28 July 2015

அப்துல் கலாம் - ஓர் இமயம் மறைந்தது

[இந்தக் கட்டுரை 29.07.2015 மலேசியா தினக்குரல் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது.]

அப்துல் கலாம் எனும் அந்தத் தலைமகனின் பெயர் மலேசியாவில் மிகவும் பரிச்சயமான பெயர். பெரும்பாலான மலேசியத் தமிழர்களுக்கு நன்கு தெரிந்த பெயர். 

மலேசியத் தமிழர்கள் அவரை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுகிறார்கள். அண்ணல் காந்திக்குப் பின்னர் அப்துல் கலாம் மலேசியர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.   


மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவரும் அப்துல் கலாம் மீது அதீதமான நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். பள்ளிப் பாட நூல்களில் அவரைப் பற்றி நிறையவே எழுதி இருக்கிறார்கள். அதனால் அவரைப் பற்றி நிறைய தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

தவிர மலேசிய ஊடகங்கள் அவருடைய செய்திகளைத் தவறாமல் பிரசுரித்து வருகின்றன. அவரின் மறைவுச் செய்திகளை எல்லாத் தமிழ் நாளிதழ்களும் பிரசுரித்தன. நான்கு ஐந்து பக்கங்களுக்கு அவரைப் பற்றிய தகவல்களைப் போட்டிப் போட்டுக் கொண்டு அச்சேற்றின.


இந்தியாவின் இரண்டாவது காந்தி என்று அன்புடன் அழைக்கப்பட்ட அமரர் அப்துல் கலாம். தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களைக் காண்பது அரிது என்று சொல்லும் அளவிற்கு மலேசிய மனங்களில் நிறைந்து மணம் பரப்புகிறார். 

தஞ்சோங் மாலிம் ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் பெரியவர் அப்துல் கலாம் அவர்கள் எழுதிய அக்கினிச் சிறகுகள் சுயசரிதையைப் பாட நூலாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.


இமயம் மறைந்தது இந்தியம் அழுகின்றது

 
இமயத்தின் உச்சியைத் தொடுவதாக இருந்தாலும் சரி; ஆழ்கடலின் அடிபாதத்தைத் தொடுவதாக இருந்தாலும் சரி; மன ியில் மாசிலா உண்மை வேண்டும். 

அந்த ிமையில் மாசிலா நம்பிக்கை வேண்டும் என்று சொன்ன அந்த இமயம் சரிந்து விட்டது. வானத்தின் எல்லையில் இந்தியம் அழுகின்றது. வையகத்தின் எல்லையில் மனுக்குலம் கண்ணீர் சிந்துகின்றது.

ஐயா அப்துல் கலாம் அவர்கள் இனம், மொழி, சமயம், சாதி, சாதி, சடங்கு, சம்பிரதாயம் அனைத்தையும் கடந்து போன ஒரு சாதாரண மனிதர். ஆனால் அன்னைத் தமிழகத்திற்குக் கிடைத்த ஒரு மந்திரப் புன்னகை. அகில இந்தியாவிற்கு கிடைத்த ஓர் அறிவு ஜீவி.மனுக்குல வரலாற்றில் மறக்க முடியாத மனிதர்

ஏழ்மை எளிமையில் உச்சத்தைத் தொட்ட அந்த இமயம் மறைந்து விட்டது. மனுக்குல வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

கரிகாலன் முடியாது என்று சொல்லி இருந்தால் கல்லணை கிடைத்து இருக்காது. காந்தியடிகள் முடியாது என்று சொல்லி இருந்தால் சுதந்திரம் கிடைத்து இருக்காது. முடியும் என்றால் முடியும்; முடியாது என்றால் முடியாது.

இரண்டிற்கும் நம்பிக்கைதான் மூல காரணம். முடியும் என்று சொன்னால் வரலாறு எழுதப் படுகிறது. முடியாது என்று சொன்னால் வரலாறு அப்போதே அழிக்கப் படுகிறது. ஆக, "முடியும் என்ற நம்பிக்கை முதலில் ஒவ்வோர் இந்தியனுக்கும் வேண்டும் எனும் தூண்டுதல் உணர்வைத் தூண்டி விட்டவர்.


ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் அப்துல் கலாம். தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் ஒரு சாதாரண தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். அரசு பள்ளியில் தமிழ் படித்து முதலில் பொறியாளரானார். 

பின்னர் அறிவியலாளரானார். பின்னர் குடியரசுத் தலைவராக உச்சத்திற்கு உயர்ந்து காட்டினார். தன் உயிரினும் மேலாக தமிழை நேசித்தவர். அதையும் தாண்டியிலையில் திருக்குறளைக் காதலித்தவர். இது நமக்கு எல்லாம் பெருமை சேர்க்கும் வியமாகும்.

 

பிரம்மசாரி அப்துல் கலாமிற்கு இரண்டு மனைவிகள்

ஒருமுறை நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஒரு மாநாட்டில் ஒரு பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு அப்துல் கலாம் ஐயா சிரித்துக் கொண்டே எனக்குத் திருமணம் ஆகவில்லை என்றயார் சொன்னது. எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாலேயே திருமணம் ஆகிவிட்டது. எனக்கு ஒரு மனைவி அல்ல இரண்டு மனைவிகள் என்றார்.

மாநாட்டிற்கு வந்தவர்கள் மலைத்துப் போனார்கள். தொடர்ந்து சொன்னார். எனக்குச் சின்ன வயதாக இருக்கும் போதே எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. அந்த ரகசியத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை. நேரம் வரும் போது சொல்லலாம் என்று நினைத்து இருந்தேன் என்றார். 


அப்துல் கலாம் அவர்கள் திருமணம் ஆகாதவர். ஓர் அசல் பிரம்மசாரி என்று எல்லோருமே நம்பி இருந்தார்கள். ஆனால் திடீரென்று இப்பி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டதும் இன்னொரு பத்திரிகையாளர் எழுந்து, உங்கள் மனைவிமார்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டார்.

அதற்கு  அப்துல் கலாம் அவர்கள் தன் நெஞ்சுப் பகுதியின் வலது பக்கத்தைத் தொட்டு ’இங்கே தமிழ் என்கிற ஒரு மனைவி இருக்கிறாள்.’ 

இடது பக்கத்தைத் தொட்டு ’இங்கே திருக்குறள் என்கிற இன்னொரு மனைவி இருக்கிறாள்’ என்றார். அப்புறம் என்ன மாநாட்டு அரங்கமே ஒரு சேரக் கைதட்டி ஆரவாரம் செய்தது. அரங்கமே அதிர்ந்தது. இந்த மாதிரி நகைச்சுவையாகப் பேசுவதில் அவர் கில்லாடி. 

குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் மீது மிகுந்த பாசமும், அக்கறையும் கொண்டவர். குடியரசுத் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்து சென்றாலும் பதவி அதிகாரத்தைச் சுயநலனுக்காகப் பயன்படுத்தாதவர். தமது குடும்பத்தினரைக் கூட குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்க வைக்க மட்டார். 

மலேசிய தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத் தலைவர் டான்ஸ்ரீ சோமசுந்தரம்

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஆடம்பர மாளிகைகளைத் தவிர்த்து வந்தார். இந்திய அரசு அவருக்கு ஒரு பெரிய மாளிகையையே வழங்கியது. 

இருந்தாலும் அவர் மறுத்து விட்டார். ஒரு சாதாரண வீட்டிலேயே ஏழு ஆண்டுகளாகக் கடைசி காலம் வரை வாழ்ந்து காட்டினார்.


தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள்

அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் மீது சர்ச்சைகள் கிளம்பின. 

அப்படிப்பட்ட கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும். அவர்களைத் தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என்று பல கோணங்களில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப் பட்டன.

இருந்த போதிலும், ஒரே ஒரு மனுவைத் தவிர மற்ற மனுக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார். தூக்கு மேடைக்கு அனுப்பாமல் பலரின் உயிர்களைக் காப்பாற்றியும் இருக்கிறார்.

ஒரு குடியரசின் தலைவர், ஒரு பேராசிரியர், ஓர் அறிவியலாளர் என பன் முகங்களை கொண்டு இருந்தாலும் தகைசால் மனிதராக வாழ்ந்து காட்டியவர். அன்பு, கருணை, பாசம், அக்கறை, மனித நேயம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்தவர். 

