19 May 2016

நடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2

19.05.2016 ினத்ந்தி நாளிில் வெளியானட்.

மேற்கிந்தியத் தீவுகளில் ஏறக்குறைய 50 தீவுகள். அவற்றில் ஒன்று தான் ஜமாய்க்கா (Jamaica). இயற்கை அன்னை அள்ளித் தெளித்த அழகு அழகான பச்சைக் கானகங்கள். நிறையவே கரும்புத் தோட்டங்கள். கறுப்பர்கள் நிறைய பேர் அடிமைகள். கரும்புத் தோட்டங்களின் முதலாளிகள் அனைவரும் வெள்ளைக்காரர்கள்.

முதலாளிகளுக்கும் திண்டாட்டம்
தொழிலாளிகளுக்கும் திண்டாட்டம்

இந்த அடிமைகளுக்குச் சாப்பாடு போடுவது என்பது ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது. கடுமையான உடல் உழைப்பு. அதனால், அவர்கள் ரொம்பவும் சாப்பிட்டார்கள். அடிமைகளுக்கு எவ்வளவுதான் சாப்பாடு போட்டாலும் கட்டுபடி ஆகவில்லை. முதலாளிகளுக்கு திண்டாட்டம் தொழிலாளிகளுக்குத் திண்டாட்டம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

அந்தச் சமயத்தில் ஜேம்ஸ் குக் எனும் கடலோடி ஒருவர் இருந்தார். இவர் உலகம் சுற்றி வந்த முதல் கடலோடி. கடல் பயணங்களின் முன்னோடி. பசிபிக் தீவுகளில் ஈரப் பலாக்காய் (Bread Fruit) இருப்பதாகச் சொன்னார். அந்த ஈரப் பலாக்காய் கறுப்பர்களின் சாப்பாட்டுத் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம் என்றும் பரிந்துரை செய்தார்.

இந்த ஈரப் பலாக்காயின் கன்றுகளைக் கொண்டு வருவதற்கு இங்கிலாந்து அரசாங்கம், வில்லியம் பிளை (William Bligh) என்பவரைப் பசிபிக் கடலுக்கு அனுப்பியது.

இந்த ஆய்வுப் பயணத்திற்குப் பவுண்டி (Bounty) எனும் பாய்மரக் கப்பல் கட்டப் பட்டது. 1787 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கப்பல் பயணமானது. பசிபிக் மாக்கடலில் இருக்கும் தாகித்தி (Tahiti) தீவை நோக்கிப் பயணம். 46 பேர் கொண்ட குழுவிற்கு வில்லியம் பிளை என்பவர் தலைமை வகித்தார்.

கடல் பயணம் 306 நாட்கள் பிடித்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வழியாகத் தாகித்தி தீவை அடைந்தனர். வந்தவர்களுக்கு கோலாகலமான வரவேற்பு.

பரிசுகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. கப்பல் சிப்பந்திகளும் தீவுக்குள் போய் சந்தோசமாய் இருந்து இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. 
 

'நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்க... வாங்க... என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்க... பழகுங்க... உருளுங்க... புரளுங்க... ஆனா... தயவு செஞ்சு... தயவு செஞ்சு... பெண்களின் பக்கம் மட்டும் தலை வச்சு படுத்துடாதீங்க... வேண்டாங்க சாமி... அது விவகாரமான விசயமா மாறி… அப்புறம் கொலையில் தான் போய் முடியும்... வேண்டாங்க சாமி...' என்று அவர்களுக்குப் படித்துப் படித்துப் புத்தி சொன்னார்கள். கேட்டார்களா. எல்லோரும் கேட்டார்கள். கேட்ட மாதிரி பதிவுசாகப் பக்குவமா… ஒன்னும் தெரியாத பாப்பா மதிரி பழகினார்கள். பெண்களைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி போய்க் கொண்டே இருந்தார்கள்.

இரவோடு இரவாக கடலில் நீந்திப் போய்

அதையும் மீறி பாருங்கள்... ஒரு மன்மதக் குஞ்சு போய் கலாட்டா பண்ணி விட்டது. படியுங்கள். மன்மதக் குஞ்சு இல்லை. மன்மதக் குஞ்சு ராசா. சொன்னது எல்லாம் அதன் மரமண்டையில் ஏறவில்லை. ராசாவைச் சொல்லிக் குற்றம் இல்லை. இள ரத்தம் கொஞ்சம் கொப்பளித்து விட்டது.
 

