20 October 2015

பாலம் கல்யாணசுந்தரம்

மலேசியா புதிய பார்வை நாளிதழில் 20.10.2015இல் பிரசுரிக்கப்பட்டது.

பாலம் கல்யாணசுந்தரம், மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

உன்னதமான இலட்சியங்களில் உண்மையான இலக்கணங்கள். சாந்தமான கொள்கையில் சத்தியமான சாதனைகள். கிஞ்சிதம் குறையாத சீர்பட்ட செம்மைகள். அங்கே தியாகத்தின் எளிமைக் கூற்றுகள் தெரிகின்றன.  

இப்படியும் ஒரு மனிதரா என்கிற அலைகடல் வியப்பு. ஒரு திகைப்பு. அந்த மனிதருக்குள் ஓர் அருவமான ரிஷிகேசி தென்படுகிறது.  

அவர்தான் பெரியவர் பாலம் கல்யாணசுந்தரம். மனுக்குலத்திற்கு கிடைத்த நல்ல ஒரு ஜீவகாருண்யம். தமிழகத்தில் பிறந்த ஒரு தார்மீகச் சிந்தனை. வயதாகியும் இளமை மாறாத சாருகேசியில் இவர் ஒரு ராக மாளிகை. அப்படித் தான் நமக்கும் படுகிறது.

காமராசர், கக்கன், அண்ணாதுரை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, எம்.ஜி.ஆர், இரட்டைமலை சீனிவாசன், சீனிவாச ஐயங்கார், தீரன் சின்னமலை, சந்திரசேகர ஆசாத்.

இந்தப் பெயர்களை உங்களுக்குத் தெரியுமா. தெரிந்தால் நல்லது. தெரியாவிட்டால் பரவாயில்லை. இவர்கள் எல்லாம் இந்திய மண்ணின் மைந்தர்கள். தமிழகத்திற்கு மிகவும் வேண்டப் பட்டவர்கள். 

மறைந்தும் மறையாமல் இன்றும் நம்மோடு வாழ்கின்றார்கள். அதே அந்த மண்ணில் பிறந்தவர்தான் பாலம் கல்யாணசுந்தரம். இவர் சத்தியத்தில் பிறந்து  சத்தியத்திலேயே வாழும் ஒரு சத்தியமூர்த்தி.

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த குடிமகன்

ஐயா ல்யாணசுந்தரம்ர்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபை 20-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த குடிமகன் (Man of Millinium) விருதை வழங்கிச் சிறப்பு செய்தது. இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் அனைத்துலகச் சுயசரிதைக் கழகம், உலகின் உயர்ந்த மனிதர்களில் ஒருவர் என்று புகழாரம் செய்தது. அமெரிக்க அரசாங்கம் புத்தாயிரத்தின் தவப் புதல்வன் என்று மகுடம் சூட்டியது.

இந்திய அரசு இந்தியாவின் சிறந்த நூலகர்என்று பாராட்டிச் சிறப்பித்தது. உலகின் ஆகச் சிறந்த முதல் பத்து நூலகர்களில் ஒருவர் எனத் தேர்வு செய்யப்பட்டு இன்றும் போற்றப் படுகிறார். 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையும் இவரைச் சார்கிறது. உலகப் பணக்காரர் பில் கேட்ஸ், சில மில்லியன் டாலர்களை அன்பளிப்பாகக் கொடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவருடைய வாழ்க்கை வரலாற்றை, மெலிண்டா கேட்ஸ் அறவாரியம் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறது. 22 மொழிகளில் வெளியீடு செய்து இருக்கிறார்கள். வேறு என்னங்க வேண்டும். இவர் ஒரு தமிழர் என்பது நமக்கு எல்லாம் எத்தனைப் பெருமை. அவரைப் பற்றி மேலும் தகவல்கள்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இந்தியா வந்தபோது அவர் இருவரைச் சந்திக்க விரும்பினார். ஒருவர் அதிபர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இன்னொருவர் பாலம் கல்யாண சுந்தரம். 

ல்யாண சுந்தரத்தின் பெயருக்குப் பின்னால் வரும் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS எனும் எழுத்துகளைப் பாருங்கள். மொத்தம் 36 எழுத்துகள்.