அன்னாரின் மறைவு இந்தியாவுக்கு மட்டும் அல்ல அகில் உலகத்திற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மனுக்குலம் மயங்கி நிற்கிறது.

மலேசிய முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவியுடன்

அப்துல் கலாம் அவர்கள் 1931-ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை இந்து மதத்தின் தலைவர்களிடமும் பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டு இருந்தார்.

தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக அப்துல் கலாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவர் பிறந்த வீடு தற்போது ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிவாசல் தெருவில் இருக்கின்றது.

ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவருடைய வீட்டிற்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். அப்துல் கலாம் அவர்கள் இயற்கையோடு வாழ்ந்தவர். 

1964-ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன் பாலத்தையும் ஒரு ரயிலையும் தனுஷ்கோடிக்கு இழுத்துச் சென்றது. 

ஆதர்ச நாயகனாக வரிந்து கொள்ளும் இளைஞர் கலாசாரம்


அதைப்பற்றி தன்னுடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் ’தண்ணீர் என்பது மிகுந்த அழிக்கும் தன்மை வாய்ந்தது. இப்படி நடக்கும் என்று நான் கனவிலும் எண்ணிப் பார்த்தது இல்லை என்று எழுதி இருக்கிறார்.

ஓர் அறிவியலாளரைத் தங்களின் ஆதர்ச நாயகனாக வரிந்து கொள்ளும் கலாசாரம் மிக மிக அபூர்வம். அதைவிட அபூர்வம் என்ன தெரியுமா. அரசியல் துறையைச் சார்ந்த ஒருவரை மனப்பூர்வமாக ஈர்த்துக் கொளவதாகும். அந்த வகையில் அப்துல் கலாம் அவர்கள், அதிசயங்களின் ஒட்டு மொத்தக் கலவை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு கட்டத்தில் அப்துல் கலாம் அதிகாரத்தில் இல்லை. அரசாங்கப் பதவிகளில் இல்லை. நிர்வாக ஆளுமை இல்லை. இருந்தாலும், அவர் மீதான ஆத்மீக ஈர்ப்பு மட்டும் கிஞ்சிதமும் குறையவில்லை. 

மாறாக ன் இறுதி காலம் வரையில் பல இலட்சக் கணக்கான இளைஞர்களை மேலும் மேலும் ஈர்த்துக் கொண்டு தான் இருந்தார். இட்லரால் கூட செய்ய முடியவில்லை. மாபெரும் மெஸ்மெரிசத் தன்மை. தலை வணங்குகிறோம் தலைவரே!


வீடு வீடாகச் செய்தித் தாள்களைப் போடும் வேலை


* அப்துல் கலாம் அவர்கள் 1931 அக்டோபர் 15-ம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரு தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை ஜைனுலாபுதீன். ஒரு படகுக்குச் சொந்தக்காரர். தாயாரின் பெயர் அஷியம்மா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே குடும்ப வருமானத்திற்காக வேலைக்குச் சென்றவர்.

* உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, வீடு வீடாகச் செய்தித் தாள்களைக் கொண்டு போய் போடும் வேலை செய்தார்.

* இந்திய விமானப் படையில் ஒரு போர் விமானி ஆக வேண்டும் என்பது அப்துல் கலாமின் கனவு இலட்சியம். ஆனால், நிறைவேறவில்லை. அதற்கு காரணம், எட்டே எட்டு இடங்கள் இருந்த பணிக்கான தகுதிச் சுற்றில், இவர் 9-வது நபராக வந்தார். போர் விமானியாக ஆக முடியவில்லை. அப்படியே போர் விமானியாகி இருந்தால், ஒரு நல்ல அதிபரை இந்தியா இழந்து இருக்கும்.

* அதிபர் பதவி காலத்திற்குப் பின்னர், தனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் பணிக்கே மீண்டும் திரும்பினார். மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் முழுமையாக ஐக்கியப் படுத்திக் கொண்டார். அதற்காக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார்.


வீணை வாசிப்பது பிடித்தமான பொழுதுபோக்கு


* இந்திய இளைஞர்களின் ரோல் மாடலாகவும், உலகம் அறிந்த இந்திய அதிபதியாகவும் நன்கு அறியப்பட்டவர்.