அந்த ராசாவுக்கு 18 வயசு. அங்கே இருந்த 16 வயசு கடைக்கண் கன்னிப் பெண்ணைத் தன் கம்பீரப் பார்வையால் வளைத்துப் போட்டது. இருவரும் நெருக்கமானார்கள்.

தென்னை மரத்தில் இருந்து ’கள்’ வரும் என்பது அங்கே ஊறிப் போன விஷயம். பல நூறு ஆண்டுகளாக கள் இறக்கப்பட்டு வந்து இருக்கிறது. இந்தக் கள் சமாசாரம் உலகம் முழுமையும் பரவி இருந்து இருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.
 

தப்பாக நினைக்க வேண்டாம். நானும் ஒரு தமிழன்தான். சமயங்களில் லகர ளகரப் பிரச்சினைகள் வருவது உண்டு. 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே' என்பார்கள். அது எந்தக் கல் என்பதுதான் இங்கே கொஞ்சம் பிரச்சினையாக இருக்கிறது. ஓர் எழுத்து பண்ணுகின்ற வேலையைப் பாருங்கள். பிரச்சினை இல்லை. பெரிதாக எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சரி. பானமும் வெள்ளை. மன்மதனின் மனசும் வெள்ளை. ஆக, அந்த வெள்ளை வேகத்தில் போய் மொக்கை முடிச்சுத் தெரியாமல் குடித்து இருக்கிறான். அந்த நேரம் பார்த்து ஒரு பதினைந்து வயது பெண் அந்தப் பக்கமாய் வந்து இருக்கிறாள். என்ன செய்வது. 
 

நம்ப மன்மதக் குஞ்சு கொஞ்சம் கூடுதலாகக் குடித்து அதற்கு மப்பு மந்தாராமாகிப் போனது. இயற்கை பானம் வஞ்சகம் இல்லாமல் வேலை செய்து இருக்கிறது. ராசாவும் ஒரு மனுசன் தானே. பாவம் அந்தப் பதின்ம வயசு மன்மத ராசா.

ஆக... நம்ப மன்மத ராசா அவளைப் பார்த்துச் சிரிக்க... அவள் இவனைப் பார்த்துச் சிரிக்க... இரண்டு காந்தப் புலன்களும் ஒன்றை ஒன்று இழுக்க...  அவளும் கிட்ட வர... ராசாவும் நெருங்கிப் போக... பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்ள... அந்த நேரம் பார்த்து… சிவ பூசையில் கரடி நுழைந்தது மாதிரி பெண்ணின் சொந்தக்காரன் பார்க்க... பார்த்த விசயத்தை வெளியே போய் சொல்ல... ஊரே பற்றிக் கொண்டது.
 

கிராமத்து மக்கள் அரிவாளைத் தூக்கிக் கொண்டு விரட்டி இருக்கிறார்கள். இருவரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் எங்கே போவது என்று தெரியாமல் மன்மத ராசா திகைத்துப் போய் நின்று இருக்கிறார்.

அந்தப் பெண்ணுக்கு அந்த இடம் நன்றாக அத்துப்படி. அதனால் அங்குள்ள ஒரு குகைக்குள் அவனை இழுத்துக் கொண்டுப் போய் இருக்கிறாள். எங்கே ஒளிந்தால் எப்படி கண்டுபிடிக்க முடியாது என்பது அவளுக்குத் தெரிந்த விசயம். சுற்றிக் கிடந்த செடி கொடிகளை கொண்டு வந்து ஒரு மறைப்பு கட்டி… படுக்க ஒரு பச்சைப் பாய் தயார் செய்து… இரண்டு பேருமே அன்றிரவு அங்கே தங்கி இருக்கிறார்கள். 
 

பொழுது விடிந்ததும் அவள் அந்தப் பக்கம் போக இவன் இந்தப் பக்கம் வர அவர்களின் மரத்தோன் ஓட்டம் ஒரு முடிவிற்கு வந்தது. பிறகு ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் கூடி சமாதானம் செய்து வைத்து இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் தப்பித்ததே பெரிய விசயம்.

இதில் ஒரு பெரிய வேடிக்கை என்ன தெரியுமா. ஊர்ப் பஞ்சாயத்து சமாதானம் செய்கிற மாதிரி சமாதானம் செய்து உள்ளுக்குள் ஒரு பெரிய திட்டமே போட்டு வைத்து இருக்கிறது. அதாவது மன்மதக் குஞ்சைத் தீர்த்துக் கட்டுவது. அதற்கு மூன்று ஆட்களையும் ஏற்பாடு செய்து விட்டார்கள். 
 

