற்றவர்களில் சிலர், பட்டு என்று சொன்னதும் கண்கலங்கிப் போகிறார்கள்.

பன்னிரண்டு வயதாக இருக்கும் போது

1995-இல் கஸ்தூரிராணியும் அரசியல் களத்தில் கால் பதித்தார். அதற்கு முன்னர், பத்து பன்னிரண்டு வயதாக இருக்கும் போதே கஸ்தூரிராணி பொதுச் சேவைகளில் கால் பதித்துவிட்டார். பட்டு பல நூறு பேர்களுக்கு குடியுரிமைகளைப் பெற்றுத் தருவதில் முன்னோடிகளாகத் திகழ்ந்துள்ளனர். அதில் கஸ்தூரிராணியின் பங்கும் சிறப்பு சேர்க்கிறது. பட்டுவின் அலுவலகத்தில் யார் எப்பொழுது வேண்டும் என்றாலும் நுழைந்து உதவிகளைக் கேட்கலாம்.

பசி என்று வந்தால், கீழே இருந்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டும் போகலாம். இவர் அடிக்கடி சொல்லும் வசனங்கள். ’மக்களுக்காகச் சேவை செய்யத்தான் அரசியலுக்கு வந்தேன். பணம் சம்பாதிக்க இல்லை.’ அவருடைய கனவுகள் இன்னும் உலர்ந்து போகவில்லை. உற்சாகங்களும் உறைந்து போகவில்லை. அவருக்குப் பதிலாக அவருடைய மகள் இப்போது வந்து இருக்கிறார்.

ஈப்போ சிலிபின் சாலைக்கு பட்டுவின் பெயர்


அவர் ஆற்றிய அரிய சேவைகளுக்காக, ஈப்போ சிலிபின் சாலைக்கு அவருடைய பெயரையே வைக்க வேண்டும் என்று பேராக் மாநிலத்தின் முன்னால் முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் நிஜார் கருத்து தெரிவித்தார். நல்ல மனதில் நல்ல எண்ணங்கள். ஆனால், முடிவுகள் வேறு மாதிரியாக விஸ்வரூபங்கள் எடுத்தன. அவற்றை இங்கே எழுத முடியாது.


ஆனால், இப்படி வேண்டும் என்றால் துணிந்து எழுதலாம். நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான்களின் கடும் எதிர்ப்புகள். கடைசியில், பட்டுவின் குடும்பத்தினரே ’எதுவும் வேண்டாம் சாமி. பட்டுவை நிம்மதியாகத் தூங்க விடுங்கள்’ என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிப் போனது.

காலத்தால் செய்த உதவி ஞாலத்திலும் பெரிது
 

இருந்தாலும் காலத்தால் செய்த உதவி ஞாலத்திலும் பெரிது என்று சொல்லி, பினாங்கில் பட்டுவின் பெயரில் ஒரு சாலைக்குப் பெயர் வைக்கப்பட்டது. முதலமைச்சர் லிம் குவான் இங்கிற்கு நன்றிகள்.

1995-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல் காலத்தில் தன் தந்தை பட்டுவுடன் சேர்ந்து கொண்டு, மலேசியா முழுமையும் அரசியல் பிரசாரப் பயணம் செய்தவர் கஸ்தூரிராணி. அப்போது கஸ்தூரிராணிக்கு வயது 16. ஜ.செ.க. தேர்தல் பிரசாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டார். அந்தத் தேர்தலில் ஜ.செ.க. மிக மோசமாகத் தோல்வி அடைந்தது. 


பட்டுவிற்கு மாரடைப்பு

அந்தச் சமயத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும், ‘ராக்கெட்’ இதழின் ஆசிரியராகவும் இருந்தார். அதன் பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். அந்த இழப்பு அவருடைய குடும்பத்திற்கு அல்ல. நாட்டிற்கே பெரிய இழப்பாகும். இந்தியச் சமுதாயத்திற்கு மாபெரும் இழப்பாகும்.

அவருடைய ஈமச்சடங்கு செலவுகளில் பெரும்பகுதியை டத்தோ ஸ்ரீ உத்தாமா சாமிவேலு கவனித்துக் கொண்டார் என்பதை நாம் இங்கே நினைவுகூர வேண்டும். அவர்கள் இருவரும் அரசியல் எதிரிகளாக இருந்து இருக்கலாம். ஆனால், உணர்வுகள் என்று வரும்போது இந்தியர்களாக இருக்கும் படசத்தில் இந்திய உணர்வுகளுக்கு அடிமையாகிப் போகின்றார்கள். அந்த வகையில் டத்தோ ஸ்ரீயைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.


