03 June 2016

இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு

இந்தியத் துணைக் கண்டத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் கோலோச்சிய காலம் ஒன்று இருந்தது. அப்போது உலகத்தில் ஏறக்குறைய கால்வாசி பகுதி தமிழர்களின் ஆதிக்கப் பதிவுகளாக அழகு செய்தன. தமிழர்களின் ஆட்சி தென்பகுதிச் சீனாவில் தொடங்கி இந்தோனேசியாவில் இடைப்பட்டு பாரசீகத்தின் கிழக்குப் பகுதி வரை நீண்டு போனது. உலக வரலாற்றில் அது ஒரு கனாக்காலம்.

மகா அலெக்சாண்டர் கி.மு. 326இல் இந்தியாவிற்குள் காலடி வைக்கும் போது சிந்துவெளி நாகரிகம் சிதைந்து கொண்டு இருந்தது.
(சான்று: http://amarnathkk-narean.blogspot.my/2011/12/blog-post.html)

ஆரியர்களின் நெருக்குதல்களினால் நசிந்தே போனது. கீழே இறங்கி வந்த திராவிடர்கள், தென்னிந்தியாவில் அப்படியே ஐக்கியமாகிப் போயினர். மூலைக்கு ஒன்றாய்ப் பிரிந்து வீடுகள், குடிசைகள், குடில்களைக் கட்டிக் கொண்டனர்.

அப்புறம் அவர்களுக்குள் போட்டிப் பொறாமைகள். சண்டைச் சச்சரவுகள். இத்யாதி இத்யாதிகள். தமிழ்ச் சங்கம் சிரிக்கும் படியாகச் சண்டையும் போட்டுக் கொண்டனர்.
கழற்றி வீசப்படும் தொப்புள்கொடி உறவுகள்

இன்றைய வரைக்கும் அந்தச் சண்டை ஓயவில்லை. தொடர்கிறது. இத்தனைக்கும் இந்தத் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள், கொடவர்கள், துலுவர்கள், இலங்கைத் தமிழர்கள், இலங்கை மலையகத் தமிழர்கள்… இவர்கள் எல்லாம் யார். உண்மையிலேயே அண்ணன் தம்பிகள். சத்தியமாகச் சொல்கிறேன். தொப்புள்கொடி உறவுகள். ஆனால், சண்டை போடும் போது மட்டும் பாருங்கள். தொப்புள் கொடியைக் கழற்றித் தோளில் போட்டுக் கொண்டு சண்டை போடுகிறார்கள். மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

இந்தப் பக்கம் முல்லைப் பெரியாற்றைக் கட்டிக் கொண்டு கேரளா அழுகிறது. அந்தப் பக்கம் காவேரியைப் பிடித்துக் கொண்டு கர்நாடகா ஒப்பாரி வைக்கிறது. இன்னொரு பக்கம் திருப்பதியைக் காட்டிக் கொண்டு ஆந்திரா பட்டாசை வெடித்துப் போடுகிறது. கீழே சிங்கள சிம்பன்சிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மகிந்தா இல்லாத நேரத்தில் பாவம் மைத்திரி பகவானுக்கு ஏழரை நாட்டுச் ச(ம)னியன் தூது போய் இருக்கிறார்.

உலகத்தின் கால்வாசி பகுதியில் இறக்கை கட்டிப் பறந்த தமிழர்களுக்கு இப்போது சொந்தம் என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமே இல்லை. தமிழ்நாட்டைச் சேர்க்க வேண்டாம். கொஞ்ச நாட்களுக்கு முன் வரையில் அது ஒரு தனியார் சொத்தாகத் தான் இருந்தது. இப்ப கொஞ்சம் தேவலாம். ஆக தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆட்சி செய்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. தமிழர்கள் யாராவது ஒருவர் முதலமைச்சர் ஆக முடியுமா. இப்போதைக்கு நோ சான்ஸ்.

150 வருடங்களுக்கு முன்னால் தமிழர்கள் பஞ்சம் பார்க்கப் புறப்பட்டவர்கள். போன இடங்களில் எல்லாம் அந்த இடங்களைப் பொன் களஞ்சியங்களாக மாற்றி அமைத்தார்கள். அவர்களின் எச்சங்கள் இன்னமும் நீறுபூத்த நெருப்பாய்த் தகித்து நிற்கின்றன. என்னே தமிழர்கள் வாங்கி வந்த வரம். இதற்கு எல்லாம் வரலாற்றுச் சான்றுகள் தேவையா. தேவையே இல்லை. இருக்கிற வயிற்றெரிச்சல் ஒன்றே போதும். எங்கோ இருந்து நீண்ட ஒரு பெருமூச்சு கேட்கிறது.

நம்முடைய சஞ்சிக்கூலிகள் கதைக்கு வருவோம். இன்றைக்கு இலங்கை வாழ் தமிழர்களின் புலம்பெயர்வு பற்றியது. இலங்கையில் வாழும் தமிழர்களை இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் ஒரு வகை. இந்தியத் தமிழர்கள் மற்றொரு வகை.

தூத்துக்குடியில் கப்பல் ஏறியவர்கள்

இந்தியத் தமிழர்கள் என்பவர்கள் மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். இவர்கள் ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இருந்த காபி, தேயிலை தோட்டங்களில் வேலை செய்யத் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள். இவர்கள் தான் சஞ்சிக்கூலிகளின் விஷ்ணு பிரம்மாக்கள். அதனால் அவர்களைப் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மலாயாத் தமிழர்களைவிட இலங்கையின் மலையகத் தமிழர்கள் (இந்தியத் தமிழர்கள்) மிக மிக மோசமாக நடத்தப் பட்டவர்கள். பெரும் அவதிக்கு உள்ளானவர்கள். அங்கே அந்தக் கொத்தடிமைக் கொடுமை இன்னும் தொடர்கின்றது. அவர்களும் உரிமைப் போராட்டங்கள் செய்து வருகின்றனர்.

இலங்கையின் மலையகத் தமிழர்களும் தமிழ்நாட்டில் இருந்து கப்பல் ஏறியப் போனவர்கள் தான். அதாவது தூத்துக்குடியில் இருந்து போனவர்கள். 
(சான்று:http://tamil.thehindu.com/opinion/columns/நம்முடைய-மறதியின்-வரலாறு/)

இலங்கைத் தமிழர் (Sri Lankan Tamils) என்பவர்கள் இலங்கையைத் தமது மரபுவழிப் பிறப்பிடமாகக் கொண்டு வாழும் தமிழர்களாகும். (சான்று: https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils)

இவர்களை இலங்கையின் வம்சாவழித் தமிழர் என அழைப்பதும் உண்டு.

இவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் சுய விருப்பத்தின் பேரில் இலங்கைக்குச் சென்றவர்கள். இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். பிற பகுதிகளில் சிறுபான்மையாக இருக்கின்றனர்.

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். அப்போது அங்கே நிறைய தேயிலை, ரப்பர், காப்பி தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப் பட்டனர்.

அதனால் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்த் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களைத் தான் மலையகத் தமிழர் என்று அழைக்கிறோம். இருந்தாலும் இவர்களில் தெலுங்கர், மலையாளி இனத்தவரும் இருந்தார்கள். இன்னும் இருக்கின்றார்கள்.

தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்த தெலுங்கர், மலையாளிகளும் இப்போது தமிழ் பேசுபவர்களாகவே மாறிவிட்டனர். இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் சாதாரணமாகி விட்டது. அதனால் ஒரு புதிய திராவிட சமூகமே அங்கே உருவாகி இருக்கிறது.
(சான்று: https://ta.wikipedia.org/wiki/மலையகத்_தமிழர்/)

தமிழக உறவுகள் துண்டிக்கப்பட்டன

ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் மலையகத் தமிழர்களை ஒட்டு மொத்த அடிமைகளைப் போல நடத்தி வந்தனர். ஆடுமாடுகளைப் போல வேலை வாங்கினர். ஒடுக்கு முறைகள் பலவந்தமாகத் திணிக்கப் பட்டன. மற்ற மற்றச் சமுதாயத்தினருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மலையகத் தமிழர்களின் வாழ்க்கை முறை, மிக மிக பின் தள்ளப் பட்டதாகவே இருக்கின்றது.

அதை ஒரு வகையான பின்னடைவு என்றே சொல்ல வேண்டும். அவர்களின் தமிழக உறவுகள் எல்லாம் துண்டிக்கப்பட்டு விட்டன. தமிழகத்தில் அவர்களுக்குச் சொந்தமாக இருந்த நிலம், தோட்டம் துரவு, மற்ற மற்றச் சொத்துக்களையும் இழந்து பரிதவிக்கின்றனர்.

150 ஆண்டு காலத்திற்குத் தொடர்புகள் இல்லாமல் போனதால் அவர்களுடைய சொந்தங்கள் யார் என்று அவர்களுக்கே தெரியாமல் போய் விட்டது. அப்படியே தேடிப் போனாலும் அடையாளம் தெரியவே தெரியாது. உறவு மூலம் ரிஷி மூலம் அடிபட்டுப் போய் விட்டது. சரியான சான்றுமிக்க உறவுப் பாலங்களும் இல்லாமல் போய் விட்டன. அதனால் சொத்துகள் மீது உரிமை எதையும் நிலைநாட்ட முடியாமல் போகிறது.

உலகளாவிய நிலையில் இலங்கைத் தேயிலையைப் புகழ்பெறச் செய்தது இந்த மலையகத் தமிழர்கள் தான். அதை உலகமே ஏற்றுக் கொள்கிறது. சரி. மிக மிக முக்கியமான ஒரு விஷயத்திற்கு வருகிறோம்.

1948-ஆம் ஆண்டு, இலங்கையில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறினார்கள். அவர்கள் போன கையோடு, இலங்கையில் குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வந்தது. பல இலட்சம் மலையகத் தமிழர்களால் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் போனது. அதனால் அவர்களில் பெரும்பாலோர் நாடற்றவர் நிலைக்குத் தள்ளப் பட்டனர். அதோடு அவர்களுக்கு இலங்கையின் வாக்குரிமையும் இல்லாமல் போனது.

பின்னர் 1950-களில், இந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டன. ஒப்பந்த அடிப்படையில் இலட்சக் கணக்கான மலையகத் தமிழரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்புவது என இலங்கை முடிவு செய்தது. ஏறக்குறைய பத்து இலட்சம் பேர்.

அப்படி செய்யப்பட்ட அந்த ஒப்பந்தங்களில் ஒன்றுதான் ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம். அதன்படி தமிழர்களில் பாதி பேருக்கு இலங்கைக் குடியரிமை வழங்கப்பட்டது. மீதிப் பாதிப் பேரை இந்தியா ஏற்றுக் கொள்வது என்றும் முடிவானது.

இலங்கையில் வாழ்ந்த எல்லா இந்தியர்களுக்கும் குடியுரிமை

அதுவும் ஓர் இழுபறி நிலைதான். பலப் பல காரணங்களால் அந்தத் திட்டமும் சரிபட்டு வரவில்லை. தவிர 1980-களில் இலங்கையில் பதட்டமான சூழ்நிலை. இலங்கை விடுதலைப் புலிகளின் மீது உலகத்தின் கவனமும் திசை திரும்பிய காலக்கட்டம்.

பதற்ற நிலை காரணமாகப் பலர் இந்தியாவுக்கே திரும்பிப் போகலாம் என்றும் முடிவு செய்தனர். அவர்கள் அந்த நேரத்தில் எடுத்த முடிவு சரியானதாகப் படவில்லை. இங்கே மலேசியாவில் மே 13 வந்த பின்னர், இந்தியர்கள் பலர் தங்களின் குடியுரிமைகளை ரத்து செய்துவிட்டு மூட்டை முடிச்சுகளுடன் தாயகம் கிளம்பினார்களே, அந்த நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது..

இப்படி இருக்கையில் இந்தியா ஒரு புதிய குடிநுழைவு சட்டத்தைக் கொண்டு வந்தது. இலங்கையில் வாழ்ந்த அல்லது வாழ்கின்ற எல்லா இந்தியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்தது.

மலையகத் தமிழர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் அந்த நிம்மதி ரொம்ப நாளைக்கு நீடிக்கவில்லை. குடிநுழைவு சட்டத்தை அமல்படுத்துவதில் பலப்பல நடைமுறைச் சிக்கல்கள்.

அந்த புரோட்டோகால் இந்த புரோட்டோகால் என்று சொல்லி பாதி பேருக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்காமலே போனது. ஆக, இந்தியாவுக்கு திரும்பி வந்த மலையகத் தமிழர்களில் ஐந்து இலட்சம் பேர், இன்றைக்கும் நாடு அற்றவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். எங்கே. அதே அந்த இந்தியாவில்தான்.

மறுபடியும் சொல்கிறேன். மலையகத் தமிழர்களில் ஐந்து இலட்சம் பேர், இன்றைக்கும் நாடு அற்றவர்களாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

குடியுரிமை என்பது உயிருக்கும் மேலான வாழ்க்கைப் பிரச்சினை

நாடு விட்டு நாடு போய் நட்டாற்றில் விடப்பட்ட தமிழர்கள் திரும்பி தாயகம் வந்தார்கள். வந்தும் நாடற்றவர்களாகவே வாழ்கின்றனர். அதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்படிப்பட்ட கொடுமை வேறு எங்கேயாவது நடந்து இருக்குமா. தெரியவில்லை.

ஆக அங்கே மலையகத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையை நாமும் இங்கே நம்முடைய மலேசியப் பார்வையில் பார்க்க வேண்டும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

குடியுரிமை என்பது வாழ்க்கைப் பிரச்சினை. உயிருக்கும் மேலானது. பத்து நாளைக்கு சோறு இல்லை என்றாலும் பரவாயில்லை. பட்டினியாக இருந்து விடலாம். ஆனால், குடியுரிமை இல்லாமல் மட்டும் இருக்கவே கூடாது. ஆக, நமக்கும் அவர்கள் மாதிரி ஒரு நிலைமை ஏற்பட்டால்??

சரி. சோறு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும் இல்லையா. அந்த மாதிரி மலையகத் தமிழர்களுக்கு என்ன ஆனது என்பதைத் தான் தெரிந்து கொண்டோம். ஆனால் அவர்கள் அங்கே எப்படி வாழ்ந்தார்கள். எப்படி நடத்தப் பட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டோமா. இன்னும் இல்லை. அதைப் பற்றி நாளைய கட்டுரையில் தெரிந்து கொள்வோமே. (தொடரும்)

ான்றுகள்:

http://www.dinamani.com/editorial_articles/article806200.ece
http://tamilnation.co/heritage/gnanaprakasar.htm
http://www.tamilcanadian.com/article/tamil/563

No comments:

Post a Comment