* வீணை வாசிப்பது அவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. தமிழ் மொழியில் கவிதைகள் எழுதுவதிலும் அதிக ஆர்வம் காட்டினார்.

* இவர் ஒரு சிறந்த விஞ்ஞானி. அனுபவம் பெற்ற அணுவியல் பொறியியலாளர். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு (DRDO) போன்ற அறிவியல் கழகங்களில் முக்கிய பங்கு வகித்தவர்.

* இவருடைய குடும்பத்தில் ஐந்து பிள்ளைகள். டாக்டர் அப்துல் கலாம் கடைக்குட்டி. கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் முழுக்கவும் நாட்டுக்காகவே உழைத்தவர்.

* ராமேஸ்வரத்தில் இவருடைய அண்ணன் முகம்மது முத்து மீரா லெபாய் மரைக்காயர் இருக்கிறார். அவருக்கு வயது 92.

* "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்றும் அழைக்கப் படுகிறார். எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம், வான் எரிசுகள் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்புகள் அபரிதமானவை. 
* இந்தியாவை அனைத்துலக அளவில் தலைநிமிர வைத்தது பொக்ரான் அணு ஆயுதச் சோதனை. இந்தச் சோதனை அப்துல் கலாம் தலைமையில் நடைபெற்றது.

* இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுதச் சோதனையான பொக்ரான்-II (1998) சோதனையில் முக்கிய பங்கு வகித்தவர்.

* கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் தயாரிக்கும் திட்டமும் இவருடைய தலைமையில் தான் இயங்கி வருகிறது.


இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது அவருடைய கனவு


இவர் எழுதியுள்ள நூல்கள்:


 1. Turning Points; A journey through challenges 2012
 2. Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999.
 3. இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை. எஸ். ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998.
 4. Ignited Minds: Unleashing the Power Within India; வைகிங், 2002.
 5. The Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்); புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004.
 6. Mission India (திட்டம் இந்தியா); பீ ஜே அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள்; பென்குயின் புக்ஸ், 2005.
 7. Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்); ராஜ்பால் & சன்ஸ், 2007.
 8. Developments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988.
 9. (Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது.


இவர் பெற்ற உயரிய விருதுகள்:


 • அறிவியல் டாக்டர் (பட்டம்), எடின்பரோ பல்கலைக்கழகம் - 2014
 • சட்டங்களின் டாக்டர் (பட்டம்), சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகம் - 2012
 • IEEE கவுரவ உறுப்பினர், ஐஇஇஇ - 2011
 • பொறியியல் டாக்டர் (பட்டம்), வாட்டர்லூ பல்கலைக்கழகம் - 2010
 • ஹூவர் மெட, ASME மணிக்கு, அமெரிக்கா - 2009
 • சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது, கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, அமெரிக்கா - 2009
 • பொறியியல் டாக்டர் (பட்டம்), நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிங்கப்பூர் - 2008
 • கிங் சார்லஸ் II பதக்கம், ராயல் சொசைட்டி, இங்கிலாந்து - 2007
 • அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம், உல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம், இங்கிலாந்து - 2007
 • ராமானுஜன் விருது, ஆழ்வார்களில் ஆராய்ச்சி மையம், சென்னை - 2000
 • வீர் சவர்கார் விருது     இந்திய அரசாங்கம் - 1998
 • தேசிய ஒருங்கிணைப்பு இந்திரா காந்தி விருது, இந்திய அரசாங்கம் -  1997
 • பத்மா பூஷன் (1981)
 • பத்மா விபூஷன் (1990)
 • பாரத் ரத்னா (1997)

அப்துல் கலாம் மறைவிற்காக 7 நாட்கள், தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு 28.07.2015 செவ்வாய்க்கிழமை விடுமுறை என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவின் நதிகளை இணைப்பது; மதுவை ஒழிப்பது; தூக்குத் தண்டனைகளை ரத்து செய்வது ஆகியவை அவருடைய விருப்பமாகவும் நோக்கமாகவும் இருந்தன. அடுத்து இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்பது இன்னொரு கனவு. 

அந்தப் பெருமகனின் கனவுகளை நிறைவேற்றினால், அதுவே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும். (முற்றும்)

No comments:

Post a Comment