பாரிசான் நேசனலைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்

ஒருகாலத்தில் ஜனநாயகச் செயல் கட்சிக்காகக் கஸ்தூரிராணி பிரசாரம் செய்தார். ஆனால், பட்டுவிற்குப் பின்னர் இருபது ஆண்டுகள் கழித்து தனக்கே பிரசாரம் செய்ய வேண்டிய ஒரு நிலைமை வரும் என்று கஸ்தூரியே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். கடந்த 2013 பொதுத் தேர்தலில் வாகை சூடிய வெற்றியாளர்களில் பெரிய வெற்றியாளராக வலம் வந்து கொண்டு இருக்கிறார் கஸ்தூரி. 

பத்து காவான் நாடாளுமன்றத் தேர்தலில் பாரிசான் நேசனலைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனை 25,962 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அந்தத் தொகுதியில் பதிவுபெற்ற வாக்காளர்கள் 57,593 பேர். சீனர்கள் அதிகமானோர் உள்ள தொகுதி.

சுபாங் ஜெயா தொகுதி


ஜ,செ.க தலைமைத்துவம் வேறு மாதிரி நினைத்தது
அவருடைய வெற்றியின் 

பின்னணியில் அவர் பட்டுவின் மகள் எனும் ஒரு முத்திரை இருந்தது உண்மைதான். இருந்தாலும் அவர் பெட்டாலிங் ஜெயா ஜாலான் காசிங், தொகுதி மக்களுக்கும் சுபாங் ஜெயா தொகுதி மக்களுக்கும் நிறைய உதவிகளைச் செய்துள்ளார்.

பொதுமக்களும் அதைக் கவனித்து வந்துள்ளனர். பெட்டாலிங் ஜெயா பகுதியில் ஓர் இடம் கிடைக்கலாம் என்றுதான் கஸ்தூரி நினைத்தார். ஆனால், ஜ,செ.க தலைமைத்துவம் வேறு மாதிரி நினைத்தது.


நுண் உயிரியல் துறையில் பட்டம்

நுண் உயிரியல் துறையில் பட்டம் அவர் இதுவரையில் கட்சிக்கு செய்து வந்த நல்ல நல்ல சேவைகள்தான் தலைமைத்துவத்தைக் கவர்ந்தன என்பது ஒரு சரியான செய்தியாகும். மலாயாப் பல்கலைக்கழகத்தில் நுண் உயிரியல் துறையில் பட்டம் பெற்ற கஸ்தூரிக்கு அரசியலில் ஈடுபடும் ஆசை குறைவாகவே இருந்தது.

ஆனால், லிம் கிட் சியாங்கின் அரசியல் செயலாளர்களில் ஒருவராக இருந்த பட்சத்தில் கஸ்தூரியின் சேவை மனப்பாங்கு மேலிடத்தை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. 

  
துணை முதல்வர் பி. இராமசாமி

அதனால், பத்து காவான் தொகுதியில் நிறுத்தப்பட்டார். பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் பி. இராமசாமி அவர்கள், கஸ்தூரியின் வெற்றிப் பின்னணிகளில் ஒருவராக விளங்குகிறார். தேர்தல் காலத்தில் ஒரு மேடையில் பிரதமர் நஜீப் பேசிக் கொண்டிருக்கிறார். கொஞ்ச தூரம் தள்ளி இன்னொரு மேடையில் கஸ்தூரி பேசிக் கொண்டிருக்கிறார்.

மலையும் மடுவும் மோதிக் கொள்வதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். பிரதமரே களம் இறங்கி இருக்கிறார். நமக்கு வெற்றி கிடைக்குமா என்றுகூட கஸ்தூரி பயந்து போனாராம். ஆனால், மக்கள் வேறு மாதிரி தீர்ப்பை எழுதிவிட்டனர். மாற்றம் எல்லாம் மாற்றம் இல்லை மாற்ற வேண்டும் என்பதுதான் மாற்றமாகிப் போனது.

கஸ்தூரிராணிக்கு இப்போது வயது 34. சின்ன வயது. பெரிய பொறுப்பு. உங்களுக்காக ஒரு மந்திர வாசகம். அருவி போல விழுவது என்றாலும் இமயம் போல எழுந்து நில். ஓய்ந்து போய் சாய்ந்து போனாலும் உன் மனதை மட்டும் தளர விடாதே. உன் அப்பாவின் பாதைகளை நினைத்துப் பார். நீயும் ஒரு புதுப் பாதையில் வாழ்ந்து காட்டு. மகளே, துணிந்து நில். துணிந்து செல்!

No comments:

Post a Comment