நார்வே நாட்டில் திரைப்பட விழா

ஏழைகளின் துயரங்களை நேரிடையாக தெரிந்து கொள்ள 7 ஆண்டுகள் நடைபாதை வாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லூரிகளுக்குத் தானமாக எழுதி வைத்து விட்டார்.

வாழ்நாள் முழுவதும் ஒரு துண்டு நிலம், ஓர் ஓலைக் குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்க நினைத்தவர். அதனால் தன்னுடைய திருமண வாழ்க்கையையும் தியாகம் செய்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், உலகில் மிகவும் போற்றத்தக்க அறிவுஜீவி (A Most Notable intellectual’ in the World) என்ற பட்டத்தை வழங்கியது. அத்துடன் நூலகத் துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.

இந்தியாவின் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து. இவர் சென்னை மையப் பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை பரிசாகக் கொடுத்தார். 

ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என கல்யாணசுந்தரம் அந்தப் பரிசை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பாருங்கள். அந்த மனிதர் எங்கே நிற்கிறார் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

இவரைப் பற்றி ஓர் ஆவணப் படம் தயாரித்தார்கள். சுபாஷ் கலியன் என்பவர் இயக்கியது. 2012-ஆம் ஆண்டு நார்வே நாட்டில் நடைபெற்ற திரைப்பட விழாவில் படத்தைப் போட்டுக் காட்டினார்கள். 

அதை ஒரு சிறப்புப் படமாகத் தேர்வு செய்தார்கள். கல்யாணசுந்தரம் நடத்தும் பாலம் எனும் தொண்டூழிய வாரியத்திற்கு கணிசமான தொகையையும் கொடுத்து அனுப்பினார்கள்.

சூப்பர் ஸ்டார் வீட்டில்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் மீது அளவு கடந்த மதிப்பு வைத்து இருந்தார். தன் தந்தையைப் போல நினைத்தார். ஒண்டுக் குடிசையிலும் பிளாட்பாரத்திலும் அவர் தங்குவது ரஜினிக்குப் பிடிக்கவில்லை. அதனால், இவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்தார். 

அங்கேயே தங்க வைத்துக் கொண்டார். ஆனால், கல்யாணசுந்தரம் கொஞ்ச நாட்கள்தான் தங்கினார். அப்புறம் ரஜினியின் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். ஏன்? கல்யாணசுந்தரமே சொல்கிறார். கேளுங்கள்.

ரஜினிகாந்துக்கு என் மேல் மிகுந்த பிரியம்தான். எனக்காக அவருடைய வீட்டில் இரண்டு பெரிய அறைகளை, எல்லா வசதிகளுடன் ஒதுக்கித் தந்தார். இருந்தாலும், எனக்கு அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. 

மாடிப்படிகளுக்குக் கீழேதான் என் துணிமணிகளை வைத்துக் கொள்வேன். தரையில் ஒரு துணியை விரித்துப் போட்டு படுத்துக் கொள்வேன். அது என்னவோ என் மனசிற்குச் சரியாகப் படவில்லை. ஏழைகளுக்காக உழைக்கிறவன் என்று சொல்லிக் கொண்டு சூப்பர் ஸ்டார் வீட்டில் தங்கி இருந்தால், யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்.

அங்கே நான் ரொம்ப எளிமையாக வாழ்ந்தேன். கீழே தரையில்தான் படுத்துக் கொள்வேன்என்று சொன்னால் யார் தான் நம்புவார்கள். சொல்லுங்கள்.  

பனை மரத்தின் அடியில் நின்று கொண்டு பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்றுதானே உலகம் சொல்லும். முள் மேல் இருப்பது போல் நான்கு மாதங்கள் அங்கு இருந்தேன். பின்பு வெளியேறி விட்டேன். அதில் ரஜினிக்கு ரொம்பவும் வருத்தம்என்றார்.

நிச்சயமாக ரஜினி வருத்தப்பட்டு இருப்பார். தெரிந்த விஷயம். பெரியவரை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் தானே, தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார். 

அங்கே போய் துண்டை உதறித் தரையில் போட்டு படுத்துக் கொண்டால் எப்படி. ரஜினிக்கும் ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்து இருக்கும்.

உலகப் பணக்காரர் பில் கேட்ஸ்

சரி. யார் இந்த பாலம் கல்யாணசுந்தரம். ரொம்ப பேருக்கு இவரைத் தெரியாதுங்க. அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், இந்திய அதிபர் அப்துல் கலாம், ஆளுநர் பாத்திமா பீவி போன்றவர்கள் இவரைத் தேடி வந்த பிறகுதான், சொந்த நாட்டு மக்களுக்கே அவரைப் பற்றி தெரிய வந்தது. 

அப்புறம் என்ன. வழக்கம் போல ஆகா ஓகோ புகழ்மாலைகள். கட் அவுட்டுகள். விருதுகள் விருந்துகள். பற்றாக்குறைக்கு பார்க்கிற இடம் எல்லாம் பதாகைகள்.

ஆனால், நாற்பது ஆண்டுகள் வரை, கல்யாணசுந்தரம் என்பவர் யார் என்று தமிழர்களில் பலருக்குத் தெரியாமல் போனது தான் உலகத்தின் எட்டாவது அதிசயம். என்ன செய்வது. கண்களில் பட்டது எல்லாம் சிரிக்கும் சினிமா, சிணுங்கும் சினிகா, கொத்தவால் பில்டப்புகள். பெயர்கள் வேண்டாமே. பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள். அதைப் பற்றி எழுதினால் வலிக்கும்.

கல்யாணசுந்தரம் என்பவர் இந்தியாவிலேயே மிகச் சிறந்த சமூகச் சேவகர்களில் ஒருவராகப் போற்றப் படுகிறார். தனக்கென வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்

ஒரு நூலகராக அரசாங்கத்தில் பணியாற்றியவர். தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாய் ஓய்வூதியத் தொகையை, அப்படியே தூக்கிக் குழந்தைகள் நல நிதிக்காகக் கொடுத்தவர்.

அதன் பின்னர், இவருக்கு லட்சக் கணக்கில் பணம் கிடைத்து இருக்கிறது. ஆனால், தனக்கு என்று ஒரு காசைக்கூட தொடுவது இல்லை. சமூக நலக் காரியங்களுக்காக வாரிக் கொடுத்து விடுவார்

பின்னர் ஒரு ஓட்டலில் அற்றைக் கூலியாக வேலை செய்தார். அதில் கிடைத்த பணத்தில் தன் அன்றாடச் செலவுக்கு கொஞ்சம் எடுத்துக் கொள்வார். மிச்சத்தையும் தர்ம காரியங்களுக்குக் கொடுத்து வந்தார்.

பெரியவர் கல்யாணசுந்தரம் திருநெல்வேலி, கருவேலங்குளம் என்ற ஊரில் 1953-ஆம் ஆண்டில் பிறந்தவர். ஏர்வாடியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் கருவேலங்குளம் இருக்கிறது. தந்தையாரின் பெயர் பால்வண்ணன். அந்த ஊர் மக்களின் நாட்டாமை. தாயாரின் பெயர் தாயம்மாள்.

சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது

செயின்ட் சேவியர் கல்லூரியில் தமிழில் படித்து பி.ஏ இளங்கலைப் பட்டம் பெற்றார். ஒரே ஒரு மாணவராக இருந்ததால் அவரை வேறு பாடம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள்.

இருந்தாலும் தமிழ் மொழியின் மீது இருந்த அலாதியான பிடிப்பினால்,  பிடிவாதமாக இருந்தார். அதில் வெற்றியும் பெற்றார். 1963-ஆம் ஆண்டு அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருக்கும் பொழுது, இந்திய சீனப் போர் நடக்கிற காலக்கட்டம். 

அப்போது, தேசியப் பாதுகாப்பு நிதிக்காக, தன்னுடைய எட்டரை பவுன் தங்கச் சங்கிலியை அப்படியே கழற்றி, கர்மசீலர் காமராசரிடம் கொடுத்தவர்தான் இந்தப் பாலம் கல்யாணசுந்தரம்.

பணம் என்பது எல்லோருக்கும் மூன்று வழிகளில் கிடைக்கும். கஷ்டப்பட்டு சொந்தமாக உழைத்துச் சம்பாதிப்பது ஒரு வழி. அப்பா அம்மா பாட்டன் பூட்டன் மூலமாகக் கிடைப்பது இன்னொரு வழி. 

வாச்சான் போச்சானாக மற்றவரிடம் இருந்து கிடைப்பது அடுத்த வழி. ஆக, பெரியவர் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு இந்த மூன்று வழிகளிலும் பணம் கிடைத்தது. எப்படி என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

ஒரு கல்லூரியில் அவருக்கு இருபது ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம். முப்பத்தைந்து ஆண்டுகள் பணி. சம்பளமாகக் கிடைத்தது எழுபது லட்சம். சம்பளத்தில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு, மிச்சத்தை ஏழைகளுக்கே கொடுத்து ஒரு வரலாற்றையும் படைத்து இருக்கிறார். ஓர் ஆண்டு இல்லை. இரண்டு ஆண்டுகள் இல்லை. முப்பத்தைந்து ஆண்டுகள். அப்புறம் வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும், ஓர் உணவகத்தில் சர்வராக வேலை.

எந்த நாட்டைச் சேர்ந்த அரசு ஊழியராக இருந்தாலும் சரி; இல்லை அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்தாலும் சரி; கல்யாணசுந்தரம் செய்தது மாதிரி யாரும் செய்ததாக இல்லை. ஆக அவருடைய நல்ல தர்ம தியாகச் செயல்களுக்கு விருதுகளும் விழாக்களும் வீடு தேடி வந்தன.

வகுப்பு வர்ணங்களைத் தாண்டிய தியாக மனப்பான்மை

அந்த வகையில், ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் என்கிஓர் உயரிய விருதை அமெரிக்காவில் வழங்கினார்கள். விருதுடன் 6 புள்ளி 5 மில்லியன் டாலர்களையும் பரிசாகக் கொடுத்தார்கள். நம்ப மலேசிய காசிற்கு 240 இலட்சம் ரிங்கிட். பெரிய பணம் தானே. கல்யாணசுந்தரம் என்ன செய்தார் தெரியுமா. அதில் இருந்து ஒரு காசையும் எடுத்துக் கொள்ளாமல் அப்படியே அந்தப் பணம் முழுவதையும் ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டார்.

என்ன பைத்தியக்கார மனிதன் என்று ஒரு சிலர் ஏசினார்களாம். என்ன செய்வது. எனக்குகூட ஒரு மாதிரியாகத் தான் இருக்கிறது. கிடைத்த காசை எல்லாம் தானம் தானம் என்று கொடுத்து விட்டு, கடைசியில் ஓட்டலில் மங்கு பாத்திரம் கழுவுகிற வேலை செய்தால் யாருக்குத்தான் மனசு சங்கடப் படாது. சொல்லுங்கள்.

இருந்தாலும் இவர், அடித்தள ஏழை மக்களுக்கு ஓர் அகல்விளக்காக வாழ்ந்து இருக்கின்றார். சாதி பார்ப்பது இல்லை. சமயம் பார்ப்பது இல்லை. வகுப்பு வர்ணங்களைத் தாண்டிய ஒரு தியாக மனப்பான்மையில் வாழ்ந்து இருக்கின்றார். துன்பக் கடலில் மிதக்கும் அனாதைக் குழந்தைகளுக்கு, ஒரு தந்தையாக, ஒரு தனயனாக, ஒரு தார்மீகவாதியாக வாழ்ந்து கொண்டும் வருகிறார்.

அதனால், அவருடைய நிதர்சனமான உண்மை வாழ்க்கை நிலைதான் நமக்கு பெரிதாகப் படுகிறது. கூடவே, நம்முடைய எதார்த்தமான மனச் சங்கடங்களும் அடிபட்டுப் போகின்றன. முதலில் சொன்னேனே யாருக்குத்தான் மனசு சங்கடப் படாது என்று. அதுவும் அடிபட்டுப் போகிறது.

