10 ஆகஸ்ட் 2014

கணினியும் தமிழர்க் குழந்தைகளும்

திருமதி.விமலாதேவி, பெட்டாலிங் ஜெயா
கே: இப்போது உள்ள குழந்தைகள் கணினி மூலமாக தமிழில் நன்றாக 'டைப்' செய்கிறார்கள். பார்த்து இருக்கிறீர்களா?

ப: ஓ... நன்றாக. அண்மையில் ஒரு பத்து வயது சிறுமி தமிழில் தட்டச்சு செய்வதைப் பார்த்து ஆடிப் போய் விட்டேன். சிறுமியின் அப்பாதான் என்னை அழைத்தார். என் மகளை வந்து பாருங்கள், என் மகளை வந்து பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.


வேண்டுகோளத் தட்டிக் கழிக்க முடியவில்லை. அவருடைய வீட்டிற்குப் போனேன். மகளைக் கூப்பிட்டு என்னை அறிமுகம் செய்து வைத்தார். 

பிறகு கணினியைத் திறந்து விட்டு மகளைத் தட்டச்சு செய்யச் சொன்னார். நானும் அருகில் போய் நின்று, ‘எப்படிமா தமிழில் தட்டச்சு செய்கிறாய்’ என்று கேட்டேன்.

அதற்கு அவர், 'ரொம்ப ஈசி அங்கிள். பர்ஸ்ட் 'அல்ட்'டை தட்டணும். அப்புறம் பிரஸ் நம்பர் 2. தமிழ் வில் கம். இட் ஈஸி வெரி ஸி அங்கிள்' என்றார். 

எனக்கு உடல் எல்லாம் புல்லரித்துப் போய் விட்டது. இது போதும். காலா காலத்திற்கும், தமிழ் மொழிக்குச் சளிக்காய்ச்சல், மழைக் காய்ச்சல் எதுவும் வராது. மிளகு ரசம், நண்டு ரசம் எதையும் கேட்காது.

----------------------------------------------------------------------------------

ஆர்.ஜெயமோகன், சாலாக் திங்கி, சிப்பாங், சிலாங்கூர்.
கே: Folder என்பதைக் கோப்பு என்கிறோம். இதை மற்றவர் படிக்க முடியாதபடி அல்லது திறக்க முடியாதவாறு பாதுகாக்க முடியுமா?

ப: முடியும். நீங்கள் உருவாக்கிய ஒரு கோப்புக்கு Password எனும் சங்கேதச் சொல்லைக் கொடுத்து, அந்தக் கோப்பைப் பாதுகாக்க முடியும். அந்தக் கோப்பை மற்றவர்கள் திறந்து படிக்க முடியாது. கோப்பின் மீது வலது சொடுக்கு செய்து Properties என்பதைத் தேர்வு செய்யவும்.

அப்புறம் Sharing >> Make this Folder Private >> Apply >> Create Password >> Ok. அதன் பின்னர் அந்தக் கோப்பை மற்றவர் யாரும் பார்க்க முடியும். ஆனால், திறக்க முடியாது.

----------------------------------------------------------------------------------

ஆர்.சற்குணம், பாங்கி (SMS - குறும் செய்தி 15.05.2014)
கே: சார். கணினியைப் பற்றி நீங்கள் நிறைய தெரிந்து வைத்து இருக்கிறீர்கள். கண்டிப்பாக கணினித் துறையில் பட்டங்கள் வாங்கி இருக்க வேண்டுமே. உங்களை எப்படி மடக்கினேன் பார்த்தீர்களா.

ப: நீங்கள் சொல்கிற மாதிரி நிறைய பட்டங்களை வாங்கி வைத்து இருந்தேன். சமயங்களில் பேரப் பிள்ளைகள் வீட்டிற்கு வருவார்கள். சில பட்டங்களை எடுத்துப் பறக்க விட்டு விட்டார்கள்.

இன்னும் ஒன்று இரண்டு இருக்கிறது. பார்ப்போம். நன்றாகக் காற்று அடிக்கிற நேரத்தில், பேரப் பிள்ளைகளைக் கூப்பிட்டு, பறக்க விட்டுப் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

புந்தோங் சந்தையில் புதுசாகப் பட்டங்கள் கிடைப்பது இல்லையாம். ஆக, நான் எப்படி மடக்கினேன் பார்த்தீர்களா. எல்லாம் சரி. மற்றவர்களுக்குப் பயன் படும் கேள்விகளாகக் கேளுங்களேன். நன்றாக இருக்கும் இல்லீங்களா.

----------------------------------------------------------------------------------

அர்ஜுனன் செல்வராஜா  arjunanselvaraja@ymail.com
கே: கணினியின் இயங்குதளத்தில் .exe என்றும் .cab என்றும் கோப்புகள் உள்ளன. இவற்றின் பயன் என்ன?

ப: .exe என்றால் executive கோப்பு என்பதின் சுருக்கம். இது ஒரு நிரலி. இதை இரண்டு முறை சொடுக்கு செய்தால், அந்த நிரலி விரிந்து இயங்கும். எல்லா நிரலிகளிலும் இந்தக் கோப்பு இயக்கம் இருக்கும். அடுத்து .cab என்றால் cabinet என்று பொருள். இது விண்டோஸ் இயங்கு தளத்தில் இருக்கும். இயங்கு தளம் என்றால் Operating System. 

இந்த .cab கோப்பு விண்டோஸ் இயங்குவதற்கு உதவி செய்யும். நீங்கள் ஏதாவது ஒரு நிரலியைக் கணினிக்குள் பதிப்பு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிரலியைப் பற்றி விண்டோஸ் இயங்கு தளம் படித்துத் தெரிந்து கொண்டு, அதை அப்படியே ஒரு கோப்பில் பதித்து வைக்கும்.

இந்த வகையான கோப்புகள் ரொம்பவும் முக்கியமானவை. அதை நீங்கள் திறக்க வேண்டாம். அதில் நாம் படித்துத் தெரிந்து கொள்ள எதுவும் இல்லை. படித்தாலும் உங்களுக்குப் புரியாது. முடிந்தால் அதைத் திறந்து பார்க்காமல் இருப்பதே நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக