13 மே 2016

பிரம்பனான் ஆலயம்

பிரம்பனான் ஆலயம் உலகத்திலேயே மிக அழகான ஆலயம். இந்து ஆலயங்களில் தலையாய ஆலயம். சைலேந்திரா வம்சாவழியினர் ((Sailendra Dynasty)) உருவாக்கிய பொராபுடுர் (Borobudur) புத்த ஆலயத்திற்கு நிகரான இந்து ஆலயம். இந்துக் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு, சிவா ஆகிய மூவரின் தோற்றத்திற்குத் தோரணம் கட்டிய அழகு ஆலயம்.


உலகப் பாரம்பரியச் சின்னமாக ஒரு நளின ஆலயம். 1250 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 850 ஆம் ஆண்டு கட்டப் பட்ட ஆலயம். அதுதான் பிரம்பனான் (Prambanan) ஆலயம். ஒவ்வோர் இந்துவும் பார்க்க வேண்டிய ஆலயம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்தோனேசியாவில் அழகு அழகான ஆலயங்களைக் கட்டி இந்தியர்கள் அழகு பார்த்து இருக்கிறார்கள். அத்தனையும் அற்புதமான கலை நுணுக்கங்கள்.

அதிசயமான சிற்ப ஆராதனைகள். அறிவார்ந்த அறிவியல் நுட்பங்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் ஆடம்பரம் இல்லாமல் அழகு பேசும் அதி அற்புதங்கள். சொல்லும் போது மனசு நடுங்குகிறது.




9-ஆம் நூற்றாண்டில் ஜாவாத் தீவில் ஸ்ரீ விஜய பேரரசின் (Srivijaya 650 – 1377) வழித்தோன்றல்கள் சைலேந்திரா அரசு; மத்தாராம் அரசு.
சைலேந்திரா அரசு என்பது ஒரு புத்த அரசு. அந்த அரசு போராபுடோர் (Borobudur) புத்த ஆலயங்களைக் கட்டி அழகு பார்த்தது. 

மத்தாராம் (Mataram) அரசு ஓர் இந்து அரசு. பிராம்பனான் (Prambanan) திருமூர்த்தி கோயிலைக் கட்டி அழகு பார்த்தது.

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா. உலகத்திலேயே மிக அழகான இந்துக் கோயில் எது தெரியுமா. அதுதான் பிராம்பனான் திருமூர்த்தி கோயில். நான் சொல்லவில்லை. 2008 ஆம் ஆண்டில் உலகளாவிய இந்து ஆலயக் கணக்கெடுப்பு நடந்தது. அதில் அந்த உண்மையைச் சொன்னார்கள்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் ஒன்றிணைத்து திருமூர்த்திகள் என்கிறோம். அந்த மூவரின் தத்துவங்களுக்கும் சான்று கூறும் இந்துத் தத்துவமாகப் பிராம்பனான் ஆலயம் அமைகின்றது. காலா காலத்திற்கும் அழகு பேசும் அழகு ஓவியம்.

இந்த ஆலயத்தை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதே இந்தக் கோயிலின் 30 சதுர கி.மீ. அளவிற்கு உள்ள நிலப்பகுதியை இந்தோனேசியாவின் பாரம்பரியக் காப்பகமாக இந்தோனேசிய அரசாங்கமும் அறிவித்து இருக்கிறது.

ஆலயத்தின் சுற்றுப் புறங்களில் ஒரு செடியைக் கூட இடமாற்றம் செய்யக் கூடாது என்று தடாலடியான ஒரு சட்டத்தையும் போட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லை. ஆலயத்தின் குளங்களில் மீன் பிடிக்கக் கூடாது. படகு விடக்கூடாது. குளிக்கக் கூடாது என்று அதிரடியான சட்டங்களையும் இயற்றி ஆலயத்திற்குப் புனிதம் சேர்த்து வருகிறது. கை கூப்புவோம்.

இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள நகரங்களில் யோக்ஜகார்த்தா மிக முக்கியமான நகரம். அந்த நகரத்தில் இருந்து 17 கி,மீ. தொலைவில் தான் இந்த ஆலயம் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது. இரவு நேர ஒளிவிளக்குகளில் பார்ப்பவர்களின் இதயங்கள் சலனமாகி விடுகின்றன. அப்பேர்ப்பட்ட கொள்ளை அழகு.

உலகின் மூலை முடுக்குகளில் இருந்து எல்லாம் சுற்றுப்பயணிகள் இந்த ஆலயத்திற்கு வருகிறார்கள்…. பார்க்கிறார்கள்…. ரசிக்கிறார்கள்…. வாயாரப் புகழ்கிறார்கள். மனுக்குல மாண்புகளை மனதாரப் போற்றுகிறார்கள். மனதைப் பறிகொடுத்துப் போகிறார்கள்.