கல்யாணசுந்தரம் போல உதாரண புருஷராகத் திகழுங்கள்

அன்புப் பாலம் எனும் ஒரு தொண்டு நிறுவனத்தைச் சென்னையில் நடத்தி வருகிறார். அமைப்பின் பெயர் பாலம். அதனால் இவரின் பெயருக்கு முன்னால் பாலம் எனும் சொல்லும் இணைந்து கொண்டது. கொஞ்ச காலத்திற்கு முன்னர், சென்னையில் அன்புப் பாலம் தொண்டு நிறுவனத்தின் வைரவிழா நடைபெற்றது. 

அதில் அதிபர் அப்துல் கலாம் கலந்து கொண்டார். கல்யாணசுந்தரம் போல உதாரண புருஷராகத் திகழுங்கள் என்று பல்கலைக்கழக மாணவர்களிடம் சொல்லும் போது அதிபரின் கண்கள் பனித்தன.

தர்ம சிந்தை. எளிமை. நேர்மை. தன்னலமற்ற சேவை. மாணிக்கமாக வாழ்ந்து மகத்தான சேவை செய்து வரும் பாலம் கல்யாணசுந்தரம் மனுக் குலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஸ்ரீவைகுண்டம் குமரகுரு கல்லூரியில் 30 ஆண்டு காலம், நூலகராக உழைத்துக் கிடைத்த 11 லட்சம் ரூபாய் ஓய்வூதியம். 

அதை அப்படியே ஏழைக் குழந்தைகளுக்குக் சீருடை, நோட்டுப் புத்தகங்கள் வாங்குவதற்காகச் செலவு செய்து இருக்கிறார். அதையும் இரண்டே மாதங்களில் முடித்து இருக்கிறார்.

அமெரிக்காவில் அவரது சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட ரூ.30 கோடியை அனைத்துலகக் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார். எவ்வளவு என்று பாருங்கள். 30 கோடி.

அவர் போட்டு இருக்கும் ரப்பர் செருப்பு என்ன விலை இருக்கும். ஒரு பிளாட்பாரக் கடையில் ஏழரை ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார். அவர் பயன்படுத்தும் வேட்டி வெறும் இரண்டு ரூபாய், சட்டை வெறும் மூன்று ரூபாய். என்ன உண்மையாகத்தான் சொல்றீங்களா என்று கேட்க வேண்டாம். உண்மைதான்.

ரெண்டு ரூபாய்க்கும், மூணு ரூபாய்க்கும் கிடைக்கும் துணிமணிகளில் கிழிசல்கள் இருக்கும். பொத்தல்கள் இருக்கும். அதைத் தச்சுக்கிட்டா போச்சு என்று சொல்கிறவர் இந்தக் கல்யாணசுந்தரம். இப்படியும் ஒரு மனிதரா.

நமக்குத் தரப்பட்டதைக் கொண்டு நாம் நடத்துவது பிழைப்பு. நாம் தருவதைக் கொண்டு நாம் அமைத்துக் கொள்வதுதான் வாழ்வு. யார் யாரையோ மகான், மகான் என்று அழைக்கிறோம். அதில் ஏழு தலைமுறைகளுக்குச் சொத்துச் சேர்த்த பெரிய மனிதர்களும் வருகிறார்கள். ஆனால், கல்யாணசுந்தரம் போன்றவர்கள் தான், மகான் எனும் சொல்லுக்கான முழு அர்த்தத்துடன் வாழ்கின்றார்கள்.

எழுதி முடிக்கும் போது என் கண்களில் நீர் துளிர்க்கிறது. கட்டுப்படுத்த முடியவில்லை. உங்கள் பிள்ளைகளிடம் இவரைப் பற்றி சொல்லுங்கள். அதுவே அந்தப் பெரியவருக்குச் செய்யும் மரியாதை ஆகும்.

கல்யாணராமன் போன்ற நல்ல மனிதர்கள் செய்து வருவது மகா மகா புண்ணியங்கள். அந்த மாதிரியான மனிதர்களால் தான் மழை பெய்கிறது. பூமியும் செழிக்கிறது.  நாமும் வாழ்கிறோம். அவரை வாழ்த்த வயது இல்லை. வணங்குகிறேன்.

No comments:

Post a Comment