விசயம் எப்படியோ அந்த இளம் பெண்ணுக்குத் தெரிந்து விட்டது. தன் உயிரைப் பணயம் வைத்து... இரவோடு இரவாகக் கடலில் நீந்திப் போய் இருக்கிறாள். கப்பலின் கயிறுகளைப் பிடித்து ஏறி விசயத்தைச் சொல்லி இருக்கிறாள்.

சுறா மீன்கள் நிறைந்த கடல் பகுதி அது. தான் விரும்பியவனுக்காகத் தன் உயிரையே பணயம் வைத்து ஆழ்கடலில் நீந்திப் போய் இருக்கிறாள். தன் உயிரைக் கூட அவள் பெரிதாக நினைக்கவில்லை. தான் விரும்பியவனின் உயிர்தான் அவளுக்கு அப்போது பெரிதாகத் தெரிந்து இருக்கிறது. பாருங்கள். யார் யாருக்கு எங்கே எங்கே எல்லாம் எழுதி வைத்து இருக்கிறது… பாருங்கள். 

அவளுடைய பிடிவாதம் அவளுடைய துணிகரமான முடிவு… உள்ளூர் சுதேசி மக்களையே அசர வைத்தது. கட்டினால் அவனைத் தான் கட்டுவேன் இல்லை என்றால் செத்துப் போவேன் என்று மிரட்டி இருக்கிறாள். உடனே அவளைப் பிடித்து ஒரு வீட்டுக்குள் அடைத்துப் போட்டு வைத்து இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் அங்கிருந்து தப்பித்து விட்டாள்.

எப்படி தப்பித்தாள் என்பது ஊர் பஞ்சாயத்திற்கே பெரிய ஓர் ஆச்சரியம். அவளை அடைத்து வைத்து இருந்த கதவை வெளியே இருந்து தான் திறக்க முடியும். உள்ளே இருந்து திறக்க முடியாது. அப்படி என்றால் யார் திறந்து விட்டு இருக்க முடியும். யாராக இருக்கும் என்று அப்போது அவர்களிடம் இருந்த ’இண்டர்போல் போலீஸ்’ ஆராய்ந்து பார்த்தது. கடைசியில் கண்டுபிடித்து விட்டார்கள். யார் தெரியுமா.
 

நம்ப மாட்டீர்கள். அந்தப் பெண்ணின் தாயார் தான். ஏற்கனவே ஒரு முதியவருக்கு மூன்றாம் தாரமாக அந்தப் பெண்ணைக் கட்டிக் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து முடிந்து விட்டன. பெண்ணுக்கு வயது 16. முதியவருக்கு வயது 61. என்னே பொருத்தம். எண்களைத் திருப்பிப் போட்டுப் பாருங்கள்.

தாயாருக்கு அந்தக் கல்யாணம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் அடைக்கப் பட்டு இருந்த தன் மகளைத் திறந்து விட்டு கையில் கொஞ்சம் பொன் ஆபரணங்களையும் கொடுத்து ‘நீ ஆசைபட்டவன் கூடவே கண்காணாத இடத்திற்கு ஓடிப் போய் விடு’ என்று ஒரு படகையும் கொடுத்து இரவோடு இரவாக அனுப்பி இருக்கிறாள். அந்தப் பெண் படகில் போய்க் கொண்டு இருக்கும் போது வழிமறிக்கப் பட்டாள். மீண்டும் கைதியானாள்.

அப்புறம் அதற்குள் நமப மன்மத ராசாவுக்கும் விசயம் எட்டி விட்டது. அவனும் சும்மா இல்லை. தன் நண்பர்கள் இரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு தீவில் இறங்கி விட்டாரன். சுதேசி மக்களின் பெரிய ஆள்பலத்தை மூன்று பேர் எப்படி சமாளிக்க முடியும். அதற்குள் கப்பலில் இருந்த மற்றவர்களும் களம் இறங்கி விட்டார்கள். 
 

வேறு வழி இல்லாமல், பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து இருவருக்கும் நல்லபடியாகக் கல்யாணத்தைச் செய்து வைத்தார்கள். இதுவும் ஆழ்கடலில் நடந்த ஓர் அதிசயம்தான்.

அந்த மன்மத ராசாவின் பெயர் குயிந்தால். கடத்தல் கும்பலில் ஆகச் சிறியவன். அப்போது அவனுக்கு வயது 19. புத்தகங்களைத் திருடியதற்காக சிறைக்குப் போனவன். நல்ல முக இலட்சணம். ஓரளவுக்குப் படித்தவன். போதாதா. அதுவே அவனுக்கு பிளஸ் பாய்ண்ட். அவன் காதலித்தப் பெண்ணுக்கு வயது 16.
 

இருந்தாலும் கடைசியில் கணவன் மனைவியாக வாழ்ந்தார்களா... இவர்களின் வாழ்க்கையில் விதி எப்படி விளையாடியது என்பதைப் பிறகு சொல்கிறேன். முதலில் ஒரு பீடிகை போட்டு விடுகிறேன். நிச்சயமாக உங்கள் மனசு ஈரமாகும். நிச்சயம் அழுது விடுவீர்கள். இது உண்மையாக நடந்த கதைங்க… தொடர்ந்து படியுங்கள்.

இந்தா சாமி எடுத்துக்கோ... ஆளை விடு

தாகித்தி தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களில் பல பிரிவுகள். ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு தலைவன். அந்தத் தலைவன் ஒவ்வோர் ஆண்டும் தன் பெயரை மாற்றிக் கொள்வான். அதில் ஒருவன் தான் தீனா எனும் தலைவன்.

அவனுடைய பழைய பெயர் ஊட்டு. கப்பலுக்கு வந்த பூர்வீகத் தலைவன் தீனா,  கூடவே தன் மனைவியையும் கூட்டி வந்தான். அவள் பெயர் இடாயா. கப்பலுக்கு வந்த தலைவன் அங்கிருந்த கத்தரிக்கோல் தான் தனக்கு வேண்டும் என்று ஒரேயடியாக அடம் பிடித்து இருக்கிறான்.

இருப்பதோ ஒன்றே ஒன்று. அதை வைத்து தான் எல்லாரும் தலைமுடியைத் திருத்திக் கொள்ள வேண்டும். என்ன செய்வது. அவன் தொடர்ந்து அடம் பிடித்தான். இங்கே நம்ப பெண்கள் சமயங்களில் அடம் பிடித்துச் சிணுங்கிக் கொள்கிறார்களே... அந்த மாதிரி தான். மன்னிக்கவும் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 
 

ஆக, வேறு வழி இல்லாமல் ‘இந்தா சாமி எடுத்துக்கோ... ஆளை விடு’ என்று கத்தரிக்கோலைக் கொடுத்து விட்டார்கள். அதன் பின்னர் கப்பலிலேயே ஒரு பெரிய விருந்து.

தாகித்தி முறைப்படி ஆண்கள் தான் முதலில் சாப்பிட வேண்டும். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை பெண்கள் காத்திருக்க வேண்டுமாம். மிச்சம் மீதியைத் தான் பெண்கள் சாப்பிட வேண்டுமாம். அப்படி ஒரு வழக்கம் இருந்து இருக்கிறது. இருந்தாலும் இப்போது காலம் மாறி விட்டது. மிச்சம் மீதியைக் கணவன்மார்கள் தான் சாப்பிடுகிறார்களாம். கள்ளுக்கடை கந்தசாமி புலம்பிக் கொண்டு திரிகிறார். சந்தேகம் இருந்தால் அவரிடம் போய் கேட்கலாமே. சரி.

திடீரென்று ஒருநாள் கப்பல் சிப்பந்திகள் மூவர் காணாமல் போய் விட்டனர். தேடிப் பார்த்ததில் துப்பாக்கிகள் மருந்துகள் போன்றவற்றைத் திருடிக் கொண்டு காட்டிற்குள் ஓடிப் போனது தெரிய வந்தது.

மீண்டும் இங்கிலாந்திற்குத் திரும்பிச் செல்ல அவர்களுக்கு விருப்பம் இல்லையாம். தாகித்தியின் இயற்கையான சொர்க்கத் தன்மை அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. இருந்தாலும் சில நாட்களில் பிடிபட்டனர்.  ஆளாளுக்கு வக்கனையாகப் பத்தொன்பது கசையடிகள். அதில் மன்மத ராசா குயிந்தாலும் ஒருவர்.

ஆனால் தண்டனையில் இருந்து தப்பித்தான். எப்படி. இங்கே தான் அவனுடைய பூர்வீக மனைவி வருகிறாள். என் புருசன் என்னைப் பார்க்க வந்தார் என்று ஒரே சத்தம் ஒரே ஆர்ப்பரிப்பு. ஊர் மக்கள் அடங்கிப் போயினர். இதன் தொடர்ச்சி நாளை இடம் பெறும்.

No comments:

Post a Comment