ஆனால் அடிவாசலில் இருக்கும் மலேசிய இந்தியர்களில் பலருக்குத் தான் அந்த ஆலயத்தைப் பார்க்க நேரம் இல்லை. புளிச் சோறு கட்டிக் கொண்டு புரியாத இடங்களுக்கும் தெரியாத மடங்களுக்கும் படை எடுக்கிறார்கள். அவர்களுக்காக அனுதாபப் படுகிறேன்.

இந்த ஆலயத்தின் நிர்மாணப் பணிகள் கி.பி. 850ஆம் ஆண்டில் தொடங்கின. கி.பி. 856ஆம் ஆண்டில் முடிவுற்றது. ஆறு ஆண்டுகள். சஞ்சாயா வம்சாவளியைச் சேர்ந்த ராக்காய் பாக்கத்தான் (Rakai Pikatan) எனும் அரசர் தான் கட்டுமானப் பணிகளை முதலில் தொடக்கினார். இருந்தாலும் அவருக்குப் பின்னர் அரசர்களான லோகபாலா (Lokapala), மகா சம்பு (Balitung Maha Sambu) எனும் அரசர்கள் தான் பெருவாரியான கட்டு வேலைகளைச் செய்து முடித்தனர்.

அண்மையில் அங்கே சிவர்கா (Shivagrha Inscription) எனும் கல்வெட்டு கிடைத்தது. கி.பி. 856ஆம் ஆண்டுக் கல்வெட்டு. அந்தக் கல்வெட்டில் அந்த ஆலயம் இந்துக் கடவுள் சிவனுக்காகக் கட்டப் பட்டது என்று எழுதப்பட்டு இருந்தது.

உண்மையிலேயே அந்த ஆலயத்தின் அசல் பெயர் சிவர்கா ஆலயம். அல்லது சிவாலயம். பிரம்பனான் எனும் இடத்தில் இருப்பதால், காலப் போக்கில் அதற்குப் பிரம்பனான் ஆலயம் எனும் பெயரும் வந்து சேர்ந்தது.

முன்பு காலத்தில் மத்தாரம் எனும் அரசப் பரம்பரை ஜாவாவை ஆட்சி செய்து வந்தது. அந்தப் பரம்பரையில் தாக்சா (Daksa), துலோடொங் (Tulodong) எனும் அரசர்கள் இருந்தார்கள். இவர்கள் தான் பிரம்பனான் கோயிலைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து இருக்கிறார்கள். அது மட்டும் இல்லை. பிரதானக் கோயிலைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான சிறு கோயில்களையும் இவர்கள் தான் கட்டினார்கள்.

பிரம்பனான் ஆலயம் தான் மத்தாரம் பேரரசின் அரச ஆலயமாகவும் விளங்கி இருக்கிறது. அரச சமய நிகழ்ச்சிகளும் அரச நேர்த்திக் கடன்களும் அங்கே நடைபெற்று உள்ளன. ஒரு கட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆரிய அர்ச்சகர்கள் கோயில் வளாகத்தில் தங்கிச் சேவைகள் செய்து இருக்கின்றனர்.

கி.பி. 930ஆம் ஆண்டு வாக்கில் இசாயானா அரசப் பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீ இசாயானா விக்ரமாதமதுங்க தேவா (Sri Isyana Vikramadhammatunggadeva) என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர்தான் இசாயானா அரசப் பரம்பரையைத் தோற்றுவித்தவர். அவருடைய ஆட்சிக் காலத்தில் மெராப்பி எரிமலை வெடித்தது.

மெராப்பி எரிமலை மத்திய ஜாவாவில் பிரம்பனான் பகுதிக்கு வடக்கே உள்ளது. எரிமலை வெடிப்பினால் சேதங்கள் ஏற்பட்டன. அதனால் இசாயானா அரசு கிழக்கு ஜாவாவிற்கு இடம் மாறியது.

அதன் பின்னர் பிரம்பனான் ஆலயச் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்தது. முறையான பராமரிப்பு இல்லை. ஓர் அபலையான நிலை. அப்படியே கைவிடப்பட்டது. அப்படியே அந்த ஆலயம் சிதைவும் அடைந்தது.

பிரம்பனான் ஆலயத்தைப் பற்றிய ரகசியங்கள் வெளியுலகத்திற்குத் தெரிவதற்கு முன்னால் அங்கு வாழ்ந்த ஜாவா மக்களுக்கு ஆலயத்தின் இடிபாட்டுச் சிதையல்களைப் பற்றி தெரிந்து வைத்து இருந்தார்கள். ஆனால் யார் கட்டியது, எப்போது கட்டியது, எந்த அரசப் பரம்பரையினர் ஆட்சி செய்தனர் என்பது எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. தெரிந்து இருக்க வாய்ப்பும் இல்லை.

இருந்தாலும் பற்பல பாட்டிக் கதைகளைச் சொல்லி வந்தார்கள். அரக்கர்களும் பூதங்களும் சேர்ந்து கட்டியதாகவும் கதைகள். அந்தக் கதைகளில் ஒரு பிரபலமான கதையும் உண்டு. அதன் பெயர் லோரோ ஜொங்கராங் (Loro Jonggrang) கதை.

பல ஆயிரம் அரக்கர்கள் ஒன்றுகூடி ஆலயத்தைக் கட்டிய கதை. அந்த அரக்கர்களுக்கு பாண்டுங் போண்டோவோசோ எனும் அரக்கர் தலைமை அரக்கராக இருந்தாராம். அவருடைய மூர்க்கத்தனத்தினால் மற்ற அரக்கர்கள் பயந்து போது போய் அடிமைகளைப் போல வேலை செய்தார்களாம்.

இன்னும் இந்தக் கதை அங்கே ஒரு மெகா சீரியல் மாதிரி ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. புதிய தலைமுறையினரும் கேட்டுத் தலைகளை ஆட்டிக் கொண்டு தான் இருக்கின்றனர்.

சிங்கப்பூரை ராபிள்ஸ் ஆட்சி செய்த காலத்தில் ஜாவாவும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் கொஞ்ச காலம் இருந்தது. 1811ஆம் ஆண்டு. அப்போது ராபிள்ஸிடம் காலின் மெக்கன்சி (Colin Mackenzie) எனும் ஓர் ஆங்கிலேயர் நில ஆய்வாளராகப் பணிபுரிந்தார்.

பிரம்பனான் பகுதியில் நில ஆய்வு செய்து கொண்டு இருக்கும் போது எதேச்சையாக அந்தக் கோயிலில் தடுக்கி விழுந்தார். தடுக்கி விழவில்லை. அப்பேர்ப்பட்ட கோயிலில் எப்படிப் போய் தடுக்கி விழ முடியும். அது என்ன சின்ன பிள்ளைகள் விளையாடும் மரப்பாச்சி பொம்மையா. கண்டுபிடித்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படியும் சொல்லலாம். அதாவது அவர் தான் பார்க்க வேண்டும். வெளியே போய் நாலு பேரிடம் சொல்ல வேண்டும் எனும் ஒரு கொடுப்பனை இருக்கிறதே. அதற்குப் பெயர் தான் அதிர்ஷ்டம். கண்டுபிடிப்பு எனும் பெயரில் லாட்டரி அடித்து இருக்கிறது. அங்கார் வாட் அதிசயச் சின்னத்தையும் அப்படித் தானே கண்டுபிடித்தார்கள். சரி. இந்தக் கதையை நாளைய கட்டுரையில் தொடர்ந்து பார்க்கலாமே. அதற்கு முன்னர் மனசிற்குள் இருக்கிற ஒரு சின்ன ஆதங்கம். அதையும் சொல்லி விடுகிறேன்.

இந்தியர்கள் அதிகமாக வாழாத நாடுகளில் இந்தியப் பாரம்பரியங்களை எப்படி எல்லாம் ஆராதனை செய்கிறார்கள் பாருங்கள். இங்கே அப்படியா நடக்கிறது. இருக்கிற இந்தியப் பாரம்பரியங்களை அழித்து ஒழிப்பதில் தான் தீவிரம் காட்டுகிறார்கள். அழித்து ஒழித்துவிட்டு முகம் சுழிப்பது இல்லை. மாறாக முப்பத்திரண்டும் தெரியாத மௌனப் புன்னகை. என்னே புனிதப் புன்னகை.

தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த உலகம் எங்கோ பயணித்துக் கொண்டு இருக்கிறது. இணையம் இண்டர்நெட் என்று உலக மக்கள் இதிகாச இத்யாதி இத்யாதிகளைத் தாண்டிப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு சில மரமண்டைகளுக்கு அவ்வப்போது மண்டைக் கிறுக்குப் பிடித்து விடுகிறது.

லெம்பா பூஜாங் தங்களின் பாட்டன் சொத்து என்றும் அங்கோர் வாட் தங்களின் பாட்டிச் சொத்து என்றும் வெட்கம் இல்லாமல் கப்சா அடிக்கிறார்கள். அதைப் பார்த்து உலகமே வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறது.

இந்த மாதிரியான ஜென்மங்கள் கத்துகிற வரை கத்தட்டும். விடுங்கள். அவர்களுக்குத் தானே வாய் வலிக்கும். நமக்கு இல்லையே. இதோடு போதும். விட்டு விடுகிறேன். இல்லை என்றால் சட்டம் பாயலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக